மற்ற எபிசோடுகள்
Published:Updated:

யவனிகா ஸ்ரீராம்: கைவிடப்பட்ட உயிர்களின் கவிஞன் - கரிகாலன்

யவனிகா ஸ்ரீராம்: கைவிடப்பட்ட உயிர்களின் கவிஞன் - கரிகாலன்
பிரீமியம் ஸ்டோரி
News
யவனிகா ஸ்ரீராம்: கைவிடப்பட்ட உயிர்களின் கவிஞன் - கரிகாலன்

படங்கள் : அய்யப்ப மாதவன்

வனிகா ஸ்ரீராமை முதன்முதலாக காஞ்சிபுரத்தில் சந்தித்தேன். இலக்கியவட்டம் நாராயணன் என்னுடைய `புலன்வேட்டை’ கவிதைத் தொகுப்புக்கும் யவனிகாவின் `இரவு என்பது உறங்க அல்ல’ கவிதைத் தொகுப்புக்கும் விமர்சனக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். அநேகமாக அந்தக் கூட்டம் நடந்து 20 ஆண்டுகள் இருக்கலாம். அன்றிலிருந்து இன்று வரை யவனிகாவுடனான இலக்கிய நட்பு தொடர்கிறது.

வழக்கமான தமிழ்க் கவிதைகளிலிருந்து விலகிச் சிந்திக்கும் மனஅமைப்பு இயல்பிலேயே அவருக்கு இருந்தது. அதற்கு இசைவாக, எளிமையாக,  சுயேச்சைத்தன்மையுடன் அவரது வாழ்க்கைமுறை அமைந்திருந்தது. வணிகப் பின்னணியுடைய குடும்பத்திலிருந்து வந்திருந்த அவர், செல்வம் சேர்ப்பது குறித்துச் சிந்திக்காமல் கவித்துவ மனதோடு அலைந்து திரிபவராக இருந்தார். இத்தகைய அவரின் இயல்பு எனக்கு நெருக்கமானதாக இருந்தது. அவர்தான், என்னை பாலகுருசாமியிடம் அழைத்துச் சென்றார். பாலகுரு, `மருதா’ பதிப்பகத்தைத் தொடங்கியிருந்த நேரம் அது. அப்போது வேறு பெரிய பதிப்பகங்களில் எங்களது கவிதைத் தொகுப்புகளைக் கொண்டுவந்திருக்க முடியும். ஆனால், அது நிறப்பிரிகைக் குழு, பின்நவீனத்துவம் உள்ளிட்ட மாற்றுச் சிந்தனை முறைகளை உரையாடிக்கொண்டிருந்த தருணம். நாங்கள் எளிய மாற்றுசக்திகளின் மீது நம்பிக்கை கொண்டிருந்தோம். அதன்பொருட்டே மருதா பதிப்பகத்தைத் தேர்ந்தெடுத்தோம். ஜாம் பஜாரில் உள்ள மருதா அலுவலகத்தில் யவனிகா, பாலகுருவோடு கழித்தவை பொற்காலங்கள். சதாகாலமும் கவிதை பேசிக்கொண்டே இருப்போம். கவிஞர்கள் கலகக்காரர்களாக இருக்கலாம், பதிப்பாளர் அப்படி இருக்கக் கூடாது. பாலகுருவால் தொடர்ந்து பதிப்பகத்தை நடத்த முடியாமல் போனது. ஆனாலும், யவனிகா உடனான நெருக்கம் அதிகரிக்கவே செய்தது. சென்னையிலிருந்து புதுவை வழியாகத் திரும்புகிறவர், அங்கு ரமேஷ், பிரேம், மாலதிமைத்ரி வீட்டில் ஓரிரு நாள்கள் தங்கிவிட்டு, பிறகு விருத்தாசலம் வருவார். எங்களது இல்லத்தில் சில நாள்கள் தங்குவார். அப்போதெல்லாம் ஒரு விருந்தினரைப் போலில்லாமல்  இயல்பாகக் குழந்தைகளோடு மகிழ்ந்திருப்பார்.கவிதையைப்போல சமையலிலும் கைதேர்ந்தவர் யவனிகா. அசைவம் பிரமாதமாகச் சமைப்பார். எனது துணைவி, தமிழ்ச்செல்விக்குச் சுவையாக பிரியாணி தயாரிக்கும் முறையைச் சொல்லித் தந்தது யவனிகாதான். கவிதையை என்னில் பித்துநிலையாகக் கொள்ளச் செய்ததில் யவனிகாவுக்கும்  பங்கிருக்கிறது.

யவனிகா ஸ்ரீராம்: கைவிடப்பட்ட உயிர்களின் கவிஞன் - கரிகாலன்

யவனிகாவின் கவிதைபாணி தனித்துவமானது. தமிழ்ச் சமூகத்தின் நனவிலி மனதிலிருந்து தனது கவிதைக்கான சொற்களை எடுத்தாள்பவர் யவனிகா. அவரது கவிதைகள் தீயைப்போலவோ, நஞ்சைப்போலவோ, நோய்க்கிருமிகளைப் போலவோ அதிகாரத்தின் மீது பரவக்கூடியவை. தனது கவிதையை ஒரு நச்சுக்கோப்பையாக மாற்றி, கடவுளின் முன் வைப்பவர் அவர். தரித்திரர்களை, அற்பர்களை, குள்ளர்களை, சபிக்கப்பட்டவர்களை, சூதாட்டக்காரர்களை, பாலியல் தொழிலாளர்களை, திருடர்களைப் பாடும் ஒரு கவிஞனிடம் வேறு எதைத்தான் நாம் எதிர்பார்க்க முடியும். யாரும் கண்திறந்து பார்க்க விழையாத மனிதர்களை எழுதுவதற்கு, வழக்கமான மத்தியதர வர்க்கத்தின் மொழி யவனிகாவுக்குப் போதுமானதாக இல்லை. நிலவுடைமைச் சமூக அமைப்பில் வெகுகாலம் ஊறிய ஒரு மொழியை விடுத்து, நவீன சமூகத்தைப் பாடுவதற்கான ஒரு புதிய மொழியை யவனிகாவே

யவனிகா ஸ்ரீராம்: கைவிடப்பட்ட உயிர்களின் கவிஞன் - கரிகாலன்

நிர்மாணிக்கிறார். அது கெட்டிதட்டிப்போன பழைய மதிப்பீடுகளிலிருந்து கவைக்குதவாத போலி அறங்களிலிருந்து தன்னை உதறிக்கொண்ட மொழி.

யவனிகா, அண்ணன் கோணங்கியைப் போலவே ஊர்சுற்றி அலையும் விருப்பம் கொண்டவர். அவரோடு சில பயணங்களில் நானும் இணைந்திருக்கிறேன். இந்தப் பயணங்களின் வழி செல்மா பிரியதர்ஸன், தேவேந்திர பூபதி, சுதீர் செந்தில், லிபிஆரண்யா, ரமேஷ் பிரேதன், மாலதி மைத்ரி, லீனாமணிமேகலை என நிறைய நண்பர்களோடு இணையவும் உரையாடவும்வாய்ப்புகளைத் திறந்துவைத்தார் யவனிகா.

கவிஞர்கள் பூடகமானவர்கள்.  மைய வாழ்முறையிலிருந்து விலகியவர்கள். உலகத்தையே குடும்பமென எண்ணி குடும்பத்துக்கு வறுமையைத் தந்தவர்கள். ஆனாலும், யவனிகாவின் குடும்பம் அவரின் இயலாமைகளோடும் வெகுளித்தனத்தோடும் அவரை ஏற்றுக்கொண்டது. யவனிகாவின் மகன் ஊர்சுலா ராகவும் ஒரு கவிஞன்.தந்தையின் கவிதைமையை ரசிக்கிற, நேசிக்கிற மகன். கவிதை இயக்கம் கவிஞனுக்குத் துயரத்தையே தரும் எனத் தெரிந்தும், யவனிகா தனது மகனைக் கவிதையின் பக்கம் ஊக்குவித்தார். யவனிகா இயல்பாகவே அளவற்ற விடுதலை மனம்கொண்டவர். ஒருமுறை செல்மா கூறிய சம்பவம் நினைவுக்கு வருகிறது. நள்ளிரவில் செல்மாவின் வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறார் யவனிகா. செல்மாவும் அவரது மனைவியும் கதவைத் திறந்திருக்கிறார்கள். இருவரும் பள்ளி ஆசிரியர்கள். அளவில்லாமல் மதுவருந்தி நெகிழ்ந்திருந்த யவனிகா, அவர்களின் காலில் விழுந்து “பள்ளிக்கூடத்தில உங்ககிட்ட படிக்கிற பிள்ளைகளை ஃபெயில் பண்ணிறாதீங்கப்பா” எனக் கெஞ்சியிருக்கிறார். இந்தப் பித்தே யவனிகாவுக்குத் தமிழ் நிலத்தில் காணக்கிடைக்காத காட்சிகளைக் கவிதைகளில் கொண்டுவந்து சேர்க்கிறது.

யவனிகா ஸ்ரீராம்: கைவிடப்பட்ட உயிர்களின் கவிஞன் - கரிகாலன்

வனிகாவின் கவிதைகள் ஒருவரைக் குற்றச்செயல்பாடுகளின்பால் நகர்த்துபவை அல்லது தூண்டுபவை. வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஸ்தூலமாக ஆண்டபோது, காந்தியின் அகிம்சையே குற்றச் செயல்பாடாகத்தான் வெள்ளையர்களுக்குத் தோன்றியது. கவிதையும் ஒருவித ஒத்துழையாமை இயக்கம்தான். நவீன தாராளமயமும் உலகமயமும் தொழில்மயமும் இங்கு மனிதர்களை நாகரிகத்தின் உச்சத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறதென்றால், இங்கு கறுப்புச் சட்டங்கள் ஏன், சிறைச்சாலைகள் ஏன், ராணுவங்கள் ஏன், நவீனரக போர் விமானங்கள் ஏன், இவ்வளவு தற்காப்புச் சாதனங்களைக் கொண்டிருந்தும் ஏகாதிபத்திய அரசுகள் தங்கள் சிவிலியன்களைக் கண்காணிப்பின் வளையத்தில் வைத்திருப்பது ஏன்? இந்திய அரசு, அமெரிக்காவைக் கேட்டுத்தான் எதையும் செய்யும் என்றால், இங்கே நாம் சுதந்திரமாகத்தான் இருக்கிறோமா? நமது தேசத்துக்கு இறையாண்மை என்ற ஒன்று இருக்கிறதா... இதைத்தான் யவனிகாவின் கவிதைகள் வெவ்வேறு நுட்பங்களில் கேள்விகளாக முன்வைக்கின்றன. இங்கு, படித்தவனின் நாகரிகம், கார்ப்பரேட்டின் நாகரிகம், நடுத்தரவர்க்கத்தின் நாகரிகம் என்பனவெல்லாம் உண்மையில் என்ன? எதிர்த்துப் பேசாதது, அடங்கிப்போவது,  மந்தையில் சங்கமிப்பது, அரசாங்கம், அதிகாரம், அமெரிக்கா காட்டும் கடவுளைத் தொட்டுக் கும்பிடுவது, கொடுக்கும் கோழியை, குளிர்பானத்தைச் சுவைப்பது, காட்டும் சினிமாவைப் பார்ப்பது... இப்படி, தகவமையத் தெரிவதே நாகரிகமாகக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், யவனிகாவின் கவிதைகளோ விரையும் தங்க நாற்கரச் சாலைகளுக்காகப் பிடுங்கி எறியப்பட்ட மரங்களை, நிலங்களை, ஏழையரின் கண்ணியத்தை எண்ணிக் கவலைப்படுபவை. இப்படி, வெகுமக்களின் கண்ணீரைப் பிடுங்கி, யாரோ சிலரின் சொகுசுக்காகச் செய்த சமகால வாழ்வின் மீது சதா கேள்விகளைத் தொடுப்பவை.

யவனிகா ஸ்ரீராம், கடந்த 25 ஆண்டுகளாகக் கவிதை எழுதிவரும் நீண்ட இயக்கத்துக்குச் சொந்தக்காரர். `இரவு என்பது உறங்க அல்ல’, ‘கடவுளின் நிறுவனம்’, ‘சொற்கள் உறங்கும் நூலகம்’, ‘திருடர்களின் சந்தை’ ‘தலைமறைவு காலம்’ போன்ற இவரது தொகுப்புகள் தமிழில் பெரிதும் அதிர்வலைகளை உருவாக்கியவை. யவனிகா, தான் வாழும் காலத்தைக் குரூரமாக, புதிராக தனது கவிதைகளில் விரித்துவைக்கிறார். அதனால்தான், யவனிகா இந்தச் சமூகம் கைவிட்ட மனிதர்களை, இந்தச் சமூகத்தின் நீதிகளைக் கைவிட்ட மனிதர்களைப் பாடுபவராகத் திகழ்கிறார். அவருடைய கவிதைகள் இந்தச் சமூகத்தின் விடுதலைக்கான கெட்ட நிமித்தங்களை அறிவிப்பவை. நிரந்தரமான ஆன்மிக விடுதலை என்பது பாசாங்கு. அன்றன்றைய கேளிக்கைகளைப் பாடுவதே நவீனத் தேவையும் மாற்றும் ஆகும். நீண்ட யுத்தங்களைக் கவியால் மனிதர்களுக்குப் பழக்க முடியாது. சின்னச்சின்ன மீறல்களுக்கு, துரோகங்களுக்கே மனிதர்களைப் பழக்க முடியும். அதிகாரத்தின் பீரங்கிகளுக்கு எதிராக, நமது கோமாளிக் குல்லாக்களை உயர்த்திப் பிடிப்பது அல்லது நமது உள்ளாடைகளைத் தூக்கி வீசுவது... இதுவே நமது அதிகார எதிர்ப்புமுறைகளாக அமையும். `ஊர் சுற்றுவதுதான் ஒரு மனிதனின் இறுதி விடுதலையாக முடியும்’ என ஒரு கவிதையில் கூறியிருப்பார். இது, யவனிகாவின் வாழ்முறையும்கூட. ஒரு நாடோடியின் மனநிலையில் இருக்கும் அவரது கவிதைகள், மேலைநாடுகளின் ஜிப்ஸி பாடல்களை ஒத்தவை. அடுத்தடுத்த வரிகளில் தர்க்கத்தின் தொடர்ச்சி இல்லாமல், தொடர்ச்சி அறுபட்ட நினைவுகளால் வரையப்பட்ட கொலாஜ் ஓவியங்களை ஒத்திருப்பவை. இதுவே இந்தக் கவிதைகளின் விசேஷமும்கூட. பித்துநிலையும் தெளிவின்மையும் மயக்கமும் கலந்த இவரது கவிதைகள் முற்றிலும் புதிய சூழலை, புதிய மனிதர்களைப் பாடுபவை. தமிழ்க் கவிதைகளை உலகக் கவிதைகளோடு வைத்து வாசிக்கக்கூடிய நிலையை உருவாக்கிய சமகாலக் கவிஞர்களுள் யவனிகா முக்கியமானவர்.

ஆனாலும், அவரது கவிதை இயக்கத்தைச் சமகால தமிழ்ச் சூழல் சரியான வகையில் அங்கீகரிக்கவில்லை என்றே கருதுகிறேன்.முக்கியமான விருதுகள் எதுவும் அவருக்கு வழங்கப்படவில்லை. எந்தக் குழுவோடும் தன்னை இணைத்துக்கொள்ளாமல் ஒரு உதிரிபோல அவர் இயங்கிவரும் தன்மை, யாரோடும் சமரசமின்றி கடுமையான விவாதங்களை மேற்கொள்ளும் அவரது சுபாவம் போன்றவையும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்த நிலையில்தான்   கவிஞர் தேவேந்திரபூபதி, செல்மா போன்றோரோடு பேசிக்கொண்டிருந்த போது, `களம்புதிது விருது’ யவனிகாவுக்கு வழங்கலாம் எனப் பரிந்துரைத்தார்கள். அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி.

யவனிகா ஸ்ரீராம்: கைவிடப்பட்ட உயிர்களின் கவிஞன் - கரிகாலன்

வனிகா ஒரு நவீனச் சித்தன். அவரது கவிதைகள், மிக சுயேச்சைத்தன்மை கொண்டவை, கட்டற்ற விடுதலையை யாசிப்பவை, பிரபஞ்சம் தழுவிய பார்வை விரிப்பும் விடுபட்டநிலையும் இந்தக் கவிதைகளின் அடிநாதமாகத் தொடர்ந்து வருபவை. வெகுசன நம்பிக்கைகளை, அபிலாஷைகளை உடைத்து, அவற்றுக்குள் இருக்கும் பொய்மையைக் காட்டுபவை. மிக முக்கியமாக இந்த மனோபாவம் ஒரு கவியின் வாழ்வைப் பலி கேட்பது. தனது எழுத்தில் தன்னை எரித்துக்கொள்பவனே அசல் கவி. தன்னை அவ்வண்ணம் எரித்து எரித்து, தனது கவிதைக்கு ஒளிசெய்பவர் உண்டெனில், அதில் யவனிகாவும் ஒருவர். யவனிகாவின் கவிதை மெய்யியலை அவரது ஒவ்வொரு கவிதையிலும் உணர முடியும். ஒரு நிலம் தனது விளைச்சலில் பதர்களைத் தராமலிருக்க முடியாது. ஆனால், ஒரு தேர்ந்த விவசாயி தனது தானியங்களின் பதர்களை விலக்கியே சந்தைக்குக் கொண்டு வருகிறான். ஒருவேளை யவனிகாவின் மோசமான கவிதைகளை அவரது குப்பைத் தொட்டியில் காண முடியுமோ என்னவோ, நிச்சயம் அவரது தொகுப்பில் காண முடியாது. யவனிகாவின் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை ‘இந்த வருடம் மழை குறைவு’. இந்தக் கவிதை ஆண்-பெண் உறவுக்கும், கணவன் மனைவி உறவுக்குமுள்ள இடைவெளியின் நுட்பத்தைப் பேசக்கூடியது. நமது தமிழ்க் குடும்ப அமைப்பைப் பகடி செய்யக்கூடியது. குடும்பத்தில் ஒரு பெண்ணின் பாலியல் தேர்வு என்பது தேவை சார்ந்ததா... மதிப்பீடு சார்ந்ததா? என்பதை அழகாகப் பேசும், ஆழமான விவாதத்துக்கு அழைத்துச் செல்லும் கவிதை இது. அகப் பாடல்களின் ஒழுங்குகள் அமைந்து நின்று, மீறலைப் பாடும் கவிதை. இந்தக் கவிதையின் பின்னணியில் காலமும் திணை மரபும் கச்சிதமாக இயங்கும்.

வனிகாவின் கவிதைகளில் இருவிதமான அரசியல்களைக் கவனிக்கலாம். மேற்குறிப்பிட்ட கவிதைப் பண்பாட்டு அரசியலைப் பேசக்கூடிய கவிதை. அதாவது, நுண் அரசியலை விவாதிக்கக்கூடியது. அதேசமயம், பெருவெளி அரசியலையும் யவனிகா பாடுபொருளாக்கத் தவறுவதில்லை. ஏகாதிபத்தியம், எண்ணெய் வள நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதை, தனது ஆயுதங்களின் சந்தைகளாக உலக நாடுகளை மாற்றுவதை, விடுதலையை வன்முறையாகப் பார்ப்பதை, மூன்றாம் உலக நாடுகளின் மீது அது திணிக்கும் சூழலியல் அழிவை மிக மூர்க்கமாக யவனிகா பாடுகிறார். யவனிகாவின் கவிதைகள், கவித்துவ அழகைக் கொண்டிருந்தாலும் அவை உரத்த குரலுடையவை. திசைகளைப் பற்றச் செய்யும் தீரமுடையவை. படிப்பவர்களிடம் அளவற்றத் துயரை, கலவரத்தை, மனக்கிலேசத்தை உருவாக்குபவை. அதன்வழி, வாசக மனதில் சுரணையை உருவாக்குபவை. கவிதை வாசிப்பு என்பது இன்ப விழைவன்று. அது நிம்மதியின்மையை, சித்ரவதையை, வாதையை உருவாக்கும் செயல். நிறுவனங்களின் வழி செம்மைப் படுத்தப்பட்ட, சமன்படுத்தப்பட்ட மனநிலையைக் குலைக்கக்கூடிய செயல். நம்மிடமிருக்கும் பற்றாக்குறைகளை உணரவைத்து நம்மை நிரப்பிக்கொள்ள வைக்கும். இவ்வண்ணமாக கவிதை வாசிப்பின் முழுமையான செயலூக்க அனுபவத்தை யவனிகாவின் கவிதைகள் வாசகனுக்கு அளிப்பவை. யவனிகாவைப் போன்றவர்கள் சமரசத்தின் அனுகூலங்களை விரும்பாதவர்கள். `எழுத்து கொல்லும் என்கிறார்’ புதுமைப்பித்தன். யவனிகாவின் கவிதை வெல்லும் என  நம்புவோம்.