
படங்கள் : புதுவை இளவேனில், வம்சி
நெருக்கடிமிக்க சென்னை அண்ணா சாலையில் நாங்கள் நான்கைந்து நண்பர்கள் நிற்க, மார்பில் அணைக்கப்பட்ட நான்கு பீர் பாட்டில்களோடு சாலையைக் கடந்த பிரபஞ்சனிடம் அந்த இரவு பத்து மணிக்கு சிலர் நின்று ஆட்டோகிராஃப் கேட்டார்கள்.
பீர் பாட்டில்களை அவர்கள் கையிலேயே தற்காலிகமாகத் தந்துவிட்டு சாலை ஓரமாக நின்று கையெழுத்திட்டுத் தந்த பிரபஞ்சனைப் பார்த்து, “இதெல்லாம் வேணாம் சார், உங்களுக்குன்னு தமிழ்நாட்டில் ஒரு பெரிய இமேஜ் இருக்கு” என்று சொன்னேன்.
“அப்படி ஒரு பொய்யான இமேஜை நான் வெறுக்கிறேன் பவா. நான் எதுவாக இருக்கிறேனோ, அப்படியான பிம்பம் மட்டுமே வெளியிலும் பதிவாக வேண்டும். நான் எப்போதாவது குடிப்பவன். அதுவும் வெளியே தெரியக் கூடாது என நான் நினைத்தால், இதை இனி தொடக் கூடாது இல்லையா” என்றார். அவர் கையிலிருந்த பாட்டில்களைக் கொஞ்ச நேரம் என் கைகளுக்கு மாற்றி நடந்தது நினைவிருக்கிறது.
எவர் கைகளிலேயும் நிரந்தரமாக அடக்கிவிட முடியாத நீர்தான் பிரபஞ்சன். என் கல்லூரிப் படிப்பை முடித்து, இலக்கியம் நோக்கி வெறிகொண்டு அலைந்த காலத்தில் கி.ராஜநாராயணன் பற்றிய ஓர் இலக்கியக் கூட்டத்தில்தான் பிரபஞ்சனை முதன் முதலில் பார்த்தேன்.

பட்டு வேட்டி, பட்டுச் சட்டை போட்டு கையில் புகையும் ஒரு சிகரெட்டோடு அரங்க வாசலில் நின்றிருந்த அவரை ஏனோ அப்படிப் பிடித்துவிட்டது. எனக்கு அது இத்தனை ஆண்டுகளாகியும் அகல மறுக்கும் அன்பின் அடர்த்தி. பத்தாயிரம் ரூபாயைக் கவரில்வைத்துக் கொடுப்பார்கள் என்ற நிச்சயத்திற்காக, ஒன்றுமே இல்லாத ஒருவனை உலகக் கவி என்றும், தன் படைப்பு அவன் அதிகாரக் காலடியில் அச்சேறக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், அவனின் எழுத்து நோபலுக்கும் மேலே என எழுதுகிற பலருக்கு மத்தியில், பிரபஞ்சன் என்ற அசல் இன்றளவும் பலராலும் நேசிக்கப்படுவதற்கு காரணம், எளிமையும் உண்மையும்தான்.
தகுதிபெறாத படைப்புகள் எதுவாயினும் அதை எழுதியவன் இந்தியாவின் பிரதமரே ஆயினும்கூட, தன் கால் சுண்டுவிரலால் அவர் அதை எத்தித் தள்ளிவிடுவார். அப்படியான சம்பவங்கள் இலக்கிய உலகம் அறிந்ததுதான். எதிலும் எங்கும் நிலைத்திருக்கத் தெரியாத படைப்பாளிகளுக்கே உரிய அலைவுறும் மனம்கொண்டவர் பிரபஞ்சன். முறையாகத் தமிழ் படித்து, முதன்முதலில் மாலைமுரசு பத்திரிகையில் ஒரு நிருபராகத் தன் வாழ்வைத் தொடங்குகிறார். தொடக்கத்திலேயே உண்மையின் குரூர முகம் அச்சேற மறுத்து அவரை வெளியேற்றுகிறது அல்லது அவரே வெளியேறுகிறார்.

மானுட ஜீவிதத்தின் இந்த 73 வயது வரை, சமூக வாழ்வில் ஒரு படைப்பாளியால் சகித்துக்கொள்ள முடியாத அருவருப்பு மிக்க சமரசங்களை உதறித் தள்ளுபவராகவும், எதிர்கால லௌகீக வசதிகளைப் பற்றி எந்தக் கவலையும் இன்றி அதே ஆரம்பகால உற்சாகத்துடன் கடற்காற்றின் குளுமையுடனும், சுதந்திரத்துடனும் நம்மோடு அலைந்து திரியும் எளியப் படைப்பாளியாகவும்தான் பிரபஞ்சனை ஒவ்வொருவருமே உணர முடியும்.
நான் எழுதத் தொடங்கிய ஆரம்பக் காலத்திலேயே என் முன்மாதிரி என தோழமையோடு எனக்குள் குடியேறியவர் அவர்தான். என் ‘சத்ரு’ கதையை உலகின் தனித்துவமிக்க பத்து கதைகளில் ஒன்று என எழுதி, ஓர் ஆரம்பகாலப் படைப்பாளியைத் திக்குமுக்காடவைத்தவர். மரங்களையும் பழங்குடி மனிதர்களையும் காடுகளையும் அதன் பச்சைய வாசனையையும் பவாவின் கதைகளில் நான் உணர்ந்ததுபோல வேறெங்கும் உணந்தது இல்லை என எழுதிய கைகளை ஒரு நிமிடம் நான் பற்றிக் குலுக்கக்கூட அனுமதியாதவர்.
அக்கணத்தில் தனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ, அதன் பின்விளைவுகள் எதுவாயினும் எந்தக் கணக்கும் போட்டுப் பார்க்கத் தெரியாமல் அப்படியே உதறித் தள்ளி எழுந்து, தனக்கு விருப்பமானதை நோக்கி நடக்கத் தெரிந்த ஓர் உண்மைத் துறவியின் மனம் எப்போதுமே பிரபஞ்சனுக்கு உண்டு. ஒரு பிரபலமான வாரப் பத்திரிகையில் தான் எழுதிக் கொண்டிருந்த தொடர்கதையை ஏதோ சில மனநெருக்கடிகளால் எழுத முடியாமல் அவரின் பிரியப்பட்ட ‘சுமதி’யை அண்ணா சாலையின் ஸ்பென்சர் முன் அநாதையாய் நிற்கவைத்துவிட்டு நள்ளிரவில் திருவண்ணாமலைக்கு பஸ் ஏறின பிரபஞ்சனை இப்போது இந்தக் கணத்தில் நினைத்துக்கொள்கிறேன்.

அதிகாலை திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் அவரை அழைத்துவர பைக்கோடு நின்றிருந்த என்னைப் பார்த்து, “நல்ல காபி உங்க ஊரில் எங்குக் கிடைக்கும்” என இயல்புக்கு திரும்பிய ஒரு மனிதனை நீங்கள் எந்த வகையில் சேர்ப்பீர்கள்?
ஒரு நல்ல காபிக்காக, பல மைல்கள் நடந்தும், ஆட்டோவில் பயணித்தும் பருகத் தெரிந்த ருசிக்காரர் அவர். ராயப்பேட்டை சரவணபவனின் அதிகாலைத் திறப்பு என்பதே பிரபஞ்சனின் ஒரு குவளைத் தேநீருக்காகத்தான் எனத் தோன்றும். எல்லா தரப்பு மனிதர்களுமே அவரின் தோழமைப் பட்டியலில் உண்டு அல்லது மனிதர்களை எதன் பொருட்டும் வரிசைப்படுத்தத் தெரியாதவர் அவர்.
மேன்சன் வாட்ச்மேன், கூரியர் கொண்டுவரும் பையன், சத்யம் தியேட்டர் வாசலில் பர்ஸைத் தொலைத்துவிட்டு ஊருக்குப்போக வழியில்லாமல் நிற்கும் ஜீன்ஸ் போட்ட இளைஞன், ‘மகாநதி படிச்சிட்டு அப்படியே உங்களைப் பார்க்கப் புறப்பட்டு வந்தேன் சார்’ எனச் சொல்லி அதிகாலையிலேயே கதவைத் தட்டும் ஆய்வு மாணவி, இவர்களோடுதான் அவரின் காலை அல்லது மதிய உணவு பகிர்ந்து கொள்ளப்படும்.
கையில் பணம் கிடைக்கும் தருணங்களில் பிரபஞ்சனை அருகிலிருந்து அவதானிக்கக் கொடுத்துவைத்திருக்க வேண்டும். ஒரு வள்ளல் அவரின் கைகளில் புகுந்து பரப்பரப்பான். கடைசி ஒரு ரூபாயும் தன்னிடமிருந்து அகலும் வரை அவரின் வெறிபிடித்த அடவுகள் தொடரும். எந்தக் காரணத்துக்காகவும் தன்னிடம் உள்ள பணம் செலவழிந்துவிட வேண்டும் என நினைக்கும் ஒரு மனதைவிட வேறு என்ன மேன்மை வேண்டும் ஒரு படைப்பாளிக்கு?
“சார், சில நண்பர்கள் உங்களைப் பார்க்க விரும்புகிறார்கள், அழைத்து வரட்டுமா?” என எஸ்.ராமகிருஷ்ணன் தொலைபேசியில் கேட்கிறார். “ரொம்ப சந்தோஷம். வாங்க ராமகிருஷ்ணன். எத்தனை பேர் கூட வருவாங்க?”

“பத்திருபது பேர்.”
“சந்தோஷம். உடனே வாங்க.”
அடுத்த அரை மணி நேரத்தில் பீட்டர்ஸ் காலனி வீட்டை அடைந்த அவர்களுக்குப் பூட்டிய வீடு அதிர்ச்சியைத் தருகிறது. அணைத்துவைக்கப்பட்ட தொலைபேசி, தெரிந்தவர்களின் விசாரிப்புகள், அவர் வழக்கமாகப் போகும் இடங்கள் என எல்லாத் தேடுதல்களும் தோல்வியில் முடிய, அவர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள். இப்படியான சிறு ஏமாற்றுதல்களை அவர் எப்போதும் சிரமமேற்கொண்டு கைக்கொள்வது இல்லை. அது அவரின் இயல்பு. பத்து நாள்கள் கழித்து ஒரு இலக்கியக் கூட்டத்தில் ராமகிருஷ்ணன் சிரித்துக்கொண்டே கேட்கிறார். “எங்களை வரச் சொல்லிட்டு வீட்டைப் பூட்டிட்டு எங்கேயோ போய்ட்டீங்களே சார்?” பிரபஞ்சன் தனக்குக்குள்ளேயே சிரித்துக்கொள்கிறார். “ஒரு நண்பரைப் பார்க்க அவசரமாகப் போக வேண்டியிருந்தது.” என்கிறார். அது பொய் என இருவருக்குமே தெரியும். இருந்தாலும் ஓர் உயர்ந்த படைப்பாளி, இன்னொரு பிரபலமான எழுத்தாளனிடம். சொல்கிறார். அது எப்படிப் பொய்யாகும்? அன்று அந்த நண்பர்களுக்குச் செலவழிக்க அவர் சட்டையில் பணம் இல்லை என்ற உண்மை இருவருக்கும் இடையே இருந்த இடைவெளியில் ஒரு நாய்க்குட்டி போல படுத்துக்கிடந்தது. நண்பர்களை எப்போதும் போஷிக்க வேண்டும் என்பதை பிரபஞ்சனிடமிருந்தே நான் அடைந்தேன்.
விரும்பியபடி செலவழிக்கப் பணம் இல்லை என்பது எப்போதுமே அவருக்குத் தற்காலிகச் சோகம் மட்டுமே. அதன் பொருட்டு எவனை எப்படிப் புகழ்ந்தால் அதை அடைய முடியும் என அவர் மனம் எப்போதும் கணக்குப்போட்டது இல்லை. வெளியூர் பயணம் முடிந்து பாண்டிச்சேரி வீட்டிற்கு வந்த ஒரு நள்ளிரவில், மேசையில் கிடந்த புதுவை அரசுக் கடிதம் அவரை ஆச்சர்யப்படுத்துகிறது. அரசுக் கவியாக வர முடியுமா எனப் பாண்டிச்சேரி மன்னன் கேட்கிறானா? அப்படியெனில் அதை நிராகரித்துவிட்டு விடிவதற்குள் சென்னைக்குப் பஸ் ஏறிவிட வேண்டும் என நினைத்தபடியே கடிதத்தைப் பிரிக்கிறார்.
வைத்தியலிங்கம் என்ற இயற்பெயரோடு சரியாக அச்சிடப்பட்ட அவர் வீட்டு விலாசம். அந்தத் தனிமையில், மிகுந்த அருவருப்போடு அந்தக் கடிதம் அவரால் படிக்கப்படுகிறது. ஒரு முழு சிகரெட்டின் கரைதலுக்குப் பின் அவருக்கு எல்லாமும் பிடிபடுகிறது. அவரின் இப்போதைய தேவை ஒரு விடியல் மட்டும்தான். விடிந்ததும் தன் உறவினரும் பாண்டிச்சேரியின் அப்போதைய அமைச்சருமான ஒருவர் வீட்டில் அந்தக் கடிதத்தோடு இருக்கிறார். அமைச்சர் புன்னகைத்துக்கொள்கிறார். நன்றி சொல்ல வந்தவரை பின் எப்படி வரவேற்பது?

பிரபஞ்சன் பேசத் தொடங்குகிறார், “இப்படி ஒரு கேவலமான ஆணையை எனக்கு அனுப்ப வேண்டும் என உனக்கு எப்படித் தோன்றியது?” அமைச்சரின் முகம் இறுகுகிறது. “பிரபஞ்சன் என்ற பெயரில் மானுட விடுதலைக்கு எழுதுகிறவன், வைத்தியலிங்கம் என்ற பெயரில் லாஸ்பேட்டையில் கள்ளுக்கடை எடுத்து வியாபாரம் செய்வான் என நீ நெனச்சே பாரு, உன்னைவிடக் கேவலமா இந்த உலகத்துல யாரும் என்னை நெனச்சிருக்க முடியாது” என அந்தக் கடிதத்தை ஆறிக்கொண்டிருந்த தேநீர் கோப்பைக்குக் கீழே வைத்துவிட்டு வெளியே நடந்த பிரபஞ்சனின் மனஉலகம் எதுவென நம்மால் புரிந்துகொள்ள முடியும். அந்த இயல்பிலிருந்துதான் அவரின் அத்தனை படைப்புகளும் திமிறின. கலங்கிய ஏரியில் கையால் மீன் பிடிக்கும்போது நீருக்கு மேல் துள்ளும் விரால்கள் எவர் கைகளுக்குள்ளும் அடங்காது தோழனே! எழுத்தாளன் எப்போதும் மனதாலும், உடலாலும் சுத்தமானவன் என்ற கொள்கையு
டையவர்.
பிரபஞ்சனைத் தொடர்ந்து நட்பால் பின்தொடரும் முருகேசபாண்டியன் போன்றவர்கள் அவரின் உடைகளைப் பற்றி மட்டுமே ஒரு தனிக் கட்டுரை எழுதிவிடக்கூடும். நல்ல உடை, நல்ல உணவு, சுகாதாரமான இருப்பிடம் இது மட்டும்தான் சாகித்ய அகடெமி விருது உட்பட பல விருதுகளை வாங்கிக் குவித்த ஒரு தமிழ் எழுத்தாளனின் எளிமையான கனவு. ஆனால், ஒருபோதும் அவை அவருக்கு எளிமையாகக் கிட்டியது இல்லை. அதற்கே அவர் தினம் தினம் போராட வேண்டியிருக்கிறது.
‘என் எல்லா நாளும் கார்த்திகை’யில் அவரைப் பற்றி ‘இழப்பதற்கும், அடைவதற்கும் ஏதுமற்ற கலைஞன்’ என்ற ஒரு கட்டுரையில், ‘‘ஒரு கலைஞன் ஒட்டுமொத்தப் மானுடப் பசி போக்க ஒரு பக்கம் பாடிக்கொண்டே, தன் சொந்தப் பசிக்கான ரொட்டித் துண்டுகளையும் தினம் தினம் தேட வேண்டியிருக்கிறது’’ என எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு ஒரு மழை இரவில் பிரபஞ்சன் என்னை தொலைபேசியில் அழைத்திருந்தார். இரண்டு பக்கமுமே முழுமையாக மௌனம் மட்டுமே நீடித்த அதற்கும் உரையாடல் என்றே பெயர். தெளிவற்ற வார்த்தைகள் உடைந்து, சிதறி அவரிடமிருந்து வந்ததை அதற்கு முன்னும் பின்னும் எப்போதும் கேட்டது இல்லை. “என் ஐம்பது வருஷத்தை வீணாக்கிட்டேன்னு நெனெச்சேன் பவா, இல்ல நானும் இந்தச் சமூகத்துக்கு ஏதோ செஞ்சிருக்கேன். அதுதான் உங்க எழுத்துல தெறிக்குது. நன்றி.” நான் அவரைத் தொடர்வதற்குள் அவர் வெகுதூரம் போய்விட்டிருந்தார்.
நான் அறிந்து தமிழில் எழுதத் தொடங்குகிற படைப்பாளிகளுக்கு அவர் தரும் உத்வேகம் எதைக்கொண்டும் அளவிட முடியாதது. அதிலும் பெண்கள் எழுத ஆரம்பித்தால், பிரபஞ்சன் கொண்டாடித் தீர்ப்பார். பத்து வருடங்களுக்கு முன் பால் சக்கரியாவின் கதைகளை மொழிபெயர்த்து முடித்து “இது சரிதானா தோழர்?” எனத் தயங்கித் தயங்கி பிரபஞ்சனிடம் நீட்டிய கே.வி.ஜெயஸ்ரீக்கு முன்னுரையுடன் சேர்த்து, அதைப் புத்தகமாக்கிக் கொடுத்தவர் அவர். நானறிந்து இது வேறு எந்த மூத்த படைப்பாளிகளுக்கும் வாய்க்காத மனது. ஒவ்வொரு புத்தாண்டுக்கும் கட்டுக்கட்டாகத் தாள்களும், உயர்ந்த விலையுள்ள பேனாக்களையும் வாங்கி, ஷைலஜாவுக்கும், ஜெயஸ்ரீக்கும் அனுப்பிவைப்பார் அல்லது அவரே பஸ் ஏறிவந்து கொடுத்துவிட்டுப் போவார். பெண்கள் எழுத ஆரம்பித்தால் மட்டுமே பல நூறு ஆண்டுகளாகப் புதையுண்டுகிடக்கும் மௌனம் உடையும். போர்ப் பாடல்கள் கேட்கும். அது கரடுதட்டிப்போன இந்த மானுட செவியினைக் கிழிக்கும் என உறுதியாய் நம்பும் வெகு சில படைப்பாளிகளில் பிரபஞ்சனே முதன்மையானவர்.
எக்காலத்திலும் எந்நிலையிலும் அவர் எல்லோரையும் ஒரே மாதிரி ஏற்றுக் கொண்டது இல்லை. அசோகமித்திரனின் படைப்புகள் உலகத் தரமானவை எனக் கொண்டாடிய பிரபஞ்சன், இந்துத்துவாவுக்கு சாய்வான அவரின் புனைவல்லாத எழுத்துக்கு முன் நின்று எதிர்வினை ஆற்றியுள்ளார். தனக்குப் பிடித்தமான படைப்பாளி ஆயிற்றே என மௌனம் காப்பது, அந்தக் கருத்துக்கு மறைமுகமாகத் துணைபோவதுதானே! ஒரு நேர்மையான படைப்பாளியாக அதை ஒருபோதும் அவர் செய்தது இல்லை. எல்லா காலங்களிலும் ஒரு படைப்பாளியை அவர் கொண்டாடியது இல்லை. அவரின் வாசிப்புக்குத் தக்கவாறு படைப்புகளின், படைப்பாளிகளின் முதன்மைப் பட்டியல் மாறிக்கொண்டே இருக்கும். அது ஓர் எழுத்தாளனின் ஆகப்பெரும் தகுதியும் நேர்மையும்கூட. எல்லா காலத்திலேயும் தன்னை முதல் இடத்தில் நிறுவிக்கொண்ட ஒரு படைப்பாளியை, ஓர் இளம் படைப்பாளி தன் ஒரே கதையால் பின்னுக்குத் தள்ளிவிடலாம் என்பது பிரபஞ்சனின் கொள்கை. அதை ஏற்று அங்கீகரிக்கிற மனம் மிகப் பெரிது. அது எப்போதுமே பிரபஞ்சன் என்ற ஆளுமையிடம் நிரந்தரமாகத் தங்கியிருப்பதுதான் நம் மொழியின் அதிர்ஷ்டம்.

பாண்டிச்சேரி கடற்கரையில் எப்போதாவது கால் நனைக்கிற மாதிரி தமிழ்த் திரைப்பட உலகிலேயும் எப்போதாவது அவர் கால் நனைத்திருக்கிறார். அந்த அனுபவங்கள் எல்லா தமிழ்ப் படைப்பாளிக்கும் நேர்ந்ததுபோலவே அவருக்கும் எந்தக் கௌரவத்தையும் தந்துவிடவில்லை. ‘எத்தனை கதைகளையும், எவன் பேரில் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள் எனக்குக் காசநோய் சிகிச்சைக்குக் காசு வேண்டும்’ என புதுமைப்பித்தன் சொன்னது போலவே, ‘எனக்குப் பெயர் வேண்டாம். ஊதியம் மட்டும் போதும்’ என்ற சமரசத்தை நோக்கி அவரை நெட்டித் தள்ளியதும் இதே வாழ்வுதான்.
திரும்பிப் பார்த்தால், பிரபஞ்சன் தன் கதைகளில் மேன்மையான மனிதர்களை, விடுதலையை மௌனமாகவேணும் கோரும் பெண்களை, கடவுள்-மனிதன் என்ற கற்பனையும் நிஜமுமான ஊசலாட்டத்தில் மனிதனின் பக்கம் மட்டுமே நிற்கும் மனிதர்களை, குமாரசாமியின் பகல் பொழுதுகளை, பெருங்கனவுகளுக்காக தங்கள் வறுமையிலிருந்து எழுந்து பல்கலைக் கழகங்களின் வாசல் வரை வந்துவிடும் பெண்களை வஞ்சிக்க நினைக்கும் பேராசிரிய அதிகாரங்களை அவர் எப்போதுமே தன் புனைவிலும், புனைவல்லாத எழுத்திலும் எழுதியிருக்கிறார். காலந்தோறும் பெண்களை வஞ்சிக்கும் ஆண் மனங்களின் அவலத்தை அவர் அளவுக்குப் புரிந்து எழுதியவர் என யாரையும் அடையாளப்படுத்த முடியவில்லை.
‘பிரும்மம்’, ‘மீன்’, ‘பச்சைமாமி மெஸ்’, ‘மரி என்கிற ஆட்டுக்குட்டி’, ‘ஒரு மனுஷி’, ‘ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்’ எனத் தொடரும் எல்லா கதைகளுமே மனித வாழ்வின் மேன்மையையும், மனிதர்களின் உயர்வையும் மட்டுமே பேசுகிறது. அவர் தன் கதைகளின் மூலம் எப்போதுமே உபதேசித்தது இல்லை. ‘ஆகவே மானுடா!’ எனப் பெருங்குரலெடுத்துக் கத்தியது இல்லை. ‘சைக்கிள் நிறுத்த இடம் இல்லை என நீ வெட்டிவிட்ட முருங்கைமரம் துளிர்த்துவிட்டது நண்பா’ என நம் தோள் மீது தோழமையோடு கைபோட்டுக் கொள்கிறார்.

மூன்று மாதங்களுக்கு முன் திருவண்ணாமலைக்கு வந்து எங்களோடு மூன்று முழு நாள்கள் தங்கியிருந்தபோது தன் நீண்ட வாழ்வின் ஆழ அகலங்களை விசாலமாகப் பகிர்ந்துகொண்டது ஓர் பேரனுபவமாக எங்களுக்குள் விரிந்தது.
எங்களோடு பேசிக்கொண்டிருந்தவர் சட்டென எழுந்து வம்சியின் பைக்கில் உட்கார்ந்து, ‘‘நீ எடுத்த படம் பாக்கணும் வா’’ என அவனைக் கைப்பிடித்து அழைத்தபோது, எதுவும் தெரியாதவனைப் போல் அவர்கள் இருவரையும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். தொடக்கமும் தொடர்ச்சியும்போல் அவர்களிருவரும் பைக்கில் போவது அத்தனை பெருமிதமாக இருந்தது எனக்கு. பிரபஞ்சனின் ‘கருணையில்தான்’ கதை எப்போதோ நான் படித்து சிலிர்த்த ஒன்று. அத்தனை வருடங்களாக எனக்குள் அடைகாத்த அது, என் ஒரு கதை சொல்லலில் முட்டை ஓடு உடைந்து, உயிர்த்துடிப்புடன் வெளிவந்து வம்சியின் கைகளைப் போய் பற்றிக்கொண்டது. அவன் அந்தக் கதையைப் படமாக்கினான். அதற்கு ‘வலி’ என அவனே தன் ‘பெரியப்பா’வின் அனுமதியுடன் பெயரிட்டான். அத்தனை மகத்தான ஒரு படைப்பாளியோடு, தான் மட்டும் தனித்திருந்து ஒரு பூட்டிய இருட்டறையில் அவர் கதையின் காட்சி வடிவத்தை அவருக்கே போட்டுக் காண்பிக்க வாய்த்தது அவனுக்கு.
“நான் உங்கள் கதைக்கு நியாயம் செய்திருக்கிறேனா பெரியப்பா?” என சொற்களால் அல்ல... கண்களால் ஏறெடுத்த அவனை, அப்படியே அணைத்து தன்னுள் புதைத்துக்கொண்ட மகத்தான கலைஞன் பிரபஞ்சனுக்கு கடந்த ஏப்ரல் 27-ம் தேதியோடு 72 வயது நிறைகிறது என்பது நம்ப முடியாத ஒன்றுதான்.
தமிழ்ச் சமூகம் தன்னுள் அவரை இருத்திக் கொள்வது அது - பெற்ற பாக்கியம்.