மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அசோகமித்திரன் என்கிற... - பிரபஞ்சன்

அசோகமித்திரன் என்கிற... - பிரபஞ்சன்
பிரீமியம் ஸ்டோரி
News
அசோகமித்திரன் என்கிற... - பிரபஞ்சன்

படங்கள் : ப.சரவணகுமார்

1956-ம் ஆண்டு எழுதத் தொடங்கிய அசோகமித்திரன், 2016 வரை, 60 ஆண்டுகளில் 272 சிறுகதைகள் எழுதியிருக்கிறார். நாவல்கள் தனி, கட்டுரைகள் நிறைய. எழுதத் தொடங்கிய ஆண்டே மூன்று கதைகள் பிரசுரமாகி இருக்கின்றன. அவரது மூன்றாவது கதை ‘விபத்து’. அந்த மூன்றாவது கதையிலேயே அசோகமித்திரன்,  ‘அசோகமித்திரனை’ நிறுவிக்கொண்டிருக்கிறார். அவர் தன் கதை உலகை, மொழியை, சொல்முறையை, பாத்திரங்களைத் தீர்மானித்துக்கொண்டுவிட்டார். அதாவது, தனக்கென ஒரு கூட்டைக் கட்டிக்கொண்டார். அந்தக் கூட்டைவிட்டு அவர் வெளியே வர விரும்பவில்லை. அவர் எழுதிய அந்த 60 ஆண்டுகளில் தமிழ் மொழிப் பிரயோகங்கள், அரசியல், பண்பாட்டுச் சூழல்கள், பத்திரிகைப் போக்குகள், இலக்கியப் படைப்பாளர்கள், படைப்புலகத்தின் உள் வெளி அரசியல் என்று பலவும் பாரிய மாற்றங்களைச் சந்தித்துக்கொண்டிருந்தன என்றாலும், அவை அனைத்தையும் அவர் அறிவார் என்றாலும், அவை தன்னை தன் உலகத்துக்குள் நுழைந்து, தன்னைக் கலைத்துப்போட அவர் அனுமதிக்கவில்லை. தன் வீட்டில் இருந்த பழைய மரப்பெட்டிக்குள், அனைத்து மாற்றங்களையும் போட்டுவைத்துக்கொண்டு, அவருக்கு இது சமயம் என்று தோன்றும்போது ஒவ்வொன்றுக்கும் எதிர்வினை ஆற்றிக்கொண்டார். அதுவும் நேராக அல்ல. சுற்றி வளைத்து.

அசோகமித்திரன் என்கிற... - பிரபஞ்சன்

இலக்கியம் சார்ந்த நண்பர்களிடம், தன் வாழ்க்கை, சந்திக்கும் பிரச்னைகள் முதலான அந்தரங்கங்களைப் பகிர்ந்துகொள்ளும் மனிதர் அவர் இல்லை என்று நண்பர்கள் சொல்வார்கள். அசோகமித்திரன் ஒரு மூடுண்ட மனிதர் என்பதாகவும் ஒரு பேச்சை நான் கேட்டிருக்கிறேன். இதில், உண்மை இல்லாமல் இல்லை. அவர், தனக்கு அளிக்கப்பட்ட வாழ்வை, அது எவ்வளவு போதாமையை அவருக்கு அளித்திருக்கும் என்பது பற்றி நாம் உணர முடியும்தான் என்றாலும், குறை தொனிக்கும் விதமாக அவர் யாரிடமும் பேசுவது இல்லை. யாரையும் குறை கூறிப் பேசியும் நான் கேட்டது இல்லை. அப்படிப் பேச அவருக்கு நியாயங்கள் இருந்தன. ஜெமினி திரைப்பட நிறுவனத்தைவிட்டுவிட்டு அவர் முழுநேர எழுத்தாளராக வாழ்ந்த காலம், அவருக்குப் பல நெருக்கடிகள் இருந்தன. அவற்றைத் தனக்குள் அவர் பூட்டிக்கொண்டார்.

இது ஒரு மனிதரின் அகம் சார்ந்த விஷயம். ஒரு மனிதர் தனக்கு நேர்ந்த அனுபவங்களின் அடர்த்தியை நோக்கி, தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார். அசோகமித்திரனின் விரிவானதும் ஆழமானதுமான உலக இலக்கியப் பரிச்சயம், வெற்றுப் பேச்சு, ஆரவார வெளிப்பாடு, செய்யத் தகாதவற்றைத் தவிர்த்தல் போன்ற நல்இயல்புகளை அவருக்குத் தந்தன. அவரது கதைகளின் வார்த்தைச் சிக்கனம் அங்கிருந்தே தோன்றி இருக்க வேண்டும். அவரது கதைமாந்தர்களின்  வாழ்க்கைப்பாடுகள், ஒரு சமுத்திரம்போல அகன்றவை என்றாலும் அவர்கள் அதைக் கடந்தே வாழ்கிறார்கள். குறைகூறித் திரிவது இல்லை. ஏனெனில், ‘வாழ்ந்தே தீரணும் வாழ்க்கை’ என்பதை அவர்கள் அறிவார்கள், இது அசோகமித்திரனின் வாழ்க்கை குறித்தான பார்வை, அவரின் கதைப் பாத்திரங்களின் பார்வையும்கூட.

அசோகமித்திரன் இந்திய அளவில் மிக உயர்ந்த படைப்பாளி. அவரை நிகரமைக்க, பெயர்களை யோசிக்கவே வேண்டும். அவரது எழுத்து, உலக அளவில் அவரைக் கொண்டுநிறுத்தும் தகைமை சார்ந்தவை. இந்தச் சுயத்தை அவர் அறிந்து, அந்தப் பிரக்ஞையில் அவர் சுகித்திருந்தார் என்று சொல்ல முடியாது. அவர் பொதுக்கூட்டங்களுக்கு அணிந்து வரும் ஆடைகள், தன்னை ‘வரிசையின்’ கடைசி ஆளாக அவர் நிறுத்திக்கொண்டிருக்கிறார் என்பதையே உணர்த்தும். எழுத்தை இன்னுமொரு தொழில் என்பதாகவே அவர் நினைத்தார். சொல்லவும் செய்தார்.

அசோகமித்திரன் என்கிற... - பிரபஞ்சன்



அசோகமித்திரனின் எழுத்தை மிக எளிமையானது என்பதுபோல பலரும் கருத்துரைக்கிறார்கள். உண்மையில் மொழி என்பதே எளிமையானதுதான். மக்களின் மொழி என்பதும் பயன்பாட்டு மொழி என்பதும் அதுதான். அசோகமித்திரனின் எழுத்து இயல்பானது. மொழி வரலாற்றில் பாணர்களின் இயல்பான மொழிப் பிரயோகத்துக்குப் பிறகு, அதைச் சிக்கலாக்கியதும் ஒப்பனை செய்து, அணி அலங்காரம் பூட்டி அதன் சுயமான குரலை ஒடுக்கியவர்கள், புலவர்களே. நமக்குக் கிடைத்திருக்கும் பழைய இலக்கியங்கள், புலவர்கள் எழுத்தே ஆகும்.

நவீனத்தின் வலிமை மிகுந்த அசைப்பு, தன்னைப் பாதித்துவிடாமல் அசோகமித்திரன் எப்படித் தன்னைக் காத்துக்கொண்டார்? இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து நிலைபேறுடைய படைப்புகளை நிதானமாகத் தொடர்ந்து எப்படி அவர் தர முடிந்தது? அவரின் கதைமாந்தர்கள் மட்டுமே அவரை இன்னும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மனிதர்கள், சாமான்யமான மனிதர்கள். எப்போதும் மனதின் ஓரத்தில் வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், பலசரக்குக் கடை பாக்கி ஆகியவற்றை நிறுத்தி, கவலைப்பட்டுக் கொண்டு இருப்பவர்கள். கடன் என்கிற விஷயம் அவரது கதைமாந்தர்களை அரித்துக்கொண்டே இருக்கிறது. ஏனெனில், அவர்களில் பெரும்பாலானோர் யோக்கியர்கள். வாங்கிய கடன் அவர்களைப் பதற்றத்துக்கு உள்ளாக்குகிறது. அவர்கள், கொடுத்த கடனை வசூலிக்கத் தயக்கம் கொள்பவர்கள். வந்தும் வாய்க்காத கடைநிலை குமாஸ்தாக்கள் அவர்கள்.

சரி, அந்த மனிதர்கள் அசோகமித்திரனுக்கு எவ்வனம் சாஸ்வதம் அளிக்கிறார்களாம்? எப்படியென்றால், அவர்கள் அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக் கிறார்கள். ‘தேமேன்னு’ வாழ்கிறார்கள். அவர்களின் பாட்டை அவர்களுடன் நெருங்கி நின்று, தொட்டுவிடக்கூடிய தூரத்தில் நின்று, உண்மையாக ஒளித்தல் இன்றி, பெருக்கம் இன்றி அவர்களை எழுதுகிறார்.  மேலும், அவர்களை மிச்சம் வைக்காமல் எழுதிக் காட்டுகிறார் அசோகமித்திரன்.

அப்படியென்றால், எழுத்தில் நுணுக்கம், பூடகம், ஆழம் என்றெல்லாம் சில சவால்கள் இருந்து தொலைக்கின்றனவே, இவையெல்லாம் அவரால் எப்படி எதிர்கொள்ளப்பட்டது? அசோகமித்திரன் ஒளிர்வது இங்குதான். நுணுக்கத்தின் இடத்தில், பூடகத்தின் இடத்தில், ஆழத்தின் இடத்தில், அவர் மனிதர்களின் பெருமூச்சுகளை வைக்கிறார். உப்புக் கரிக்கும் வியர்வையை வைக்கிறார். அவமானங்களின், புறக்கணிப்புகளின் உள்ளடங்கிய, வெளிப்படுத்த முடியாத பொருமல்களை, பாவப்பட்ட மனிதர்களின் இருப்பை வைக்கிறார்.

அசோகமித்திரன் என்கிற... - பிரபஞ்சன்

விளக்கம் தேவை இல்லையா?

வீணை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறாள் அந்தப் பெண். அப்பா, வேண்டாம் என்கிறார். சம்பளம்தான் பிரச்னை. அந்தப் பெண், ஆசிரியரையும் பார்த்து, அந்த மனிதருக்கும் இவளைப் பிடித்துபோக, கற்றுக்கொடுக்கச் சம்மதிக்கிறார். சம்பளம் எத்தனை என்கிறாள் அம்மா. சொல்கிறாள் பெண். இத்தனையா என்கிறாள் அம்மா. பரவாயில்லை, கற்றுக்கொள் என்கிறாள் அம்மா. வேண்டாம்மா. சம்பளம், அப்புறம் அப்பா. வேண்டாம்மா, நான் சங்கீதம் கற்றுக்கல என்கிறாள் பெண். இல்லை. கற்றுக்கொள் என்கிறாள் அம்மா. இரவு உறங்கும்போது, பெண் அம்மாவை அணைத்துக்கொள்கிறாள். அம்மா உடம்பு குலுங்குகிறது. அம்மா அழுது கொண்டிருப்பது தெரிகிறது.

இதுவே அவரது கலை.

நீண்ட நாளாக வேலை இல்லாத புலி வேஷக்காரன், ஒரு சினிமா ஸ்டுடியோவுக்கு வேலை கேட்டு வருகிறான். மேனேஜர் சர்மா கேட்காமலேயே, வேஷம் அணிந்து தன் கலையை வெளிப்படுத்துகிறான். சில கணங்களில் அவன் புலியாக மாறுகிறான். அதன் ரௌத்ரம். வேகம், இயல்புகள் அனைத்தும் அங்கு அரங்கேற்றம் ஆகிறது. அந்த அலுவலகம் காடாக, புலி வாழும் இடமாக மாறுகிறது. தப்பித்து வந்த, மனிதர்களின் கைகளுக்கு அகப்படாத சீற்றம் கொள்ளும் புலி. அலுவலகம் பயந்து ஒடுங்கிப் போகிறது. சர்மா, தன் அடுத்த படத்தில் ஹீரோவுக்குப் புலி வேஷம் வைக்கிறார். துரதிருஷ்டவசமாக, புலிக்கலைஞனுக்கு தகவல் போய்ச் சேரவில்லை. ‘நபர் இல்லை’ என்று தபால் திரும்பி வருகிறது. இந்தக் கதையைப் படித்து முடித்த உங்கள் அறையில் புலியின் உறுமல், கர்ஜனை கேட்கும். புலி, உங்கள் எதிர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் பிரமை தோன்றும். எல்லாவற்றுக்கும் மேலாக அந்தப் புலிக்கலைஞன் என்ன ஆனான் என்று கவலை தோன்றும். காணாமல்போகிற மனிதர்களைச் சொல்லத்தானே இலக்கியம். நாம்தானே புலிக்கலைஞர்கள். காணாமல் போகிறவர்கள். வாழ்ந்துகொண்டே வாழாமல் மடிபவர்கள்.

இது அசோகமித்திரன்

நீங்கள் அந்தப் பெண்ணைப் பார்த்திருப்பீர்கள். வீடு வீடாகப் போய் தம் கம்பெனியின் புதுத் தயாரிப்பான சக்தி வாய்ந்த சோப்புத் தூள் விளம்பரத்துக்கு வருபவள். அழுக்குத் துணியைப் பெற்று அங்கேயே தம் சோப்புத் தூளின் பெருமையை நிறுவுபவள். இப்போது, ஒரு வீட்டுக்குள் கேட் சப்தம் எழாமல் திறந்து நுழைபவள். தம் சோப்பினுடைய வீரியத்தின் பெருமையைச் சொல்ல வாய்ப்பு கேட்கிறாள். பல வீடுகளிலும் நிரூபணம் செய்து களைத்து வருகிற பெண் அவள். அந்த வீட்டுக்கார அம்மாள், புடவையைக் கொடுத்து துவைக்கச் சொல்கிறாள்.

‘ஒன்பது முழப் புடவையா’ என்று கேட்கிறாள் அந்தப் பெண். அதில்தான் ஒரு வர்க்கத்தின் பெருமூச்சு கேட்கும். திரும்பிச் செல்ல முடியாமல் புகுந்த வழி அடைக்கப்பட்டுச் சிக்கிக்கொண்ட பரிதாபத்துக்குரிய ஜீவன்களின் மகத்தான சோக மூச்சு அது. மட்டுமல்ல, இந்தக் கதையின் ஊடுபாவாக மதம் பற்றிய ஒரு அழுத்தமான கருதுகோளை முன்வைக்கிறார் அசோகமித்திரன்.

இப்படியான வாழ்க்கை வாழும் மனிதர்களின் உள் கலக்கத்தை, பாடுகளை, வார்த்தைப்படுத்தாமல் காட்சிப்படுத்தும், வாசிப்பவரின் ஆத்மாவுக்குள் தொழில் செய்யும் எழுத்தாளர் அவர். உலகம் துக்ககரம் என்பது அவர் பார்வை. துக்க காரணம்? நீங்கள் தேடுங்கள். துக்க நிவாரணம்? நீங்கள் தேடி அடையுங்கள் என்கிறார் அவர். காஃப்கா, அவருடைய தந்தைக்கு எழுதிய கடிதத்துக்கு நிகரானவை அசோகமித்திரனின் கதைகள்.

அவருடன் சண்டை போடும் வாய்ப்புகளும் எனக்கு நிறையவே கிடைத்துள்ளன. சா.கந்தசாமியின் ‘விசாரணைக் கமிஷன்’ நாவல், சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டின் தேர்வாளர்களாக நானும் அசோகமித்திரனும் பிரேமா நந்தகுமாரும் இருந்தோம். வந்திருந்த படைப்புகளில் விசாரணைக் கமிஷனும் ஒன்று. சா.கந்தசாமியின் எழுத்துக்களின் மீது மரியாதை கொண்டவர்தான் அசோகமித்திரன். கந்தசாமிக்கே விருது தரப்பட வேண்டும் என்று நான் சொன்னதை அவர் கடுமையாகவே மறுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், ‘அண்மையில் காலமான ஆதவனுக்கு அந்தக் கௌரவம் போக வேண்டும்’ என்றார் அவர்.  ‘காலமானவர்கள் தகுதி உடையவர் என்றால், அதற்கான பரிசுகளைத் தனியாக நிறுவிக் கொடுக்கட்டும் அகாடமி. ஆதவன் என் மரியாதைக்கு உரியவர்தான் என்றாலும் வாழும் எழுத்தாளனைத் தவிர்த்துவிட்டு, காலமானவர்களைக் கௌரவிப்பது என்ன நியாயம்’ என்று என் வாதம் அமைந்தது. இத்தனைக்கும் சா.கந்தசாமியினுடைய தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றான ‘சாயாவனம்’ பட்டியலில் சுமார் 20 ஆண்டுகளின் முன் இடம்பெற்று, அந்தக் காலத்துத் தேர்வாளர்களால் விடப்பட்டதை, அந்த மோசமான முன் உதாரணத்தை அவர் அறிவார். ‘சாயாவனம்’ பெறாத அந்தப் பரிசை அந்த ஆண்டு லட்சுமி பெற்றார். இதையெல்லாம் அவர் அறிவார். ஒரு நல்ல எழுத்தாளனுக்கு அந்தப் பரிசு நல்கும் நல்வாய்ப்பு கையெட்டும் தூரத்தில் இருந்தும்கூட, அந்த வரலாற்றுப் பணியைத் தவறவிட அவர் முயன்றார் என்பது இப்போதும் என் வருத்தம். நெறியாளராக வந்திருந்த, நீலபத்மநாபனிடம், தகுதியான (இறந்த) எழுத்தாளர்களுக்குப் பரிசொன்றை அறிவிக்கலாம் என்றும் நான் சொன்னேன். கடைசியாக சா.கந்தசாமியின் நாவலுக்குப் பரிசளிக்க அசோகமித்திரன் ஒப்புக்கொண்டார். பிரேமா நந்தகுமார், வேறு ஓர் எழுத்தாளரைத் தேர்வு செய்தாலும், எங்கள் இருவரின் தேர்வை அங்கீகரித்து எங்களை ஆதரித்தார். மூன்று பேரும் அந்த ஆண்டுக்கான பரிசை, சா.கந்தசாமிக்கு வழங்கினோம்.

அசோகமித்திரன் என்கிற... - பிரபஞ்சன்



‘பிராமணர்கள் இந்த நாட்டில் மிக மோசமான நிலையில் வைக்கப்பட்டிருக்கி றார்கள்’ என்பதுபோல திடுமென எழுதி இருந்தார் அசோகமித்திரன். இது எனக்கு அதிர்ச்சி தந்தது. நான் கடுமையாகவே என் கருத்தை வெளியிட்டு அவரையும் விமர்சித்து எழுதினேன். என் மூத்த சகா தன்னை இன்னும் பிராமணராகக் கருதி இருந்தது என்னை உறுத்துகிறது.

சாதத் ஹசன் மண்ட்டோ என் மரியாதைக்குரிய எழுத்தாளர். அவர் தன் சினிமா அனுபவத்தை அருமையாக எழுதியிருக்கிறார். சினிமா கலைஞர்கள் பலரையும் உயிர்ப்புடன் எழுத்தில் கொண்டுவந்தவர் அவர். மண்ட்டோவுக்கு நிகராகவே அசோகமித்திரனின் சினிமா சார்ந்த கட்டுரைகளைச் சொல்லலாம்.

கணையாழியின் பொறுப்பாசிரியராக 23 ஆண்டுகள் பணிசெய்த அசோகமித்திரனின் அரசியல், கலை, இலக்கியம் பற்றிய கட்டுரைகள் பல புரிதல்களை ஏற்படுத்தவல்லவை. ‘ஓர் எழுத்தாளன் தேர்ந்தெடுக்கும் மொழி (நடை) அவனை நிர்ணயித்துவிடுகிறது. இயல்பானதும் அதே நேரத்தில் நேரடி அனுபவத்தில் ஆதாரம் கொண்டதுமான மொழி, காலத்தைக் கடந்து பின்வரும் சிருஷ்டிக் கலைஞர்களுக்கும் பயன்படுகிறது’ என்று கணையாழிக் கூட்டத்தில் சா.கந்தசாமி பேசிய பேச்சை ஏற்று, வெளிப்படுத்துகிறபோது தன்னையும் வெளிப்படுத்திக்கொள்கிறார்.

அசோகமித்திரனின் அக்கறை ஒரு கையின் கட்டைவிரல் அல்ல, முந்திக்கொண்டு வரும் சுட்டுவிரல் அல்ல, மோதிரம் போட்டுக்கொள்ளும் விரல் அல்ல, பாவப்பட்ட சுண்டுவிரல் மட்டுமே என்பது முக்கியம். சினிமாவின் பளபளப்பு, மிகு வெளிச்சம் அவரது கண்களைக் கூச வைக்கின்றன. அவரது சினிமா மனிதர்கள், பின் இருந்து சினிமாவை உருவாக்குபவர்கள். தமிழகத்தையே ஆட்சி செய்யும் சினிமாவால், நல்ல நாவல்கள் நான்கைந்தைக்கூடக் காண முடியவில்லை. அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ இன்னும் பல காலம் பேசப்படும்.

அவரது ஆச்சர்யம் தரும் நடவடிக்கைகளில் ஒன்று, ‘பரீக்‌ஷா’ நாடகத்தில் நடித்தது. இதை அவர் ரசித்து ஏற்றுக்கொண்டாரா என்பது தெரியவில்லை. ஆனால், ரசித்துச் செய்தார்.

ஒரு பிறந்த நாளில் அவரை, அன்று பேசப்போன மேடையில் ‘நூறாண்டு இரும்’ என்று பலரும் வாழ்த்தினார்கள். கூட்டம் முடிந்து அவரும் நானும் நடந்து வந்து கொண்டிருந்தோம். ‘நூறாண்டு இருக்கச் சொல்கிறார்கள் சார். இப்போதே போதும் போதும் என்று தோணுகிறது. நோய் நொடி என எத்தனைத் தொந்தரவுகள், சீக்கிரமாகப் போனால் தேவலை’ என்றார்.

ஆமாம், வாழ்வது என்பது கஷ்டம் தரும் அனுபவம்தான். மரணம் அவருக்கு அமைதியை நிரந்தரமாகத் தந்துவிட்டது.