
சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

மதுரைக் கோட்டையின் மேற்கு வாசலை நோக்கி சூரியக்கதிர்கள் தகதகத்து இறங்கிக்கொண்டிருந்தன. வாங்கிய ஒளியை அதைவிட வேகமாக வெளியில் உமிழ்ந்தன கதவுகள். அந்த நெடுங்கதவுகள் முழுக்க பொன்னாலான பூச்சுகொண்டவை. அவற்றின் குமிழ்களின் மேல் மணிக்கற்கள் பொதிந்திருந்தன. பச்சை நிறப் பெருங்கல் ஒன்று தன்னை நோக்கிவந்த செம்மஞ்சள் நிற ஒளியை, சூற்குடத்தில் உள்வாங்கி சுட்டுக் கருக்கி வெளியேற்றியது. அருவியில் நீர் விழுந்து தெறிப்பதைப்போல, பொன்பூச்சில் விழுந்து சிதறின செஞ்சூரியனின் ஒளிக்கதிர்கள்.
பொழுது மறையும் முன்னர் கோட்டைக்குள் நுழைந்தால்தான் உண்டு. அதன் பின்னர், கதவுகளைத் திறக்கவைப்பது எளிது அல்ல. காவல் வீரர்களின் கடுமை இரும்பினும் இறுகியது. பகற்பொழுதின் முப்பதாம் நாழிகை முடிந்ததும், நாழிகைக் கணக்கன் நிலைமாடத்தின் மணியோசையை எழுப்புவான். அந்த ஓசை கேட்டதும் நெடுங்கதவுகளின் குறுக்குத்தடிகளை யானையைக்கொண்டு தூக்கிச் செருகுவர். அதன் பின், மறுநாள் காலை மீண்டும் யானையைக் கொண்டுவந்தே குறுக்குத்தடிகளை விலக்குவர்.
கோட்டையின் கதவுகள் மூடப்பட்ட பின் அவற்றைத் திறக்கவைப்பதெல்லாம் இயலாத செயல். அதை உணர்ந்தே விரைந்து பயணித்தான் செவியன். அவன் குதிரைதான் முன்னால் போய்க்கொண்டிருந்தது. அதை அடுத்து இளமருதனின் குதிரை. தொடர்ந்து சற்றுத் தொலைவில் ஐந்து வண்டிகள் வந்தன. இளமருதன் சிறுவயதில் பார்த்த மதுரையை இப்போது மீண்டும் பார்க்கப்போகிறான். தொலைவிலேயே கோட்டைச்சுவர் தெரியத் தொடங்கியது. மதுரையை அடைத்து நின்றது செம்பொன் நிறத்தாலான நெடுங்கோட்டை. அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்து வாய் பிளந்தபடி வந்துகொண்டிருந்தனர். கோட்டை வாயிலில் வந்து அவர்கள் நிற்கும்போது முழுமையாக இருள் சூழ்ந்துவிட்டது. நெடுங்கதவுகள் அடை பட்டிருந்தன. தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் பொன்பூச்சு மின்னியது.
மேற்கு வாசலின் தளபதியை அழைத்துவரச்சொல்லி, பெருங்குரலில் கத்தினான் செவியன். கோட்டை வாயிலின் மேல்மாடத்தில் நின்றிருந்த காவலர்கள் வியந்து பார்த்தனர். வருகிறவர்கள் கோட்டைக் கதவுகளைத் திறக்கச்சொல்லி முறையிடுவார்கள். ஆனால், இவனோ தளபதியை அழைத்து வரச்சொல்லி ஆணை பிறப்பிக்கிறான். வந்திருப்பவன் மதுரையின் நிர்வாகத்தை நன்கு அறிந்துள்ளான் என்பதை அவனது குரலே சொல்கிறது. மறுசொல் கூறாமல் தளபதியை அழைக்கப் போனார்கள்.
இளமருதன் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். யானையின் மீது வீரன் அமர்ந்து கொடியைத் தாழ்த்தாமல் உள்நுழையக்கூடிய அளவு உயரம்கொண்ட கோட்டை வாயில். காற்று புகாவண்ணம் அடைப்பட்டிருக்கும் அந்த நெடுங்கதவுகளின் பொன்பூச்சில்தான் எவ்வளவு வேலைப்பாடுகள். குமிழ்களின் மேல் கால் பதித்து மயில் ஒன்று நிற்கிறது. அதன் தோகை ஒரு பாதி விரிந்திருக்க, இடப்புறமாகத் திரும்பி வாயிலில் நிற்பவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது மயில். என்ன அழகான வேலைப்பாடு. இந்தக் கதவுகள் முழுக்க எவ்வளவு நுட்பங்கள். ஒரே ஒரு பரிசுப்பொருளை உருவாக்க நமக்குப் பல மாதங்கள் ஆகின்றன. ஆனால், வாயிற் கதவுகளிலேயே எவ்வளவு வேலைப்பாடுகள்.
இளமருதனின் மனதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தபோது, மேல்மாடத்தில் வந்து நின்ற மேற்குவாசல் தளபதி மாரையனிடம், தாங்கள் யார் என செவியன் சொல்லி முடித்தான். ‘கட்டுமானப் பணிக்கு அழைத்துவரப்பட்டிருக்கும் கொற்றர்களை உடனடியாக உள்ளே அனுப்ப வேண்டும். அரண்மனையில் பணிகள் இரவு பகலாக நடக்கின்றன. இவர்களை நாளை பகல் வரை வெளியில் நிறுத்தினால், நாம் தண்டிக்கப் பட்டுவிடுவோம்’ என்பதை உணர்ந்தான் மாரையன். ஆனால், கோட்டைத் தளபதியின் உத்தரவு இல்லாமல் நெடுங்கதவைத் திறக்க இயலாது. உடனடியாக அவரைக் காண விரைந்தான். உடன் இரு வீரர்களும் சென்றனர்.
மதுரைக் கோட்டையின் நான்கு வாசல்களுக்கும், வாசலுக்கு ஒருவர் என நான்கு வாயில் தளபதிகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் கோட்டைத் தளபதிக்குக் கட்டுப்பட்டவர்கள். மாலையில் கோட்டைக் கதவுகள் மூடப்பட்ட பின் கோட்டைத்தளபதி உத்தரவு இல்லாமல் அவற்றை மீண்டும் திறக்க முடியாது. பகலிலும் இந்த நெடுங்கதவை முழுமையாகத் திறந்து மூடும் அதிகாரம் அவரிடமே இருந்தது. கதவின் கீழ்ப்புறத்தில் மனிதர்கள் வந்துபோக ஏற்றதாகச் சிறிய அளவில் உள்ள ‘பிள்ளைக்கதவுகளை’த் திறந்து மூடும் அதிகாரம் தான் வாயில் தளபதிகளுக்கு உண்டு.

மதுரையின் கோட்டைத் தளபதி சாகலைவன். வீரத்துக்கும் தந்திரத்துக்கும் பெயர் எடுத்தவன். அவன் கோட்டையின் எந்தத் திசையில் இருப்பான் என்பதை, கீழ்நிலையில் இருக்கும் அதிகாரிகளால் கண்டறிந்துவிட முடியாது. அதுவும் இந்த விழாக்காலத்தில் அவனைக் கண்டறிவது எளிது அல்ல.
மாரையனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. மாலையில் கிழக்கு வாசலில் சாகலைவனைப் பார்த்ததாக ஒருவர் கூறினார். இங்கிருந்து கிழக்கு வாசலுக்குச் செல்வது மிகக் கடினம், நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுவிட்டது. யவனர்கள் இன்றிரவு வந்து இறங்கப்போகிறார்கள். வணிக வீதிகளில் எள் விழ இடம் இல்லை. எங்கும் பெருந்திரள் கூட்டம். குதிரையை விரட்டிச் செல்ல முடியாது. கூட்ட நெரிசலில் சிக்கினால் கிழக்கு வாசலை அடையும் முன்னே விடிந்துவிடும். என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போய் நின்றான் மாரையன். அவனால் நிற்கவும் முடியவில்லை; நகரவும் முடியவில்லை.
யோசித்தபடியே கூட்டம் குறைவான தென்புற வீதியில் நுழைந்தான். அந்த வீதி திரும்பும் இடத்தில் இரு குதிரைகள் பூட்டப்பட்ட தேர் ஒன்று கண்ணில் பட்டது. முன்னால் நான்கும் பின்னால் நான்குமாக எட்டு குதிரை வீரர்கள் ஈட்டியை ஏந்தியபடி சென்றுகொண்டிருந்தனர். போய்க்கொண்டிருப்பது அரசின் உயர் அலுவலர் என்பது புரிந்தது. யாராக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள விரைந்து சென்றான். அவர் அரசாங்கத்தின் களஞ்சியத் தலைவர், ‘வெள்ளி கொண்டார்’. இந்தப் பேரரசின் செல்வத்தைக் கட்டிக்காக்கும் மாமனிதர்.
அவரைக் கண்டதும் குதிரையைவிட்டு இறங்கி வணங்கினான். மேற்கு வாயில் தளபதியைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டார் அவர். என்ன என்று விசாரிக்க, சூழலை விளக்கிச் சொன்னான் மாரையன். எந்த ஒன்றையும் காதுகொடுத்துக் கேட்பது எவ்வளவு ஆபத்தானது என்பது, கேட்ட பின்புதான் புரியும். வெள்ளிகொண்டாரின் நிலைமை அதுவே. அவரைப் போன்ற உயரிய இடத்தில் இருப்பவர்களின் கவனத்துக்கு ஓர் இக்கட்டு வந்த பின், அதற்குத் தீர்வுகாணும் பொறுப்பும் இயல்பாக அவர்களையே வந்துசேருகிறது.
வெள்ளிகொண்டார் போகும் வேலைக்குக் குறுக்கே, கோட்டைத் தளபதியைக் கண்டறியும் வேலையும் வந்து நின்றது. என்ன செய்யலாம் என்று சிந்தித்தார். தேரோட்டி திரும்பிப் பார்த்தான். அவரின் உத்தரவு கிடைக்காததால் தேர் அசைவற்று நின்றது. அருகில் சற்றே இளைப்பாறியபடி நின்றான் மாரையன்
“இந்தப் பெருங்கூட்டத்தில் நீ எங்கு போய்க் கண்டறிவாய். இரவு முழுவதும் தேடிக்கொண்டே இருக்க

வேண்டியதாகிவிடும். எனது தேரில் வந்து உட்கார்” என்றார்.
சற்றே தயக்கத்துடன் தேரில் ஏறி அவரின் எதிரில் ஒடுங்கி உட்கார்ந்தான். தேர் புறப்பட்டது. முன்செல்லும் குதிரை வீரர்களைக் கண்டதும் கூட்டம் தானாக விலகி இடம்கொடுத்தது.
தென்புறச் சாலையில் இருந்து கிழக்கு முகமாக உள்வீதிக்குள் திரும்பியதும் திகைத்துப்போனான் தேரோட்டி. கூட்டத்தை விலக்கி தேருக்கு வழியை அமைக்க முடியுமா என்பது ஐயமே. முன்னால் செல்லும் குதிரைவீரர்கள் நால்வரும் ஓசை எழுப்பியபடி சென்றனர். ஆனாலும், தேரின் நகர்வு மிகவும் மெதுவாகத்தான் இருந்தது.
மாரையனின் கண்களில் இருந்து மிரட்சி அகலவில்லை. “இப்போதே இப்படி என்றால் மணவிழா தொடங்க இன்னும் இரு வார காலம் இருக்கிறதே, மதுரை எப்படித் தாங்கும்?” என்றான்.
தேரின் இருக்கையை முழுவதும் அடைத்து உட்கார்ந்திருந்த அந்த அகண்ட மனிதர், வாயில் வெற்றிலை மென்றபடி, “மணவிழா என்றால் மதுரை தாங்கியிருக்கும். ஆனால், இது வெறும் மணவிழா மட்டும் அல்லவே?” என்று சொல்லி நிறுத்திக்கொண்டார். மாரையனுக்குப் புரியவில்லை.
ஆனால், அவரிடம் விளக்கம் கேட்கும் தகுதி அவனுக்கு இல்லை. அதனால் அடக்கமாக அவரது முகம் பார்த்தான். அவனது பார்வையின் பொருள் புரிந்தது. வயிறு பொருமி ஏப்பம் வந்தது. நீண்ட ஒலியோடு ஏப்பம் விட்டார். பெருத்துச் சரிந்திருந்த வயிறு சற்றே உள்வாங்கி இறங்கியது. இரவு உணவு முடித்துவருகிறார். ஆனால், தனக்கு அதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை என்று மாரையன் நினைத்தபோது, வெள்ளிகொண்டார் தனது நெஞ்சுக்கூட்டை இடதுகையால் அழுத்தித்தடவியபடி, “எல்லாம் இதுவால் வந்தது” என்று விரல்களில் சிக்கிய முத்துமாலையை தொட்டுத் தடவிக்கொண்டே சொன்னார்.
“கொற்கை முத்து இப்போது யவன தேசத்தின் கனவுப்பொருளாக மாறிவிட்டது. சேரனின் மிளகுக்கு இணையான வணிகப்போட்டிக்கு எதுவுமில்லை என்ற நிலை உடைந்துவிட்டது. மிளகும் முத்தும் யவன வணிகத்தில் இணையான இடத்தைப் பிடித்தன. அதுதான் நேற்று வரை இருந்த நிலை. ஆனால், இந்தத் திருமணம் வணிக நிகர்நிலையை உடைத்து பாண்டியனை முதல் நிலைக்குக் கொண்டுவந்துள்ளது.
பாண்டிய இளவரசன் பொதியவெற்பன் மணமுடிக்கப்போவது இன்னொரு வேந்தன் மகளாக இருந்திருந்தால், இந்தத் திருமணம் இரு நாடுகளின் திருவிழாவாகத்தான் இருந்திருக்கும். ஆனால், இன்று அப்படி அல்ல. இந்தப் புவியின் பெருவிழாவாக இது மாறிப்போனது. கடலையும் காற்றையும் அறிந்து இந்தப் புவியெங்கும் வணிகம் செய்துகொண்டிருப்பவர்கள் நூற்றியிருபது வணிகர்கள். அவர்கள் தங்களுக்கு என்று ‘சாத்துக்கள்’ என்ற அமைப்பை வைத்துள்ளனர். பேரரசுகளை விஞ்சும் செல்வத்தின் நாயகனாக சாத்துக்கள் அமைப்பின் தலைவன் இருக்கிறான். அந்தத் தலைவனை ‘சூல்கடல் முதுவன்’ என்ற பெரும்பெயர் கொண்டு அழைக்கின்றனர். அந்தச் சூல்கடல் முதுவனின் மகள்தான் மதுரையின் இளவரசனை மணக்கப்போகிறவள். அவளின் பெயர் ‘பொற்சுவை’.
ஓய்வறியா அலைகடலின் பாய்மரங்கள் வைகைக் கரை நோக்கியே வலசை வந்து கொண்டிருக்கின்றன. கடற்பரப்பு எங்கும் மிதந்துகிடக்கும் நாவாய்கள் இப்போது கொற்கைத் துறையில் நங்கூரம் இறக்கிவிட்டன. இப்படி ஒரு தகுதி இந்த மண்ணில் இதுவரை எந்தப் பேரரசுக்கும் கிடைக்கவில்லை. இந்தத் திருமணம் பாண்டியப் பேரரசு கடல் வணிகத்தில் முதல்நிலையைப் பெற்றதைப் பறைசாற்றும் அரசியல் நிகழ்வு. இதனால், இந்தப் பேரரசு காணப்போவதோ கரைபுரளும் செல்வச்செழிப்பு.
தன் இரண்டு மகன்களையும் கடற்புயலில் இழந்தவன் சூல்கடல் முதுவன். அவனின் ஒரே மகள் பொற்சுவை இப்போது மதுரைக்கு மணமகளாக வரப்போகிறாள். உலகெங்கும் இருந்து வணிகத்தால் நிரப்பபட்ட பெருஞ்செல்வம் நெடும்படி தாண்டி பாண்டியனின் கருவூலம் வந்துசேரவுள்ளது.
பொற்சக்கரங்கள் பூட்டப்பட்ட சாத்துக்களின் வண்டிகள், மதுரையின் பெருந்தேர் சாலைகளில் தடம்பதிக்க இருக்கின்றன. பொற்குவியலில் திணறப்போகிறது இந்த மாமதுரை. யவனம் முதல் சாவகம் வரை கண்டறியப்பட்ட அதிசிறந்த கலைப் படைப்புகள் இந்த நகரின் நெடுவீதி எங்கும் நின்று மிளிரப்போகின்றன.
வணிக சாத்துக்களின் வரைவில்லா செல்வத்தைவிட இந்தப் பேரரசே செழிப்புமிக்கது என்பதைக் காட்ட வேண்டிய தேவை நம் பேரரசருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசாங்கக் கருவூலத்தில் குவிந்துகிடக்கும் செல்வம் எல்லாம் மதுரையின் வீதிகளில் அள்ளிவீசப்பட உள்ளன.
இந்த இருவரும் இணையும் இந்த வேளையை மிகுந்த கவனத்தோடு பயன்படுத்தக் களமிறங்கிவிட்டனர் யவனர்கள். பேரரசர் குலசேகரப்பாண்டியனையும் சூல்கடல் முதுவனையும் ஒருசேரத் திகைப்பில் ஆழ்த்த அவர்கள் தயாராகிவிட்டனர். இந்த மணவிழாவுக்கான பரிசுப்பொருள்களை கப்பல் நிறைய எடுத்து வந்துள்ளனர். யவனத் தேறல் மட்டுமே ஆறு திறளி மரப்படகில் கரை வந்து சேர்ந்தது என்று செய்தி.
இந்தத் திருமணத்தின் வழியாக யவனர்களுக்கு ஒரு செய்தி தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்டது. அவர்களும் அதைப் புரிந்துகொண்டார்கள். இனி யவன அரசர்கள் இந்த நாவலத்தீவின் முதற்சிறப்பை பாண்டியருக்கே செய்வார்கள். அதன் அறிகுறிகளும் தொடங்கிவிட்டன.
இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கின்றன. மதுரை விழாக்களின் நகரம். இந்த மாநகரின்

மண்ணடுக்கு விழாக்களில் ஏற்றப்படும் தீபப் புகையால்தான் சாம்பல் நிறம்கொண்டுள்ளதோ என்று நான் பலநேரம் நினைத்தது உண்டு. ஆனால், இப்போது நடைபெறப்போகும் இந்த மணவிழாதான் அதன் உச்சம். இந்த உச்சத்தை மதுரை இனி எந்தக் காலத்தில் எட்டும் எனத் தெரியாது. இன்று நள்ளிரவுக்குப் பிறகு விற்பனைக்கான பொருள்களை மட்டும் யவனர்கள் நகரத்தின் வணிக வீதிக்குக் கொண்டுவர உள்ளனர். அதை வாங்கத்தான் மக்கள் பெரும் ஆர்வத்தோடு திரண்டுள்ளனர். திருமணத்தை முன்னிட்டு எல்லா குடும்பங்களும் அலங்காரத்துக்குத் தயாராகி வருகின்றன. யவனர்களே அலங்காரப் பொருளின் அடையாளமாகிவிட்டார்கள்.
கோட்டையின் கிழக்கு வாசலுக்கு வெளிப்புறத்தில் இரு காதத் தொலைவில் இருக்கிறது யவனச்சேரி. இன்று மாலைதான் கொற்கையில் இருந்து பொருள்கள் எல்லாம் அங்கு வந்துசேர்ந்தன. அதில் விற்பனைக்கான பொருள்களை மட்டும் தனியே பிரித்தெடுத்து, நள்ளிரவுக்குப் பின்னர் வணிக வீதிக்குக் கொண்டுவருவார்கள். எனவே, இரவின் பதினைந்தாம் நாழிகையின்போது கோட்டையின் கிழக்கு வாசல் திறக்க இருக்கிறது. அப்போது கோட்டைத் தளபதி சாகலைவன் அங்கிருப்பான். அதுவரை அவன் எங்கிருப்பான் என்பதுதான் கேள்வி.”
அவர் சொல்லியதை மாரையன் வாய்பிளந்து கேட்டுக்கொண்டு வந்தான். தேர் கிழக்குப் பக்கமாகவோ, வணிக வீதியின் பக்கமாகவோ செல்லாமல் வட திசையின் தனித்த மாளிகையை நோக்கிப் போனது. இந்தப் பக்கம் எதற்குப் போகிறது என்பது அவனுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்க முடியாமல் சுற்றும்முற்றும் பார்த்தபடி வந்துகொண்டிருந்தான்.
மாளிகையின் வாசலில் வந்து நின்றது தேர். முன்னால் இருந்த குதிரை வீரன் ஒருவன், வேகமாக வந்து அவர் தேரை விட்டு இறங்கக் கைப்பிடித்து நின்றான். தொடர்ந்து மாரையன் இறங்கினான். மாளிகை, அலங்காரத்தால் மின்னியது. எங்கும் தீபங்கள் ஏற்றப்பட்டுக் கண்சிமிட்டியபடி இருந்தன. வெள்ளிகொண்டார் வந்ததை அறிந்து உள்ளிருந்த இளம்பெண்கள் இருவர் ஓடோடி வந்து, அவரது கைப்பற்றி வாசல் படி கடந்து உள்ளே அழைத்துச் சென்றனர்.
மாரையன் முன்னறையில் அமரவைக்கப்பட்டான். பட்டுத் திரைச்சீலைகள் காற்றில் அசைந்தபடி இருக்க, முகங்கள் இங்குமங்குமாக நழுவி மறைந்தன. இளமஞ்சள் நிறத்தில் ஒளிரும் தீபத்தின் விளிம்பில் எப்போதும் ஒரு செந்நிறம் கலந்திருக்கும். இயற்கை எந்த ஓர் அழகையும் முழுமைகொள்ள அதன் விளிம்பில் அடர்வண்ணம் பூசுகிறது. திரைச்சீலைகளின் விளிம்பில் அடர்வண்ண முகங்கள் மறைந்து மறைந்து தெரிந்துகொண்டிருந்தன. காமக்கிழத்திகள் பற்றிய சொல்லோவியங்களைப் பொய்யாக்கின அந்த முகங்கள். எந்தச் சொல்லாலும் இந்த அழகைச் சொல்லிவிட முடியாது என்று மாரையனுக்குத் தோன்றியது.
கோட்டையின் மேல்மாடத்திலிருந்து இரவு முழுக்க வெளிப்புற இருளை வெறித்துப்பார்த்துப் பழகிய அவனின் கண்கள், மின்னும் ஒளிவிளக்கில் பொன்முகங்கள் மிதந்துபோவதைப் பார்த்துத் தடுமாறிக்கொண்டிருந்தன.
`இந்தப் பேரழகிகளிடமிருந்து வெள்ளிகொண்டார் மீண்டு வந்து அதன் பின் நாம் தளபதியைத் தேடிப்பிடிப்பதற்குள் விடிந்துவிடும்’ என்று அவன் மனதில் நினைத்துக் கொண்டிருந்தபோது யானைக் கட்டுத்தறியின் தலைவனுக்கு சாகலைவன் எழுதிய ஓலையை, பெண்ணொருத்தி கொண்டுவந்து கொடுத்தாள். ஓலையை வாங்கிப் படித்த மாரையன் அதிர்ந்துபோனான்.

“கோட்டைத் தளபதியும் இங்குதானா?”
‘குறித்த நாழிகைக்குள் எல்லாவற்றையும் சரியாகச் செய்து முடிக்க வேண்டும் என்று கோட்டைத் தளபதி அடிக்கடி சொல்வது இதைத்தானா?’ - கேள்வியோடு அந்த இடம் விட்டு நீங்கினான்.
கோட்டை மேற்கு வாசலின் வெளிப்புறம் அவர்கள் காத்திருந்தனர். செவியன் சற்றே பொறுமையிழந்திருந்தான். இளமருதனுக்கு அங்கு வியந்துபார்க்க நிறையவே இருந்தன. அகழியில் முதலைகள் தெரிகிறதா என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர் மண்ணீட்டாளர்கள். தாமரை மொட்டுகளும் ஆம்பல் மலர்களும் நீர் எங்கும் நிறைந்திருந்தன. பொழுது நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது.
கோட்டைத் தளபதியிடம் வாங்கிய ஓலையைக் கட்டுத்தறியின் தலைவன் அல்லங்கீரனிடம் கொண்டுவந்தான் மாரையன். அல்லங்கீரனுக்கு வயது அறுபதைக் கடந்திருக்கும். யானைகளின் குணம் காண்பதில் இவருக்கு இணை யாரும் இல்லை. அந்த வயதான பெரியவரை எழுப்பினான் மாரையன். ‘நள்ளிரவு வந்து எழுப்புவதைக்கூட மன்னிக்கலாம். ஆனால், எழுந்தவனிடம் எழுத்தைக் காட்டிப் படிக்கச் சொல்பவனுக்கு மன்னிப்பே கிடையாது’ என்று புலம்பியபடியே ஓலையை வாங்கிப் படித்தார்.
அவருக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை.
“இங்கு இருப்பவை எல்லாம் பாசறையில் இருக்கும் இளவயது யானைகள் என்று நினைத்தாயா? ஐம்பது வயதைக் கடந்த யானை களைத்தான் கட்டுத்தறிக்குக் கொண்டுவருகிறோம். இவற்றை நீங்கள் சொல்லும்போதெல்லாம் வேலைவாங்க முடியாது. அதுவும் இரவு முழுநிலை உணவு மூன்று சுற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பாரம் புல்லும் நான்கு ஆடகம் அரிசியும் அரைக் குடுபம் எண்ணெயும் பத்து பலம் வெல்லமும் பத்து பலம் உப்பும் கலந்து கொடுத்துள்ளோம். வயிறார உண்டுவிட்டு அயர்ந்திருக்கின்றன. இப்போது அவற்றை எழுப்பி வேலை வாங்குவது இயலாத செயல் மட்டுமன்று; ஆபத்தானதும்கூட.”
மாரையனுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. ஆனால், அவசர வேலைக்காக அழைத்துவரப்பட்டவர்கள் கோட்டைக்கு வெளியே காத்திருக்கிறார்கள். அவர்களை எப்படியாவது உள்ளே அனுமதிக்க வேண்டும். அதற்காகத் தொடர்ந்து வேண்டினான்.
“கோட்டைத் தளபதி எங்கே?’’ என்று கேட்டார் அல்லங்கீரன்.
மாரையன் பதில் சொன்னான்.
“அவசரத்துக்கு அவனால் எழுந்துவந்து உன்னிடம் ஓலை கொடுக்க முடியவில்லை அல்லவா? யானையை மட்டும் உடனே எழுப்பு என்றால் என்ன பொருள்?”
இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஆனால், பெரியவரின் கேள்வி பொருத்தமானது என்று தோன்றியது.
பிரச்னை வந்து நிற்பது மாரையனுக்கு முன்னால் நாளை விசாரிக்கப்பட்டால், அவன்தான் பதில் சொல்லவேண்டியிருக்கும். எனவே, அவன் அந்த இடத்தைவிட்டு அசைவதாக இல்லை. பெரியவர் அல்லங்கீரனுக்கும் வேறு வழி இல்லை. நீண்ட நேரம் கழித்து யானையை எழுப்ப பாகனுக்கு உத்தரவிட்டார்.

மாரையன் தன்னுடன் வந்த வீரர்களோடு வெளியில் காத்திருந்தான். சிறிது நேரத்தில் யானை வெளியேறி வந்தது. பொழுது நள்ளிரவைக் கடந்தது. தனது கால் பெருவிரலால் அதனுடைய காதின் பின்பக்கத்தை ஊன்றி உந்தினான் பாகன். ஆனாலும், அது மெள்ளவே முன்னகர்ந்து சென்றது.
பக்கவாட்டில் குதிரையில் இருந்தபடியே பாகனைப் பார்த்து மாரையன் சொன்னான், “இந்த வேகத்தில் நடந்தால், வாசலை அடைவதற்குள் விடிந்துவிடும். வேகமாக நடத்து.”
பாகன் சொன்னான்... “எனது தொடை நடுக்கத்தை நீ உணர மாட்டாய். யானைக்கு மிக மோசமான வயது ஐம்பது. இளமைக்கும் முதுமைக்கும் நடுவில் இருப்பது. அது என்ன நினைக்கிறது என்பதை நாம் கணிக்க முடியாது. இந்த வயதுடைய யானைக்கு நிலையுணவு கொடுத்து, நள்ளிரவு எழுப்புவது ஆபத்தை விலைக்கு வாங்குவதைப் போன்றது. இதுவரை இல்லாத செயலை இது இப்போது வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது.”
“ஒழுங்காகத்தானே போய்க்கொண்டிருக்கிறது. இதில் என்ன சிக்கல்?”
“எழுப்பியதிலிருந்து துதிக்கையைத் தந்தத்தில் சுற்றியபடியே வருவதைப் பார்த்தீரா? தந்தத்தில் அது கொடுக்கும் அழுத்தத்தை எனது அடித்தொடையில் உணர முடிகிறது.”
மாரையன் சற்றே அதிர்ந்து பார்த்தான்.
“எனக்குச் சொல்லப்பட்ட உத்தரவை நான் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன். ஆனால், எனது உத்தரவை யானை எந்தக் கணமும் மறுக்கலாம்.”
மாரையன் குதிரையை வேகப்படுத்தி முன்னால் நகர்ந்தான். நள்ளிரவின் மணியோசையை நாழிகைக் கணக்கன் எழுப்பினான். கோட்டையின் கிழக்கு வாயிலில் முரசுகள் முழங்கத் தொடங்கின. வணிகவீதியில் மக்களின் ஆரவாரம் எங்கும் எதிரொலித்தது.
யானை, கோட்டையின் மேற்கு வாசல் குறுக்குக்கட்டையைத் தூக்கி எடுத்தது. அப்படியே வலதுபுறம் திரும்புவதற்காக இடதுபாத முனையால் இடப்பாக காதின் அடியை மெள்ளத் தட்டினான் பாகன். அது அசைந்து திரும்பியது.
மாரையன் மகிழ்ச்சியோடு கதவைத் திறக்க உத்தரவிட்டான். வீரர்கள் நெடுங்கதவை இழுத்துத் திறந்தனர். இளமருதன் குதிரையைவிட்டு இறங்கி தனது ஆலாவைப் பிடித்தபடி மதுரைக்குள் நுழைந்தான். வண்டிகள் ஐந்தும் ஒவ்வொன்றாக உள்நுழைந்தன. கடைசி வண்டியில் உட்கார்ந்திருப்பவர்களுக்கிடையில் மரச்சட்டகத்தால் ஆன கூண்டு ஒன்று இருப்பதைப் பார்த்த காவல் வீரனொருவன் கேட்டான்.

“என்ன அது?”
“தெய்வவாக்கு விலங்கு’’ என்றான் ஒருவன்.
இன்னொருவன், “தேவாக்கு விலங்கு’’ என்றான்.
காவல் வீரனுக்கு அவன் சொல்வது புரியவில்லை.
“என்ன பெயர் சொல்கிறீர்கள்?” என்று மீண்டும் கேட்டான்.
“தேவாங்கு” என்றான் இன்னொருவன்.
கோட்டைக்குள் நுழைந்ததும் அவை இரண்டும் மிரண்டுபார்த்து கண்களை உருட்டின. எல்லோரும் உள்நுழைந்த உற்சாகத்தில் இருந்தனர்.
மாரையன் பெருமூச்சுவிட்டான்.
பாகனுக்கு உள்நடுக்கம் பல மடங்கு அதிகமானது. குறுக்குக்கட்டையைத் தூக்கிய பின் அது அமைதியாக நடந்துகொண்டே இருந்தது. அவனது கால்கள் இரு காதுகளுக்கு அடியில் அனைத்து உத்தரவுகளையும் கொடுத்துவிட்டன. அது எதையும் பொருட்படுத்தாமல் சென்றுகொண்டே இருந்தது. அந்தப் பெரும் குறுக்குத்தடி அதன் தந்தங்களின் மேல் வாகாக உட்கார்ந்திருந்தது. துதிக்கையை வலப்புறமும் இடப்புறமும் முழுமையாக வீசி நடந்தது. பாகன் நடுங்கினான்.
“இந்நேரம் கோட்டையின் கிழக்கு வாசலுக்குள் யவனப்பொருள்களைக் கொண்டுவந்திருப்பர்’ என்று எண்ணியபடியே நெடுங்கதவை மூட உத்தரவிட்டுவிட்டான் மாரையன். வீரர்கள் கதவை இழுத்து அடைத்தனர். குறுக்குத்தடியை பொருத்தச் சொல்வதற்காக மாரையன் திரும்பிப் பார்த்தான். தடியைச் சுமந்தபடி யானை இடப்புறம் உள்ளே போய்க்கொண்டிருந்தது. குறுந்தடியைக்கொண்டு கதவை மூடாமல் அதை எடுத்துக்கொண்டு ஏன் உள்ளே போகிறது என்று பதறிய மாரையன் அதை நோக்கி குதிரையில் விரைந்தான்.
வலப்புறம் போன வண்டியில் இருந்த தேவாங்குகள் வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் கண் கூசிப் பதுங்கின. கிழக்கு வாசலின் வழியே பெரும் உற்சாகத்தோடு யவன வண்டிகள் உள்நுழைந்தன. தனது உத்தரவை மறுக்கும் யானை என்ன செய்யப்போகிறது எனத் தெரியாமல் பாகன் பதைபதைத்துக்கொண்டிருந்தபோது, யானைக்குப் பின்னாலிருந்து விரைந்து வந்த மாரையன் சற்றும் எதிர்பாராமல் குறுக்கிட்டான். அதிர்ந்த பாகனின் முகத்துக்கு நேரே ஓங்கிய துதிக்கை வந்துசென்றது!
- பறம்பின் குரல் ஒலிக்கும்...