மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 23

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

வீரயுக நாயகன் வேள்பாரி - 23

ள்ளறை ஒன்றில் படுத்திருந்த இளமருதன் கண்விழித்தபோது, விடிந்து நெடுநேரமாகியிருந்தது. அவன் அழைத்துவந்த கொற்றர்களுக்கு வேலைகள் ஒதுக்கப்பட்டு, அவர்கள் தங்களுக்குரிய இடத்துக்குச் சென்றுவிட்டனர். தன்னை அழைத்துவந்த செவியன் எங்கே எனத் தேடியபடி வெளியே வந்தான் இளமருதன். அவனின் கண்கள் வியப்பில் மூழ்கின. தாமரை மொட்டுபோல அடுக்கடுக்காகக் குவிந்து நிற்கும் புதிய மாளிகைகள், கதிரவனின் ஒளிபட்டு வெண்பஞ்சுபோல் ஒளிர்ந்துகொண்டி ருந்தன. வியப்புற்று நின்ற அவனருகே வந்து தோள் தொட்டான் செவியன்.

“இந்தப் பகுதியில் மூன்று பெரும்மாளிகைகள் கட்டி எழுப்பப்பட்டுள்ளன. கட்டட வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டன. மர வேலைப்பாடுகளும் ஓவியப் பணிகளும்தான் நடக்கின்றன. மாளிகைக்குப் பின்புறம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பூந்தோட்டத்தில், ஒருசில பணிகளும் நடைபாதை, சுற்றுச்சுவர் போன்ற சிறுசிறு வேலைகளும்தான் மிச்சமிருக்கின்றன. நாம் அழைத்துவந்த கொற்றர்களை அங்கு அனுப்பியாகிவிட்டது” என்றான் செவியன்.

மலைப்பில் இருந்து மீளாமல் கேட்டுக்கொண்டி ருந்தான் இளமருதன். மேல்மாடத்தின் வெளிப்புற விளிம்பில், கடல் அலைகளின் வளைவுகள் சுழன்று பொங்கியபடி இருந்தன. அதைப் பார்த்தபடி கேட்டான், “எப்படி இவ்வளவு நுணுக்கமாக வடிவமைக்க முடிந்தது?”

செவியன் சொன்னான்... “அலைகள் பொங்கும் கடல்போல் மாடத்தின் விளிம்புகள் வடிவமைக்கப்பட்டிருப்பதன் காரணம், உள்ளிருக்கும் மாளிகையின் மொத்த வடிவம் சிப்பி போன்றது. சிப்பிக்குள் இருக்கும்
ஆதி இருளுக்குள்தானே வெண்முத்து சூல்கொள்ளும்?”

புரியாமல் விழித்தான் இளமருதன்.

“இதுதான் மணமக்களின் பள்ளியறை. இந்தப் பேரரசின் வம்சக்கொடி வேர்பிடித்து மலர வேண்டிய மாளிகை.”

அசைவுறா கண்கள் திரும்ப மறுத்தன.

“வாருங்கள் உள்ளே போய்ப் பார்ப்போம்’’ எனச் சொல்லி மாளிகைக்குள் அழைத்துச் சென்றான் செவியன்.

உள்ளே மகதநாட்டு வினைஞர்கள் நெடுங்கதவுகளை இழைத்துப் பொருத்தும் பணியைச் செய்துகொண்டிருந்தார்கள்.

காற்று எங்கும் நுண்ணிய மரத்தூள்கள் மிதந்துகொண்டிருந்தன. சந்தனத்தின் வாசனை மாளிகைக்குள் நுழையும் முன்னரே இளமருதனின் மூக்கில் ஏறியது. உள்நுழைந்த இளமருதன், வடிவிலும் வாசனையிலும் வண்ணத்திலும் நிலைமறந்து நின்றான்.

பெரும் வட்டவடிவில் ஒன்பது தூண்கள் நின்றுகொண்டிருந்தன. தூண்களின் மடிப்புகளும் வேலைப்பாடுகளும் இணை சொல்ல முடியாதவை. அந்தத் தூண்களின் மேல் குவிமாடம் இருந்தது. மாடத்தின் மேற்கூரை முழுவதும் ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. இரவு நேரத்து வானம். நிலவு ஒளிர்ந்துகொண்டிருக்க, எங்கும் விண்மீன்கள் மின்னிக்கொண்டிருக்கும் காட்சி அதில் இருந்தது. அண்ணாந்து பார்த்தபடி மேற்கூரையின் முழுவட்டத்தையும் நோக்கினான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 23

“ஓவியர்கள், வேலையை முடித்துவிட்டார்கள். ஆனால், குறித்துக்கொடுத்த அந்துவன் வந்து பார்த்து `சரி' எனச் சொன்னால்தான் சாரத்தைப் பிரிக்க முடியும். இன்று நற்பகல் அவர் வந்துவிடுவார்” என்று சொல்லியபடி, “வாருங்கள் இன்னொரு பள்ளியறைக்கு” என்று அழைத்தான் செவியன்.

“இன்னொரு பள்ளியறையா?”

“ஆம், இது கார்காலப் பள்ளியறை. கீழ்நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. அடர்ந்த தூண்களும் மரவேலைகளும் இதில் அதிகம். இன்னொன்று வேனிற்காலப் பள்ளியறை. அது மேல்மாடத்தில் கட்டப்பட்டுள்ளது. வைகையின் காற்று எல்லா திசைகளிலிருந்தும் உள்நுழைவதைப்போல வடிவமைக்கப் பட்டிருக்கும்” என்று சொல்லியபடி அங்கு அழைத்துச் சென்றான். அங்கும் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. வேலைசெய்பவர்கள் யவனத் தச்சர்கள். வேனிற்கால வெக்கையைக் காதலின் கவசமாக மாற்றும் வித்தையைச் செய்துகொண்டிருந்தனர். விதவிதமான கைக்கருவிகளை வைத்துப் பணியாற்றினர். இளமருதன் கண்களை எங்கும் ஓடவிட்டான். அங்கு நெருக்கமாக அமைக்கப்படாமல் விலகி நிற்கும் தூண்கள், சாளரத்திலிருந்து தன்னியல்பிலே வந்து தழுவிச்செல்லும் காற்று என, இரண்டு மாளிகைகளுக்கும் எவ்வளவோ வேறுபாடுகள் இருந்தன. மேற்கூரை ஓவியம் மட்டும்தான் ஒன்றுபோல இருந்தது. இரவு நேரத்து விண்மீன்களும் நிலவும் ஒளிவீசியபடி.

“இந்த இரண்டை ஒன்றுசேர்த்தாலும் ஈடாக முடியாத பெரும் மாளிகை ஒன்று கட்டப்பட்டு வருகிறது” என்று சொல்லி பாண்டரங்கத்துக்கு அழைத்துச்சென்றான் செவியன்.

அங்கே வைப்பதற்காகத்தான் அவன் தந்தை காமன்விளக்கு செய்துகொண்டிருக்கிறார் என்பதால், அந்த அரங்கு எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க ஆவலுடன் போனான் இளமருதன். பளிங்குக்கற்கள் பாவப்பட்டு, நிலைச்சுவரிலும் தந்தரையிலும் பளபளப்பு ஏறியிருந்தது. ஓவியங்களும் மரவேலைப்பாடுகளும் மனிதக் கற்பனைக்கு எட்டாத பேரழகுகொண்டு விளங்கின. கலை வேலைப்பாடுகளின் உச்சம் என இந்த அரங்கைச் சொல்லலாம். நடுவில் ஆடுகளம். அதைச் சுற்றி இசைக்கவும் பாடவும், பார்த்து ரசிக்கவும் ஏற்றவாறு ஒவ்வொன்றுக்கும் தகுந்த மேடைகள். எல்லா தூண்களிலும் சிற்ப வேலைகள் ஏறக்குறைய முடிந்துவிட்டன. சுவர்களில் சுதை வேலைப்பாட்டுக்கும் வண்ணங்கள் பூசப்பட்டுவிட்டன. மேற்கூரை ஓவியமும் முடிந்துவிட்டது. அந்துவன் வந்து பார்த்துவிட்டால் எல்லாம் முற்றுபெற்றுவிடும்.”

நிலைமறந்து பாண்டரங்கத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான் இளமருதன்.

“வாருங்கள், அந்துவன் வருவதற்குள் நாம் உணவருந்திவிட்டு வந்துவிடுவோம்” என்று சொல்லி அழைத்துச்சென்றான் செவியன்.

கோட்டைக்கு தெற்கே மதுரையின் இடுகாடு இருந்தது. இறந்துபோன மேற்கு வாசலின் தளபதி மாரையனின் உடல் அங்குதான் கொண்டுவரப்பட்டது. வீரர்கள் உடலேந்தி வந்தனர். நேற்று நள்ளிரவு யானையைக் குறுக்கிட்ட மாரையனை, சற்றும் எதிர்பாராமல் துதிக்கையால் சுழற்றி அடித்தது. குதிரையின் முதுகெலும்பு நொறுங்கி, கீழே சரிந்தான் மாரையன். பின்னங்கால்களால் அவனை மிதித்துக் கடந்தது யானை. பின்புறம் வந்த வீரர்கள் நிலைமையை உணர்ந்து யானைக் கட்டுத்தறியின் தலைவன் அல்லங்கீரனிடம் செய்தி சொல்ல ஓடினர்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 23

மேலே உட்கார்ந்திருந்த பாகனுக்கு, இப்போதுதான் விஷயம் பிடிபட்டது. யானைக்கு மதம்கொள்ளவில்லை. மதம் பிடித்திருந்தால் இந்நேரம் தான் உயிரோடு இருக்க மாட்டோம். தந்தத்தில் தாங்கிப் பிடித்திருக்கும் குறுக்குக்கட்டையால் இந்த இடத்தையே தகர்த்திருக்கும். முழுநிலை உணவு மூன்று சுற்று கொடுக்கப்பட்ட பிறகு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அதை எழுப்பி வேலைவாங்கியதில் ஏதோ பிரச்னை ஏற்பட்டுள்ளது. தளபதி மாரையன், அவசரப்பட்டு இடையில் வந்து குறுக்கிட்டுவிட்டார். `இது வேறு திசை போகாமல் வந்த வழியே கட்டுத்தறி நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது' என்று நினைத்தபடியே அதன்மேல் அமர்ந்திருந்தவன் குத்துக்கோலை (அங்குசம்) வலது காதின் பின்புறம் செருகிவிட்டு, சட்டென யானையின் மேல் இருந்து பக்கத்து மாளிகைச் சுவரின் மேல் தாவினான். அல்லங்கீரனைப் பார்த்துத் தகுந்த ஏற்பாடு செய்வதற்காக அவரை நோக்கி ஓடினான்.

மாரையனின் வீரர்கள்தான் முதலில் கட்டுத்தறியின் தலைவனை வந்தடைந்தனர். வீரர்கள் ஓடிவரும் வேகத்தைப் பார்த்ததும் என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிந்துகொண்டார் அல்லங்கீரன்.

``தளபதியை மிதித்துக் கொன்றுவிட்டது'' என, பதைபதைக்கச் சொன்னார்கள். உடனடியாக மூன்றாம் தறியில் இருந்த யானைகளை எழுப்ப உத்தரவிட்டான்.

எத்தனை நூறு யானைகளைப் பழக்கியவன் அல்லங்கீரன். போர்க்களத்தில் எதிரிகளின் யானைப் படையைச் சிதைக்க எத்தனையோ முறை வழிவகுத்தவன். வயதாகிவிட்ட காரணத்தைச் சொல்லி யானைப்படை பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டபோது, வாரக்கணக்கில் உணவெடுக்காமல் பட்டினிகிடந்து துயரத்தைக் கடந்தவன். யானைகளுடனே வாழ்வைக் கழித்தவன். வயதான யானைகள் இருக்கும் கட்டுத்தறி, இப்போது இவன் வசம்.

யானைகளால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் பொழுதுகளில் அவனது ஆளுமையைக் கண்டு

வீரயுக நாயகன் வேள்பாரி - 23

நாடே நடுங்கியிருக்கிறது. இப்போது உடல் மிகவும் தளர்ந்துவிட்டது. ஆனாலும் சவாலைச் சந்திக்கத் தயாரானான்.

நிலைப்படை வீரர்கள்,  அலையலையாக யானையின் பின்னால் வந்து கொண்டிருந்தனர்.  அவர்கள் கோட்டையின் உள்பக்கமாகப் போகாமல் கட்டுத்தறியை நோக்கியே நடந்தனர். வீரர்கள், பாதுகாப்பான தொலைவில் பின்தொடர்ந்தனர்.

குறுக்குத் தெருக்களின் வழியாக விரைந்தோடி வந்த பாகன் கட்டுத்தறியை அடைந்தபோது அல்லங்கீரன் அங்கு இல்லை. செய்தியைக் கேட்டு யானையை மறிக்கப் போய்விட்டார் என்பதை உணர்ந்தான். அவர் போன திசை நோக்கி ஓடினான். யானைக்கு மதம் பிடிக்கவில்லை. கட்டுப்பட மறுக்கிறதே தவிர, கட்டுப்பாட்டை மீறவில்லை. வலது காலில் இருக்கும் காயங்களை நோக்கிக் கட்டுகளை வீசி இறுக்கிவிட்டால்,
அது அசையாமல் நின்றுவிடும். இதை அவரிடம் சொல்லத்தான் விரைந்து வந்தான். ஆனால், அதற்குள் எல்லோரும் போய்விட்டார்கள். அதற்கு மதம் பிடித்துவிட்டது எனக் கருதி அதை வீழ்த்தப்போகிறார்கள். எப்படியாவது அந்தச் செயலைத் தடுக்க வேண்டும் எனப் பதறியடித்து யானையை நோக்கி ஓடினான் பாகன்.

யானை வந்துகொண்டிருக்கும் வீதியை அடைந்தான் அல்லங்கீரன். கொடுக்குப்போல் மேல்தூக்கி இருந்த அதன் அடிவாலைக் கொண்டுதான் மதத்தைக் கணக்கிட முடியும். வந்தவுடன் அடிவாலைப் பார்க்க முயன்றபோது, மேலே பாகன் இல்லை என்பது தெரிந்தது. அவனை, யானை கொன்றுவிட்டது என்ற முடிவுக்கு அவர் போனதால், மேல்தூக்காமல் இருந்த அடிவாலை அவரது கண்கள் காணவில்லை.

மதயானையை எதிர்கொள்வதற்காகவே பயிற்சிபெற்ற வீரர்கள், துல்லியமான தாக்குதலை முன்னெடுத்தார்கள். பாண்டியப் பேரரசு, யானைப் போர்களிலும் மதயானையை அடக்கும் உத்திகளிலும் நிகரற்று விளங்கியது.

மதுரையில் மாபெரும்விழா நடக்கும் நேரம். சற்றே பிசகு ஏற்பட்டாலும் பெரும் இழப்பில் முடிந்துவிடும். எனவே, தாமதிக்க வேண்டாம் என முடிவெடுத்தார் அல்லங்கீரன். அதைப் போகவிட்டு சரியான ஒரு நாற்சந்தியில் யானைகளோடு மறித்தார். ஒரே நேரத்தில் யானைகள் நான்கும் பிளிறிக்கொண்டு துதிக்கையைத் தூக்கியபடி அதை நோக்கி முன்நகர்ந்தன. அவற்றின் தந்தங்களின் முனைகளில் பளிச்சிடும் பூண்களும் குத்தீட்டிகளும் மாட்டப்பட்டிருந்தன. அந்த அடர் இருட்டில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் புரியவில்லை. பிளிறலின் பேரொலி மேலெழுந்தபோது அது குறுந்தடியோடு மண்ணில் சரிந்தது.

மற்ற நாள்களில் இது நடந்திருந்தால், இந்தப் பேரோசை கேட்டு மொத்த நகரமும் விழித்திருக்கும். ஆனால், விழாக் கொண்டாட்டத்தில் நகரம் திளைத்துக்கொண்டிருந்ததால், எங்கும் எதிரொலிக்கும் பேரொலிக்கு நடுவில் யானைகளின் பிளிறல், கொண்டாட்டத்தின் பகுதியாகக் காற்றில் கரைந்தது.

தலைமை அமைச்சர் முசுகுந்தருக்கு, முதலில் செய்தி சொல்லப்பட்டது. இந்த மாநகரை வகுக்கப்பட்ட

வீரயுக நாயகன் வேள்பாரி - 23

விதிகளின் வழியே கட்டிக்காப்பவர் அவர்தான். மணவிழா திருநாளுக்காக எங்கும் மங்கலப் பேரொலி நிரம்பியிருக்கும் நாளில், இப்படி ஒரு செய்தியைக் கேட்டு மனிதர் நடுங்கிப்போனார். இந்தச் செய்தி பரவாமல் உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவந்தார். விடிவதற்குள் எல்லாவற்றையும் அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

பெரும் மரவண்டியில் யானையை இழுத்து ஏற்றினர். முன்னும் பின்னுமாக யானைகளே அந்த வண்டியை இழுத்தும் தள்ளியும் கொண்டுசென்றன. அந்த இடத்தில் மண்ணைக் கொட்டிக் குருதியை மூழ்கடித்தனர். இரவோடு இரவாக வேலையை முடித்தனர். ஆனாலும், விதிகளின்படி விசாரணை உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும்.

ரண்மனையின் நாள்களையும் கோள்களையும் கணித்துச் சொல்லும் தலைமைக் கணியனின் பெயர்தான் அந்துவன். காலம் கணிக்கும் கணியனான அந்துவனின் சொல்லுக்கு மறுசொல் இல்லை இந்த மாநகரில். அவன் கணித்துச்சொல்லும் சொல்லே பேரரசின் சொல்லாகிறது. சிறுகோல் ஒன்றை எப்போதும் கையில் வைத்திருக்கும் அவன், தடித்த கோல்போலவே உடல்கொண்டவன். பொதிகை மலையடிவாரத்தில் வீற்றிருக்கும் பாண்டிய நாட்டின் பெருங்கணியர் திசைவேழருக்கு மாணவன்.

திருமணத்தை முன்னிட்டுப் புதிதாக மூன்று மாளிகைகள் கட்டப்படுவதை அறிந்ததும், அதன் மேற்கூரையில் என்ன ஓவியம் இருக்கலாம் என்று முடிவுசெய்ய, பொதிகை மலை சென்று பேராசான் திசைவேழரிடம் கருத்தறிந்து வந்தவன். அவர் சொன்ன அடிப்படையில் வானியல் அமைப்புகளைச் சொல்லி ஓவியர்களை வரையவைத்துள்ளான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 23

திருமணத்தை முன்னிட்டு நாளை பெருங்கணியர் திசைவேழர் அரண்மனைக்கு வரவிருக்கிறார். அவர் வருவதற்குள் ஓவியப் பணிகளை முடித்து வைக்க வேண்டும். வரையப்பட்டவை எல்லாம் சரியாக இருக்கின்றனவா எனப் பார்ப்பதற்காக அந்துவன் புதிய மாளிகையை நோக்கி வந்துகொண்டிருந்த போது, அவரது வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தனர் செவியனும் இளமருதனும்.

அந்துவன் வந்ததும் இளமருதனை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தான் செவியன். இளமருதன் அவரை வணங்கினான். அவனது வணக்கத்தை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக, தலையை மெள்ள அசைத்தபடி நடந்தார் அந்துவன்.

புதிய மாளிகைகள் குறித்து இளமருதன் தனது வியப்பை அவரிடம் வெளிப்படுத்தியபடியே உடன் நடந்தான். மூவரும் கார்காலப் பள்ளியறையை நோக்கி நடந்தனர். கட்டட அமைப்பை, மரவேலைப் பாடுகளை, கலை நுணுக்கங்களை வியந்து சொல்லிக்கொண்டே அவன் வந்தான். மேற்கூரை ஓவியத்தைப் பற்றி ஏதாவது சொல்வானா என, கணியனின் காதுகள் காத்திருந்தன.

அப்போது செவியன் சொன்னான்... “கணியரே மூன்றும் வெவ்வேறு விதமான மாளிகைகள். ஆனால், மேற்கூரை ஓவியத்தை மட்டும் ஏன் ஒன்றுபோல் வரைந்திருக்கிறீர்கள்?”

“மூன்றும் வெவ்வேறானவைதானே” என்றார் அந்துவன்.

“இல்லையே, ஒரே மாதிரிதானே இருக்கின்றன” என்றான் செவியன்.

“வானத்தில் உள்ள வேறுபாடுகளை அறிய, சற்றே வானறிவு வேண்டும். வாருங்கள் என்ன வேறுபாடு என்று உங்களுக்குச் சொல்கிறேன்” எனச் சொல்லிக்கொண்டே மாளிகைக்குள் நுழைந்தார் அந்துவன். பின்னாலேயே இருவரும் நுழைந்தனர்.

கார்காலத்து மாளிகையின் மேற்கூரையைக் காட்டிச் சொன்னார்... “இதில் மதி எவ்விடம் இருக்கிறது பார்த்தீர்களா?”

“மேற்கூரையின் இடது பக்கம் இருக்கிறது” என்றான் செவியன்.

“நான் இடம் எனச் சொன்னது காலத்தை, வானில் நிறைமதி எந்த விண்மீன் கூட்டத்தோடு இணைந்து

வீரயுக நாயகன் வேள்பாரி - 23

நிற்கிறதோ, அந்த விண்மீன் பெயரில்தான் அந்த மாதத்தை அழைக்கிறோம். அங்கு பாருங்கள் ஆறு முத்துக்களைப்போல மின்னிக் கொண்டிருப்பவைதான் கார்த்திகை விண்மீன் கூட்டம். அதோடு மதி நிற்பதால் இது கார்த்திகை மாதம். மதி நிற்கும் இடம், விண்மீன் கூட்டம் இருக்கும் இடமும் பிற கோள்கள் நிற்கும் இடமும் வானியல் கணக்குப்படி அமைக்கப்பட்டுள்ளன. திகிரிக் கணக்கு. அதாவது, வானியல் கணக்கை அறிந்தவர்கள் இந்த ஓவியத்தைப் பார்த்தால் எந்த ஆண்டு, எந்த மாதம், எந்த நாளை இந்த ஓவியம் குறிக்கிறது என்பதைத் துல்லியமாகச் சொல்லிவிடுவார்கள். மேற்கூரையின் வட்டத்துக்குள் இருப்பது ஓவியம் அன்று, காலம்.

இளவரசர் பொதியவெற்பன் பிறந்தபோது வானத்தில் நாள்மீன்களும் கோள்மீன்களும் இருந்த அமைப்பு இதுதான். படுக்கையில் சாய்ந்து பார்க்கும்போது அவரது கண்கள் நேரடியாக இதைத்தான் பார்க்கும். மதியும் விண்மீன்களும் கோள்மீன்களும் இதே அமைப்புக்கு மறுபடி வர, அறுபது ஆண்டுகள் ஆகும். காலத்தின் முழு வட்டம், எல்லா காலங்களிலும் ஒளிவீசிக்கொண்டுதான் இருக்கப்போகின்றன. அதைப்போல் என்றென்றும் ஒளிவீசக்கூடிய வாழ்வை நீ அமைத்துக்கொள் என்று காலம் அவருக்கு ஒவ்வோர் இரவும் சொல்லும்.”

அந்துவனின் விளக்கத்தைக் கேட்டு மெய்சிலிர்த்து நின்றான் செவியன். மேற்கூரையை அண்ணாந்து பார்த்தபடி இருந்த இளமருதனுக்கு, பேச நா எழவில்லை.

சற்று நேரம் கழித்து அந்துவன் சொன்னார், “வேனிற்கால மாளிகையின் மேற்கூரையில் இருக்கும் கால அமைப்பு, இளவரசியார் ‘பொற்சுவை’ பிறந்தபோது நிலைகொண்டிருந்த வானியல் அமைப்பு.”

மூவரும் அந்த அரங்குக்குள் நுழைந்தனர். மதி முற்றிலும் வேறு ஒரு திசையில் இருந்தது. நாள்மீன்களும் கோள்மீன்களும் வெவ்வேறு இடங்களில் நிலைகொண்டிருந்தன.

மூன்றாவது மாளிகையான பாண்டரங்கத்துக்குள் நுழைந்தனர்.

“இது யார் பிறந்த கால அமைப்பு?” என்று கேட்டான் செவியன்.

“அதுதான் எனக்கும் தெரியவில்லை. நாள்களும் கோள்களும் இந்த இடத்தில் இருக்க வேண்டும் என திசைவேழர் குறித்துத் தந்தார். அதன்படி வரைந்துள்ளேன். `இது என்ன அமைப்பு என்று இப்போது வரை எனக்கு விளங்கவில்லை' என்றார் அந்துவன். நாளை அவர் வரவிருக்கிறார். இதில் எத்தனை குறைகள் அவர் கண்களுக்குத் தெரியப்போகின்றனவோ?” என்றவரின் குரலில் பதற்றத்தை உணர முடிந்தது.

``அரண்மனைக் கணியனின் பார்வையில் நடந்துள்ளவற்றில் குறை கண்டறிய முடியுமா என்ன?”

அசட்டையான சிரிப்போடு அந்துவன் சொன்னார்... ``வரையப்பட்ட வானில் எத்தனை விண்மீன்கள் இருக்கின்றனவோ, அத்தனை குறைகளை அவரால் கண்டறிய முடியும். ஏனென்றால், வானில் அவ்வளவு நிறைகண்டவர் அவர். அதனால்தானே பெரும்புலவர் கபிலர், திசைவேழரைப் போற்றி அத்தனை பாடல்களைப் பாடியுள்ளார்.”

சொல்லிக்கொண்டே அந்துவன் வெளிமாடத்தைப் பார்த்தபோது அங்கு வட்டவடிவில் செய்துவைக்கப்பட்டிருந்த திகிரி மேடையின் மேல் நாற்சதுரக் கூண்டு ஒன்று வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதைப் பார்த்ததும் பதறிப்போன அவர், ``அதைத் தூக்கிக் கீழே எறியுங்கள்'' எனக் கத்தியபடி அதை நோக்கி விரைந்தார்.

அவ்வளவு நேரம் அவர் சொன்னதை வியந்து கேட்டுக் கொண்டிருந்த இளமருதன், அவர் கத்தியதால் ஓடிப்போய், “அய்யா பொறுத்துக்கொள்ளுங்கள். நான் கொண்டுவந்த கூடுதான் இது” என்று சொல்லிக்கொண்டே கூண்டைத் தூக்கி கீழே இறக்கினான்.

அந்துவனின் கண்கள் சிவந்தன.

வீரயுக நாயகன் வேள்பாரி - 23

“என்ன இது அருவருப்பான விலங்கு, இதைக் கொண்டுவந்து ஏன் இதில் வைத்தாய், அது என்ன மேடை தெரியுமா, எதற்காக அமைத்திருக்கிறோம் தெரியமா?  இப்படி இதைக் கறைபடுத்தி விட்டாயே” என்று கோபப்பட்டார்.

இளமருதன் அவரை வணங்கி மீண்டும், மீண்டும் மன்னிப்புக் கேட்டான். பணியாளர்களை வரவழைத்து திகிரி மேடையைத் தூய்மைப்படுத்தச் சொன்னார். அவர்களும் வேகவேகமாகச் செய்தனர்.

செவியனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

``தேவாங்கு இருக்கும் கூண்டை எங்கு வைக்க?'' என்று  இளமருதன் கேட்டபோது, ``மாளிகையைவிட்டு வெளியே தனித்திருக்கும் அந்த மேடையின் மீது வையுங்கள்'' என்று சொன்னது அவன்தான்.

‘வெளியிலிருந்து வந்துள்ள ஒருவன் செய்துவிட்டான் என்பதால், அவரது கோபம் இந்த அளவுக்கு இருக்கிறது. இதை வைக்கச் சொன்னது நான்தான் என்பது தெரிந்தால் அவ்வளவுதான்’ என்று மனதில் நினைத்துக் கொண்டு, பேச்சைத் திருப்ப, “இந்த அழகிய வட்டவடிவ மேடையை எதற்காக மாளிகையை விட்டு வெளியே அமைத்துள்ளார்கள்?” எனக் கேட்டார்.

சற்றே கோபம் தனிந்த அந்துவன் சொன்னார்... “இது சக்கரவாகப் பறவைக்கான மேடை. `பறவைகளின் இளவரசி சக்கரவாகப் பறவை' என்று சொல்வார்கள். வரப்போகும் பாண்டியநாட்டு இளவரசியார் பொற்சுவையின் செல்லப்பறவை அதுதானாம். இது உண்மையில் பறவைகளின் இளவரசி அன்று... வணிகர்களின் இளவரசி. ஆம்... கால மாற்றத்தைக் கணித்துச் சொல்லும் பறவை அது. கார்காலத்துக்கான காற்று தொடங்கும்போது உலகின் எந்தத் திசையிலிருந்தோ இது வந்துவிடுகிறது. இது வந்துவிட்டால், காற்றின் திசையும் மழையின் தொடக்கத்தையும் கடலில் மிதக்கும் வணிகர்கள் அறிவார்கள். மழையோடு வந்து மழைநீரை மட்டுமே அருந்தி உயிர்வாழும் வியப்புதரும் இந்தப் பறவை, மழைக்காலம் முடிந்ததும் புறப்பட்டு மீண்டும் கடலுக்குள் போய்விடுகிறது.

இளவரசியார் இந்தப் பறவையோடுதான் வந்துகொண்டிருக்கிறாராம். அந்தப் பறவைக்கான கூண்டு வைக்கும் மேடை ஒன்றைச் செய்யச் சொன்னார்கள். அது கார்காலம் முடிந்ததும் பறந்துசெல்லும் திசையை நோக்கி, ஆறு மரங்களால் வட்டவடிவில் அந்த திகிரி மேடையை அமைத்துள்ளேன். அதில் போய் இந்த விலங்கை வைத்துவிட்டீர்களே” என்று கோபப்பட்டவர், தேவாங்கைப் பார்த்தபடியே கேட்டார். “என்ன விலங்கு இது? இதற்கு முன்னால் நான் பார்த்ததில்லையே. எதற்கு இதைக் கொண்டு வந்துள்ளீர்கள்?”

``தேவாங்கு'' என்று அதன் பெயரைச் சொன்ன இளமருதன். இதைக் கொண்டுவந்ததன் காரணத்தைச் சொல்ல வாயெடுத்தான். ஆனால், சட்டென அதை நிறுத்திக்கொண்டான். `பாரிக்கு தெய்வவாக்குச் சொல்லும் விலங்கு இது. இதை மாமன்னருக்குப் பரிசுப்பொருளாகக் கொண்டு வந்துள்ளோம். இதைப் பார்த்ததும் மாமன்னர் அடையப்போகும் மகிழ்வு அளவற்றது. இதை மாமன்னரிடம்தான் சொல்ல வேண்டும். இடையில் இருப்பவர்களிடம் சொன்னால், எப்படியும் மாற்றிவிடுவார்கள்’ என்று நினைத்தவன் சட்டென வாயடைத்துக் கொண்டான்.

“உலகமே வியக்கப்போகும் ஒரு திருமணத்துக்கு நீ கொண்டுவந்துள்ள பரிசு இதுதானா?” என்று சொல்லிச் சிரித்தபடி, ``குறுநில மன்னன் ஒருவனின் மகனால் மாமன்னரை இந்தக் காலத்தில் கண்டுவிட முடியுமா என்ன?”

செவியன் சொன்னான்... “வெங்கல்நாட்டின் மீது பேரரசருக்கு நல்ல மதிப்பு உண்டு. எனவே, நேரம் ஒதுக்குவார் என்றுதான் நான் நினைக்கிறேன்.”

“சரி அதையும் பார்ப்போம்” என்று சொன்ன அந்துவன், “இந்த விலங்குக் கூண்டை இனி இங்கு வைக்கக் கூடாது. மாளிகைக்குள் இருக்கும் மேடையில் வைத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

இளமருதன் கூண்டை எடுத்துக்கொண்டு பாண்டரங்கத்துக்குள் நுழைந்தான். `இந்த அரங்கில் வைக்கத்தான் தந்தை காமன்விளக்கைச் செய்துகொண்டிருக்கிறார். ஆனால், நான் கொண்டுவந்த விலங்கு அதற்கும் முன்னே உள்நுழைந்துவிட்டது' என எண்ணியபடி, அந்தக் கலைமாடத்தின் மேல்புறம் இருக்கும் மேடை ஒன்றின் மீது வைத்தான்.

உள்ளிருந்த இரண்டு தேவாங்குகளும் வட்டக்கண்களை உருட்டி உருட்டி இங்கும் அங்கும் பார்த்தன.

முன்புபோல் இவை அச்சம்கொள்வதில்லையே என இளமருதன் எண்ணிக்கொண்டிருக்கையில், அவை இரண்டும் அண்ணாந்து மேற்கூரையைப் பார்த்தன. பார்த்த கணத்தில் கத்தியபடி மருண்டு உள்ளொடுங்கின.

முதன்முறையாக அவற்றின் கத்தலைக் கேட்ட இளமருதன், அப்படி என்ன இருக்கிறது மேற்கூரையில் என எண்ணியபடி அண்ணாந்து பார்த்தான். சிதறிக்கிடக்கும் விண்மீன்களுக்கு இடையில் ஓர் ஓரத்தில் நிலவு இருந்தது. காலம், சொல்லவேண்டியதைச் சொல்லிக்கொண்டி ருந்தது. அவனுக்கு அது புரியவில்லை!

- பறம்பின் குரல் ஒலிக்கும்...