மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடல் தொடாத நதி - 6 - ஸ்ரீதேவியோடு ஜோடி சேராத சத்யராஜ்!

கடல் தொடாத நதி - 6 - ஸ்ரீதேவியோடு ஜோடி சேராத சத்யராஜ்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடல் தொடாத நதி - 6 - ஸ்ரீதேவியோடு ஜோடி சேராத சத்யராஜ்!

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

த்திரிகை நண்பர்கள் பலர் எனக்கு நல்ல பழக்கம். பத்திரிகையாளராகவும் பி.ஆர்.ஓ-வாகவும் இருந்த சித்ரா லட்சுமணன், அந்த நண்பர்கள் பட்டியலில் முதலிடம் வகிப்பவர். சென்னை வந்த புதிதில் பாரதிராஜாவிடம் சண்டை போட்டு பிரிந்திருந்ததாகச் சொன்னேனே... அந்தச் சண்டையை சரி செய்து, மீண்டும் எங்களை சேர்த்துவைத்தவர் அவர்தான். பாரதிராஜா தனியாகப் படம் இயக்கும் முயற்சியில் இருந்த நேரத்தில், ‘‘செல்வராஜும் கதை விவாதத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்’’ என பாரதியிடம் எடுத்துச் சொல்லி, என்னை அழைத்துச் சென்றவர் அவர்தான். ‘16 வயதினிலே’ தொடங்கி பாரதிராஜாவின் அத்தனை திரைக்கதை விவாதங்களிலும் நான் இடம்பெற்று வருவதற்கு, அன்று அவர் எடுத்த முயற்சியே காரணம்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய பத்திரிகை நண்பர்களில், ‘பேசும் படம்’ ஆசிரியர் குழுவினரைத் தவிர்க்க முடியாது. வாய்ப்புகள் தேடி கோடம்பாக்கத்தைக் கடக்கும்போதெல்லாம், அந்த அலுவலகத்துக்கும் ஒரு விசிட் அடித்துவிடுவேன். அங்கே எம்.ஜி.வல்லபன், ‘ஒருவிரல்’ கிருஷ்ணா ராவ், சம்பத்குமார் போன்றவர்கள் இருப்பார்கள். ‘ஒருவிரல்’ கிருஷ்ணா ராவ்  சினிமாக்களில் நடித்துக் கொண்டே, அந்தப் பத்திரிகையில் போட்டோகிராபராகவும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

கடல் தொடாத நதி - 6 - ஸ்ரீதேவியோடு ஜோடி சேராத சத்யராஜ்!

ஒரு சமயம் கிருஷ்ணா ராவைப் பார்த்த இயக்குநர் கே.பாலசந்தர், ‘‘செல்வராஜை நாளை காலை ஆறு மணிக்குக் கதை சொல்ல வரச் சொல்லுங்கள்’’ என தகவல் தந்திருக்கிறார். எவ்வளவு பெரிய வாய்ப்பு! இதைத் தன் நண்பன் தவிர்த்துவிடக் கூடாது என என்னைத் தேடி அலைந்தார் கிருஷ்ணா ராவ். என் வீடு குரோம்பேட்டையில் இருக்கிறது என்பது மட்டும்தான் அவருக்குத் தெரியும். நான் திருமணம் செய்து முதன்முதலாகக் குடியேறிய இடம் அது. அதன் பிறகுதான் எல்டாம்ஸ் ரோட்டுக்கு வந்தேன். குரோம்பேட்டைக்கு வந்த அவர், என்னைத் தேடி எங்கெங்கோ போயிருக்கிறார். நான், என்.சங்கரய்யாவின் உறவினர் என்பது நினைவுக்கு வந்து, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸைத் தேடிக் கண்டுபிடித்திருக்கிறார். அங்கு என்னைப் பற்றி விசாரித்திருக்கிறார். அங்கிருந்தவர்கள், ‘சினிமா கதை எல்லாம் எழுதுவாரே அவரா?’ என்று கேட்டு, குத்துமதிப்பாக வழியைச் சொல்லி அனுப்ப... படாதபாடுபட்டு என் வீட்டைக் கண்டுபிடித்து வந்தார். எத்தனை பெரிய மனம்? யாராவது அட்ரஸ் தெரியாதபோதும், ராத்திரி நேரத்தில் இப்படி அலைந்து திரிந்து தகவல் சொல்வார்களா?

நான் அப்போது வீட்டில் இல்லை. ‘காலை 6 மணிக்கு பாலசந்தர் கதை சொல்ல வரச் சொன்னார்.’ இதுதான் அவர் சொல்லிவிட்டுச் சென்ற தகவல். இரவு 11 மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தேன். பாலசந்தர் அழைத்திருக்கிறார் என்றதும் இரவெல்லாம் தூக்கமே இல்லை. ‘என்ன கதை சொல்லலாம்... எப்படி சொல்லலாம்’ என மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. இன்னொரு கஷ்டம்... ரயில் பயணம் செய்வதற்கான என்னுடைய சீஸன் டிக்கெட் அன்று இரவோடு முடிந்துவிட்டது. மறுநாள் காலையில் காசு கொடுத்துத்தான் பயணிக்க வேண்டும். கையில் 35 காசுதான் இருந்தது. முதல் வண்டியைப் பிடித்து, சைதாப்பேட்டை வந்து இறங்கினேன். டிக்கெட்டுக்கு 35 பைசா சரியாகிவிட்டது. மயிலாப்பூர் வாரன் ரோட்டை நோக்கி நடந்தேன். இன்னும் பொழுது விடியவில்லை. முன்னரே போய் காத்திருந்து, சரியாக 6 மணிக்கு அவர் வீட்டுக் கதவைத் தட்ட வேண்டும் என வேகமாக நடந்தேன். போட்டிருந்த ரப்பர் செருப்பு, ‘கழுத்தறுத்தது’. கழற்றி ஓரமாகப் போட்டுவிட்டு வெறும் காலுடன் நடை. அவர் வீட்டு கேட்டைத் திறந்தேன். உள்ளே இருந்து, ‘‘செல்வராஜ்?’’ என கே.பி-யின் குரல்.

பாலசந்தரின் கதைகளில் எப்போதும் பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். நான், ‘அஜிதா’ என்ற கதையைச் சொன்னேன். ‘திருமணச் சந்தையிலும், வேலை பார்க்கும் இடங்களிலும் ஆண்களால் துரத்தப்படும் ஒரு பெண், ஆயுதம் ஏந்தி எப்படி அவர்களை எதிர்கொள்கிறாள்’ என்பதுதான் கதை. அவருக்குப் பிடித்திருந்தது.

‘‘தயாரிப்பாளர் அரங்கண்ணலுக்கு இந்தக் கதையைச் சொல்லிவிடுங்கள். மாலை ஆறு மணிக்கு வரச் சொல்லியிருக்கிறார்’’ என்றார். வாசல் வரை வந்து வழி அனுப்பினார். அப்போதுதான் செருப்பு போடவில்லை என்பதைக் கவனித்தார். ‘‘என்னாச்சு?’’ என்றார். சொன்னேன். என்னை யோசனையோடு பார்த்துவிட்டு, ‘‘கஷ்டத்தைப் பார்த்து பயந்துடாதீங்க’’ என்றார்.

நாள்முழுக்க சாப்பிடாமலேயே நாகேஸ்வர ராவ் பார்க்கில் படுத்திருந்தேன். ஆறு மணிக்கு அரங்கண்ணலைப் பார்த்தேன். ‘‘பாலசந்தர் பிரமாதமான கதைன்னு சொன்னார்’’ என்றபடி வரவேற்றார். அவருக்கும் கதை பிடித்துவிட்டது. ஒரு கவரில் உடனே அட்வான்ஸ் போட்டு கையில் கொடுத்தார். எதனாலோ அந்தப் படம் எடுக்கப்படவில்லை. ஆனால், கே.பி.-க்கு கதை சொல்லப் போன அனுபவம் மட்டும் என்றைக்கும் மறக்காது. கூடவே, கிருஷ்ணா ராவின் உதவியும்.

என்னுடைய 230 திரைக்கதைகள் சினிமாவாகியுள்ளன. சினிமாவாக மலராத கதைகள் ஏராளம். சத்யராஜ், ஸ்ரீதேவி ஜோடி சேர்ந்து நடிப்பதாக இருந்த ‘பங்காரு நாயக்கர்’ கதையும் அதில் ஒன்று. ‘கடலோரக் கவிதைகள்’ முடிந்த கையோடு அந்தக் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தோம். ‘ராஜ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ ராமனாதன் தயாரிப்பதாக இருந்தார். அருமையான மனிதர் அவர். அந்தப் படத்தின் கதை விவாதத்துக்காக கொடைக்கானலில் ரூம் போட்டிருந்தார். காலையில் மலைப்பாதையில் சுற்றி வருவேன். ஒருநாள் அப்படி நடந்துகொண்டிருந்தபோது மார்பில் லேசான வலி. சில நாட்களுக்கு முன்புதான் மலைப்பாதையில் ஜாக்கிங் போகும்போது நடிகர் முத்துராமன் இறந்துபோனார். அந்த நினைவு வேறு அச்சுறுத்த ஆரம்பித்தது. தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. எப்படியோ ஓட்டலுக்கு நடந்துவந்து, ராமனாதனுக்கு போன் போட்டேன். மனிதர் பதறிப்போய்விட்டார்.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)

கடல் தொடாத நதி - 6 - ஸ்ரீதேவியோடு ஜோடி சேராத சத்யராஜ்!

சங்கப் பலகை!

துரை மேலக்கோயில் பின்புறம் அ.கி.பரந்தாமனார், இலக்குவனார், இளங்குமரன் போன்ற மாபெரும் தமிழ் அறிஞர்கள் இலவசமாகத் தமிழ் இலக்கியம் சொல்லித் தருவார்கள். எனக்குக் கம்ப ராமாயணம் பிடிக்கும். இன்னமும் பல பாடல்கள் நினைவு இருக்கின்றன. ‘நளவெண்பா’, ‘சீவக சிந்தாமணி’ எல்லாம் அங்குதான் பயின்றேன். என் பதின்ம வயதின் மாலை நேரங்கள் அங்குதான் கழிந்தன.

மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்தில் இலக்கியங்களைச் சங்கப்பலகையில் ஏற்றி, அது தண்ணீரில் மூழ்காமல் மிதந்து வந்தால்தான் புலவர்களை ஏற்பார்கள் என்று ஒரு கதை சொன்னார்கள். நான் எழுதியதையும் அப்படிச் சோதித்துப் பார்க்க நினைத்தேன். மந்தாரை இலையின் ஒரு மூலையில் நூலைக்கட்டி வைத்துவிட்டு அதன் மீது என் கதையின் பிரதியை வைத்தேன். நண்பர்கள் வந்த பின்பு, நீருக்குள் இறங்கி நூலைப் பிடித்து இழுத்தேன். ‘‘டேய், சங்கப் பலகை ஏத்துக்கிச்சுடா’’ என நண்பர்கள் உற்சாகமாகக் கத்த, எனக்கு சந்தோஷம்.