மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

இங்கேயும்... இப்போதும்...

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

தேன்மொழி

“மழையின் நீர்க்கால்களைத் தேடும் பயணம்தான், படைப்பாளியின் பயணம். படைப்பாளி, ஒரு சொல் வலை வேட்டுவன். அப்படியொரு ஆழத் தேடல் உள்ளவளே நானும். கவிதை, கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, கலை வரலாறு என எந்தப் படகில் பயணித்தாலும், ஆழிப் பேரலையில் சமூகம் கலந்துவிட்ட ஒரு துளித் துயரக் கண்ணீரைத் தேடியதாகவே இருக்கிறது என் பயணம். பெரும்பாலான நேரத்தில் அந்தக் கண்ணீர் பெண்ணினுடையது, குழந்தையினுடையது, துயருற்றோருடையது. அண்மைக் காலமாக என் படைப்புகளை குழந்தைகள் ஆக்கிரமித்துக்கொள்கின்றனர். குழந்தைகளை இந்தச் சமூகம் எதிர்கொள்ளும் விதம் என் உணர்வைக் குலைக்கிறது. குழந்தைகளின் உலகத்தைப் பாதுகாப்பதையும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான உலகத்தை அளிப்பதையும் தனது இலக்காக்கி முளைக்கின்றன என் படைப்புகள்.”

திருவாரூரைச் சேர்ந்த தேன்மொழி, `துறவி நண்டு’, `தினைப்புனம்’ கவிதை நூல்களையும், `நெற்குஞ்சம்’, `கூனல் பிறை’ சிறுகதை நூல்களையும், `புலப்படா சுயம்’ என்ற கட்டுரை நூலையும் எழுதியிருக்கிறார். பாகிஸ்தான் பெண் படைப்பாளிகளின் சிறுகதைகளை மொழிபெயர்த்துத் தொகுத்திருக்கிறார். கலை வரலாறு தொடர்பாக விரிவான கட்டுரைகளை எழுதிவரும் இவர், வணிக வரித் துறையில் துணை ஆணையராகப் பணிபுரிகிறார்.

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

நாராயணி கண்ணகி

“எனக்கு எழுத வருகிறது. எழுதுகிறேன். அவ்வளவே! இயல்பில், நுணுங்கிய தங்கத் துகள்களைப் பெருக்கி, தனிமம் சேர்த்து, கோத்து வடிக்கும் ஒரு நகைக் கலைஞன் நான். எழுத்திலும் நான் அப்படியே. ஞாபகத்தில் பதிந்த சிறுசிறு நிகழ்வுகளைப் புனைவு கலந்து பெருக்கி வடிக்கும் கலைஞன். இசங்களைத் தேடி அலையாமல், என் வாழ்வின் பாதையில் இருந்து எனக்கான களங்களையும் என் படைப்புக்கான மனிதர்களையும் தேர்வுசெய்கிறேன். என் மொழிதான் என் எழுத்தின் மொழியும். மொழியின் மேல் பூடகங்களைச் சுமத்துவதில் எனக்கு ஏற்பில்லை. வட்டார வாழ்க்கையின் கொண்டாட்டங்களையும் துயரங்களையும் என் எழுத்துகள் தாங்கிப் பிடிக்கின்றன. காலத்தின் மேனியில் என் எழுத்து நிலைக்கும் என்ற நம்பிக்கையில்தான் என் அடுத்த படைப்புக்கான உயிர் எழுகிறது.”

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் வசிக்கும் நாராயணி கண்ணகி, நகை செய்யும் தொழிலாளி. நகைப்பட்டறை வைத்திருக்கிறார். திரைப்பட இயக்குநர்கள் சிலரிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியவர்.  `இல்லறத் துறவி’, `மனித மரங்கள்’ சிறுகதை நூல்களும், 20-க்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதியிருக்கிறார். போலி நக்சல்பாரிகளைக் குறித்து இவர் எழுதியுள்ள ‘அநக்சல்’ எனும் நாவல் விரைவில் வெளிவர இருக்கிறது. இவரது இயற்பெயர் சி.நாராயணன்.

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

“ `போராடும் எழுத்துகளே நல்ல எழுத்துகள்’ என்ற சார்த்தரின் கூற்றும் `கதை என்பது உண்மையை அறிந்துகொள்வதற்கான ஒரு விசாரணை’ என்ற குந்தர் கிராஸின் கூற்றுமே என் எழுத்துக்கான அளவுகோல். வெறும் அழகியலையும் மனச் சிடுக்குகளையும் கடந்து, வெகுசமூகத்தின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி ஒடுங்கி வாழும் எளிய மக்களின் துயரத்தில் இருந்து எழுகிறது என் எழுத்து. இலக்கியம் என்பது ரசனைவாத வரலாறு. நான் கதையின் வழி சமூகத்தைப் பதிவுசெய்யும் வரலாற்றாசிரியன். என் தேடலும்  என் பாடலும் என்னைப் போன்ற எளிய மனிதர்களை நோக்கியதாகவே இருக்கிறது. நாளை எனக்கான வரலாறாகவும் என் படைப்புகள் எழுந்து நிற்கும்.”

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்நஸீர் என்ற இயற்பெயரைக்கொண்ட ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன், கோவையைச் சேர்ந்தவர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் வரைவு அலுவலராகப் பணிபுரிகிறார்.

25 ஆண்டுகளாகத் தொடர்ந்து இலக்கியத் தளத்தில் இயங்கிவருபவர்.  `நகரமே ஊளையிடும் பாலைவனம் போல’, `போன்சாய் மரங்கள்’, `கர்வம் பிடித்தவனின் கதை’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளை எழுதியிருக்கிறார். இஸ்லாமிய இயக்கங்களின் பின்னணியில், மக்களின் கலாசாரங்களை முன்னிறுத்தி `73-வது கூட்டத்தினர்’ என்ற நாவலும், கோவை கலவரச் சூழலை மையமாக வைத்து `ஒரு நகரத்தின் கதை’ என்ற நாவலும் விரைவில் வெளிவர இருக்கிறது.

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

“பொது என்பதும் இயல்பு என்பதும் அதனதன் குணாம்சங்களில் இருந்து நிரூபிக்கப்பட்டு, ஒரு சாராரின் இருப்பு விளைவாகிறது. அதன் புழங்கும் வெளி, சகமனிதனை நேசிக்கும் ஞாபகக்கூற்றை முற்றாக அழித்தொழிப்பு செய்கிறது. இது ஒருவகையான உளவியல் நோய்மைக் கூறு. இதன் விளைவாய் விளைந்து நிற்கும் மேல்கீழ் அடுக்கமைவு கொண்ட பழஞ்சமூகத்தின் மனச்சான்றினைக் கேள்விக்கு உட்படுத்தும் பொருட்டும் அதனை அக நோய்மையில் இருந்து விடுவிக்கும் பொருட்டும் என் எழுத்து முளைக்கிறது. என்னுடையவை, புறக்கணிப்பின், பெருந்தனிமையின் சொற்கள். அந்தச் சொற்களின் கூர்முனை, இந்தத் தேசத்தை அகழ்ந்து, அதன் வேரில் ஊடுருவும் என்ற நம்பிக்கையில்தான் நான் அடுத்த படைப்புக்குத் தயாராகிறேன்.”

`கொஞ்சோண்டு’, `ஒழுகிய வானத்தை நேற்றுதான் மாற்றினோம்’, `ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளையும், `ஆச்சிமுத்து’ என்ற சிறுகதை நூலையும் எழுதியுள்ள திண்டுக்கல் தமிழ்ப்பித்தன், தேவகோட்டையில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றுகிறார். சிற்றிதழ்களிலும், இலக்கிய அமைப்புகளிலும் தீவிரமாகப் பங்காற்றும் திண்டுக்கல்காரர். `சூரியனில் முளைக்கும் பனை’ என்ற கவிதை நூல் விரைவில் வெளிவர இருக்கிறது. இவரது இயற்பெயர் பூண்டி ஜெயராஜ்.