
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200 - ஓவியங்கள்: ராமமூர்த்தி
ஈஸி யூனிஃபார்ம் ப்ளீஸ்!

என் உறவினரின் வீட்டில் ஒரு வாரம் தங்கியிருந்தேன். அவர் மகள் படிக்கும் பள்ளியில் பினோஃபார்ம்தான் யூனிஃபார்ம். காலை 7:30-க்கு வேன் வரும். அதற்குள் அவளைத் தயார்படுத்தி அனுப்ப வேண்டிய பொறுப்பு அம்மாவுக்கு. அவசரமாக லஞ்ச் பாக்ஸில், சாப்பாடு வைத்துக்கொண்டிருக்கும்போதே, அடுப்பிலிருக்கும் தோசை `என்னைத் திருப்பிப் போடு’ என்று வாசம் மூலம் கூப்பிடும். அப்போதுதான் பெண் குளித்துவிட்டு வந்து `பட்டனை மாட்டு’ என்பாள். ஏழு பட்டனையும் மாட்டும் முன் டென்ஷன் எகிறுவது வாடிக்கை மட்டுமல்ல; வேதனையும்தான்!
இது தொடர்பாகப் பள்ளி நிர்வாகங்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்க வேண்டும் என்று தோன்றவே, `அவள் விகடன்’ மூலம் எழுதுகிறேன். வரும் கல்வியாண்டிலிருந்து குழந்தைகளே எளிதாக அணியும் வகையிலோ,பெற்றோர் விரைவாக அணிவிக்கும்படியோ, அவர்களின் சீருடையில் முன்பக்கப் பொத்தான் வைக்கலாமே... ப்ளீஸ்!
- என்.கோமதி, பெருமாள்புரம்
புடவை கட்டிக்கொண்டு வண்டி ஓட்டுகிறீர்களா?

என் தோழி ஒரு பள்ளியில் டீச்சராகப் பணிபுரிகிறாள். அங்கு ஆசிரியைகள் புடவைதான் அணிய வேண்டும். `டூவீலரில் செல்லும்போது புடவையை இடுப்பில் செருகிக்கொள்’ என்று பலமுறை சொல்லியும் அவள் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.
ஒரு நாள் புதுப் பட்டுப்புடவையுடன் டூவீலர் பயணம். காற்று சற்று வேகமாக அடிக்க, புடவையின் முன்பகுதி சூடான சைலன்ஸரில் பட்டு ஓட்டையாகிப் போனது.
இப்போது புடவையின் ஓட்டையை மறைக்க இடுப்பில் செருகி அட்ஜஸ்ட் செய்துகொள்கிறாள். இதை முன்பே செய்திருக்கலாமே. புடவை அணிந்து டூவீலரைக் கையாளு பவர்களுக்கு இது ஓர் எச்சரிக்கை.
- அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி
படிப்போம்... படிக்க வைப்போம்!

என் சித்தியின் மகள் வீட்டுக்குப் போயிருந்தேன். அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள். எட்டாவது, ஒன்பதாவது படிக்கிறார்கள். ஞாயிறு அன்று நீதிக்கதைகள், அறிஞர்களின் கட்டுரைகள், பொது அறிவுப் புத்தகம் என படித்துக்கொண்டிருந்தார்கள். `தொலைக்காட்சியே கதி... செல்போனே சரணம்னு இருக்கிற காலத்தில் இப்படி நல்ல புத்தகங்களைப் படிக்கும்படி அவர்களை எப்படி மாற்றினாய்?' என்று கேட்டேன். `நான் நிறைய புத்தகங்கள் படிப்பேன். என்னைப் பார்த்து மகள்களும் அப்படியே செய்தார்கள். சிறுவயதிலிருந்தே படிக்கும் ஆர்வம் வளர்ந்தது. அதேவேளையில், அவர்கள் தொலைக்காட்சி பார்க்கவும் நேரம் ஒதுக்கியிருக்கிறேன். வாசிப்புப் பழக்கத்தின் மூலம் நல்லொழுக்கமும் பொது அறிவும் வளர்ந்து, அவர்களுக்குச் சிறப்பான எதிர்காலம் கிடைக்கும்’ என்றாள். அவளை மனதாரப் பாராட்டினேன்.
இப்போது, என் குழந்தைகளையும் அது போலவே வளர்க்கத் தயாராகிவிட்டேன். நீங்களும் இணையலாமே!
- ச.மலர்விழி, கரூர் - 3
`டிப்டாப்’ கொள்ளையர் ஜாக்கிரதை!

எங்களுக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது ஒரு டிப்டாப் ஆசாமி உதவி புரிவது போல அருகே வந்து நின்றுள்ளார். நண்பரோ, தானே எடுத்துக்கொள்வதாக கூறி அவரைத் தவிர்த்துள்ளார். நண்பருக்குப் பின்னால் அவருக்கு அறிமுகமான சீனியர் சிட்டிசன் ஒருவரும் நின்றுள்ளார். நண்பர் பணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டார். சிறிது நேரம் கழித்து, அவருக்கு அந்த சீனியர் சிட்டிசன் போன் செய்து தன் கணக்கிலிருந்து யாரோ பணம் எடுத்துவிட்டதாக அதிர்ச்சியோடு கூறியுள்ளார்.
நடந்தது இதுதான்... அந்த டிப்டாப் ஆசாமி உதவி புரிவதுபோல நடித்து சீனியர் சிட்டிசனின் ஒரிஜினல் ஏ.டி.எம். கார்டை எடுத்துக்கொண்டு டூப்ளிகேட் கார்டை கொடுத்துள்ளான். அதை அறியாத அவர், ஊருக்குச் செல்ல பேருந்து ஏறிவிட்டார். பயணத்தின் போதுதான் பணம் எடுக்கப்பட்டதைத் தெரிவிக்கும் குறுஞ்செய்தி மொபைலுக்கு வந்துள்ளது. உடனே, பணம் பறிபோன விஷயம் புரிந்து ஓடி வந்துள்ளார்.
தோழிகளே... நாம் அனைவரையும் - முக்கியமாக சீனியர் சிட்டிசன்களை ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கச் செல்லும்போது எச்சரிக்கையாக நடந்துகொள்ளும்படி வலியுறுத்துவோம்.
- சாந்தி ஜெயக்குமார், புதுக்கோட்டை