
பச்சோந்தி, படம்: எம்.விஜயகுமார்

சீமை ஓடுகளில் செருகி
சிமென்ட் தரையில் குத்தி நிற்கிறது சூரியக் கம்பி.
அது நெற்றியில் குத்தி நடுமண்டைக்கு நகர்கையில்
பயண அசதியில் உறங்குகிறார் அப்பா.
புழுதி பூசிய கைகால்களோடு
வீடுவந்த மகள்
உறக்கத்தை உதறி அப்பாவை எழுப்புகிறாள்.
மல்லாக்கப் படுத்திருந்தவர்
வலப்பக்கமாக ஒருக்களிக்கையில்
வழிந்த வியர்வையை நாக்கால் வழித்து
மடக்மடக்கெனக் குடித்துக்கொள்கிறார்.
ஐந்து நாள்களாகத் திருகுக் குழாயடியில்
வெயில் நிரம்பிக்கிடக்கின்றன பிளாஸ்டிக் குடங்கள்.
அப்பாவின் இமைகளைத் திருகினாள்
கண்களுக்குள் தடக்தடக் ரயிலொன்று
தண்டவாள இருட்டை விரட்டியது.
பின்பு உறக்கத்தை மடிக்கையில்
குப்புறக்கப் படுத்துக்கொள்கிறார்
முதுகெங்கும் கோரைப்பாயின் கோடுகள்.
உறக்கம் கலைந்ததும் அப்பாவின் கண்கள் தேடின
மகளோ... விரல் சப்பியபடி
நீலப்போர்வையில் உறங்குகிறாள்.
சந்தைக்குச் சென்ற அப்பா
சிறுமலைப் பிரிவில் இரண்டு படி வேர்க்கடலை வாங்கிவந்தார்.
டிக்டாக்கைக் கடித்துத் தின்று
முந்திரிப்பருப்பில் பிறைநிலவைக் கொறித்துக்கொண்டிருந்தாள் மகள்.
பின்பு ஊருக்குக் கிளம்பிய அப்பாவிடம்
`ஏம்ப்பா என்னை விட்டுட்டுப் போற...
ஏம்ப்பா என்னை விட்டுட்டுப் போற?’ என்ற
கேள்வியில் அப்பாவைத் தொங்கவிடுகிறாள்.
`சரி... அப்பாவுக்கு டாட்டா சொல்லுமா...’ என்று
உடைந்த குரலில் அம்மா சொல்ல
மகளோ... உள்ளங்கையிலிருந்த
இரண்டு பச்சை வேர்க்கடலைகளில்
ஒன்றை அப்பாவின் நெஞ்சின்மீதும்
மற்றொன்றை வயிற்றின்மீதும் எறிந்தாள்.
முதல் எறிதலில் பொத்துக்கொண்ட மார்பையும்
இரண்டாம் எறிதலில் பிய்த்துக்கொண்ட குடலையும்
தரதரவென இழுத்துக்கொண்டு
கடைசிப் பேருந்துக்கு ஓடுகிறார் அப்பா.