மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடல் தொடாத நதி - 2

கடல் தொடாத நதி - 2
பிரீமியம் ஸ்டோரி
News
கடல் தொடாத நதி - 2

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

கடல் தொடாத நதி - 2

ளையராஜா, பாரதிராஜா ஆகியோரோடு எனக்கு ஏற்பட்ட நட்பு, என்னுடைய 14 வயது பருவத்திலேயே தொடங்கிவிட்டது. இப்போது அந்த நட்புக்கு வயது 60. எங்கள் மூவரையும் இணைத்து வைத்தது, ‘இணைகோடுகள்’ என்ற என் சிறுகதை. மாலை முரசு நடத்திய ஒரு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்று, தேர்வான கதை.  அந்தக் கதை எழுதியபோது எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். கதையைப் படித்து விட்டுச் சின்னசாமி, ராசய்யாகிட்ட பேசி யிருக்கிறான். ‘‘டேய், செல்வராஜ்னு ஒருத்தன் அருமையாக் கதை எழுதியிருக்கான். நீ படிச்சியா?’’ எனக் கேட்டிருக்கான். ராசய்யா பதிலுக்கு, ‘‘டேய், அவன் என் ஃப்ரெண்டுதான்’’னு சொல்லியிருக்கான்.

சின்னசாமிதான் பாரதிராஜா. ராசய்யாதான் இளையராஜா... இது உங்களுக்குத் தெரியும். அப்படித்தான் ஆரம்பித்தது எங்கள் நட்பு.

என் சித்தப்பா சங்கரய்யா, கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். கம்யூனிஸ்ட் பார்ட்டியில் இருந்ததால் பாவலர் வரதராசன் குழுவினரை நாங்கள் அறிந்துவைத்திருந்தோம். கட்சிக் கூட்டத்துக்குப் பாவலர் குழுவை அழைக்க வேண்டுமானால், நாமாக அழைத்துவிட முடியாது. அதற்கு நிறையக் கட்டுப்பாடுகள் உண்டு. கட்சி அலுவலகம் மூலம்தான் அழைக்க வேண்டும். ஒரு தேர்தல் நேரத்தில் முதல்முறையாகப் பாவலர் வரதராஜன் மதுரைக்கு வந்திருந்தார். உடன் வந்தான் இளையராஜா. அவனுக்கு மியூசிக் டைரக்டர் ஆக வேண்டும் என்கிற ஆசை. எனக்கும் சினிமா ஆசை இருந்ததால், அடுத்தடுத்த சந்திப்புகளில் எங்கள் நெருக்கம் அதிகமாக இருந்தது.

ஒரு சமயம் எங்கள் வீட்டுக்கு வந்த சங்கரய்யா, டேபிளில் இருந்த என்னுடைய கதைகளைப் படித்துப் பார்த்துவிட்டு, ‘சினிமாவுக்கு முயற்சி பண்ணலாமே?’ என ஆர்வத்தில் திரி கொளுத்திப் போட்டார்.

ஏற்கனவே எங்கள் குடும்பத்துக்குக் கொஞ்சம் சினிமா அனுபவங்கள் இருந்தன. டி.ஆர்.மகாலிங்கத்தை வைத்து ‘சிவகாமி’ என ஒரு படம் எடுத்தார், என் அப்பா. கம்பெனிக்கு, ‘செல்வராஜ் அண்டு கோ’ என என் பெயரைத்தான் வைத்தார். மதுரையில் சித்ரகலா ஸ்டூடியோவில் வைத்துத்தான் ஷூட்டிங். நடிகர்களை எல்லாம் மதுரையிலேயே தங்க வைத்து, சாப்பாடு தயாரித்து... எல்லாம் தடபுடலாக நடந்தன. படத்தை முடிக்க முடியவில்லை. அதன் பிறகு மகாலிங்கமும் பிஸியாகிவிட்டார்.

கடல் தொடாத நதி - 2

அதே போல என் மாமனாரும் தேவர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தோடு சேர்ந்து ஒரு படம் எடுக்கும் வேலையில் இறங்கினார். மிட்சல் கேமராவில் எடுத்த காட்சிகள். அதன்பிறகுதான் ஹாரி கேமரா புழக்கத்துக்கு வந்தது. அந்தப் படமும் பாதியில் நின்றுபோனது. அதனால் வீடெல்லாம் ரீல்களாகக் கிடக்கும். என் வயதுப் பையன்கள் பனங்குடுக்கையில் கவட்டை வைத்து வண்டி ஓட்டும்போது, நான் சினிமா ரீல் ஓடும் சக்கரங்களை வைத்து வண்டி ஓட்டி விளையாடுவேன்.

‘கைகொடுத்த தெய்வம்’ படத்தைத் தயாரித்த எம்.எஸ்.வேலப்பன், எங்களுக்கு உறவினர். ஜட்கா வண்டி ஒன்று வைத்திருப்பார். ஒற்றைக் குதிரை பூட்டிய அந்த வண்டியில் அவர் தினமும் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குப் போய்விட்டு, மதுரையில் இருந்த ஒரிஜினல் அல்வா கடைக்கு வந்து குதிரைக்கு அல்வா வாங்கித் தருவார். இந்த நிகழ்ச்சி தினமும் தப்பாமல் நிகழும். அவர் தயாரிக்க இருந்த அடுத்த படத்துக்காகத்தான் முதன்முதலாகச் சென்னை வந்தேன். அவருடைய பொருளாதாரச் சிக்கல் காரணமாகப் படவேலைகள் தள்ளிப்போயின.

அதன் பின் மதுரைக்கே திரும்பி வந்துவிட்டேன். தோழர் பாலதண்டாயுதம் என் நிலைமை அறிந்து, ‘தைரியமாக இரு’ எனக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை இப்போதும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

அவருடைய சிபாரிசில் மல்லியம் ராஜகோபால் இயக்கிய ‘ஜீவனாம்சம்’ என்ற படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். அப்போது எல்லாம் உதவி இயக்குநர்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கும். சங்கரய்யாவின் உறவினன் என்பதும் பாலதண்டாயுதம் அவர்களின் சிபாரிசு என்பதும், எனக்கு ஓரளவுக்கு மரியாதையை ஏற்படுத்திக்கொடுத்தன. லட்சுமி நாயகியாக நடித்த முதல் படம் அது. நாகேஷ் அதில் முக்கியமான வேடத்தில் நடித்தார். பாதிப் படம் நடந்து முடிந்த நிலையில், நாகேஷின் டிரைவர் கொலை செய்யப்பட்டதாக ஒரு வழக்கு. நாகேஷும் அந்த விசாரணையில் சிக்கிக்கொள்ள, அவர் படப்பிடிப்புக்கு வர முடியாத சூழல். ஷூட்டிங் இருந்தாலே சரியாகச் சாப்பாடு கிடைப்பது கஷ்டம். ஷூட்டிங் நின்றுபோனால், பச்சைத் தண்ணீர் கிடைப்பதும் அபூர்வமாகிவிடும். அது அறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த நேரம் என்பது நினைவிருக்கிறது. என்ன செய்வது எனப் புரியாமல் நின்றேன்.

கடல் தொடாத நதி - 2

அந்த நேரத்தில்தான், பாரதிராஜா சென்னையில் இருப்பதாக இளையராஜா கடிதம் எழுதினான். அவன் அறை முகவரியை வாங்கிக்கொண்டு நேரில் பார்த்தேன். சினிமாவுக்கு முயற்சி செய்துகொண்டே, சென்னையின் உட்ஸ் சாலையில் இருந்த ஒரு ஆட்டோமொபைல் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய அறைக்குச் சென்று பார்த்தேன். தன்னுடனேயே தங்கச் சொன்னான். நான் எழுதி வைத்திருந்த ‘ஊசியிலைக் காடுகள்’ என்ற கதையைக் காட்டினேன். படித்துப்பார்த்துவிட்டு, ‘‘இதை மாத்து... அதை மாத்து... கதைனா விஷுவலா இருக்கணும்’’ எனச் சொல்ல ஆரம்பிச்சான். எனக்கு வந்ததே கோபம். ‘‘போடா... நான் எவனை நம்பியும் மெட்ராஸுக்கு வரலை’’ என்று சொல்லிவிட்டு, ஃபைலைத் தூக்கி அடித்தேன்.

பாரதியும் சளைக்கவில்லை... ‘‘என் அறையில வந்து தங்கிக்கிட்டு, என்கிட்டயே எகிறிட்டு இருக்கியா... வெளிய போடா. என் டெர்லின் சட்டையக் கழட்டிவெச்சுட்டுப் போடா’’ எனக் கத்த ஆரம்பித்தான். எங்கள் முதல் சந்திப்பே சண்டையில் முடிந்தது.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)

எங்களை இணைத்த கதை!

மாலை முரசு நடத்திய சிறுகதைப் போட்டிக்கு நான் எழுதிய ‘இணை கோடுகள்’  சிறுகதை, பாலியல் தொழிலாளி பற்றியது.

சமூக சீர்திருத்தவாதி ஒருவன், அவளைத் திருத்த நினைக்கிறான். அவள், ‘நீ எனக்கு நல்ல கணவனாக இருக்க முடியுமா’ எனக் கேட்கிறாள். சம்மதிக்கிறான். வாழ்க்கை நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. இந்த நேரத்தில் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைக்குச் செல்கிறான் அந்த சீர்திருத்தவாதி. அவளுக்கோ வாழ வழியில்லை. தன் வழக்கமான தொழிலில் ஈடுபடுகிறாள். சிறையில் இருக்கும் கணவன், விஷயம் கேள்விப்பட்டுத் துடிக்கிறான்.

தண்டனை முடிந்து, ஒருநாள் காலையில் அவன் வீட்டுக்குத் திரும்புகிறான். வீடு பூட்டிக்கிடக்கிறது. இரவு வெளியே சென்ற மனைவி, அப்போதுதான் வீடு திரும்புகிறாள். ‘‘எனக்கு நல்ல மனைவியாக இருப்பதாகச் சொன்னாயே?’’ எனக் கேட்கிறான். ‘‘நீங்களும்தான் நல்ல கணவனாக இருப்பதாகச் சொன்னீர்கள்’’ என பதிலாகக் கேட்கிறாள்.

இருவரும் அவரவர் பாதையில் பிரிகிறார்கள். இணையாத கோடுகளாக... இணை கோடுகளாகப் பயணிக்கிறார்கள். இதுதான் அந்தக் கதை.