Published:Updated:

வெள்ளி நிலம் - 10

வெள்ளி நிலம் - 10
பிரீமியம் ஸ்டோரி
News
வெள்ளி நிலம் - 10

ஜெயமோகன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

முன்கதை: இமாச்சலப்பிரதேசத்தின் மலைக் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்த பிட்சுவின் பாடம் செய்யப்பட்ட உடலைத் திருட வந்தவர்கள் பற்றிக் கண்டுபிடிக்க, நோர்பா என்ற சிறுவனுடன் செல்லும் கேப்டன் பாண்டியன், டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் மூலம் சில ஆச்சர்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்கிறான். நரேந்திர பிஸ்வாஸ் அறையில் வைத்திருந்த அரிய ஓவியங்கள் எரிக்கப்பட்டன. எதற்காக ஓவியங்களை எரித்தார்கள் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளும் முயற்சியில் பாண்டியனுக்கு உதவும் நோர்பாவின் நாய் நாக்போ குற்றவாளிகளில் ஒருவனைப் பார்த்துவிடுகிறது. அதனால், அதைத் துப்பாக்கியால் சுடுகிறார்கள். பாண்டியனும் பதிலுக்குச் சுடுகிறான். இனி... 

வெள்ளி நிலம் - 10

பாண்டியனும் நோர்பாவும் காலையிலேயே திக்ஸே மடாலயத்துக்குக் கிளம்பினார்கள். டாக்டர் நரேந்திர பிஸ்வாஸும் உடன் வர விரும்பினார். “இல்லை, நீங்கள் வந்தால் எங்கள் வேலை நடக்காது. நாங்கள் ஒன்றும் அறியாதவர்கள் போல அங்குள்ளவர்களிடம் பேச விரும்புகிறோம்” என்றான் பாண்டியன்.

“நல்லது, நான் இங்கே சில ஆராய்ச்சிகளைச் செய்ய விரும்புகிறேன். சென்று வாருங்கள், சாயங்காலம் பேசுவோம்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

அவர்கள் படி ஏறிச்செல்லும்போது பாண்டியன் நோர்பாவிடம், “நான் அங்கே சிலரிடம் பொதுவாகப் பேசுகிறேன். நாம் அறியவேண்டியது ஒன்றே ஒன்றுதான். அந்த முதிய பிட்சுவின் பின்னணி என்ன? நீ தனியாகச்சென்று அங்குள்ள ஊழியர்கள், காவலர்கள் ஆகியோரிடம் விசாரி. நான் சென்று அங்குள்ள பிட்சுக்களிடம் விசாரிக்கிறேன்” என்றான்.

“நான் எவரிடம் விசாரிப்பது?” என்றது நாக்போ.

“என்ன சொல்கிறது?” என்று பாண்டியன் கேட்டான்.

“ஒன்றுமில்லை” என்றான் நோர்பா.

நாக்போ கோபத்துடன் நோர்பாவிடம், “ஏன் சொல்வதற்கென்ன? நான்தானே அந்த முதிய பிட்சுவைக் கண்டுபிடித்தேன்?” என்றது. நோர்பா பேசாமல் வந்தான்.

வெள்ளி நிலம் - 10நாக்போ,  “நான் உன்னை மிஞ்சிவிடுவேன் என்று நினைக்கிறாய். நீ பயப்படவேண்டியதில்லை. நாய்கள் எப்போதுமே தங்களைவிட கீழானவர்களிடம் போட்டியிடுவதில்லை” என்றது.

அவர்கள் திக்ஸே மடாலயத்தின் மேல் சென்றதும் தனித்தனியாகப் பிரிந்தனர். பாண்டியன் அங்குள்ள அலுவலகப் பொறுப்பாளராகிய பிட்சுவை அணுகி வணங்கி, “நான் இந்த மடத்திலுள்ள துறவிகளைப்பற்றியும் ஆசாரங்களைப்பற்றியும் அறிய விரும்புகிறேன்” என்றான்.

“நாங்கள் அவற்றை அச்சிட்டு அளிக்கிறோம். நீங்களே வாசிக்கலாமே” என்றார் அவர்.

“இல்லை, நான் அறிய விரும்புவது மிகக் குறிப்பாக சில செய்திகளைப்பற்றி. இந்த மடாலயத்தின் தலைவரை நான் சந்திக்க வேண்டும்” என்றான் பாண்டியன்.

“அவர் ஊரில் இல்லை. தர்மசாலாவுக்குத் தலாய் லாமா வந்திருக்கிறார். அவரைச் சந்திக்கச் சென்றிருக்கிறார். இப்போது பொறுப்பில் இருப்பவரை நீங்கள் சந்திக்கலாம். மூத்த பிட்சுவாகிய ங்வாங்  தார்ட்ஸே(Ngawang Thartse)    ஐம்பதாண்டுகாலமாக இங்கிருக்கிறார்” என்றார் பிட்சு.

பாண்டியன், அவர் அனுப்பிய சிறுவனுடன் சென்றான். ங்வாங் தார்ட்ஸே அவருடைய மிகச்சிறிய அறைக்குள் இருந்தார். அவர், தரையில் விரிக்கப்பட்ட கம்பளத்தின் மேல் அமர்ந்து, குட்டிமேஜையில் வைக்கப்பட்ட தாளில் எழுதிக்கொண்டிருந்தார். பாண்டியனைச் சிரித்தபடி வரவேற்றார். அவர் முகத்தின் அடர்ந்த சுருக்கங்கள் சிலந்திவலைபோல அசைந்தன.

வெள்ளி நிலம் - 10

பாண்டியன் முறைப்படி அவரை     வணங்கினான். “நல்வரவு. அமர்ந்துகொள்ளுங்கள்” என்று அவர் அவனை உபசரித்தார். அவன் வணங்கியபடி, “தங்களிடம் சில ஐயங்களைக் கேட்க வேண்டும்” என்றார்.
 
“சொல்லுங்கள்” என்றார் தார்ட்ஸே.

“இந்தியாவில் புத்தருக்கு ஒரே வகையான சிலைகள்தான் உள்ளன. இங்கே பல வகையான சிலைகள் உள்ளன. அவையெல்லாமே புத்தரின் தோற்றங்களா?” என்றான் பாண்டியன்.

“முதலில் அதற்கு ஒரு சுருக்கமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்” என்றார் தார்ட்ஸே. ‘‘இந்தியாவில் 2,500 வருடங்களுக்கு முன்பு புத்தமதம் தோன்றியது. புத்தர் தன் கருத்துகளை மக்களிடையே கொண்டுசெல்ல உருவாக்கிய அமைப்புதான் சங்கம் என்பது. அது துறவிகளின் சபை. புத்தர் மறைந்த சில ஆண்டுகளில் புத்த சங்கம் இரண்டாகப் பிரிந்தது. ராஜகிருகம் என்னும் நகரில் 500 பிட்சுகள் ஒன்றுசேர்ந்து, ஒரு மாநாட்டைக் கூட்டினர். புத்தர் இருந்தபோது கூடியதுதான் முதல் மாநாடு. இது இரண்டாம் மாநாடு. இது மகா காசியபர் என்னும் புத்தபிட்சுவின் தலைமையில் கூடியது.”

‘‘ஆம் அதைப் பள்ளியில் படித்திருக்கிறேன்” என்றான் பாண்டியன்.

“அந்த மாநாட்டில் பெரிய விவாதம் எழுந்தது. ‘புத்தர் கற்பித்ததை அப்படியே கடைப்பிடித்தால் போதுமா... இல்லை, நாம் அதை சிந்தித்து வளர்த்துக்கொள்ளலாமா?’ அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் என்பவர்கள், தேரவாதிகள் எனப்பட்டார்கள். அதாவது நிலையானவர்கள். நாமே வளர்த்துக்கொள்ளலாம் என்பவர்கள்தான் எண்ணிக்கையில் அதிகம். அவர்கள் தங்களை மகாயானர் என்றார்கள். மகாயானம் என்றால், பெரிய கப்பல். தேரவாதிகளைச் சின்ன கப்பல் என்று சொன்னார்கள். அதாவது ஹீனயானம்.  தேரவாதம் அல்லது ஹீனயானம், உலகில் சில இடங்களில்தான் உள்ளது.”

“இலங்கையில் உள்ளது என்ன?” என்றான் பாண்டியன்.

“இலங்கையில் இருப்பது தேரவாதத்தின் ஒருவகை. மகாயானம் உலகமெங்கும் உள்ளது. மகாயானத்தில் நூற்றுக்கணக்கான பிரிவுகள் பின்னர் உருவாகி வந்தன. அந்தப் பிரிவுகளில் ஒன்றுதான் வஜ்ராயனம். அதுதான் திபெத்தில் உள்ளது” என்றார் தார்ட்ஸே.

“தேரவாதிகள் அல்லது ஹீனயானிகள், புத்தருக்குச் சிலை வைப்பது கிடையாது என்று சொன்னார்கள்” என்றான் பாண்டியன்.

“ஆமாம், மகாயானிகள்தான் சிலை வைப்பார்கள். இந்தியாவில் உள்ள புத்தர் சிலைகள் பெரும்பாலும் தியானத்தில் அமர்ந்திருக்கும். அபூர்வமாக, நின்றகோலத்திலும் இருக்கும். கைவிரல்களால் சில அடையாளங்களைக் காட்டும். அதில் நான்கு சைகைகள் முக்கியமானவை. தரையை வலக்கையால் தொட்டுக்கொண்டிருக்கும் சைகைக்கு ‘பூமி ஸ்பர்சம்’ என்று பெயர். அது, புத்தர் தான் ஞானம் அடைந்ததற்கு பூமியை சாட்சியாக ஆக்கும் சைகை. ஞானத்தைக் கற்பிப்பது போன்ற சைகை உண்டு. அறத்தின் சக்கரத்தை உருட்டிவிடுவதுபோன்ற சைகை உண்டு. வெறுமே கையை மடியில் வைத்திருப்பதும் உண்டு.”

‘‘அஜந்தா போன்ற சில ஊர்களில், படுத்திருக்கும் புத்தர் சிலைகள் உள்ளன” என்றான் பாண்டியன்.

“ஆம், அது புத்தர் இறந்தபோது இருந்த நிலை” என்றார் தார்ட்ஸே. “இங்கே உள்ள புத்தரின் வடிவங்களை திபெத்திய பௌத்த மதத்தில் மட்டும்தான் பார்க்க முடியும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தர் வடிவங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானவை ஐந்து. வைரோசன புத்தர், கோபத்தை அகற்றுபவர். அக்‌ஷோப்ய புத்தர், அறியாமையை அகற்றுவார். ரத்னசம்பவர், ஆணவத்தை அழிப்பார். அமிதாப புத்தர், ஆசையை இல்லாமல் ஆக்குவார். அமோகசித்தி புத்தர், பொறாமையை ஒழிப்பார். இவை எல்லாமே தியானம் செய்வதற்குரிய வடிவங்கள் மட்டும்தான்.”

பாண்டியன் மிக இயல்பான குரலில் கேட்டான். “ஆனால் கொடூரமான பல வடிவங்களும் இங்கே உள்ளன இல்லையா?.”

“அவை கொடூரமான வடிவில் ஏன் இருக்கின்றன என்றால், நம் மனமும் கொடூரமானது என்பதனால்தான். நம் மனதிலுள்ள நன்மை மட்டும் அல்ல, தீமையும் புத்தரின் வடிவம்தான். அவற்றையும் நாம் தியானம் செய்ய வேண்டும்.”

பாண்டியன் மேலும் இயல்பாகக் கேட்டான். “இங்கே, ஒரு புத்தர் மிக வேறுபட்டவராக இருந்தார். அவர் கைகளால் வணக்கம் வைப்பதுபோல கால்களைச் சேர்த்து வைத்திருந்தார்.”

அவர் கண்களைச் சுருக்கி கூர்ந்து நோக்கினார். “அதை எங்கே பார்த்தீர்கள்?” என்றார்.

“முதியபிட்சு ஒருவரின் அறைக்குள்” என்றான் பாண்டியன்.

“அந்த வடிவம் இங்கே அனுமதிக்கப்பட்டது அல்ல. ஆனால், அவர் பெரியவர். அவரை ஒன்றும் செய்ய முடியாது” என்றார் தார்ட்ஸே.

“ஏன் அது அனுமதிக்கப்படவில்லை?” என்றான் பாண்டியன் கேட்டான்.

தார்ட்ஸே “அது உண்மையில் புத்தர் சிலை அல்ல” என்றார்.

பாண்டியன் அதிர்ச்சி அடைந்தான். “அப்படியென்றால்?” என்றான்.

“அது பான் மதத்தைச் சேர்ந்த தெய்வங்களில் ஒன்று. அந்த மதத்தை 500 ஆண்டுகளுக்கு முன்பு திபெத்திய லாமாக்கள் தடைசெய்தனர். உடனே, அவர்கள் அதை புத்தர்போல ஆக்கிக்கொண்டார்கள். அந்த வடிவம்தான் நீங்கள் கண்டது” என்றார் தார்ட்ஸே.

“அவர் யார்? ஏன் அவர் அதை வழிபடுகிறார்?” என்றான் பாண்டியன் திகைப்புடன்.

“திபெத்திய பௌத்தத்தில் நான்கு மரபுகள் உண்டு. ந்யிங்மா மரபு, சாக்ய மரபு, காக்யூ மரபு, கெலுக் மரபு. கெலுக் மரபுதான் இன்று பரவலாக இருக்கிறது. கெலுக் மரபு, 100 ஆண்டுகளுக்கு முன்பு பான் மதத்தையும் உள்ளே சேர்த்துக்கொண்டது. ஆனால், நிறைய கட்டுப்பாடுகள் உண்டு.”

“பான் மதத்தின் அந்த தெய்வம் எப்படிப் பட்டது?” என்று பாண்டியன் கேட்டான்.

“அது தெரியாது. அந்த தெய்வம் மிகக் கொடூரமானது என்கிறார்கள். அதற்கு, மனிதர்களை அந்தக் காலத்தில் பலி கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள். பலி கொடுக்கப்பட்டவர்களின் தலைகளை அந்த தெய்வத்தைச் சுற்றிக் குவித்துப் போட்டிருப்பார்களாம். ஆகவே, அந்த வகையில் காலை வைத்து அமர்ந்திருக்கும் தெய்வத்தைக் கண்டு மக்கள் அஞ்சினார்கள். ஆனால், பான் மதத்தவர்கள் ரகசியமாக அந்த தெய்வத்தை வழிபட்டார்கள். பான் மதத்தின் தெய்வங்களுக்கெல்லாம் அதுவே அரசன். அவர்களின் பூதங்கள் அனைத்தும் அந்த தெய்வத்துக்குக் கட்டுப்பட்டவை.”

வெள்ளி நிலம் - 10

பாண்டியன், “நான் அந்த முதிய பிட்சுவை சந்தித்துப் பேசலாமா?” என்றான்.

“இல்லை, அவர் எவரிடமும் பேசுவதில்லை. அவருக்கு நூற்றிருபது வயது ஆகிவிட்டது” என்றார் தார்ட்ஸே.

பாண்டியன் குழப்பம் நிறைந்த மனதுடன் விடைபெற்றுக்கொண்டான். அவனால் கோவையாகச் சிந்திக்கவே முடியவில்லை. ஸ்கிஜின் கோன்பா மடாலயத்தில் இருந்தது பான் மதத்தின் மம்மியா என்ன? அது ஏன் பான் மதத்தின் தெய்வம்போல இருக்க வேண்டும்?

அப்போது நாக்போவின் குரல் ஒலித்தது. என்ன ஏது என்று புரியாமல் பாண்டியன் திகைத்தான். ஒருவன், திபெத்திய மொழியில் ஓசையிடுவது கேட்டது. பாண்டியன் அந்தத் திசை நோக்கி ஓடினான். அவனை நோக்கி ஒருவன் ஓடிவந்தான். அவனுக்குப் பின்னால் நாக்போ குரைத்தபடி ஓடிவந்தது. அவனை நாக்போ மோப்பம் பிடித்தது. பின்னால் ஓடிவந்தான் நோர்பா.

ஓடிவந்தவன் சமையற்காரன் என்று தோன்றியது. ஆனால், அவன் மிக விரைவாகப் படிகளில் ஓடிவந்தான். பாண்டியன், “நில், நில்” என்று கூவியபடி, அவனைத் தடுக்கப்போனான். இயல்பாகவே அவன் கை இடையிலிருந்த துப்பாக்கியை உருவியது. ஆனால், அதற்குள் அவனை அணுகிய அவன், பூனையைப்போல காற்றில் எம்பிப் பாய்ந்து, சுவரில் கால்வைத்து மேலே எழுந்தான். அவன் கால் ஓங்கி பாண்டியனின் பிடரியை அறைந்தது. பாண்டியன் சிதறி விழுந்தான். அவனுக்கு ஒருகணம் ஒன்றுமே தெரியவில்லை. கண்களும் காதுகளும் அடைத்துக்கொண்டன.

அவன் தாவி அப்பால் கடந்து ஓட, நாக்போ குரைத்தபடி தொடர்ந்து ஓடியது. நோர்பா ஓடிவந்து அருகே குனிந்து பாண்டியனைத் தூக்கினான். பிடரியில் விழுந்த அடியால் பாண்டியனால் எழுந்திருக்க முடியவில்லை. எழுந்ததுமே கால்கள் தடுமாறி மீண்டும் விழுந்தான். பூமியே சாய்ந்திருப்பதுபோல தோன்றியது. மீண்டும் மீண்டும் எழுந்து விழுந்துகொண்டிருந்தான்.

வெளியே ஓடியவன் பாய்ந்து, ஒரு மதில்மேல் ஏறி அப்பால் சென்றுவிட்டான். நாக்போ அங்கேயே நின்று குரைத்தது. பின்னர் திரும்பி அப்பால் சென்று, கீழே பாய முடியுமா என்று பார்த்தது. மிக ஆழமாக இருந்தமையால், “கால் ஒடிந்துவிடும்” என்று சொல்லி, நாக்கை நீட்டி மோவாயை நக்கியது. அதன்பின் முனகியபடி திரும்பி வந்தது.

பாண்டியனின் காலின்கீழே, பூமி நீர் போல அலையடிப்பதாகத் தோன்றியது. அவன் தலை சுழன்றது. குமட்டி வாந்தி எடுத்தபடி நினைவிழந்தான். 

(தொடரும்...)

உலகின் மாபெரும்  புத்தர் கோயில்.

வெள்ளி நிலம் - 10

வைணவ மதம் இந்தியாவில் தோன்றியது. ஆனால், உலகிலேயே மிகப்பெரிய விஷ்ணு கோயில் இந்தியாவில் இல்லை. அது கம்போடியா நாட்டில் உள்ளது. ‘அங்கோர்வாட்’ என்று அதற்குப் பெயர். அதேபோல, இந்தியாவில் உருவானது புத்த மதம். அதன் மிகப்பெரிய கோயில் இந்தோனேசியாவில் உள்ளது. அதுதான் போராபுதூர் புத்தர் ஆலயம். 

மத்திய ஜாவா தீவில் உள்ளது இந்த மாபெரும் புத்த ஆலயம். உண்மையில் இது ஓர் இயற்கையான குன்று. கீழிருந்தே அந்தக் குன்றைச் சுற்றிக் கட்டடத்தைக் கட்டி, அப்படியே மேலே வரை ஒரு கோயிலாக ஆக்கிவிட்டார்கள்.  இங்கே, 2,500 சிற்பவரிசைகள் உள்ளன. 504 புத்தர் சிலைகள் உள்ளன.  இங்குள்ள புத்தர் சிலைகள், சிறிய ஸ்தூபி ஒன்றுக்குள் இருப்பவைபோல அமைந்துள்ளன.

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில், இந்தப் பகுதியை சைலேந்திர பேரரசர்கள் ஆண்டனர். அவர்கள் பௌத்தர்கள். அவர்கள்தான் இதைக் கட்டினர்.