
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200 - ஓவியங்கள்: ராமமூர்த்தி

வாயில்லா ஜீவனுக்கு...
எங்கள் தெருவில் பிச்சை எடுப்பவரை நாய்கள் குரைத்துக் கொண்டே விரட்டுவதுண்டு. ஒரே ஒரு நாய் மட்டும் அவரிடம் வாலை ஆட்டிக்கொண்டு, அவர் பின்னாலேயே நட்புடன் சென்றது. பிச்சைக்காரரிடம் கேட்டேன். அவர் சொன்னார்... ``தாயி, இது வீட்டு நாய் இல்ல... தெரு நாய். அதனால இதுக்கு யாரும் சாப்பாடு வைக்க மாட்டார்கள். என் சாப்பாட்டில் சிறிது வைத்தேன்; பசியோடு சாப்பிட்டது. அதன்பிறகு தினமும் அதற்கு சாப்பாடு வைக்கிறேன். அதான் அந்த நாயி, இந்த நாயி மீது பாசம் காட்டுது'' என்றார். எடுப்பது பிச்சைதான் என்றாலும்கூட வாயில்லா ஜீவனுக் கும் தர்மம் செய்யும் அவரது எண்ணம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டது!
- அமுதா அசோக்ராஜா, திருச்சி

சத்தம் என்பது நமக்கு...
நாங்கள் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் மகன் வெளிநாட்டில் இருக்கிறார். அவருக்கு நல்ல சம்பளம் என்பதால் வீட்டில் கம்ப்யூட்டர், வெப்-கேமரா என்று சகல டெக்னாலஜி வசதிகளும் உள்ளன. ஆகவே, தினமும் நெட் மூலம் தன் மகன், மருமகளுடன் உரையாடுவார். அதுவும் இரவு 12 மணிக்கு. அப்போது அவர் மகன் இருக்கும் ஊரில் பகல் வேளையாம். அது வெகுதொலைவில் உள்ள நாடு என்பதாலோ என்னவோ, அடுத்தத் தெருவுக்கு கேட்கும் அளவுக்கு சத்தமாகப் பேசுவார்! `இதனால், மற்றவர்களின் தூக்கம் கெடுமே...’ என்றெல்லாம் அவர் நினைத்துப்பார்த்ததாக தெரியவில்லை! இதுபற்றி அவரிடம் முறையிட்டபோது, ``இஷ்டம் இருந்தா குடி இருங்க... இல்லேன்னா காலி பண்ணிட்டு போங்க’' என்றார். என்னதான் வீட்டு ‘ஓனர்’ என்றாலும், நள்ளிரவில் இப்படிக் கத்திப் பேசி அடுத்தவர் தூக்கத்தைக் கெடுக்கக்கூடாது என்று அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
இவர் மட்டுமல்ல... சில வீடுகளில் இரவு நேரங்களில் டி.வி-யை உரக்க வைத்து, அருகில் குடியிருப்பவர்களை இம்சிப்பவர்களும் உண்டு. இவர்களெல்லாம் தங்கள் போக்கை மாற்றிகொள்ள வேண்டும்!
- சம்பத்குமாரி, திருச்சி-4

விவசாயத்திலும் பெருவாழ்வு பெறலாம்!
சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில், என் கல்லூரி நண்பனைச் சந்தித்தேன். டிப்-டாப்பாக உடையணிந்து சொகுசு காரில் வந்திருந்தான். அவனை நலம் விசாரித்து, `‘நல்ல வசதிதான் போல... எந்த ஐ.டி கம்பெனியில வேலை பார்க்கறே..?'' என்று கேட்டேன். ``ஐ.டி. கம்பெனியில வேலை பார்த்தால்தான் சம்பாதிக்க முடியுமா... விவசாயம் செய்தால் சம்பாதிக்க முடியாதா..?'' என்றான். ``உயர் படிப்பு படித்து பட்டம் வாங்கிய உன்னால எப்படி சேற்றில் இறங்கி கஷ்டப்பட்டு வேலை செய்ய முடியும்..?'' என்றேன், ஆச்சர்யத்துடன்!
``இப்படித்தான் எல்லோரும் படிக்கிறதே ஏதோ ஆபீஸ் வேலை பார்க்கத்தான்கிற மாதிரி நினைக்கிறாங்க. ஆனால், நான் படிப்பு கொடுத்த அறிவை விவசாயத்தில் புகுத்தி, `என்ன பயிர் விளைவிக்கலாம்; எவ்வாறு சாகுபடி செய்யலாம்; சிறு தானியங்களில் அதிக மகசூல் பெறுவது எப்படி?'ன்னு சிந்திச்சு, அதன்படி செய்து நல்லா சம்பாதிக்கிறேன். நான்கு சுவர்களுக்குள் அடைபட்டு, அடுத்தவர்களுக்கு அடிமையாக வேலை செய்யாமல், சுத்தமான காற்றை சுவாசித்து, இயற்கை அழகை ரசித்தபடி விவசாயம் செய்கிறேன். அதோட இதுவரை எங்களைத் தாங்கிப்பிடித்த, எங்கள் பரம்பரைத் தொழிலான விவசாயத்தை அழியாமல் பாதுகாக்கிறேன் என்கிற மன திருப்தியும் கிடைக்கிறது'' என்றான்.
அவன் எண்ணத்தையும் முன்னேற்றத்தையும் பாராட்டி வாழ்த்தினேன்.
- எஸ்.பிரியா, திருப்பூர்

அனுபவம் அளிக்கும் பாடம்!
என் நண்பர் இல்லத்துக்கு ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று சென்றிருந் தேன். அப்போது அவரும் குழந்தைகளும் வீட்டில் இல்லை. `எங்கே..?’ என்று அவர் மனைவியிடம் கேட்டதற்கு, அவர் கூறிய பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஞாயிறுதோறும் கடைக்குப் பொருள்கள் வாங்கச்செல்லும் என் நண்பர், தன் குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்வாராம். பொருள்களை எப்படி வாங்குவது, விலை விவரம், எந்தெந்த கடைகளில் என்னென்ன வாங்க வேண்டும், பணத்தை எப்படிக் கையாள்வது என்பது போன்ற விவரங் களை அவர்களுக்கு அனுபவபூர்வமாக உணர்த்துவாராம். ``குழந்தைகளை இப்படிப் பழக்கினால், விலை விவரம் தெரிந்து, அநாவசியமான செலவுகளைச் செய்யாமல், சிக்கனத்தைக் கற்றுக் கொள்வார்களே...’’ என்றார் அவர். அருமையான விஷயம்தானே!
- கே.சீதாலட்சுமி, மதுரை - 16