
படங்கள் : பா.காளிமுத்து
“நேரடியாக இங்கிருந்தே
அமெரிக்காவிற்கு விமானம்”
விளம்பரப் பலகையின் நிழலில்
நின்றுகொண்டிருக்கிறீர்கள்
இந்த மதியத்தை எப்படிக் கடப்பது என்று
தீர்மானிக்க முடியாமல்.
நடைமுறை வாழ்வின் வியர்வையும் கசப்பும் தன்னுள்கொண்ட கவிதைகளின் தொகுப்பான ‘என்றுதானே சொன்னார்கள்’ வழியாக அதிகம் அறியப்பட்டவர் சாம்ராஜ்.
‘கட்டபொம்மனின் நினைவுச் சின்னத்துக்கு சற்று தூரத்தில் தங்க நாற்கரச் சாலையில் தடதடத்துப்போகும் ஆங்கில எழுத்துகள்கொண்ட கன்டெய்னர் லாரிகள்’, ‘இளம் விதவையின் வேட்கையைச் சாக்கடையை அள்ளி ஊற்றி அணைக்கும்’ அதி யதார்த்தக் காட்சிக் கவிதைகளுக்குச் சொந்தக்காரரான சாம்ராஜின் புத்தக அறைக்குள் நுழைந்தோம்.

“மதுரைதான் எனக்குச் சொந்த ஊர்.தல்லாகுளத்தில்தான் வளர்ந்தது. சித்தி, சித்தப்பா இருவருமே வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள். அப்பா வழியில் அத்தையும் வாசிக்கும் ஆர்வம் உடையவர். தல்லாகுளம் கிளை நூலகத்தின் முதல் உறுப்பினர் அவர். பாட்டி வீட்டில்தான் வளர்ந்தேன். அப்படி வளரும் பிள்ளைகளுக்கே உரிய ஒருவித அநாதைத்தனம், தனிமை எனக்கும் இருந்தது. அந்தத் தனிமையைப் போக்கும் ஒன்றாக, கைக்கெட்டிய தூரத்தில் இருந்த புத்தகங்களே கைக் கொடுத்தன. அதன் பின்னர், பதின் வயதுகளில் யாரைச் சந்திக்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்களோ, அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. ஆம்... இடதுசாரிகளேதான். அவர்கள் மூலமாகத் தீவிரமான வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டது. மேலும், புத்தகம் என்பது வாசிப்புக்கானது மட்டுமல்ல, சேகரிப்புக்கானவை எனத் தெரியவந்தது. குறிப்பாக, தத்துவார்த்தப் புத்தகங்களைச் சேகரித்துவைப்பதன் மூலமே தர்க்க விவாதங்களுக்கானக் குறிப்புகளை எடுக்க முடியும் என அறிந்ததும் அந்த வயதில்தான்.
1989-ம் ஆண்டு, அன்னம் பதிப்பக வெளியீடான ‘ரஷ்யப் புரட்சியின் இலக்கிய சாட்சியம்’ என்கிற புத்தகம் வெளியானது. அன்றைக்கு அதன் விலை, 75 ரூபாய். இன்றைய மதிப்பில் 2,000 ரூபாய்க்கும் அதிகம். ஆனால், கையில் இருந்த காசை எல்லாம் சேர்த்து சௌராஷ்ட்ரா தெருவில் இருந்த அன்னம் கடையில் நுழைந்து அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு, வீட்டுக்கு நடந்துபோன பொழுதை எப்போதுமே மறக்க முடியாது. இன்றைக்கும் கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக என்னுடன் அந்தப் புத்தகம் பயணப்பட்டுவருகிறது. என் முதல் சேகரிப்பாகவும் முக்கியமான புத்தகமாகவும் அதைக் கருதுகிறேன்.
மதுரையில் பழைய புத்தகக் கடைகள் நிறையவே உண்டு. மதுரை ஜங்ஷனுக்கு நேர் எதிரே ராணி மங்கம்மாள் சத்திரத்தின் வாசலில் சிறந்த புத்தகங்களைக்கொண்ட பழைய புத்தகக் கடைகள் இருந்தன. அதில் ஒரு கடையில் மாக்ஸிம் கார்க்கி சிறுகதைகளின் முழுத்தொகுப்பையும் அண்டன் செக்கோவின் புத்தகங்களையும் வாங்கினேன். ‘நியு சினிமா’ தியேட்டர் அருகேயும் பழைய புத்தகக் கடைகள் இருந்தன. இப்போது அங்கெல்லாம் கடைகள் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு கடைகள்கூட கல்வி சம்பந்தப்பட்ட பழைய புத்தகங்களைத்தான் விற்கின்றன.
தேடித்தேடி வாசிக்கத் தொடங்கியிருந்த நாட்களில் ரஷ்ய அரசினுடைய நடவடிக்கை ஒன்றின் பிரதிபலிப்பாக, இங்கு, ‘என்.சி.பி.எச்’ பதிப்பகக் கடைகளில் சோவியத் புத்தகங்கள் மிகமிக மலிவாகக் கிடைத்தன. குறிப்பிட்ட காலப் பகுதியில் வாங்காவிட்டால், சிவகாசி, கோவில்பட்டி தீப்பெட்டி

கம்பெனிக்காரர்கள் வந்து மொத்தமாக வாங்கிச் சென்றுவிடுவார்கள் என்ற வதந்தியும் பரவியது. இதனால், அங்கே இங்கே எனக் காசு சேர்த்து ‘க்ளியரன்ஸ்’ சேல்ஸ்போல விற்கப்பட்ட புத்தகங்களை ஐந்து, ஆறு என வாங்கிவைக்கத் தொடங்கினேன். டால்ஸ்டாய், புஷ்கின் என வாரியெடுத்து வந்தேன். அதிக புத்தகக் காட்சிகளையும், மலிவு விலை அறிவிப்புகளையும் செய்து தமிழில் பலருக்கும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியதில் என்.சி.பி.ஹெச் நிறுவனத்துக்கு முக்கியப் பங்கு இருக்கிறது படித்துவிட்டு கேள்விகேட்கத் தொடங்கியிருந்த காலகட்டத்தில், தோழர்களின் சந்திப்பு ஒன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். அங்கேதான் முதன்முதலில் புத்தகங்களை அடுக்கி ஒழுங்காகவைத்திருந்ததைப் பார்த்தேன். படித்த பின்னும்கூட புத்தகங்களில் நிறைய இருக்கின்றன என்ற எண்ணத்தை அது விதைத்தது. அன்றே வீட்டில் ஒரு காலி அட்டைப்பெட்டியில் புத்தகங்களை அழகாக அடுக்கத் தொடங்கினேன். அதுவரை வீட்டில் எவ்வளவு பெரிய புத்தகமாக இருந்தாலும் ‘படிச்சு முடிச்சுட்டியா’ எனக் கேள்வியைக் கேட்டுவிட்டு எடைக்குப் போடும் பட்டியலில் சேர்த்துவிடுவார்கள். ஒருகட்டத்தில் ‘இந்தப் புத்தகக் கிறுக்கு இவனுக்குத் தெளியாது’ என விட்டுவிட்டனர்.
என்னைச் சுற்றி இருந்தவர்கள் இடதுசாரித் தோழர்கள் என்பதால், ரஷ்ய இலக்கியமே அதிகம் வாசிக்கச் சாத்தியப்பட்டது. அதில் கார்க்கி, செக்காவ், டால்ஸ்டாய், அலெக்ஸி டால்ஸ்டாய் என விருப்பமானவர்களின் பட்டியல் நீண்டது. இவர்களுக்கு முன் தமிழில் சுஜாதா போன்றவர்கள் ஏற்கெனவே அறிமுகமானவர்களாகத்தான் இருந்தனர். இவர்களைத் தாண்டி நாஞ்சில் நாடன், கி.ராஜநாராயணன், வண்ணதாசன் போன்றவர்கள் அறிமுகமானார்கள். வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ படித்து அதன் பாதிப்பில் உடனே சென்னை வந்து அவரைச் சந்தித்தது போன்றவை ஒரு பக்கத்தில் நடந்துகொண்டிருந்தது. அதே காலகட்டத்தில்தான் ‘தாகம்’ வெளியீட்டில் ‘ரப்பர்’ வெளியானது. அதன் முதல் பிரதிகூட என்னிடம் இருக்கிறது. ஜெயமோகன் அதில் பாரதிராஜாவின் கதாநாயகன் ராஜா போல் ஒடிசலாக இருப்பார். ரப்பர் ஒரு புதிய நடையைக் கொடுத்தது. அந்தப் புதிய ஆள்களில் நாஞ்சில் நாடன் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தினார். தீவிர இடதுசாரிகளுடன்தான் சிநேகிதம் என்பதால் நாஞ்சில் நாடன் பற்றி கேட்டபோது, ‘படிச்சுப் பாருங்க தம்பி’ எனப் பெரிய விருப்பம் இல்லாமலும் அதேநேரம் மறுக்காமலும் பதில் சொன்னார்கள். அதன் பின்னர் கார்க்கியும் இளவேனிலும் இன்குலாப்பும் என்னை ஆக்கிரமித்தனர். இன்குலாப்பின் மேற்கோள்களை அக்கௌன்டன்சி நோட்டில் எழுதிவைத்துக்கொண்டு பள்ளிக்குப் போகும் அளவுக்கு, அவை ஈர்ப்பை ஏற்படுத்தின. அதுபோலவே இளவேனிலின் ‘கவிதை குறித்தான கவிதா’ ‘ஆத்மா என்றொரு தெருப்பாடகன்’

‘25 வெண்மணி தெரு’ நூல்களும் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தின. பின்னர், சிறிது சிறிதாக நவீனக் கவிதைகள் நோக்கி நகர்ந்து, கல்யாண்ஜி, கலாப்ரியா, மனுஷ்யபுத்திரன் என வந்துசேர்ந்தேன்.
கியோர்கி மார்க்கவ் எழுதிய ‘சைபீரியா ஓட்டம்-காத்தியா’ பரீஸ் வஸீலியெவ் எழுதிய ‘அதிகாலையின் அமைதியில்’ போன்ற புத்தங்களைத் தேடி அலைந்தேன். தீவிர தமிழ்த்தேசிய நண்பர் ஒருவரிடம் இருப்பதாக அறிந்து அவரிடம் புத்தகங்களைப் படிக்கக் கேட்டேன். அவரை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடத்தில் தேடிப் பிடிக்க வேண்டும். சந்திப்பு இடம் ஒன்றைச் சொல்லுவார். பின்னர், அதை மாற்றுவார் இப்படியாக என்னைச் சோதித்து ஒருநாள் கொடுத்தும்விட்டார். ஆனால், ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் கொடுத்தார். ‘குறிப்பிட்ட கடையில்தான் ஜெராக்ஸ் காப்பி எடுக்க வேண்டும். இத்தனை மணி நேரத்துக்குள் எடுத்துவிட்டுக் கொடுத்துவிட வேண்டும்’ எனப் பல நிபந்தனைகள். அந்தப் புத்தகங்களோடு சரி, அதன் பின்னர் அவரிடம் நான் போகவில்லை.
‘மரணத்துள் வாழ்வோம்’ ஈழக் கவிஞர்கள் 42 பேரின் 81 கவிதைகள் கொண்ட புத்தகம். ஈழத்திலிருந்து வெளியாகியிருந்தது. அதைப் பற்றி கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், கிடைப்பதற்கான வழி தெரியவில்லை. அப்போது நான் ஜெராக்ஸ் கடையில் வேலைபார்த்துக்கொண்டிருந்தேன். தமிழகத்தின் முக்கியமானத் தலைவர் ஒருவரின் அந்தப் புத்தகம், ஜெராக்ஸ் காப்பி எடுக்கக் கடைக்கு வந்தது. இப்படி என்னைத் தேடி வந்த புத்தகங்களும் உண்டு. பெரிதும் என்னை இன்ஸ்பையர் செய்த புத்தகம் அது.
எஸ்.வி.ஆரின் ‘அந்நியமாதல்’ ஒரு கல்லூரியில் இருந்தது. அங்கு ஒரு நண்பரைப் பிடித்து அவரின் நூலக அட்டையில் அந்தப் புத்தகத்தை எடுத்துவந்தேன். ‘திருடன் மணியன் பிள்ளை’ வண்ணதாசனின் ‘எல்லோருக்கும் அன்புடன்: கடிதத் தொகுப்பு’. ஜெயமோகனின் ‘காடு’ ஆகியவை என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகங்கள். ஷங்கரராம சுப்பிரமணியனின் ‘ஆயிரம் சந்தோஷ இலைகள்’, டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு’ ஆகிய புத்தகங்களை வாசகர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.
எனது கீழ்மையிலும் மேன்மையிலும் சுக துக்கங்களிலும் இந்தப் புத்தகங்களோடே பயணித்து வந்திருக்கிறேன். எனது கண்ணீரையும் சிரிப்பையும் அவை அறியும். நான் அவற்றைப் படிப்பதைப்போலவே அவையும் என்னைப் படித்துக்கொண்டிருக்கின்றன என்றே நம்புகிறேன்.” அர்த்தம் நிறைய புன்னகைக்கிறார் சாம்ராஜ்.