
அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்
மனதில் பட்டதை ‘படார்’ எனச் சொல்வது என் பழக்கம் என்றேன் அல்லவா? அதனால் பல வாய்ப்புகளை இழந்திருக்கிறேன்.
வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த நேரம். கோல்டன் ஸ்டூடியோ முதலாளி என்னைக் கதை கேட்டு அழைத் திருந்தார். லொங்கு லொங்கு என எல்டாம்ஸ் ரோட்டில் இருக்கும் என் வீட்டில் இருந்து சாலிகிராமத்தில் இருந்த அந்த ஸ்டூடியோவுக்கு நடந்து சென்றேன். வடபழனி வாஹினி ஸ்டூடியோ அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே காரில் வந்த தெலுங்குத் திரையுலகின் மாபெரும் தயாரிப்பாளரான ராமா நாயுடு என்னைப் பார்த்துவிட்டு காரை நிறுத்தி, அவர் தயாரிக்க இருக்கும் ஒரு படத்தின் கதையைக் கேட்க வருமாறு அழைத்தார். மறுக்க முடியுமா? அவருடன் அவருடைய அலுவலகத்துக்குப் போனேன்.
அவருடைய அலுவலகம் தி.நகர் போக் ரோட்டில் இருந்தது. அலுவலகம் போனதும் ஒரு கதையைச் சொன்னார்.

‘திருமாங்கல்யம்’ படத்தில் முத்துராமன், ஜெயலலிதா
படங்கள் உதவி: ஞானம்
‘தம்பி ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அண்ணனுக்கு அது பிடிக்கவில்லை. அவளுக்கு மயக்கமருந்து கொடுத்து, அவளுடன் மணக்கோலத்தில் இருப்பதுபோல ஒரு போட்டோ எடுத்துவைத்துக்கொண்டு கல்யாணத்தை நிறுத்த சூழ்ச்சி செய்கிறான்’ எனக் கதையைச் சொல்லிக்கொண்டு போனார். தெலுங்கு மொழியின் பிரபல எழுத்தாளர் சுலோச்சனா ராணியின் கதை என்றும் சொன்னார்.
‘எனக்குக் கதை பிடிக்க வில்லை. இந்த மாதிரி கதையில் பணியாற்ற எனக்கு விருப்பம் இல்லை’ என்று சொல்லி விட்டேன். அவர் மிகப் பெரிய புரொடியூசர். நான் அவ்வளவு கறாராகப் பேசியது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அவரும், ‘‘சரி போ’’ என ஒரே வரியில் சொல்லிவிட்டார். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. வேகமாக அங்கிருந்து கிளம்பிவிட்டேன். போக் ரோட்டில் இருந்து நடையாக நடந்து மீண்டும் சாலிகிராமம் வந்து கோல்டன் ஸ்டூடியோவுக்குப் போனேன். நான் மட்டும் அந்தக் கதைக்கு சம்மதித்திருந்தால், உடனே ஒரு அட்வான்ஸ் கிடைத்திருக்கும். காரிலேயே கோல்டன் ஸ்டூடியோவுக்கு அனுப்பியும் வைத்திருப்பார்கள். என்ன செய்வது... பிடிக்காத கதையில் எப்படிப் பணியாற்ற முடியும்? மனதுக்குப் பட்டால் அவ்வளவுதான். இத்தனைக்கும் அந்தப் படம் தெலுங்கில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் வேறு.
அதைத்தான் ‘திருமாங்கல்யம்’ என தமிழில் தயாரித்தார். அது ஜெயலலிதாவின் 100-வது படம். வின்சென்ட் இயக்கினார். சிவகுமார், முத்துராமன், ஸ்ரீகாந்த், லட்சுமி உள்ளிட்டோர் நடித்தனர். விஜயா கம்பைன்ஸ் பேனரில் பிரமாண்டமாகத் தயாரானது. தமிழில் அந்தப் படம் சரியாகப் போகவில்லை. அதன் பிறகு, என்னுடைய கதைத் தேர்வில் அவருக்கு ஒரு நம்பிக்கை இருப்பதாக அவரே சொன்னார்.
எவ்வளவு பெரிய தயாரிப்பாளர், எவ்வளவு புகழ்பெற்ற இயக்குநர் என்பதை எல்லாம் நான் பார்க்கவே மாட்டேன். கதை என் மனதுக்குப் பிடிக்க வேண்டும். நம்முடைய கலாசாரம், தாய்க் குலத்தின் பெருமை ஆகியவற்றுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன். பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லைதான். மணிரத்னம், பாரதிராஜா போன்றவர்களிடமும் அப்படி விலகியிருக்கிறேன்.
மணிரத்னம், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தின் கதையைச் சொன்னார்.
10 வயசு சிறுமியின் பிறந்தநாள் அன்று, ‘அவள் தங்களின் குழந்தை இல்லை’ என அந்தப் பெண்ணை வளர்த்தவர்கள் சொல்வதாகச் சொன்னார். எனக்கு அந்தக் கருத்தில் சற்றும் உடன்பாடு இல்லை. ஏன் அந்த உண்மையைச் சொல்ல வேண்டும் எனக் கேட்டேன். ‘நாகரிக உலகில் இதற்கெல்லாம் தேவை இருக்கிறது. வெளிநாடு களில் இப்படி அதிர்ச்சியான கதைகளை உருவாக்குகிறார்கள்’ என்றார். ‘‘இல்லை சார். இந்தக் கதையில் பணியாற்ற விருப்பம் இல்லை’’ எனச் சொல்லி விட்டேன். எவ்வளவு வறுமையிலும் நான் பணியாற்றும் கதைகளில் உறுதியாக இருந்திருக்கிறேன்.

ஜெயலலிதாவுக்குக் கதை சொன்ன சம்பவம் நினைவுக்கு வருகிறது. நானும் பாரதியும் போனோம். அந்தப் படம் ஓ.கே. ஆகியிருந்தால் பாரதிராஜா இயக்கிய முதல் படமாக, ஜெயலலிதா நடித்த படம் வரலாற்றில் இடம் பிடித்திருக்கும்.
சூழ்நிலை காரணமாகச் சிறைக்குச் சென்றுவிடுகிறான் கணவன். மனைவி எப்படித் தன் வீட்டைக் காப்பாற்றுகிறாள் என்பதுதான் கதை. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்.
போயஸ் கார்டன் வீட்டில் நானும் பாரதியும் போய் ஜெயலலிதாவுக்கு அந்தக் கதையைச் சொன்னோம். `சொந்த வீடு’ என்று அந்தக் கதைக்குத் தலைப்பு. மேடத்துக்குக் கதை மிகவும் பிடித்து விட்டது. படம் தொடங்கலாம் எனவும் சொல்லிவிட்டார். அதன் பிறகு யாரோ அவருடைய மனதைத் திருப்பி விட்டார்கள். அவரும் படத்தில் நடிப்பதில் இருந்தே விலகிவிட்டார்.
அதுதான் பின்னர் பாரதிராஜா இயக்கத்தில், ரேவதி நடிப்பில் ‘புதுமைப் பெண்’ என வெளியானது.
சந்திப்பு: தமிழ்மகன்
(ரீல் அல்ல ரியல்)

அண்ணன் கலைஞர்!
வசனம் எழுதினால் கலைஞரைப் போல எழுத வேண்டும் என்பதில் ‘பராசக்தி’, ‘மனோகரா’ காலத்திலேயே தீர்மானமாக இருந்தேன். 1974-ல் கலைஞரை முதன்முதலாகச் சந்தித்தபோது அவருடைய வசனங்கள் என்னை எப்படி பாதித்தன என்பதைச் சொன்னேன். அவருடைய காலம், வசனப்புரட்சியின் காலம். எல்லா கல்யாண வீடுகளிலும் அவருடைய ‘பராசக்தி’, ‘மனோகரா’ வசன ரெக்கார்டைப் போடுவார்கள். கல்யாண வீடுகளில் போய் நின்று கேட்பேன். இதை எல்லாம் கலைஞரிடம் சொன்னேன். அப்போது, `அண்ணே’ என்றே அழைத்தேன். அப்போது ஒருவர், ‘முதல்வரை அப்படி எல்லாம் அழைக்கக் கூடாது. அய்யா என அழையுங்கள்’ என்றார். கலைஞர் அவரைத் தடுத்து, ‘‘அவர் அண்ணேன்னு கூப்பிடுவது நல்லா இருக்கு. அப்படியே கூப்பிடட்டும்’’ என்று சொன்னார்.