
ஜெயமோகன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி
முன்கதை: இமாச்சலப்பிரதேசத்தின் மலைக் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்த பிட்சுவின் பாடம் செய்யப்பட்ட உடலைத் திருட வந்தவர்கள் பற்றிக் கண்டுபிடிக்க, நோர்பா என்ற சிறுவனுடன் செல்லும் கேப்டன் பாண்டியன், டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் மூலம் சில ஆச்சர்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்கிறான். நரேந்திர பிஸ்வாஸ் அறையில் வைத்திருந்த அரிய ஓவியங்கள் மர்ம நபர்களால் எரிக்கப்படுகின்றன, அவர்களை மோப்பம் பிடித்த நோர்பாவின் நாய் நாக்போவைச் சுடுகிறார்கள், அடுத்த முயற்சியாக சமையற்காரனாகத் தங்கி இருந்த ஒற்றனைப் பிடிக்க முயற்சிக்கும் பாண்டியனை அந்த சமையற்காரன் தாக்கிவிட்டுத் தப்பிக்கிறான். அடிபட்டு இருக்கும் பாண்டியனுக்கு அக்கு பங்சர் சிகிச்சைக் கொடுக்கப்படுகிறது. நாய் நாக்போ ஒரு செல்பேசிக்கான வயர் ஒன்றை வாயில் கவ்வி எடுத்து வருகிறது. அடுத்து...

பாண்டியனும் நோர்பாவும் அன்று மாலை டாக்டரின் சிறிய அறைக்குள் கூடினார்கள். நாக்போ வந்து அறை மூலையில் சுருண்டு படுத்துக்கொண்டது. “நீங்களே பேசி முடிவெடுங்கள்... எனக்கு அதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை” என்று நினைத்துக்கொண்டது.
டாக்டர், ‘‘இதுவரை நடந்தவற்றை ஒன்றுடன் ஒன்று கோத்து ஒரு சித்திரத்தை நான் உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். ஆரம்பத்திலிருந்து ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்” என்று ஆரம்பித்தார்.
நாக்போ கொட்டாவிவிட்டு, மேலும் உடலைச் சுருட்டிக்கொண்டது.
“முதலில், பழங்கால மம்மி நமக்குத் தற்செயலாகக் கிடைக்கிறது. அது, ஒரு குறிப்பிட்ட வகையில் கால்மடித்து அமர்ந்திருக்கிறது. அதன் உடலில் சில எழுத்துகள் உள்ளன. அதைச் சிலர் கொள்ளையடிக்க முயன்றார்கள்.”
“ஆம்” என்றான் பாண்டியன்.
“அவை பழங்காலச் சீன எழுத்துகள். அழிந்துபட்ட சீன நாகரிகம் ஒன்றைச் சேர்ந்தவை. அந்த எழுத்துகள், திபெத்திலிருந்த பழைமையான பான் மதத்தினரின் ஓவியத் திரைச்சீலைகளிலும் உள்ளன.” டாக்டர் சொன்னார்.
பாண்டியன் தலையசைத்தான்.
“அந்த மம்மி கிடைத்த தகவல் எவருக்கோ தெரிகிறது. அவர்கள் அந்த மம்மியைத் திருடவந்தார்கள். அவர்களால் திருட முடியவில்லை. அங்கிருந்து நேராக இங்கே இந்த மடாலயத்துக்கு வந்து, இங்கே நான் சேர்த்துவைத்த திரைச்சீலைகளைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள்.”
பாண்டியனுக்குப் புரிந்தது. “ஆம், இப்போது தெரிகிறது. அவர்கள் அந்த மம்மியைத் திருட முயலும்போது, அந்த எழுத்துகளைப் பார்த்திருக்க வேண்டும். அந்த எழுத்துகள், இங்கே உங்கள் சேமிப்பில் இருந்த திரை ஓவியங்களில் இருப்பதை உடனே அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவற்றைத் திருட வந்துவிட்டார்கள்.”

“நீங்கள் அவர்களுக்குப் பின்னால் வந்துவிட்டீர்கள்” என்று டாக்டர் சொன்னார். “அந்த மம்மி அமர்ந்திருக்கும் அதே வகையில் அமர்ந்திருக்கும் ஒரு தெய்வம், ‘பான்' மதத்தில் இருந்தது. அது ஒரு கொடூரமான தெய்வம். பான் மதம் பௌத்த மதத்தில் இணைந்தபோது, அவர்களில் சிலர் ரகசியமாக அதே வடிவில் புத்தரை வழிபட்டார்கள். அப்படி வழிபடும் ஒரு துறவி, இந்த மடாலயத்தில் இருக்கிறார். அந்தத் துறவி, திபெத்திலிருந்து இங்கே வந்திருக்கிறார்.”
“ஆம்” என்றான் பாண்டியன்.
“அந்த தெய்வம்தான் நாம் தேடுவதில் உள்ள மையப்புள்ளி” என்றார். டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ். “இப்போது இணைத்துப்பாருங்கள். சீனாவின் தொன்மையான நாகரிகம் ஒன்றைச் சேர்ந்த ஒரு கொடூர தெய்வம் அது. அதுதான் அப்படிக் காலை மடித்து அமர்ந்திருக்கிறது. அந்தத் தெய்வம் பான் மதத்துக்குள் வந்தது. பின்னர் புத்தராக உருமாற்றம் அடைந்தது. அந்த தெய்வத்தின் அதே வடிவில்தான் மம்மி அமர்ந்துள்ளது. அந்த மம்மியைக் கவர்ந்துசெல்ல முயல்கிறார்கள்.”
“அப்படியென்றால்?” என்றான் பாண்டியன்.
“அந்த தெய்வத்தை எவரோ மீட்டெடுக்க முயல்கிறார்கள். அந்த தெய்வத்தைப் பற்றிய ஆதாரங்களை எல்லாம் திரட்டுகிறார்கள்.”
“அதைச் செய்வது யார்? சீன அரசாங்கமா?” என்றான் பாண்டியன்.
“தெரியவில்லை. ஆனால், சீனாவின் உளவுத்துறை இதனுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ். “அந்த தெய்வத்தை ஏன் தேடுகிறார்கள்? அதற்கும் அந்த மம்மிக்கும் இடையே உள்ள உறவு என்ன? அதைக் கண்டுபிடித்தாக வேண்டும்.”
பாண்டியன் பெருமூச்சுவிட்டான். ‘‘பெரிய வரலாறே மெதுவாகத் திறக்கிறது” என்றான்.
“நான் நேற்று இரவு முழுக்க அந்த தெய்வத்தைப் பற்றித்தான் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தேன்” என்று டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் சொன்னார். ‘‘இன்று பழைய ‘பான்’ மதத்தின் தெய்வங்களை அவற்றின் முதல் வடிவில் கண்டுபிடிக்க முடியாது. இன்று ‘பான்’மதம் பௌத்த மதத்துக்குள் ஒருவகை துணைப் பிரிவாக அமைந்துள்ளது. நான்கு வகையான ‘பான்’ மத தெய்வங்கள் இன்றைக்கு உள்ளன.”
அவர், தன் கணிப்பொறியை இயக்கி படங்களைக் காட்டினார். “இது சான்போ பூமித்ரி என்னும் தெய்வம். இது உலகைப் படைத்த முதல் தெய்வம்.” அந்த தெய்வம் புத்தர் போலவே இருந்தது. கையில் அமுதகலசத்தை வைத்திருந்தது.

“இது, ஷெராப் சம்மா என்னும் தெய்வம். இது, ஞானத்தின் அதிதேவதை.” கையில் ஒரு தாமரை மலரை வைத்திருந்த தெய்வத்தை டாக்டர் காட்டினார்.
மூன்றாவது தெய்வத்தைக் காட்டி, “இதுதான், ஷென்லா ஒகார். இது கருணையின் தெய்வம்” என்றார். அது அருள் புரிந்தபடி அமர்ந்திருந்தது.
‘‘இது, நான்காவது தெய்வம் ஷென்ராப் மிவோச்சே. இது, முக்தியின் தெய்வம். கையில் மின்னலை ஆயுதமாக வைத்திருக்கிறது பாருங்கள்” என்றார் டாக்டர்.
பாண்டியன், “ஆனால், இவை எவையுமே கொடூரமான தெய்வங்கள் இல்லை” என்றான்.
“ஆம், பௌத்த மதத்துக்குள் வந்ததுமே தெய்வங்களை இப்படி ஆக்கிவிட்டார்கள். ஆனால், ஒரு கேள்வி மிச்சமிருக்கிறது. படைத்தல் தெய்வமான சான்போ பூமித்ரி இதோ இருக்கிறது. படைத்தல் தெய்வம் இருந்தால், அழித்தல் தெய்வமும் இருக்க வேண்டும். அது எங்கே?”
பாண்டியன், “ஆமாம், அந்த தெய்வம் எங்கே?” என்றான்.
“அந்த தெய்வத்தைத்தான் முக்தியின் தெய்வமாக ஆக்கிவிட்டார்கள் என நினைக்கிறேன். ஷென்ராப் மிவோச்சே, முன்பு எப்போதோ கொடூரமான, அழிக்கும் தெய்வமாக இருந்திருக்க வேண்டும்” என்று டாக்டர் சொன்னார். “ஏனென்றால், ஒரு தெய்வம் ஒருபோதும் இல்லாமல் ஆவதில்லை. தெய்வங்கள் உருவமும் இயல்பும் மாறுவதுண்டு; அழிவதில்லை.”
“இத்தனை தெய்வங்கள் எப்படி உருவாகின்றன என்பதே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது” என்று பாண்டியன் சொன்னான். “மனிதன் இயற்கைக்கு அஞ்சி தெய்வங்களை உருவாக்கினான் என்றுதான் நான் படித்திருக்கிறேன்” என்றான்.
“தெய்வங்கள் உருவாவதைப்பற்றி மிகவும் தவறான பல எண்ணங்கள் உள்ளன. ஆரம்பகால வெள்ளைக்கார ஆய்வாளர்களுக்கு கிழக்கு நாடுகளில் உள்ள நிறைய மதங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகவே, அவர்கள் தவறான கருத்துக்களை உண்டுபண்ணினார்கள். அவற்றையே நாம் பள்ளிக்கூடங்களில் இன்றும் படிக்கிறோம்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.
‘‘அப்படியென்றால், மனிதர்கள் பயத்தினால் தெய்வங்களை உருவாக்கவில்லையா?” என்று பாண்டியன் கேட்டான்.

“மனிதர்கள் பாம்பை தெய்வமாக ஆக்கினார்கள். ஆனால், முதலையை தெய்வமாக ஆக்கவில்லை. ஏன்?” என்று டாக்டர் கேட்டார். “முதலை பாம்பைவிட பயங்கரமானது இல்லையா?”
பாண்டியனால் பதில் சொல்ல முடியவில்லை.
“பயத்தால் மனிதர்கள் தெய்வங்களை உருவாக்கவில்லை. எதற்குப் பயப்பட்டார்களோ, அதை தெய்வமாக ஆக்கவுமில்லை. அப்படிச் சொல்வதைப்போல முட்டாள்தனம் வேறில்லை” என்று டாக்டர் சொன்னார். “பழங்கால மக்கள் தங்களைச் சுற்றி நிகழ்பவற்றை நோக்கினார்கள். தங்கள் உள்ளுணர்வால் அவற்றைப் புரிந்துகொண்டார்கள். அந்தப் புரிதலை கொள்கைகளாக ஆக்கினார்கள். அந்தக் கொள்கைகளைச் சரியாக விளக்கும் சில உதாரணங்களைக் கண்டுபிடித்தார்கள். அந்த உதாரணங்கள்தான் காலப்போக்கில் தெய்வங்களாக மாறின. அவையெல்லாம் கவித்துவமாகச் சொல்லப்பட்ட கருத்துகள்தான்”.
“ஒரு தெய்வத்தைப் பார்த்ததும், அது எந்தக் கருத்தைச் சொல்கிறது என்றுதான் நாம் பார்க்க வேண்டும்” என்று டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் சொன்னார். “உதாரணமாக, இந்தப் பிரபஞ்சம் ஒரு சிறிய புள்ளியிலிருந்து அலையலையாக விரிந்து உருவானது எனக் கற்பனை செய்தார்கள். இன்றைய அறிவியலும் அதைத்தான் சொல்கிறது. அப்படிப் பிரபஞ்சம் உருவாவதை, தாமரைமலர் விரிவதைப்போல என்று உருவகமாகச் சொன்னார்கள். அந்தத் தாமரையின் நடுவே அமர்ந்திருக்கும் படைப்புத் தெய்வமாக பிரம்மனை கற்பனைசெய்தார்கள். அந்தத் தாமரை, முடிவே இல்லாமல் விரிந்துகொண்டே இருக்கிறது என்பது எவ்வளவு அழகான உருவகம், இல்லையா! பிரம்மனின் நான்கு தலைகளும் நான்கு திசைகளைக் குறிக்கின்றன. அதெல்லாம் மூடநம்பிக்கை அல்ல. உயர்ந்த ஞானம்தான் கற்பனையாக வெளிப்படுகிறது அவற்றில்.”
“இதோ ‘பான்’ மதத்தின் படைப்புத் தெய்வமான சான்போ பூமித்ரிகூட தாமரைமேல் அமர்ந்திருக்கிறது” என்று நோர்பா சொன்னான்.
“நான் அழித்தல் தெய்வமான ஷென்ராப் மிவோச்சேக்கு மட்டும் எங்காவது கோயில் இருக்கிறதா என்று தேடினேன். அவற்றில் மிக மிகப் பழைமையான கோயில் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்தேன். அது, பூட்டானில் இருக்கிறது” என்றார் டாக்டர்.
“பூட்டானிலா?” என்று பாண்டியன் கேட்டான்.
“ஆம், பூட்டான். திபெத்திய பௌத்தமதம் வேரூன்றிய இடம். அந்த நாட்டின் அதிகாரபூர்வ மதமே அதுதான். திபெத்தில் பௌத்த மதத்தை நிறுவியவரான பத்மசம்பவர் என்னும் துறவி, நேரடியாகச் சென்று அங்கே பௌத்த மதத்தைப் பரப்பினார். அங்கே இருந்த தொன்மையான தெய்வங்களை எல்லாம் பௌத்த தெய்வங்களாக ஆக்கினார். அவர் உருவாக்கிய பல மடங்கள் அங்கே உள்ளன.”
“அந்தத் தெய்வங்கள் எல்லாம் ‘பான்' மதத்தின் தெய்வங்களா?” என்றான் நோர்பா.
“இருக்கலாம்” என்றார் டாக்டர். ‘‘அங்கே ஒரு குகையில் ஷென்ராப் மிவோச்சேயின் மிகத் தொன்மையான ஓவியம் உள்ளது என்கிறார்கள். நாம் உடனே கிளம்பி அங்கே செல்லவேண்டும். அந்த ஓவியம் மட்டும் மம்மி அமர்ந்திருக்கும் அதே வடிவில் அமர்ந்திருக்கிறது என்றால், நம்முடைய தேடல் பாதி முடிந்தது என்று அர்த்தம்.”

“இங்கிருந்தே அதை உறுதிசெய்துகொள்ள முடியாதா?” என்றான் பாண்டியன்.
“நான் அதையும் ஆராய்ந்தேன். அந்த ஓவியத்தை முழுமையாகவே மூடி வைத்திருக்கிறார்கள். அதன் முன் பிற்காலத்தைச் சேர்ந்த ஷென்ராப் மிவோச்சேயின் சிலையை வைத்து வழிபடுகிறார்கள். கடந்த நூறாண்டுகளில் அந்த மூல ஓவியத்தை எவருமே பார்த்ததில்லை. நாம் எப்படியாவது அதைப் பார்க்க வேண்டும்.”
“கிளம்புவோம். நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்ய ஆணையிடுகிறேன்” என்றான் பாண்டியன். “பூட்டான், இந்தியாவின் நட்பு நாடு. அங்கே, மன்னராட்சி நிலவுகிறது. ஆனால், ராணுவம் இல்லை. இந்திய ராணுவத்தின் பாதுகாப்பில்தான் அந்த நாடு உள்ளது” என்றான்.
“நாம் அந்தச் செயற்கைக்கோள் தொலைபேசியைக் கண்டுபிடிக்கவில்லையே” என்றான் நோர்பா.
“அதைக் கண்டுபிடிக்கவேண்டியதில்லை. நாம் அதை அறியாமல் இங்கிருந்து கிளம்பிவிட்டோம் என்றே அவர்கள் நினைக்கட்டும். அவர்கள் அதைப் பயன்படுத்திப் பேசினால், இடைமறித்துக்கேட்க நாம் ஏற்பாடு செய்ய முடியும். அவர்கள் ஏமாந்து, நம்மிடம் அகப்பட்டுக்கொண்டால் நல்லதுதானே!” என்றான் பாண்டியன்.
அவர்கள் எழுந்ததும் நாக்போ எழுந்து “பேசிமுடித்துவிட்டீர்களா?” என்றது.
“நாம் பூட்டான் செல்லப்போகிறோம்” என்றான் நோர்பா.
“அங்கே எலும்புகள் கிடைக்குமா கடிப்பதற்கு?” என்று நாக்போ கேட்டது.
“என்ன கேட்கிறது?” என்றான் பாண்டியன். அது கேட்டதை நோர்பா சொன்னதும் பாண்டியன் சிரித்தான். “பூட்டான் பௌத்த நாடு. அங்கே உயிர்களைக் கொல்ல அனுமதி இல்லை” என்றான்.
“அய்யய்யோ” என்றான் நோர்பா. ‘‘நாக்போ அழுதுவிடுமே” என்றான்.
“ஆனால், மாமிச உணவு எங்கும் கிடைக்கும்” என்றான் பாண்டியன்.
“அது எப்படி?” என்றான் நோர்பா.
“பூட்டானுக்கு வெளியே, உயிர்களைக் கொன்று மாமிசத்தைக் கொண்டுவந்து விற்பார்கள். அதற்கு அனுமதி உண்டு. அங்குள்ளவர்கள் பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி இரண்டையும் விரும்பி உண்பார்கள்” என்றான் பாண்டியன்.
நோர்பா சிரித்துவிட்டான்.
“சிரிக்கிறாயா? எனக்கு மட்டும் அங்கே எலும்பு கிடைக்கவில்லை என்றால், நீ அழுவாய்” என நாக்போ உறுமியது.
“நாம் இன்று மாலையே கிளம்புவோம். ராணுவ ஹெலிகாப்டருக்கு ஏற்பாடு செய்கிறேன்” என்றான் பாண்டியன்.
(தொடரும்...)
மும்மூர்த்திகள்
இந்து மதத்தின் அடிப்படையான தெய்வங்கள் மூன்று. பிரம்மா, விஷ்ணு, சிவன். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய செயல்களை இவை செய்கின்றன. இந்த மூன்று தெய்வங்களுமே இந்து மதத்தின் தொடக்க காலகட்டத்தில் இருக்கவில்லை. இந்து மதத்தின் தொன்மையான நூல்கள் நான்கு. ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களில், இந்தத் தெய்வங்கள் முக்கியமாகச் சொல்லப்படவில்லை.
வேதங்களில் உள்ள முக்கியமான தெய்வம் இந்திரன். இந்திரன் இடி மின்னலின் தெய்வம். மழையைக் கொண்டுவருபவன். வானத்தில் ஒரே நேரத்தில் நீரும் நெருப்பும் கீழே வருகின்றன. அது எவ்வளவு பெரிய அற்புதம்! அந்த அற்புதம், மனிதனை மீறிய சக்தி ஒன்று இருப்பதைக் காட்டுகிறது, என வேத முனிவர்கள் நினைத்தனர். அந்த சக்தியையே இந்திரன் என்று வழிபட்டார்கள்.
இதேபோல கடலை வருணன் என்று வழிபட்டனர். காற்றை வாயு என்று வழிபட்டனர். மரணத்தை எமன் என்று வழிபட்டனர். இந்த இயற்கைச் சக்திகளுக்குப் பின்னால் இருக்கும் பிரபஞ்ச விதியைத்தான், அந்த தெய்வங்களாக எண்ணினார்கள். இப்படித்தான் தெய்வங்கள் உருவாகி வந்தன. ஒரு தெய்வ உருவம் ஒரு குறியீடு. அது, மிக நுட்பமான ஒரு பிரபஞ்ச உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது.