மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

வாசகிகள்ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200 - ஓவியங்கள்: ராமமூர்த்தி

`அடேங்கப்பா’ வியாபாரத் தந்திரம்!

அனுபவங்கள் பேசுகின்றன!

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் வரை பஸ்ஸில் பயணித்தேன். பிளாட்பாரத்தில் கொய்யாப்பழம் விற்றுக்கொண்டிருந்தார் பெரியவர் ஒருவர். `ஐந்து ரூபாய்க்கு ஐந்து பழங்கள்’ என்று அவர் கூவிக் கூவி அழைத்தும், யாரும் வாங்கவில்லை. ``சும்மா கொடுத்தாத்தான் வாங்குவாங்க போலிருக்கு...’' என்று சலித்துக்கொண்டார். அருகில் வியாபாரம் செய்த ஓர் இளைஞன் ‘ஆறு கொய்யாப்பழம் ஐந்து ரூபாய்’ என்று விற்க, அவனிடம் நிறையப் பேர் வாங்கினர். இதைக் கவனித்த நான், அந்தப் பெரியவரிடம் ``அந்தப் பையனின் சாமர்த்தியம் உங்களுக்கு இல்லையே... நீங்களும் `ஆறு கொய்யாப்பழம் ஐந்து ரூபாய்’ என்று விற்றிருந்தால், வியாபாரம் ஆகியிருக்குமே’’ என்றேன். அதற்கு அவர், ``அவன் என் மகன்தான். மலிவாக வாங்கிப் பழக்கப்பட்டவர்களுக்கு சொன்ன விலையில் வாங்க மனசு வராது. அதனால்தான் நான் முதலில் ‘ஐந்து கொய்யாப் பழம் ஐந்து ரூபாய்’ என்கிறேன். அடுத்து என் மகன் ஆறு கொய்யாப்பழம் ஐந்து ரூபாய்’ என்றதும், அவனிடம் நிறையப் பேர்  வாங்கிவிட்டார்கள். இது எங்கள் வியாபாரத் தந்திரம்’’ என்றார்!

- எஸ்.சாந்தி ரங்கநாதன், திருவானைக்கோவில்

வினையாக மாறிய வெந்நீர் குளியல்!

அனுபவங்கள் பேசுகின்றன!

னக்கு மிகவும் பழக்கமான இளம்பெண் அவள். முருகன் கோயிலுக்குப் போக வேண்டும் என்று காலை நான்கு மணிக்கே எழுந்து, வாளியில் வெந்நீர் விளாவிவிட்டு, தன் ஆறு வயது மகனை எழுப்பி குளிக்கச் சொல்லிவிட்டு, மற்ற வேலைகள் செய்யச் சென்றுவிட்டாள். குளியலறையிலிருந்து ‘ஓ’வென்ற அலறல் சத்தம் கேட்டு  ஓடிச் சென்றாள். மகனின் பாதி முதுகும் மார்புப் பகுதியும் கொப்பளித்துவிட்டன. அவள் வெந்நீர் விளாவியபோது, வாளியில் செருகிய நிலையில் இருந்த மக்கில் வெந்நீர் (கொதிநிலையில்) நிறைந்திருக்கிறது. பையன் முதலில் மக்கில் இருந்ததை ஊற்றிக்கொண்டதும், உடம்பு கொப்பளித்துவிட்டது. நண்பர் மூலம் தெரிந்த டாக்டரை எழுப்பி அவசரமாக வைத்தியம் நடந்தது. பையன் ஒரு மாதம் அவஸ்தைப்பட்டான்.

குழந்தைகளைப் பராமரிக்கும்போது மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இது ஒரு பாடம்.

- எஸ்.மீனா, ஸ்ரீரங்கம்

பச்சிளம் குழந்தையைப் படுத்தாதீர்கள்!

அனுபவங்கள் பேசுகின்றன!

ன் உறவுக்காரப் பெண்ணுக்கு மிக நீண்ட காலம் கழித்து பெண் குழந்தை பிறந்திருந்தது. அதனால், பெயர் சூட்டு விழாவை கோலாகலமாகக் கொண்டாடினர். விழாவுக்கு வந்திருந்த உற்றார் உறவினர்... அரைஞாண், கொலுசு, செயின், மோதிரம் என்று குழந்தைக்கு அணிவித்து மகிழ்ந்தார்கள். அந்நிலையில், குழந்தை விடாது அழத் தொடங்கியது. ‘உரம்’ விழுந்துவிட்டது, `தண்ணிக்கு அழுகிறது’, `பாலுக்கு அழுகிறது’ என்று ஆளுக்கொரு கருத்து சொன்னார்கள். தாய்க்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

குழந்தைக்குப் பாலூட்டியபோது குழந்தையின் கையைப் பார்த்தால், விரலில் ரத்தக் கசிவு. விளிம்பு  கூர்மையாக உள்ள ஒரு மோதிரத்தை யாரோ ஒருவர் குழந்தைக்கு அணிவித்ததே அழுகைக்குக் காரணம் என்பது புரியவர, குழந்தைக்கு அணிவித்திருந்த நகைகளைக் கழற்றிவிட்டு, எளிமையான பருத்தி  உடையைப் போட்டுவிட்டதும், நிம்மதியாக உறங்கியது.

சகோதரிகளே... குழந்தைகளுக்குச் சீர் செய்பவர்கள் அதை பெற்றோரிடமே கொடுத்து விருப்பப்படும் நேரத்தில் அணிவித்து மகிழச் சொல்லுங்கள். பச்சிளம் குழந்தையை மணப்பெண்போல அலங்கரித்துச் சீராட்ட நினைத்தால், கடைசியில் வருத்தம்தான் மிஞ்சும்!

- இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்

உள்ளத்தில் நல்ல உள்ளம்!

அனுபவங்கள் பேசுகின்றன!

ரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற என் தோழியின் அப்பா... பேனர், ரேடியோ, வீடியோ வைத்து விழா நடத்தி விருந்து கொடுத்தார். அழைப்பை ஏற்று வந்தவர்கள் பொன்னாடைகள், சால்வைகள், டவல்கள் என பலவற்றையும் போர்த்திக் கௌரவித்தனர். அவை அனைத்தும் மலைபோல குவிந்துவிட்டன. விழா முடியும்போது பேனர், ரேடியோ, வீடியோ செட் அலங்காரம் செய்பவர்கள் எல்லோரையும் தோழியின் அப்பா அழைத்து, தனக்கு வந்த சால்வைகளை அவர்களுக்கு ஆளுக்கொன்றாகப் போர்த்தி பணமும் கொடுத்து அனுப்பி வைத்தார். விலையுயர்ந்த சால்வைகளைப் பெற்றவர்கள், அவர் பல்லாண்டு பல்லாண்டு ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என மனதார வாழ்த்தினர்.

வீட்டிலேயே வீணாகக்கூடிய பொன்னாடைகளை உடனடியாக மற்றவர்களுக்குக் கொடுத்தது, நல்ல முன்னுதாரணம். நாமும் இதைப் பின்பற்றலாமே!

- ஜி.விஜயலெட்சுமி, கும்பகோணம்