
ஜெயமோகன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி
முன்கதை: இமாச்சலப்பிரதேசத்தின் மலைக் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்த பிட்சுவின் பாடம் செய்யப்பட்ட உடலைத் திருட வந்தவர்கள் பற்றி கண்டுபிடிக்க, நோர்பா என்ற சிறுவனுடன் செல்லும் கேப்டன் பாண்டியன், டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் மூலம் சில ஆச்சர்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்கிறான். நரேந்திர பிஸ்வாஸ் அறையில் வைத்திருந்த அரிய ஓவியங்கள் எரிக்கப்பட்டன. எரிந்த ஓவியங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள பாண்டியன் படத்தை மெயிலில் சென்னைக்கு அனுப்புகிறான். பதிலாக வந்த மெயிலைப் பெரிதாக்கிப் பார்க்கிறார்கள்... இனி...

மதிய உணவு உண்ணும் நேரத்தில் நோர்பாவும் நாக்போவும் திக்ஸே மடாலயத்திலிருந்து படி இறங்கி ராணுவ முகாமுக்கு வந்தனர். அவர்களுக்குக் காவலாக இரண்டு ராணுவ வீரர்களும் சிறியவகை இயந்திரத்துப்பாக்கிகளுடன் வந்தார்கள். நாக்டோ வேகமாக இறங்கி வந்து வாலாட்டியபடி திரும்பி நோர்பாவை நோக்கி “வேகமாகத் தாவி வரவேண்டியதுதானே?” என்று கேட்டது
“எனக்கு இரண்டு கால்கள்தான் இருக்கின்றன” என்றான் நோர்பா.
“நீ முன்னங்காலை தரையில் ஊன்றாமல் நடக்கிறாய். அது உன் தவறு. வால் இல்லாதது வேண்டுமென்றால் உன் குறையாக இருக்கலாம். அதற்கு ஒன்றும் செய்யமுடியாது” என்றது நாக்போ.
“எனக்குப் பசிக்கிறது” என்று நோர்பா சொன்னான். “மடாலயத்து உணவின் மணம் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ராணுவ முகாமில் சிறந்த உணவு இருக்குமென நினைக்கிறேன்.”
அவர்கள் ராணுவ முகாமுக்கு வந்தபோது அங்கே டாக்டர் பிஸ்வாஸ்ஸும் பாண்டியனும் உணவு உண்பதற்காகக் கிளம்பிக்கொண்டிருந்தனர். நோர்பாவைக் கண்டதும் “வா… நாங்கள் உணவுக்கூடத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறோம்” என்றார் டாக்டர் பிஸ்வாஸ்.
உணவுக்கூடத்தில் இருநூறு இருக்கைகள் போடப்பட்டிருந்தன. பலவகையான உணவுகள் பரிமாறப்பட்டிருந்தன. கோழி, ஆடு, மாடு, பன்றி போன்ற இறைச்சிகள். சப்பாத்தி, சோறு, பருப்புக் குழம்பு, சப்ஜி எனப்படும் காய்கறிக் குழம்பு ஆகியவையும் இருந்தன.
அந்த முகாமின் தலைவரான அதிகாரி வந்ததும் அனைவரும் எழுந்து நின்று வாழ்த்து சொன்னார்கள். அவர் தன் இருக்கையில் அமர்ந்ததும் அவரிடம் ஒரு தட்டில் சப்பாத்தியை நீட்டினார்கள். அவர் அதை எடுத்து நான்காகப் பிய்த்து ஒரு துண்டை தான் எடுத்துக்கொண்டு மிச்சத்தை திருப்பி அளித்தார். அதை இரண்டாம்நிலை அதிகாரி எடுத்து சிறிது பிய்த்துக்கொண்டார். பாண்டியனுக்கும் டாக்டருக்கும் சிறு துண்டுகள் அளிக்கப்பட்டன. அந்தச் சப்பாத்தியை பங்கிட்டபின் அனைவரும் உண்ண ஆரம்பித்தார்கள்.
அப்படி உணவை பங்கிடுவது ராணுவ முகாம்களில் முகலாயர் காலம் முதலே இருந்துவரும் பழக்கம். பாரசீகப் படைகளில் இருந்து அவ்வழக்கம் வந்தது. ராணுவம் ஒரு குடும்பம், அதன் தலைவர் தந்தைபோல என்பதைக் காட்டும் சடங்கு அது.

நாக்போ பொறுமை இழந்து வாலை ஆட்டியபடியும் நாக்கால் மூக்கை நக்கி முனகியபடியும் அமர்ந்திருந்தது. “என்ன செய்கிறார்கள்? மனிதர்களுக்கு அறிவே இல்லை. பாய்ந்து தின்ன ஆரம்பிக்கவேண்டியதுதானே?” என அது நினைத்தது.
அதற்கு வறுக்கப்பட்ட முழுக்கோழியை ஒரு தட்டில் வைத்து அளித்தனர். நாக்போ அதை உடனடியாகக் கவ்வியபடி அறையின் மூலைக்குச் சென்று கீழே போட்டு அதன்மேல் படுத்துக்கொண்டு அந்த அறையில் இருந்த ராணுவ வீரர்களை சந்தேகத்துடன் பார்த்தது. “இவர்களில் யாராவது இதை பிடுங்க வந்தால் நான் கடிப்பேன்” என உறுமியது. ஆனால், அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஆகவே, அதுவும் கோழியை எடுத்து இரு கால்களால் பற்றியபடி தின்ன ஆரம்பித்தது.
நோர்பா, சௌமின் என்னும் உணவை எடுத்துக்கொண்டான். அது பொரித்த நூடுல்ஸ்ஸை ரசம் போன்ற ஒரு புளிப்புத் திரவத்தில் போட்டு செய்த கஞ்சி போன்ற உணவு. பன்றி இறைச்சியை உலரச்செய்து சிறு துண்டுகளாக ஆக்கி அதில் போட்டிருப்பார்கள். பாண்டியன் சோறும் கோழிக் குழம்பும் மட்டும் எடுத்துக்கொண்டான்.

“நீங்கள் இந்த ஊர் உணவை உண்பதில்லையா?” என்றார் டாக்டர் பிஸ்வாஸ்.
“இல்லை. துப்பா என்னும் அந்த நூடுல்ஸைக்கூட சாப்பிட்டுவிடுவேன். என்னால் சௌமினை முகர்ந்துகூட பார்க்கமுடியாது. கடுமையாகக் குமட்டல் வரும். அதை எப்படித்தான் சாப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை” என்றான் பாண்டியன்.
“அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து நீங்கள் சமைக்கும் சாம்பாரை முகர்ந்தால் குமட்டுவார்கள்” என்று டாக்டர் பிஸ்வாஸ் சிரித்தார். ‘‘உணவின் சுவை என்பது ஒரு பழக்கம் மட்டும்தான். ஒரு வட்டாரத்தில் என்ன கிடைக்கிறதோ அதைத்தான் சாப்பிட முடியும். பல தலைமுறைகளாக எதைச் சாப்பிடுகிறார்களோ அது சுவையாகத் தெரிகிறது. எந்த விசித்திரமான உணவையும் கண்ணை மூடிக்கொண்டு மூன்று மாதம் சாப்பிட்டால் மெள்ள அது சுவையாகத் தெரிய ஆரம்பித்துவிடும்” என்றார்.
“புத்தர் உயிர்களைக் கொல்லக்கூடாது என்றார். ஆனால், இங்கே புத்தபிட்சுக்கள் கூட மாமிச உணவை உண்ணுகிறார்கள். ஆச்சர்யம்” என்றார் டாக்டர் பிஸ்வாஸ்.
“இங்கே பனிமலையில் தாவரங்கள் மிகக்குறைவு. பார்லி மக்காச்சோளம் ஆகியவைதான் முன்பெல்லாம் விளைந்தன. குறுகிய காலத்தில் விளையும் கோதுமை வந்தபின்னர்தான் கோதுமை விளைவிக்கப்படுகிறது. இங்கே வயல்களுக்கான சமநிலங்கள் இல்லை. மலைச்சரிவை சிறிய பாத்திகளாக ஆக்கி அதில் விவசாயம் செய்கிறார்கள். வருடத்தில் மூன்று மாதம்தான் விவசாயம் செய்யவும் முடியும்” என்றார் டாக்டர் பிஸ்வாஸ்.
“மனிதனுக்குப் புரதச்சத்து மிக அவசியம். பருப்புகளிலும் தேங்காயிலும் புரதம் உண்டு. ஆனால், அவை நல்ல வெயில் அடிக்கும் நிலங்களில்தான் விளையும். ஆகவே, மலைகளில் புரதச்சத்து வேண்டுமென்றால் இறைச்சியைத்தான் சாப்பிட்டாகவேண்டும்” என்று டாக்டர் பிஸ்வாஸ் தொடர்ந்தார்.
“இந்தியாவில் இரண்டாயிரத்து ஐந்நூறு வருடத்துக்கு முன்பு தோன்றியவை சமண மதமும் புத்த மதமும். இரு மதங்களுமே அகிம்சையை வலியுறுத்தியவை. ஆனால், சமணம் புலால் உண்ணக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தது. ஆகவே அது பருப்பு எங்கெல்லாம் கிடைக்குமோ அங்கு மட்டுமே பரவியது. புலால் உணவை ஏற்றுக்கொண்டதனால்தான் மலைகளுக்கு மேல் பௌத்த மதம் பரவியது. ஏனென்றால் இங்கே புலால் உணவு மட்டும்தான் புரதச்சத்துக்கான ஒரே வழி” என்றார் டாக்டர் பிஸ்வாஸ்
“இவர்கள் பெரும்பாலும் உலர்ந்த இறைச்சியைத்தான் உண்கிறார்கள்” என்றான் பாண்டியன். நோர்பா ஒரு குவளையில் இருந்து சாப்பிடுவதற்கான குச்சியால் துப்பா என்னும் நூடுல்ஸ் கஞ்சியை சாப்பிடுவதைப் பார்த்தபடி.

“ஆம், இங்கே இறைச்சி மிக அரிய உணவு. குளிர்காலத்துக்கு முன்னரே இறைச்சியை வெயிலில் காயவைத்துக் எடுத்து வைத்துக்கொள்வார்கள். தேவைப்படும்போது அதை தூளாக்கி உணவில் கலந்து சாப்பிடுவார்கள். கொஞ்சமாக தினமும் இறைச்சி உண்பார்கள். மிருகங்களின் தோலைக்கூட விடுவதில்லை.”
“ஆம், பௌத்த மடாலயங்களில் பிட்சுக்கள் பன்றியின் தோலை வறுத்து சாப்பிடுவதைப் பார்த்தேன்” என்றான் பாண்டியன்.
“நாகரிகமான மனிதர்கள் பிற மக்களின் உணவுப் பழக்கத்தை குறைசொல்ல மாட்டார்கள். ஏனென்றால் உணவுப் பழக்கம் என்பது அந்தந்த சூழலால் உருவாகி வருவது” என்றார் டாக்டர் பிஸ்வாஸ்.
சாப்பிட்டு முடித்ததும் டாக்டர் பிஸ்வாஸ் “நான் சென்று அந்த மம்மிக்கும் போன் மதத்தின் தெய்வத்துக்கும் என்ன தொடர்பு என்று பார்க்கிறேன். மொத்தம் மூன்று விஷயங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. ஒன்று அந்த மம்மியை சீனர்கள் கடத்த விரும்புகிறார்கள். இரண்டு, மம்மியின் கையிலுள்ள எழுத்துகள் லியங்ஷு[Liangzhu] நாகரிகத்தைச் சேர்ந்தவை. மூன்று அந்த எழுத்துகள் போன் மதத்தின் தெய்வத்தின் கைகளிலும் உள்ளன. மூன்றையும் ஏதாவது வகையில் இணைக்கவேண்டும்.”
‘‘சரி, நான் மீண்டும் மடாலயம் வரைச் செல்கிறேன்” என்றான் பாண்டியன்.
நோர்பாவும் நாக்போவும் சாப்பிட்டு முடித்து வந்தனர். நாக்போ “அருமையான கோழி… கோழிதான் சிறந்த பறவை” என்று சொன்னபடி ஏப்பம் விட்டு உடலை நீட்டியது. அதன் கண்கள் சொக்கின. “இப்படியே படுத்து ஒரு அருமையான தூக்கம் போடவேண்டியதுதான்” என்று அது நினைத்தது
பாண்டியன் நோர்பாவிடம் “அங்கே ஏதாவது பார்த்தீர்களா?” என்றான்
“ஒன்றுமில்லை. மடாலயத்தையே சுற்றிவந்தோம். நாக்போ அங்கே மோப்பம் பிடித்தபடியே இருந்தது. அந்த மடாலயத்தில் அதை எரித்தவர்களில் ஒருவர் சென்றிருக்கிறார், சந்தேகமே இல்லை” என்றான் நோர்போ.
‘‘நாம் மீண்டும் சென்று பார்ப்போம்… ஒரு இடத்தைத் துப்பறியவேண்டுமென்றால் அங்கேயே சுற்றிக்கொண்டிருப்பதுதான் நல்ல வழி. ஏதேனும் தடயம் சிக்காமலிருக்காது” என்றான் பாண்டியன்.
“என்னது தூங்காமல் மறுபடியும் கிளம்பவேண்டுமா? உங்களுக்கெல்லாம் அறிவே கிடையாதா?” என்றது நாக்போ
அதன் முனகலை திரும்பிப் பார்த்த பாண்டியன் “நீ வேண்டுமென்றால் ஓய்வெடு நாக்போ” என்றான்.
“நாய்களுக்குக் கடமைதான் முக்கியம்” என்று நாக்போ கொட்டாவி விட்டபடி சொன்னது.
அவர்கள் மீண்டும் படிகளில் திக்ஸே மடாலயம் நோக்கி ஏறினார்கள். திடீரென்று நாக்போ குரைத்தபடி ஓடியது.
“ஏதோ வாசனை சிக்கியிருக்கிறது” என்று கூவியபடி நோர்பா பின்னால் ஓடினான்.
அதற்குள் ஒரு துப்பாக்கி வெடிக்கும் ஒலி கேட்டது. நாக்போவின் அருகே குண்டு பட்டு படியிலிருந்த மென்மையான கல் உடைந்து பறந்தது.
“நாக்போ பதுங்கிக்கொள்” என்று பாண்டியன் கூவினான். நாக்போ அப்படியே பதுங்கிக்கொண்டது. மீண்டும் இரு குண்டுகள் சீறிவந்தன. நோர்பாவும் படிகளில் படுத்தான். பாண்டியன் தன் துப்பாக்கியை எடுத்து அந்தத் திசைநோக்கி சுட்டபடியே ஓடினான்.
கட்டடத்துக்கு அப்பால் ஒளிந்திருந்து சுட்டவன் ஓடிவிட்டிருந்தான். பாண்டியன் சென்றபோது அவன் சுட்ட குண்டுகள் பட்ட இடங்களில் குழிவிழுந்திருந்தது.
“நாக்போ” என்று பாண்டியன் கூவினான். நாக்போ பாய்ந்து ஓடிவந்தது. அந்த இடத்தை முகர்ந்துவிட்டு ஓட ஆரம்பித்தது. துப்பாக்கியுடன் பாண்டியன் பின்னால் ஓடினான். அவனுக்குப்பின்னால் நோர்போ ஓடினான்.
நாக்போ முகர்ந்தபடி மீண்டும் மடாலயத்துக்குள் நுழைந்தது. மடாலயத்தின் குறுகலான படிகள் வழியாக ஓடியது. பிட்சுக்கள் சிலர் ஓடிவந்து “என்ன? என்ன சத்தம்?” என்று கேட்டனர். சுற்றுலாப்பயணிகளும் “என்ன நடக்கிறது?” என்று பதறினர்.
“ஒன்றுமில்லை, வழக்கமான பயிற்சி” என்று சொன்னபடி அவர்கள் உள்ளே சென்றார்கள்.
நாக்போ மீண்டும் அந்த மூத்த பிட்சுவின் அறை அருகே சென்றது. கதவை பிறாண்டியபடி துள்ளித்துள்ளிக் குதித்தது. பாண்டியன் கதவைத்தட்டினான்.
முதிய பிட்சு கதவைத் திறந்தார். ‘‘யார்? என்ன வேண்டும்? ஏன் தியானத்தில் தொந்தரவுசெய்கிறீர்கள்?” என்று கோபத்துடன் கேட்டார்.
“மன்னிக்க வேண்டும் தூயவரே. ஒரு சிறிய சோதனை… ஒரு குற்றவாளி இங்கே வந்திருப்பானோ என்று சந்தேகம்” என்றான் பாண்டியன்.
“இந்த அறையை நான் நேற்று மாலைக்குப் பின் திறக்கவே இல்லை” என்றார் அவர்.
“இருந்தாலும் நாங்கள் ஒருமுறை பார்த்துவிடுகிறோமே” என்றபடி பாண்டியன் அவரை கடந்து உள்ளே சென்றான்.
“என் அமைதியைக் குலைக்கிறீர்கள்” என்று அவர் சொன்னார். அவருடைய உடல் வற்றிச்சுருங்கியிருந்தது. கைகள் நடுங்கிக்கொண்டே இருந்தன.

அது மிகச்சிறிய அறை. உள்ளே கனத்த கம்பளியாலான தரை. சுவர்களிலும் கம்பளி பதிக்கப்பட்டிருந்தது. உள்ளே ஒரு பீடத்தின்மேல் சிறிய புத்தர் சிலை இருந்தது. மரத்தால் செய்யப்பட்டு பொன்னிறம் பூசப்பட்ட சிலை.
சிலைக்கு முன்னால் தியானத்தில் அமர்வதற்கான உயரமில்லாத இருக்கை போடப்பட்டிருந்தது. அதன் மேல் வெண்ணிறமான மலையாட்டின் தோல் விரிக்கப்பட்டிருந்தது. அதிலிருந்துதான் அந்த பிட்சு எழுந்து வந்திருந்தார். அருகே தியானத்துக்குரிய பளிங்குமணி மாலை வைக்கப்பட்டிருந்தது.
பாண்டியன் “மன்னிக்கவேண்டும் தூயவரே” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான். முதிய பிட்சு முகத்தைச் சுளித்தபடி கதவை மூடினார்.
‘‘உள்ளே எவரும் இல்லை. எவரும் நுழைந்ததாகவும் தெரியவில்லை” என்றான் பாண்டியன்.
‘‘ஆமாம்” என்றான் நோர்பா. ஆனால் இந்தமுறை நாக்போ பிழையாகச் சொல்லவில்லை. நம்மைக் கொல்ல முயன்றவன் உள்ளே இருக்கிறான்.
“அவன் நாக்போவைக் கொல்லமுயன்றான். ஏனென்றால் அவனுடைய வாசனை அதற்குத்தெரிந்திருக்கிறது” என்றான் பாண்டியன். சட்டென்று அவன் மனம் அதிர்ந்தது. அவன் நின்று நோர்பாவிடம் “அந்த அறைக்குள் நான் எதையோ பார்த்தேன்” என்றான்.
“என்ன?” என்றான் நோர்பா.
“ஏதோ ஒன்று… அதைப்பார்த்தபோது என்னை அறியாமலேயே மனம் அதிர்ந்தது. ஆனால் அந்தப் பரபரப்பில் அதை விட்டுவிட்டேன்.”
அவன் தலையை கையால் தட்டினான். பின்பு “அங்கே என்னென்ன இருந்தன? தோல் இருக்கை. மணிமாலை. பித்தளைப் பாத்திரங்கள். புத்தர் சிலை… ஆம், வழக்கமான புத்தர் சிலைதான். ஆனால்… ஆ”
“என்ன?” என்றான் நோர்பா
“அந்த புத்தர் சிலையின் கால்கள் மம்மியின் கால்களைப்போலவே வைக்கப்பட்டிருந்தன. உள்ளங்கால்களைச் சேர்த்து அமர்ந்திருந்தார் புத்தர். அதேபோன்றுதான் போன் மதத்தின் டாங்காவிலும் அந்த தெய்வம் அமர்ந்திருந்தது” என்றான் பாண்டியன்.
(தொடரும்...)

மார்வின் ஹாரீஸ்
Marvin Harris
இந்துமதம் பசுவைக் கொன்று உண்பதை தடுக்கிறது. இஸ்லாமிய மதம் பன்றியை உண்பதை விலக்குகிறது. ஏன்?
இந்தியா இரண்டு பருவமழைகளை நம்பியுள்ள நாடு. அடிக்கடி மழை பெய்யாமலும் போகும்; பஞ்சங்கள் வரும். உணவு இல்லாமல் ஆகும்போது மாடுகளைத்தான் திருடி உண்பார்கள். பசுக்களைக் கொன்று தின்றுவிட்டால் மழைபெய்யும்போது மீண்டும் மாடுகளுக்கு எங்கே போவது?
அதேபோல பாலைவனங்களில் கிழங்குகளும் தானியங்களும் மிகக்குறைவு. அவைதான் மக்களின் உணவு. மக்கள் உண்ணும் அதே உணவைத்தான் பன்றியும் உண்கிறது. பன்றிக்கறியை உண்ண அனுமதித்தால் பல ஏழை மனிதர்கள் உண்ணும் உணவைக் கொடுத்து பன்றியை வளர்த்து, அந்தக் கறியை பணக்காரர்கள் சாப்பிடுவார்கள். உணவுப்பஞ்சம் வரும்.
ஆகவேதான் இந்தத் தடைகளை இந்து மதமும் இஸ்லாம் மதமும் ஏற்படுத்தியிருக்கின்றன. இவற்றை எல்லாம் ஆராய்ந்து எழுதியவர், மார்வின் ஹாரீஸ் என்னும் அமெரிக்க சமூகவியல் ஆய்வாளர். இவர் ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்திலும் கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார். 2001-ல் தன் எழுபத்திரண்டாவது வயதில் இறந்தார். இவருடைய Cows, Pigs, Wars and Witches: The Riddles of Culture என்ற நூல் இதை விரிவாக ஆராய்கிறது. இந்நூல் தமிழிலும் வெளிவந்துள்ளது.