மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 25

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

யது பழுத்த முதுகிழவர். தோளிலே விழுந்து புரளும் நரைமுடி. பற்கள் உதிர்ந்துவிட்டன. ஆனாலும் கண்பார்வை மட்டும் அப்படியே. அதுவும் இரவாகிவிட்டால் கண்களின் ஒளி மெருகேறிவிடும்போல. அரண்மனைத் தாழ்வாரத்தின் வழியே தளர்ந்து நடந்துவரும் திசைவேழரைச் சுற்றி தலைமை மாணாக்கர்கள் நால்வர் வந்தனர். நேற்று இரவே அரண்மனைக்கு வந்து சேர்ந்த அவர், நண்பகலில்தான் புது மாளிகையில் வரையப்பட்ட காலக்கணக்கைப் பார்க்க வருகிறார்.

அவரது வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தான் அந்துவன். அரண்மனையின் தலைமைக் கணியன் அவன்தான். ஆனாலும் ஆசான் வருகை உள்ளுக்குள் சிறு நடுக்கத்தை ஏற்படுத்தியபடி இருந்தது. அந்துவனுக்குப் பக்கத்தில்  அவன் உதவியாளர்கள் நின்றிருந்தனர்.

ஆணை மணி ஓசையெழுப்பியபடி பணியாளன் முன்நடந்து வந்தான். அரண்மனையின் பேரதிகாரம் பெற்றவர்கள் வரும்போது, அவர்களுக்கு முன் இந்த ஓசை எழுப்பப்படும். திசைவேழர், கோலூன்றி நடந்து வந்தார். அரண்மனைக்கு அவர் வந்து எட்டு ஆண்டுகள் ஆயிற்று. சென்றமுறை அவர் வந்தபோது அவரோடு கபிலரும் வந்திருந்தார். இருவரும் இருமாத காலம் இங்கு தங்கியிருந்தனர். விண்ணையும் மண்ணையும் பற்றி இரவு பகலாகப் பேசிக் களித்தனர். ஒரு வைகறைப்பொழுதில் வைகையின் நிலை மண்டபத்தில் அமர்ந்த கபிலர், அந்த முழு நாளும் எழுந்து வராமல் எழுதிக்கொண்டே இருந்தார். அத்தனையும் திசைவேழரின் பேரறிவைப் போற்றிப் பாடிய பாடல்கள்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 25

அந்த நாள்களின் எண்ணங்கள் அவர் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. பட்டியக்கல்லைப் பார்த்தபடியே ஊன்றுகோலை எடுத்துவைத்து நடந்தார். கார்கால மாளிகையின் வாயிலில் நின்ற அந்துவன் வணங்கி வரவேற்றான். சொற்கேட்டு  தலை ஆட்டினார். முகம் பார்க்கவில்லை. மாளிகையின் நடுவில், சின்ன அடையாளம் ஒன்றை வைத்திருந்தனர். நேராக அந்த இடம் வந்து நின்றார். நெஞ்சுக்கு நேராக ஊன்றுகோலை ஊன்றி இரு கைகளாலும் இறுகப்பிடித்தார். தலையை முன்சாய்த்து கண்கள் மூடியவர், சிறிய கால இடைவெளியில் தலையை அப்படியே பின்னால் சாய்த்தார். படுத்துக் கிடப்பவனைப்போல முகம் கிடைமட்டத்திலிருந்து  மேற்கூரையைப் பார்த்தது. கண்களைத் திறந்தார். கருவிழிகள் காலத்துக்குள் நுழைந்தன. பொதியவெற்பன் பிறந்தபோது இருந்த நாள்மீன்களும் கோள்மீன்களும் அவரின்  நினைவுக்கு வந்தன.  மேற்கூரையில் உள்ளொடுங்கிய விண்மீன்களுக்குள் கண்கள் செருகின.

உடலையோ கழுத்தையோ சுற்றாமல் கருவிழிகளைச் சுழற்றி மேற்கூரையின் முழுவட்டத்தையும் பார்த்து முடித்தார். தலை முன்வணங்கி கோல் நோக்கிக் கவிழ்ந்தது. என்ன சொல்லப்போகிறார் என்பதறிய அந்துவன் ஆவலோடு இருந்தான்.

அமைதியான அந்த மாளிகையில் மெள்ள ஒலித்தது திசைவேழரின் குரல். “பொதியவெற்பன் பிறந்தநாள் என்ன?”

அந்துவனுக்கு விடை உடனே நினைவுக்கு வரவில்லை. சற்றே நிதானித்துச் சொன்னான், “வளர்பிறையின் எட்டாம் நாள்.”

“எந்தப்பொழுதில் பிறப்பு நிகழ்ந்தது?”

“அதிகாலையில்.”

“நீ செய்திருக்கும் பிழை என்ன?”

விளக்கம் அளிக்கும் வாய்ப்பு எதுவும் இந்த வினாவில் இல்லை. அடுத்த பிழையைத் தவிர்க்க மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்துவன் அதிர்ச்சிக்குள்ளானான். கண்களை அகலத் திறந்து மேற்கூரையைப் பார்த்தான். ஒன்றும் பிடிபடவில்லை.

“வளர்பிறை நாள்களில் கதிரவன் எழுவதற்கு முன்பே நிலவு மறைந்துவிடும். கதிரவனும் நிலவும் இல்லா புலர் காலைப்பொழுதில்தான் பொதியவெற்பன் பிறந்தான். ஆனால், நீ வானத்தின் மேற்கு விளிம்பில் எட்டாம் நாள் நிலவை வரைந்து வைத்திருக்கிறாய். இதன் பொருள் என்ன தெரியுமா?”

உறைந்துபோய் நின்ற அந்துவனுக்கு, விடை சொல்ல நா எழவில்லை.

``ஓவியம் குறிப்பது, வளர்பிறையின் எட்டாம் நாள் அல்ல.”

அந்துவனுக்கு வியர்த்துக்கொட்டியது.

“மற்றவற்றில் தவறுகளின் அளவைப் பொறுத்து பாதிப்பின் தன்மை இருக்கும். ஆனால், காலக்கணக்கில் அப்படி அன்று. பெரியதோ, சிறியதோ பிசகு பிசகுதான். கணப்பொழுதில் எல்லாம் குலைந்துவிடும்.”
சொல்லியபடியே வேனிற்காலப் பள்ளியறையை நோக்கி நடந்தார். அது மேல்மாடத்தில் இருக்கிறது. ஏறிச்செல்ல தன் மாணவர்களைத்தான் அனுப்புவார் என்று நினைத்திருந்தான் அந்துவன். ஆனால், திசைவேழரின் கால்கள் படியேறிக் கொண்டிருந்தன.

லைமை அமைச்சர் முசுகுந்தரின் முன் யானைப்பாகன் நிறுத்தப்பட்டிருந்தான். “பாண்டியநாட்டின் பெருவிழா நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தச் சிக்கல் தொடர்பாக விசாரிக்கத் தாங்கள் வரவேண்டுமா?” என்று முசுகுந்தரிடம் அரசாங்கத்தின் களஞ்சியத் தலைவர் வெள்ளிகொண்டார் கேட்டார்.

“இப்படி ஒரு கோர நிகழ்வு நடந்துள்ளது என்பது நம்மினும் மேலுள்ளவர்களுக்குத் தெரியாது. ஆனால், கீழ்நிலை வீரர்கள் காதோடு காதாக இதைத்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். இப்போதே இதுகுறித்து விசாரித்து தண்டனை வழங்கினால், அந்த வீரர்களின் காதுகளில் தானாகப் போய்ச்சேரும். விழாக்காலத்தில் ஒழுங்கை உறுதிப்படுத்துவது முக்கியம். அதற்குத் தேவையான அச்ச உணர்வை ஊட்ட இது நல்ல வாய்ப்பு. அதை ஏன் தவறவிட வேண்டும்?”

நிர்வாகத்தை நடத்திச்செல்லும் மூதறிவாளர் முசுகுந்தர் என்பது அவரது ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுவதாக எண்ணி மகிழ்ந்தார் வெள்ளிகொண்டார்.

தனித்திருந்த அந்த மாளிகைக்கு இருவரும் வந்தபோது, கோட்டைத்தளபதி சாகலைவனும் யானைக் கட்டுத்தறியின் பொறுப்பாளன் அல்லங்கீரனும் அங்கு இருந்தனர். விசாரணைக்காக வரவழைக்கப்பட்ட மற்ற நான்கு வீரர்களும் பாகனுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தனர்.

பாகனின்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை, தளபதி சாகலைவன் தடித்த குரலில் கூறினான் “யானையைவிட்டுப் பாகனும், கப்பலைவிட்டு மீகானும் (மாலுமி) தப்பிக்க அனுமதியில்லை. இது பாண்டியநாட்டின் விதி. அதை நீ மீறியிருக்கிறாய்.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 25

“நான் என்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தப்பவில்லை. அதைக் காப்பாற்றவே முயன்றேன்.”

“மதம்கொண்ட யானையை எப்படிக் காப்பாற்ற முடியும்?”

“அதற்கு மதம் பிடிக்கவில்லை.”

“தளபதி மாரையனை அது ஏன் கொன்றது?”

“என்னை ஏன் அது கொல்லவில்லை?”

எதிர்க்கேள்வி, எரிச்சலை உண்டுபண்ணியது. கேள்விக்குள் இருக்கும் உண்மை, பதற்றத்தைக் கூட்டியது.

“அரை இருட்டுக்குள்ளிருந்து குதிரை பாய்ந்து கண்ணெதிரே வந்தால், எந்த விலங்குதான் அச்சங்கொள்ளாது? அச்சத்தால்தான் அது அடித்தது. மதத்தால் அல்ல.”

“உனது விளக்கம், தளபதியின் மரணத்தை நியாயப்படுத்தப் போதுமானதாக இல்லை. அதுவும் இந்தப் பெருவிழா நடந்து கொண்டிருக்கும்போது. ஒருவேளை யானை நெடுந்தெருவுக்குள் நுழைந்திருந்தால் இழப்பு என்ன ஆகியிருக்கும்?” 

“என் உத்தரவுகளை அது ஏற்கவில்லையே தவிர, அதற்கு மதம் பிடிக்கவில்லை. அதனால்தான் அது கட்டுத்தறியை நோக்கிப் போனது. மூன்று திருப்பங்களிலும் சரியாகத் திரும்பி நடந்தது. மேற்குவாசல் தளபதி சட்டென எதிரில் வந்துவிட்டார். இருட்டில் அவரின் வருகையை நானே பார்க்கவில்லை. அது வேகம் கொள்ளாமல்தான் அடித்தது. பின்னங்காலில் மிதிபட்டதால் அவர் செத்தார். அது நிற்காமல்... ஆனால், சரியான திசைநோக்கிப் போனதால்தான் குத்துக்கோலைக் (அங்குசத்தை) காதோரம் செருகிவிட்டு இறங்கினேன். அதை எளிதில் பிடித்திருக்க முடியும். ஆனால், அவசரத்தில் எல்லாம் தவறுதலாக நடந்துவிட்டன.”

“நீ நடந்துகொண்டதுதான் தவறு. அதை ஏற்காமல் எல்லாவற்றின் மீதும் பழிசுமத்தாதே.”

பாகனின் எதிர்க்கூற்றைக் கேட்டுக் கொண்டிருந்த முசுகுந்தர் சொன்னார், “பாண்டிய நாட்டின் பெருவிழா நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் மற்றவர்களுக்குத் தெரியாமல்  விசாரித்துக்கொண்டிருக்கிறோம். விசாரணையைக்கூடக் குற்றத்தின் பகுதியாக நீ மாற்றிவிட்டாய். நீ இழைத்த குற்றம் அன்றோடு நிற்கவில்லை. இன்றும் தொடர்கிறது.”

முசுகுந்தரின் சொல்லால் அதிர்ச்சியடைந்த அல்லங்கீரன், இனியும் பேசாமல் இருப்பது முறையல்ல என்று முடிவுசெய்தார்.

வேனிற்கால மாளிகைக்குள் நுழைந்தார் திசைவேழர். சுற்றுச்சுவர் முழுக்க செடிகொடிகளால் ஆன வண்ண ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. பச்சைநிறப் பரப்பாய் மதில்கள் காட்சி தந்தன. மாளிகையின் நடுவே போன திசைவேழர் வழக்கம்போல் கோலை ஊன்றி தலையை மேலேற்றி அண்ணாந்து பார்த்தார்.

சிறுபுலி கண்போல் அறுவை (சித்திரை) இருமீன் மேற்கூரையின் உச்சியில் இருந்தது. அதன் இடப்புறம் மூன்றாம்பிறை நிலவு இருந்தது. அதற்கு நேர் கீழே செவ்வாயும், அதற்கு எதிரே காரியும் (சனி) இருந்தன. அண்ணாந்த திசைவேழரின் தலை சற்றே கூடுதல் நேரம் எடுத்தது. அதேபோல அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த அந்துவனுக்குப் பிடரி பிடிப்பதைப்போல இருந்தது.

தலை இறக்காமலே  கேள்வி வந்தது. “செவ்வாய்க்கோளுக்குப் பூசியுள்ள செந்நிறத்துக்கான வண்ணத்தை எதிலிருந்து எடுத்தாய்?”

“வெடவேலம் பட்டையிலிருந்து எடுத்தேன்.”

“அதுதான் இளஞ்சிவப்பாக இருக்கிறது. செவ்வாய் அடர்சிவப்பு நிறம் அல்லவா? அதனால்தானே இந்த அழகிய பெயரை நம் முன்னோர்கள் சூட்டினர். நுணாமரக் கட்டையிலிருந்து சாறு எடுத்துப் பூசு. அதுதான் அடர்சிவப்பைத் தரும்.”

‘சரி’யென்று வேகமாகத் தலையாட்டினான் அந்துவன்.

``விண்மீன்கள் அனைத்தும் இமைக்கும் ஒளி உடையவை. அவற்றுக்குக் கோள்மீன்களைப்போல வெறும்வண்ணம் பூசாதே. சிப்பியைத் தட்டியோ, சுக்கான் துகளைக் கலந்தோ பூசு. அப்போதுதான் இமைக்கும் தன்மை கிடைக்கும்.''

‘சரி’யென்று மீண்டும் தலையசைத்தான். `நல்லவேளை பெரிய தவறு எதுவும் இதில் இல்லை' என்று மனம் சற்று நிம்மதியடைந்தது.

திசைவேழர் திரும்பி நடக்கத் தொடங்கினார். எதிரே இருந்த சுவர் ஓவியத்தின் கீழ்ப்புறம் அவர் கண்ணில்பட்டது. நடக்கத் தொடங்கிய கால்கள் நின்றன. மற்றவர்களும் நின்றனர். எல்லோரின் கண்களும் எதிர் சுவரைப் பார்த்தன. வேனிற்கால மாளிகையாதலால் செடிகொடிகள் பின்னிக்கிடக்கும் பச்சை வண்ணக் காட்சி வரையப்பட்டிருந்தது.

எதைப் பார்த்து நிற்கிறார் என்பது மற்றவர்களுக்குப் புரியவில்லை. சற்றே உற்றுப்பார்த்தார். பின்னிக்கிடக்கும் கொடிகளுக்குக் கீழே தரையோடு இருக்கும் ஒரு செடியில் பூ வரையப்பட்டிருந்தது. ஊன்றுகோலை நோக்கிக் காட்டி “இது என்ன பூ?” என்று கேட்டார்.

என்ன  விடை சொன்னாலும் அது தவறாகத்தான் இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால், அது தவறாக வரையப்பட்டதால்தான் இந்தக் கேள்வியே பிறந்திருக்கிறது என்று எல்லோரும் நம்பினர்.  விடையேதும் வரவில்லை.

“யாருக்குமே இது என்ன பூ என்று தெரியவில்லையா?” என, சற்றே குரல் உயர்த்திக் கேட்டார்.

ஈட்டிபோல் புற இதழ்களையும், விசிறிபோல் அக இதழ்களையும் உடைய பொன்மஞ்சள் வண்ணம் கொண்ட அந்தப் பூவை உற்றுப்பார்த்து ஒரு மாணவன் சொன்னான், “நெருஞ்சிப் பூ.”

அந்துவனும் அதைத்தான் நினைத்தான். ஆனால், தவறு ஏதும் வந்துவிடக் கூடாது என்பதால் சொல்லவில்லை.

வீரயுக நாயகன் வேள்பாரி - 25

“நெருஞ்சிப் பூவுக்கு இன்னொரு பெயர் ஞாயிறுதிரும்பி. கதிரவன் எழுவதிலிருந்து மறைவது வரை அதைப் பார்த்தபடி திரும்பக்கூடிய விந்தையான மலர். அதனால் இதைக் கதிரவன் மேல் காமம்கொண்ட மலர் என்று சொல்வார்கள்” என்றார் திசைவேழர். எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால், புதிதாகக் கேட்பதைப்போலக் கேட்டனர். விடையின்றித் தலை தாழ்த்தி நிற்கும் மாணவனே ஆசானின் அகங்காரத்துக்குச் சுவையூட்டுகிறான். 

“பள்ளியறையில் நெருஞ்சிப் பூ வரைதல் மிகப்பொருத்தம்” என்று பாராட்டினார் திசைவேழர்.

தங்கள் ஆசானுக்குப் பாராட்டக்கூடத் தெரியும் என்று பல மாணவர்கள் அன்றுதான் அறிந்தார்கள். `இவர் பாராட்டுவார் எனத் தெரிந்திருந்தால், நாமே சொல்லியிருக்கலாமே!' என்று அந்துவனுக்குத் தோன்றியது.

அடுத்த கணம் கேட்டார், “இதில் இருக்கும் பிழை என்னவென்று சொல்லுங்கள்?”

வழக்கம்போல் அனைவரும் திகைத்தனர். பூவின் இதழ்களையும் அதன் வடிவத்தையும் உற்றுப்பார்த்தான் அந்துவன். `எல்லாம் சரியாகத்தானே இருக்கின்றன. இதில் என்ன பிழை கண்டார்?' எனச்  சிந்தித்தான்.

யாருக்கும் எதுவும் பிடிபடவில்லை.

அவரே சொன்னார். “நெருஞ்சிப் பூ எத்திசை நோக்கி இருக்கிறது?”

“நேராக மேல்வானத்தை நோக்கி இருக்கிறது.”

“அப்படியென்றால் நண்பகல் என்று பொருள். மாளிகையின் மேற்கூரையில் பின்னிரவு விண்மீன்கள் மின்னுகின்றன. மாளிகையின் சுவரில் பகல் வெயில் சுடுகிறது. என்ன வானியல் இது?”

மாணவர்கள் உறைந்துபோனார்கள். அவர் யாரையும் பார்க்காமல் ஊன்றுகோலை நகர்த்தியபடி முன் நடந்தார்.

ருகாலமும் கட்டுப்பாட்டுக்குள் அடங்கா பெருங்கிழவன் அல்லங்கீரன். அவன் பேச ஆரம்பித்ததும் விசாரணையின் சூழலே மாறியது.

“வந்திருக்கும் மண்ணீட்டாளர்கள் அவசரமாக அனுமதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை மாரையன் உணர்ந்திருந்தான். ஆனால், கோட்டைக் கதவை அவனால் திறந்துவிட முடியவில்லை. எல்லா அதிகாரங்களையும் காமக்கிழத்தின் படுக்கை அறைக்குள் வைத்துக்கொண்டு நீ இருந்தாய். அதுதான் சிக்கலுக்குக் காரணமே.”

அல்லங்கீரனின் குற்றச்சாட்டு சாகலைவனின் முகத்துக்கு நேர் எகிறியது.

“அவனுக்குக் கதவைத் திறக்கும் அதிகாரம் இருந்திருந்தால், இரவு நிலையுணவு கொடுப்பதற்கு முன்பே கட்டுத்தறிக்குச் செய்தி சொல்லி யிருப்பான். யானையும் கதவைத் திறந்து விட்டிருக்கும். எந்தச் சிக்கலும் ஏற்பட்டிருக்காது.”

“ஒரு மரணத்தை வைத்து நிலைநிறுத்தப்பட்ட அதிகாரத்தைக் கேள்வி கேட்காதீர்கள்” என்றார் வெள்ளிகொண்டார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 25

“மாரையன் கதவைத் திறக்க அவ்வளவு முயன்றபோதும், சாகலைவன் காமக்கிழத்தியின் கட்டிலைவிட்டு அகலாமல் இருந்ததுதான் அதிகாரத்தின் கோரவடிவம். நான் அதைத்தான் கேள்வி கேட்கிறேன்.”

“எல்லாவற்றையும் அறிந்துதான் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை கேள்விக்கு உட்படுத்தும் அதிகாரம் யாருக்கும் வழங்கப் படவில்லை” என்றார் வெள்ளிகொண்டார்.

“அறிவாலும் குணத்தாலும் எடுக்கவேண்டிய முடிவை, விதிகளாலும் கட்டளைகளாலும் எடுக்க முடியாது. மனிதன் எடுக்கவேண்டிய முடிவைச்  சட்டத்தின் கையில் ஒப்படைப்பது அறிவீனம்.”

அவ்வளவு நேரமும் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த முசுகுந்தர், சற்றே ஆவேசத்தோடு தலையிட்டார், “கட்டளைகளால் கட்டியெழுப்பப்படுவதுதான் அரசாட்சி. அதன்  உறுப்புகள்  அனைத்தும் உத்தரவுகளால் மட்டுமே இயங்க வேண்டும். முடிவெடுக்கும் அதிகாரத்தை இழப்பதன் மூலமே எல்லோருக்குமான சிறந்த முடிவு கிடைக்கிறது. எல்லோர் கைகளிலும் அதிகாரம் இருந்தால் எல்லாம் அழியும்.”

“மனிதனைவிட உயர்ந்த இடத்தை விதிகளுக்கு எப்படித் தர முடியும்?” என்று சொன்ன அல்லங்கீரன் சற்றே மூச்சுவாங்கிவிட்டுச் சொன்னார் “உங்களைப்போல உயரத்தில் இருக்கும் மனிதர்களுக்கு அதுதான் வசதியாக இருக்கிறது. ஏனென்றால், உங்களின் கையில்தான் சட்டவிதிகள் இருக்கின்றன. அவற்றுக்குத்தான் கண், காது என எதுவும் இல்லையே. கையில் எடுப்பவனுக்குத் தகுந்த கையுறைகள்தானே சட்டவிதிகள்.”

`கிழவனை இன்னும் பேசவிடக் கூடாது' என முசுகுந்தனுக்குத் தோன்றியது.

“இந்த மாநகரம் சட்டவிதிகளால் பதப்படுத்தப் பட்டது. அதன் பக்குவத்தைக் குலைக்க நினைப்பதை அனுமதிக்க முடியாது.”

``முளைத்தது விளையும்... விளைந்தது கனியும். அதற்கு எதிராக எதுவொன்றையும் பக்குவப் படுத்தி விளையவைக்கவும் முடியாது; பதப்படுத்தி கனியவைக்கவும் முடியாது. அதுதான் இயற்கை.”

“இயற்கையை ஆள்வதற்காகத்தான் வெல்ல முயல்கிறோம். வெல்வதற்காகத்தான் அழிக்க முயல்கிறோம். அந்த அழிவுதான் அரசாட்சியின் சாட்சி” குரல் கணீரென எதிரொலிக்க, இருக்கையிலிருந்து எழுந்தார் முசுகுந்தர்.

அடுத்து என்ன சொல்லப்போகிறார் என்பது அல்லங்கீரனுக்கு நன்கு தெரியும். அதனால் சற்றே முந்திக்கொண்டு சொன்னார், “மதமற்ற யானையை நான் கொன்றேன். மேல் தூக்காத அதன் வாலைக் கவனிக்காது பெரும் தவறிழைத்தவன் நான்தான். எனக்கான தண்டனையையும் சேர்த்துச் சொல்லிவிடுங்கள்.”

“நீதான் விதிகளின்படி முடிவைச் சிறப்பாக நிறைவேற்றியவன். தனித்து வந்த யானையை கண நேரத்தில் வீழ்த்தினாய். மணநாளில் மாமன்னர் சிறந்தோருக்கு வழங்கவிருக்கும் பொற்றாமரைப் பூவை உனக்கும் வழங்க ஏற்பாடு செய்கிறேன்.” 

“தவறுகளைச் ‘சிறப்பு’ என்று நீங்கள் பாராட்டுவதன் காரணம், சிறப்பானவற்றைத் தவறானதாக மாற்றிவைத்திருக்கும் உங்களின் அதிகாரம்தான்.”

திசைவேழர் பாண்டரங்கத்துக்குள் நுழைந்தார். மாணவர்கள் பின்தொடர்ந்தனர். இதுவரை பார்த்த இரு பள்ளியறையை இணைத்தாலும் இதன் அகலம் வராது. பார்வையின் எல்லை மேற்கூரையைத் தொடும்போது மனம் விரிந்து அடங்கும். ஆனால், ஆசானுக்கு அப்படி இருக்காது என்பது எல்லோருக்கும் தெரியும்.

உள்ளே நுழைந்ததும் அனைவரின் முகத்திலும் ஏற்பட்ட வியப்பு அளவு கடந்ததாக இருந்தது. ஆனால், அந்துவனின் முகம் எதையும் காட்டிக்கொள்ளாமல் மிக அமைதியாக இருந்தது. ‘இவ்வளவு பெரிய மேற்கூரையில் எல்லாமே மிக நுணுக்கமாக வரையப்பட்டுள்ளன. வானியல் வரையப்பட்டதில் மிகப்பெரிய மேற்கூரை இதுதான். இதைச் சரியாக வரையத்தான் மாதக்கணக்கில் பணி செய்தேன். இதைப் பார்த்து ஆசிரியன் சொல்லப்போகும் அந்தப் பாராட்டுச் சொல் போதும் வாழ்வுக்கு’ என்று காத்திருந்தான் அந்துவன்.

திசைவேழர் மண்டபத்தின் நடுவில் கோல் பிடித்து நின்று, மெள்ள தலையைத் தூக்கினார். அவர் கண்விழித்துப் பார்க்கும் அந்த முதற்கணம் அவர் முகத்தில் ஏற்படும் மலர்ச்சியைப் பார்க்க ஆவலோடு இருந்தான் அந்துவன். அவர் தலையைப் பின்புறம் கவிழ்ந்து கண்விழிக்கப்போகும் நிலையில் அந்துவனுக்குச் சட்டென நினைவுக்கு வந்தது தேவாங்கு இருக்கும் மரக்கூண்டு. ‘இளமருதன் இங்குதானே வைத்திருந்தான்.

எடுத்துவிட்டானா அல்லது இன்னும் இங்குதான் இருக்கின்றனவா?’ என்று சுற்றியிருக்கும் மேடைகளைப் பார்த்தான். அவன் இருக்கும் இடத்திலிருந்து ஒரு பாதி மேடைகள்தான் தெரிந்தன. பெருந்தூண்கள், மேடைகளை மறைத்து நின்றன. இரண்டு அடிகள் முன்னும் பின்னுமாகப் போய், கண்களை ஓடவிட்டான். இடப்புறம் இறுதித்தூணுக்குப் பின்புறம் ஒரு மரக்கூண்டு இருப்பதன் சிறு பகுதி தெரிந்தது.

கூண்டுக்குள் இருக்கும் அந்த விலங்கைப் பார்த்தால், ஆசான் என்ன சொல்வாரோ என்று எண்ணிய கணத்தில்தான் அவர், வரையப்பட்ட  மேற்கூரையை நீண்டநேரம் பார்த்துக் கொண்டிருப்பது நினைவுக்கு வந்தது. சட்டென அவரை நோக்கித் திரும்பினான். அவர்  மேற்கூரையைப் பார்த்து முடித்துவிட்டு தலையை முன்சாய்த்தார்.

‘அவரின் முகக்குறிப்பைப் பார்க்க முடியவில்லையே, என்ன சொல்லப்போகிறாரோ!' என்று பதற்றம் கூடியது. அவர் குறித்துக் கொடுத்தது நினைவுக்கு வந்தது. குதிரையின் தலைபோல் இருக்கும் ஆறு புரவிகளும் (அசுவினி) இடப்புறம் இருந்தன.  குமிழ்போல் மூன்று புள்ளிகளாக இருக்கும் அடுப்பு (பரணி) அதன் நேர்மேலே இருந்தது. பொற்கால் கட்டில்போல் இருக்கும் கணை (பூரம்) சற்றே கீழிறங்கி இருந்தது. ஒவ்வொரு விண்மீன் கூட்டமும் நினைவுக்கு வந்தது. மனக்கண்ணில் எல்லாவற்றையும் நினைத்து மீண்டும் மேலே பார்த்தான் எல்லாம் சரியாகத்தான் வரையப்பட்டிருந்தன. ஆனால், ஆசான் இன்னும் வாய் திறக்கவில்லை.

அமைதி எல்லோரையும் பீடித்தது. மெல்லிய செருமல் வந்தது. என்ன சொல்லப்போகிறார் என்ற ஆர்வத்தோடு இருந்தனர்.

“இந்த வானியல் அமைப்பு எதைக் குறிக்கிறது?”

குரல் இறுக்கமாக இருந்ததை ஒருசிலர் மட்டும் உணர்ந்தனர்.  வினாவுக்கான  விடை யாரிடமும் இல்லை. மற்றவர்கள் அந்துவனையே பார்த்தார்கள். தயங்கியபடி அந்துவன் சொன்னான்  “பேரரசரின் பிறந்தநாள் அமைப்பு இதுவன்று. பேரரசியாரின் பிறந்தநாள் அமைப்பும் இதுவன்று. வேறு யாருடையது என்று என்னால் உய்த்தறிய முடியவில்லை ஆசானே.”

“மனிதனுக்குரிய நாளை நினைவுபடுத்துவது மட்டுமா வானியலின் வேலை? அது இயற்கையின் காலமானி அல்லவா?”

அவரின் சொல், புதிய திறப்பை உருவாக்கியது. வியப்போடு தலைநிமிர்ந்து மேலே பார்த்தான். ஒன்றும் பிடிபடவில்லை.

ஆசானின் குரல் கணீரென ஒலித்தது. “இது மேற்கு மலையில் பெருமழை பெய்து வைகையில் வெள்ளம் பெருகும் கோள்நிலை. பாண்டரங்கத்தில் ஆடலும் பாடலும் செழிக்க, பாண்டியநாட்டில் உழவும் வணிகமும் தழைக்க இந்தக் கோள்நிலையே அடிப்படை. இது பிறந்த காலத்தைக் குறிப்பதன்று, இந்தப் பேரரசின் சிறந்த காலத்தைக் குறிப்பது.”

வாயடைத்துப்போனார்கள் அனைவரும். வானியல் பேராசானின் அறிவுகண்டு மெய்ம்மறந்து நின்றபோது, அவரின் குரல் அதைவிட கனத்து ஒலித்தது,  “இதில் நீ செய்த பிழை என்ன தெரியுமா?”

அடித்தொண்டையிலிருந்து வந்தது கேள்வி. அந்துவனின் உடல் உதறியது. அவன் நிமிர்ந்து பார்த்தான். மேற்கூரையைக் கண்கள் சுற்றின, தலையும் சுற்றியது.

ஆசானின் குரல் வெளிவந்தது. “வெள்ளி வெறும் கோளன்று... மழைக்கான கோள். ஆனால், அது தெற்கே விலகி இருப்பது மழையின்மைக்கு அறிகுறி. நீ எங்கே வரைந்து வைத்திருக்கிறாய் பார்.”

அந்துவன் திரும்பி மேற்கூரையைப் பார்த்தான். வெள்ளி தெற்கே விலகி இருந்ததைப் பார்த்த கணத்தில் உச்சந்தலையைத் தாக்கியது ஆசானின் ஊன்றுகோல். துவண்டு விழுந்தான் அந்துவன்.

“பாண்டரங்கத்தைப் பாழுமரங்காக்கப் பார்த்தாயா?”

குரல் கேட்டு நடுங்கினான் அந்துவன். “மன்னியுங்கள் ஆசானே, என்னை மன்னியுங்கள். உடனடியாகச் சரிப்படுத்துகிறேன். பொறுத்தருளுங்கள்.”

அந்துவனைவிட அதிக நடுக்கம் இருந்தது ஆசானின் கைகளில்தான். “காலத்தைக் கணித்தல் எளிதன்று; கணநேரத்தில் எல்லாம் மாறிவிடும்.

நீ என் தலைமாணவன் என்பதால்தான் உன்னை அரண்மனைக்கு அனுப்பினேன்.”

அந்துவன் பாய்ந்துவந்து காலைப் பிடித்தான். அடுத்து என்ன சொல்லப்போகிறார் என்பதை அவனால் உய்த்தறிய முடிந்தது. “ஒரு வாய்ப்பு கொடுங்கள் ஆசானே, மறுபடியும் பொருத்தமாக வரைந்து காட்டுகிறேன்.”

அந்துவனின் கதறல் ஓசை கேட்டுக்கொண்டே இருக்க, திசைவேழர் பாண்டரங்கத்தைவிட்டு வெளியேறினார்.

கோ
ட்டையின் வெளிப்புறம் இருக்கும் காட்டரண் அது. அங்குதான் யானைகளுக்கான வட்டரங்கு இருக்கிறது. முசுகுந்தரின் தீர்ப்பை நிறைவேற்ற எல்லோரும் வந்திருந்தனர்.

முதலில் பாகன் அரங்குக்குள் அனுப்பப் பட்டான். இன்னும் சிறிது நேரத்தில் யானை உள்ளே நுழையும்.

சுழல் அரங்கில் யானையிடம் தப்பி பாகன் ஓடவேண்டும். அவன் ஓடித் தப்பித்தால் குற்ற மற்றவன். மிதிபட்டுச் செத்தால் பாவமற்றவன். இதுதான் போட்டியின் விதி.

போட்டி தொடங்க இன்னும் நேரமிருந்தது. அதேசமயம், முடிவு எல்லோருக்கும் தெரிந்தேயிருந்தது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...