
கூத்துக் கலைஞர் ‘ஒம்’ முத்துமாரியின் சலங்கைசந்திப்பு: வெ.நீலகண்டன் - படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்
அப்பா, எனக்கு விட்டுச் சென்ற பெரிய சொத்து, இந்தச் சலங்கைதான். தோழர்கள் விரும்பும் கூத்தாடியாக இன்று எனக்குத் தனியான அடையாளத்தைப் பெற்றுத் தந்திருப்பதும் இதுதான். இடதுசாரி இயக்க மேடையில் அப்பாவுக்குத் தோழர்கள் பரிசளித்த சலங்கை இது. அப்பா தன் வாழ்நாள் முழுவதும் இதை உயிராக மதித்தார்.
அப்பா, விசித்திரமான மனிதர். அவருடன் பழகிய அத்தனை தோழர்களும் அதை அறிவார்கள். அவர் வாழ்ந்த வாழ்க்கையை வேறெவரும் வாழவே முடியாது. கலை, அவரை தன் போக்கில் அலைக்கழித்து எங்கெங்கோ கூட்டிச் சென்றது. கூத்துக்காக, தன் குடும்ப வாழ்க்கையின் பெரும் பகுதியை இழந்திருக்கிறார். மனைவி பிள்ளைகளைப் பிரிந்திருக்கிறார். உறவினர்களால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார். சொத்துகளைப் பறிகொடுத்திருக்கிறார். ஆட்டுக்கறி வியாபாரத்தில் இருந்து பீடி வியாபாரம் வரை அவர் பார்க்காத வேலைகள் இல்லை. எந்த வேலையைச் செய்தாலும் அவரது அன்றாடப் பொழுதுகள் கலையோடுதான் பிணைந்திருந்தன.

அப்பா, அசலான தெருக்கூத்துக் கலைஞர். ஆனால், அவருடையக் கூத்து வடிவம் வித்தியாசமானது. மரபுகளை உடைத்து, தனக்கான கூத்து வடிவத்தை அவரே சுயமாகக் கட்டமைத்துக்கொண்டார். வட மாவட்டங்களில் நிகழ்த்தப்படுவதைப் போல் அல்ல, தென் மாவட்டத் தெருக்கூத்து. வண்ணங்களோ, அலங்காரங்களோ பெரிதாக இருக்காது. கதைதான் நின்று பேசும். கலைஞர்கள் எளிய வேடம் தரித்து, கதை சொல்வார்கள். இடையிடையே கதையோடு ஒன்றி, பாட்டும் ஆட்டமும் நடக்கும். கோமாளி, தன் சேட்டைகளால் மக்களைச் சிரிக்கவைப்பார். நாட்டுப்புற இசைக்கருவிகளின் கட்டற்ற இசை, இரவை உறங்கவிடாமல் செய்யும். கட்டபொம்மன் கதை, அரியலூர் ரயில் விபத்து, தனுஷ்கோடிப் புயல், மதுரைப் பள்ளிக்கூடம் இடிந்த கதை, ஆளவந்தார் கொலை வழக்கு போன்ற நிஜக் கதைகளைச் சொல்லி, ஆடலும் பாடலுமாக மக்களை உணர்ச்சிப் பிரவாகத்தில் ஆழ்த்துவதுதான் எங்கள் பகுதியின் தெருக்கூத்து. சிறுதெய்வக் கோயில் கொடைகள், விழாக்களில்தான் அதிக அளவில் கூத்துகள் நடக்கும். கூத்தாட வரும் கலைஞர்களையும் தெய்வங்களாகப் பாவித்து மக்கள் கைகூப்பித் தொழுவார்கள்.
அப்பா நடத்தும் கூத்து, வெகுஜனக் கலை வடிவத்தைக்கொண்டிருந்தாலும் செவ்வியல் கலையாகவோ, நாட்டுப்புறக் கலையாகவோ அதைப் பிரித்து அடையாளப்படுத்த முடியாது. அந்தச் சூழலுக்கு, அந்த நிமிடத்துக்கு என்ன தேவையோ, அது அவரின் கூத்தில் இருக்கும். நினைத்த நொடியில் ஒரு பாடலைப் புனையும் திறனும், ஒரு கதையை வடிவமைக்கும் திறனும் அப்பாவுக்கு இயல்பிலேயே இருந்தது.
எங்கள் வீட்டில் கலைத்தொழிலில் முன்னோடிகள் யாரும் இல்லை. அப்பாதான் முதல் தலைமுறை. காங்கிரஸ் மேடைகளில்தான் அவரது கலைப் பயிற்சி தொடங்கியது. பிறகு, நேதாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ஆகியோரின் மீது ஆர்வம்கொண்டு அவர்களுக்காகப் பாடல்கள் எழுதி, புத்தகங்கள் போட்டு, மேடைக்கு மேடை கலை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். முத்துராமலிங்கத் தேவர் பேசுவதற்காக வரும் மேடைகளில் தொடக்க நிகழ்வாக அப்பாவின் கலை நிகழ்ச்சி நடக்கும்.
கலையின் மீது இருந்த தாகம் அப்பாவை எதனோடும் ஒட்டவிடவில்லை. அம்மாவோடு கருத்து வேறுபாடு... வேலை செய்த முதலாளிகள் எல்லோரிடமும் பிரச்னை... சொந்தத் தொழில் செய்தாலும், கூத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை அதற்குத் தந்தது இல்லை. இப்படி, சர்வகாலமும் கலையும் களமுமாகவே வாழ்ந்தார் அப்பா. சாவுக்கூத்து முதல், பந்தச் சேர்வை (ராமர் கோயிலில் ஊர்ப்பிச்சை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துபவர்களோடு சேர்ந்து பாடல் பாடியபடியே ஊர் சுற்றுவது) வரைக்கும் எவ்விதப் பாகுபாடும் பார்க்காமல் ஆடிப் பாடித் திரிந்தவர். ‘இடது பக்கமாக’ வாழ்க்கை திரும்பிய பிறகு, அவரது கலைவடிவம் முழுமைபெற்றது. வர்க்கப் பேதங்களும், சமூக அநீதிகளும், தீண்டாமைக் கொடுமைகளும், மதத்தின் பெயரிலான மோசடிகளும் அவரது பார்வைக்குப் புலப்படத் தொடங்கின. அவரது பாடல்களின் முனை கூர்மையானது. பொட்டில் அடித்தாற்போல, சுருக்கென்று தைக்கும் பாடல்களை எழுதினார். கூத்து வடிவத்தைத் தன் கொள்கைக்கு ஏற்றதுபோல மாற்றிக்கொண்டார்.

கட்டபொம்முவாக, வெள்ளையத் தேவனாக, ராஜபார்ட்டாக பல வேடங்களைப் போட்டிருக்கிறார். ஆனால், பெயரைச் சொன்னாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவர் போடும் ‘சுதந்திரக் கிழவி’ வேடம்தான். காலில் சலங்கை சலசலக்க, சிவப்பு வண்ணச் சேலையின் முந்தானையை எடுத்து எடுத்துச் சுற்றியபடி, தன் கனத்த கரகரக் குரலில் அவர் ஆடுவதையும் பாடுவதையும் பார்க்கும்போது, அச்சுஅசல் தெக்கத்திக் கிழவியைப் பார்ப்பதுபோலவே இருக்கும்.
தொடக்கத்தில் பிறரது பாடல்களைத் தேடிப்பிடித்துப் பாடிய அப்பா, காலப்போக்கில் சுயமாக எழுதவும் பழகிவிட்டார். படிப்படியாகக் கூத்தின் மீது அவருக்கு ஈடுபாடு வந்தது. தென்மாவட்டக் கூத்தில், வேடம் கட்டுவது முக்கியமான மரபு. அந்தக் காலத்தில் கலை மேடைகளுக்கு வர பெண்கள் தயங்கியதால், ஆண்களே பெண் வேடம் போட்டு ஆடுவார்கள். பிறகு, அதுவே கூத்தின் கலகலப்பான முக்கிய அம்சமாக மாறியது. அப்பா, கூத்தில் பல வேடங்கள் தரிப்பார். ஆனாலும், அவர் எப்போது கிழவியாக வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.
அப்பாவின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட்டது காங்கிரஸ் மேடைகளில்தான். காங்கிரஸ் மேடைகளில் கட்சிப் பாடல்களைப் பாடுவதோடு போஸ்ட் ஆபீஸ் மீது கல்லெறிவது; தண்டவாளத்தைப் பெயர்த்து எடுப்பது; ‘வந்தே மாதரம்’ பாடியபடி தெருத்தெருவாகச் சுற்றி வருவது என்று போராட்டங்களிலும் அப்பா பங்கெடுத்திருக்கிறார். தாத்தாவுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. ஒரு பக்கம் போலீஸ் அடி, இன்னொரு பக்கம் தாத்தாவின் அடி என்றுதான் அப்பாவின் இளமைக் காலம் நகர்ந்திருக்கிறது.
தாத்தா இறந்த பிறகு, அப்பா சுதந்திர மனிதனாகிவிட்டார். அப்போது எல்லாம் தென் மாவட்டங்களைப் பஞ்சங்கள் வெகுசாதாரணமாகப் பீடித்துக்கொள்ளும். அப்பா, தான் சந்தித்த புண்ணாக்குப் பஞ்சம் பற்றி என்னிடம் கதைகதையாகச் சொல்லியிருக்கிறார். அரிசி, தானியங்களை எல்லாம் கற்பனைகூட செய்ய முடியாதாம். தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் தயாரிக்கும்போது, இறுதியில் மிஞ்சும் புண்ணாக்குதான் அப்போது மூன்று வேளைக்கும் உணவாம். வடைச்சட்டியை அடுப்பில்வைத்து அதில், புண்ணாக்கைப் போட்டு கிண்டிச் சாப்பிட்டால் ருசியாக இருக்குமாம். அப்படிச் சாப்பிட்டு நாள்களைக் கடத்திய காலத்திலும்கூட, அப்பா கூத்தை விடவில்லை. தன் வயது இளவட்டங்களைத் திரட்டிவைத்துக் கொண்டு பாட்டும் கூத்துமாகவே இருந்திருக்கிறார்.
அப்பாவை இடதுசாரி மேடைக்குக் கொண்டுவந்தவர் எஸ்.ஏ.பெருமாள். `கல்குதிரை’யில், அப்பாவைப் பற்றியும், அவர் எழுதிய பாடல்கள் பற்றியும் நீளமான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார் கோணங்கி. அதுதான் அப்பாவுக்கு நவீன இலக்கியவாதிகள் மத்தியில் பெரிய வெளிச்சத்தைக் கொடுத்தது. 1989-ல் தூத்துக்குடியில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டு மேடையில் அவரது கூத்து நடந்தது. அவருடனான ஒரு கலந்துரையாடலும் நடத்தப்பட்டது. அதன் பிறகு, அவர் சங்கத்து ஆளாகிவிட்டார். தமுஎகச-வில் மாநிலக் குழு உறுப்பினராக இருந்தார். கட்சியிலும் பங்காற்றினார்.
அப்பா, தொடக்கம் முதலே தன்னளவில் ஓர் அரசியல் நிலைப்பாட்டுடனே இயங்கினார். சாவுக்கு ஆடினால்கூட தான் சொல்ல வேண்டிய செய்தியை அவர் சொல்லாமல் திரும்பியதில்லை. தேவர் இன மக்கள் அதிகம் உள்ள கிராமங்களில் கூத்தாடும்போது, ஒடுக்கப்பட்ட மக்களைப் பல வழிகளில் முன்னிறுத்திப் பாடுவார். திருவேங்கடம் பக்கமுள்ள மகாதேவர்பட்டி என்ற கிராமத்தில் நிகழ்ச்சி நடத்தும்போது, முடிவெட்டும் தொழிலாளியாகப் பாத்திரமேற்ற அப்பா, தன் சமூகத்தை மேல்ஜாதியினர் இழிவுபடுத்திப் பேசுவதாகச் சுட்டிக்காட்ட, நாட்டாமை கூத்தை நிறுத்தச் சொல்லி, கிராமத்தைவிட்டு விரட்டியிருக்கிறார். இதுபோல நிறைய நிகழ்வுகள் அப்பாவின் பாதையில் உண்டு. அவரது பாடல்களை தமுஎகச புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. சிறு வெளியீடுகளாகவும் ஏராளமாக வந்திருக்கின்றன.
முற்போக்கு இலக்கிய மேடைகளுக்கு வந்த பிறகு அப்பா இன்னும் தீவிரமாகச் செயல்பட்டார். சமகால அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாகக்கொண்டு கூத்துகளை வடிவமைக்க ஆரம்பித்தார்.
“வறுமை நமக்கு மாமன் முறை

சிறுமை நமக்கு தம்பி முறை
பொறுமை நமக்கு அண்ணன் முறை
பசியும் பட்டினியும் பிள்ளைகள் முறை
எத்தனை சொந்தங்கள்
நமக்கிருக்குது பாத்தீகளா...
நல்ல ஏரைப் பிடித்து உழும்
தங்கக் கம்பிகளா...”
என அவர் பாடிய பாடல்கள் தோழர்களை வசீகரித்தன.
அப்பாவின் மேல் அவரது கூத்துகளுக்காக பல வழக்குகள் போடப்பட்டன. பிராமணராக வேடம் போட்டுக்கொண்டு, அவர்களது செயல்பாடுகளை விமர்சனம் செய்து நடித்ததற்காக சாத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி முன்பு அப்பா ஆஜரானார். “நீ பிராமணர்கள் மனம் புண்படும்படி கூத்தாடவில்லை என்று நிரூபிக்க முடியுமா?” என்று நீதிபதி கேட்டார். “அய்யா எனக்கொரு வாய்ப்புக் கொடுங்கள். உங்கள் முன்னால் நான் அந்தக் கூத்தைப் போடுகிறேன். அதைப் பார்த்துவிட்டு நீங்களே முடிவுக்கு வாருங்கள்...” என்று அப்பா வெள்ளந்தியாகச் சொல்ல, நீதிபதி சிரித்துவிட்டார். “இனிமேல் பிராமண வேடம் போட்டு, அவர்கள் புண்படும்படி பேசக் கூடாது” என்று எச்சரித்து வழக்கில் இருந்து விடுவித்தார்.
தன் 65 ஆண்டுகால கலை வாழ்க்கையில் சுமார் 30 ஆண்டுகள் இடதுசாரி மேடைகளை நிறைத்திருக்கிறார் அப்பா. தமுஎகச மேடைகள் மட்டுமின்றி சி.பி.எம் மேடைகளிலும் கூத்து அரங்கேறியது. ஒருநாளும் ஓய்வின்றி இறுதி வரை ஓடிக்கொண்டே இருந்தார். பற்கள் கொட்டி வார்த்தைகள் வழுக்கிக்கொண்டு ஓடிய தருணங்களில்கூட, மேடைகளை அவர் தவறவிடவில்லை.
அப்பா வெறும் கூத்துக்கலைஞர் மட்டும் அல்ல, களப்போராளியாகவும், கலை இலக்கியச் செயற்பாட்டாளராகவும் இயங்கினார். தென்தமிழகக் கூத்துக் கலைஞர்களை எல்லாம் ஒருங்கிணைத்து அவர்களின் நலனுக்காக நிறையப் போராடியிருக்கிறார். கலைக்கெனத் தங்களை முற்றுமுழுதாக அர்ப்பணித்து, ஆதரவற்றுத் தவிக்கும் முதிய கலைஞர்களுக்குப் பென்சன் வாங்கித்தர நடையாக நடந்திருக்கிறார். தமுஎகச நடத்திய கிராமியக் கலைஞர்கள் மாநாட்டுக்கு அடித்தளமாக இருந்து, அவர்களுக்கு எனத் தனி வாரியம் உருவாகவும் துணை நின்றார்.

அப்பாவின் பங்களிப்பு பற்றி இடதுசாரித் தளங்கள் தாண்டி பெரிதாக எங்கும் பதிவாகவில்லை. நாடக இயக்குநர் முருகபூபதி ‘அனன்யா’ வெளியீடாக அப்பாவின் சுயசரிதை நூலைக் கொண்டுவந்ததும், ‘புத்தகம் பேசுது’ இதழில் ச.தமிழ்ச்செல்வன் அப்பாவைப் பற்றி நீண்ட நேர்காணலைக் கொண்டுவந்ததுமே குறிப்பிடத்தகுந்தப் பதிவுகளாக இருக்கின்றன.
மதுரையில், `ஓம்’ பெரியசாமி என்று ஒரு நாட்டுப்புறக் கலைஞர் இருந்திருக்கிறார். அப்பாவுக்கு அவர் நிறையக் கற்றுத் தந்திருக்கிறார். அவருக்கான நன்றிக்கடனாகத்தான், முத்துமாரி என்ற தன் பெயருக்கு முன்னால் `ஓம்’ சேர்த்து `ஓம் முத்துமாரி’ என்று மாற்றிக்கொண்டார் அப்பா.

இன்னொரு முக்கியமான விஷயம், நானறிந்து, அப்பா மேக்கப்புக்குப் பயன்படுத்தியது, சாணத்தூள் தான். இளம் பசுங்கன்றின் சாணத்தை வரட்டியாகத் தட்டி, எரித்து, அந்தச் சாம்பலை ஒரு வெண்துணியில் வைத்து கட்டிக்கொள்வார். அதை, முகத்தில் சீராகத் தட்டினால் பவுடர்போல ஆகிவிடும். முற்போக்கு மேடைகளுக்கு வந்த பிறகும்கூட இதையே பயன்படுத்தினார். முகத்துக்கு எவ்விதச் சேதாரமும் தராத அரிதாரப் பவுடர் அது. செலவும் இல்லை. நானும் நெடுங்காலம் அதைத்தான் பயன்படுத்தி வந்தேன்.
சாணத்தூள் தவிர, சிவப்பு, வெள்ளைப் பொட்டுகளும் கண் மையும்தான் அவருடைய மேக்கப் பொருள்கள். முன்பு எல்லாம் நத்தை ஓடுகளைக் கோர்த்துச் சலங்கையாகக் கட்டிக்கொள்வார். அதற்கென அவரும் அவருடைய சகாக்களும் கண்மாய்களுக்குப் போய் இளம் நத்தைகளைப் பிடித்துவருவார்கள். லாகவமாக உள்ளிருக்கும் உயிரை எடுத்து வீசிவிட்டு, ஓடுகளைக் காயவைத்துக் கோப்பார்கள். அந்த நத்தைச் சலங்கை, அப்பா ஆடுகிற ஆட்டத்துக்கு ஒரு கூத்துக்குத்தான் தாங்கும். பிறகு, புது நத்தைச் சலங்கை உருவாகும். இதில் பெரிய செலவென்பதும் ஒன்றும் இல்லை. ஒலிப்பெருக்கி இல்லாதக் காலத்தில் நத்தைச் சலங்கையின் சத்தம் மேடையில் வித்தியாசமாக ஒலிக்கும். அதைக் கேட்டு தொலைதூர மக்கள் எல்லாம் கூத்துக்களத்துக்கு வருவார்கள்.
இறுதிக் காலத்தில் எனக்கு ஆசிரியராக இருந்து நிறையப் பயிற்றுவித்தார். அவரால் இயங்க முடியாத நிலை வந்தபோது சலங்கையையும், ஆடைகளையும், மேக்கப் பொருள்களையும் என் கையில் கொடுத்து, தோழர்களுக்கு அறிமுகமும் செய்துவைத்தார். தொடக்கத்தில், கலையில் பற்றற்று, பீடி வியாபாரியாக இருந்த நான், அப்பாவுக்குப் பிறகு இடதுசாரி மேடைகளில் கூத்துக் கலைஞனாக ஏறினேன்.
அப்பாவின் அளவுக்கு நான் புலமை உள்ளவன் இல்லை. அவரது இடத்தை என்னால் நிரப்ப முடியாது. ஆனால், இந்தச் சலங்கையை காலில் கட்டியவுடன் அவரே எனக்குள் இறங்கிவிட்ட உணர்வு வரும். இன்றைக்கும்கூட, கூத்து தொடங்கி நிறைவுறும் வரைக்கும் நான் சுய நினைவற்றவனாகவே இருக்கிறேன். இந்தச் சலங்கைக்குள் அப்பாவின் ஆத்மா உறைந்திருக்கிறது. ஆம், நான் அப்படித்தான் நம்புகிறேன்.