
சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,
பாண்டரங்கத்தின் மேற்கூரையில் புதிதாக ஓவியம் வரையும் பணி தொடங்கியிருந்தது. ஆசான் சொன்ன பிழையை மட்டும் திருத்தலாம் என்று ஓவியர்கள் சொன்னார்கள். ஆனால், அந்துவன் அதை ஏற்கவில்லை. “தெற்கே விலகியிருக்கும் வெள்ளியைப் பொருத்தமான இடத்தில் வரையலாம். ஆனால், உறுதியாக அது நிற வேறுபாட்டை வெளிப்படுத்தும். ஏற்கெனவே, வரையப்பட்ட ஓவியத்தின் வண்ணத்திலிருந்து புதிதாக வரையப்பட்ட பகுதி வேறுபட்டே தெரியும். இன்னொரு முறை ஆசானின் கோபத்துக்கு ஆளாக விரும்பவில்லை. எனவே, மேற்கூரையில் வரையப்பட்ட முழு ஓவியத்தையும் கருநீல வண்ணம் பூசி மறைக்கச் சொன்னான்.
அதன் மீது நாள்மீன்களையும் கோள்மீன்களையும் புதிதாக வரைந்துவிடலாம் எனச் சொல்லிவிட்டான். ஓவியர்கள், அந்துவன் சொன்னபடி பணியைத் தொடங்கினர்.

செவியன் மூலம் செய்தியைக் கேள்விப்பட்ட இளமருதன், சற்றே நடுங்கிப்போய் இருந்தான். ஆசான் வரும்போது தேவாங்கின் கூட்டை எடுத்து வேறு அறையில் வைத்துவிட வேண்டும் என்று அன்றே அந்துவன் சொல்லியிருந்தான். ஆனால், கடைசி நேரத்தில் எல்லோருக்கும் அது மறந்துவிட்டது. `பிரச்னைக்கு ஏதோ ஒருவகையில் தானும் காரணமாகிவிட்டோமோ!' என்று அஞ்சியபடி தேவாங்கின் கூட்டை வேறு இடம் மாற்றிவிடலாம் என முடிவுசெய்தான் இளமருதன். ஓவியர்கள் எல்லோரும் உணவருந்தப் போன நேரம் பார்த்து பாண்டரங்கத்துக்குள் நுழைந்தான்.
இடப்புறம் கடைசித் தூணுக்குப் பின்னால் இருந்த கூண்டை நோக்கிப் போனான். யாரோ ஒருவன் அதன் அருகில் உட்கார்ந்திருந்தான். அருகில் போன பிறகுதான் அவன் அந்துவன் என்பது தெரிந்தது.
“தவறிழைத்துவிட்டேன் மன்னியுங்கள்” என்றான் இளமருதன்.
“நீ ஏன் மன்னிப்புக்கோருகிறாய்? நீயா வெள்ளியைத் தென்புறம் நகர்த்தியது?” என்று கேட்டான் அந்துவன்.
இளமருதனுக்கு என்ன மறுமொழி சொல்வதென்று தெரியவில்லை.
சற்று அமைதியாக இருந்துவிட்டு, “நான் இந்தக் கூண்டை இங்கிருந்து எடுத்துக்கொண்டு போய்விடுகிறேன்” என்று சொல்லி, தேவாங்கின் கூண்டை எடுக்க முற்பட்டான்.
“வேண்டாம்'' என்று தடுத்த அந்துவன் சொன்னான், “மேற்கூரையில் ஓவியப்பணி முழுமையாக முடியும் வரை நான் இந்த அரங்கத்தைவிட்டு வெளியேறப்போவதில்லை. இந்த அரங்கத்துக்குள்தான் நாள்கணக்கில் இருக்கப்போகிறேன். எவ்வளவு நேரம்தான் அண்ணாந்து மேற்கூரையையே பார்த்துக்கொண்டிருக்க முடியும்? அவ்வப்போது குனிந்து கூண்டுக்குள் இவற்றின் விளையாட்டைப் பார்த்து மகிழ்வதுதான் என் ஒரே பொழுதுபோக்கு. எனவே, நான் இங்கு இருக்கும் வரை இவையும் இருக்கட்டும். பணிகள் முடிந்ததும் சொல்கிறேன். அதன் பிறகு, நீ வந்து எடுத்துச் செல்” என்று சொல்லி இளமருதனை அனுப்பிவைத்தான்.

இளமருதனால் மறுப்புச் சொல்ல முடியவில்லை. ‘சரி’ எனத் தலையாட்டியபடி வெளியேறினான்.
அந்துவன் இலந்தைப்பழங்களை உள்ளே உருட்டிவிட்டபடி கூண்டையே பார்த்துக்கொண்டிருந்தான். தேவாங்குகள் இரண்டும் தலையை மெள்ள நீட்டி பழத்தை நோக்கி வந்தன.
அரண்மனையின் வளாகத்தில் மிகப் பழைமையான மாளிகை ஒன்று உண்டு. அதன் பெயர் `பாசிலை அரங்கு'. பச்சைநிற மணிக்கற்கள் பதிக்கப்பட்ட அரங்கு. எந்த ஒரு நற்செயலையும் பாண்டியர்குடி அங்குதான் தொடங்கும். இந்தத் திருமணத்தின் முதல் நிகழ்வும் அங்குதான் தொடங்கவிருந்தது.
அரச குடும்பத்தினர் மட்டுமே இந்தக் கூடுகையில் பங்கெடுத்தனர். வேறு எவருக்கும் அனுமதியில்லை. குடும்பத்தினர் அல்லாத ஒரே ஒருவர் திசைவேழர் மட்டுமே. காலம் குறித்த அச்சம் எல்லோருக்கும் எப்போதும் இருக்கத்தானே செய்கிறது. காலத்தை அறிந்தவனுக்கு அதிகாரத்தின் எல்லா கதவுகளும் திறக்கத்தானே செய்கின்றன.
அரச குடும்பத்துப் பெண்களும் ஆண்களும் பேரலங்காரத்துடன் அரங்கை நிறைத்திருந்தனர். வணிகக் குடும்பத்தினரின் அணிகலன்கள் மேலேறி மின்னிக்கொண்டிருந்தன. ஒருவரைப் பார்த்து ஒருவர் வியப்புற்றபோது, மாமன்னர் குலசேகர பாண்டியனும் சூல்கடல் முதுவனும் இணைந்து அரங்குக்குள் நுழைந்தனர்.
இருவருக்கும் வயது ஐம்பதைக் கடந்திருக்கும். நெடு உயரமும் உடல் வலிமையும் தோளில் புரளும் வெண்முடியும் இருவருக்கும் ஒரே மாதிரி இருந்தாலும், முக அமைப்பு இருவேறு உலகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெளிவாகச் சொன்னது. ஆழ்கடலின் உப்பங்காற்று காலம் முழுவதும் படிந்ததன் அடையாளத்தோடு இருந்தது சூல்கடல் முதுவனின் முகம். இளம்வயதில் செங்கணூர் முற்றுகையின்போது வெட்டப்பட்ட கீழ் உதட்டின் தழும்புகள் இன்று வரை மறையவில்லை குலசேகர பாண்டியனுக்கு. இருவரும் முழுநிலை அலங்காரத்துடன் அரங்கினுள் நுழைந்தனர். மனம் குவிந்து, உடல் விழுந்து, வணங்கி எழுந்தனர் அனைவரும். சமமான உயரத்தில் இருவிதமான அடையாளங் களுடனான இருக்கையில் இருவரும் அமர்ந்தனர்.
மணமகன் பொதியவெற்பன் வந்து, தந்தையின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான். எல்லோரும் மணமகளுக்காகக் காத்திருந்தனர். சூல்கடல் முதுவனின் கண்களில் ஒரு செருக்கு மேலேறியது. உள்நுழையும் தன் மகளின் பேரழகு கணநேரத்தில் இந்த அவையைச் சுழற்றிவிடும் என்பது அவருக்குத் தெரியும். அவள் வரும் திசையைப் பார்த்திருந்தனர்.
தோழிகள் சூழ, பொற்சுவை உள்நுழைந்தாள். ஒன்பதுவிதமான மணிகளை வரிசையாகப் பொருத்தி, ஒற்றைக்கொடிபோல உச்சந் தலையிலிருந்து முன்சரிந்திருந்தது தலைப்பாளை. நீலநிறக் கச்சை அணிந்திருந்ததால், இப்படி ஒரு வண்ணத்தில் மெல்லிய துணியை இதுவரை யாரும் கண்டதில்லை. காலடியில், ஒளி பட்டு மின்னும் பொற்சலங்கையிலிருந்து கசியும் வண்ணம்போல் இருந்தது செவ்வண்ணப்பூச்சு. கண்டவர் கருவிழிகள் நகர முடியாமல் நின்றன. பொற்சுவை மட்டும் நகர்ந்து கொண்டிருந்தாள். அவள் சற்றே தலை தாழ்த்தித்தான் நடந்து வந்தாள். அலங்காரங்களைக் கடந்து அவளது ஆழ்மனதைப் பார்க்கக்கூடியவர் எவரும் இல்லை அந்த அவையில்.

தந்தையின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். அவள் அதிக ஆபரணங்கள் அணியவில்லை. ஆனால், அணிந்திருந்த எந்த ஒன்றையும் இதற்கு முன் எவரும் பார்த்ததில்லை. பாண்டியன்மாதேவியின் தோழிகள் பேசிக்கொண்டார்கள், “பெரும்வணிகன் மகள். ஆனால், அவள் கழுத்தில் ஒற்றை அணி மாலையே அணிந்திருக்கிறாள். அதிலும் ஒற்றை முத்து மட்டுமே இருக்கிறதே ஏன்?”
``இடம்புரி சங்கு ஆயிரம் சூழ்ந்தது வலம்புரி சங்கு. வலம்புரி சங்கு, ஆயிரத்தில் ஒன்றுதான் வளைநிலை வடிவில் இருக்கும். அதுகொண்டுதான் அணிசெய்ய முடியுமாம். அந்தச் சிறப்புகொண்ட வலம்புரி சங்கு, இதுவரை இரண்டு மட்டும்தான் எடுக்கப்பட்டுள்ளனவாம். அதில் ஒன்று, யவன அரசியாரின் தலைமுடியில் இருக்கிறதாம். இன்னொன்று, பொற்சுவையின் கழுத்தில் இருக்கிறதாம்” அவளின் மறுமொழி காதோடுக் காதாகச் சுற்றிவந்தது. அதன் பிறகு, அரங்கு பேச்சற்றுப்போனது.
பாண்டியர்குல முதியவள், மின்னும் வெண்தட்டை எடுத்துவந்து பேரரசனிடம் கொடுத்தாள். அதில் மஞ்சள்கிழங்கு வட்டவடிவில் இருந்தது. நடுவில் வெற்றிலை வைக்கப்பட்டிருந்தது. குலசேகரபாண்டியன் அதைச் சூல்கடல் முதுவனிடம் வழங்கினான். அதைப் பெற்றுக்கொண்ட சூல்கடல் முதுவன், தங்களின் வழக்கப்படி பொன்நிறத் தட்டை வழங்கினான். அதிலும் மஞ்சள் சூழ நடுவில் வெற்றிலை இருந்தது. முன்னோர் மரபுப்படி இருவரும் வெற்றிலை மாற்றி மணமுடி வாக்களித்தனர். முறைப்படி மணவிழா இந்தக் கணத்திலிருந்து தொடங்குகிறது. இரண்டு மாதங்களில் ஆறு நிகழ்வுகளாக அது நிகழும். நிறைவாக, மணமாலை சூடலுடன் விழா நிறைவுறும்.
வீசிய ஈட்டி, கருங்கல்லில் பட்டுத் தெறித்தது. உதிரன் விடுவதாக இல்லை. பேரெலி, பாறை இடுக்குகளுக்குள் விரைந்து பதுங்கியது. கண்ணில் படாத வரைதான் அது தப்பித்து வாழும். கண்ணில் பட்டுவிட்டால், அது எந்தப் பாறைக்குள் நுழைந்து எவ்வளவு ஆழம் போனாலும் தப்ப முடியாது. அது உள்நுழைந்த கருங்கல்லை வீரர்கள் நால்வர் சேர்ந்து புரட்டிக்கொண்டிருந்தனர். அது தப்பி வெளியேறினால் குத்தித் தூக்க, உதிரனும் மற்றொரு வீரனும் தயாராக இருந்தனர்.
பாறைக்குச் சற்று மேலே இருந்தபடி பாரியும் கபிலரும் இதைப் பார்த்துக்கொண்டிருந்தனர். வீரர்கள் கரும்பாறையைப் புரட்டிக் கீழே தள்ளினர். உள்ளே எலியும் இல்லை; எந்தத் துளையும் இல்லை. `அதற்குள் எங்கே போனது?' என அனைவரும் உற்று நோக்கிக்கொண்டிருந்தனர். ‘எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கையில் அது எப்படித் தப்பிப் போயிருக்க முடியும்?’ என்று எண்ணிக்கொண்டிருக்கையில், யாரும் எதிர்பாராமல் வேறொரு திசையிலிருந்து குத்தித் தூக்கினான் உதிரன்.
அதன் கீச்சொலியோடு எல்லோரின் உற்சாக ஒலியும் கலந்தது. இந்தச் செயலைக் கண்டு தன்னையும் அறியாமல் சீழ்க்கை அடித்தான் பாரி.
பிடிபட்ட பேரெலியைச் சிறு கூடையில் போட்டுக்கொண்டு அடுத்த பாறையை நோக்கி நகர்ந்தனர். வழக்கம்போல் வீரர்கள் முன்னால் போக, பாரியும் கபிலரும் பின்னால் வந்துகொண்டிருந்தனர்.
பாறைகளுக்கு இடையில் இருக்கும் செடி கொடிகளைக் கிண்டியபடி வீரர்கள் நகர்ந்து கொண்டிருந்தனர். உதிரனின் கவனம் சற்றே சிதறத் தொடங்கியது. பாரியின் கண்கள் தன்னை ஊடுருவுவதை அவன் இரண்டு, மூன்று முறை கவனித்துவிட்டான். ஏன் என்று அவனுக்குப் புரியவில்லை. பாரி உடன் வருவது கபிலருக்காக என்றுதான் உதிரனும் முதலில் நினைத்தான். ஆனால், இந்த இரண்டு நாள்களும் பாரியை உற்றுக்கவனித்ததிலிருந்து அவனுக்குச் சந்தேகம் வர ஆரம்பித்தது.
தனது திறனையும் திட்டமிடலையும் ஆராய்வதற் காகத்தான் இது நடந்துகொண்டிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றியது. நீலனுக்குப் பிறகு, கபிலருடன் இருக்கும் பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நான் அதற்குத் தகுதியானவன்தானா என்று கவனித்துக்கொண்டிருக்கிறாரா?
பாரியைப் பற்றி எண்ணற்றக் கதைகளைச் சிறு வயது முதல் கேள்விப்பட்டுள்ளான் உதிரன். `பாரியின் அறிவுநுட்பம் யாருக்கும் வாய்க்காது!' எனச் சொல்வார்கள். மற்ற வீரர்கள் எல்லோரும் பேரெலி வேட்டையைத் தான் பாரி பார்த்து க்கொண்டிருக்கிறான் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாரியின் கவனம் வேறொன்றாக இருக்கவே வாய்ப்பு அதிகம் என்று உதிரனுக்குத் தோன்றியது.
உதிரன் துல்லியமாகக் குத்தித் தூக்கியதை வியந்து பாராட்டியபடி வந்துகொண்டிருந்தார் கபிலர். பாரி மறுமொழி சொல்லாமல் நடந்து வந்தான்.
“அப்போது சீழ்க்கை அடித்துவிட்டு, இப்போது எதுவும் சொல்லாமல் வருகிறாய்?” எனக் கேட்டார் கபிலர்.
“நான் சீழ்க்கை அடித்தது உதிரனுக்காக அல்ல, பேரெலிக்காக.”
“என்ன சொல்கிறாய்?”
“தடித்த உடலைக்கொண்டதால் பேரெலியால் வேகமாக ஓடவோ, சிற்றிடுக்கு களுக்குள் நுழையவோ முடியாது. அப்படியிருந்தும் எத்தனையோ விலங்கு களிடமிருந்து அது தப்பி உயிர் வாழ்கிறது என்றால், அதன் தந்திரம்தான் காரணம். சமவெளியில் இருக்கும் நரியின் தந்திரத்தைவிட, மலைமுகட்டில் இருக்கும் பேரெலியின் தந்திரம் வியக்கக்கூடியது.”
“அப்படியென்ன அங்கே நிகழ்ந்தது? நீ எதைக் கண்டு சீழ்க்கை அடித்தாய்?”
“பாறையில் இருந்து வெளியேறி வந்த எலியும், உதிரன் குத்தித் தூக்கிய எலியும் வெவ்வேறு எலிகள். உள்ளிருந்து வந்தது வலப்புறம் ஓடிய வேகத்தில், அந்தச் சிறு புதருக்குள் இருந்த இன்னொன்று எதிர்பாராமல் வெளியேறியது. அதைத்தான் உதிரன் குத்தித் தூக்கினான். அவனது காலடியின் அருகில்தான், வெளியேறி வந்த எலி பதுங்கி இருந்தது.”
“நீ ஏன் அதைத் தெரிவிக்கவில்லை?”
“அது எனக்குத் தப்பித்தலைக் கற்றுக்கொடுக்கிறது. நான் எப்படி அதைக் காட்டிக்கொடுப்பேன்?”
எதிர்பாராத மறுமொழியாக மட்டுமல்ல, வேட்டையின் ஒழுங்குக்கு எதிரான மறுமொழியாகவும் இருப்பதாக, கபிலருக்குத் தோன்றியது.
“வேட்டைக்குப் பொருள் என்ன பாரி?”
“தாக்குதலும் தப்பித்தலும். நீங்கள் எந்தப் பக்கம் இருந்தும் இந்த விளையாட்டைப் பார்க்கலாம்.”
“நீ எந்தப் பக்கம் இருந்து இதைப் பார்த்தாய்?”
“வேட்டையை நான் எப்போதும் தப்பிச் செல்லும் விலங்கின் பக்கம் இருந்துதான் பார்ப்பேன். இந்த வேட்டையில் உதிரனின் விளையாட்டு வேறு மாதிரி இருக்கிறது. எனவே, நான் எந்தப் பக்கமும் சாராமல் இருக்கிறேன்.”
“ஏன் அப்படி?”
“உதிரனின் செய்கை அப்படி. அவன் வேண்டுமென்றே தப்பிக்க முடியாத பேரெலியாகப் பார்த்து வேட்டையாடுகிறான். அந்த எலிகொண்டு உங்களுக்கு ஆடை நெய்ய எண்ணுகிறான்.”
பாரி சொல்வதன் விளக்கம், கபிலருக்குப் புரியவில்லை.
“தப்பிக்க முடியாத பேரெலியைக்கொண்டு மட்டும் ஆடை நெய்வதன் பொருள் என்ன?”
“புரியவில்லையா? என்றென்றும் உங்களைப் பறம்பு நாட்டிலே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்.”
சொல்லிவிட்டு, பாரி நடந்துகொண்டிருந்தான். கபிலர் அப்படியே நின்றுவிட்டார்.
ஒரு கணம் கழித்துக் கேட்டார், “நீங்கள் இருவரும் என்னைத்தான் வேட்டையாடிக்கொண்டிருக்கிறீர்களா?”
“நிச்சயம் இல்லை” என்று சொன்ன பாரி, சற்றே இடைவெளிவிட்டுச் சொன்னான் “பிடிபட்ட பிறகு எவராவது வேட்டையாடுவார்களா?”
பதில் கேட்டு அடங்காச் சிரிப்பை வெளிப்படுத்திய கபிலர் சொன்னார், “கூடு என்பது, பறவைக்கான தங்கும் இடம். வானம்தான் வாழ்விடம்.”
“உண்மைதான், ஒருநாள் உங்களின் வானமே நாங்களாக விரிந்திருப்போம்.”
பாரியின் தோழமை எல்லை கடந்து விரிந்துகொண்டிருந்தது. மலையின் கீழ்த்திசையில் ஊசிப்புகை மேலெழுந்து கொண்டிருந்தது. வேட்டையாடிக்கொண்டிருந்தவர்கள் பாறையின் இடப்புறம் இருந்ததால், அதைப் பார்க்கவில்லை. பாறையின் மேலே பாரி நின்றதால், அதைப் பார்த்தான்.
அந்தத் திசை நோக்கி அப்படியே நின்றான். அதைக் கவனித்தபடி கபிலரும் நின்றார். மிகத்தொலைவில் கீழ்க்காட்டின் நடுவில் இருந்து ஊசிபோல் மெல்லியப் புகை மேல் நோக்கி போய்க்கொண்டிருந்தது. காற்று வீசவில்லை என்பதால், புகை கலையாமல் உச்சிக்குப் போனது.
உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த பாரியைப் பார்த்துக் கபிலர் கேட்டார், “என்ன அது? காட்டின் ஊடேயிருந்து புகை வரக் காரணம் என்ன?”
“அங்குள்ளவருக்கு உதவி தேவைப்படுகிறது” என்று சொல்லிவிட்டு, இடப்புறம் திரும்பிப் பார்த்தான். பாறையின் இடப்புறம் பேரெலி வேட்டையில் உதிரன் குழு மிகவும் கவனமாக இருந்தது. பாறை மறைத்திருந்ததால் எழும் ஊசிப்புகையை அவர்கள் பார்க்கவில்லை.

“காட்டுக்குள் இருக்கும் யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால், படர்ந்து கிடக்கும் சென்றிக்கொடியைப் பறித்துத் தீக்கற்களால் தீ மூட்டுவார்கள். அந்தக் கொடியில் தீப்பற்றி எரியாது; புகை மட்டுமே வரும். அவ்வாறு கசியும் புகை, கீழே படராது; அறுந்துவிடாமல் மேலெழும்பிக்கொண்டே இருக்கும். எங்கிருந்து பார்த்தாலும் உச்சிநோக்கி விடாமல் மேலெழும் ஊசிப்புகையைப் பார்த்துவிட முடியும். உடனே அவருக்கு உதவி செய்ய மக்கள் போய்விடுவார்கள்” என்றான் பாரி.
“அப்படியென்றால், அவர்களுக்கு உதவி செய்ய வீரர்களை அனுப்பாமலிருப்பது ஏன்?”
“தொலைவைக் கணக்கிட்டால், நாம் இருக்கும் இடத்தைவிட குறைவான தொலைவில் தென்திசையில் ஊர் ஒன்று உண்டு. அங்கிருந்து மக்கள் புறப்பட்டுப் போயிருப்பார்கள். இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும்.”
“எப்படி?'' எனக் கேட்டார் கபிலர்.
“அதோ பாருங்கள்” என அந்தத் திசையைச் சுட்டிக்காட்டினான் பாரி.
ஏற்கெனவே மேலெழுந்த ஊசிப்புகையின் அருகே இன்னோர் ஊசிப்புகை மேலெழுந்து கொண்டிருந்தது.
“மற்றொரு புகை மேலெழுந்தால், உதவிக்கு ஆள்கள் போய்விட்டார்கள். வேறு யாரும் வரவேண்டியதில்லை என்று பொருள்” என்றான் பாரி.
பாறைகளைச் சூழ்ந்தபடி பேரெலியை விரட்டிக்கொண்டு இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டிருந்தனர் வீரர்கள். இன்று நான்கு பேரெலியையாவது பிடித்துவிட வேண்டும் என்று உதிரன் மிகத்தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தான்.
“காட்டுக்குள் பிறவற்றிலிருந்து தப்பித்தலைப் போல, பிறருக்குத் தன்னைக் காட்டிக்கொள்வதும் சம முக்கியத்துவம் உள்ள கலைதான். ஒவ்வோர் உயிரினமும் இந்த இரண்டு வித்தைகளையும் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. நாம் அவற்றிடமிருந்து கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கின்றன” என்று பேசியபடி வீரர்களை நோக்கி பாரியும் கபிலரும் வந்துகொண்டிருந்தனர்.
பெரும்புதருக்குள்ளும் கரும்பாறை இடுக்குகளுக்குள்ளும் வீரர்கள் விடாமல் தேடினர். கண்களில் ஒன்றும் அகப்படவில்லை. உச்சிப்பொழுது கடந்துகொண்டிருந்தது. இன்னும் சிறிது நேரம்தான் வேட்டைக்குக் கிடைக்கும். அதன் பிறகு, இடுக்குகளில் மறைந்து வாழும் உயிரினங்களைக் கண்டறிவது இயலாத காரியம்.
கபிலர் நடப்பதற்கு ஏற்ப வழிகளைத் தேர்வுசெய்து அவரை அழைத்து வந்து கொண்டிருந்தான் பாரி. வீரர்கள் பாறை இடுக்குகளைக் கிளறிக்கொண்டிருக்க, உதிரன் மட்டும் தனியாகக் கீழ்நோக்கிப் போய்க்கொண்டிருந்தான். சற்று தொலைவில் இருந்தே அதைக் கவனித்தான் பாரி. உதிரன் போய்க்கொண்டிருந்த திசையில் தனித்த மரம் ஒன்று இருந்தது. அதை நோக்கித்தான் அவன் போகிறான் என்பது தெரிந்தது.
தொலைவில் இருந்து பார்க்கையில் அது என்ன மரம் என்பது யாருக்கும் பிடிபடவில்லை. போய்க்கொண்டிருந்த உதிரன், மரத்தின் அருகில் போகாமல் சற்று தொலைவிலேயே நின்றுவிட்டான்.
அனைவரும் அவனை நோக்கி இறங்கி வந்தனர். பாரியின் கண்கள் அவற்றைக் கண்டறிந்தன. கபிலரிடம், “நீங்கள் இங்கேயே அமர்ந்திருங்கள்” என்று பாறை ஒன்றின் மேல் உட்காரவைத்துவிட்டு அந்த இடம் போனான்.

தொலைவிலேயே கபிலரை உட்கார வைத்துவிட்டு தனித்து வரும் பாரியைப் பார்த்த உதிரன், இது என்ன மரம் என்பதை அங்கிருந்தே பாரியின் கண்கள் கண்டறிந்துவிட்டன என்று தெரிந்துகொண்டான்.
உதிரன் இருக்கும் இடத்துக்கு எல்லோரும் வந்து சேர்ந்தனர். தனித்திருக்கும் அந்த மரத்தின் அடிவாரத்தில் அங்குமிங்குமாக வண்டுகள் செத்துக்கிடந்தன. எறும்புகளோ கறையான்களோ அவற்றை உண்ணவில்லை. அங்கு வந்து நின்ற எல்லோரின் கண்களும் கீழே கிடப்பனவற்றை உன்னிப்பாகப் பார்த்தன.
அது வண்டுகடி மரம். அந்த மரத்தின் இலைகளுக்குள் வண்டு பறந்தாலோ, கிளைகளின் மீது உட்கார்ந்தாலோ சிறிது நேரத்திலேயே மயங்கி கீழே விழுந்துவிடும். அதன் பிறகு, மயக்கம் தெளியாமலேயே இறந்துவிடும். இறந்ததை மொய்ப்பதற்குக்கூட எதுவும் அருகில் வராது. காட்டின் மிக அரிதான மரங்களில் வண்டுகடி மரமும் ஒன்று.
காட்டுக்குப் பழக்கப்படாத புதியவர்களின் மீது இதன் வாசனை பட்டாலே உடலெல்லாம் வீங்கிவிடும். மூக்கில் ஏற்படும் எரிச்சல் தாங்க முடியாது. அதனால்தான் கபிலரைத் தொலைவிலேயே உட்காரவைத்துவிட்டு வந்தான் பாரி. கபிலர் வந்ததிலிருந்து, ‘வண்டுகடி மரம் கண்ணில் படாதா?’ என்று பலமுறை எண்ணியுள்ளான். ஏனென்றால், வண்டுகடி மரத்தின் பட்டையை அறைத்துத் தேய்த்தால், காட்டுப்பூச்சிகள் எவையும் அண்டாது.
பறம்பிலேயே பிறந்து வாழ்பவர்களுக்கு இது தேவையில்லை. ஆனால், வெளியிலிருந்து வருபவர்களுக்கு, அதுவும் குறிப்பாக மழைக் காலத்தில் வந்து தங்குபவர்களுக்குப் பெரும்பாதுகாப்புக் கவசத்தை இதுவே அளிக்கும்.
அந்த மரப்பட்டையை உரிப்பது கடினமான பணி. அருகில் போய்ப் பிய்த்து எடுக்கவெல்லாம் முடியாது. அதன் வாசனை எந்த நேரமும் மயக்கத்தை உருவாக்கும். என்ன செய்யலாம் எனச் சிந்தித்தனர். உதிரன்தான் தனது ஈட்டியை மரத்தின் அடிவாரத்தை நோக்கி வீசி எறிந்தான். அது மரத்தின் தூர்ப் பகுதியின் விளிம்பில் குத்தி நின்றது. படுவேகமாக ஓடி, அதனருகே போன வேகத்தில் ஈட்டியின் முனையோடு பெரும் பட்டையைப் பிய்த்து எடுத்து எதிர்புறம் வெளியேறினான். முதன்முறையாக அவனது வேகம் பாரியைப் பொருள்படுத்திப் பார்க்கவைத்தது.
அன்றைய வேட்டையை அத்துடன் முடித்துப் புறப்பட்டனர். இன்று சிக்கியதென்னவோ ஒரு பேரெலிதான். ஆனால், பாரி அளவற்ற மகிழ்வில் இருந்தான்.
“என்னை ஏன் தனியே உட்காரவைத்துவிட்டுப் போனீர்கள்?” என்று கபிலர் கேட்டதற்கு, பாரி பதில் சொன்னான்.
அளவற்ற மகிழ்வோடு இருந்தது பாரியின் பதில்.
“பறம்பில் நீங்கள் இருக்கும் ஒவ்வொரு பொழுதும் என் மனம் பதற்றத்தில்தான் இருந்தது. அதுவும் கார்காலம் தொடங்கிய பிறகு, என் பதற்றம் அளவற்றதாகிவிட்டது.
எண்ணற்றப் பூச்சிகள், உயிரினங்கள் வாழும் இந்தக் காட்டில் கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகூட பெரும் நஞ்சை உட்செலுத்திவிடும். அதன் பிறகு, நஞ்சுமுறி கொடுக்கும் வரை உங்களின் உடல் அதைத் தாங்குமா என்பது தெரியாது. எனவே, என் பதற்றம் அதிகமாகிக் கொண்டேதான் இருந்தது. வண்டுகடி மரப்பட்டையை அறைத்து உடலெங்கும் தேய்த்து விட்டால், பிறகு எந்த ஒரு பூச்சியும் உங்களை அண்டாது. அதனால்தான் இந்த மரம் கண்ணில் படாதா என்று காத்திருந்தேன். உதிரன் கண்டறிந்து விட்டான்” எனச் சொல்லி, மகிழ்வோடு கபிலரை அழைத்துவந்தான் பாரி.
“நான் பறம்புக்கு வந்து இத்தனை நாள்களாகி விட்டன. இன்னும் என்னை ஆயத்தப்படுத்தும் வேலை முடியவில்லை போலும்?”
சிரித்துக்கொண்டே பாரி சொன்னான், “வந்து செல்பவர்களுக்கு இவ்வளவு தேவையில்லை. வந்தவர்களுக்கு மட்டும்தான் இவ்வளவும் தேவை.”

மறுமொழிக்குள்ளிருக்கும் சூட்சுமம் கபிலருக்குப் புரிந்தது.
“வேட்டை இன்னும் முடியவில்லையா?” என்று கேட்ட கபிலர், “இந்த வேட்டையில் நீ எந்தப் பக்கமும் சாராமல் இருப்பதாகச் சொன்னாய். ஆனால், உன் மகிழ்வு வேட்டை யாடுபவனின் மனநிலையை நீ சார்ந்துவிட்டதைச் சொல்கிறது.”
“ஆம், அளவற்ற மகிழ்வின் மூலம் என்னை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன். அதன் மூலமே என் எண்ணத்தை வெளிப்படுத்தி விடுகிறேன் அல்லவா?”
பாரியின் ஒவ்வொரு சொல்லும் செயலும் கபிலரின் மீதான பேரன்பைக் கொட்டித்தீர்த்தன.
இருவரும் சிறிது நேரம் பேசிக்கொள்ளவில்லை. ஆனால், ஆழ்மன உரையாடல் நின்றபாடில்லை. மனதை இந்த எண்ணங்களிலிருந்து வேறொன்றுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கபிலருக்குத் தோன்றியது. அமைதியைக் கலைத்து பாரியிடம் கேட்டார், “அன்றொரு நாள் உன் முப்பாட்டன் ஒருவன் திரையர் பெண்ணை மணந்தான் என்று கூறினாய். அதைப் பற்றி பின்னர் பேசுவோம் என்றாயே, யார் அந்தத் திரையர்கள்?”
கபிலரின் கேள்வி, பாரிக்கு வியப்பை ஏற்படுத்தியது.
“நீங்கள் திரையர்களை அறிந்ததில்லையா?”
“இல்லை.”
“அவர்கள் குலம்தானே வெற்றிலையை முதன் முதலாகக் கண்டறிந்தது. இந்த மலைத்தொடரின் மாவீரர்கள் என்றால், அது அவர்கள்தானே!”
வெண்ணிறத் தட்டையும் பொன்னிறத் தட்டையும் மாற்றிக்கொண்ட குலசேகர பாண்டியனும் சூல்கடல் முதுவனும் மாற்றப்பட்ட தட்டுகளில் இருந்த வெற்றிலையை எடுத்து மெல்லத் தொடங்கினர். வெற்றிலையை மென்ற இருவர் நாவிலும் அதன் சாறு ஊறிப் பரவியது.
வெற்றிலையைக் கண்டறிந்த மாவீரர்களான திரையர்களின் கதை, பாரியின் நாவெங்கும் பொங்கி வெளிவந்தது.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...