மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

அண்ணா ஹஜாரே நல்லவரா?

எம்.செல்லையா, சாத்தூர்.

 மன்மோகன் சிங்கை தலைப்பாகை இல்லாமலும், டி.ராஜேந்தரைத் தாடி இல்லாமலும், கலைஞரைக் கண்ணாடி இல்லாமலும், சோவை தலையில் கிராப்புடனும் எம்.ஜி.ஆரைத் தலையில் தொப்பி இல்லாமலும் பார்க்கும் ஆசை நிறைவேறுமா?

ஹாய் மதன் கேள்வி - பதில்

மன்மோகன் சிங்கும் கலைஞரும் வீட்டில் தலைப்பாகை, கண்ணாடி இல்லாமல்தான் இருப்பார்கள். சோவை பழைய படங்களில் (நிஜ) கிராப்புடன் நீங்கள் பார்க்கலாம். எம்.ஜி.ஆரும் வீட்டுக்குள் தொப்பி இல்லாமல்தான் இருந்தார். டி.ராஜேந்தர் மட்டும்... ரொம்ப ஸாரி!

##~##

சி.என்.ரமாதேவி, சென்னை-70.

பாண்டி, சிதம்பரம், காசி என்றெல்லாம் ஊர்ப் பெயரைத் தன் பெயராகக் கொண்டுள்ள நாம் ஏன் விழுப்புரம், விக்கிரவாண்டி, தஞ்சாவூர் என பெயர் வைத்துக்கொள்வது இல்லை?

குறிப்பான காரணம் எதுவும் இல்லை. சில ஊர்கள் நைஸாக மனிதப் பெயர் களாகிவிடுகின்றன! ஜாக் லண்டன் (Jack London) என்ற பெயருள்ள உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் உண்டு. அதுவே நியூயார்க் என்ற பெயரோடு யாரும் கிடையாது. வாஷிங்டன் என்ற பெயரில் ஊரும் உண்டு, யு.எஸ்.ஜனாதிபதியும் உண்டு! டெல்லி என்று பெயர் வைத்துக் கொள்கிறோம். கல்கத்தா - கிடையாது! ஜப்பான் என்ற பெயருள்ளவர்கூட தமிழ் நாட்டில் (சினிமாத் துறையில்) உண்டு! பாகிஸ்தான் என்ற பெயருள்ளவர் கிடையாது. அதாவது, காரணமே இல்லாமல், உலகம் பூராவும் இப்படித்தான்!

அ.உமர், கடையநல்லூர்.

படர்ந்து விரிந்த மானின் கொம்புகள் எதற்குப் பயன்படுகின்றன?

நீங்கள் நினைப்பதுபோல் மானின் பெரிய கொம்புகள் அத்தனை 'வெயிட்’டாக எல்லாம் இருக்காது. இருப்பினும், அவை பெரிதாகப் படர்ந்து விரிந்திருக்கக் காரணம், தான் பலசாலி என்பதை 'பெண்களுக்கு’க் காட்டத்தான்! அதாவது, ஆரோக்கியமான மான்களுக்குத்தான் கொம்புகள் பெரிதாக வளரும். மற்ற ஆண் மான்கள் அதைப் பார்த்துச் சற்றுப் பின்வாங்கும்!

கண்.சிவகுமார், திருமருகல்.

யானை படுத்தால் குதிரை மட்டமா... ஏன்?

பின்னே... 'யானை’ மல்லையாவுக்கு ஆயிரக்'கணக்கான’ கோடி கடன். அவர் படுத்தாலும் நாமெல்லாம் (பண மற்றும் கடன் விஷயத்தில்!) குதிரைகள் மாதிரி தானே?! உண்மையில், யானைபோல கம்பீரமாக வாழ்ந்தவர்கள் செல்வத்தை இழந்து தாழ்ந்த நிலைக்கு வந்தாலும், அவர்களிடம் மேன்மைக் குணம் போகாது என்று அதற்கு அர்த்தம். அதைத்தான் 'கீழிருந்தும் கீழல்லார் கீழல்லவர்’ என்றார் வள்ளுவர்!

ஜி.மாரியப்பன், சின்னமனூர்.

ஷாரூக் கானின் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளது பற்றி...

அவர் எங்கே நடித்தார்? நிற்கிறார். பிறகு சில அடிகள் நடக்கிறார். 'ஐ யம் சிட்டி’ என்று ஒரு வரி சொல்கிறார். ரஜினியைச் சில விநாடிகள் காட்டியது ஷாரூக்கின் பிசினஸ் ட்ரிக்! அதற்கே தியேட்டரில் கைத்தட்டல் அலைமோதியது. எனக்கும் அப்போது உற்சாகம் எகிறியது!

மஞ்சுதேவன், மும்பை.

கௌரவப் பிரச்னை - கர்வம் என்ன தொடர்பு?

முதலாவது, அவ்வப்போது வந்து போகும். இரண்டாவது, நிரந்தரமாக நீடிக்கும். அதாவது, டாய்லெட்டில்கூட கர்வமாக உட்கார்ந்து இருப்பவர்கள் உண்டு என்பது என் எண்ணம்!

மா.மாரிமுத்து, ஈரோடு.

சுமார் 20 வருடங்கள் கழித்து கார்களை அவரவர் வீட்டு முன்னால்கூட நகர்த்த முடியாத அளவுக்கு நெருக்கம் வந்துவிடும் என்கிறேன். உமது யூகம் என்ன?

அப்படியும்கூட 'இஞ்ச் இஞ்ச்’சாக நகர்த்தி மனிதர்கள் காரில் போவார்கள் என்று நான் நினைக்கிறேன்!

கி.ரவிக்குமார், நெய்வேலி.

இறுதிச் சடங்கு நடக்கும் இடத்துக்கு குழந்தைகளை எத்தனை வயதில் அழைத்துச் செல்லலாம்?

ஹாய் மதன் கேள்வி - பதில்

மேலை நாடுகளில் சர்வசாதாரணமாக குழந்தைகளை அங்கு அழைத்துச் செல் கிறார்கள். நம்மூரில் 15 வயதுப் பையனாக இருந்தாலும், 'நீ எதுக்குடா அங்கேலாம்? வீட்டிலேயே இரு’ என்று சொல்லிவிடுகிறோம். குழந்தைகளைத் தாராளமாக இறுதிச் சடங்கு களுக்கு அழைத்துச் செல்லலாம். அவர்கள் 'வீக்’கானவர்கள் அல்ல. ஆனால், பிறகு நிறைய கேள்விகள் கேட்பார்கள். உண்மை யைத் தெளிவாக விளக்கிச் சொல்லபெரியவர் களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்!

வே.சித்திரவேலு, கருப்பம்புலம்.

ஆளாளுக்கு அநியாயத்துக்கு சப்போட் பண்றேளே, அண்ணா ஹஜாரே அவ்வளவு நல்லவரா?

அதுக்காக இல்லேண்ணா... மத்தவாள்லாம் ரொம்பக் கெட்டவாளா இருக்காளே!