மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புத்தகங்கள் நம் சிறகுகள் - தமிழச்சி தங்கபாண்டியன்

புத்தகங்கள்  நம் சிறகுகள் - தமிழச்சி தங்கபாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
News
புத்தகங்கள் நம் சிறகுகள் - தமிழச்சி தங்கபாண்டியன்

சந்திப்பு : வரவனை செந்தில் - படங்கள் : கே.ராஜசேகரன்

‘படிப்பு என்பது வேறு, வாசிப்பு என்பது வேறு’ - இந்தப் புரிதலைச் சரியான வயதில் எனக்குள் விதைக்க ஆள் இருந்தது என் பெரும்பேறு. அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்கள் என்பதால், புத்தகம் குறித்து எந்த அச்சமும் எழவில்லை. அப்பா திராவிட இயக்கப் பின்னணியில் வளர்ந்து இருந்ததால், வாசிக்கும் பழக்கத்தின் நன்மைகளை உணர்ந்தே இருந்தார். ஆனால், புத்தக வாசிப்பு குறித்த பெரிய விழிப்புஉணர்வு இல்லாத கிராமத்தில்தான் நான் வளர்ந்தேன். பிற மனிதர்களின் அனுபவங்களும் சொந்த அனுபவங்களுமே வாழ்வில் நாம் கற்கும் உண்மையான பாடம். எல்லா அனுபவங்களையும் நாம் கண்டடைந்துவிட முடியாது. ஆனால், அதைப் புத்தகங்களின் வாயிலாக உணர முடியும் என்பதையும், நமக்கான சிறகுகள் புத்தகத்தின் உள்ளேதான் இருக்கின்றன. அதை எடுத்து அணிந்துகொள்ள, நாம் அதனுள் செல்லவேண்டும்’ என்பதையும் பதின்ம வயதுகளிலேயே உணரவைத்தார் அப்பா.

எங்கள் ஊர் மல்லாங்கிணற்றில் ஒரு கிளை நூலகம் இருந்தது. அதிசயிக்கத்தக்க விதமாய் அதைச் சரியாகப் பராமரிக்கவும் ஆள் இருந்தது. வீட்டைத் தாண்டி ஊருக்குள் மிகப் பிடித்த, நேசிக்கத்தக்க இடமாய் அது இருந்தது. ‘இரும்புக் கை மாயாவி’களும்,  ‘அம்புலிமாமா’ சுமந்து வந்த ‘விக்கிரமாதித்தனின் வேதாளங்களும்’ அங்கேதான் இருந்தார்கள். அதன் பின், எல்லா பெண் பிள்ளைகளுக்கும்போல ரமணிச்சந்திரன், லஷ்மி போன்றவர்களை நோக்கியே கைகாட்டப்பட்டாலும், சங்ககால மகளிரை, அவர்களின் வாழ்க்கைப்பாடுகளைச் சரியாக அறிமுகப்படுத்தியது விருதுநகர் சத்திரியர் மேல்நிலைப் பள்ளி. சங்க இலக்கியங்களை வெறுமனே மனனம் செய்ய மட்டும் படிக்காமல் அதில் கேள்விகளைக் கேட்க அப்பா பழக்கப்படுத்தினார்.

புத்தகங்கள்  நம் சிறகுகள் - தமிழச்சி தங்கபாண்டியன்

சோழர் காலத்தின் மகோன்னதத்தைக் கொண்டாடும் அதே நேரத்தில், ஆநிரைகளைப்போல மகளிரைக் கவர்ந்துவந்து ‘கொண்டி’ என்கிற கொட்டத்தில் அடைத்து, ‘பொது மகளிர்’ ஆக்கிய உள்வரலாற்றையும் அறிந்து வாசிக்க வேண்டுமானால், பாடப் புத்தகங்களைத் தாண்டிய தேடுதல் வேண்டும் என்பதை அறிவுறுத்தினார் அப்பா. இப்படி அறிவுத் தளத்தில் வீட்டில் இருந்தே உந்துசக்தி கிடைத்துக் கொண்டிருக்கும்போது, என்னைச் சுற்றி இருந்த சூழலின் வழியே  நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டார் கலைகள் என வேறொரு வாழ்க்கையும் கிடைத்துக் கொண்டிருந்தது. அதுவே பின்னாளில் என் கவிதை மொழியைப் பாதித்தது.   

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தை மணியம் செல்வனின் அசல் ஓவியங்கள்கொண்ட ஒரு பதிப்பு எங்கள் ஊர் நூலகத்தில் இருந்தது. அதைக் குறிப்பிட்ட நாளில் ஒப்படைக்கும்

புத்தகங்கள்  நம் சிறகுகள் - தமிழச்சி தங்கபாண்டியன்

உறுதிமொழியுடன்தான் அந்த நூலகர் அண்ணன் தருவார். அதுவும்கூட எல்லோருக்கும் கிடைக்காது. பொக்கிஷம்போல பாதுகாப்பார். ‘சாண்டில்யன்’, ‘துப்பறியும் சாம்பு’ என ஹாஸ்யமாகப் படித்துக்கொண்டிருந்தேன். மெள்ள ரமணிச்சந்திரன், இந்துமதி என மென்மையாக எழுதுபவர்களின் பக்கம் திரும்பினேன். உலகமே ரசனையானது, அழகானது என நம்பவைக்கும் மில்ஸ்&பூன் கதைகளில் மூழ்கினேன். அதே சமயம் நாட்டுப்புறக் கதைகளின் மீதும் பெரிய நாட்டம் இருந்தது. கதை விரிக்கும் வேர்களை, அதில் உலாவும் மாந்தர்களை மிக நெருக்கமாக அறிந்து உணர்வதற்கான வாய்ப்புகள் நிறைந்த களம் அது. அன்றிலிருந்து இன்று வரை கி.ராஜநாராயணனைப் பிடிப்பதற்கான காரணமும் அதுதான்.

ன் அம்மா வைணவப் பின்னணியில் இருந்து வந்தவர். எனக்கு ஆண்டாளை அறிமுகம் செய்தவர் அம்மாதான். ராமானுஜர் மீது மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்ததும் அம்மாதான். ஆனால், அப்பாவோ கடவுள் நம்பிக்கை இல்லாதவர். முழுமையாகப் பெரியாரைப் பின்பற்றுபவர். ஆனால், எதைப் படிக்கவும் தடை போட்டதே இல்லை. ‘நீயே படித்து உனக்குச் சரியெனப் பட்டதைப் பின்பற்று’ என்று அளப்பரிய சுதந்திரத்தைக் கொடுத்தவர். ஆண்டாளின் பாசுரங்களை வாசித்து, உள்வாங்கி என் நடனங்களில் இணைத்து ஆடுவதற்கோ, வைணவ நூல்களைப் படிக்கவோ, எந்தத் தடையும் சொன்னது கிடையாது. ஆனால், ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ‘எந்த ஒரு புத்தகத்தையும் உடனடியாகப் படித்துவிட்டு முடிவுக்கு வந்துவிட வேண்டாம்’ என்பதே அது. ‘நீ இரண்டாவது முறை இறங்கும் ஆறு முதலில் இறங்கியது அல்ல’ என்பார்களே... அதைப்போல் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் வாசித்துப் பார்க்கும்போது, அது குறித்து வேறு பல எண்ணங்கள் தோன்றும் என்பார். எதை வேண்டுமானாலும் வாசிக்கலாம், எதைப்  பற்றியும் விவாதிக்கலாம் என்ற உரிமை என் வீட்டில் இருந்தது. அதனால்தான், நான் அப்பாவின் வழியைத் தேர்வுசெய்ய முடிந்தது. வீட்டிலேயே படங்களும் புத்தகங்களும் இருந்தபோதும்கூட கல்லூரியில்தான் பெரியாரும் மார்க்ஸும் முறைப்படி அறிமுகமானார்கள். தி.மு.க மாநாடுகளில் குடும்பத்துடன் கலந்துகொள்ளும்போதெல்லாம் கேள்விப்பட்ட பெயராக இருந்தாலும் பல முக்கியமானவர்களை கல்லூரி முதலாம் ஆண்டில்தான் வாசிக்கத் தொடங்கினேன். புலே, அம்பேத்கர் என வாசிப்பு வேறு தளத்தில் விரிவடைந்தது.

புத்தகங்கள்  நம் சிறகுகள் - தமிழச்சி தங்கபாண்டியன்

வென் மெமரி டைஸ் (When memory dies) என்ற ஏ.சிவானந்தன் எழுதிய புத்தகம், என் ஆய்வு ஒன்றுக்காகத் தேவைப்பட்டது. அதை எவ்வளவோ முயற்சிசெய்து தேடினேன். காரணம், நான் அப்போது ஈழத்தமிழர்கள் குறித்த ஆய்வில் இருந்தேன். பத்மநாப அய்யரிடம் அது இருப்பதாகச் சொன்னார்கள். அவரையும் என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. அதன் முதல் பதிப்பை இன்றும் தேடிக்கொண்டிருக்கிறேன். அதுபோல நாட்டுப்புறக் கதைகளின் தொகுதி ஒன்றைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. கி.ரா. போன்றவர்கள் ஆதங்கப்படுவதுபோல, பல்வேறு  நாட்டுப்புறக் கதைகள் அடங்கிய ஒரு முழுமையான தொகுதி இன்னும் தொகுக்கப்படாமல்தான் இருக்கிறது. டி.ஹெச்.லாரன்ஸின் ‘லேடி சாட்டர்லிஸ் லவ்வர்’ என்ற தடைசெய்யப்பட்ட புத்தகம் ஒன்றைத் ‘தேடோ தேடென’ தேடிக் கண்டுபிடித்து வாங்கினேன். லாரன்ஸின் மற்றொரு புத்தகமான ‘கடிதங்கள்’ என் புத்தகச் சேகரிப்பில் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில் சந்தித்த எஸ்.சண்முகம் அவர்கள் ‘உங்களின் கையெழுத்துடன் லாரன்ஸின் ‘கடிதங்கள்’ புத்தகத்தைப் பழைய புத்தகக் கடையில் வாங்கினேன்’ என்றார். அது எப்படி அங்கே போனது என இன்று வரை எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. வீட்டில் பலவகையான புத்தகங்கள் குவிந்துகிடந்த காலம் அது என்றாலும், எனக்கே எனக்கான புத்தகத்தைக் கல்லூரி முதலாம் ஆண்டில்தான் வாங்கினேன். சர்வோதயா இலக்கியப் பண்ணையில், பெரியநாயகி எழுதிய ‘கவலை’ என்ற புத்தகம். அதை இன்றும் என் சேமிப்பில் பத்திரமாக வைத்திருக்கிறேன். ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்’ எழுதிய ‘தாசிகளின் மோசவலை’ புத்தகத்தையும் முக்கியமான ஒன்றாகக் கருதி சேமித்துவைத்திருக்கிறேன்.ஒஷோவின் எல்லா புத்தகங்களும் எனக்குப் பிடிக்கும். தாவோ குறித்த புத்தகங்கள், பாரதியாரின் படங்கள் மட்டுமேகொண்ட புத்தகம் ஆகியவை என் சேகரிப்பில் எனக்கு மிகமிகப் பிடித்தமான புத்தகங்கள்.

“ஒருமுறை என் உறவினர் வீட்டுக்குத் திடீரெனப் போயிருந்தேன். நானும் திட்டமிடாத, அவரும் எதிர்பார்க்காத சந்திப்பு அது. அங்கு என் புத்தகங்கள் இருந்தன. ‘எஞ்சோட்டுப் பெண் மட்டும்தான் எனக்குப் புரிந்தது’ என்றார் சிரித்துக்கொண்டே. எதிர்பாராதச் சூழலில் எனது புத்தகங்களைப் பார்த்ததில் அப்படி ஒரு மகிழ்ச்சி. எனது அப்பா பற்றவைத்த வாசிப்பு எனும் நெருப்பை நான் என் பிள்ளைகளிடம் கைமாற்றியிருக்கிறேன். அந்த உணர்வு நினைத்துப் பார்ப்பதற்கு அவ்வளவு நிறைவாக இருக்கிறது. என்றும் நின்று சுடர வேண்டும் அது. அறிவு என்ற சுடரைப் பற்றித்தானே வாழ்க்கைப் பாதையில் நடக்க வேண்டும்!