
News
சச்சின்

அச்சு முறிந்த இறுதி நாளில்
தான் வேறொரு கூடடையப்போவதாகச்
சொல்லி கதறியழும் உனக்கு
ஒரு துளி உப்புநீரைப் பரிசளிக்கிறேன்
அதை ஆவியாகாமல் சேமித்து வை
அது காயங்களுக்கு மருந்தாகும்
உன் வீட்டுச் செடிகளின் வேர்களுக்கு
மகிழ்ச்சி தரும் கணவனின் அன்பாகும்
குடல் செல்லும் உணவின் உமிழ்நீராகும்
கொட்டும் தேனீக்களின் கொடுக்கறுக்கும்
முத்தத்தின் வாசமாகும்
காவியக் கதைகள் சொல்லி
உயிர் வளர்க்கும்
மேலும் ஒருநாள்
உன் அடிவயிற்றில் பரவசமூட்டிய
அழகு சிசு அமுதருந்தும்போது
அதன் ஈறு பட்டு உன் உயிர் கூசும்
அப்போது... அப்போது
அதன் கண்களை உற்றுப்பார்
அதிலிருந்து ஒரு துளி உப்புநீர்
வழிந்துகொண்டிருக்கும்.