மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அப்பாவின் சாதனங்கள் - கண்ணன்

அப்பாவின் சாதனங்கள் - கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
அப்பாவின் சாதனங்கள் - கண்ணன்

படங்கள் : ஆர்.ராம்குமார், புதுவை இளவேனில்

ப்பாவின் மேசை என்று தனியாக எதுவும் இருக்கவில்லை. வீட்டில் சில சாதாரண மேசைகளும் அருங்காட்சியகத்தில் வைக்கத்தகுந்த சில மேசைகளும் உண்டு. அவற்றையெல்லாம் வெவ்வேறு காலங்களில் பயன்படுத்தியிருக்கிறார். பழைய சாப்பாட்டு மேசைகூட ஒரு கட்டத்தில் அவரது மேசையாக இருந்தது. கையால் எழுதிய காலத்தில் அவருக்காகச் செய்யப்பட்ட நாற்காலியும் பலகையும் அழகானவை. சிறுவயதில் இளம்பிள்ளைவாதம் வந்ததன் விளைவாக இருக்கலாம், ஒரு கட்டத்துக்குப் பிறகு அவரால் எழுத முடியவில்லை. அவர் சொல்லச் சொல்ல ஒருவர் கையால் எழுதுவது (ஜே.ஜே: சில குறிப்புகள்), பின்னர் உதவியாளர் தட்டச்சு செய்வது என்றிருந்த காலத்தில், மரத்திலான குட்டி யானை ஒன்று மேசையாக அவர் அறையில் கிடந்தது. அதன் இழுப்பான்களைத் தினமும் திறந்து மூடினால் கட்டுமஸ்தாக இருக்கலாம். கட்டிலில் படுத்துக்கொண்டோ, சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டோ அவர் சொல்ல, தட்டச்சாளர் கதைகளை, கட்டுரைகளை, குறிப்பாகக் கடிதங்களைத் தட்டச்சு செய்வார். ஒரு வேலைநாளில் சரிபாதி, கடிதங்களுக்கு. நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் கொடுத்த முக்கியத்துவத்தின் அளவீடு இது. சுமார் 40,000 கடிதங்கள் எழுதியிருப்பார் என்பது எங்கள் கணக்கு.

கணினி வந்தது. மீண்டும் தொடங்க வேண்டும் என்று நீண்ட நாள்களாகத் திட்டமிட்டிருந்த ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவல் பணியில் இறங்க, 1996-ம் ஆண்டு வாக்கில் முடிவுசெய்தார். அடித்துத் திருத்தி எழுதுவதை கணினி இலகுவாக்கியது உடனடியான தூண்டுதலாக இருந்திருக்கலாம். ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ எழுதும் முன்னரே எழுதத் தொடங்கிய நாவல் அது. அதை எழுதிக்கொண்டிருக்கும்போது அவருக்குள் உருவான பாத்திரம்தான் ‘ஜே.ஜே’. அந்தப் பாத்திரம் அவருக்குள் உருவாக்கிய உத்வேகத்தில், அந்த நாவலை விட்டுவிட்டு ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ எழுதி முடித்ததாக சுரா குறிப்பிட்டுள்ளார்.

அப்பாவின் சாதனங்கள் - கண்ணன்

அந்த முதல் நாவலின் பக்கங்களை நோட்டுப் புத்தகத்தில் எழுத்தரின் உருண்டைக் கையெழுத்தில் பார்த்திருக்கிறேன். எழுத்தரை மாற்றிவிட்டு  ‘ரெமிங்டன்’ தட்டச்சு இயந்திரத்துக்கும் தட்டச்சாளருக்கும் ஒழுங்குசெய்த எம்.எஸ். தட்டச்சு உலகில் ஓர் அங்கீகரிக்கப்பட்ட நிபுணர். பின்னர் 90-களில் கணினிக்கு அவரை மாற்றியவர் என் மனைவி மைதிலி. பின்னர், ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ தொடங்குகையில் (நாவலின் பெயர் இறுதியில்தான் முடிவானது) அதற்காக ஒரு மேசை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார்.  ஆசாரியை அழைத்து, கலிஃபோர்னியாவில் அக்காவுடன் இருந்த காலங்களில் பயன்படுத்திய மேசையைப் போலவே, அதை அவரே வடிவமைத்து உருவாக்கினார். கலிஃபோர்னியா மேசை லகுவாக இருந்திருக்கும், சந்தேகமில்லை. அதன் இந்தியப் பதிப்பு கனதியானது. ஆசாரி, திடமாக இருக்கட்டுமே என்று நினைத்திருப்பார். அப்படியாக இன்னொரு குட்டி யானை வீட்டில் சேர்ந்துகொண்டது. ஓர் அறையிலிருந்து இன்னோர் அறைக்கு மாற்றுவதென்றால், தாவு தீர்ந்துவிடும்.

அப்பாவின் சாதனங்கள் - கண்ணன்இப்போது அப்பாவின் நினைவுகளோடு வீட்டில் இருப்பவை எண்ணற்ற புத்தகங்கள், இதுபோன்ற மேசைகள், இரண்டு புத்தக அலமாரிகள், ஓர் இருக்கை, ஒரு சாய்வு நாற்காலி, மரத்தட்டு, கட்டில். புத்தக அலமாரிகள் இப்போது சுந்தர ராமசாமி நினைவு நூலகத்தில் உள்ளன. அங்கு இப்போது அவருடைய புத்தகச் சேகரிப்போடு, புதுமைப்பித்தன், க.நா.சு. ஆகியோரின் நூல்களும் உள்ளன. யாரும் அங்கு வந்து படிக்கலாம், ஆய்வு செய்யலாம். நூல்களை எடுத்துச் செல்ல முடியாது.

அவருக்கு என்று ஒரு நிரந்தர அறையும் இருந்தது இல்லை. வெவ்வேறு காலங்களில் மூன்று அறைகளில் இருந்திருக்கிறார். கடைசியாக இருந்தது ஒரு பக்கம் கண்ணாடிச் சுவர்கொண்ட அறை. அங்கு பெரிய மேசை, இரண்டு குறுங்கட்டில்கள், அலுவலகப் பயன்பாட்டுக்கு உரிய சாய்வு நாற்காலி. பழைமையான சாய்வு நாற்காலியும் வீட்டில் உண்டு. அதைப் பிற்காலத்தில் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டார்.

அப்பாவின் சாதனங்கள் - கண்ணன்

1990-களுக்குப் பின்னர் மருத்துவரான என் அக்கா தைலாவின் மேற்பார்வையில் உணவுப் பழக்கங்களை மாற்றி, உடற்பயிற்சியிலும் ஈடுபட்டார். இதனால் பிற்காலத்தில், குறிப்பாக அமெரிக்காவில் இருந்த காலங்களில் மீண்டும் கைகளால் எழுதத் தொடங்கினார். அங்கு உதவியாளர் இல்லை என்பதால், தானே தட்டச்சு பயின்று கணினியில் எழுதவும் தொடங்கினார். எழுத்து தடையின்றி இறுதி வரை தொடர்ந்தது.

நாற்காலியும் பலகையுமாக அவர் எழுதிய முற்காலத்தில் உருண்டைப் பேனா ஒன்றை வைத்திருந்ததாக அம்மா சொன்னார். பின்னர், தட்டச்சு, கணினி என்று மாறிய காலங்களில், வெவ்வேறு பேனாக்கள் இருந்தது உண்டு. ஒரு பேனாவைத் தன்னுடையதாகப் பேணுவதுகூட அவர் இயல்புக்குப் புறம்பானதுதான். பேனா தொழில்நுட்பம் பல மாற்றங்களைக் கண்டுள்ளது. அதற்கேற்ப புதிய பேனாக்களுடன் இருப்பதுதான் அவர் இயல்பு. அவர் பள்ளியில் பயன்படுத்திய மைக்குப்பியில் முக்கி எழுதும் பேனா இப்போது இல்லை. சுராவின் பேனா என்று எதுவும் இல்லை. கடைசியாகப் பயன்படுத்திய பேனா, கலிஃபோர்னியாவில் இருக்கக்கூடும். வீட்டுக்கு அருகிலிருக்கும் சேது லக்ஷ்மிபாய் பள்ளியில்தான் அவர் பயின்றார். பின்னர், அதே பள்ளியில் 1970-களின் பிற்பகுதியில் மூன்று ஆண்டுகள் நானும் படித்தேன். பழைய காலத்து டெஸ்க்குகள் அப்போதும் அங்கு இருந்தன. அவற்றில் மைக்குப்பி வைக்கும் வட்டத் தடம் இருக்கும். இப்போதும் அவை அங்கு உள்ளனவா தெரியவில்லை!

அப்பாவின் சாதனங்கள் - கண்ணன்

வீட்டுக்கு வரும் நண்பர்களும் வாசகர்களும் அவரது அறையை, நாற்காலியை, மேசையை, பேனாவை என எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவது உண்டு. அப்படி எதையும் கண்காட்சிபோல நாங்கள் பேணவில்லை. எனக்கு அதில் விருப்பம் இல்லை. தனது படைப்பைத் தாண்டிய சாதனங்கள் வழி நினைவுகூரப்படுவது அவருக்கு நிச்சயம் உவப்பானதாக இருந்திராது.

வரவேற்பறையில் சு.ரா-வின் பெரிய புகைப்படம் இல்லை என்று வருந்தியவர்கள் உண்டு. நினைவகங்களும் தமிழ் சினிமா பண்பாடும் இதுபோன்ற பல எதிர்பார்ப்புகளை உருவாக்குகின்றன. உணர்ச்சிப் பிழம்பில் முக்கி எழுதப்படும் சர்க்கரைப்பாகுக் கட்டுரைகளுக்கும் இதில் பங்கு உண்டு. அவற்றைப் பூர்த்திசெய்யும் காட்சியகம் அல்ல எங்கள் இல்லம். இலக்கியத்துக்கான தாய் வீடும் அல்ல. அடுத்த தலைமுறைகள் வாழும், தேவைக்கேற்ப மாறிவரும், அகம்.