Published:Updated:

வெள்ளி நிலம் - 8

வெள்ளி நிலம் - 8
பிரீமியம் ஸ்டோரி
News
வெள்ளி நிலம் - 8

ஜெயமோகன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

முன்கதை: இமாச்சலப்பிரதேசத்தின் மலைக் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்த பிட்சுவின் பாடம் செய்யப்பட்ட உடலைத் திருட வந்தவர்கள் பற்றி கண்டுபிடிக்க, நோர்பா என்ற சிறுவனுடன் செல்லும் கேப்டன் பாண்டியன், டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் மூலம் சில ஆச்சர்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்கிறான். இனி...

வெள்ளி நிலம் - 8

ம்மி அமர்ந்திருக்கும் அதே அமைப்பில் அந்த கரிய தெய்வமும் அமர்ந்திருப்பதாக பாண்டியன் சொன்னதும் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் திகைத்தார்.  “இதைப்போலவா?” என்றார்.

பாண்டியன், “ஆம், இதோ பாருங்கள். இது சப்பணம் போட்டு அமர்ந்திருப்பதுபோல உள்ளது. ஆனால், இதன் உள்ளங்கால்கள் இரண்டும் சேர்த்து அழுத்தப்பட்டுள்ளன. மம்மியும் இதேபோலத்தான் அமர்ந்திருந்தது” என்றான்.

“ஆச்சர்யம்தான். நான் இதை இதுவரை கவனிக்கவில்லை” என்ற டாக்டர், “இந்த ஓவியம் நெடுங்காலமாக கணப்பு எரியும் அறையில் இருந்திருக்கலாம். ஆகவே, இதன் மேல் கரிபடிந்து கருமையாகி, தோற்றம் தெளிவாக இல்லை. ஓவியம் அழியாமல் கரியை மட்டும் அகற்றுவதற்கு ரசாயன நிபுணர்களின் உதவி வேண்டும்” என்றார்.

“இந்த ஓவியத்தின் காலம் எது?” எனக் கேட்டான் பாண்டியன்.

“போன் மதத்துக்கு இரண்டு காலகட்டங்கள் உண்டு என்கிறார்கள். மனிதர் தோன்றிய காலம் முதலே அது ஒரு நம்பிக்கையாக மட்டும் திபெத்தில் இருந்தது. அப்போது, திபெத்துக்கு டாஸிக் [Tazig] என்றுதான் பெயர். நெடுங்காலம் முன்பு டோன்பா ஷென்ராப் மிவோ [Tonpa Shenrab Miwo] என்பவர் திபெத்துக்கு வந்தார். அவர்தான் போன் மதத்தின் முதல் ஞானி. அவர் வெண்கலக் காலத்தில் வந்திருக்கலாம் என்கிறார்கள்.”

“அடேயப்பா! அப்படியென்றால் இங்கே சிந்துச்சமவெளி நாகரிகம் இருந்த காலகட்டத்திலே டோன்பா ஷென்ராப் மிவோ எங்கிருந்து வந்தார்?” என்றான் பாண்டியன்.

“அவர், ஓல் மொ லங் ரிங் [Ol mo lung ring) என்ற ஊரில் இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. அது ஒரு கற்பனையான ஊர் என்கிறார்கள். அவர்தான் போன் நம்பிக்கையை ஒரு மதமாக உருவாக்கியவர்” என்றார் நரேந்திர பிஸ்வாஸ்.

வெள்ளி நிலம் - 8



“மதத்துக்கும் நம்பிக்கைக்கும் என்ன வேறுபாடு?” என்றான் பாண்டியன்.

“நம்பிக்கை, மக்களின் வாழ்க்கையில் தானாக உருவாவது. அதை ஆங்கிலத்தில் கல்ட் (cult) என்கிறார்கள். அதில், கடவுள்களும் தீயசக்திகளும் வழிபடப்படும். அதையொட்டி நிறைய கதைகள் இருக்கும். ஆனால், எந்த ஒழுங்கும் இருக்காது. அது மதமாக ஆகும்போது தத்துவ நூல்கள் எழுதப்படும். ஆலயங்கள் அமைக்கப்படும். மதத் தலைவர்கள் உருவாகி, வழிபாட்டை வரைமுறைப்படுத்துவார்கள்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

பாண்டியன் அந்த ஓவியத்தைக் கூர்ந்து பார்த்தான். “எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். கணிப்பொறியில் தேர்ச்சி பெற்றவன். அவனுக்கு இந்தப் படத்தை அனுப்பி, தெளிவாக்க  முடியுமா என்று கேட்கிறேன்” என்றான்.

“அவர் பெரிய நிபுணரா?” என்றார் டாக்டர்.

“அவன் தமிழ்நாட்டில் சென்னையில் இருக்கிறான். என் தங்கையின் மகன். வயது பன்னிரண்டுதான். ஏழாவது வகுப்பு படிக்கிறான். தனசேகர் என்று பெயர்” என்றான் பாண்டியன்.

“என்ன சொல்கிறீர்கள்? சிறுவனா?” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் வியப்புடன்.

“கணிப்பொறி வேலைகளைச் சிறுவர்கள் எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். என் தங்கை மகன் கணிப்பொறி வரைகலையில் தேர்ந்தவன்” என்றான் பாண்டியன்.

படத்தை அனுப்பிவிட்டுப் பாண்டியன் எழுந்துகொண்டான். “அவனிடம் இருந்து செய்தி வரட்டும், பார்ப்போம்” என்றான்.

அவர்கள் வெளியே வந்தனர். அங்கே நோர்பா நாக்போவுடன் பேசிக்கொண்டிருந்தான். அவர்களைக் கண்டதும் நாக்போ நாக்கை நீட்டி மூக்கை நக்கிவிட்டுத் திரும்பிக்கொண்டது.

“என்ன சொல்கிறது?” என்று பாண்டியன் கேட்டான்.

“அதை நீங்கள் மதிக்கவில்லையாம். மனிதர்களுக்கு அறிவே இல்லை என்கிறது” என்றான் நோர்பா.

“அது ஏதோ பன்றிக் கறியின் மணத்தை முகர்ந்துவிட்டுக் குரைக்கிறது” என்றான் பாண்டியன்.

நாக்போ, ‘எனக்கு கோபம் வருகிறது’ என்று சொல்லிவிட்டு வெளியே சென்றது.

“நாக்போ தவறாகச் சொல்லாது. அந்த அறையை எரித்தவர்கள் எவரோ இங்கே வந்திருக்கிறார்கள்” என்றான் நார்போ.

வெள்ளி நிலம் - 8

“அவர்கள் ஓடுவதைக் கண்ணால் பார்த்திருக்கிறார்கள்” என்றான் பாண்டியன்.

“ஏன் அவர்கள் எரிப்பதற்கு முன்பு இங்கே வந்திருக்கக் கூடாது?” என்றான் நோர்பா.

பாண்டியன் நின்றுவிட்டான். அது ஒரு கூர்மையான கேள்வி என்று தோன்றியது. “இருக்கலாம். அப்படியென்றால் எரிக்க வந்தவர்களுக்கு இங்கே மடாலயத்தில் எவரையோ தெரிந்திருக்கிறது” என்றான்.

“ஆம்! இந்த வயதான பிட்சுவின் அறை மிக ஒதுக்குப்புறமானது. அங்கே எவராவது ஒளிந்திருக்கலாம். அவருக்கு அது தெரிந்திருக்காது” என்றான் நோர்பா.

பாண்டியன் முகவாயைத் தடவியபடி யோசித்தான். “நோர்பா, நீயும் நாக்போவும் இந்த மடாலயத்தை முழுமையாகச் சுற்றிப் பாருங்கள். ஏதாவது தகவல் கிடைத்தால் சொல்லுங்கள். டாக்டர் பிஸ்வாஸிடம் நான் நிறையப் பேச வேண்டியிருக்கிறது” என்றான்.

சரி என்ற நோர்பா, நாக்போவுடன் மடாலயத்துக்குள் செல்ல, பாண்டியனும் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸும் மீண்டும் ராணுவ முகாமுக்குத் திரும்பினர்.

“எனக்கு திபெத்தின் தொன்மையான வரலாற்றைப் பற்றிப் பெரிதாக ஏதும் தெரியாது” என்றான் பாண்டியன்.

“சொல்கிறேன்” என்றார் டாக்டர். “திபெத் பற்றிய குறிப்புகளை இந்திய மொழி இலக்கியங்களிலோ, சீன மொழி இலக்கியங்களிலோ காணமுடிவதில்லை. திபெத்தில் முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் வாழ்ந்திருக்கிறான் என்பதற்கான தடயங்கள் உள்ளன. மனிதர்கள், கற்களை மட்டுமே ஆயுதங்களாகப் பயன்படுத்திய காலகட்டம்தான் ‘கற்காலம்’ என அறிந்திருப்பீர்கள். கற்கால நாகரிகத்தின் பல சின்னங்கள் திபெத்தில் கிடைத்திருக்கின்றன.

கற்காலத்தின் முடிவில் உலகமெங்கும் பனி மூடியிருந்தது. அதை கடைசிப் பனியுகம் என்பார்கள். வெவ்வேறு காலகட்டங்களில் பூமியின் மேல் விழும் சூரியனின் வெப்பம் குறைந்து, மொத்த பூமியே பனியால் மூடியிருந்தது. அதுவே பனியுகம். பன்னிரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு கடைசியாக பனியுகம் வந்தது. கடைசிப் பனியுகத்தில்தான் மனிதர்கள் உயிர் வாழ்வதன் பொருட்டு கால்நடையாக உலகம் முழுக்கச் சென்றார்கள். அப்போது, கடல்களும் உறைந்திருந்ததனால் நடந்தே பல இடங்களுக்குச் செல்லமுடிந்தது. அப்படித்தான் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்று கடலில் நெடுந்தூரம் தள்ளியிருக்கும் தீவுகளுக்கும் சென்று சேர்ந்தனர்” என்றார் டாக்டர்.

“ஆம். நான் வாசித்திருக்கிறேன்” என்று பாண்டியன் சொன்னான்.

“மனிதன், கல் கருவிகளைப் பயன்படுத்த ஆரம்பித்ததுமே போதுமான அளவுக்கு உணவை வேட்டையாட முடிந்தது. ஆகவே, மனிதர்கள் மற்ற விலங்குகளைவிட அதிகமாக வளர்ச்சி அடைந்தனர். கூட்டம் கூட்டமாக வாழ ஆரம்பித்தபோது, அவர்களின் மொழி வளர்ச்சி அடைந்தது. மொழி வளர்ச்சி அடைந்ததும்,  பண்பாடு ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்தது. அப்போதுதான் பனியுகம் வந்தது” என்ற டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் தொடர்ந்தார்.

“மிக அதிகமாக மக்கள் வாழ்ந்தது சீனாவின் பெரிய நிலப்பரப்பில்தான். இன்றைக்கும் உலக எண்ணிக்கையில் சீனாவின் மஞ்சள் இன மக்களே அதிகம். பனியுகம் வந்தபோது வடக்கே ஆர்ட்டிக் பகுதி குளிர்ந்தபடியே வந்தது. ஆகவே, சீனாவில் இருந்த கற்கால மனிதர்கள் கூட்டம் கூட்டமாக அங்கிருந்து வெளியேறி, தெற்கு நோக்கிச் சென்றனர். சிலர் மேற்காகச் சென்று ஐஸ்லாந்து வழியாக வட அமெரிக்கா கண்டத்துக்குச்  சென்று, அங்கிருந்து தென் அமெரிக்கா வரை சென்றார்கள். அவர்கள்தான் செவ்விந்தியர்கள்” என்றார் டாக்டர்.

“ஆ!” என்று பாண்டியன் ஆச்சர்யத்துடன் கூவிவிட்டான். “அதனால்தான் செவ்விந்தியர்கள்,  சீனர்கள் போலிருக்கிறார்களா?”

“ஆம். Forbidden kingdom என்ற சினிமாவில் ஜாக்கி சான் செவ்விந்தியர்களின் ஊருக்குச் செல்லும்போது, அவரையே செவ்விந்தியர்கள் என்றுதான் நினைப்பார்கள்” என்று நரேந்திர பிஸ்வாஸ் சிரித்தபடி சொன்னார். “அதேபோல ஆப்பிரிக்காவில் கலஹாரி பாலைவனத்தில் வாழும் ‘புஷ்மேன்’ என்னும் பழங்குடி மக்களும் சீனர்களில் இருந்து உருவானவர்கள்தான்.”

“அடடா! ‘The gods must be crazy’ என்ற சினிமாவில் அவர்களைப் பார்த்திருக்கிறேன். நம்மைப் போல மாநிறமாக இருப்பார்கள். ஆனால், சீன முகம்தான்” என்றான் பாண்டியன்.

‘‘அந்தக் காலகட்டத்தில்தான் சீனாவில் இருந்து மக்கள் மலையேறி, திபெத்துக்கு வந்து,  அங்கே வாழ்ந்த கற்கால மக்களுடன் கலந்தனர். அவர்களே இப்போது திபெத்தில் வாழும் மக்கள்” என்றார் நரேந்திர பிஸ்வாஸ்.

வெள்ளி நிலம் - 8

“அன்று திபெத் மேலும் குளிராகத்தானே இருந்திருக்கும்?” என்றான் பாண்டியன்.

“ஆமாம். ஆனால், சமவெளியில் பனிப்பொழிவு நிகழ்ந்தபோது, அங்கிருந்த விலங்குகள் எல்லாம் குளிரில் இறந்திருக்கும். ஆனால், திபெத்தில் எப்போதுமே குளிர் இருந்ததனால் விலங்குகளுக்குக் கெட்டியான மயிர் இருந்தது. ஆகவே, அவை பனியுகத்தில் சாகவில்லை. அன்று விலங்குகளை வேட்டையாடித்தான் மனிதர்கள் வாழ்ந்தனர். விலங்குகளின் இறைச்சியை உண்டனர். அதன் தோலை உடுத்தினர். அதன் கொழுப்பை எரித்துக் குளிர் காய்ந்தனர்” என்றார் டாக்டர்.

பேசியபடியே அவர்கள் ராணுவ முகாமுக்கு வந்தனர். தன் அறைக்குள் டாக்டர் அழைத்துச் சென்றார். பாண்டியன் பணியாளிடம் இரண்டு சூடான டீ கொண்டுவரும்படி சொன்னான்.

‘‘பனியுகம் விலகியதும் வாழ்க்கை மாற ஆரம்பித்தது. பனி உருகியதனால் ஆறுகளில் எல்லாம் நிறைய நீர் வந்தது. ஆகவே,  சீனாவின் சமவெளிகளில் விவசாயம் பெருகியது. ஏராளமான உணவு கிடைத்தது. அங்கே வாழ்ந்த மக்கள் பல மடங்காகப் பெருகினர். அங்கே பெரிய ஊர்களும் அரசுகளும் உருவாகி வந்தன” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

பணியாள் டீ கொண்டுவந்தான். பாண்டியன் அதை டாக்டருக்கும் பரிமாறி, தானும் எடுத்துக்கொண்டான்.

‘‘சீனாவின் சமவெளிகளில் மக்கள்தொகை பெருகியபோது, உணவுக்காக மக்கள் ஒருவருக்கொருவர் போரிட்டனர். பெரிய இனங்களின் தாக்குதலில் இருந்து சிறிய இனங்கள் மலைகளுக்கு மேல் தப்பி ஓடின. அப்படி ஒரு சிறிய இனம் மலையேறி திபெத்தின் மேற்குப் பகுதிக்கு வந்தது. அந்த மக்களின் தலைவர்தான் ‘டோன்பா ஷென்ராப் மிவோ’ என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அவர் போன் மதத்தை உருவாக்கிய பின் மூவாயிரம் வருடங்கள் அந்த மதம்தான் திபெத்தில் இருந்தது. இதுதான் திபெத்தின் பழைய வரலாறு’’ என்றார் டாக்டர்.

பாண்டியனின் செல்பேசி ஒலித்தது. அவனுக்கு மின்னஞ்சல் வந்திருப்பது தெரிந்தது. உடனே அவர்கள் கணிப்பொறியைத் திறந்து மின்னஞ்சலைப் பார்த்தார்கள்.

பாண்டியனின் தங்கை மகன் தனா மின்னஞ்சல் அனுப்பியிருந்தான். ‘மாமா அந்தப் படத்தைத் தெளிவாக ஆக்கிவிட்டேன்’ என்று  குறிப்பிட்டிருந்தான்.

“அதற்குள்ளாகவா... எப்படி?” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் வியப்புடன்.

“அவன் அந்த ஓவியத்தை டிஜிட்டலாக மாற்றி அதில் உள்ள நிறங்களை எல்லாம் தனித்தனியாகப் பிரித்துவிட்டான். அதில் கறுப்பு நிறத்தை மட்டும் பத்தில் ஒரு பங்கு அழுத்தம் உடையதாகக் குறைத்துவிட்டான். கரி விலகி படம் தெளிவாகிவிட்டது” என்றான் பாண்டியன்.

“ஆச்சரியம்தான்!” என்றார் டாக்டர்.

பாண்டியன் அந்த ஓவியத்தைப் பெரியதாக்கி கூர்ந்து பார்த்தான். சட்டென்று ஓர் இடத்தில் விரலை வைத்தான். அதற்குள் டாக்டரும், “ஆ” என்றார்.

அந்த டாங்காவில் இருந்த ஓவியத்தில் காணப்பட்ட போன் தெய்வத்தின் கை மடிப்பு தெரிந்தது. அதில் மம்மியின் கையில் எழுதப்பட்டிருந்த அதே சீன மொழி எழுத்துகள் இருந்தன.

“அதே எழுத்துகள்! மலை மேல் நிலவும் சூரியனும். அருகே ஒரு மனிதன். லியங்ஷு நாகரிகத்தைச் சேர்ந்த எழுத்துகள்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

பாண்டியன் தலையை அசைத்து, “இப்போது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் பொருந்தி வருகின்றன” என்றான்.

(தொடரும்...)

ராபர்ட் புரூஸ் ஃபூட்

வெள்ளி நிலம் - 8

னித நாகரிகத்தை மனிதர்கள் பயன்படுத்திய கருவிகளின் அடிப்படையில் பல காலகட்டங்களாகப் பிரிக்கிறார்கள். ஆரம்பத்தில் கற்கருவிகளை மனிதர்கள் பயன்படுத்தினர். இது, ‘கற்காலம்’ எனப்படுகிறது. பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு, மனிதர்கள் செம்பைப் பயன்படுத்தக் கற்றனர். இது ‘செம்புக் காலம்’ எனப்படுகிறது. பின்னர், அதை ஈயத்துடன் கலந்து வெண்கலமாக ஆக்கலாம் என்று கண்டுபிடித்தனர். இது ‘வெண்கலக் காலம்’ எனப்படுகிறது. நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது. அது ‘இரும்புக் காலம்’ எனப்படுகிறது.

1863-ம் ஆண்டு ராபர்ட் புரூஸ் ஃபூட் என்னும் வெள்ளையர், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொத்தாளத்து ஆற்றின் கரையில் உள்ள ஆதிரம்பாக்கம் என்னும் ஊரில் கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகளைக் கண்டுபிடித்தார். அவை, சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன.

ராபர்ட் புரூஸ் ஃபூட், ‘இந்தியத் தொல்லியல் ஆராய்ச்சியின் தந்தை’ என்று சொல்லப்படுகிறார். அவர், தன் நிலவியல் ஆராய்ச்சிகள் பற்றி எழுதிய நினைவுக் குறிப்புகள் [Geological Features of the South Mahratta Country and Adjacent Districts 1876] மிக முக்கியமான நூலாக இன்றைக்கும் வாசிக்கப்படுகிறது.