மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 20

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

வீரயுக நாயகன் வேள்பாரி - 20

து ஆதி பழங்காலம். எந்த ஆண்டிலும் இல்லாதவாறு கோடைவெயில் உக்கிரம்கொண்டிருந்தது. எங்கும் இலை, தழைகள் காய்ந்து சருகாகக் கிடந்தன. நிலத்தின் வெக்கை, எலிவளைக்குள்கூட நாகங்களை இருக்கவிடவில்லை. மனிதர்களின் பாடு அதனினும் மோசமாக இருந்தது. ஒரு கொடும்பகலில் எருக்குமலையின் தென்திசையில் காட்டுத் தீ பற்றியது. பற்றிய வேகத்தில் மலையின் அடிவாரம் முழுவதும் நெருப்புப் பரவியது. மலையின் மேல்புறத்தில் குடியிருக்கும் நாகர்கள் பரவிவரும் நெருப்பை பகல் முழுவதும் அறியவில்லை. சூரிய வெப்பம் தாங்க முடியாத அளவுக்கு இருந்ததால், அவர்கள் பகலில் குடிலைவிட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். அனல் அலையலையாக மேலேறி வர, அது வழக்கமான ஒன்றுதான் என்று நினைத்தனர்.

சூரியன் இறங்கிய பிறகே அவர்கள் வெளியேறி வந்தனர். கரும்புகை விண்ணை நோக்கி எழுந்தவண்ணம் இருந்தது. எருக்குமலையின் நாலாபுறங்களில் இருந்தும் சருகுகள் பற்றி எரிய, தீயின் நாவுகள் சுழன்று மேல்நோக்கிப் பாய்ந்துவந்தன. மலையின் எந்தத் திசை வழியாகவும் வெளியேற முடியாத நிலை உருவாகிவிட்டது. இருக்கும் ஒரே வழி, மலையின் மேற்கு முகப்பிலே இருக்கும் கரும்பாறை மடிப்புகளும் அவற்றில் ஆங்காங்கே இருக்கும் குகைகளும்தான். நாகர்கள் எல்லோரும் குடிலைவிட்டு அகன்று குகைகளில் நுழைந்தனர்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 20

உயிர் தப்பிய மகிழ்வு யாரிடமும் இல்லை. மலை முழுவதும் இருந்த நாகங்கள் நெருப்பில் அழிந்திருக்குமே, அவற்றைக் காப்பாற்ற முடியாமல் நாம் மட்டும் பிழைத்து என்ன ஆகப்போகிறது என்ற மனநிலைதான் எல்லோருக்கும். காட்டுத் தீ ஆறு நாட்கள் எரிந்தது. காற்று வீச வீச நெருப்பின் வெக்கை நாலாபுறங்களிலும் சீறிக்கொண்டிருந்தது. கரும்பாறைகள் பிளவுண்டன.

இரவும் பகலும் நாகர்கள் அழுகையை நிறுத்தவே இல்லை. ஒரு நள்ளிரவில் முதுமகள் ஒருத்தி குகையைவிட்டுச் சற்றுத் தள்ளிப்போய், பாறையின் மீது அமர்ந்து நெருப்புக்கோளமாகத் தகதகத்துக்கிடக்கும் காட்டைப் பார்த்தபடி இருந்தாள். அந்த இடத்தின் சூட்டில் யாரும் ஒரு கண்ணிமைப்பொழுதும் நிற்க முடியாது. அவள் எப்படி இவ்வளவு நேரம் நிற்கிறாள் என மற்றவர்களுக்குப் புரியவில்லை.

அவள் கண்களில் உயிர் இல்லை. எங்கும் தகிக்கும் கங்குகளே இருந்தன. நிலைகொண்ட மரங்கள் எவையும் இல்லை. நெருப்பு, மரங்களை முறுக்கித் திருகியது. இரவில் எரிந்து சரியும் மரங்களைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது. அங்குமிங்குமாக மரங்கள் வெடிக்கும் ஓசை நின்றபாடில்லை. கருநாகத்தின் சீற்றம் என வெடிப்புற்ற மரங்கள் நெருப்பைக் கக்கின.

முதுமகள், அழும் கண்களைத் துடைத்தபடி பாறையைவிட்டு எழுந்தாள். எழும்போது தொலைவில் தகித்துக்கொண்டிருக்கும் நெருப்பின் பரப்பில், ஏதோ ஒரு வேறுபாட்டை உணர்ந்தாள். அது என்னவென்று அவளுக்குப் பிடிபடவில்லை. அந்த இடத்தைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள். ஒன்றும் தெரியவில்லை. எங்கும் கங்குகள் கண் விழித்திருந்தன. இந்தக் கொடும் இரவில் எதைப் பார்த்து என்ன ஆகப்போகிறது என்ற நினைப்போடு எழுந்தாள். மீண்டும் அந்த இடத்தில் ஏதோ ஓர் அசைவு தெரிந்தது. கண்களைக் கூர்மையாக்கி உற்றுப்பார்த்தாள். கங்குகளின் உள்நெருப்பு காற்றின் போக்குக்கு ஏற்ப கூடிக் குறைவதால் ஏற்படும் அசைவுகள் நம்மைத் தொந்தரவு செய்கின்றன என்று நினைத்தபடி, குகையை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 20

சிறிது தொலைவு நடந்தவள், மனம் பொறுக்காமல் மீண்டும் திரும்பிவந்து அந்த இடத்தை உற்றுப்பார்த்தாள். கங்குகளின் மீதான அசைவுகள் கொஞ்சம் கொஞ்சமாகப் புலப்படத் தொடங்கின. அவளின் கண்கள் இமைகளை இறக்காமல் உற்றுப்பார்த்தபடியே இருந்தன. நம்பவே முடியாத பேரதிசயம் ஒன்றை அவள் உணரத் தொடங்கினாள். உடலெங்கும் வியர்த்து அடங்கியது. அது உண்மைதானா என்ற கேள்வியை மனம் மீண்டும் மீண்டும் எழுப்ப, அசையாமல் பார்த்தாள். உண்மைதான். `என் கண்கொண்டுதான் அதைப் பார்க்கிறேன்’ என்பதை அவள் நம்பத் தொடங்கினாள்.

நெருப்பு எரிவது அடங்கி, கங்குகள் மட்டும் கனன்றுகொண்டிருந்த ஓர் இடத்தில், சாம்பல் படிந்த கங்குகளின் மீது ஒரு நாகம் ஊர்ந்து போவதுபோல் இருந்தது. உற்றுப்பார்த்தாள் அவள். கண்ணிமைக்கும் நேரத்தில் கங்குகளைக் கடந்து, நெருப்பு அணைந்த இருள் பகுதிக்குள் நுழைந்தது அந்த நாகம்.

முதுமகள், குகையை நோக்கி ஓடினாள். கத்தியபடி இந்த உண்மையைச் சொன்னாள். `இந்தக்

வீரயுக நாயகன் வேள்பாரி - 20

கொடும்நெருப்பால் ஆறு நாட்கள் சூழப்பட்ட இந்த நிலையில் எல்லோரும் மனம் சிதைந்தே இருக்கிறோம். முதுமகள், அதிகச் சிதைவுக்கு உள்ளாகிவிட்டாள்’ என்று மற்றவர்கள் நினைத்தனர்.

அவளோ, `‘இல்லை நெருப்பின் மீது நாகம் ஊர்ந்து செல்வதை நான் பார்த்தேன்'’ எனக் கத்தி முறையிட்டாள். எல்லோருக்குமான ஆசையே, `‘மண்ணின் அதிசய உயிரினமான நாகங்கள் எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்பதுதானே. குலத்தின் முதுமகளுக்கு அது இருக்காதா?’' என்று ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லினர்.

முதுமகள் ஆறாத சினம்கொண்டாள். மறுநாள் இரவு எல்லோரையும் அவள் அமர்ந்திருந்த பாறைக்கு அழைத்துவந்தாள். தாங்க முடியாத வெக்கைக்கு நடுவே இரவு முழுவதும் அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். நேற்றுபோல் கங்குகள் பெரும் அனலோடு இல்லை. சற்றே குறைந்திருந்தது. ஆனாலும் உள்நெருப்பு இரவானதும் கண்கள் விழித்துத் தகித்தது. ஊரே உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. கரும்புகை விடாது வந்து முகத்தில் அறைந்தது.

பொழுது, நள்ளிரவைத் தாண்டியது. அவர்கள் தலைமுறைத் தலைமுறையாக வாழும் காட்டைச் சுழற்றித் தின்ற நெருப்பு, இப்போது சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கிறது.

`‘இந்தக் கொடும்காட்சியை இரவும் பகலுமாகப் பார்த்துக்கொண்டிருந்தால் எல்லோருக்கும் மனம் சிதைந்துதான்போகும், வாருங்கள் குகைக்குள் ஒடுங்குவோம்” என்று சொல்லி, பெரியவர் ஒருவர் எழுந்தவுடன் அனைவரும் எழுந்து குகை நோக்கிப் புறப்பட்டனர்.

முதுமகளுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. இனி இவர்களை நிறுத்த முடியாது என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது. அவளும் உடன் நடக்கத் தொடங்கினாள். எல்லோரும் பாறைவிட்டு அகன்ற பிறகு, ஒரு சிறுவன் மட்டும் எதிர்திசையில் பார்த்தபடி அசையாமல் நின்றுகொண்டிருந்தான். மற்றவர்கள் அவனைச் சத்தம்போட்டு அழைத்தபடி குகை நோக்கி நடந்தனர்.

சிறுவனின் குரல் மெல்லியதாகத்தான் கேட்டது. எல்லோரும் அருகில் வந்து அந்தத் திசை நோக்கிப் பார்த்தனர். வியப்பால் விழிகள் பிதுங்கிக்கொண்டிருந்தன. கூட்டத்தினர் மூச்சு விடும் சத்தம்கூடக் கேட்கவில்லை. உறைந்து​போன நிலையில் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். கண்ணீரைத் துடைத்தபடி முதுமகள் மட்டும் குகையை நோக்கி நடந்தாள்.

அதன் பிறகு, பலகாலம் அந்த ரகசியத்தைக் கண்டறிய முடியாமல் நாகர்கள் தவித்துப்போயினர். கங்குகளின் மீது பாம்புகளால் எப்படி ஊர்ந்துபோக முடிந்தது? விடை தெரியாமல் இருந்த கேள்விக்கு முதுமகள்தான் ஒருநாள் விடை கண்டாள். அந்த மலையின் தென்திசைப் பாறை இடுக்குக்குள் ஓர் இடத்தில் ‘தீக்களி’ உள்ளது. அதில் புரண்டு, மேனி எல்லாம் தீக்களி அப்பியபடி நாகங்கள் நெருப்பைக் கடந்துள்ளன என்று அறிந்தாள்.

அது உண்மையா என்பதை அறிய முதலில் தானே உடல் எங்கும் தீக்களி பூசியபடி நெருப்புக்குள் இறங்கப்போவதாகச் சொன்னாள். முதுமகள் வாக்கைத் தட்ட முடியாமல் பெரும்மரங்களை வெட்டி வீழ்த்தி தீயை உருவாக்கினர். ஆடை துறந்து உடல் எங்கும் தீக்களி பூசியபடி நெருப்பினுள் நுழைந்தாள் முதுமகள். நாகர் கூட்டத்தின் உயிர்நாடி ஒடுங்கியது. அவள் உள்நுழைந்தபோது வீசிய காற்று, தழலைக் கிளர்ந்தெழச் செய்தது. குலத்தின் முதுமகள் நெருப்பில் மறைந்தாள்.

கணநேரத்தில் பதறிய ஆண்கள், “தண்ணீர்​கொண்டு ஊற்றி நெருப்பை அணையுங்கள்” என்று கத்த, பெண்களோ, “முதுமகள் வாக்கை மீற அனுமதிக்க மாட்டோம்” என்று தீயைக் காத்து நின்றனர். சூழ்கொடி எனப் படர்ந்திருந்த நெருப்பின் கிளைகளை விலக்கி வெளியே வந்தாள் அவள்.

உறைந்து நின்றனர் நாகர்கள்.

``எண்ணெய்க்குள் நீர் நுழைய முடியாததைப்போலத்தான் இந்தத் தீக்களியைத் தாண்டி தீ நுழைய முடியாது” - சொல்லியபடி நடந்தாள் முதுமகள்.

நிர்வாண நிறைச்சுடரை அழைத்துக்கொண்டு நீராடச் சென்றனர் நாகினிகள். நடக்கும்போது அவள் சொன்னாள், “நெருப்பு, கண்ணுக்குள் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது கண்கள் திறந்தால் போதும்.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 20

அவளின் குரலை, கண்விழித்துக் கேட்டுக்​கொண்டிருந்தன நாகங்கள்.

தழல்மாலை சூடி வந்தவளின் மேனி எல்லாம் நீரூற்றி நீர்மாலை சூடினர்.

பெ
ருஞ்சேரலின் படை எருக்குமலையைச் சூழ்ந்து எரியூட்டியபோது நாகர்கள் பலரும் போரிட்டு மாண்டுள்ளனர். மிஞ்சியவர்கள் உடல் எங்கும் `தீக்களி’ பூசி அந்த நெருப்பில் இருந்து வெளியேறி பறம்புமலை வந்து சேர்ந்தனர்.

அப்போதிருந்து, அவர்களின் குலவழக்கப்படி கொற்றவைக் கூத்தில் கை புணர்ந்தாடும் துணங்கைக் கூத்து நிகழ்கிறது. புதிய இணையர்கள் தங்களின் மேனி எங்கும் ‘தீக்களி’ பூசியபடி நெருப்புக்குள் நுழைந்து, `தழல்மாலை சூடுவர்.

பிலரின் உடல்நிலை ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்தது. நேற்றைய இரவுக்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமானது. பகல் முழுக்க தனது மாளிகையில் படுத்தபடி ஏதேதோ பிதற்றினார். உடல் மிகவும் சூடேறியிருந்தது. செய்தியைக் கேள்விப்பட்டு பாரி வந்தான். மருத்துவர்கள் மருந்துகள் தந்தனர். அவர்கள் போன பிறகு பாரி ‘தழல்மாலை சூடும்’ நிகழ்வை விளக்கிச் சொன்னான். அதை முழுமையாக அறிந்த பிறகுதான் கபிலரின் மனம் நிதானமடைந்தது.

`` `மூன்றாம் நாள் சற்றே அச்சமூட்டுவதாக இருக்கும். நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்’ என்று சொன்னேன். நீங்கள்தான் செவி சாய்க்கவில்லை” என்றான் பாரி.

“எனது உடல் ஈடுகொடுக்க மறுக்கிறது; மனம் உடலைப் பொருட்படுத்த மறுக்கிறது.”

அவர் சொன்னதைப் பற்றி பாரி சிந்தித்துக்கொண்டிருந்தான். கபிலர் தொடர்ந்தார்.

``எத்தனையோ தலைமுறைக்கு முன்னால் அழிந்த குலங்கள் பற்றி நான் கேள்விப்பட்ட கதைகள் இங்கு உயிர்கொள்கின்றன. மனிதர்கள் வரலாற்றுக்குள்ளிருந்து இறங்கிவருகிறார்கள். இந்த மண்ணெங்கும் சிந்தப்பட்ட குருதியும் கண்ணீரும் உலராமல் உனது உள்ளங்கையில் இருக்கின்றன பாரி” எனச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கபிலரின் குரல் உடைந்தது.

பாரிக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை.

வீரயுக நாயகன் வேள்பாரி - 20“அந்தக் கண்ணீருக்கும் குருதிக்கும் பறம்பு கடமைப்பட்டுள்ளது” என்று மட்டும் சொன்னான்.

சிறிது நேரம் பேச்சற்ற அமைதி நீடித்தது.

“நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள். நான் பிறகு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்தான் பாரி.

“உன்னிடம் இன்னொன்று கேட்க வேண்டும்?”

“என்ன?” என்றான் பாரி.

“நான் முதன்முதலாகக் கொற்றவைக் கூத்து பார்க்கிறேன். தழல்மாலை சூடலைப் பற்றி கேள்விப்பட்டதுகூட இல்லை. ஆனால், நீ காலங்காலமாக அதைப் பார்த்துக்கொண்டி ருப்பவன். அப்படியிருக்க அவர்கள் நெருப்புக்குள் இறங்கும்போது உனது உடல் நடுங்கியது ஏன், உனது கண்கள் ஏன் கலங்கின?”

கபிலரின் கேள்வி, பாரிக்குப் பெரும்வியப்பைக் கொடுத்தது. நெருப்பாடல் கண்டு கூட்டமே உறைந்துபோயிருந்த வேளையில், தன்னை எப்படி இவ்வளவு கூர்மையாகக் கவனித்தார்?

எழுந்த பாரி, கபிலரின் அருகில் உட்கார்ந்தான். அவனது முகத்தில் இவ்வளவு நேரம் இல்லாத ஓர் இளஞ்சிரிப்பு ஓடி மறைந்தது.

பாரி சொன்னான், ``நேற்று தழல்மாலை சூட மூன்று இணையர்கள் நெருப்புக்குள் இறங்கினர் அல்லவா? நெருப்புக்குப் பின்புறம் இருந்து உடல் எல்லாம் தீக்களி பூசிக்கொண்டு இறங்குபவர்களை, நெருப்புக்கு முன்புறம் உட்கார்ந்திருக்கும் நம்மால் எளிதில் அடையாளம் காண முடியாது. நேற்றும் அப்படித்தான். ஆனால், மூன்றாவது இணை உள்ளிறங்கும்போது அந்த ஆண்மகன் யார் என எனக்குத் தெரியவில்லை. ஆனால், அந்தப் பெண்மகள் யார் என்று எனக்குத் தெரிந்தது. கணநேரத்தில் கண்டறிந்தேன்.”

சற்றே அமைதி காத்த பிறகு பாரி சொன்னான், “அவள் என் மூத்தமகள் அங்கவை.”

அதிர்ந்தார் கபிலர்.

பாரி தொடர்ந்தான், “சிறுவயதில் இருந்து தழல்மாலை சூடுவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நெருப்பால் தீக்களியை மீறி ஒன்றும் செய்துவிட முடியாது என்று நன்றாகத் தெரியும். ஆனால், உள்ளிறங்கியது அங்கவை எனத் தெரிந்த கணத்தில் எனது உடல் நடுங்கியது.

அவள் ஆட்டத்தில் சிறந்தவள். தனது இணையோடு நெருப்பில் இறங்கி ஆடுகிறாள். ‘காதல்கொண்டு நெருப்பில் குளிக்கும் உன் மகளைப் பார்’ என ஒருபக்கம் மனம் துள்ளிக் குதித்தது. இன்னொரு பக்கமோ தழலுக்குள் இறங்குவது என் தசை எனத் துடித்தது.

உடலும் மனமும் இரு கூறுகளாப் பிளவுண்டதாக நீங்கள் சொன்னீர்களே, எனக்கோ மனமே இரு கூறுகளாகப் பிளவுண்டது.”

கலங்குவதிலும் கலங்கி மீள்வதிலும் பாரியே உதாரணமாக இருக்கிறான் என கபிலருக்குத் தோன்றியது.
 
“அவள் காதல்கொண்டது உனக்குத் தெரியுமா?”

``அவள் காதல் கொண்டுள்ளாள் என்பதை நான் முன்பே கணித்துவிட்டேன். ஆனால், யாரைத் தேர்ந்தெடுத்துள்ளாள் என்றுதான் தெரியாமல் இருந்தது.

``இப்போது தெரிந்ததா?’’

``இல்லை. நெருப்பில் நம் தசையைத்தானே நாம் உணர முடியும். அந்த இளைஞன் யார் எனத் தெரிந்துகொள்ள ஆசையோடிருக்​கிறேன். அவளே சொல்லட்டும். அவள் காதல்கொண்டுள்ளாள் என்றால், அவன் மாவீரனாகத்தான் இருப்பான். இவளின் காதலைப் பெற முடிந்த ஒருவன், வீரத்தைத் தாண்டிய அரும்குணங்களைக் கொண்டிருப்​பான். காத்திருக்கிறேன். அவனின் கைப்பற்றி எனக்கு எதிரில் வந்து அவள் நிற்கும் நாளுக்காக.”

மகிழ்ச்சி பொங்க கபிலர் கேட்டார்...

வீரயுக நாயகன் வேள்பாரி - 20``ஆதினிக்குத் தெரியுமா?”

சிரித்தான் பாரி.

``அவளுக்குத் தெரியாமலா இருக்கும்? தனக்கும் அவனுக்கும் ஏற்பட்டுள்ளது காதல் என்று அங்கவை உணரும் முன்பே அவள் அறிந்தி​ருப்பாள். அவள், தாய் அல்லவா?”

கலங்கினார் கபிலர். மண்ணை வேர் ஊடுருவுவது​போல மனங்களை ஊடுருவுகிறான் பாரி. தன்னையும் அவன் ஊடுருவிக்கொண்டிருப்பான்.

“அப்படி எனில், வேளீர் குலம் நாகர் குலத்தோடு கலக்கப்போகிறது அல்லவா?”

“கலவையில்தானே புதுமைகள் பூக்கும். வேடர்குலமும் கொடிக்குலமும் இணைந்ததில்தானே வேளீர்குலம் பிறந்தது. வேளீர்குலத்தில் கலந்துள்ள கலவைகள் எத்தனை எத்தனை! என் தாய் சொல்வாள்... `உன் பாட்டன் திரையர் பெண்ணை மணந்தான்’ என்று. `காட்டெருமையை அடக்கும் வலு எனது தோள்களுக்கு வாய்த்தது அதனால்தான்' எனப் பலமுறை நினைத்திருக்கிறேன். திரையர்போல் திடம்கொண்ட ஒரு குலம் இந்த மண்ணில் வேறு எது? நாளை என் பேரக்குழந்தையின் கண்களில் நீல வளையம் பூத்து மறையும் அழகைப் பார்க்க இப்போதே தயாராகிவிட்டேன்” - சொல்லும்போதே பாரியின் முகம் எல்லாம் பூத்து மலர்ந்தது.

கபிலரின் உடற்சூடு குறையவில்லை. மாலை ஆனதும் அதிகமாகத் தொடங்கியது. நீலன், திசைக்காவல் வீரன். ஆதலால், கொற்றவைக் கூத்து முடிந்ததும் அவன் வேட்டுவன் பாறைக்குச் சென்றாக வேண்டும். எனவே, கபிலருக்கு உதவ உதிரனை அனுப்பிவைத்தான் பாரி.

இளம்வீரன் உதிரன், கபிலரின் மாளிகைக்கு மாலையில் வந்துசேர்ந்தான். அந்தப் பெருங்கவியை விழுந்து வணங்கினான். இருக்கையில் அமர்ந்தபடி அவனுக்கு வாழ்த்து சொன்னார் கபிலர். கொண்டுவந்த பச்சிலை உருண்டைகளை அவர் கையில் கொடுத்து, வாயில் போட்டுக்கொள்ளச் சொன்னான்.

“எனது உடற்சூடு குறைந்துள்ளதாக உணர்கிறேன்.”

குடிக்க நீரைக் குவளையில் நீட்டியபடி உதிரன் சொன்னான், “இன்னும் குறையவில்லை?”

உதிரனை உற்றுப்பார்த்தார் கபிலர்.

“உங்களின் கால் தொடும்போது அறிந்தேன். நீங்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். மருத்துவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லி அனுப்பியுள்ளனர்” என்றான் உதிரன்.

பெரியவர்கள் சில வேலைகளைச் செய்ய மறுப்பார்கள். அதற்கான காரணங்கள் அவர்களிடம் இருக்கும். அதுதான் சரி என உறுதியாக நம்புவார்கள். அதை மீறி அவர்களைச் செய்யவைக்கச் சிறந்த வழி, வயதில் மிகச் சிறியவர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பதுதான். இறங்கிவந்து அவர்களால் வாதாட முடியாது. அவர்களைக் கொண்டே அவர்களின் தரப்பை வீழ்த்தும் முயற்சி. பாரி அதையே செய்தான்.

உதிரன், ஒரு பெருங்கவியைக் குழந்தைவடிவில் கண்டுகொண்டிருந்தான். அவர் இரவானதும், “கொற்றவைக் கூத்துப் பார்க்க அழைத்துப் போ” என்று நச்சரிக்கத் தொடங்கினார். அவனோ அவரை மாளிகையின் மேலே அழைத்துச் சென்றான். காற்றில் மிதந்துவரும் இசையை வைத்தே, அன்றைய கூத்து யாருடையது என்று அவருக்குச் சொல்லத் தொடங்கினான்.

நான்காம் நாள் கூத்துக்கான சல்லென்ற ஓசையுடைய சல்லிகையின் ஓசை கேட்டது. மறுநாள் மலைத்தெய்வம் சாத்த​னுக்காக முழங்கப்படும் இசைக்​கருவியான ‘அடக்கத்தின்’ ஓசை கேட்டது. ஆறாம் நாள் பலாமரத்தினால் செய்யப்பட்டு கரடி கத்துவதுபோல் ஓசை எழுப்பக்கூடிய ‘கரடிகை’யின் ஓசை கேட்டது.

இப்படி ஒவ்வொரு நாளும் கேட்கும் ஓசையை வைத்தே அன்றைய கூத்தில் பாடப்படும் கதையை அவன் கூறினான்.

எட்டாம் நாள் இசையின் சத்தமே இல்லாமல் விட்டு விட்டு மனிதர்கள் கத்தும் ஓசை மட்டும் கேட்டது. ``இது கூவல் குடி'’ என்றான்.

``ஒலிக் குறியீடுகளை உருவாக்கி, காட்டைத் தங்களின் குரல்வளையால் பின்னி, தொடர்புகளை உருவாக்கும் வித்தை தெரிந்தவர்கள்'’ என்றான். மறுநாள் கொம்பன் குடியைப் பற்றிக் கூறினான். இடையில் சற்றே உடல் நலம் சரியான கபிலர் கொம்பன் குடியின் கதையைக் கேட்ட நாள் அன்று முற்றிலும் தூக்கம் தொலைத்தார். கதைகள் பல நேரம் குருதியை உறையவைக்கக்கூடியனவாக அமைந்துவிடுகின்றன.

கதை, சொல்லும்போது பெருகக்கூடியது; நினைக்கும்போது திரளக்கூடியது; மறக்க எண்ணும்போது நம்மைக் கண்டு சிரிக்கக்கூடியது. வடிவமற்ற ஒன்றின் அதீத ஆற்றலைக் கதைகளிடம்தான் மனிதன் உணர்கிறான்.

மறுநாள் கடும் மழை இறங்கியது. கார்காலத்தின் தொடக்க நாள்கள். காட்டின் குணம் மாறத் தொடங்கியது. இரவில் மழையின் ஒலியே எங்கும் கேட்டது. இசைக்கருவிகளின் ஓசை எதுவும் கேட்கவில்லை. முதல் இரண்டு நாள்கள் இரவில் விட்டுவிட்டுப் பெய்த மழை, அதன் பிறகு, முழு இரவும் கொட்டித் தீர்த்தது. மீதம் இருக்கும் நாள்களின் கதைகளைச் சொல்லும்படி கபிலர் கேட்டுக்கொண்டே இருந்தார்.

மூன்று கதைகளைச் சொன்னான் உதிரன். பதினைந்து கூடையில் பழங்கள் வைக்கப்பட்டு, தெய்வவாக்கு விலங்குக்காகக் காத்திருப்பது கபிலருக்கு நன்கு தெரியும். எனவே, மீதமுள்ள நான்கு நாள்களுக்கான கதைகளை கேட்டுக்கொண்டே இருந்தார். உதிரன், ஏதேதோ காரணம் சொல்லி சமாளித்துப் பார்த்தான்.

“நான் ஒன்றும் சிறுபிள்ளை அல்ல” என்று சற்றே கோபித்தார் கபிலர்.

உதிரன் மனம் கலங்கிச் சொன்​னான், “என்னை மன்னித்துவிடுங்கள். அந்தக் கதைகளைச் சொல்லும் வலிமை எனக்கு இல்லை.’’

சொல்லும்போதே அவனது உடல் நடுங்கியதைக் கபிலர் உணர்ந்தார். மறுநாள் கபிலரைப் பார்க்க வந்த மருத்துவர்களிடம் அவனும் மருந்து வாங்கிக்கொண்டான்.

``இன்று பதினேழாம் நாள் எவ்வளவு கடும் மழை பெய்தாலும், அதையும் மீறி இசையின் ஓசை கேட்கும்’’ என்றான்.

“காரணம் என்ன?” எனக் கேட்டார் கபிலர்.

``இன்றைய நாள் வேளீருக்கு உரியது. வந்துள்ள அத்தனை குடிப் பாணர்​களின் இசைக்கருவிகளும் ஒருசேர முழங்கும். காடு கிடுகிடுக்க, காண்போர் நடுநடுங்க களமிறங்கி ஆடுபவன் வேள்பாரி. கொற்றவைக்கு முன் காட்டெருமையைப் பலியிட்டு, மேலெல்லாம் குருதி பூசி நிலம் நடுங்க ஆடுவான். பறம்பின் எல்லைக்குள் வந்த குலங்களின் கண்ணீர் துடைக்க உயிரையும் தரச் சித்தம் என உருகிச் சொல்லும் பெருநாள் இது.''

சொல்லிக்கொண்டிருக்கும் உதிரனின் உடல்மொழியைக்கொண்டே பாரியின் ஆட்டத்தை உணர்ந்தார் கபிலர். போர்த் தெய்வமான கொற்றவையின் முன், வாளேந்தி ஆடும் அமலையின் ஆட்டத்தை ஆடுவான் வேள்பாரி!

- பறம்பின் குரல் ஒலிக்கும்...