
ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

நஷ்ட ஜாதகன். கஷ்ட சாகரன். மனோ துக்கன். மோக லோலன்… இப்படிப் பல சொற்கள். க.சீ.சிவகுமார் தன்னைப் பற்றிய வர்ணனைகளாகக் கழிவிரக்கப் போதுகளில் சொன்னவை. அப்படி ஒரு பொழுதை, தனியாக ஒதுக்கீடு செய்ய வேண்டியதில்லை. பெரும்பான்மை அப்படித்தான் கவிந்திருந்தன. முள்ளுக்குள் கிடக்கும் கள்ளிப்பழம் போலத்தான் சோகங்களுக்குள்ளேயே அவன் சந்தோஷம் கொண்டாடியதும்.
அதனாலேயே, சின்னப் பொருளும் அவனுக்குப் பெருத்த சந்தோஷம் தந்துவிடும். ‘பிராக்கெட்’ என்று எழுதப்போனவன், ‘பிறைக்கட்டு’ என்று எழுதிவிட்டான். அதைப் படித்துப் படித்துச் சிரித்துக்கொண்டிருந்தான். சிரிப்பு என்பது இங்கே மகிழ்ச்சியின் வெளிப்பாடு. ஒருவேளை இந்தக் குணாம்சமே அவனை இத்தனை நாள் காப்பாற்றியிருக்கக்கூடும்.
தான் பார்த்த வெவ்வேறு குணச்சித்திரங்களை வரையும்போது அந்தக் கட்டுரைகளுக்கு ‘குணசித்தர்கள்’ என்று தலைப்பு வைத்தான். தானே ஒரு குணசித்தன் என்று அவன் அறிந்துகொண்டதன்பேரில் கிட்டிய சொல்லாடல் அது.
எழுத்தாளல் என்பது சிவகுமாரின் லட்சியமானால், சொல்லாடல் என்பது சும்மாவே வந்தது அவனுக்கு. அவனது தனித்துவமாக இதையே சொல்லலாம். எவ்வெவற்றைத் தவறுகள் என்கிறோமோ, அவற்றை மட்டுமே செய்திகளாகச் சுமந்துவரும் தாள்களுக்கு, தினசரி என்றல்ல, ‘தினத்தவறு’ என்று பெயரிட்டான். ‘ஊழல் விரோதம் சூழல் விநோதம்’ என்றான். ‘யோகங்களைப் பற்றி நான் கருதுகிற யூகங்களை ஒட்டிச் சொல்கிறேன்’ என்பான்.
அவனது முதல் கதையிலிருந்து சிவகுமார் எனக்குப் பரிச்சயம். இந்தியா டுடே நடத்திய அறிமுக எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு வாங்கிய ‘காற்றாடை’தான் சிவகுமாரின் எழுத்துப் பிரவேசம். சந்தர்ப்பவசத்தால் கூடியசீக்கிரமே சிவகுமாரைச் சந்திக்க நேர்ந்தது. “உன்னுடைய கதையைவிட, ரெண்டாம் பரிசுக் கதை வெயிட் கூடுதல்” என்றேன். அவன் சொன்ன பதில், என்னைப்போல் ஒருவன் என்கிற இணக்கத்தை ஏற்படுத்தி, எங்களை அத்யந்த சிநேகிதர்களாக ஆக்கியது. “ஆமா, எங் கதயெவிட அந்தக் கததே நல்லா இருக்கு.”
‘என் மகிழ்ச்சி, உன் மகிழ்ச்சி, நண்பனின் மகிழ்ச்சி, நம்மிடம் சண்டை போட்டுப் போனவனின் மகிழ்ச்சி’ என எல்லாமே சிவகுமாரின் மகிழ்ச்சியாக இருந்ததைப் பின்வந்த வருடங்களிலான புழக்கத்தில் தொடர்ந்து பார்த்தேன்.
தன் மகிழ்ச்சி என்று தனியாக இல்லாத ஒருவனுக்கு, தன் முனைப்பும் இருக்காது போலும். ‘சித்தம் போக்கு பித்தம் தேக்கு’ என்று திரிந்தே இருந்தான். ஐம்பது வேலைகளை அவன் விட்டதும் இவ்வகையினானே. ‘சம்பாதிக்காம இருக்குறது கலைஞன் குணம், நீ கலைஞன், இல்லே!’ என்று எள்ளினேன். “அதில்லையப்பா. ஆசை இருக்கு. முடியல” என்றான்.
முடியாமலும் திரவியம் தேட எங்கெங்கோ அலையும் நிர்ப்பந்தம் அவனுக்கு இருந்தது. அப்படிச் சென்ற இடங்களிலெல்லாம் பணத்தை அல்ல, மொழியைச் சம்பாதித்தபடியே இருந்தான். திருச்சூர் பக்கம் கற்றுக்கொண்ட மலையாளச் சாயல்தான் ‘காற்றாடை’ கதையில் கிடந்தது. மந்திர லயத்தோடு கூடிய சௌந்தர்யச் சொற்களை மலையாள சலசித்ர கானங்களில் கேட்டுவந்தான்.
‘ஒன்னாவிரல் தொட்ட மாத்ரயில்
மண்குடம் பொன்மணித் தம்புருவாயி
உஷஸ் சந்த்யதன் சங்கீதமாயி

ஹ்ருதயத்தின் கனி பிழிஞ்ஞ சாயத்தில்
எழுதிய சித்ரம் முழுமிச்சில்லல்லோ
முகம் வரய்க்குவான் முதிரும்போள் ரண்டு
முகங்ஙள் ஒன்னாயி தெளியுன்னு முன்னில்
விரலுகள் கத்தும் திரிகளாகுன்னு
ஒரு சிதை நெஞ்ஞில் எரிஞ்ஞு காலுன்னு
ஒரு நிஷாகந்தி பொலியும் யாமமாயி
ஒரு மௌனம் தேடி மொழிகள் யாத்ரயாயி’
என்று குரலெடுத்துப் பாடுவான். ‘நீராடுவான் நீ எந்தே வைகி வந்நு?” என்று எவளையோ போனில் கேட்பான். அவ்வண்ணமே, பஞ்சாப, சிந்து, குஜராத்த, மராட்டா தவிர்த்து கன்னட, தெலுங்கு வகையறாக்களைக் கற்றுக்கொண்டு களிகூர்ந்ததும்.
சொற்கள் தரும் போதையில் சோகம் மறக்கும் வழக்கம் கொண்டான். தனக்கு விழும் அடி ஒவ்வொன்றையும் சோக காவியத்தின் அடியாக மாற்றினான். தன்னை வரச் சொன்ன நண்பன் நடுநிசியில் கைவிட்டுப் போனதைக் கதையாக்கினான். ஆழ்ந்த அநாதரவின் உட்பக்கத்தைக் காட்டும் கடைசி வரிக்கு முந்தைய வரிவரையிலும் அதில் நகைச்சுவையை விரவி வைத்தான். அப்படியே பத்துப் பன்னிரு கதைகள் ஆன சமயத்தில் ‘கன்னிவாடி’ சிறுகதைத் தொகுப்பு வெளியாயிற்று. அதன் முன்னுரையில், ‘சடாரிகளைக் கிரீடம் என்று எண்ணிவிடும் பேதைமை இல்லாத மனம்’ என்று எழுதினேன். ‘மெல்லிய காற்றுக்கே கிளம்பி அலையும் சருகு மனம் புயலடித்தால் என்னவாகும்?’ என்று குறித்திருந்தேன்.

சதா புயலடிக்கும் ஊர் என்பதால், எடையே இல்லாமல் இருக்கக் கற்றுக்கொண்டான் போலும். அவன் ஆனந்த விகடனில் வேலைக்குச் சேர்ந்தபோது, நான் அங்கேதான் இருந்தேன். அதே மிதவை மனோபாவம். நிருபர் வேலையானாலும் பத்திரிகையியல் கற்றுக்கொள்ளவில்லை. தனக்குத் தோன்றியதை, தான் விரும்பும் நேரத்தில் எழுதுவதைக் கைக்கொண்டான். அப்படி எழுதியதில் பேர் வாங்கிக்கொடுத்தது, ‘ஆதிமங்கலத்து விசேஷங்கள்’ என்கிற ஜூனியர் விகடன் தொடர். ஒரு கிராமத்துக்குள் நவீன உபகரணங்கள் நுழையத் தொடங்குவதை சிரிக்கச் சிரிக்க எழுதியிருந்தான். வாசகர் வட்டத்தில் நல்ல பேர். “எல்லாம் இருக்கட்டும், சும்மனாச்சிக்கும் ஆதிமங்கலம்னு ஒரு ஊருக்குப் பேர் வச்சேன். ஆனா பாருப்பா, அந்தப் பேர்ல ஊரே இல்ல. அல்லது எனக்குத் தெரியல” என்று சொல்லிச் சொல்லி ஆச்சரியப்பட்டுக்கொண்டு இருந்தான். பாராட்டுகளைக் கேட்டு மகிழ்ந்ததைவிட “அ.மார்க்ஸ் கேட்டாரப்பா, ‘அதென்ன சிவகுமார், ஒங்க ஆதிமங்கலத்துல சாதியே இல்லையோ?’ன்னு. எவ்ளோ பெரிய மிஸ்டேக் விட்ருக்கேம் பாரு” என்று ரொம்ப நாளைக்குக் குமைந்து கொண்டிருந்தான்.
அந்தக் குமைச்சல் அவன் பிற்பாடு எழுதியவற்றில் குறைகளைக் குறைக்க உதவிற்று. வாழ்க்கையோ அநேகக் குமைச்சல்களைக் கொடுத்தவாறே இருந்தது. ‘அறிஞர் வாழ்வில் அன்றாட நகைச்சுவை’ன்னு ஒரு புக் போட்ருவோம்ப்பா’ என்னும் அளவுக்கு எங்கே போனாலும் அவன் தொந்தரவுக்கு ஆளாகும் நபராக இருந்தான். லௌகீக வெற்றிகள் கைக்கெட்டிக் கைக்கெட்டி விலக, அதன் சித்திரங்கள் ‘கானல் தெரு’ என்று புத்தகமானது. இளம்பருவத்து இழப்புகளையும் ‘குமார சம்பவம்’ என்றே எழுதினான். (‘காளிதாஸனோட தலைப்பை வச்சாலும், நாம காலி கிளாஸனாத்தான் இருக்க வேண்டியிருக்கு’.)
சம்பவங்கள் எல்லாம் எதிர்மறையாகவே இருந்தாலும், எழுதும்போதெல்லாம், ‘என்றும் நன்மைகள்’ என்று அவன் அணுகியது, ‘மானுட வாழ்வு தரும் ஆனந்தம்’ என்று தலைப்பு வைத்த கோபி கிருஷ்ணனை எனக்கு நினைவுபடுத்தும். கோபிக்கும் சரி க.சீ.சிவகுமாருக்கும் சரி, எவ்வளவு லகுவான மகிழ்விக்கும் எழுத்து! இவர்களது எல்லா எழுத்துகளையும் கல்லூரிகளில் பாடங்களாக வைத்துவிட முடியுமே என்று தோன்றும்.
கடைசியாக வெளியான அவனது எழுத்துகள், ‘க.சீ.சிவகுமார் குறுநாவல்கள்’. எனக்கு போன் செய்து, ‘ஒரு மெயில் அனுப்பியிருக்கேன் பாரு’ என்று சொன்னான். கோபத்தோடும் குழப்பத்தோடும் மின்னஞ்சல் திறந்து பார்த்தேன். குறுநாவல் புத்தகத்துக்குப் பின்னட்டைக் குறிப்பாக நாலு வாக்கியங்கள் எழுதி, கீழே என் பெயரைப் போட்டிருந்தான். கடுப்போடு இடப்பக்கம் திரும்பி அவனைப் பார்த்தேன். என் இருக்கைக்கு முக்காலடி தூரத்தில்தான் அவனது இருக்கை. “இல்ல… அஞ்சாளு வேலையைப் பாத்துக்கிட்டிருக்க. இந்தப் புத்தகத்துக்கு ஓங் குறிப்பு வேணும்னு தோணுச்சு. தொந்தரவு பண்ண வேணாமேன்னு நானே எழுதிட்டேன். நீ எழுதுன மாதிரித்தான் எழுதியிருக்கேன். நாம ரெண்டு பேரும் ஒண்ணுதானே” என்றான். சிரிப்பைக் கோபத்தால் மறைத்துக்கொண்டு நானே அந்தக் குறிப்புகளை எழுதிக் கொடுத்தேன்.
அதே மனோநிலையில்தான் கடைசியாகப் பார்த்தபோது ஒன்று கேட்டான். “இப்ப நான் டிஸ்கஷன்ல இருக்கிற படத்துல நீ ரெண்டு பாட்டு எழுது. ஒண்ணுத்துல எம் பேரு போட்டுக்குறேன்…’’.
ரெண்டு பேரும் ஒண்ணுதானே, “சரி” என்றேன்.
அதற்கான நேரம் தகைந்து வருவதற்கு சற்று முன்பு மாடியில் இருந்து விழுந்து செத்துப்போய்விட்டான். பாடல்களின் பெருங்காதலனாக இருந்தவனுக்கு ஒரு பாட்டாவது எழுதிவிட வேண்டும் என்கிற ஆசை – நிராசை. சூனியத்தோடு, சிவகுமாரின் ‘நள்ளென் யாமம்’ வலைப்பக்கத்தைப் புரட்டிக்கொண்டு இருந்தேன். ஆங்காங்கே சில நவீன கவிதைகள் எழுதியிருந்தான். வேறெந்த நிர்ப்பந்தமும் இல்லாத சுய முகிழ்த்தல் கவிதைகள். மொட்டை மாடியில் மல்லாந்து படுத்திருப்பவனின் சொற்கள். மேலே தெரிவது நிலாவும் நிலா சார்ந்த பிரதேசமும். அந்த இருபத்திச் சில்லறைக் கவிதைகளில் இருந்து வார்த்தைகளைப் பிய்த்து எடுத்தேன். என்னுடைய பல பாடல்களை இசையமைத்துப் பாடிய எஸ்.ஜே.ஜனனியின் மீது அளவற்ற ப்ரீதி கொண்டிருந்தான் சிவகுமார். அந்த ஜனனியிடம் சிவகுமாரின் சொற்களை மரபு வடிவாக்கிக் கொடுத்தேன். தர்பாரி ராகம் நாவல் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டிருக்கும் சிவகுமாரின் சொற்களின் மேல் தர்பாரி கானடா ராகத்தை வேய்ந்து பாடலாக்கினார் ஜனனி.
‘தேயும் பாயும் ஓயும் ஆகாசக் கற்பூரம்

இரவு தோறும் மாறும் மாயத் திரை வீசும்
நிசித்திரை ஒளித்துளை தனித்துணை
வானில் உழுது தேயும் வட்டக் கலப்பை
விண்மீனில் பெற்று மீளும் விட்ட இழப்பை
அழிவதும் பொங்கி வழிவதுமாய்
மிதக்கும் கண்ணாடிக் கள் மொந்தை
சுற்றிலும் போதையில் விண்கண்கள் மந்தை…’
சிவகுமாருக்கான இரங்கல் கூட்டத்தில் இந்தப் பாடல் ஒலிபரப்பானது. அவன் கேட்கவில்லை. பரவாயில்லை. பாடலின் பல சொற்கள் அவனைக் குறிப்பதாகவே தொனித்ததை நண்பர்கள் சொன்னார்கள். பூமியின் அன்றாட நடவடிக்கைகளில் இருந்து விலகி நின்ற ஆகாசக் கற்பூரம். நிசியின் திரையில் விழுந்த ஒளி ஓட்டையாக நிலவியது. தனக்குத் தானே துணையாக, படுத்துறங்கும் புவிமீது பழுத்திறங்கும் கனிரசமாக இருந்தது. அது காய்ந்த அத்தனை ஒளியையும் யாரும் நுகரவில்லை. அதனால் நிலாவுக்கு வருத்தம் ஒன்றும் இல்லை. தேய்ந்த, பாய்ந்த அது ஓய்ந்துவிட்டது.
சிவகுமாரின் ஓய்வில் எனக்கு அந்தரங்கமானதும் விபரீதமானதுமான வேதனை ஒன்றும் உண்டு. சிவகுமாரின் மரணச் செய்தியை ‘I am dead’ என்று ஒரு நண்பன் ஃபேஸ்புக்கில் பதிவு போட்டான். அது கொஞ்சம் ரொமான்டிக் ஆகத் தெரிந்தது. ஆனால், ‘என்னை போல் ஒருவன்’ என்று சொல்லியிருந்தேனே, அது அவனது மரண பரியந்தம் எங்களுக்குள் தொடர்ந்தது. ஒவ்வொரு விஷயத்திலும் என்னைப் போலவே இருந்தான். குறிப்பாக இருளில், நசிவில், அழிவில், தோற்பில்… அத்தனையிலும் சிரிப்பில் கடந்தான். என் ஆல்டர் ஈகோ என்பதல்ல, என் கேலிச் சித்திரமாகவே அவன் உலவியதை சுவாரசியத்தோடு கவலைப்பட்டேன். இப்போது நான் செத்தால் எனக்கான இரங்கல் கூட்டத்தில் நண்பர்கள் பேசுவதற்கு விஷயங்களேதும் இல்லை. எல்லாவற்றையும் சிவகுமார் இரங்கலிலேயே பேசிவிட்டார்கள். ஒருவகையில் இந்த இரங்கல் எனக்கு நானே எழுதிக்கொண்டது போலத்தான்.