மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 16

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

ரஹ்மானைப் போல நானும் ராத்திரிகளின் ரசிகன்தான். உறக்கம் வராத இரவுகள் ஒரு காலத்தில் ஏகாந்தமாகவும் பிறகு கடக்க முடியாத துயரங்களாகவும் மாறிவிடுகின்றன.

'கள்ளம் கற்றது ஓர் இரவு காமம் கற்றது ஓர் இரவு ஜனனம் கற்றது ஓர் இரவு நான் மரணம் கற்றதும் ஓர் இரவு கோடி இரவுகள் கற்றபோதும் இந்த இரவு கேட்கப்போகும் எந்தக் கேள்விக்கும் எனக்கு விடை தெரியாது’ - ஆப்பிரிக்கக் கவிஞன் டெஸாமூரின் கவிதை எவ்வளவு உண்மை?!

ஐநாக்ஸில் நைட் ஷோ முடிந்து திரும்புகிற இந்த இரவில், டிரஸ்ட்புரம் தெருவின் அபார்ட்மென்ட் ஒன்றின் கீழ் கொஞ்சம் நாற்காலிகள் போட்டு சிலர் உட்கார்ந்து இருக்கிறார்கள். நடுவில் கண்ணாடிப் பெட்டிக்குள் யாரோ ஒருவர் உறைந்துகிடக்கிறார். பக்கத்தில் ஓர் அம்மா அழுது வீங்கிய முகத்தோடு புடவை முந்தியால் ஈக்களை விரட்டியபடி இருக்கிறது. ஓரமாகச் சில பெண்கள் கிசுகிசுப்பாகப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். சிலர் தூங்கிவிட்டனர்.

வட்டியும் முதலும்
வட்டியும் முதலும்

செத்துப்போனவர் ரூபம்கொள்ளும் கடைசி இரவு... பக்கத்தில் இருப்பது அவர் மனைவியா? உட்கார்ந்திருப்பது அவர் பிள்ளைகளா? சகோதரர்களா? அவரைப் பற்றிய நினைவுகள் மண்டும் இந்த இரவை, அவரது உடலோடு கடந்துகொண்டு இருக்கும் உறவுகளின் பேசாப் பெருந்துயரை நான் அறிவேன். ஞாபகங்களின் கண்ணீர் உறைந்துவிடும் இந்த இரவு, அவர்களுக்கு எப்போதும் விடியப்போவதே இல்லை. குப்பைகள்போலக் குவிந்துவிடும் கடந்த கால தினங்களில், எடுத்து வீச முடியாத காலிக் குப்பியாக இந்த இரவு கிடக்கும். ஒருவர் எழுந்து போய், கண்ணாடிப் பெட்டிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் அம்மாவிடம், ''உள்ள போயி ரெண்டு இட்லியாவது வயித்துல போட்டுக்கம்மா...'' என்கிறார். அந்த அம்மா எதுவும் பேசாமல் முகத்தைத் திருப்பிக்கொள்கிறார். மனிதர்களின் பசியையும் நினைவையும் தின்றபடி நழுவுகிறது இரவு!

அந்த அம்மாவின் இடத்தில் நாம் எல்லோரும் இருக்கிறோம். மரணங்களிலும் நோய்களிலும் கடக்க முடியாத இரவுகள் எல்லோருக்குமான இறைவனின் பரிசு. என் அம்மா தற்கொலைக்கு முயற்சி செய்த ஓர் இரவில், ஆளும்பேருமாகச் சேர்ந்து லட்சுமாங்குடி ஆஸ்பத்திரிக்குத் தூக்கிப் போனார்கள். விவரம் தெரியாத சிறு பிள்ளைகளான எங்களை அத்தை வீட்டில் கொண்டுபோய்விட்டார்கள். எதுவும் புரியாமல் விளையாடிவிட்டு, ஆத்தா விசும்பியபடி போட்ட சோத்தைத் தின்றுவிட்டு தூங்கிப்போனோம். மறுநாள் ராத்திரிதான் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப்போனார்கள். அம்மா பிழைத்துக்கொண்டது. பக்கத்தில் போன எனது கையைப் பற்றிய படி மௌனமாகப் பார்த்த அம்மாவின் கண்களில் வழிந்துகொண்டே இருந்த நீர்... கோடி இரவுகளுக்கும் உலராது!

தஞ்சாவூர் வினோதகன் ஆஸ்பத்திரியில் கனகராஜ் சித்தப்பாவைச் சேர்த்திருந்தபோது, இரவுகளில் யாராவது துணைக்கு இருக்க வேண்டும். வாட்ச்மேனோடு சேர்ந்து எஃப்.எம்-ல் ஏதாவது பாட்டு கேட்டபடி இரவெல்லாம் விழித்திருப்போம். திடீர் திடீரென சித்தப்பா அலறுவார். ஓடிப்போய் டாக்டரை அழைத்து வர வேண்டும். எப்போதும் எதுவுமே நடக்காததுபோல் இருப்பதுதானே டாக்டர்களின் இயல்பு. சலனமே இல்லாமல் ஏதாவது சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். விடியும் வரை திகிலடித்துக்கொண்டே இருக்கும். உறக்கம் வரும் நொடிகளில் திடுதிப்பென்று யாரையாவது தூக்கிக்கொண்டு ஒரு குடும்பம் அழுதுகொண்டே உள்ளே ஓடும். அந்த நேரத்தில் போனுக்கு அலைவார்கள். ஆம்புலன்ஸுக்குத் திரிவார்கள். கிடைக்காத மருந்துக்குத் தவிப்பார்கள். வாழ்வின் நிலையாமையை மருத்துவமனை இரவுகள்தான் முகத்தில் அறைந்து சொல்கின்றன. எத்தனை பேருக்கு... எத்தனை எத்தனை இரவுகள் ஆஸ்பத்திரியிலேயே கழிந்திருக்கின்றன. உறங்காத கண்களில் உறவுகளைச் சுமந்துகொண்டு, மருத்துவமனையின் புதிரான இரவுகளில் தவித்துக்கிடப்பவர்கள் எத்தனை பேர்... ''தெளிவா சொல்லுங்க சார்... ஒண்ணும் ஆபத்து இல்லையே டாக்டர். ஆபத்தில்லையே...'' என வராந்தா முழுக்கத் தவித்து அலைகிறவர்களின் இரவுகள் எவ்வளவு துன்பமானவை?

'கடையடைக்கிற நேரம் அவசரமாக ஆம்புலன்ஸ் வேண்டி தொலைபேசுகிறவனின் முன் விரிகிறது... உலகின் மிக நீண்ட இரவு உங்களை வரவேற்கிறது!’  - என்ற கவிதை எப்போதோ படித்தது... உலகின் மிக நீண்ட இரவென்பது ஒரு பிரசவம்... ஒரு மரணம்... ஒரு கடவுள்... ஒரு ஜென்மம்!

ரஹ்மானைப் போல நானும் ராத்திரிகளின் ரசிகன்தான். உறக்கம் வராத இரவுகள் ஒரு காலத்தில் ஏகாந்தமாகவும் பிறகு கடக்க முடியாத துயரங்களாகவும் மாறிவிடுகின்றன.

10 வருடங்களுக்கு முன்பு தூக்கம் பிடிக்காமல் இரவுகளில் சுற்றித் திரிவதுதான் பொழுதுபோக்கே. ஓர் ஆடி மாத இரவு... நல்ல போதையில் இலக்கு தெரியாமல் சுற்றினேன். வள்ளுவர் கோட்டம் பக்கம் ஏதோ ஒரு கோயில் திருவிழா. நள்ளிரவில் தெருவடைத்து மேடை போட்டு அமர்க்களமான ஒரு கச்சேரி. மேடையில் ஒரு எம்.ஜி.ஆர். மஞ்சுளாவைத் தட்டாமாலை சுற்றி, 'கடலோரம் வாங்கிய காற்று’ பாடிக்கொண்டு இருந்தார். கொஞ்ச நேரம் கீழே நின்று பார்த்தவன், மேடைக்குப் பின்னால் போய், அந்த நாட்டியக் குழுவோடு கலந்துவிட்டேன். அவர்களுக்கு டீ-பன் விநியோகித்து, விசிறிவிட்டு, பணிவிடைகள் செய்ததில் நான் ஏதோ விழாக் குழுவைச் சேர்ந்தவன் என நினைத்துவிட்டார்கள். விழாக் குழுவினர், என்னை அந்த நடனக் குழுவின் ஆபீஸ் பாய் என நினைத்துவிட்டார்கள். மேடை ஏறி கூல்டிரிங்ஸ் கொடுத்து, மைக்கில் அறிவிக்கும் ஊக்கத் தொகையை வாங்கி வைத்துக்கொள்ளும் அளவுக்குச்

வட்டியும் முதலும் - 16

சகஜமாகிவிட்டேன். பின்னிரவுக்குப் பிறகு ஆட்டம் முடிந்து, நடனக் குழு கிளம்பியது. எம்.ஜி.ஆர்., ரஜினி, மஞ்சுளா, சிம்ரன் எல்லாம் தலையைச் சொறிந்துகொண்டு சரக்கடிக்க ஆரம்பித்தார்கள். ''தம்பிதான் ரொம்ப ஹெல்ப்புல்ல...'' என்றபடி நடனக் குழுத் தலைவரான எம்.ஜி.ஆர். எனக்கு செவன்-அப் கொடுத்தார். அவர்களது வேன் கிளம்பியபோது நானும் ஏறிக் கொண்டேன்.

எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிட்டுப் பக்கத்தில் உட்காரவைத்துப் பேச ஆரம்பித்தார். பக்கத்தில் இருந்த பெண்களைக் காட்டி, ''தம்பி... எனக்கு மூணு பொண்டாட்டி. ஒண்ணு வூட்ல இருக்கு. இதுவோல்லாம் எம் புள்ளைங்க... த்த்தா... சாவுற வரைக்கும் இதுங்களுக்கு எல்லாம் பண்ணுவேன். நீ டான்ஸெல்லாம் ஆடுவியா?'' என ஓங்கி என் தோளில் குத்தினார். ஆட்டக்காரர்கள் அவரவர் குடும்பக் கதை பேச ஆரம்பித்தார் கள். பொசுக்கென்று அழுத சிம்ரனை, ''அடச்சீ... அழுவாத... நாளைக்குப் பாரு அவனை...'' என எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் பணத்தைப் பிரித்துக் கொடுத்தார். வண்டி எங்கெங்கோ சுத்தி, போரூரைத் தாண்டி ஒரு கிராமத்தில் நின்றது. ''நீ வந்து வூட்ல படு...'' என எம்.ஜி.ஆர். என்னை அழைத்துப்போனார். ஏகப்பட்ட பழுப்பு நிறப் புகைப்படங்கள் மாட்டப் பட்ட கூடத்தில் அதற்கு மேலும் உட்கார்ந்து அவர் குடித்தார். ''கலைஞர் கள் பாருங்க... நமக்கு ராத்திரிதான் பகலு, பகல்தான் ராத்திரி'' என ஏதேதோ பேசிச் சிரித்தார்... அழுதார்... நான் தூங்கிவிட்டேன். அதிகாலையில் திடுக்கிட்டு விழித்து, யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவந்துவிட்டேன். அந்த இரவு முழுவதும் ஒருவர்கூட என்னை 'நீ யார்?’ என்று எதுவுமே கேட்கவில்லை. அந்த எம்.ஜி.ஆர். இரவை மறக்க முடியாது!

பெரியார் பஸ் ஸ்டாண்ட் பக்கம் போனால், 'சார்... ஜாரி இருக்கு. ஃபுல் சேஃப்ட்டிண்ணே’ என பாவப்பட்ட சித்தப்பாக்கள் அலைவார்கள். எப்போது வேண்டுமானாலும் சரக்கு கிடைக்கும். மார்க்கெட் போய் கதவு தட்டினால் எந்தப் பொருளும் வாங்கலாம். வாழைத்தாரு லோடடித்துவிட்டு வருகிறவர்களுக்காகச் சுடச்சுட தக்காளி சாதம் இருக்கும். டி.வி.எஸ். கேன்டீனில் அதிகாலை 4 மணிக்கு சுடச்சுட பொங்கல் கிடைக்கும். அதைத் தின்றுவிட்டு, ஒரு டீயடித்து பீடி போட்டால், 8 மணி வரைக்கும் வேலை றெக்கை கட்டும். நைட் ஷிஃப்ட் முடித்து வருகிற குடித்தனக்காரனின் பகல் கொடுமையானது. குழந்தைகள் விளையாடும், அக்கம்பக்கத்து ஆட்கள் பரபரப்பாகும் பகல்களில், அவன் தூங்க முடியாமல் கண்கள் எரியக்கிடப்பது பலர் அறியாத கவலை!

மதுரையின் இரவுகளைப் போல இல்லை சென்னையின் இரவுகள். மதுரை டி.வி.எஸ்ஸில் வேலை பார்த்தபோது பெரும்பாலும் நைட் ஷிஃப்ட்டுகள்தான். பேய்த்தனமான சத்தங்களோடு சுழலும் இயந்திரங்களின் இரவுகள். மாலையில் குளித்துவிட்டு, நெற்றி நிறையப் பட்டைஅடித்து, கோகுல் சாண்டல் மணக்க அத்தனை ஃப்ரெஷ்ஷாக வந்து நிற்பார் சூப்பர்வைஸர் சோமய்யர். அடுத்த ஒரு மணியில், கரி மண்டிய பாத்ரூமில் தலை கலைய ஷேக்கிடம் பீடி வாங்கி உஷ்ஷ்ஷ§ உஷ்ஷ்ஷென இழுத்துக்கொண்டு இருப்பார். நாங்கள் கான்ட்ராக்ட் லேபர்கள். 35 ரூபா ஷிஃப்ட்டுக்கு ராத்திரி முழுக்கக் கரி அள்ளுபவர்கள். ஆனாலும், அந்த இரவுகள்தான் ரொம்பவும் சந்தோஷமாக இருந்தன. தஞ்சாவூரிலும் சென்னையிலும்கூட நடு ராத்திரிகளில் சிகரெட் வாங்க அலைய வேண்டும். மதுரை டவுன் ஹால் ரோட்டில் நடுநிசியிலும், ஆவி பறக்க இட்லித் தட்டை எடுப்பார்கள். கிணுங்கிணிங்கென சைக்கிளில் திரிவார்கள்.

பெருநகரில் கூர்க்காக்களும், வாட்ச்மேன்களும், திருடர்களும், பாலியல் தொழிலாளர்களும், காவலர்களும் உறங்காமல் கிடக்கிறார்கள். கூடவே, எண்ணற்ற ஆசைகளும் கனவுகளும் துயரங்களும். உறக்கம் வராத இரவுகளை என்ன செய்வது? என்னையும் பயமுறுத்தும் கேள்வி இதுதான். நமது உறக்கத்தைக் கலைத்துப் போட்டுவிட ஒரு வார்த்தை போதும்.

வட்டியும் முதலும் - 16

மனுஷ்யபுத்திரனின் 'கடைசி வாடிக்கையாளன்’ கவிதையில் வரும், 'ஏதாவது மிஞ்சியிருக்குமா என்று கேட்க நினைத்தான், பசியைக் காட்டிலும் அந்த நிராகரிப்பை மறுக்க விரும்பினான்’ என்ற வரிகளைப் போலத்தான் இருக்கிறது நமது இரவுகள். ஏதோ நினைவு, பாடல், வருத்தம்... நமது இரவுக்குள் நம்மைக் கேட்காமல் நுழைந்துவிடுகிறது. வீட்டுக்குக் கொடுக்க முடியாத பணம், அடைய முடியாமல் தவிக்கவைக்கும் இலக்கு, அணையாமல் எரியும் ஓர் அவமானம், பிரிவின் வெக்கை, அன்பின் அவஸ்தை, ஈழம், கூடங்குளம், நெஞ்சறுக்கும் செய்திகள், செரிக்க முடியாத மனிதர்கள்... ஏதாவது வந்துவிடுகிறது உறக்கத்தைக் கலைத்துப் போட.

காதலின் தொடக்கத்தில் இரவெல்லாம் விழித்து அலைபேசிக்கொண்டு இருப்பவர்களையும், உறவின் பிரிவின் கண்ணீரில் உறங்காமல் கிடப்பவர்களை யும் நகைத்தபடி கடந்துகொண்டே இருக்கின்றன இரவுகள். கடைசி மின்சார ரயிலில் வீட்டுக்குப் போகும் நீல் மெட்டல் பனால்கா பையன்களை, மார்க்கெட்டில் கம்பிகள் திருடும் சிறார்களை, கூதக் காற்று பொறுக்காமல் பிளாட்ஃபார்மில் நடுங்கிக்கிடக்கும் குடும்பத்தை, அந்த நேரத்தில் கடை தேடும் குடிகாரர்களை, வீட்டை விட்டு ஓடும் காதலர்களை, தம் டீ விற்பவர்களை, கால் சென்டர்களில் அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் தூக்கத்தை விற்பவர்களை என உறங்காத பைத்தியங்களை வைத்திருக்கும் இரவே... இரவே... ஒரு குழந்தையின் இதயம்போல உறங்கிடும் கண்களை எங்களுக்குக் கொடு போதும்!  

ஒருமுறை கொடைக்கானல் போயிருந்தேன். இரவில் மதுரைக்குத் திரும்பும் கடைசி பஸ்ஸுக்காக நண்பரோடு காத்திருந்தபோது ஸ்வெட்டர், கூலிங் க்ளாஸ் போட்ட ஒருவர் காற்றில் தடவி என் கைகளைப் பிடித்தார். அவர் பார்வையற்றவர். கையில் ஒரு தபேலா வைத்திருந்தார். ''சார்... ஸாரி சார். இந்த அட்ரஸ் எங்கே இருக்குனு சொல்ல முடியுமா?'' என்றார். அதில் இருந்த அட்ரஸை வாங்கி அங்கே இருந்த ஒரு கடைக்காரரிடம் விசாரித்தேன். அந்த இடம் அங்கிருந்து 30 கி.மீ. தள்ளி உள்ள ஓர் பள்ளிக்கூடம். அவர் ஓர் ஆசிரியரைத் தேடி, திருநெல்வேலியில் இருந்து வந்திருக்கிறார். அந்த நேரத்தில் அந்த ஊருக்குப் போவதற்கு பஸ் ஏதும் கிடையாது. அவரைத் தனியே அங்கே விட்டு வர

வட்டியும் முதலும் - 16

மனம் இல்லாமல், நண்பர் போய் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் ஒரு கார் எடுத்துக்கொண்டு வந்தார். அவரை விட்டுவரச் சென்றோம். அவர் ஒரு தபேலா கலைஞர். 50 வயசுக்கு மேல் இருக்கும். வீட்டில் தன்னை யாரும் சரியாகக் கவனிக்காத கோபத்தில் இங்கே கிளம்பி வந்துவிட்டார். ஓர் ஆசிரிய நண்பர் அங்கே தனக்கு வேலை வாங்கித் தரப்போவதாகச் சொன்னார். அவர் சொன்ன முகவரிக்குப் போனபோது, வேறு ஓர் இடம் சொன்னார்கள். இன்னும் சில கி.மீட்டர்கள் அலைந்து, பின்னிரவுக்குப் பின் அவர் சேர வேண்டிய இடம் வந்தது. அந்த நண்பர் எங்களை அந்த இரவு அங்கேயே தங்கச் சொன்னார். நாங்கள் மறுத்து விட்டுத் திரும்பினோம். வரும்போது அந்தப் பார்வையற்றவர் ஸ்வெட்ட ருக்குள் கை விட்டுக் கசங்கிய சில ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொடுத்தார். நண்பர் அதை வாங்க மறுத்துவிட்டார். உடனே அவர் கைப்பையில் இருந்து எங்களுக்கு ஆளுக்கு ஒரு குறுந் தகடு எடுத்துத் தந்தார். அது அவர் பாடி, தபேலா வாசித்த பாட்டுகள் அடங்கிய சி.டி. எத்தனை எத்தனை இரவுகள் கடந்துவிட்ட பிறகும் இன்னும் வெள்ளியாகச் சுழல்கிறது என் வீட்டில்... அந்த இரவு!

(போட்டு வாங்குவோம்)

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan