மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடல் தொடாத நதி - 4

கடல் தொடாத நதி - 4
பிரீமியம் ஸ்டோரி
News
கடல் தொடாத நதி - 4

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

‘அன்னக்கிளி’ ரிலீஸ் ஆன சமயத்தில் நடந்த களேபரங்கள் தனிக்கதை. அந்தப் படத்தின் செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு மாவட்டங்களின் உரிமையை வாங்குவதாகச் சொன்னவர், பெட்டி எடுக்க வரவே இல்லை. நானும் பஞ்சுவும் தவித்துப்போய் உட்கார்ந்திருந்தோம். படத்தை வாங்குவதற்காகப் புறப்பட்டு வந்த நேரத்தில், வழியில் அவருடைய கார் பஞ்சர் ஆகிவிட்டதாம். சென்டிமென்ட்டாக நினைத்து அவர் அப்படியே திரும்பிப் போய்விட்டார். நடிகர் சிவகுமார் அட்வான்ஸாக வாங்கிய சம்பளத்தோடு சரி. நாங்கள் படுகிற பாட்டைப் பார்த்துவிட்டு, மீதிப் பணம் வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்.

ஆனாலும், படத்தை எப்படி ரிலீஸ் செய்வதென்று குழம்பிப் போய் இருந்தோம். அப்போது ஒருவர் படத்தை வாங்க வந்தார். படத்தைப் போட்டுக் காட்டுவதற்குக்கூட நேரம் இல்லை. ‘‘கதையை மட்டும் சொல்லுங்கள்’’ என்றார். முழுக்கதையையும் அவரிடம் சொன்னேன். அவருக்குக் கதை பிடித்திருந்தது. வாங்குவதாகப் பணத்தையும் கொடுத்தார்.

கடல் தொடாத நதி - 4

படம் ரிலீஸ் ஆனது. ஒரு வாரம் தியேட்டரில் ஈ ஆடியது. பல தியேட்டர்களில் முதல் வாரத்திலேயே தியேட்டரை விட்டுத் தூக்கப் போவதாகச் சொல்லிவிட்டார்கள். ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா நடித்த ‘மேயர் மீனாட்சி’ என்ற படத்தை வெளியிடவும் முடிவுசெய்துவிட்டார்கள்.  நானும் பஞ்சுவும் சென்னை ‘ராஜகுமாரி’ தியேட்டர் வாசலில் போய் நிற்போம். திரும்பி வருவோம். ஒரு வாரம் முடிந்து, ஞாயிற்றுக்கிழமை அன்று தியேட்டருக்குப் போனேன். கவுன்ட்டரில் சொல்கிறார்கள்: ‘‘இன்னும் மூணு டிக்கெட் மட்டும் இருக்கிறது. அதை விற்றுவிட்டால் ஹவுஸ்ஃபுல் போர்டு போட்டுவிடலாம்.’’

மூன்று டிக்கெட்களை வாங்க கையில் காசு இல்லை. என் வீடு எல்டாம்ஸ் ரோடில்தான். அங்கிருந்து சைக்கிளில் வேகமாக வீட்டுக்குப் போய், மூன்று டிக்கெட்களுக்கான காசை எடுத்துவந்து கட்டினேன். தியேட்டர் வாசலில் முதன்முதலாக ஹவுஸ்ஃபுல் போர்டு. சந்தோஷம் தாளவில்லை. அதன் பிறகு அடுத்த 28 வாரங்களுக்கும் தியேட்டரில் அந்த போர்டு நிரந்தரமாக இருந்தது. படத்தை வாங்கிய அத்தனைப் பேரும் பணத்தை அள்ளினார்கள்.

அதே சூட்டோடு சிவகுமார், பஞ்சு, இளையராஜா, காம்பினேஷனில் அடுத்து இன்னொரு படத்தைத் தொடங்குவதாகத் திட்டம். ‘கவிக்குயில்’ பிறந்தது.

‘அன்னக்கிளி’ ஏழு எட்டு ஆண்டுகளாக மனதில் அசை போட்ட கதை. ‘கவிக்குயில்’ படத்துக்கு அந்த அவகாசம் எல்லாம் இல்லை. அவசரப் படைப்பு. சிவகுமார் - ஸ்ரீதேவி, ரஜினி - படாபட் ஜெயலட்சுமி காம்பினேஷன். மைசூர் தாண்டி, சிக்மகளூரை ஒட்டிய கிராமம் ஒன்றில் ஷூட்டிங்.

சிவகுமார் என்ற நண்பரோடு, ரஜினி என்ற நண்பனையும் அங்கு பெற்றேன். எனக்கும் ரஜினிக்கும் ஒரே  ஓட்டலில் அறை. ‘‘செல்வா, அடுத்து எனக்கு என்ன சீன்? அதை இப்படிப் பண்ணட்டுமா? இப்படிப் பேசினால் நன்றாக இருக்குமா?’’ என்றெல்லாம் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டே இருப்பார். நடிப்பில் அவருக்கு இருந்த ஈடுபாடு இன்னமும் அப்படியே இருக்கிறது... அதைவிடக் கூடியிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்வேன்.

ஷூட்டிங் முடிந்ததும் நானும் ரஜினியும் லுங்கியோடு காலார அந்த ஊர்த் தெருக்களில் நடந்து திரிவோம். அங்கே உள்ள பாரில் ‘அம்ருத்’ என்ற சாராயம் கிடைக்கும். ரஜினி எனக்கு அம்ருத் வாங்கித் தருவார். சினிமா கதைகளைப் பேசிக் கொண்டு திரும்புவோம். ரஜினி ஒரு ஜெம். அந்த ரஜினி மாறவே இல்லை.

அதன் பிறகு அவருக்கு நான் பணியாற்றிய படம், ‘கொடி பறக்குது’. பாரதிராஜா இயக்கம். அந்தப் படத்தில் நான் பணியாற்றினேன் என்பது ஒரு பிரயோகத்துக்காகத்தான்.

அந்தப் படத்துக்கு ரஜினிக்கான கதையை ஓர் இளைஞர் வந்து சொன்னார். ‘பிரதமரின் பாதுகாப்புப் படையில் பணியாற்றுகிறார் ஹீரோ. பிரதமரைத் தீர்த்துக்கட்ட வருகிறாள் ஒரு பெண். அவள் தான் ஹீரோவின் காதலி எனத் தெரியவருகிறது. ஹீரோவுக்கும் சம்பந்தம் இருப்பதாகத் துரத்துகிறார்கள். அந்தப் பழியில் இருந்து ஹீரோ எப்படி தப்பிக் கிறார்... எப்படி உண்மையை வெளிக்கொண்டு வருகிறார்’ என்பதுதான் கதை. இப்போது எனக்கு அந்தக் கதை அவ்வளவு தான் நினைவில் இருக்கிறது. அவர் மிகச் சிறப்பாகச் சொன்னார். அந்தக் கதை ரஜினிக்கு மிகவும் பொருந்தும் எனச் சொல்லிவிட்டு, நான் மும்பையில் ஒரு இந்திப் பட கதைவிவாதத்துக்குச் சென்று விட்டேன்.

இதற்கிடையில் பாரதிராஜா அந்தக் கதையை வேறு ஒருவரிடம் சொல்லி கருத்துக் கேட்டிருக்கிறான். அவருக்கு ஏனோ அந்தக் கதை பிடிக்கவில்லை. இதற்குள் ரஜினியின் கால்ஷீட் வந்து விடவே, வேறு வழியில்லாமல் கதையே இல்லாமல், சண்டைக் காட்சிகளாக எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு வாரமாக ரஜினியின் ஃபைட் சீன்களை எடுத்துவிட்டு, அதற்குள் இயக்குநர் மணிவண்ணன் தயார் செய்த ஒரு கதையை வைத்து காட்சிகளையும் எடுக்க ஆரம்
பித்தார்கள். எல்லாம் அவசரக் கோலம்.

மும்பையில் இருந்த எனக்கு போன் போட்டு, ‘‘உடனே சென்னைக்கு வா’ என்றான் பாரதி.

நான் வந்ததும், படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்களை எல்லாம் சொன்னார்கள். இதுவரை எடுத்த படத்தைப் போட்டுக் காட்டும்படி சொல்லி, அதைப் பார்த்து, அதற்கு ஏற்ப ஒரு கதையைச் சொல்லிவிட்டு மீண்டும் மும்பைக்குச் சென்று விட்டேன். படம் முடிந்தது. ஷோ பார்க்க பாரதி அழைத்தான். ரஜினி, பாரதி, கேமராமேன் கண்ணன் ஆகியோரோடு நானும் படத்தைப் பார்த்தேன். படம் முடிந்ததும் என்னிடம் கருத்துக்கேட்டனர். ‘‘ரஜினி சிறப்பாக நடித்திருக்கிறார்... பாரதி சூப்பராக டைரக்‌ஷன் செய்திருக்கிறார். கண்ணன் அருமையாகப் படம் பிடித்திருக்கிறார்... ஆனா, படத்தில கதைன்னு ஒண்ணும் இல்லையே?’’ என்றேன்.

எப்போதும் மனதில் பட்டதை ‘பளார்’ எனச் சொல்வது என் பழக்கம். பாரதி அதிர்ச்சியாகி நின்றான்.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)

டைபாய்டு வந்தது...
வாழ்க்கையைப் படித்தேன்!


நான் 9-ம் வகுப்பு படித்த போது டைபாய்டு வந்து, நான்கு மாதங்கள் படுத்தபடுக்கையாகிவிட்டேன். `பரீட்சை எழுத அனுமதிக்க முடியாது’ எனக் கூறிவிட்டார்கள். மதுரையில் எஸ்.டி.சி என ஒரு டுட்டோரியல் காலேஜ் உண்டு. அங்கு சேர்ந்து மெட்ரிக் தேர்வு எழுதினேன். ஆந்திர மாநிலம் குண்டூரில் தேர்வு. அந்தப் பாடத் திட்டத்தில் வெளிநாட்டு கிளாசிக் நாவல், நான்டீட்டெய்லாக இருந்தது. நிறவெறியின் அவலத்தைச் சொன்ன ‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ அப்படிப் படித்ததுதான். ரொம்ப கஷ்டமான காலகட்டம். அங்கு போய் தேர்வு எழுதுவதற்குப் பணச் சிரமத்தோடுதான் போனேன். அப்படி இருந்தும், இரண்டு மதிப்பெண்களில் ஃபெயில் ஆகிவிட்டேன். பள்ளிப் படிப்புக்கு அத்தோடு முழுக்குப் போட்டுவிட்டு நூலகங்களில் படிக்க ஆரம்பித்தேன். இப்படித்தான் வாழ்க்கையைப் படித்தேன்.