
அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

பாரதிராஜாவின் அறையில் இருந்து வெளியே வந்த நான், சென்னை நகரத்தின் பரந்த தெருவில், முகம் தெரியாத மனிதர்களுக்கு மத்தியில் நடக்க ஆரம்பித்தேன். சினிமாவில் ஜெயித்தாக வேண்டும் என்ற வெறி மேலும் கூடுதலானது. ஏனென்றால், என்னுடைய முந்தைய தலைமுறையினர் சினிமா எடுக்க முயற்சி செய்து தோல்விகளைச் சந்தித்திருந்தனர். இன்னொரு தோல்விக்கு நான் தயாராக இல்லை.
மதுரையில் எனக்கு இரண்டு முக்கியமான நண்பர்கள் உண்டு. ஒருவன், பாலசந்திரன். இன்னொருவன், மீனாட்சி சுந்தரம். இவர்கள் இருவரும் என் கதைகளைப் படித்துக் கருத்துகள் சொல்பவர்களாக இருந்தனர். மீனாட்சி சுந்தரத்தை ‘டே மீனா... டே மீனா’ என அழைத்து அவன் பெயர் ‘டெமினா’ என்றே நண்பர்கள் வட்டத்தில் மாறிப் போனது. அந்த டெமினா அப்போது சென்னை பெல்ஸ் ரோட்டில் தங்கி, வக்கீலுக்குப் படித்துக்கொண்டிருந்தான். அப்போது, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் கட்டப்படவில்லை. ஏன்... எழிலகம்கூட உருவாகவில்லை. அவனுடைய அறையில் கொஞ்ச நாட்களை ஓட்டினேன்.

அப்போது கண்ணதாசன் நடத்திய ‘தென்றல்’ இதழ், இலக்கிய உலகில் மிகவும் பிரபலம். சினிமா ஆசையில் இருந்த எனக்கு, அதன் மீது ஒரு ஈர்ப்பு. கவிதைகளை எழுதி அந்த இதழுக்குக் கொடுத்துவிட்டு வருவேன். வலம்புரி சோமநாதன், பஞ்சு அருணாசலம் போன்றவர்கள் இதழ் பொறுப்பையும் கவனிப்பார்கள். அப்படிச் சென்றுவந்த நேரத்தில், சினிமா உதவி இயக்குநர் என்ற பாசத்தில், பஞ்சு அருணாசலம் என்னிடம் பழக்கமானார். இந்த சமயத்தில், நான் பாலமுருகனிடம் வசன உதவியாளராகச் சேர்ந்திருந்தேன். அந்த நாளில் அவர் பிரபல கதாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் பல படங்களுக்கு எழுதி வந்தார். ‘வசந்த மாளிகை’ படத்துக்கு அவர்தான் வசனம். அந்தப் படத்தின் பாடலாசிரியர் கவியரசு கண்ணதாசன்; அவருடைய உதவியாளர் பஞ்சு அருணாசலம். ‘வசந்த மாளிகை’ எங்களை மேலும் நெருக்கமாக்கியது.
அந்தப் படத்தின் வேலைகளுக்காக மகாபலிபுரத்தில் ரூம் போட்டனர். கண்ணதாசன், பாலமுருகன், இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் எனப் பலரும் வந்திருந்தனர். உதவியாளர்களாக இருந்த எனக்கும் பஞ்சுவுக்கும் ஒரே அறை. எழுத்துப் பணிகள் முடிந்து வீடு திரும்புவதற்கு எங்களுக்கு ஒரு கார் அனுப்பினர். கே.வி.மகாதேவனின் உதவியாளர் ராகவலு என்பவரும் எங்களுடன் வந்தார்.
எங்களை அவரவர் வீடுகளில் இறக்கிவிட வேண்டும். நான் தேனாம்பேட்டையில் இருந்தேன். தி.நகரில் மூஸா தெருவில் பஞ்சு இருந்தார். அவரை முதலில் ட்ராப் செய்துவிட்டு, நான் தேனாம்பேட்டை போக வேண்டும். காரில் பேசிக்கொண்டே வந்தோம்.
அந்த நாளில் எழுத்தாளர் தமிழ்வாணன் ஒரு படம் எடுத்தார். எங்கள் பேச்சு, அந்தப் படத்தைப் பற்றித் திரும்பியது. அந்தப் படத்துக்குப் புதிய இசையமைப்பாளர். அவர் கண்ணதாசனைப் பாடல் எழுத வைக்காமல் வேறு யாரையோ எழுதவைத்தார். அதைச் சுட்டிக்காட்டிய பஞ்சு, கொஞ்சம் ஆவேசமாக அந்த இசையமைப்பாளரைத் திட்டிக்கொண்டு வந்தார். ‘‘தமிழ் தெரியாதவன்... தொழில் தெரியாதவன் எல்லாம் மியூசிக் போட வந்துட்டானுங்க’’ என கொட்டித் தீர்த்தார். அவர் இறங்க வேண்டிய இடம் வந்தது. அப்போது, எங்களுடன் வந்த அந்த நபர், ‘‘இவ்வளவு நேரம் நீங்கள் திட்டிக்கொண்டு வந்த தொழில் தெரியாத மியூசிக் டைரக்டர் நான்தான்’’ என்றார் பொறுமையாக. எங்களுக்கு ஒட்டுமொத்த போதையும் இறங்கிவிட்டது.
தி.நகரில் இப்போது பஸ் ஸ்டாண்ட் இருக்கும் இடம் அப்போது வெறிச்சோடிக் கிடக்கும். அங்கே, சிவா விஷ்ணு கோயிலுக்கு எதிரே ‘கிளப் ஹவுஸ்’ இருந்தது. அது சினிமா ஆர்வலர்களின் சொர்க்கம். நாகேஷ், ஸ்ரீகாந்த் போன்ற பலரும் அங்கே தங்கியிருந்துதான் வாய்ப்பு தேடினார்கள். நாள் வாடகை 10 ரூபாய். ‘சூடிக்கொடுத்தாள்’ கதை அங்கே திரைவடிவமாகிக் கொண்டிருந்த வேளையில், இளையராஜா பற்றி பஞ்சுவிடம் சொல்லியிருந்தேன். அழைத்து வரச் சொல்லியிருந்தார்.

சொன்னபடி, தி.நகர் பஸ் ஸ்டாண்டுக்கு இளையராஜா, பாஸ்கர் ஆகிய இரண்டு பேரும் வந்துவிட்டார்கள். அவர் களை அந்த லாட்ஜுக்கு அழைத்துச் சென்றேன். ‘‘கொஞ்சம் இருங்கள்’’ என அவர்களை ரிசப்ஷனில் உட்கார வைத்துவிட்டு, பஞ்சுவிடம் போய் விஷயத்தைச் சொன்னேன்.
வரச்சொன்னார். அப்போது டிரிங்க் பண்ணிக் கொண்டிருந்த பஞ்சு, ‘‘ட்ரிங்க் பண்ணுவீங்களா?’’ என்று நாகரிகம் கருதி, ராஜாவிடம் அவர் கேட்டார். நான் பதறிப்போய், ‘‘அவனுக்கு அந்தப் பழக்கம் எல்லாம் இல்லை’’ என்று சொன்னேன். பஞ்சு நம்பிக்கையாகப் பேசி, வழியனுப்பிவைத்தார்.
ராஜாவையும் பாஸ்கரையும் பஸ் ஏற்றிவிட பஸ் நிலையத் துக்கு வந்தேன். ராஜா முகம் இறுக்கமாக இருந்தது. ‘‘அவர்தான் கூப்பிட்டாரே... நீ ஏன் வேணாம்னு சொல்லிட்டே?’’ என முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டான். வாய்ப்பு கேட்க வந்த முதல் நாளே இப்படி ஆரம்பிப்பது சரியாக இருக்காது என்று எடுத்துச் சொன்ன பிறகுதான் இறங்கிவந்தான்.
அடுத்த சந்திப்பு, கம்போஸிங் நோக்கி மெல்ல நகர்ந்தது. ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ என ட்யூன் போட்டபடியே பாட ஆரம்பித்தான் ராஜா. பஞ்சு முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். ‘‘அன்னக்கிளி... இதுதான் படத்தின் டைட்டில்’’ என்றார்.
சந்திப்பு: தமிழ்மகன்
(ரீல் அல்ல ரியல்)

‘‘நெருப்பு தாங்க சார்!’’
இளையராஜாவும் நானும் சேர்ந்து வைகையில் பானைப் பொறிவைத்து மீன் பிடிப்போம். ஆற்றில் நீர் ஓட்டத்துக்கு எதிர்திசையில் மீன்கள் தாவிக் குதிக்கும். பானைப் பொறி என்பது, மீன்களைப் பிடிப்பதற்கான ஒரு சாதனம். மீன்களைப் பிடித்து அங்கேயே சுட்டுத் தின்போம்.
மீன் பிடிக்கப் போக வேண்டும் என்றால், நான்கு பெர்க்லி சிகரெட், வத்திப்பெட்டியின் ரேக்கு, நான்கு தீக்குச்சி, கொஞ்சம் உப்பு, மிளகாய்த் தூள் இருந்தால்போதும். மீன் வேட்டையின்போது நெருப்பு அணையாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். ஒருத்தன் சிகரெட் முடித்ததும் அடுத்தவன் அதில் இருந்து சிகரெட் கொளுத்திக்கொள்ள வேண்டும். கங்கு அணையாமல் காப்பாற்ற வேண்டுமே? ஒருநாள் இரவு இரண்டு பேரின் சிகரெட்களும் அணைந்துவிட்டன. மீன் சுடுவதற்கு நெருப்பு இல்லை. அந்த நேரத்தில் இருட்டில் யாரோ ஒருவர் சிகரெட் பிடித்துக்கொண்டு வந்தார். ‘கொஞ்சம் நெருப்பு குடுங்க சார்’ என்று கேட்டேன். அவர் நெருப்பை நீட்டினார். நான் சிகரெட்டை கொளுத்திக் கொண்டேன். கங்கு தீப்பிடிக்கும்போது வெளிச்சம் அதிகமாகும். நெருப்பு தந்தவர் அப்போது என் முகத்தைப் பார்த்தார். ‘‘வீட்டுக்கு வா பேசிக்கிறேன்’’ என்றார்.
அவர், என் அப்பா!