
சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

பாகம் 2
இளமருதன், குதிரையின் மீது ஏறி அமர்ந்தான். அவனது குதிரைக்கு ‘ஆலா’ எனப் பெயர். ஆலாப்பறவை ஓய்வின்றி நாள் முழுவதும் பறந்துகொண்டிருப்பதைப்போல, அவனது குதிரையும் நாள் முழுவதும் நிற்காமல் ஓடக்கூடியது. ‘ஆலாய்ப் பறக்கிறான் இளமருதன்’ என்ற பேச்சு, எங்கும் பரவியிருந்தது.
குதிரை, தன் வேகத்தைவிட இளமருதனின் குறிப்பு அறிந்து செயல்படும்விதம்தான் வியப்பூட்டக்கூடியது. ஆலாவின் முன்தலையை விரல்களால் வருடியபடி அதனுடன் பல நேரம் பேசிக்கொண்டிருப்பான். அது தலையை மெள்ள ஆட்டிக் கேட்டுக்கொண்டிருக்கும். அவன் சொல் கேட்டுத் தலையாட்டுகிறதா அல்லது விரல்கள் நீவுவதால் இன்புற்றுத் தலையசைக்கிறதா என்பது, காண்போருக்குப் புரியாது. அது அவர்கள் இருவரின் மனவோட்டத்தோடு தொடர்புடையது. மேலே அமர்ந்திருக்கும் வீரனின் எண்ணத்தோடு குதிரையின் மனவோட்டமும் இணையும்போதுதான் வேகத்தை ஆளும் ஆற்றலைப் பெற முடிகிறது.
இளமருதனுக்கு இந்த உலகிலேயே மிகவும் பிடித்த செயல் ஆலாவின் மீது அமர்ந்து, பாய்ந்து செல்வதுதான். நிலத்தை ஆலாவின் காலடியில் அழுத்தி விண்ணில் குதிக்கும் அந்தக் கணம் மனதில் ஏற்படுத்தும் மகிழ்ச்சியை இன்னொன்று ஏற்படுத்தாது. எனவே, கடிவாளத்தைச் சுண்டியதும் குதிரை பாயத் தொடங்கும் அந்த முதற்கணத்துக்காக எப்போதும் காத்திருப்பான்.
அதனாலேயே இந்த நீண்ட பயணம் அவனுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. புறப்படும் நாளுக்காக ஆவலோடு காத்திருந்தான். அவன் தந்தை மையூர்கிழார், வெங்கல்நாட்டுத் தலைவன்; பாண்டிய வேந்தனுக்குக் கட்டுப்பட்ட சிறுகுடி மன்னன்.
பாண்டிய மாவேந்தன் குலசேகரப் பாண்டியனின் ஆளுகைக்குக் கீழ் எண்ணற்ற சிறுகுடி மன்னர்கள் இருக்கிறார்கள். அவர்களுள் வெங்கல்நாட்டுத் தலைவனுக்குத் தனித்த ஓர் இடம் உண்டு. அதனால்தான் இளவரசர் பொதியவெற்பனின் மணவிழாவுக்கான சிறப்பு அழைப்பு அவருக்கு வந்திருக்கிறது.
பாண்டியநாட்டு இளவரசனின் மணவிழா, நான்கு நிகழ்வுகளாக இரு மாதகாலம் நடைபெறுகிறது. நிறைவாக நடக்கும் திருமாலை அணியும் விழாவுக்குத்தான் சிறுகுடி மன்னர்கள் அனைவருக்கும் அழைப்பு. மற்ற விழாக்களுக்கு அவர்களுக்கு அழைப்பில்லை. மாமன்னரின் மனதில் தனித்து இடம்பிடித்த சிறுகுடி மன்னர்கள் எண்மருக்குத்தான் இந்த முழு விழாவுக்கான அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று வெங்கல்நாடு.
புறப்படுவதற்கு இன்னும் காலம் இருந்தது. இந்நிலையில், நேற்றைய தினம் அரண்மனையிலிருந்து அவசர ஓலை. `மணவிழாவுக்காகப் புதிய மாளிகைகள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றின் பணிகளை வேகமாக முடிக்கவேண்டியுள்ளதால், தேர்ந்த சுதை வேலைகள் செய்யும் ‘மண்ணீட்டாளர்களை’ அனுப்ப வேண்டும்' என்னும் ஓலையைக் கொண்டுவந்தான் அரண்மனையின் முதன்மை அலுவலனான செவியன்.
வெங்கல்நாடு, மதுரைக்கு வெகுதொலைவில் பச்சைமலையின் தென்புற அடிவாரத்தில் உள்ளது. `பாண்டியநாட்டின் வடமேற்கு எல்லை இது' எனச் சொல்லலாம். செழிப்பான நிலப்பகுதிகளைக் கொண்டது. சரிபாதி மலை வளத்தையும் மீதிப்பாதி மருத நிலத்தையும் கொண்டது. எனவே, வனத்தின் செல்வமும் உழவின் செல்வமும் ஒருங்கே கிடைத்தன. அதனாலேயே வெங்கல்நாடு செழிப்புற்று விளங்கியது.
மரவேலைப்பாடுகளும் மண் வேலைப்பாடுகளும் சிறப்புறச் செய்யும் எண்ணற்ற கலைஞர்கள் இங்கு உள்ளனர். கட்டடங்கள் கட்டியெழுப்பும் கொற்றர்களுக்கு இது தாய்நிலம். பெரும்கட்டடங்கள், இவர்களின் கரம்கொண்டே மேலெழும்பின. அதன் தொடர்ச்சியாக, நுட்பமான சுதை வேலைப்பாடுகளைச் செய்யும் மண்ணீட்டாளர்களும் உருவாகினர். தலைநகர் மதுரையின் கட்டடத் தேவைகளுக்கான கலைஞர்களைத் தருவதில் வெங்கல்நாடு முதன்மையாக விளங்கியது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகர் மதுரையை இப்போதுதான் பார்க்கப்போகிறான் இளமருதன். மணவிழாவுக்கு, வெங்கல்நாட்டின் சார்பில் தரவேண்டிய சிறப்பான பரிசுப்பொருளைத் தேர்வுசெய்வதில்தான் கடந்த சில மாதங்களாக இவர்கள் மும்முரமாக இருந்தனர். நடக்கப்போவது இந்தப் புவியின் மாபெரும் விழா. இந்த விழாவில் கலந்துகொள்ள, உலகெங்கிலும் இருந்து அரசக் குடும்பத்தினர் வந்து இறங்கப்போகின்றனர். தனது வாழ்நாளில் இப்படியொரு பெருவிழாவை இன்னொரு முறை பார்க்கும் வாய்ப்பு தனக்குக் கிடைக்கப்போவதில்லை என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார் மையூர்கிழார். எனவே, தாங்கள் தரும் பரிசுப்பொருளை மாமன்னரும் இளவரசனும் கண நேரமாவது கண்கொண்டு பார்க்க வேண்டும் என்பதற்கு பெருமுயற்சி எடுத்துக்கொண்டனர்.
எத்தனையோ பொருள்கள் தயாராகிக் கொண்டிருந்தன. ஆனால், மையூர்கிழார் பெரிதும் கவனம் செலுத்திக்கொண்டிருப்பது ஒரு பொருளின் மீதுதான். அரண்மனையில் புதிதாகக் கட்டப்படும் மாளிகைகளைப் பற்றிய விவரம் மற்றவர்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ, மையூர்கிழாருக்கு நன்கு தெரியும். ஏனென்றால், மதுரைக்கு அதிகமான கொற்றர்களை அனுப்பிவைப்பது இவர்தானே!
புதிய கட்டுமானத்தில் பேரெழிலோடு எழுப்பப்பட்டுவருவது ‘பாண்டரங்கம்’. அரசக் குலத்தினர் மட்டும் ஆடி மகிழும் கலைக்கூடம். அதுவும் இந்தப் பாண்டரங்கம், இளவரசரின் மணவிழாவுக்காகக் கட்டப்படுகிறது. பொதிய வெற்பனின் அந்தரங்க அவை அது. அங்கு கண்ணில்படும் பொருள், அதன் பிறகு ஒருபோதும் மறையாது. நாம் தரும் பரிசுப்பொருள் பாண்டரங்கத்தில் இடம்பெற வேண்டும். அதற்குச் செய்யவேண்டியது என்ன என்பதைத்தான் பல மாதங்களாகச் சிந்தித்துக்கொண்டிருந்தனர்.
மணமக்கள் பொற்காசுகளை அள்ளி எறிய, மதுரையின் வீதியெங்கும் பொன்னொளி வீசப்போகும் திருவிழா. இந்த விழாவில் சிறுகுடி மன்னன் ஒருவன் தரும் பரிசுப்பொருள் நினைவில் நிற்கவேண்டுமென்றால், அது இயலாத காரியம் என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். ஆனால், மையூர்கிழார் விடாமல் முயற்சி செய்துகொண்டிருந்தார். செல்வத்தை விஞ்சும் ஆற்றல் கலைகளுக்கு உண்டு. செல்வத்தின் திளைப்பில் மிதக்கும் கண்களை, அதைவிட அதிகமான செல்வத்தைக் கொட்டுவதன் மூலம் கவனம் பெறவைக்க முடியாது. ஆனால், கலையின் நுணுக்கம் கண்களை அசைவற்று நிறுத்தும்.
மனிதன், கனவுகளுக்கு அடிமைப்பட்டவன். அவனைக் குறுக்குவழியில் வீழ்த்துவது எப்போதும் எளிது. மையூர்கிழார் பாண்டரங்கத்தில் வைப்பதற்கு ஏற்ற பொருளை ஆயத்தம்செய்வது என முடிவுக்கு வந்தார். அப்போதுதான் அதிலிருக்கும் இன்னொரு சிக்கல் தெரியவந்தது.

நடக்கும் திருமணம் பாண்டியநாட்டு இளவரசருக்கு என்பதைவிட மிக முதன்மையானது, அவர்கள் பெண் எடுக்கும் இடம் பற்றியது. இந்த மணவிழாவுக்கு, உலகில் உள்ள கலைப்பொருள்கள் அனைத்தையும் கொண்டுவந்து கொட்டுவர் என்பதை எண்ணியபோதுதான் மையூர்கிழாருக்கு சற்றே அவநம்பிக்கை ஏற்பட்டது. அந்தக் கலைப்பொருள்களோடு நாம் ஈடுகொடுக்க முடியாது என்று எண்ணி சோர்வுற்றார்.
அப்போது பொற்கொல்லர் அவையில் இருந்த இளைஞன் `காராளி’ சொன்னான், ‘`வாசல் வரை வந்து வழுக்கி விழக் கூடாது. அந்த வழியிலேயே காலெடுத்து வைத்து முன் நகர்வோம்.'’
“பாண்டரங்கம் முழுவதும் இடம்பெறப்போவது, யவனர்களின் மிகச்சிறந்த கலைப் படைப்பான `பாவை விளக்கு'தான். அது இருக்கும் அவையில் வேறு எந்தப் பொருளும் கவனம்பெற முடியாது” என்று மையூர்கிழார் சோர்வடைந்தபோது காராளி சொன்னான், `‘யவன பாவை விளக்கை விஞ்சும் விளக்கொன்றை நம்மால் உருவாக்க முடியும்.”
`‘உறுதியாக முடியாது” என்று சொன்ன மையூர்கிழார், காராளியிடம் கேட்டார்
`‘நீ யவனர்களின் பாவை விளக்கைப் பார்த்திருக்கிறாயா?”
“இல்லை மன்னா.”
“அதனால்தான் எளிதில் சொல்லிவிட்டாய்.”
“நீங்கள் எவ்விடம் பார்த்தீர்கள் மன்னா?”
“வேந்தனின் அரண்மனை முழுவதும் இப்போது யவனர்களின் பாவை விளக்குகள்தானே கண்ணில்படுகின்றன. அரசவை மாடத்தில் சுடர் ஏந்தி நிற்கும் அந்த விளக்குகளைக் காண்பவர் வியந்துபோய் நிற்பர்.”
சற்றே இடைவெளிவிட்டு காராளி சொன்னான், `‘அரசவை மண்டபம், அரண்மனை மாடங்கள் என எங்கும் பார்த்துப் பழகிய ஒரு கலைப்பொருள், அந்தரங்கமான இடத்தில் கூடுதல் கவனத்தைப் பெறுமா?”
காராளியின் கேள்வி, மையூர்கிழாருக்கு வழிகாட்டத் தொடங்கியது. அவன் மேலும் சொன்னான், “அது மணமக்கள் கூடிக்குலவும் அரங்கு. அங்கே கண்களுக்குத் தேவை புதுமை. அதுவும் காதலுக்கு அப்பாற்பட்ட புதுமை அன்று; காதலுக்குள்ளே மூச்சுமுட்ட இழுத்துச் செல்லும் ஒரு புதுமை. அதை நாம் கலைவடிவாக்கலாம்.”
“என்ன செய்யலாம் என்கிறாய்?”
“காமன் விளக்கு செய்வோம்.”
பொற்கொல்லர் அவையில் இருந்த அனைவரும் வியப்புற்று நின்றனர். `மிகச் சிறப்பான சிந்தனை' என மையூர்கிழாருக்குப் பட்டது.
அவன் அடுத்துச் சொன்னான், “காமன் விளக்கு மட்டும் போதாது. நாம் வழக்கமாகச் செய்யும் நாக விளக்கு இரண்டையும் சேர்த்துச் செய்யவேண்டும். அதுதான் காமன் ஏற்படுத்தும் கனவுக்கு உருவம் கொடுக்கும்'’.
எல்லோரும் வாயடைத்துப்போனார்கள். இரண்டு நாகங்கள் பின்னியபடி மேலெழுந்து தலை நீட்ட, அதன் உச்சந்தலைச் சிறு குழியின் முன் விளக்கின் நாக்கும் நாகங்களின் நாக்குகளும் ஒன்றாக நீட்ட, சுடர் எரியும் வடிவுகொண்டது நாக விளக்கு.
நாகம் கொண்டு காமம் கவர்கிறான் இளைஞன் எனப் பூரித்து நின்ற மையூர்கிழார் கேட்டார், “வயதிலும் அனுபவத்திலும் பெரியவர்கள் இருக்கும் இந்த அவையில், யாருக்கும் தோன்றாத சிந்தனை உனக்கு எப்படித் தோன்றியது?”
மெல்லிய சிரிப்போடு காராளி சொன்னான், ‘`அவர்கள் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள். எனவே, அனுபவத்தின் கண்கொண்டு பார்க்கின்றனர். அனுபவம், அடைவதிலிருந்து மட்டும் ஏற்படுவதில்லை; அடையாததிலிருந்தும் ஏற்படுகிறது. நான் அடைந்திராத அனுபவத்தின் கண்கொண்டு பார்த்தேன்.”
மையூர்கிழார் வியந்துபோனார். அவனது சொல், அவரை மயக்கியது. பணிகள் தொடங்கின.
காமன் விளக்கை எப்படிச் செய்வது? காமத்துக்கு வடிவம் கொடுக்க முடியுமா? அது காட்சிவயப்பட்டதன்று, கனவு வயப்பட்டது. பூவின் மலர்தலில் வெளியேறும் மணம்போல, மனித மலர்தலில் உள்ளுருகும் நிகழ்வு அது.
கனவைக் கண்கொண்டு பார்க்க நினைப்பது அறியாமை. அது கண்ணுள் பார்க்கவேண்டியது. எனவே, தங்களுக்குள் மூழ்கும் எண்ணங்களுக்கு வாசல் திறக்கும் வழிமுறைகளைப் பற்றிச் சிந்திக்கலானான் காராளி.
சட்டகங்களால் எல்லா திசைகளிலும் இழுத்துப்பிடிக்கப்பட்டிருக்கும் தோலில் ஓவியத்தை வரையத் தொடங்கினான். காதல் பரவசத்தில் நிற்கும் ஒரு பெண், தன் வலதுகையை பக்கவாட்டில் சற்றே உயர்த்திப் பிடித்திருக்கிறாள். அந்த உள்ளங்கையில் தீபத்துக்கான அகல் இருக்கிறது. இடதுகையை மார்போடு அணைத்தபடி வைத்திருக்கிறாள். அந்தக் கை, ஒரு மலரைப் பிடித்துக்கொண்டிருக்கிறது. அவளின் பேரழகில் மயங்கிய காதலன், அவளின் முகம் பார்த்தபடி மிகவும் அணுக்கமாகக் கிறங்கி நிற்கிறான்.
காராளி வரைந்த இந்த ஓவியத்தைப் பார்த்தவர்களுக்கு, சற்றே ஏமாற்றம் ஏற்பட்டது. “இந்தப் படம் மிக அழகாக இருக்கிறது. ஆனால், இதில் என்ன புதுமை இருக்கிறது?” எனக் கேட்டனர்.

“ஓவியத்தைச் சிலையாக்கினால்தான் இதில் உள்ள புதுமை தெரியும்” என்றான் காராளி.
அவன் வரைந்ததுபோலவே, அழகும் உணர்வும் கொப்புளிக்கும் சிலை வடிக்கப்பட்டது. வலதுகையில் விளக்கு ஏந்தி, இடதுகையில் மலரை மார்போடு அணைத்து நின்றாள் அந்தப் பெண். காதல் பேருணர்வில் அவளின் முகத்தருகே வியந்து நின்றான் ஆண்.
பெரும் எதிர்பார்ப்புடன் வந்து வார்ப்புச்சிலையைப் பார்த்த மையூர்கிழாரின் முகம் சற்றே வாடியது, “அழகாய் இருக்கிறது. ஆனால், புதுமை இல்லையே!” என்றார்.
காராளி சொன்னான், “அவளின் கையில் இருக்கும் அகலில் விளக்கேற்றிப் பாருங்கள். புதுமை துலங்கும்.”
அந்தப் புதிய விளக்கில் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றினர். தீச்சுடர் எரியத் தொடங்கியது. எல்லோரும் கவனமாகப் பார்த்தனர். விளக்கின் ஒளி, இருவரின் கன்னங்களிலும் பட்டுத் தெறிப்பதை கண்கள் உற்றுப்பார்க்கையில் காராளி கூறினான், “பின்புறம் நீளும் நிழலைப் பாருங்கள்.”
பக்கவாட்டில் ஏந்தி நின்ற வலதுகையில் தீபம் எரியத் தொடங்கியதும், இருவரின் நிழல்களும் ஒன்றின் மேல் ஒன்றாகப் படர்ந்து ஒற்றை நிழலாக நீண்டன. ஏந்தி நிற்கும் விளக்கின் உயரத்தையும் நிழல்கள் படரும் கோணத்தையும் அவ்வளவு துல்லியமாக வடிவமைத்திருந்தான் காராளி. அதைப் பார்த்த அனைவரும் மெய்ம்மறந்து நின்றனர்.
காராளி சொன்னான், “அந்தரங்க அவையில் காமன் விளக்கில் சுடர் ஏற்றியதும் அவர்கள் ஒளியின் வழியே நிழலுள் கரைவர். தனது நிழல் எது எனப் பிரித்தறிய முடியாத தவிப்பு, இரவு முழுவதும் அவர்களைச் சூழும். காமம், ஒளியால் அல்ல... ஒளி ஏற்படுத்தித்தரும் இருளுக்குள்தான் மலரத் தொடங்கும். நீர்மநிலையில் இருக்கும் எண்ணெய் நெருப்பாய் மாறி சுடர்வதைப் போலத்தான் தங்களுக்குள் இருக்கும் உயிர் பற்றி எறிய... ஓர் உயிராய் ஒடுங்குவர்.”
அனைவரும் வாயடைத்துப்போனார்கள். காராளி தொடர்ந்தான், ``நிழலை, இன்னும் கூர்ந்து கவனியுங்கள்.”
அதிர்ச்சியில் இருந்து மீளாதவர்கள், கண்களை அகலத் திறந்தபடி உற்றுப்பார்த்தனர். தீச்சுடர் அசையும்போதெல்லாம் நீண்டு கிடந்த நிழல்கள் அசைந்து நெளிந்தபடி இருந்தன. இறுக அணைத்துப் புரளும் உருவங்களை அவை நினைவுபடுத்தின. உருவ அசைவுகள் ஆளுக்கொன்றாகத் தோன்றத் தொடங்கின. கனவு ஒவ்வொருவருக்குள்ளும் நிகழ்ந்து கொண்டிருந்தது.
எவரும் பேசிக்கொள்ளவில்லை. ஏறக்குறைய உறைநிலையை அடைந்தனர். “காண்பவரின் கண்ணுக்குள் கனவை நிகழ்த்துவதுதான் கலை.”
காராளி, தான் முன்னர் சொன்ன சொற்களை மனதுக்குள் அசைபோட்டபடி நின்று கொண்டிருந்தான்.
பேச்சற்று நின்றிருந்த மையூர்கிழார் நேரம் கழித்துச் சொன்னார், “இந்த விளக்கு, எனது வாக்கைக் காப்பாற்றியது; உனது வாக்கை அழித்துவிட்டது.”
அவர் சொல்வதன் பொருள் யாருக்கும் புரியவில்லை. `என்ன தவறிழைத்தான் காராளி?' என, மற்றவர்கள் சிந்திக்கலாயினர்.
மையூர்கிழார் சொன்னார், “மிகச்சிறந்த பரிசுப்பொருளைக் கொண்டு செல்வேன் என்ற எனது வாக்கை, இந்தச் சிலை காப்பாற்றிவிட்டது. ஆனால், அனுபவமில்லாதவன் என்ற உனது வாக்கை இது பொய்யாக்கிவிட்டது.”
அரங்கம், சிரிப்பால் நிரம்பியது. காராளி, சற்றே தலைவணங்கி நின்றான். இந்தச் சிலையின் சிறப்பு, வலது கையில் ஏந்தி நிற்கும் விளக்கன்று; இடதுகையில் பிடித்திருக்கும் மலர்தான். ஆனால், அது யார் கண்ணுக்கும் படவில்லை. யாரும் அதைப் பொருட்படுத்திப் பார்க்கவில்லை. பெரும்படைப்பை உருவாக்கும் கலைஞனுக்கு ஏமாற்றமே மிஞ்சும். காராளிக்கும் அதுவே மிஞ்சியது. ஆனாலும் யாரேனும் ஒருவரின் கண் அந்தச் சிறப்பைக் கண்டறியும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது.
அகம் மகிழ்ந்து பாராட்டினார் மையூர்கிழார். ``மெருகேற்றும் பணியை விரைவில் முடியுங்கள்'' என்று உற்சாகமாகச் சொல்லிச் சென்றார். வேலைகள் முன்னிலும் வேகமாக நடந்தன.
இந்த நிலையில்தான் மதுரையிலிருந்து செவியன் ஓலை கொண்டுவந்தான். `கொற்றர்களை அழைத்துக்கொண்டு உடனே வரவேண்டும்' என்று.
ஐம்பது கொற்றர்களோடு இளமருதன் மறுநாள் புறப்படுவதாக முடிவாயிற்று. காராளி செய்துகொண்டிருக்கும் காமன் விளக்கின் பணிகள் முடிவடைய, இன்னும் ஒரு வார காலம் ஆகும். ஆனால், நாளை தனது மகன் வெறுங்கையோடு போனால் நன்றாக இருக்காது. ஏதாவது பரிசுப்பொருள் கொண்டுபோக வேண்டுமே என எண்ணினார் மையூர்கிழார். ஒன்றும் பிடிபடவில்லை. தனித்துவம் இல்லாத பொருளைக் கொடுத்துவிடுவதை மனம் ஏற்கவில்லை. ‘சரி, விடியட்டும் பார்க்கலாம்’ என முடிவுசெய்தார்.
மறுநாள் அதிகாலை, மலையடிவாரத்தில் உள்ள தனது நிலத்தின் விளைச்சலைப் பார்க்க மூன்றேர் உழவன் சென்றான். காட்டாற்றின் அக்கரையில் இருந்தது அவனது விளைநிலம். இரவு கடும் மழை பெய்திருந்தது. காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியிருக்க வேண்டும். இப்போது சற்றே குறைந்திருந்தது. ஆனாலும் ஆற்றைக் கடக்க முடியாது. கரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தான். அடித்துவரப்பட்ட பெரும்மரத்தின் தூர்ப்பகுதி கரையில் இருந்த பாறையின் இடுக்கில் செருகி நின்றது. அதைப் பார்த்துக்கொண்டிருந்த அவனின் கண்களுக்கு, மரத்தின் மேல் ஈரத்தில் நடுங்கியபடி அமர்ந்திருந்த இரண்டு சிறு உயிரினங்கள் தெரிந்தன.

அருகில் சென்று உற்றுப்பார்த்தான். அவை என்ன உயிரினம் எனப் புலப்படவில்லை. இதற்கு முன்பு இவற்றைப் போன்ற ஒன்றைப் பார்த்ததில்லை. அவை ஈரத்துக்கு நடுங்கியபடி இருந்தன. பார்க்கவே மிகவும் கவலையாக இருந்தது. அவை இரண்டும் குழந்தைகளைப்போல கண்களால் மிரண்டு பார்த்துக்கொண்டிருந்தன. நீரின் போக்கு, அவற்றை பெரும் அச்சம்கொள்ளச் செய்தது. அவற்றால் சிறிதும் நகர முடியவில்லை. சற்றே நகர்ந்தாலும் நழுவி நீருக்குள் விழுந்துவிடும் ஆபத்து இருந்தது.
உழவன், அருகில் சென்று அவற்றைக் காப்பாற்றலாம் என எண்ணினான். ஆனால், அருகில் சென்றால் கடித்துவிடுமோ என்ற அச்சம் வந்தது. அவை கொடிய நஞ்சாக இருந்தால் என்ன செய்ய முடியும்? எனவே, இறங்கிப் போய்ப் பிடிக்க வேண்டாம். அவையாகக் கரைக்கு ஏறுவதைப்போல ஒரு பெரிய கட்டையை எடுத்து கரைக்கும் அவை இருக்கும் கொப்புக்கும் இடையில் பாலம் அமைத்தான். ஆனால் அவையோ, அச்சத்தில் நடுங்கியபடி சிறிதும் நகராமல் அப்படியே ஒண்டிப்போய் நின்றன.
துணிந்து நீருக்குள் இறங்கி, அவற்றின் அருகில் சென்றான். அவை இரண்டும் பயந்து பம்மின. அவற்றைப் பிடித்துக்கொண்டு கரைக்கு வந்தான். அவை ஒன்றும் செய்யாமல் அப்படியே இருந்தன. விசித்திர வடிவம் தாங்கிய விலங்கை அவன் நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருந்தான்.
குடித்தலைவர் மையூர்கிழாரிடம் கொண்டுபோய்க் கொடுப்போம் என முடிவுசெய்து, கிழாரின் மாளிகைக்கு வந்தான். அவரோ மகனை, கொற்றர்களுடன் மதுரைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். வாழ்த்துச் சொல்ல வந்த பாணர் கூட்டம் ஒன்று, அங்கு காத்திருந்தது.
மாளிகையின் உள்ளே வந்த உழவன், “இந்தப் புதுமையான விலங்கைப் பாருங்கள்” என்று சொல்லி, அவற்றை வெளியே எடுக்க முயன்றான்.
அவை உழவனைவிட்டு வெளியே வராமல் அவனது ஆடைக்குள் ஒடுங்கிப் பம்மின. அவன், இடுப்பைப் பிடித்து இழுத்து வெளியே விட்டான். வட்டவடிவக் கண்களால் மிரண்டு மிரண்டு விழித்தன. மையூர்கிழாரும் உடன் இருந்த அனைவரும் இந்த விலங்கை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தனர். யாரும் இதற்கு முன் இவற்றைப் பார்த்ததில்லை. இவை என்ன வகை விலங்கு என, ஆளுக்கொரு விளக்கத்தை அளித்துக் கொண்டிருந்தனர். சற்றுத்தள்ளி நின்ற பாணர் கூட்டத்தின் முதியோன் ஒருவன் எட்டிப்பார்த்தபடி சொன்னான், “இது பறம்புநாட்டின் தெய்வவாக்குச் சொல்லும் விலங்கு. பெரும்மழையில் அடித்து, தரைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.”
பாணனின் குரல், வியப்பை ஏற்படுத்தியது. அவற்றின் மீதான வியப்பு இன்னும் அதிகமானது. அதுவரை தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்த மையூர்கிழார், இப்போது அருகில் வந்து அவற்றைத் தொட்டுத் தூக்கினார். அவை அஞ்சி மிரண்டன.
புறப்படவேண்டிய நேரம் வந்துவிட்டதை நினைவுபடுத்த, அவரைத் தேடி வந்தான் இளமருதன். தந்தையின் கையில் புதுமையான விலங்குகள் இருப்பதைப் பார்த்தான். அவை என்ன விலங்கு என அவனுக்குப் புரியவில்லை. அவற்றின் தோற்றம், சற்றே அருவருப்பை ஏற்படுத்துவதுபோல் இருந்தது.
மையூர்கிழார் சொன்னார், “மகனே நீ எடுத்துச் செல்லவேண்டிய பரிசுப்பொருள்கள் தாமாக வந்து சேர்ந்திருக்கின்றன.”
“இவற்றையா… அருவருப்புக்கொண்ட இந்த விலங்குகளையா எடுத்துச்செல்லச் சொல்கிறீர்கள்?”
``ஆம். பாண்டிய வேந்தன் நிமித்தம் பார்ப்பதில் மிகுந்த நம்பிக்கையுள்ளவன். இளவரசனின் மணவிழாவின்போது பறம்புநாட்டின் தெய்வவாக்கு விலங்கு மதுரைக்கு வந்து சேர்வதை மிக நல்ல நிமித்தமாக நினைப்பான். எவராலும் கொடுக்க முடியாத பரிசுப்பொருளை இத்தனை மாதங்களாகத் தேடிக்கிடந்தோம் அல்லவா? இதோ உரிய நேரத்தில் தானாக வந்து சேர்ந்திருக்கின்றன. இவற்றை நீ கொண்டு செல். இரு வாரங்கள் கழித்து, மணவிழாவுக்கு காமன் விளக்கோடு நான் வந்து சேர்கிறேன்.”
சுற்றி இருந்த அனைவரும் வாயடைத்துப் போனார்கள். மையூர்கிழாரின் குரலில் இருந்த உற்சாகம் இளமருதனையும் தொற்றியது.
இரட்டைக் குதிரைகள் இழுத்துச் செல்லும் ஐந்து பெருவண்டிகள், மதுரையிலிருந்து வந்திருந்தன. அவற்றில் கொற்றர்கள் ஏறி அமர்ந்தனர். அவர்களுக்கு இடையில் சதுரவடிவக் கூண்டுக்குள் மிரட்சி விலகாமல் அவை இருந்தன. ஆலாவைச் சுண்டியபடி மதுரை நோக்கிப் புறப்பட்டான் இளமருதன்.
வெங்கல்நாட்டு மன்னனின் வளாகம் முழுவதும் இதுவே பேச்சாக இருந்தது. வேந்தனை வியக்கவைக்கும் பரிசுப்பொருள்களோடு மகனும், இளவரசனை வியக்கவைக்கும் பரிசுப் பொருளோடு தந்தையும் மதுரைக்குள் நுழைய உள்ளனர். இது வெங்கல்நாட்டுக்கு நல்ல பலனைத் தரும் எனக் கருதினர்.
மையூர்கிழாரைப் பார்த்துப் பாட வந்த பாணர்கள், பாடாமலேயே பெரும்பொருளைப் பரிசாகப் பெற்றனர். “நீங்கள் சொன்ன செய்தி ஏற்படுத்தியதைவிட பெரும்மகிழ்வை உங்கள் பாடலால் ஏற்படுத்திவிட முடியாது” என்று கூறியபடி மையூர்கிழார் அள்ளி வழங்கினான்.
அவர்கள், அவை நீங்கி வெளியேறினர். முகத்தில் கவலையின் ரேகை படர்ந்திருந்தது. அன்றைய பகல் முடியும் முன் வெங்கல்நாட்டின் எல்லையைக் கடந்தனர். பேச்சற்ற நெடும்பகலாக அது இருந்தது.
நீண்டபொழுதுக்குப் பிறகு இளம் பாணனைப் பார்த்து மூத்த பாணன் கேட்டான், ``பறம்புநாட்டின் தெய்வவாக்கு விலங்கு தரை வந்து சேர்ந்ததைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”
``பாரி, இனி தனது ஆற்றலை இழக்கத் தொடங்குவான்.”
பதில் கேட்ட மூத்த பாணன், சற்றே அமைதியோடு நடந்தான்.
“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” எனக் கேட்ட இளம் பாணனின் கேள்வி முடியும் முன் மூத்த பாணன் சொன்னான்,
``இறங்கி அடிக்கப்போகிறான் வேள்பாரி.”
- பறம்பின் குரல் ஒலிக்கும்...