
சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

“எட்டு முதல் பதினைந்து வயதுடைய பறம்பின் ஆண்மக்கள் அனைவரும் ‘காடறிய’ப் புறப்படுகின்றனர். மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை நீடிக்கும் பயணம் அது. பயணத்தில் வழிகாட்டி அழைத்துச் செல்பவனே தேக்கன். ‘தேக்கன்’ என்பது பெயர் அன்று, காடு அறிந்த ஆசானை அழைக்கும் பட்டம். அவனை நம்பியே பிள்ளைகள் அனுப்பப்படுகின்றனர்.
‘சாமப்பூ’ ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பது. ஒவ்வொரு முறை அது பூக்கும்போதும் எட்டு வயதைக் கடந்த அனைத்து ஆண் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு, காட்டுக்குள் நுழைவான் தேக்கன். பயிற்சி முடிந்து திரும்பிய பின், அடுத்த முறை சாமப்பூ பூக்கும் வரை தேக்கன் ஊரில் இருப்பான். மறுமுறை பூ பூத்த பின் மீண்டும் புறப்படுவான்.

பறம்பின் ஒவ்வோர் ஆணும் காடு பற்றிய எல்லா விதமான அறிவுகளையும் பெற்று, காட்டின் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் உடையவனாக மாறுவதுதான் காடு அறிதல். வெறுங்கையுடன் காட்டுக்குள் நுழையும் சிறுவர்கள் பெரும் வனத்துக்குள் தன்னந்தனியாக முழுவாழ்வையும் வாழக் கற்றுக்கொள்கின்றனர்.
இந்தப் பயிற்சி எண்ணற்ற ஆபத்துகளை உடையது. சிறுவர்கள் சிலர் இதில் இறக்கின்றனர். சிலருக்குக் கை கால்கள் சிதைகின்றன. சிலர் காட்டுக்குள் தொலைந்துவிடுகின்றனர். அவர்களுள் பலர் வீடு திரும்புவதே இல்லை. ஆண்டுகள் பல கழிந்த பின்னர், சிலர் வீடு திரும்பியுள்ளனர்.
காடு அறிய அழைத்துச்செல்லப்படும் சிறுவர்கள் கடும் சவால்களைத் தொடர்ந்து எதிர்கொள்ள நேரும். இயற்கை ஒவ்வொரு கணமும் சவால்களை உருவாக்கியபடியேதான் இருக்கும்; ஆனால், அவை எல்லாம் தேக்கனின் கணக்குக்குள் வராது. ஒவ்வொரு நாளும் தேக்கன் உருவாக்கும் சவால்கள் தனி ரகம். அவற்றை மாணவர்கள் எதிர்கொண்டு மீடேற வேண்டும். இவ்வாறு முன்பொரு முறை தேக்கன் அழைத்துச்சென்ற குழுவில் என் முன்னோன் சூலிவேளும் இடம்பெற்றிருந்தான்” என்றான் பாரி.
அவன் சொல்லும் கதையை மிகவும் கவனத்தோடு கேட்டுக்கொண்டிருந்தார் கபிலர்.
“அது கார்காலம். மழை விடாது கொட்டித் தீர்த்தது. தேக்கனும் மாணவர்களும் சிறு குகை ஒன்றில் ஒண்டியபடி இருந்தனர். நாள் முழுவதும் மழை நின்றபாடில்லை. மாணவர்களுக்குக் கடும் பசி. ஆனால், தேக்கன் உணவுக்கான உத்தரவைக் கொடுக்கவில்லை. அவர் உத்தரவு கொடுத்த பின்தான் நெருப்பை மூட்டி கைவசம் இருக்கும் கிழங்குகளைச் சுட்டுச் சாப்பிட வேண்டும். மழையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருந்தான் தேக்கன். பொறுத்துப் பார்த்த மாணவர்கள் ஒருகட்டத்தில் பொறுமை இழந்து வாய்விட்டுக் கேட்டனர்.

``சரி, சுட்டுச் சாப்பிடுங்கள்” என்றான் தேக்கன். மாணவர்கள் மகிழ்ந்தனர். முந்தைய நாள் காலை உணவுக்குப் பின் யாரையும் சிறுபழம்கூடச் சாப்பிட அனுமதிக்கவில்லை. இப்போது அனுமதி கொடுத்தவுடன் வேலைகளை வேகமாகத் தொடங்கினர். குகைக்குள் இருந்த இடுக்கில் இரண்டு கட்டைகள் கிடந்தன. அவற்றைப் பயன்படுத்தி கிழங்கைச் சுட்டுவிடலாம் என்று முடிவுசெய்தனர்.
குகைக்கு வெளியே மழை கொட்டியது. கைவசம் இருக்கும் தீக்கல்லை வைத்து மாணவன் ஒருவன் தீ மூட்ட முனைந்தபோது தேக்கன் குகையை விட்டு வெளியேறினான்.
மழையில் நனைந்தபடி தேக்கன் வெளியேறியதன் காரணத்தை அறியாமல் மாணவர்கள் விழித்தனர். “அவர் நனைந்தபடி வெளியில் நின்று கொண்டிருக்கிறார். நாம் சாப்பிடப்போவது அவருக்குப் பிடிக்கவில்லையா? அவரிடம் கேட்டுத்தானே நாம் அனல் மூட்ட முயல்கிறோம்” என்று புலம்பியபடி இருந்தனர். பசி அதிகமாகிக்கொண்டே இருந்தது. ‘சாப்பிட்ட பின் என்னவென்று கேட்டுக்கொள்வோம்’ என நினைத்த ஒருவன், அனல் மூட்ட முயன்றான். அப்போது சூலிவேள் அவனைத் தடுத்தான்.
‘மாணவர்களில் மிகத் திறன்வாய்ந்தவன்’ என தேக்கன் கருதுவது சூலிவேளைத்தான். “அவரிடமே காரணம் கேட்போம்” என்றான் சூலிவேள்.
“சரி” என்றார்கள் மாணவர்கள்.
“நாங்கள் நெருப்பு மூட்டும்போது நீங்கள் ஏன் வெளியில் சென்றீர்கள்?” எனச் சத்தமாகக் கேட்டான் சூலிவேள்.
“உங்களை எப்போது சாப்பிடச் சொல்ல வேண்டும் என எனக்குத் தெரியாதா?”
“பசி தாங்காமல்தான் கேட்டோம்.”
“அப்படி என்றால் சுட்டுச் சாப்பிடுங்கள்.”
“நீங்கள் ஏன் வெளியில் போய் மழையில் நிற்கிறீர்கள்?”
“இரண்டு ஆண்டுகள் முடியப் போகின்றன. இன்னும் உங்களால் இதைக் கண்டறிய முடியவில்லையா?”
மாணவர்கள் எல்லோருக்கும் அப்போதுதான் இதில் ஏதோ சிக்கல் இருப்பது புரிந்தது.
என்னவாக இருக்கும் எனச் சிந்தித்தார்கள். ஒன்றும் புரிபடவில்லை. சிறிது நேரத்துக்குப் பின் சூலிவேள்தான் கண்டறிந்தான். தாங்கள் தீமுட்ட முயன்ற கட்டை தில்லைமரத்தினுடையது. “தில்லைமரக் கட்டையின் புகை கண்ணிற்பட்டால் பார்வையை இழக்க நேரிடும். அதனால்தான் தேக்கன் உடனடியாக வெளியேறி யிருக்கிறார்” என்றான் சூலிவேள்.

மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேக்கனிடம் மன்னிப்புக் கோரினர்.
“பசி கண்ணை மறைக்கலாம். ஆனால், கண்ணைக் கெடுத்துவிடக் கூடாது” என்றான் தேக்கன்.
பொறுத்திருந்தனர். சிறிது நேரத்தில் மழை நின்றது. குகைவிட்டு மாணவர்கள் வெளிவந்தனர். பக்கத்துக் குகையிலோ, பாறை இடுக்குகளிலோ காய்ந்த கட்டை இருக்கிறதா எனத் தேடப் போனார்கள். ஆனால், தேக்கன் ``வேண்டாம்’’ என்று சொல்லிவிட்டான்.
இப்போது இதற்கான காரணம் தெரியாமல் விழித்தார்கள்.
``குகைக்கு வெளியில் வைத்து தில்லைமரக்கட்டையைக் கொண்டே தீ மூட்டுங்கள். புகை கண்ணிற்படாமல் கிழங்கைச் சுட்டெடுங்கள். இதுவும் தேவைப்படும் ஒரு பயிற்சிதான்’’ என்றார்.
இருந்த பசி எங்கு போனது என்றே தெரியவில்லை. யாரும் தீ மூட்ட ஆயத்தமாகவில்லை. எல்லோரும் அப்படியே நின்றுகொண்டிருந்தனர்.
சூலிவேளை அழைத்தார் தேக்கன். ஒருவேளை யார் கண்ணையாவது புகை தாக்கிவிட்டால், உடனடியாகச் செய்ய வேண்டிய மாற்று என்ன என்பதை அவனிடம் சொன்னார். அதன் பிறகு, மாணவர்கள் துணிந்து
தீ மூட்டத் தொடங்கினர்.
நன்றாக முகம் விலக்கி, அனற்கல்லை உரசிப் பற்றவைத்தான் ஒருவன். தில்லைமரக்கட்டையில் தீப்பிடித்தது. புகை தாக்கிவிடக் கூடாது என்ற மிகுந்த எச்சரிக்கையோடு கிழங்கைச் சுட்டனர். குகைவாசலில் உட்கார்ந்தபடி மாணவர்கள் கிழங்கு சுடுவதைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான் தேக்கன். புகை மேல்நோக்கி எழுந்தபடியே இருந்தது. சிலர் கிழங்கைக் கருகவிட்டனர்.
சிலர் கிழங்கை நெருப்பின் அருகே கொண்டுபோகவே பெரும்பாடுபட்டனர். அணைவதற்கும் அகல்வதற்குமான தொலைவை யாராலும் மதிப்பிட முடியவில்லை. புகையைக் கண்டு அஞ்சியவர்கள் கூடுதலாக விலகினர். மற்றவர்கள் விலகவேண்டிய அளவை எழும் புகை முடிவுசெய்தது. அனைத்தையும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த தேக்கன் மனதில், ‘இவர்கள் யாருடைய கண்ணிலாவது புகைபட்டுவிட்டால் சூலிவேள் உடனடியாகச் செய்ய வேண்டிய மாற்றைச் செய்கிறானா என்று பார்த்துவிடலாம்’ என எண்ணிக் கொண்டிருந்தார்.
மாணவர்கள் காற்றின் சிறிய அசைவுக்குக்கூட உடல்விலக்கி மிகக் கவனமாகக் கிழங்கைச் சுட்டுக் கொண்டிருந்தபோது, எங்கிருந்தோ பெருங்காற்று வீசியது. சட்டென மாணவர்கள் கண்களை மூடி தரையோடு தரையாகப் படுத்துவிட்டார்கள்.
அடித்த காற்று, புகையைக் கொண்டுபோய் குகையோடு சேர்த்து தேக்கன் மீது அப்பியது. கண்களை மூடிய கணத்தில் தேக்கன் உணர்ந்து விட்டான், புகை இமைகளுக்குள் சூழ்ந்துவிட்டது என்று.
“சூலிவேள் உடனடியாக என்னை தூக்கிச் செல்” என்றான்.
தேக்கனைத் தோளில் தூக்கியபடி மலைச்சரிவில் இருக்கும் ஆற்றை நோக்கி இறங்கினான் சூலிவேள். மற்றவர்கள் பின்தொடர முடியாதபடி இருந்தது அவனது வேகம். மழை மீண்டும் பெய்யத்தொடங்கியது. சரிந்து விழுந்துவிடாமல் கவனமாக நடக்க வேண்டும் என்பது எல்லாம் சூலிவேளுக்குப் புலப்படவில்லை. அவனது தோள்களின் பலமும் காலடியின் பிடிமானமும் அபார மானவை. நெடிதுயர்ந்த தேக்கனைத் தூக்கிக்கொண்டு விரைந்து இறங்கினான் சூலிவேள்.
ஆற்றங்கரையை அடைந்ததும் தேக்கனைப் படுக்கவைத்துவிட்டு உள்ளே குதித்தான். தேக்கன் சொல்லியிருந்தபடி ஆற்றில் முங்கி அதன் ஆதிக்களியை அள்ளி வந்தான். தேக்கனைச் சுற்றி மாணவர்கள் உட்கார்ந் திருந்தனர். அள்ளி வந்ததைக் கொடுத்தான். அவரது இரு கண்களின் மேலும் அந்தக் களியை அப்பினர். அவர் இமைகளுக்குள் குளுமையை உணரத் தொடங்கினார்.
“இன்னும் அள்ளி வருகிறேன்” என்றான் சூலிவேள். “இதுவே போதும், சிறிதுநேரத்தில் சரியாகிவிடும்” என்று தேக்கன் சொல்லியபோது ஆற்றின் நடுவில் நீந்திக்கொண்டிருந்த சூலிவேள், பொருத்தமான இடம்பார்த்து நீரில் மூழ்கினான். அடிமரம் ஒன்றை இழுத்துக்கொண்டு சடசடவெனக் கீழிறங்கியது பெருவெள்ளம். மாணவர்கள் உடனடியாகத் தேக்கனைத் தூக்கிக்கொண்டு மேலேறினர். கணநேரத்துக்குள் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. வெள்ளத்தின் வேகம் மலையேறுபவர்களின் கால்களைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தது. தேக்கனைத் தூக்கியபடி விரைந்து மேலேறி உயிர் தப்பினர்.
மேலே ஏறியதும், தேக்கன் கண்களைக் கசக்கியபடி திறந்தான். கொட்டும் மழையில் வெள்ளம் இரு பனைமரம் உயரத்துக்கு போய்க்கொண்டிருந்தது. கண்களுக்குள் எரிச்சல் இல்லை. ஆனால், துயரம் தாங்க முடியவில்லை. சூலிவேளை நினைத்து “ஓ” எனக் கத்தி அழுதான் தேக்கன்.
வெள்ளம் புரட்டி எடுத்துக்கொண்டு சென்றது. நீந்திக் கடப்பது இயலாத செயல். உயிரைத் தக்கவைத்தபடி வெள்ளத்தின் போக்கில் போவது என முடிவெடுத்தான் சூலிவேள். அடித்து, இழுத்துப் புரட்டிக்கொண்டுபோனது. கைகளில் சிக்கும் மரங்களைப் பற்றியும் அதில் இருந்து நழுவியும் இழுத்துச்செல்லும் நீருடன் சென்றுகொண்டிருந்தான்.

குறுக்கிட்டு நீந்திக் கரையை அடைய நீரின் வேகம் குறையும் தருவாய்க்காகக் காத்திருந்தான். ஆனால், அது நிகழும்போது அவன் அரை மயக்கத்தில் இருந்தான். இரவு, பகல் கடந்த பின் நீர் அவனைப் பாறையின் இடுக்கு ஒன்றில் அடித்துச் செருகியது.
ஆற்றங்கரையோரம் வந்த சிலர் பாறை இடுக்கில் சிக்கிக்கிடப்பவனை எட்டிப் பார்த்தனர். உயிர் இருக்கிறதா என்பது அறிய முடியவில்லை. கூட்டத்தில் இருந்த பெரியவர் இடுக்குக்குள் நுழைந்து அவனைப் பார்த்தார். வலது கால் உள்ளே செருகிக்கிடந்தது. இடது கால் எலும்பு ஒடிந்துகிடந்தது. ஒரு கை திரும்பிவிட்டது. மேல் எல்லாம் பாறைகளில் அடிபட்டுச் செதில்செதிலாகப் பிளந்துகிடந்தது. “இவனை வெளியில் தூக்கி உயிரைக் காப்பாற்றினாலும் இவன் வாழத் தகுதியற்ற வனாகத்தான் கிடப்பான்” என்றார் அந்தப் பெரியவர்.
கூட்டத்தினர் பெரியவர் சொல்கேட்டு விலகினர். உள்ளிருந்த `தூதுவை’க்கு அவ்வாறு விட்டுச்செல்ல மனம் இல்லை. பெரியவரோடு வாதிட்டாள். ஆனால், அவனது நிலைமை படுமோசமாக இருந்ததாலும் பாறையின் இடுக்கைவிட்டு வெளியில் எடுக்க முடியாதபடி, அவன் உடல் செருகிக்கிடந்ததாலும், மற்றவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கூட்டம் நகரத் தொடங்கியது.
இறுதியாக ‘தூதுவை’ சொன்னாள்... “பாறையிடுக்கில் கிடப்பவனை எடுத்து வெளியில் போட்டுவிட்டாவது போவோம். திறன் இருந்தால் பிழைக்கட்டும்” என்றாள். ‘சரி’ என்று ஒப்புக்கொண்டு பெருமுயற்சி செய்து, அவனை வெளியில் எடுத்து கரை மீது கிடத்தினர். நீர் நிறைய குடித்திருந்ததால் வயிறு ஊதிப்போய் இருந்தது. வெட்டுப்பட்ட எந்தப் பிளவின் வழியேயும் குருதி கசியவில்லை. வெளிறித்தான் கிடந்தது எல்லாம். இன்று இரவு தாங்க மாட்டான் எனச் சொல்லிவிட்டு நடந்தார் பெரியவர். மற்றவர்களும் உடன் நடந்தனர்.
காற்று இரவெல்லாம் உடலை உலர்த்திக் கொண்டே இருந்தது. அடர்வனத்தில் ரீங்கரிக்கும் சில்வண்டுகளின் ஓசை செவிக்குள் துளையிட்டு நுழைந்தது. கானகத்தின் பல்வேறு ஓசைகளும் நினைவின் ஆழத்தைத் தொட்டுத் திரும்பின. கண்ணுக்குத் தெரியாத சிறுபூச்சி ஒன்று, வெட்டுப்பட்ட பிளவின் நடுவில் உட்கார்ந்து ஊசிக்கொடுக்கால் கொத்தி வெளியில் எடுத்தபோது அவனது உடல், வலியை நினைவுகொள்ளத் தொடங்கியது.
பொழுது புலர்ந்தது. சூலிவேள் மெள்ளக் கண் விழித்தான். தனக்கு உயிர் இருக்கிறது என்பதை உணர்ந்தான். கை, கால்களை அசைக்க முடியவில்லை. அங்கேயே கிடந்தான். தன்னை இழுத்து வெளியில்போட்டவர்கள் பேசிய பேச்சு அரைகுறையாக நினைவில் இருந்தது. தனக்கு என்னவெல்லாம் ஆகியிருக்கிறது என, அந்தப் பெரியவர் சொன்னதைவைத்து தனது உடலை மதிப்பிட்டான். அது தேக்கனின் குரல் என அவனுக்குத் தோன்றியது.
இந்த நிலையில் தேக்கன் இதைத்தான் செய்திருப்பார். ‘மற்றவற்றை எல்லாம் நீதான் சரிசெய்ய வேண்டும். இதுதான் பயிற்சி என்பார்.’ தேக்கனின் குரல் எப்போதும் சவால்களையே உருவாக்கும். எனவே, சவால்கள் உருவாகும் போதெல்லாம் தேக்கனின் நினைவு வருகிறது. அதில் மாறுபட்டு ஒலித்தது ஒரு பெண்ணின் குரல். அந்தக் குரலில் இருந்த நம்பிக்கை இப்போது மனதுக்கு மிகவும் தேவையாக இருந்தது. தனக்காக வாதிட்ட அந்தக் குரலை மெய்ப்பிக்க வேண்டும் எனத் தோன்றியது.
கதிரவன் மேலே ஏறிவந்தான். படுத்துக்கிடந்த சூலிவேளால் உட்கார மட்டுமே முடிந்தது. இரண்டு நாள்களாக எந்த உணவும் உண்ணாததால் கைகால்கள் உயிரற்று இருந்தன. எதையாவது சாப்பிட வேண்டும் எனத் தோன்றியது. வலது கால் வலி மரத்துக்கிடந்தது. அதை எல்லாம் அவன் பொருட்படுத்தவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தான். அடர்காட்டின் நடுவே சீறிப்பாயும் ஆறு. ஆற்றின் போக்கைப் பார்த்துக்கொண்டே இருந்தான். சட்டென நினைவுக்கு வந்தது. இடுப்பில் கைவைத்தான். இறுகிக்கட்டப்பட்ட நார்க்கயிறு இருந்தது. நார்க்கயிற்றில் போடப்பட்ட முடிச்சை அவிழ்த்தான். உள்ளே கொல்லிக்காட்டு விதை ஒன்று இருந்தது.
பயிற்சியின்போது அகாலத்தில் அகப்பட்டுக் கொண்டால், பயன்படுத்தச் சொல்லி தேக்கன் கொடுத்த கொல்லிக்காட்டு விதை. விதையை விரல்களால் திருகி உடைத்தான். அதில் சிறுபகுதியை கையோரமாக மண்ணில் தூவிவிட்டு, மீதியை முடிச்சிட்டான். படபடத்து வந்திறங்கின இரண்டு பறவைகள். அவை விதையின் வாசனையை நுகர்ந்தபடி அருகில் வந்தன. சூலிவேள் அவற்றைப் பிடிக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான். சற்றுநேரத்தில் பெருங்காடை ஒன்று இறங்கிய வேகத்தில், அந்தப் பறவைகள் இரண்டும் விலகிக்கொண்டன. கொல்லிக்காட்டு விதையை தனியொரு காடை கொத்தித் தின்றது. அது தின்று முடிக்கும்போது, சூலிவேள் கையை அருகில் கொண்டுபோனான். கையோடு அது சாய்ந்து படுத்தது.
இரவு எல்லாம் மனம்பொறுக்காமல் தூக்கம் தொலைத்துக்கிடந்த தூதுவை, காலையிலேயே தன் தோழியை அழைத்துக்கொண்டு சூலிவேளிடம் வந்துவிட்டாள். அவள் வரும்போது அவன் எழுந்து உட்கார்ந்திருந்தான். மரணத்தை நோக்கி விட்டுச்சென்ற ஒருவன், அதற்கு எதிர் திசையில் எழுந்து அமர்ந்திருப்பதைப்போல இருந்தது. பெரும்வியப்போடு அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் எங்கிருந்தோ வந்த பறவை ஒன்று, அவன் கைகளில் வந்து படுத்துக்கொண்டது. தான் கண்ணால் பார்ப்பதை அவளால் நம்ப முடியவில்லை. என்ன நடக்கிறது எனத் தோழிக்கும் புரியவில்லை.
கையில் சிக்கிய பறவையைச் சுட்டுத்தின்ன ஆயத்தமானான். இறகுகளை வேகவேகமாகப் பிய்த்தெடுத்தான். அப்படியே கடித்துத் தின்னப்போகிறான் எனப் பார்த்துக்கொண்டிருந்த பெண்கள் இருவரும் எண்ணினர்.
இறகுகளை உரித்து முடித்த சூலிவேள், நெருப்பு மூட்ட வழி என்னவென்று சுற்றும்முற்றும் பார்த்தான். கொட்டித்தீர்த்த மழையும் விடாது புரண்டுசென்ற வெள்ளமும் எங்கும் நீரை ஊறவைத்திருந்தன. உலர்ந்தவை ஒன்றும் இல்லை. கரையின் சரிவில் எடுக்கும் தொலைவில் அனற்கற்கள் கிடந்தன. ஆனால், அவற்றை வைத்து எதை எரிப்பது எனச் சிந்தித்தபடியே கண்களை எங்கும் சுழலவிட்டான்.
அவனால் நம்ப முடியாத ஒன்று அவனது கண்களுக்கு முன்னால் இருந்தது. அவன் செருகிக்கிடந்த பாறையை ஒட்டி ‘பால்கொறண்டி’ செடி ஒன்று தழைத்திருந்தது. அதன் தூர்ப்பகுதி நீரில் மூழ்கியிருந்தது.
சூலிவேளுக்கு மகிழ்ச்சி உடல் எங்கும் பரவியது. காய்ந்த சருகைவிட அதிவேகமாகப் பற்றி எரியும் பச்சையான பால்கொறண்டி. அது வியப்புக்கு உரிய செடி. செடிகள் எல்லாம் வியக்கத்தக்கவைதான். நமக்குத்தான் அதைக் கண்டுணரத் தெரிய வேண்டும்.
கால்களை மெள்ள அசைத்தபடி கரையின் மேலிருந்து கீழ்நோக்கிச் சரிந்தான் சூலிவேள். கரையைத் தாண்ட மேல்நோக்கி ஏறுவதாக இருந்தால், ஒருவேளை முடியாமல் போயிருக்கும். ஆற்றின் ஓரமாகக் கீழே இருந்ததால் எளிதாகிவிட்டது. உடலை இழுத்தபடி கீழே வந்துசேர்ந்தான்.
‘ஏன் ஆற்றை நோக்கிச் சரிகிறான்?’ எனப் பதறிய தூதுவையும் தோழியும் சற்றே முன்னால் வந்து எட்டிப்பார்த்தனர்.
சூலிவேள் பால்கொறண்டியின் இலைகளை ஒட்டி அனற்கல்லை உரசினான். உடலில் எங்கெங்கோ இருந்து வலி மேலே ஏறி வந்துகொண்டிருந்தது. இரு கற்களையும் அழுத்திப் பிடித்து உரசும் வலிமையை, இறகு உறிக்கப்பட்ட பறவையே கொடுத்துக் கொண்டிருந்தது. கல்லுக்குள் இருந்து தெறிக்கும் ஒற்றைத் தீப்பொறியை உருவாக்க மொத்த உடலிலும் விசை ஏற்றவேண்டியிருந்தது. விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சிசெய்தான். உடல் முழுவதையும் தனது விசையோடு இணைத்தான். அறுந்த நரம்புகள் எல்லாம் அவனது எண்ணங்களோடு இணைந்தன.
தண்ணீரில் இருக்கும் செடியில் போய் அனற்கற்களை ஏன் தட்டிக்கொண்டிருக்கிறான் என்பது இருவருக்கும் புரியவில்லை. குழம்பிப்போய் மிகவும் முன்நகர்ந்து வந்து பார்த்தனர்.
சட்டெனத் தெறித்த தீப்பொறி பால்கொறண்டியில் பட்டவுடன் பற்றி மேலே ஏழுந்தது. எண்ணெயில் ஊறித் திருகி நிற்கும் திரியைப்போல, ஒவ்வோர் இலையும் நெருப்பை மேல்நோக்கி ஊதின. சடசடத்து நாலாபுறமும் பற்றியது நெருப்பு. நன்றாக இறங்கிவந்து நீருக்குள் கால் நுழைத்து, பறவையைப் பால்கொறண்டியின் நடுத்தண்டில் செருகினான் சூலிவேள்.
செடியின் அடிவாரத்தில் சூழ்ந்திருந்த நீரில் நெருப்பின் ஒளி கங்குபோல் தகதகத்தது. தீயின் நிழலுக்குள் கால்நுழைத்தபடி பறவையின் உடலை முன்னும் பின்னுமாகத் திருப்பிக் கொண்டிருந்தான் சூலிவேள்.
அவனது கால்களில் இருந்து நீரின் வழியாக நெருப்பு ஏறியதைப் பார்த்த தூதுவைக்குத் தலை சுற்றுவதுபோல் இருந்தது. ஆனால், அவளுக்கு முன்னரே கண் செருகினாள் தோழி.
ஊர் மாடத்தில் வந்து தூதுவை சொன்னபோது யாரும் நம்பவில்லை.
“அவன் உயிரோடு மீள்வான் என்பதே நம்ப முடியாத செய்தி.
நீ என்னென்னவோ சொல்கிறாய்” என மறுத்தான் கிழவன்.
தூதுவையும் தோழியும் சொல்வதைப் பார்த்தால் பேயோ, அணங்கோ, வனத் தாதனாகவோதான் இருக்க வேண்டும் என முடிவெடுத்து பூசாரியையும் கையோடு அழைத்துக்கொண்டு புறப்பட்டனர்.
நற்பகலுக்குப் பின், அவர்கள் சூலிவேள் இருக்கும் இடத்துக்கு வந்துசேர்ந்தனர். அவன் கரையேற முடியாமல் அப்படியே நீரில் கால் நனைத்தபடியே உட்கார்ந்திருந்தான். ஆனால், கொழுத்த பறவையைத் தின்றதால் முகம் தெளுச்சியாக இருந்தது.
பெரும்கூட்டம் ஒன்று வந்து நிற்பதை உணர்ந்து, பின்னால் திரும்பிப் பார்த்தான். வந்திருந்தது பெரும்கூட்டம் அன்று, சிறுகூட்டம்தான். ஆனால், ஒவ்வொரு மனிதனும் மூன்று மனிதர்களுக்கு இணை. விரிந்த மார்பும் திரண்ட சதையுமாக வந்து நின்றனர் அவர்கள்.
திரண்ட மனிதர்களை விலக்கி முன்வந்த பெரியவர் கேட்டார், “எங்களின் கண் முன் உனது மாயவித்தைகளைக் காட்டு?”

“எனக்கு எந்த மாயவித்தையும் தெரியாது.”
“இல்லை, நீ செய்த வித்தைகளை நாங்கள் கண்கொண்டு பார்த்தோம்” என்றது தூதுவையின் குரல்.
ஒரு கணம் கண்ணை மூடினான் சூலிவேள். ‘நேற்று எனக்கு நம்பிக்கை தந்த அந்தக் குரல். இந்தக் குரலை மெய்ப்பிக்கவே நான் போராடிக் கொண்டிருக்கிறேன்’ நினைத்தபடியே கண் திறந்தான். தூதுவை வந்து எதிரில் நின்றாள். பார்த்த பின் பேச்சு எதுவும் வரவில்லை.
வந்தவர்கள் கேட்டார்கள்...
“கால்கள் நீட்டி நீரின் வழியாக பச்சை இலையைச் சுட்டு எரித்தாயாமே உண்மையா?”
சூலிவேள் மறுமொழி சொல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவர்கள் மீண்டும் கேட்டார்கள். பெரும் உடல்வாகுகொண்ட அந்த மனிதர்களை வியந்து பார்ப்பதைப்போலவே சின்னஞ்சிறு கண்கொண்ட தூதுவையையும், தன்னை மறந்து பார்த்துக்கொண்டே இருந்தான் சூலிவேள்.
அவர்கள் மீண்டும் கேட்டபோது, அனற்கல்லைக் கொடுக்க கைநீட்டினான். சிறுவன் ஒருவன் போய் அதை வாங்கினான். கரையின் இடப்புற உச்சியில் தனித்து நின்றுகொண்டிருந்தது பால்கொறண்டி ஒன்று. ``அதைப் போய்த் தீ மூட்டு’’ என்றான். அந்தச் சிறுவனும் அவ்வாறே போய்த் தீ மூட்ட, அடுத்த கணம் பற்றி எரிந்தது பால்கொறண்டி.
அந்தச் செடியின் ஆற்றலை விளக்கிச் சொல்லிக்கொண்டிருந்தான். பசும்செடி பற்றி எரியும் என்பதை அவர்கள் நம்பாமல்தான் பார்த்தார்கள். தூதுவையைப் பார்க்கும் வரை உள்ளுக்குள் நெருப்பின்றி எரியும் தீயைப்பற்றி யாராவது சொல்லியிருந்தால், சூலிவேளும் கூடத்தான் நம்பியிருக்க மாட்டான்.
“பறவை எப்படித் தானாக வந்து அமர்ந்தது?” எனக் கேட்டார்கள். இடுப்பிலிருந்த விதையின் சிறுபகுதியைக் கொடுத்துக் கரையில் போடச் சொன்னான். பறவைகள் வந்து தின்றன. தின்று முடித்துப் பறக்கத் தொடங்குகையில் சிறகை ஈரடி அடித்து மண்ணில் சரிந்தன.
“பறவை மயங்குமா?” எனக் கேட்டனர்.
தன் மயக்கம் மீளாமல் இருந்த அவனுக்கு தன்னையே எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. அவளைப் பார்த்தபடியே, வேண்டாம் என நிறுத்திக் கொண்டான்.
“அது என்ன காய்... எங்கு விளைகிறது?”
எனக் கேட்டனர்.
“வெளியே சொல்லக் கூடாது என்பது எங்கள் குலநாகினியின் வாக்கு” என்றான்.
பெரும்வியப்புக்கு உரிய ஒருவனாக அவன் இருந்ததைப் பார்த்தபடி நின்றிருந்தனர்.
“பாறைகளின் இடுக்கில் செருகிக்கிடந்த என்னை எப்படி வெளியில் எடுத்தீர்கள்?” எனக் கேட்டான்.
“இந்தப் பாறையை நகர்த்தி எடுத்தோம்” என்றார் பெரியவர்.
ஒருகணம் திரும்பி அந்தப் பாறையைப் பார்த்தான். இரண்டு ஆள் உயரம்கொண்ட இரண்டு பெரும்பாறைகள் ஒன்றுடன் ஒன்று உரசியபடி நின்றுகொண்டிருந்தன.
“இவ்வளவு பெரும்பாறையை நகர்த்தினீர்களா? எப்படி முடிந்தது... யார் நீங்கள்?” என்றான்.
வந்தவர்கள் சொன்னார்கள், “நாங்கள் திரையர்கள்.”
- பறம்பின் குரல் ஒலிக்கும்...