மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 24

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

வீரயுக நாயகன் வேள்பாரி - 24

கார்காலத்தின் தொடக்க நாளிலேயே மழை கொட்டித்தீர்த்தது. கபிலரின் உடல், சூழலுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டது. கபிலர் இருந்த வீட்டில்தான் எந்நேரமும் பாரியின் மகள்கள் இருந்தனர். அங்கவை, சங்கவையோடு சேர்த்து எட்டுப் பேருக்கு எழுத்துகளைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கியிருந்தார் கபிலர். நடுவீட்டில் மரப்பலகையில் மணல் கொட்டி, அதன் மேல் உயிரெழுத்துகளை எழுதச் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார். சிறிது காலம் கபிலருக்கு உதவியாக அவரோடு இருந்துவிட்டு வருவதாகச் சொல்லி, மயிலா அங்கேயே தங்கிவிட்டாள்.

பறம்புநாட்டின் தென் பகுதி எல்லைக்காவல் பொறுப்பாளன் கூழையனிடமிருந்து தேக்கனுக்குத் தகவல் வந்திருந்தது. குடநாட்டு அமைச்சன் கோளூர் சாத்தனின் கைகளை வெட்டி அனுப்பியதற்குப் பிறகு, குட்டநாட்டு அரசவைக்குக் குடநாட்டின் தூதுவர்கள் சென்றுள்ளனர். `அடுத்து நிகழப்போவதைப் பற்றிய விழிப்போடு இருக்க வேண்டிய வேளை இது!' என அவர் நினைத்தார்.

கொற்றவைக்கூத்து முடிந்து ஒரு வாரத்துக்குப் பிறகு, கபிலரின் உடல் முற்றிலும் குணமானது. ஆனால் மனம், மிகவும் துவண்டே இருந்தது. நீலன் புறப்பட்ட பிறகு, கபிலரின் மனம் நிலைகொள்ள நாளெடுத்துக்கொண்டது. பார்த்த முதல் கணத்திலிருந்து அவனைப் பற்றிய வியப்பு பெருகிக்கொண்டே இருந்தது. வேட்டுவன் பாறையில் பார்த்தபோது, கையில் பிடித்திருந்த அதே வேற்கம்போடு கபிலரிடமிருந்து விலகி காட்டுக்குள் மறைந்தான் நீலன். கண்களைவிட்டுப் பிரியும் வரை கபிலரின் கண்கள் அசைவற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தன.

இப்போது கபிலரோடு எந்நேரமும் உடனிருந்து உதவிகள் செய்பவன் உதிரன். இவனும் நீலனைப் போலத்தான்; துடிப்பேறிய இளைஞன். கபிலரின் தேவைகளை மிகுந்த அக்கறையோடு கவனித்துவருபவன்.

ஒரு பகற்பொழுதில், கபிலரின் வலது காலை தனது தொடையின் மேல் தூக்கி வைத்துக்கொண்டு விரல்நகங்களை நறுக்கத் தொடங்கினான் உதிரன். அவரின் வலதுகால் நடுவிரல் சூம்பிப்போய் சின்னஞ்சிறியதாக இருந்தது. அந்த விரலின் அடிப்பகுதியை விரல்களால் மெள்ள நீவிவிட்டான். சற்றே உயரமான மரப்பலகையின் மேல் உட்கார்ந்திருந்தார் கபிலர். அவரின் எண்ணங்கள் வேறு எங்கோ இருந்தன. உதிரன் நகம் நறுக்குகிறான் என்பது மட்டுமே அவரின் நினைவில் இருந்தது. சூம்பிய விரலுக்கு உணர்ச்சியில்லாததால், அவன் அந்த விரலின் அடிப்பாகத்தை நீவிவிட்டுக் கொண்டிருப்பதை அவரால் உணர முடியவில்லை.

‘பறம்புநாடே ஒரு தாய்போல் இருக்கிறது. அழிந்த இனங்களை, வாழத் துடிப்பவர்களை, எங்கெங்கோ இருந்து வந்து சேர்ந்தவர்களை எல்லாம் அள்ளி அணைத்துக்கொண்டுள்ளது. சேரனின் நாடு, சோழனின் நாடு, பாண்டியனின் நாடு என, மன்னர்களால்தானே நாடுகள் அறியப் படுகின்றன. ஆனால், ஒரு தாயின் குணத்தோடு விளங்கும் நாட்டை ஏன் `தாய்நாடு' எனச் சொல்லக் கூடாது? நாட்டைத் தாயோடு ஒப்பிடும் எண்ணம் இதுவரை யாருக்கும் தோன்றியதில்லை. சில மாதங்களுக்கு முன்னால் இப்படியோர் எண்ணம் தோன்றியிருந்தால், அது எவ்வளவு பொருளற்றதாக இருந்திருக்கும். மண்ணும் நாடும் உடைமையின் குறியீடுகள். அவற்றைப்போய் தாய்க்கு உவமையாக எப்படிச் சொல்ல முடியும்? ஆனால், கொற்றவைக் கூத்தைப் பார்த்த பிறகு, திசையற்றவர்களையும் நிலமற்றவர்களையும் தலைமுறை தலைமுறையாக அள்ளி அரவணைத்து நிற்கும் பறம்புநாட்டைத் `தாய்நாடு' எனச் சொல்வதைவிட வேறென்ன சொல்ல முடியும்?’ என்று கபிலரின் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தபோது, அவரை அறியாமலே கண்கள் கலங்கின.

ஒருகணம் கண்களை மூடிச் சிந்தித்தார். தனக்குள் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது? மேலெல்லாம் ஏன் சில்லிட்டு அடங்கியது? இப்போது நினைவுக்குள் என் தாய் வந்துவிட்டுப் போனாளே எப்படி? நினைவின் வழியே எதையோ கண்டறிந்துவிட நினைத்தபோதுதான் அவர் கால்விரல் நினைவுக்கு வந்தது. மெள்ளக் குனிந்து கீழே பார்த்தார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 24

அவ்வளவு நேரம் எங்கேயோ பார்த்தபடி இருந்த கபிலர், இப்போது குனிந்து தன்னைப் பார்க்கிறார் என்பதை அறிந்ததும் உதிரன் சொன்னான், “உங்கள் வலதுகால் நடுவிரலில் குருதி யோட்டத்துக்காக அடிநரம்பைச் சற்று அழுத்தி நீவிவிட்டேன். எதுவும் தொந்தரவாகிவிட்டதா?”

‘இல்லை’ என்று தலையாட்ட மட்டும் செய்தார் கபிலர்.

உதிரன் சொன்னான், “நடுவிரல் சூம்பியுள்ளதால், நடக்கும்போது சற்றே இடறினாலும் தசை பிறண்டுவிடும். கூடுமானவரை பாதடியைக் கழற்றாதீர்கள்.”

இப்போது தலையாட்டாமல் அவனையே பார்த்தார் கபிலர்.

“வேட்டுவன் பாறையில் ஏறும்போது நீலன், உங்கள் பாதடியைக் கழற்றச் சொன்னதால்தான் உடனே உங்களுக்குத் தசை பிறண்டிருக்கிறது. காட்டில் பிடித்து நடப்பதைப்போன்ற வடிவில் ஒரு பாதடியைச் செய்துதர ஏற்பாடு செய்கிறேன்” என்று சொல்லியபடி, விரலின் அடிப்பாகத்தை அழுத்தி நீவிவிட்டான் உதிரன்.

கபிலரின் கண்கள் கலங்கின.

அதைக் கவனித்த உதிரன், “வலி ஏற்படுவதுபோல மிகவும் அழுத்திவிட்டேனா?” என்று பதற்றப்பட்டுக் கேட்டான்.

“இல்லை, சிறுவயதில் என் தாய் அந்த விரலின் அடிநரம்பை இளஞ்சூட்டு எண்ணெய் தொட்டு அழுத்தி நீவிவிடுவாள். அப்போது ஏதாவது ஒருகணத்தில் அந்த விரலை நான் உணர்ந்திருக்கிறேன். மற்ற நேரங்களில் அதை நான் உணர்ந்ததேயில்லை. எத்தனையோ ஆண்டுகள் ஓடிவிட்டன, எவ்வளவோ நிலப்பரப்புகளை நடந்தே கடந்திருக்கிறேன். பல்லாண்டுகளுக்குப் பிறகு, சட்டென இப்போது ஒருகணம் அந்த விரலை நான் உணர்ந்தேன். உணர்ந்த அந்தக் கணம் என் தாய் நினைவுக்கு வந்துவிட்டாள். உடலெல்லாம் சிலிர்ப்பு மேலிடுகிறது” எனச் சொல்லியபடியே உதிரனின் உச்சந்தலையில் கைவைத்தார் கபிலர். ஊறிய கண்ணீர் ஒழுகாமலா இருக்கும்?

சிறிது நேரத்தில், பெண்பிள்ளைகள் மொழி கற்றுக்கொள்ள வீடு வந்தனர். நறுக்கிய நகத்துண்டுகளை எடுத்துக்கொண்டு உதிரன் வெளியேறினான். கபிலர், மொழிக்குள் நுழையத் தொடங்கினார். மழை அதிகமாகத் தொடங்கியது. வாரக்கணக்கில் விடாது கொட்டும் அடைமழை, இன்னும் சில நாள்களில் தொடங்கும். அடைமழை தொடங்கிவிட்டால், அடுத்து கடுங்குளிர்.

தந்தரையிலிருந்து வந்தவர்களால் இந்தக் குளிரைத் தாங்க முடியாது. கடுங்குளிர் தாங்க, கபிலருக்கு எலிமயிர்ப் போர்வையை நெய்யுமாறு பாரி சொன்னான். குளிரிலிருந்து காத்துக்கொள்ள எவ்வியூரில் உள்ளவர்கள் முடியுள்ள தோல் ஆடைகளைப் பயன்படுத்துவர். அது, காட்டில் வாழ்ந்து பழக்கப்பட்டவர்களுக்குப் போதுமானது. புதியவர்களின் உடலுக்கு அது போதுமானதாக இருக்காது.  அவர்களின் உடற்சூட்டைப் பாதுகாக்கும் மேலாடை தேவை.

காட்டின் மிக உயர்ந்த பகுதிகளில் லவங்கமும் செங்கடம்பும் அடர்ந்துகிடக்கும் இடங்களில் பேரெலி உயிர்வாழும். இது பூனையைவிட அளவில் பெரியது. பஞ்சினும் மெல்லிய மயிர்களை உடையது. பொங்கும் புகைபோல பொசுபொசுவென இருக்கும் இதன் மயிர்களால் உருவாக்கப்படும் போர்வை, உடலுக்கு மிகுந்த கதகதப்பைத் தரும். உடலின் சூட்டை வெளிவிடாமல் காத்துக்கொள்ளும்; கடுங்குளிரையும் உடலோடு அண்டவிடாது.

கபிலருக்கு எலிமயிர்ப் போர்வையை நெய்ய, தேவையான எலிகளைப் பிடித்தாக வேண்டும். உதிரன், பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை அழைத்துக்கொண்டு புறப்பட்டான். கபிலர், தானும் உடன் சென்று வருவதாக பாரியிடம் கூறினார்.

“பேரெலி, உயரமான கரும்பாறை இடுக்குகளில்தான் இருக்கும். இளைஞர்கள் மிக விரைந்து செயல்பட்டால்தான், அதைப் பிடிக்க முடியும். நீங்கள் அவர்களைப் பின்தொடர்வது கடினமாயிற்றே?” என்றான் பாரி.
“நான் என்ன விரட்டியா பிடிக்கப்போகிறேன்? பிடிக்கப்போகிறவர்களைப் பின்தொடரப் போகிறேன்.”

“முன்னேறுவதைவிடக் கடினமானது பின்தொடர்வது.”

“பின்தொடரக்கூட முடியாத அளவுக்கு நான் தளர்ந்துவிடவில்லை; எனக்கு வயதாகிவிடவும் இல்லை.”

சின்ன சிரிப்புடன் பாரி சொன்னான், “மழைக்காலம் அல்லவா, பாறைகள் வழுக்கும் எனச் சொல்லவந்தேன்.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 24

“எப்படிச் சொன்னாலும் நீ சொல்லவரும் செய்தி அதுதானே?” என்றார் கபிலர்.

“நான் பதில் சொல்லவில்லை என்றால், உங்கள் வினாவே விடையாகிவிடும். என் தோழன் அவனது சொல்லாலேயே கண்டறியப்பட்டுவிடக் கூடாதல்லவா?”

“ `எந்தப் பக்கம் போய் மறித்தாலும் தப்பித்துப்போகும் வல்லமைகொண்டது' என்று உதிரன் சொன்னது, பேரெலியை மட்டும்தான் என நினைத்துவிட்டேன்.”

பாரி சிரித்துக்கொண்டே கபிலரைக் கட்டி அணைத்தான். இருவரும் புறப்பட்டனர். ஆதிமலையின் குறிப்பிட்ட திசை நோக்கி இளைஞர்கள் வேகமாகச் சென்றனர். சூரிய ஒளி, நற்பகல் வரைதான் தெரியும். அந்தப் பொழுதுக்குள் பிடித்தால்தான் உண்டு. நாளொன்றுக்கு இரண்டு பிடிப்பதே கடினம். ஒரு போர்வை செய்ய, குறைந்தது இருபது பேரெலிகளையாவது பிடித்தாக வேண்டும். உதிரன், சரசரவெனப் பாறைகளில் ஏறிப் போய்க்கொண்டிருந்தான். மிகச்சிறிய நேரம்தான் அவர்களைப் பின்தொடர்ந்தனர். அதன் பிறகு, பின்தொடர்தலுக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

பாரியும் கபிலரும் பேசியபடி அவர்கள் சென்ற திசை நோக்கி மலையேறிக்கொண்டிருந்தனர். “பன்மயிர் பேரெலி என்று இந்த எலியைப் பற்றிப் பழம்புலவர் ஒருவர் பாடியுள்ளார்” என்று சொன்ன கபிலர், சட்டென நினைவு வந்தவராகச் சொன்னார், “அங்கவை, கற்றுக்கொள்வதில் அளவற்ற ஆர்வத்துடன் இருக்கிறாள்.”

பாரிக்கு இது புதிய செய்தி அல்ல. ஆனால், கபிலர் வாயால் கேட்பது மகிழ்வைத் தந்தது.

“பொதுவாக, மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காகத்தான் கேள்வி கேட்பார்கள். அங்கவையோ, அறிந்துகொள்வதற்காகக் கேள்விகள் கேட்கிறாள்.”

இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்பதைப் போலிருந்தது பாரியின் பார்வை.

“மரத்தைத் தெரிந்துகொள்ள மரத்தைப் பார்த்தால் போதும். ஆனால், மரத்தை அறிந்து கொள்ள அதன் வேரைப் பார்க்க வேண்டும் அல்லவா? அதைப்போலத்தான் ‘உயிரெழுத்து பன்னிரண்டு’ என்று நான் சொன்னபோது தெரிந்துகொள்ளும் ஆர்வத்தோடு, ‘என்னென்ன?’ எனக் கேட்பாள் என நினைத்தேன். அவளோ  ‘ஏன் பன்னிரண்டு?’ எனக் கேட்டாள்.

“வினா சரிதானே?”

``சரிதான். ஆனால், விடைக்கான இடம் வினாவில் இருக்க வேண்டுமல்லவா? எத்தனையோ தலைமுறைகளாக நமது முன்னோர்கள் ஒலியை உருட்டி உருட்டி எழுத்தாக்கி வைத்திருக்கிறார்கள். நீர் போன இடத்தில் பதியும் தடம்போல, பேசும் ஒலிக்கு ஒரு தடத்தை உருவாக்க முயன்றிருக்கிறார்கள். இந்தப் பெரும் பட்டறிவுச்சேகரத்தை எனது அறிவால் எப்படி அளந்துபார்த்து விடை சொல்ல முடியும்?”

கபிலரின் விடை, பாரிக்குப் பொருத்தமாகப் பட்டது.

கபிலர் சொன்னார், “முன்பு ஒருமுறை என்னிடம் மொழி கற்ற மாணவி இப்படித்தான் வினாக்களைக் கேட்டுக்கொண்டே இருப்பாள். காலையில் அங்கவை கேள்வி கேட்டதில் அவளின் நினைவாகவே இருக்கிறது” என்று சொன்னபடி எதிரில் இருக்கும் வேங்கை மரத்தைப் பார்த்து அப்படியே அசைவற்று நின்றார் கபிலர். பாரியும் நின்றான்.

வேங்கைமரத்தின் தாழ்வான கிளையில் மயில் ஒன்று அமர்ந்திருந்தது. பேச்சுக் கேட்டு பறந்துவிடக் கூடாது என்பதற்காக, கபிலர் பேச்சை நிறுத்தினார். அது தன் தலையை மட்டும் மேலே தூக்கியது. அதன் அசைவை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார் கபிலர். பாரி, மரத்தின் அடிவாரத்தில் எதையோ உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான்.

மயில் மெள்ள தலையைத் திருப்பி, இருவரையும் பார்த்தபடி கிளையிலிருந்து குதித்து, காட்டுக்குள் மறைந்தது. “இன்னும் சிறிது நேரம் உட்கார்ந்திருக்கக் கூடாதா? வெருகுப்பூனையின் கண்களுக்குள் இருக்குமே நீலமும் பச்சையும் கலந்த கலவை. அதுதானே மயில்தோகையின் கண்களிலும் இருக்கிறது?” என்றார் கபிலர்.

பாரி, மறுமொழி ஏதுமின்றி மரத்தின் அடிவாரத்தை நோக்கி நடந்தான். கபிலர், அந்தக் கிளையை நோக்கிச் சென்றார். மயில், கிளையிலிருந்து தாவி மண்ணில் கால் பதித்த இடத்தில் அதன் காலடி படிந்திருந்தது. அதைப் பார்த்தபடி சொன்னார், “மயிலின் காலடியை நொச்சி இலைக்கு உவமை சொல்வர். வெண்ணொச்சி ஐந்து இலைகளை உடையது. மயிலுக்கு முன்பக்கம் மூன்று விரல்கள்தானே, அதனால் கருநொச்சியைத் தான் உவமை சொல்லியிருக்க வேண்டும். அதற்குத்தான் மூன்று இலை.”

கபிலரின் பேச்சுக்கு, பாரியிடமிருந்து மறுமொழி ஏதும் இல்லை.

“நீ என்ன பார்த்துக்கொண்டிருக்கிறாய்?” என வினவியபடி பாரியின் அருகில் வந்தார் கபிலர்.

மரத்தின் பட்டையில் ஒட்டியிருந்த செந்நிறத் தடத்தைக் காண்பித்து பாரி சொன்னான், “புலி, தனது வாயில் இருந்த குருதியைத் துடைத்துவிட்டுப் போயிருக்கிறது.”

கபிலரின் கண்கள் குருதியை உற்றுப் பார்த்தன.

“புலியின் வாயில் இவ்வளவு குருதி இருந்திருக்குமேயானால், அது யானையைத்தான் வீழ்த்தியிருக்கும்.”

கபிலரின் கண்கள் பாரியை உற்றுப்பார்த்தன.

“புலி குட்டி போட்டிருக்கும் புதருக்குள் யானை எதிர்பாராமல் நுழைந்ததால், இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம்.”

தடத்தின் வழியே காட்சியை அடுக்கிக்கொண்டேபோனான் பாரி. கபிலரின் மனதுக்குள்ளும் சொற்கள்

வீரயுக நாயகன் வேள்பாரி - 24

விரிந்துகொண்டே போயின.

‘கிளையில் தோகை விரித்த மயில்.

அடியில் குருதி துடைத்த புலி.

மயிலின் கால் தடம் நொச்சியைச் சொன்னது.

புலியின் வாய்த் தடம் யானையைக் கொன்றது.


குருதி யுலரா வேங்கையின் அடியில்

தனது இறகு உதிர்க்காமல் சென்றது மயிலே’

என, கபிலரின் மனம் காட்சிகளைச் சரசரவெனத் தொகுத்துக்கொண்டிருந்தபோது, பாரியின் வலதுகை ஈட்டியை இறுகப்பிடித்திருந்தது. ஏனென்றால், குருதியின் ஈரம் காயாமல்தான் இருந்தது. ஒருவேளை அந்தப் புதர் மிக அருகில் இருக்கலாம்.

விழா என்றால், அறுவகைத் தராசும் தரை தட்டும் ஓசை நிற்காமல் கேட்க வேண்டும். அதுவே திருவிழா என்றால், இந்த அறுவகையோடு சேர்ந்து எழுவகை அளவையும் நில்லாமல் நீள வேண்டும். அதனினும் பெருவிழா என்றால், இந்த இரண்டோடு சேர்த்து எண்வகை இன்பத்தில் நகரம் திளைக்க வேண்டும். இதுவே விழாக்களுக்கு இலக்கணம் கண்டோர் சொன்ன சொல்.

மாமதுரையின் வணிகச்சாலையில் குவிந்துள்ள மக்களின் கூட்டம் குறைவதாக இல்லை. மாணிக்கக்கற்களை நிறுத்தும் மிகச்சிறிய மணித்தராசும், தங்க நகைகளை நிறுத்தும் பொன்தராசும், உலோகங்களை நிறுத்தும் உலோகத்தராசும் பண்டத்தராசும் மரத்தராசும் தூக்குத்தராசும் நிலை கொள்ளாமல் இரவு முழுவதும் ஆடியபடியே இருந்தன. தராசுத்தட்டு தரை தட்டும் ஓசை இடைவிடாது ஒலிக்கும் இசை அரங்கம் போல கேட்டுக்கொண்டே இருந்தது. துலா முள்ளின் தலையாட்டல் நின்றபாடில்லை. நிற்காமல் துடிக்கும் வணிகத்தின் வால் அதுதானே.

பண்டகக் காப்போன், எண்ணற்ற கணக்கர்களோடு அமர்ந்து நாள்கணக்கில் கணக்குகளைப் போட்டுக்கொண்டே இருந்தான். இந்தத் திருமணத்துக்கு வரப்போகும் தேர்கள் எத்தனை, ஒரு குதிரை இழுக்கும் தேர், இரு குதிரைகள் இழுக்கும் தேர், நான்கு குதிரைகள் இழுக்கும் தேர் என வகைக்கு ஏற்ப பிரித்துக் கணக்கிட்டனர். குதிரைகள் தவிர, பிற விலங்குகளால் இழுத்து வரப்படும் தேருக்கு மணவிழா முடியும் வரை கோட்டைக்குள் அனுமதி இல்லை. அதேபோல, சிறிய பல்லக்குகளுக்கும் சிவிகைகளுக்கும் அனுமதி இல்லை. நான்கு பேர் சுமக்கும் பெரும்பல்லக்குகளுக்கும் எட்டுப்பேர் சுமக்கும் மணிப்பல்லக்குகளுக்கும் யானையின் மேல் பொருத்தப்பட்ட கூண்டுப் பல்லக்குகளுக்கும் மட்டுமே அனுமதி.

தேர்களின் எண்ணிக்கையை உய்த்தறிந்து அதன் அடிப்படையில் தேர் இழுக்கும் விலங்குகளின் எண்ணிக்கை கணக்கிடப் பட்டது. விலங்குகளுக்குத் தேவையான கூலங்கள் கணக்கிடப்பட்டன. பணியாளர் களின் எண்ணிக்கையையும் விருந்தினர்களின் எண்ணிக்கையையும் கணக்கிட்டனர். நெல், வரகு, தினை, சாமை தொடங்கி எள், கொள், அவரை, மொச்சை, வரையிலான பதினெட்டு வகைக் கூலங்களையும் நிறுத்தல், முகர்தல், பெய்தல் அளவைகளைக்கொண்டு தேவைகளைக் கணக்கிட்டனர்.

பண்டகக் காப்போனின் அறை முழுவதும் கணக்குகள் நிரம்பி வழிந்தன. இரவும் பகலும் இதே வேலையாக இருந்ததால், ஏடுகளில் எழுதாமலேயே எண்களை ஒப்புவித்துக் கொண்டிருந்தனர்.  ஒரு படிக்கு அவரை 1,800, பயறு 14,800, அரிசி 38,000 இருக்கும் என எண்ணிக்கையை நினைவுகளின் பகுதியாக்கினர்.

குதிரைகளின் கட்டுத்தறிக் கணக்குகள் துல்லியமாகத் தயாராகின. ஆட்டுத்தோல் பிடிகொண்ட கசை எத்தனை தேவை என்பதில் தொடங்கி கண்பட்டி, கடிவாளம் வரை குதிரைக்குத் தேவையான பொருள்கள் எவ்வளவு, கொள், புல், தண்ணீர் வேளை தவறாமல் கொடுக்கவேண்டிய அளவுக்கான மொத்தக் கணக்குகளும் எழுதப்பட்டன. கட்டுத்தறியின் துர்நாற்றத்திலிருந்து நகரத்தைக் காப்பாற்ற கணக்குகளே அச்சாணிகளாக இருந்தன.

எண்ணற்ற விழாக்களையும் திருவிழாக்களையும் கண்ட மதுரை, இப்போது பெருவிழாவுக்குத் தயாராகியது. இன்னும் சிறிது நேரத்தில் மணமகள் வந்திறங்க இருக்கிறாள். அவரை வரவேற்க, நெடுங்கல்சாலை முழுவதும் பேரலங்காரம் பூண்டிருந்தது. எங்கும் அரச குலத்தினர் திரண்டிருந்தனர். வரப்போகும் மதுரையின் குலமகளுக்காக மாமன்னர் குலசேகரப் பாண்டியன் இன்று அதிகாலை வைகையில் நீராடி, பொன்னால் செய்யப்பட்ட தும்பைப்பூவை இருபது மாவீரர் களுக்குப் பரிசாக வழங்கினார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 24

பொன்னரிமாலையும் நெற்றிப் பட்டமும் சூடிய பட்டத்துயானை முன்னே வந்தது. அதைத் தொடர்ந்து பொன்னால் செய்யப்பட்ட சேண மணிந்த குதிரைகளில் பொன்பூவைச் சூடிய மாவீரர்கள் இருபது பேர் அணிவகுத்து வந்தனர்.

அதற்கு அடுத்து, மின்னும் தலையணிகளும் சங்கு வளையல்களும் செந்நிற வடமும் இடையணியும் அணிந்த அழகுப் பதுமைகள் எண்மர் பொற்கிடுகு மேயப்பட்ட சிறு பல்லக்கைத் தூக்கி வந்தனர்.

பெண்கள் பல்லக்குத் தூக்கி வருவதை, மதுரை முதன்முறையாகக் கண்டது. நெடுங்கல்சாலையில் விலக முடியாத பெருங்கூட்டம் நின்றது. இளமருதனும் செவ்வியனும் கூட்ட நெரிசலில் திணறியபடி நின்றுகொண்டிருந்தனர். இந்த அரிய காட்சி என்றைக்குக் கிடைக்கும்? எவ்வளவு நெரிசல் இருந்தாலும் வந்து இறங்கும் இளவரசியாரைப் பார்க்காமல் போவதில்லை என்ற முடிவோடு இருவரும் நின்றிருந்தனர்.

நெடுங்கல்சாலையின் திருப்பத்தில்தான் அவர்கள் நின்றிருந்தனர். அங்கிருந்து பார்த்தால், தொலைவில் பல்லக்கில் வந்து இறங்கி அரண்மனையின் நெடும் படி ஏறி உள்ளே செல்வதைப் பார்க்க முடியும்.

பொன்னால் ஆன தும்பைப்பூ சூடிய வீரர்களின் அணிவகுப்பைத் தொடர்ந்து பெண்கள் எண்மர் தூக்கி வரும் சிறு பல்லக்கு முதலில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கப்போவது யார் என எல்லோரும் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு நின்றனர். ஆனால், அந்தப் பல்லக்கிலிருந்து யாரும் இறங்கவில்லை.

முன்னால் இருப்பவன் அடைத்து நின்றதால், இளமருதனால் சரியாகப் பார்க்க முடியவில்லை. “யார் இறங்குவதென்று தெரியவில்லை. சற்றே விலகுங்கள்’' என்று கூறினான். அதற்கு அடைத்து நின்ற அந்த மனிதன் சொன்னான், “அந்தப் பல்லக்கில் இருந்து யாரும் இறங்க மாட்டார்கள்.”

செவியன் அவனை உற்றுப்பார்த்தான். தோற்றமே அவனொரு வணிகன் என்பதைச் சொல்லியது. சாத்துகளின் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்பதை, பிற அடையாளங்களைக்கொண்டு அறிந்தனர். அவன் பல செய்திகளையும் அறிந்திருப்பான் என உய்த்தறிந்த செவியன் கேட்டான்.

“அந்தப் பல்லக்கில் யாரும் வரவில்லையா?”

“அது பொற்கிடுகு வேய்ந்த பல்லக்கு. சாத்துகளின் விழாக்களில் அதற்குத்தான் முதல் இடம்.”

“அந்தப் பல்லக்கில் யார் இருப்பார்?”

“செல்வத்தின் இளவரசி இருப்பாள்.”

அவன் சொல்வது புரியாமல் இருவரும் முழித்தபோது அவன் மேலும் சொன்னான், “அது சக்கரவாகப் பறவையைக் கொண்டுவரும் பல்லக்கு.”

அந்தக் கணம் இளமருதனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘இப்பெரும்விழாவில் தலைமரியாதை கொடுத்துப் பொற்பல்லக்கில் எடுத்துவரும் பறவைக்காகச் செய்யப்பட்ட மேடையிலா நான் ஈச்சமரச் சட்டகங்களால் செய்யப்பட்ட தேவாங்கின் கூட்டை வைத்திருந்தேன். அந்துவன் கோபப்பட்டதன் நியாயம் இப்போது விளங்குகிறது’ என எண்ணிக்கொண்டிருக்கும்போதே செம்மணிகள் பதிக்கப்பட்ட மகரப்பல்லக்கு வருவது தொலைவில் தெரிந்தது. சூரிய ஒளி மின்னி மேலெழும் அழகு எல்லாவற்றையும் சொன்னது.

“எட்டு அண்ணகர்கள் தூக்கி வருகிறார்களே, அதுதான் இளவரசியாரின் பல்லக்கு” என்றான் அந்த வணிகன்.

‘அவன் சொல்லாமலே அதுதான் இளவரசியாரின் பல்லக்கு என்பது தெரிந்தது. ஆனால், தூக்கி வருபவர்களை அண்ணகர்கள் எனச் சொல்கிறானே!?’ என எண்ணியவாறே, அவர்கள் யாரெனக் கேட்டான் இளமருதன்.

“விதை எடுக்கப்பட்டவர்கள்” என்றான் வணிகன்.

அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே இசைக் கருவிகளின் முழக்கம் எங்கும் கேட்கத் தொடங்கியது. அரண்மனைப் பெண்கள் மங்கலக் குலவையிட்டனர். இளவரசியாரை வரவேற்க, பழையன்மாதேவி படி இறங்கி வந்தார். மலர்க்குவியலும் மஞ்சள் அரிசியும் பொன்வட்டில் எடுத்தபடி சேடிப்பெண்கள் உடன்வர, அவர் வந்து நிற்பதும் பொற்பல்லக்கு மாளிகை நெடும் படியின் எதிரில் வந்து நிற்பதும் ஒரேபொழுதில் நிகழ்ந்தன.

தொட்டியில் தண்ணீர் இறங்குவதைப்போல பல்லக்கை சிறு அசைவுகூட இன்றிக் கீழிறக்கினர் அண்ணகர்கள். தங்களின் கால் பார்த்தபடியே வணங்கி பின் நகர்ந்து நின்றனர்.

இசைக்கருவிகளின் ஓசை எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. மாடங்களிலிருந்து பூக்கள் சொரியப்பட்டுக்கொண்டிருந்தன. பல்லக்கிலிருந்து இறங்கும் இளவரசியைப் பார்க்க, கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. இளமருதன் எக்கி, வணிகனின் தோள்பட்டையைத் தாண்ட முயன்றான்.

மகரப்பல்லக்கின் செம்மணிகள் ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்லி, அவற்றின் நிறப்பெருமையையும் அவை எடுக்கப்பட்ட நிலங்களின் தன்மையையும் அவை தாங்கி வந்துள்ள இளவரசியாரின் சிறப்பையும் இணைத்து இணைத்துச் சொல்லி மகிழ்ந்தான் வணிகன். அவளுடைய வார்த்தைகளில் வணிகர்குலம் பெருமிதம் பொங்கியது. எல்லோரின் கண்களும் இறக்கப்பட்ட பல்லக்கையே பார்த்துக்கொண்டிருந்தன. மேளதாளங்களின் ஓசையாலும் தூவப்படும் வண்ணமலர்களாலும் நெடுங்கல்சாலை திணறியது.

பழையன்மாதேவி வந்து நின்றபின்னும், பல்லக்கிலிருந்து யாரும் இறங்கவில்லை. பெருகும் உற்சாகத்துக்கு நடுவே, மிகச்சிலரின் கண்கள் தாமதமாகும் அந்தக் காலத்தைக் கணித்துக் கொண்டிருந்தன.

பல்லக்கின் உள்ளே இருந்தவள் யோசித்துக் கொண்டே இருந்தாள். ‘இந்தத் தயக்கம் எனது வாழ்வின் எல்லா உண்மைகளையும் சொல்லும்.’ கண் மூடி அந்தக் கணத்தைக் கடந்தாள். நெஞ்சின் அழுத்தத்தை மூச்சுக்காற்று வெளியேற்றியது. மூடிய கண்களைத் திறந்தாள். இடக்கை விரல்களால் செம்பட்டுத் திரைச்சீலையை மெள்ள விலக்கினாள். மதுரையின் மண் அவள் கண்களில்பட்டது. சற்றுநேரம் மண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தவள், காலடியை மதுரையில் வைத்தாள்.

கூட்டத்தின் ஆரவாரமும் இசை முழக்கமும் வாழ்த்துச்சொல்லும் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. இளமருதன் நின்ற இடத்திலிருந்து நெரிபடும் கூட்டத்துக்குள் தலைதூக்கிப் பார்த்தான். தூவப்படும் மலர்களுக்கு இடையில் கண்கொள்ளாப் பேரழகு நகர்ந்துகொண்டிருந்தது. இளமஞ்சள் வெயிலில் கண நேரத்தில் மறைந்த அவளது வடிவு கண்டு அவனை அறியாமலேயே, “உலகின் பேரழகி” என்று வாய் முணுமுணுத்தது.

முன்னால் நின்றிருந்த வணிகனின் காதில் அந்த முணுமுணுப்பு கேட்டது. அவன் சற்றே திரும்பிச் சொன்னான், “அந்த அழகையும் விஞ்சும் பேரறிவுகொண்டவள் பொற்சுவை.”

இளமருதனுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் வணிகனைப் பார்த்தான். அவன் மேலும் சொன்னான், “பெரும்புலவர் கபிலரிடம் கல்வி பயின்றவள் அல்லவா?”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...