
நூல் அறிமுகம்

மொழிக்கு ஆண் பெண் பேதம் உண்டு. ஆனால், கவிதைக்கு ஆண், பெண், திருநங்கை, திருநம்பி என்ற எந்த பேதமும் இல்லை. இன்னும் சரியாகச் சொன்னால், கவித்துவத்துக்கு இல்லை. கவிதை, மொழியை நம்பி குறிப்பிட்ட சூழலில் வினைப்படுகிறது என்பதால், அதன் அரசியல் யாவும் அதில் இயங்குவது போலவே பால் பேதமும் கவிதையில் தொழிற்படுகிறது.
கவிதையைப்போலவே காதலிலும் பால்பேதம் இல்லை என்று ஒரு நம்பிக்கை உள்ளது. அப்படியானால், லீனா எழுதிய இந்தக் காதல் கவிதைகளில் பேதமும் அரசியலும் எங்கிருந்து வருகின்றன? ஒரு பெண் காதல் கவிதைகள் எழுதுவதால், இந்த அரசியல் உருவாகிறது. ஆண் ஒரு விஷயத்தைச் செய்யும்போது, அது அதிகாரமாகவோ மீறலாகவோ பார்க்கப்படுவது இல்லை. ஆனால், பெண் அதைச் செய்யும்போது எதிர்ப்பு அரசியல் ஆகிறது. ஒரு பெண், பல ஆண்களைப் பற்றிப் பேசுவது எதிர்ப்பு அரசியல். ஆனால், ஓர் ஆண் இதைச் செய்தால், அது சிறப்பாய் குறிக்கப்படவேண்டிய அவசியம்கூட இல்லை. நம் சூழலின் இந்த இடம்தான் பெண் படைப்பாளிகளுக்கு வரமும் சாபமுமாக இருக்கிறது.
லீனாவின் இந்தத் தொகுப்பு இப்படியான சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்கிறது. இந்தத் தொகுப்பில் உள்ள காதல் கவிதைகளின் உணர்வுநிலைகள் பலதரத்தவை. சங்க இலக்கியத்தின் ஆழமும் அமைதியும் நிறைந்த செவ்விலக்கியப் பண்பு முதல், எதிர்கவிதைக்கான நேரடியான சொல்லல் வரை வேறு வேறு தளங்களில் காதலைப் பற்றிப் பேசும் கவிதைகள் இவை. மெல்லிய பகடியும் நகைச்சுவை உணர்வும் இந்தத் தொகுப்பில் உள்ள முக்கியமான விஷயம். பொதுவாக, பெண்களின் எழுத்தில் பகடி இருப்பதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. லீனாவின் இந்தத் தொகுப்பு அதை மறுப்பதாக உள்ளது.

ஒருதலைக் காதல் முதல் பல்வேறு வகையான காதல்கள் இந்தத் தொகுப்பின் வழியே சொல்லப்படுகின்றன. அவை யாவும் புனைவின் மாயமும் மெய்மையின் நிழலும் முயங்கும் ஒரு ஸ்கீசோப்ரெனிக் (Schizophrenic ) வெளியில் உருக்கொள்கின்றன. வாசிக்கும் ஆண்மனதுக்குக் குறுகுறுப்பையும் புன்னகையையும் ஏற்படுத்தும் கவிதைகள் இவை. அநேகமாகப் பெண்மனதுக்குச் சற்று விலகலான உணர்வையே இது ஏற்படுத்தும் என அனுமானிக்கிறேன். என் அனுமானம் சரி என்றால், அது ஏன் என்றும் நாம் விசாரிக்க வேண்டும்.
இந்தத் தொகுப்பில் உள்ள லீனாவின் கவிதைமொழி சென்ற தொகுப்பைவிடவும் மேலும் நெகிழ்ந்திருக்கிறது. இது கவிதைகளுக்கு ஒரு சரளத்தன்மையையும், கட்டுப்பாடான ஒழுங்கையும் வழங்கி உள்ளது. உண்மையில், இது ஓர் ஆபத்தான விளையாட்டு. மொழியை அத்தனை எளிமையாக, சரளமாகக் கையாள்வது என்பது கவித்துவம் சரிந்துவிடுவதற்கான நிறைய வாய்ப்புகளைக்கொண்டுள்ளது. லீனா, இதைத் தன் அப்பியாசத்தால் எளிதாகக் கடந்தாலும் சரிந்துவிழுகிற இடங்களும் இருக்கவே செய்கின்றன. புதிய சொல்லல் முறையை நோக்கிச் செல்லும் ஒவ்வொரு கவிக்கும் நேர்கிற நல்விபத்து என்றே இதைக் கொள்ளவேண்டும்.
தேர்ந்த கவிதைசொல்லி ஒருவரின் கவிதைகள் இவை என்பதற்கான அடையாளமும் இந்தத் தொகுப்பின் கவிதைகளில் உள்ளன. ‘உலர்ந்தவை உலராதவை’, ‘இருபத்தெட்டு இலைகள்’, ‘ஓ காதல் கண்மணி’, ‘டெகீலா’, ‘குட்டைப் பாவாடை’, ‘மழை’ போன்ற கவிதைகள் இந்தத் தொகுப்பில் குறிப்பிடத்தக்கன. இவற்றை லீனாவின் அடையாளம் கொண்ட கவிதைகள் என்று சொல்லலாம்.
இந்தத் தொகுப்பின் மிக முக்கியமான அம்சம் என நான் கருதுவது, இவை காதல் கவிதைகள் என்றாலும் வெறும் அகம் சார்ந்த ‘தன்னொடு புலம்பலாக’ மட்டுமே இல்லாமலிருப்பது. உண்மையில் நம் மரபில் இந்தப் பண்பு புதியதும் அல்லதான். காரைக்கால் அம்மையிடமும் வெள்ளிவீதியிடமும் ஒளவையிடமும் வெளிப்படும் சுயாதீனமான மனதின் காதல் ஒன்றுதான் இந்தக் கவிதைகளிலும் வெளிப்படுகிறது. அந்த வகையில் இவை பெண் மனதின் இன்னொரு பக்கத்தைப் பேசும் கவிதைகள். காதலின் பல பரிமாணங்களைப் பேசும் இந்தக் கவிதைகளில் அழுதுவடிதலும் புலம்புதலும், மற்றமைக்காக உருகிக்கொண்டிருத்தலும், நொந்துகொள்ளுதலும் இல்லை என்றே சொல்லலாம்.
ஒரு சிறுமியின் குதூகலத்தோடும் வெள்ளந்தித்தனத்தோடும், மிடுக்கோடும் ஆண் மனதை எதிர்கொள்ளும் கவிதைகளாக இவை உள்ளன. ஒருவகையில் இந்தக் கவிதைகளைச் சாத்தியப்படுத்துவதே இந்த இயல்புதான். இடையிடையே தனக்கு நிறைய தெரியும் என்ற மேதைமை ஒன்றும் வெளிப்படுகிறது. இந்தத் துள்ளலும் துடுக்கும் மேதைமையுமே இந்தத் தொகுப்பின் மையச்சரடாக உருவாகியுள்ளது எனலாம்.
சிச்சிலி - லீனா மணிமேகலை
வெளியீடு: நற்றிணை பதிப்பகம்,
பக்கங்கள்: 104, விலை: ரூபாய்.100