Published:Updated:

வெள்ளி நிலம் - 11

வெள்ளி நிலம் - 11
பிரீமியம் ஸ்டோரி
News
வெள்ளி நிலம் - 11

ஜெயமோகன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

வெள்ளி நிலம் - 11

முன்கதை: இமாச்சலப்பிரதேசத்தின் மலைக் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்த பிட்சுவின் பாடம் செய்யப்பட்ட உடலைத் திருட வந்தவர்கள் பற்றிக் கண்டுபிடிக்க, நோர்பா என்ற சிறுவனுடன் செல்லும் கேப்டன் பாண்டியன், டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் மூலம் சில ஆச்சர்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்கிறான். நரேந்திர பிஸ்வாஸ் அறையில் வைத்திருந்த அரிய ஓவியங்கள் மர்ம நபர்களால் எரிக்கப்படுகின்றன, அவர்களை மோப்பம் பிடித்த நோர்பாவின் நாய் நாக்போவைச் சுடுகிறார்கள், அடுத்த முயற்சியாக சமையற்காரனாகத் தங்கி இருந்த ஒற்றனைப் பிடிக்க முயற்சிக்கும் பாண்டியனை  அந்த சமையற்காரன் தாக்கிவிட்டுத் தப்பிக்கிறான். இனி...

வெள்ளி நிலம் - 11

ங்கே நிகழ்ந்த கலவரத்தில் சுற்றுலாப் பயணிகள் சிதறி ஓடிக் கூச்சலிட்டார்கள். ஓசை கேட்டு  பிட்சுக்கள் ஓடிவந்தனர். அலுவலகப்பொறுப்பாளர் பாண்டியனிடம் வந்து குனிந்து, “என்ன ஆயிற்று? யார் அவன்?” என்று கேட்டார்.

நோர்பா, “சமையற்காரன் ஒருவனை நாங்கள் பிடித்தோம். அவன் அடித்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டான்” என்றான்.

ஒரு பிட்சு நீர் கொண்டுவந்தார். அதை முகத்தில் தெளித்ததும் பாண்டியன் விழித்துக்கொண்டான். கைகளை ஊன்றி எழுந்து அமர்ந்தான். அவன் பார்வையில் மொத்தக் கட்டடங்களும் சாய்ந்து தெரிந்தன.

நோர்பா, “என்ன செய்கிறது உங்களுக்கு?” என்றான்.

“என் முகுளத்தில் அடிவிழுந்தது. நல்லவேளையாக உயிர் பிரியவில்லை. முகுளம்தான் மூச்சைக் கட்டுப்படுத்துவது” என்றான். பிட்சு அளித்த நீரை வாங்கிக் குடித்தான்.

“யார் அவன்? என்ன நடந்தது?” என்றார் அலுவலகப் பொறுப்பாளரான பிட்சு.

இன்னொரு பிட்சு, “அவன் நம் சமையற்காரன். நான்காண்டுகளாக இங்கிருக்கிறான். லாப்ஸங் என்று பெயர்” என்றான்.

வெள்ளி நிலம் - 11



“அவன் ஒற்றன்... எல்லா பயிற்சிகளும் பெற்றவன்” என்றான் பாண்டியன். “அவனைப் பற்றிய எல்லா தகவல்களும் உடனடியாக எனக்குத் தேவை...என்னைப் பிடித்து அலுவலகத்துக்குக் கொண்டுசெல்லுங்கள்” என்றான்.

பிட்சுக்கள் அவனைத் தூக்கிக் கொண்டு சென்றனர். “நோர்பா, நாக்போவுடன் சென்று, அவன் தங்கியிருந்த இடத்தையும் அவன் வழக்கமாகச் செல்லும் இடத்தையும் சோதனை இடு... சீக்கிரம்” என்றான் பாண்டியன்.
 
‘இதோ செல்கிறேன்” என்று நோர்பா நாக்போவுக்குக் கைகாட்டியபடி சென்றான்.

நாக்போ, “ஒரே அடியிலேயே விழுந்துவிட்டானே. இவனை நம்பி எப்படிப்  பயணம் செய்வது?” என்று நினைத்தபடி வாலைச் சுழற்றிக்கொண்டு நோர்பாவின்  பின்னால் ஓடியது.

 பாண்டியனை புத்த பிட்சுக்கள் அலுவலக அறைக்குள் கொண்டுசென்று படுக்க வைத்தனர்.  அங்கிருந்த பெஞ்சில் படுத்தபோது, தண்ணீரில் மூழ்கிக்கொண்டே இருப்பதுபோல அவன் உணர்ந்தான். கண்களைத் திறந்தபோது, மேலே தெரிந்த கூரை பறந்து அகன்றது போலிருந்தது.

“உங்கள் செவிகளுக்குள் இருக்கும் வெஸ்டிபுலர் (vestibular) எலும்புகள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றன. நம் உடலின் சமநிலையைப் பேணுவது அதுதான். ஆகவேதான் உங்களால் சீராக நிற்க முடியவில்லை” என்றார் பிட்சு. 

பாண்டியன் கண்களை மூடிக்கொண்டான். ம்ம்ம் என  ஒரு ரீங்காரம் கேட்பதுபோலிருந்தது.

“நாம் கண்களை மூடிக்கொண்டாலும் நிற்கிறோமா சரிகிறோமா என்று தெரிகிறது.  அதேபோல நாம் போகும் பாதை சரியா என உள்ளிருந்தே நமக்குத் தெரிய வேண்டும்”  என்றார் பிட்சு.

அவர், பாண்டியனை குப்புறப் படுக்கச் சொன்னார். அவனுடைய புறங்கழுத்தில் கையை வைத்து அழுத்தியபோது, அவன் ஆ... என்று அலறினான். அவர்  “வலுவான அடி! நீங்கள் சண்டைப் பயிற்சி பெற்றவர். ஆகவேதான் உங்களை அறியாமலே உடலைச் சற்று விலக்கிக் கொண்டீர்கள்.  அதனால், அடி ஆழமாக விழவில்லை. சாதாரண மனிதர்கள் என்றால், இந்நேரம் கழுத்து முறிந்து இறந்து போய்விட்டிருப்பார்கள்” என்றார்.

 “அவன் பயிற்சி பெற்ற ஒற்றன் என நான் அப்போது நினைக்கவில்லை. சமையற்காரன் என்றுதான் நினைத்தேன். இல்லையென்றால், உடனடியாகக் கால்களில் சுட்டு வீழ்த்தியிருப்பேன்” என்றான் பாண்டியன்.

“நீங்கள் எழுந்து நடப்பதற்கு எப்படியும் 15 நாள்களாகிவிடும்” என்றார் பிட்சு.

“15 நாள்களா? முடியாது. அதற்குள் நான்செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன” என்றான் பாண்டியன்.

அப்போது, ஒரு பிட்சு மெல்லிய குரலில் ஏதோ சொன்னார். “அவரா?” என்றார் இன்னொருவர்.

“என்ன?” என்றான் பாண்டியன். 

வெள்ளி நிலம் - 11

“ஒன்றுமில்லை. இங்கே ஒரு முதிய பிட்சு இருக்கிறார். அவருக்குப் பல மர்மமான மருத்துவக்கலைகள் தெரியும். அவரிடம் உங்களைப் பற்றி சொல்லிப்பார்க்கலாம் என்கிறார்” என்றார் பிட்சு.

பாண்டியன், “யார், தனியாக வாழும் அந்த பிட்சுவா?” என்றான்.

“ஆம்” என்றார் பிட்சு.

“வேண்டாம்!” என்றான் பாண்டியன்.

“ஏன்?” என்று அவர் கேட்டார்.

பாண்டியன்  அச்சத்துடன், ‘‘இல்லை, வேண்டியதில்லை’’ என்றான்.

ஆனால், அதற்குள் வெளியே மெல்லிய குரல் கேட்டது. கதவு திறந்து அந்த முதிய பிட்சு ஒரு இளம் பிட்சுவின் தோளைப் பிடித்தபடி உள்ளே வந்தார். இளம் பிட்சு, “நமது விருந்தினர் அடிபட்டு விழுந்துவிட்டார் என்றார்கள். ஆகவேதான் பெரியவரைக் கூட்டி வந்தேன்” என்றார்.

பாண்டியன், “வேண்டாம் எனக்கு ஒன்றுமில்லை” என்றான்.

“ஏன் அஞ்சுகிறீர்கள்? அவர் உங்களைக் குணப்படுத்துவார்” என்றார் அலுவலகப் பொறுப்பாளராகிய பிட்சு.

முதிய பிட்சு அவனருகே வந்து அவன் கண்களை மிகவும் கூர்ந்து பார்த்தார். அவனுக்குத் தெரியாத மொழியில் மந்திரம் போல் எதையோ சொல்லிக் கொண்டார். பின்பு, தன் கையில் இருந்த சிறிய காவிநிறத் துணிப்பைக்குள் இருந்து வெள்ளியாலான சிறிய ஊசியை எடுத்தார்.

அது, சீன ஊசிக்குத்து மருத்துவ முறை  என்று பாண்டியன் அறிந்திருந்தான். ஆனால், அவர் தன்னைக் கொன்றுவிடுவார் என்று தோன்றியது.  “வேண்டாம், வேண்டாம்!” என்று சொல்லி எழப்பார்த்தான்.  

ஆனால், அவன் ஊசி குத்துவதற்குப் பயப்படுகிறான் என்று பிட்சுக்கள் அவனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். முதிய பிட்சு, அந்த வெள்ளி ஊசியால் அவனுடைய உள்ளங்காலில் குத்தினார். எறும்பு கடிப்பது போல ஒரு வலி. மறுகாலில் அதே இடத்தில் குத்தினார். அதன்பின் வலிதெரியவில்லை.

அந்தப் பையிலிருந்து நிறைய வெள்ளி ஊசிகளை எடுத்து, உள்ளங்கால் முழுக்கச் சரசரவென்று குத்தி முடித்தார். அதன்பிறகு, பாண்டியனின் தோளில்  கையை வைத்து அழுத்தினார். பாண்டியனுக்கு அவர் தொட்டதே தெரியவில்லை.
 
அவர் குனிந்து கைகளால் தன் கழுத்தைப் பிடிப்பதை அவன் பார்த்தான். ‘இப்போது என் தலையை இவர் முறித்து சென்றால்கூட என்னால் ஒன்றும் செய்ய முடியாது’ என்று நினைத்துக் கொண்டான். இப்படி முட்டாள்தனமாக மாட்டிக் கொண்டோமே என்று தவித்தான். ‘அவ்வளவுதான்’ என் கதை முடிந்தது, என்று மனம் படபடத்தது.

முதிய பிட்சு அவன் இரு காதுகளுக்குப் பின்பக்கம் தன் கைகளை வைத்து அழுத்தி, தலையைப் பற்றி, அப்படியே மேலே தூக்கினார். அவன் தலைக்குள் ஏதோ ஒன்று மெல்லக் குலுங்குவது போல ஒலி கேட்டது. கண்களுக்குள் மின்னல் அடித்தது. உடல் குளிர்கொண்டது போல நடுங்கியது.

தன் கைகளை  இழுத்து, அவன் பின்கழுத்து வரை கொண்டுவந்தார் முதிய பிட்சு. அப்படி 10 முறை செய்துவிட்டு, தன் நெஞ்சில் கையைக் குவித்து மீண்டும் ஏதோ மந்திரத்தைச் சொன்னார். பிறகு, அவன் கால்களில் இருந்த ஊசிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கலானார். அனைத்தையும் தன் பைக்குள் வைத்தபின், மீண்டும் அந்த அறியாத மொழியில் மந்திரத்தைச் சொன்னார்.  பாண்டியனிடம், “எழுந்து அமர்க” என்றார்.

பாண்டியன் எழுந்தபோது, தலைச்சுற்றலோ சமநிலைக் குறைவோ ஏற்படவில்லை. அடிபட்ட வலிகூட இருக்கவில்லை.  “நீ சரியாகிவிட்டாய்” என்று சொன்னபின், முதிய பிட்சு தன்னைத் தூக்கும்படி கைகாட்டினார். இரண்டு இளம் பிட்சுக்கள் அவர் கையை மெதுவாகப் பிடித்துத்  தூக்கினர். அவர், அவன் தலை மேல் கைவைத்து வாழ்த்திவிட்டுச் சென்றார்

அவர் உடலில் உள்ள தசைகள் எல்லாமே சுருங்கித் தொய்ந்து கிடந்தன. மெதுவாக அவரைக் கூட்டிச் சென்றனர். பாண்டியன் அவரை வணங்கி, மனதுக்குள்  ‘என்னை மன்னியுங்கள் ‘என்று சொல்லிக்கொண்டான்.

 “இந்த மடாலயத்திலேயே அவர்தான் சிறந்த மருத்துவர். ஆனால், அவருடைய மருத்துவ முறைகளே வேறு” என்றார் ஒரு பிட்சு

“அவர் 50 ஆண்டு காலம் திபெத்தில் இருந்தார். தலாய்லாமா இந்தியாவுக்கு வந்த போது கூடவே வந்தார். மற்றபடி அவரைப் பற்றி எதுவும் நமக்குத் தெரியாது” என்றார் இன்னொரு பிட்சு.

‘‘புகழ்மிக்க மருத்துவக் குடும்பத்தில் அவர் பிறந்தவர் என்கிறார்கள். சீனத் தற்காப்புக் கலை அனைத்திலும் மிகப்பெரிய நிபுணராக இருந்தார். ஒரு கழியைத் தரையில் ஊன்றிக்கொண்டு மேலே எழுந்து சுழன்று சுழன்று சண்டையிடுவார். ஆகவே, இவருக்குப் பறக்கும் லாமா என்றே பெயர் இருந்தது. இதெல்லாம் பெரியவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டது. எங்களைவிட எழுபதாண்டு எண்பதாண்டு மூத்தவர். 120 வயதாகிறது” என்றார் ஒரு பிட்சு.

பாண்டியனுக்கு வியப்பாக இருந்தது. “சரி, நான் என் தோழனைச் சென்று பார்க்க வேண்டும்” என்றபின், அவன் வெளியே இறங்கி மடாலயத்தின் உள்ளே சென்றான்.

சமையலறையை ஒட்டிய கட்டடம், பணியாளர்கள் தங்குவதற்கு உரியது. அங்கே, வெளியே நாக்போ தரையை முகர்ந்துகொண்டிருந்தது. பாண்டியனைப் பார்த்ததும் தலைதூக்கி, ‘என்ன எழுந்துவிட்டானா?’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டது. பிறகு, ‘அடிபட்ட இடத்தை நன்றாக நக்கினாலே போதும்,  சரியாகிவிடும். பாவம், நாய்களுக்குத் தெரிந்த இந்த மருத்துவம் மனிதர்களுக்குத் தெரிவதில்லை’ என்று எண்ணி முகர்ந்தபடி அப்பால் சென்றது.

பாண்டியன் அறைக்குள் சென்றான். அங்கு சமையலறை ஊழியர்கள் பலர் நின்றனர். நோர்பா அறையின் எல்லா பகுதிகளையும் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். பாண்டியனைப் பார்த்ததும், “எதுவும் தென்படவில்லை. இவர்களும் அவனைப் பற்றி ஒன்றும் தெரியாது என்கிறார்கள். இங்கு இரண்டரை வருடங்களுக்கு மேலாக வேலை பார்த்திருக்கிறான். இவர்கள் அடையாள அட்டையை எல்லாம் வாங்கிக்கொண்டுதான் வேலைக்கு அமர்த்துகிறார்கள்” என்றான்.

“அதெல்லாம் பொய்யான அட்டைகள்தான். சந்தேகமே வேண்டாம்” என்று பாண்டியன் சொன்னான்.  “அவன் இங்கிருந்து யாருடனாவது தொடர்புகொள்ள முயன்றிருப்பான். அதற்கான கருவிகள் ஏதேனும் இருக்கிறதா?” என்றான். 

வெள்ளி நிலம் - 11

“எதுவுமே இல்லை. அவனுடைய பெட்டி பூட்டப்பட்டிருந்தது. அதை உடைத்து உள்ளே பார்த்தேன். ஆடைகள், ஒன்றிரண்டு புத்தகங்கள் மட்டுமே இருந்தன.”

பாண்டியன், “அந்தப் பெட்டியை அப்படியே எடுத்துக்கொள்” என்றான்

அவர்கள் வெளியே வந்தபோது, நாக்போ வாயில் எதையோ கவ்விக் கொண்டு ஓடிவந்தது. அவர்கள் முன் நின்று வாலைச் சுழற்றியபடி இடுப்பை ஆட்டி நடனமாடியது. நோர்பா குனிந்து அதன் வாயிலிருந்து அதை எடுத்தான். அது ஒரு சிறிய கேபிள்.

“இது ஒரு தொடர்புச்சரடு” என்று பாண்டியன் சொன்னான். “சாதாரணமாக, கணிப்பொறியிலிருந்து செல்பேசிக்கு இணைப்பதற்கு இதைப் பயன்படுத்துவார்கள். ஆனால், இது இருமடங்கு பெரிதாக இருக்கிறது.”

அவர்கள் கிளம்பி கீழே வந்தனர். பாண்டியன் சிந்தனையுடன் நடந்தான். பின்னர், “செயற்கைக்கோள் செல்பேசிக்கான வயர் அது என நினைக்கிறேன்” என்றான்.

 “அது எதற்காக?” என்றான் நோர்பா.

“செல்பேசியில் இந்தியாவுக்குள்தான் நாம் தொடர்புகொள்ள முடியும். சீனாவுடனோ பாகிஸ்தானுடனோ பேசப்படும் அனைத்து உரையாடல்களையும் அரசாங்கம் ஒட்டுக் கேட்கும். ஏனென்றால், அவை எதிரி நாடுகள். ஆகவே, இந்த தனிப்பட்ட செயற்கைக்கோள் தொலைபேசியைப் பயன்படுத்தியிருக்கிறான்”. இது, நேரடியாக சீனாவின் செயற்கைக்கோளுடன் தொடர்புகொள்ளும்.”

 “அந்தக் கருவி எங்கே?”  என்று நோர்பா கேட்டான்.

“இந்த மடாலயத்தில் எங்கோ அது இருக்கிறது. அவன் அதை ஒளித்துவைத்திருக்கிறான்” என்றான் பாண்டியன்.

(தொடரும்...)

வெள்ளி நிலம் - 11

அக்கு பங்சர்

க்கு பங்சர் என்பது சீனாவில் உள்ள ஒரு வகை மருத்துவமுறை. இன்று உலகமெங்கும் இது புகழ்பெற்றுள்ளது.  சீனாவின் தொன்மையான மருத்துவ முறையில் உடலியங்கியல் க்யி [Qi] எனப்படுகிறது. அதன்படி உடலில் நூற்றுக்கணக்கான நரம்பு முடிச்சுகள் உள்ளன. அங்கே ஊசிகளால் மென்மையாகக் குத்தி நரம்புகளைக் கட்டுப்படுத்துகிறார்கள். அதன்பின், எலும்புகளைச் சரிசெய்வது போன்ற மருத்துவச் செயல்பாடுகளைச் செய்கிறார்கள். இது, பெரும்பாலும் வலி நீக்கத்துக்கே பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், அக்கு பங்சர் சிறந்த நிபுணரால் செய்யப்படாவிட்டால் பயனளிக்காது. நவீன மருத்துவம் இதை அங்கீகரிக்கவில்லை. ஊசிகள் தூய்மையானவையாக இல்லை என்றால், நோய்த்தொற்று ஏற்படும்.