மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 200 - ஓவியங்கள்: ராமமூர்த்தி

அனுபவங்கள் பேசுகின்றன!

திருந்துங்கள்... திருத்துங்கள்!

நான் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, செல்வந்தர் குடும்பம் ஒன்று காரில் வந்து இறங்கி, சாப்பிட அமர்ந்தது. சர்வர் ஆர்டர் எடுத்துச் சென்ற பிறகு, குழந்தை ஏதோ தந்தையிடம் சொல்ல, அவரும் ‘`இந்தாப்பா... சர்வர்’' என்று கம்பீரமாகக் கூப்பிட்டார். அவர் கூறியதைக் கேட்டுவிட்டு, சர்வர் பணிவுடன் ‘`சரிங்க சார்’' என்று கூறிவிட்டுச் சென்றார். அந்தச் செல்வந் தரின் குழந்தையும் (ஏழு வயதுதான் இருக்கும்) அதே பணக்காரத் தோரணையுடன் ``இந்தாப்பா... சர்வர்!’' என்று கூப்பிட்டானே பார்க்கலாம்..! கண்டிக்கவேண்டிய பெற்றோர் இதைக் கண்டுகொள்ளவே இல்லை! அதுதான் நெருடலாக இருந்தது.

குழந்தைகள், பெரியவர்களை எப்படி அழைக்க வேண்டும் என்று பெற்றோர் சொல்லித்தர வேண்டாமா? பணம் இருந்தால் சகலமும் வந்துவிடுமா? இதுபோன்ற பெற்றோர்... குழந்தைகளைத் திருத்த வேண்டும்; தாங்களும் திருந்த வேண்டும்!

- எம்.ஏ.நிவேதா, திருச்சி-15

அனுபவங்கள் பேசுகின்றன!

வீணடிப்பதை நிறுத்துங்கள்!

ண்மையில் வேலூரில் உள்ள ஒரு கோயிலுக்குக் குடும்பத்தோடு சென்றிருந்தோம். அங்குள்ள குளத்தில் நாணயங்களையோ, ரூபாய் நோட்டுகளையோ போடக் கூடாது என்ற அறிவிப்பு உள்ளது. ஆனால், அந்த அறிவிப்பை அலட்சியம் செய்துவிட்டுப் பலர் ரூபாய் நோட்டுகள், நாணயங்களை வீசிக்கொண்டிருந்தனர். குளத்தில் பக்தர்கள் வீசிய ரூபாய் நோட்டுகள் ஏராளமாக மேலே மிதந்தும், ஊறிப்போய் அடியில் தங்கியும் இருந்தன. இதைத்தவிர ஏராளமான கண்ணாடி வளையல்கள் கிடப்பதையும் காணமுடிந்தது.

யாரோ ஒரு பக்தர் இச்செயலை முதலில் செய்ததால், மற்றவர்களும் இது ஒரு சம்பிரதாயம் என அந்தத் தவறான காரியத்தைச் செய்கிறார்கள். இக்காட்சியைக் கண்டு நாங்கள் மனம் வருந்தினோம். ரூபாய்கள், நாணயங்களை உண்டியலில் சேர்த்தால் கோயில் நற்காரியங்களுக்குப் பயன்படுமே? அதை இப்படி நீரில் எறிந்து யாருக்கும் உதவாமல் வீணடிப்பது எவ்வகையில் நியாயம்? பக்தர்கள் இனிமேலாவது இப்படிப்பட்ட விஷயங்களைச் செய்வதை தவிர்க்கலாமே!

- எஸ்.சிவசித்ரா, சென்னை-64

அனுபவங்கள் பேசுகின்றன!

உடனுக்குடன் மனமாற்றம் தேவைதானா..?

ங்கள் உறவினரின் மகள் பி.இ பட்டப்படிப்பு முடித்து விட்டு நல்ல ஊதியத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள். பெற்றோருக்கு ஒரே பெண் என்பதால் மிகச் செல்லமாக வளர்த்தனர். அவளுடைய விருப்பங்களை நிறைவேற்றினர்.

தன்னுடன் பணிபுரியும் அதே இனத்தைச் சேர்ந்தவரை மகள் விரும்பியதால், பெற்றோர் அவர்களிடம் முறையாகப் பேசி, மிகுந்த பண செலவில்  திருமணத்தை நடத்தி வைத்தனர். திருமணம் முடிந்து ஆறு மாதங்களுக் குள்ளாகவே, உறவினரின் மகள் புகுந்த வீட்டில் யாரும் சரியாக நடந்து கொள்ளவில்லையென்றும், மாமியார் அவள் செய்த சமையலைக் குறை சொல்கிறார் என்றும், கணவன் தன் பக்கம் பேசவில்லையென்றும் பல காரணங்களைக் கூறி பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டாள். பெற்றோர் இதமாக எடுத்துக் கூறியும், அறிவுரைகள் சொல்லியும் பயனில்லை. பிடிவாதமாக புகுந்த வீட்டுக்குப் போக மறுக்கிறாள்.

பெண்ணின் விருப்பத்துக்காக செய்த திருமணம் இப்படி ஆகிவிட்டதே என்று பெற்றோர்கள் வருத்தப்படுகின்றனர். தன் பெண்ணைக் கடிந்துகொள்வதற்கும் தயங்குகின்றனர்; ஏதாவது விபரீதமாகச் செய்துகொண்டுவிடுவாளோ என்று பயப்படுகின்றனர்.

இப்படி உடனுக்குடன் மனமாற்றம் கொள்வதனால், தங்கள் வாழ்க்கை மட்டுமல்லாமல், தங்களுக்கு வேண்டிய வர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்பதை இளைய தலைமுறையினர் உணர வேண்டும். எந்த விஷயத்தைப் பற்றியும், ஆரம்பத்திலேயே நன்றாக யோசித்து தீர்க்கமான முடிவு எடுத்தால்... வாழ்க்கையில் பிரச்னைகள் பலவற்றைத்  தவிர்க்கலாம்.

- பத்மஜா ஜானகிராமன், வாலாஜா

அனுபவங்கள் பேசுகின்றன!

முதலீடான முப்பது நிமிடங்கள்!

தோழியின் இல்லத்துக்குச் சென்று அவளுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது பத்தாம் வகுப்பு படிக்கும் தோழியின் மகள் ஒரு டைரியைக் கொண்டுவந்து தோழியிடம் நீட்டினாள். அதைப் பார்வையிட்டவாறே, ``இப்ப உனக்கே தெரியுதுல்ல... எதுல எவ்வளவு செலவு ஆகியிருக்குன்னு! அடுத்த முறை சரியாக செலவழிக்க என்ன பண்ணலாம்னு யோசி'' என்று கூறி அனுப்பினார். குறுக்கிட்ட நான், ``என்ன இருந்தாலும் அவ குழந்தைதானே... இதற்குள் எதற்கு வரவு செலவு பார்க்கும் குடும்பப் பொறுப்பை அவளிடம் கொடுக்கிறாய்...'' என்றேன்.

சிரித்தபடி டைரியை எடுத்து என்னிடம் நீட்டினாள் தோழி. அதோடு ``நீயே சொல். இவ்வளவு செலவு செய்தால் அவள் எதிர்காலம் என்னாவது?'' என்றாள். வாங்கிப் பார்த்த நான் அதிர்ந்தேன். காரணம் திங்கள் மாலை 5 மணி முதல் ஞாயிறு மாலை 5 மணி வரை இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை வீதம் எதில், எவ்வளவு நேரம் அவள் செலவிட்டிருக்கிறாள் என்ற விவரம் இருந்தது.

இழந்த பணத்தை ஈடு செய்யலாம். இழந்த நேரத்தை எப்படி ஈடுகட்ட இயலும்? சிறுவயதிலேயே தன் பிள்ளைகளுக்கு நேரத்தின் அருமையை உணர்த்திய தோழியை மனமாரப் பாராட்டியதோடு, அவள் வீட்டில் செலவிட்ட நேரத்தை `முதலீடு முப்பது நிமிடங்கள்' எனக் குறிப்பிட்டு அன்றே நானும் என் நேரத்தின் வரவு செலவு கணக்கை எழுத ஆரம்பித்துவிட்டேன்!

- கோமதி பூபாலன், காவேரிப்பாக்கம்