மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

இங்கேயும்... இப்போதும்...

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

அய்யப்ப மாதவன்

“ஒரு கவிஞனாய் வாழ்வது பெருந்துயர். படைப்பாளியைத் தம் காலத்தின் பதிவாகக் கருதாத இந்த மலட்டு தேசத்தில் மற்றுமொரு மனிதனாய் நான் புழுக்கத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன். பிழைப்புக்கான துரத்தல்கள் படைப்பின் தீவிரத்தை முனை முறிக்கின்றன. ஆயினும், என் படைப்புகள் காலத்தோடு போராடுகின்றன. அதற்கோர் ஆயுதமாகவே நான் கேமராவை சுமக்கிறேன். இன்னும் அது என் மனப்பரப்பை விரிக்கிறது. காட்சிகளின் படிமத்தை எனக்குள் உயிர்ப்பிக்கிறது. துயர் கடந்து, நான் பேராற்றல்கொள்கிறேன். இனியொரு தருணத்தில் என் கவிதைகள் என்னை இவ்வுலகின் நிரந்தர மனிதனாக்கும்...”

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டையைப் பூர்வீகமாகக்கொண்ட அய்யப்ப மாதவன், தற்போது சென்னையில் புகைப்படக் கலைஞராகப் பணிபுரிகிறார். `தீயின் பிணம்’, `மழைக்குப் பிறகும் மழை’, `நானென்பது வேறொருவன்’, `நீர்வெளி’, `பிறகொரு நாள் கோடை’, `எஸ்.புல்லட்’, `நிசி அகவல்’, `குவளைக் கைப்பிடியில் குளிர்காலம்’, `ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்’, `குரல்வளையில் இறங்கும் ஆறு’, `சொல்லில் விழுந்த கணம்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். இதுதவிர, `யாமினி’ என்ற உரைநடைக் கவிதைத் தொகுப்பு ஒன்றும் வெளிவந்துள்ளது. தமிழ்ச் சமூக வழக்காறுகள், குடும்பச்சூழல்களை மையமாகவைத்து நாவல் ஒன்றை எழுதி வருகிறார். இலக்கிய ஆளுமைகள் பலரையும் தேடித் தேடிப் படம்பிடித்து புகைப்படத் தொகுப்புகளாக்குகிறார்.

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

க.அம்சப்ரியா

“உணர்ச்சிகள்தாம் என் கவிதைகளின் ஜீவன். பொங்கும் பேரன்பை அள்ளிக்கொடுக்கும் ஆழமான சுரைக்குடுவையாகவும், இழப்பு, வலி, வேதனை, துயரங்களை மதுவாக வடிக்கும் விநோத பாண்டமாகவும் எனக்கு வாய்த்திருக்கிறது கவிதை. நான் எப்படியோ, அப்படித்தான் என் கவிதையும். எல்லா நதிகளையும் தன்னுள்ளே வாங்கிக்கொண்டு நிலைமாறாமல் கிடக்கும் கடலைப்போல, எக்காலத்திலும் அளவிட முடியாப் பெருவெளி அது. என் ஆயுளில் அதன் ஒரு பிடியையேனும் அள்ளிச் சுவைப்பது ஒன்றே என் கனா...”

பொள்ளாச்சி பில்சின்னாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த க.அம்சப்ரியா, ஒரு தனியார் பள்ளியின் ஆசிரியர். `சூரியப்பிரசவங்கள்’, `யாராவது வருகிறார்கள்’, ‘உங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை’, `இரவுக் காகங்களின் பகல்’, `என் இரவு ஒரு தேநீர்க் கோப்பையாகிறது’ ஆகிய கவிதை நூல்களையும் கவிதை சார்ந்த சில கட்டுரை நூல்களையும் எழுதியிருக்கிறார். குழந்தைகளுக்கான நாவல் ஒன்றை தற்போது எழுதிவருகிறார். ‘புன்னகை’ சிற்றிதழின் ஆசிரியராக இயங்கி வருகிறார்.

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

கௌதம சன்னா

“இயல்பில் நான் மார்க்சியவாதி. அம்பேத்கரும் புத்தரும் என் விழிகளின் அழுக்குகளை அகற்றி,

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

பார்வையைக் கூர்மைப்படுத்தியிருக்கிறார்கள். குரலே இல்லாத, அரசுக் குறிப்பேடுகளில் இடம்பெறாத ஒடுக்கப்பட்ட மக்களின் மெல்லிய ஓலத்தில் இருந்துதான் எனக்கான எழுத்து உயிரெழும்புகிறது. சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் ஆண்டான் - அடிமைத்தன்மைக்கும், சாதிய வன்கொடுமைகளுக்கும் எதிராக நான் பற்றவைக்கிற சிறுபொறி, காலத்தின் போக்கில் என்றேனும் பேரொளியாய் விரியும் என்பதில் எனக்கு அதி தீவிர நம்பிக்கை உண்டு.”

கௌதம சன்னா, சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர். சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குரைஞராகப் பணிபுரிகிறார். தீவிர அரசியல் செயற்பாடுகளுக்கு மத்தியில் தத்துவம், சமயம், இலக்கியம் சார்ந்து காத்திரமான எழுத்துப் பணியையும் மேற்கொள்ளும் சன்னா, `மதமாற்றத் தடைச்சட்டம்-வரலாறும் விளைவுகளும்’, `பண்டிதரின் கொடை - இட ஒதுக்கீட்டின் மூலவரலாறு’, `அயோத்திதாசரின் வாழ்க்கை வரலாறு’ (சாகித்ய அகாடமி வெளியீடு) ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். ஈழத்தமிழர்களின் துயரத்தை வண்ணங்களின் அதிர்வில் சொல்லும் `தமிழ் உயிர்’ என்ற ஓவிய நூலைத் தொகுத்திருக்கிறார். `குறத்தியாறு’ என்ற இவரது நாவல் மிகவும் கவனம் பெற்றது. சிறுகதைகள், கவிதைகள் எனத் தொடர்ந்து எழுதிவருகிறார்.

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

தி.பரமேசுவரி

“பால்யத்திலிருந்தே தனிமைப்பட்டுப்போனவளைக் கரையேற்றிக் காப்பாற்றும் படகாக நான் கண்டெடுத்தது வாசிப்பு. அதன் வழி, வாழ்வின் இருளடர்ந்த பக்கங்களில் வெளிச்சம் தரும் மெல்லிய ஒளிக்கீற்றாக எனக்கு வாய்த்தது எழுத்து. ஒவ்வொரு நாளும் என்னை உயிரோடு தக்கவைத்துக்கொள்வதற்கே எழுதுகிறேன்; வாசிக்கிறேன். பெருந்துணையாகவும், பிரதியுபகாரம் எதிர்நோக்காத தோழமையாகவும் எழுத்தும் வாசிப்பும் இருக்கின்றன. காத்திரமான ஒரு புத்தகத்தை வாசிக்கும்போதோ, வடிக்கும் ஒரு கவிதையின் சொற்களுக்கு இடையிலோ மரணம் வாய்த்தால், அதுதான் என் வாழ்வின் பெரும்பொருள்.”

தி.பரமேஸ்வரி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை ஆசிரியர். தமிழறிஞர் ம.பொ.சிவஞானத்தின் மகன் வழி பேத்தியான இவர், ம.பொ.சி-க்கு வந்த கடிதங்களையும், அவரது சிலப்பதிகார உரைகளையும், அவர் நடத்திய ‘தமிழன் குரல்’ இதழ்களையும் தொகுத்துத் தனித்தனி நூல்களாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். `எனக்கான வெளிச்சம்’, `ஓசை புதையும் வெளி’, `தனியள்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளையும், `சமூகம் - வலைத்தளம் - பெண்’ என்ற கட்டுரைத் தொகுப்பையும் எழுதியுள்ளார். `சொல்லால் அழியும் துயர்’ என்ற கல்வி சார்ந்த கட்டுரை நூல் ஒன்று விரைவில் வெளிவர இருக்கிறது.