மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடல் தொடாத நதி - 1

கடல் தொடாத நதி - 1
பிரீமியம் ஸ்டோரி
News
கடல் தொடாத நதி - 1

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்புதிய தொடர்

மிழ் சினிமா நூற்றாண்டு கண்டுவிட்டது. பல மகத்தான சாதனையாளர்கள் திரையில் முத்திரைப் பதித்துச் சென்றிருக்கிறார்கள்.

பிப்ரவரி 12. 1962.

சினிமாவில் தடம் பதிக்க சென்னையில் நான் கால் பதித்த நாள். நான் சொல்லப்போவது என் சரித்திரம் அல்ல. என் 55 ஆண்டுகால சினிமா வாழ்வின் சரித்திரம். இந்த 55 ஆண்டுகளில் நான் வேறு, சினிமா வேறாக இருந்ததில்லை. இளையராஜாவும் பாரதிராஜாவும் என் இளமைக்காலத்திலிருந்து தொட்டுப் படரும் நட்புக் கொடிகள்.

ராஜாவில் இருந்து தொடங்குகிறேன்.

என் மனதில் ‘அன்னக்கிளி’ என்ற கதையின் ஆரம்ப விதை விழுந்த நேரத்திலேயே அதற்கு என் பால்ய நண்பன் இளையராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். நான் சென்னை வந்த சில ஆண்டுகளிலேயே அவனும் சென்னை வந்தான்.

மிகக் குறுகிய காலம், இசையமைப்பாளர் வி.குமாரின் இசைக்குழுவில் இளையராஜா கிடார் வாசித்தது பலருக்குத் தெரியாது.

கடல் தொடாத நதி - 1

அன்று குமார் இசையில் பி.சுசீலா பாடினார். அந்தப் பாட்டுக்கு ராஜா நோட்ஸ் எழுதிக் கொடுத்திருந்தான். பாடலைப் பாடிப் பார்த்த சுசீலா, அந்த நோட்ஸ் பொருந்தி வராமல் இருப்பதாகச் சொன்னார். இளையராஜாவுக்கு வந்ததே கோபம். அவனுடைய இசையில் குற்றம் சொன்னால், அவனால் தாங்கிக்கவே முடியாது. பதிலுக்கு அவன், ‘‘நீங்க என்னத்த நினைச்சுக்கிட்டு பாடினீங்களோ?’’ என வெடுக்கெனச் சொல்லிவிட்டான். அவனைப் பற்றித்தான் தெரியுமே? மனதில் பட்டதை எந்த அலங்காரமும் இல்லாமல் அப்படியே சொல்பவன் ஆயிற்றே?

‘என்னத்த நினைச்சுக்கிட்டு பாடினீங்களோ?’ என ராஜா சொன்னதைச் சுசீலாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஓவென அழ ஆரம்பித்துவிட்டார். அடுத்த நிமிஷம் அந்த ரெக்கார்டிங் ஏரியாவே பரபரப்பாகிவிட்டது. இவனை வெளியே அனுப்பிவிட்டார்கள். சான்ஸ் போச்சு.

இளையராஜாவின் இசையைக் குறை சொல்லிவிட்டால் இப்படித்தான். இதை எதற்காகச் சொன்னேன் என்பதற்குக் காரணம் இருக்கிறது.

‘அன்னக்கிளி’ கதைக்கு நான் முதலில் வைத்திருந்த தலைப்பு, ‘மருத்துவச்சி’. பஞ்சு அருணாசலத்திடம் கதையைச் சொன்னேன். ஆண்டாளின் பக்தியைக் காதல் தியாகம் போல சொல்லியிருந்த கதை அது. எனவே, ‘சூடிக்கொடுத்தாள்’ எனப் பெயர் வைக்கலாம் என்று அவர் யோசனை சொன்னார்.

இந்த நேரத்தில்தான் இளையராஜா, இந்தக் கதையைக் கேட்டுவிட்டு, ஹார்மோனியத்தில் தன் புதிய தேவ கானத்தை இசைத்தான். அவனாகவே, ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே...’ என ஒரு வரியைப் போட்டு, மெட்டுப் போட்டு பாடினான். அதைக் கேட்டதும், ‘அட, இது நல்லா இருக்கே...’ எனப் படத்தின் பெயரையே ‘அன்னக்கிளி’ என மாற்றினார் பஞ்சு.

அந்த நாளில் பி.சுசீலா பாட்டு இடம்பெறாத படமே வராது என்கிற அளவுக்கு அவர் பிரபலம். எனவே, ‘‘இந்தப் பாடலை சுசீலாவைப் பாட வைக்கலாம்’’ என்று பஞ்சு சொன்னார். ராஜாவின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. சிறிது யோசனைக்குப் பிறகு,  ‘‘எஸ்.ஜானகியைப் பாட வைக்கலாம்’’ எனச் சொன்னான். ‘பி.சுசீலாதானே பிரபலம்’ எனச் சொன்னபோதும் அவன் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. ‘ஜானகிதான் பாட வேண்டும்’ எனப் பிடிவாதமாக இருந்தான். ‘சிங்காரவேலனே தேவா...’ போன்ற பாடல்களால் ஜானகிக்கு நல்ல பெயர் இருந்தாலும், சுசீலா அளவுக்கு அவர் பிரபலம் இல்லை. ராஜா ஏன் அவ்வளவு பிடிவாதமாக இருந்தான் என்பதற்கு இப்போது உங்களுக்குப் பதில் கிடைத்திருக்கும்.

குமார் இசையில் அன்று பாதியில் விரட்டப்பட்டதற்கு சுசீலா காரணமாக இருந்த வடு அவன் மனதில் அப்படியே இருந்திருக்க வேண்டும். தன்னை விரட்டிய சுசீலாவுக்கு மாற்றாக இன்னொருத்தரை அந்த இடத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்பது அவனுடைய எண்ணம்.

சினிமாவில் இது ஒரு சோற்றுப் பதம்தான். இப்படி நிறையச் சொல்லலாம்.

கே.வி.மகாதேவன் இசையில் கண்ணதாசன் பாடல் எழுதிக் கொண்டிருந்த காலம்.

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஏதோ மன வருத்தம். அப்போதேல்லாம் எம்.எஸ்.வி இசையில் வாலிதான் பாடல் எழுதுவார்.

இந்த நேரத்தில் பஞ்சு சார் வீட்டுக் கல்யாணம். அந்தக் கல்யாணத்துக்கு சங்கர் - கணேஷ் இசைக் கச்சேரி எனப் போட்டு பத்திரிகை எல்லாம் கொடுத்து விட்டார்கள். ஆனால், அவர்கள் கச்சேரி செய்ய வரவில்லை. ‘கண்ணதாசன் மீது இருந்த வருத்தத்தில், அவருடைய உதவியாளரான பஞ்சு வீட்டுத் திருமண விழாவில் கச்சேரி செய்ய வேண்டாம் என சங்கர் கணேஷை எம்.எஸ்.வி-தான் தடுத்து விட்டார்’ என்று பேசிக் கொண்டார்கள். அப்படித் தொடர்புபடுத்துவது சுலபமாகவும் இருந்தது.

இந்த வருத்தம் போதாதா? கல்யாணப் பத்திரிகையில் இசைக்கச்சேரி என விளம்பரம் செய்து, கடைசி நேரத்தில் இப்படிச் செய்துவிட்டாரே என்ற வருத்தம் பஞ்சுவுக்கு இருந்தது. இந்த நேரத்தில், இளையராஜா வந்தததும் அவரைப் பிரபலப்படுத்த பஞ்சுவுக்கு மனரீதியான ஒரு காரணம் இருந்தது. ராஜாவைப் போகிற இடமெல்லாம் சிபாரிசு செய்யவும், தன் அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்தவும் அது கூடுதல் காரணமாகவும் மாறியது. ‘ஒரு வருத்தம்...  ஒரு  வடு  எப்படி  சினிமாவைப் புரட்டிப்போடுகிறது’ என்பதற்காகச் சொல்கிறேன்.

மும்பையில் ‘தளபதி’ படத்துக்கான ரெக்கார்டிங். மணிரத்னம் படம். இசையில் மணி சார் ஏதோ கரெக்‌ஷன் சொல்ல, ராஜா அதை ஏற்க மறுத்துவிட்டான். மணி ஒன்றும் சொல்லவில்லை. அப்படியே ஃப்ளைட் பிடித்து சென்னை வந்துவிட்டார். அந்த நேரத்தில்தான் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி மணியிடம் சொல்கிறார்கள். தன் அடுத்த படமான ‘ரோஜா’வுக்கு ரஹ்மான் இசை என அறிவித்துவிட்டார் மணி சார். சினிமாவில் ஓர் ஆளுமையைத் தாண்டி இன்னொருவர் வருவதற்கும், அவர் பிரபலமாவதற்கும் இப்படியான மனக்காயங்கள் காரணமாக இருக்கின்றன.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)

கடல் தொடாத நதி - 1

தங்க நெல்!

``மதுரையின் வைகைக் கரையில் நான் பிறந்து வளர்ந்த ஊர் இருக்கிறது. திருவெங்கடபுரம் என்பது அதன் பெயர். அப்பாவின் பூர்வீகம் தூத்துக்குடி. அம்மா, சிவகங்கை. அப்பாவின் குடும்பம் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தது. ஒவ்வொரு போராட்டத்துக்கும் யார் ஜெயிலுக்குப் போவது என சீட்டுக்குலுக்கிப் போடுவார்கள். அப்படி ஒரு தீவிர பெரியாரிஸ்ட் குடும்பம். அம்மா ஹார்மோனியம் வைத்து மிகச் சிறப்பாகப் பக்திப் பாடல்களைப் பாடுவார். ஆண்டாள் பாசுரம் எல்லாம் அம்மா பாடி மனதில் பதிந்தவைதான். சிவகங்கையில் அம்மாவின் வீட்டில்தான் நான் பிறந்தேன். பிறந்த சில மாதங்களில் தங்கத்தில் நெல் செய்து, என் விரல் பிடித்து ‘அகரம்’ எழுதப் பழக்கினார்கள். அந்தத் தங்க நெல் எல்லாம் இப்போது போய் விட்டது. இன்னமும் அந்தத் தமிழ் என்னோடு இருக்கிறது