
அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

கொடைக்கானலுக்கு ‘பங்காரு நாயக்கர்’ கதை விவாதத்துக்கு வந்த நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே என்ற கவலை ராமனாதனுக்கு. உடனே முதல்கட்ட சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். அருமையான காரை அனுப்பி, ரயில் நிலையம் அழைத்து வந்தார்கள். என்னை பூ போல சென்னை கொண்டு வந்து சேர்த்தார்கள். சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு. ராமனாதனை அழைத்து, ‘‘உடனே கதை கேட்க ஏற்பாடு செய்யுங்கள். சிகிச்சையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்... அதனால் கதையைக் கேட்டுவிடுங்கள்’’ என்றேன். இயக்குநர், உதவி இயக்குநர், தயாரிப்பாளர் என எல்லோரையும் அழைக்கச் சொல்லிவிட்டேன். இன்னொரு முறை கதை சொல்வதற்கு வாய்ப்பு இருக்குமா என்பது தெரியாது இல்லையா?
வந்தார்கள். யாருக்கும் மனதே சரியில்லை. ‘‘பரவாயில்லை சார்... சிகிச்சை முடிந்ததும் கதையைப் பார்த்துக் கொள்ளலாம்’’ என்றார்கள். நான் விடுவதாக இல்லை. பெரும் தொகையை அட்வான்ஸாகக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு மனவருத்தம் மட்டுமே மிஞ்சிவிடக்கூடாது என்ற எண்ணம் எனக்கு. கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். எல்லாரும் என் எதிரே அமர்ந்து கதை கேட்கிறார்கள். ஊசி விழுந்தாலும் கேட்கும் அமைதி. கதை கேட்பவர்களின் முகங்களில் அவ்வப்போது உணர்ச்சிக் கொந்தளிப்புகள். சில நேரம் கண்ணீர் திரண்டு விழுகிறது.
கதை சொல்லி முடித்ததும் பாரதிராஜா கட்டித் தழுவிக் கொண்டான். ராமனாதன் முகத்தில் பெரும் திருப்தி. விஜயநகரப் பேரரசு காலத்தில், ஆந்திராவில் இருந்து வந்து தமிழகத்தில் குடியேறிய மக்களின் கதை அது. ‘‘தமிழ் சினிமா, இனி பங்காரு நாயக்கருக்கு முன், பங்காரு நாயக்கருக்குப் பின் எனப் பிரிக்கப்படும்’’ என்று சிலாகித்தான் பாரதி.

‘‘இந்தச் சந்தோஷமான நேரத்தில் கொஞ்சம் தண்ணி போடுவோமா?’’ என்கிறேன் நான். ‘‘ஆபரேஷனை வைத்துக் கொண்டா?’’ என பாரதி அதிர்கிறான். ‘‘ஆபரேஷனாவது மண்ணாங்கட்டியாவது... இதைவிட மகிழ்ச்சியான நாள் இல்லை. இதைக் கொண்டாடா விட்டால் எப்படி?’’ என்று ஒரே போடாகப் போட்டேன்.
சில நாட்கள் கழித்து தயாரிப்பாளர் ராமனாதன் என் வீட்டுக்கு வந்தார். ‘‘கொஞ்சம் என்னுடன் வர முடியுமா?” என்றார் தயங்கியபடி.
அவருடன் கிளம்பிச் சென்றேன். அவருடைய கார், லஸ் அருகே ஒரு ஆஞ்சநேயர் கோயிலில் போய் நின்றது. சாமி கும்பிட்டார். தட்சணைத் தட்டில் ஒரு சாவியை வைத்து தீபாராதனை செய்தார். அந்தச் சாவியை எடுத்து என்னிடம் கொடுத்தார்.
‘‘என்ன சார் இது?’’ ஆச்சர்யத்துடன் கேட்டேன். வாசலுக்கு அழைத்துவந்தார். அங்கே புத்தம் புதிய மாருதி கார் நின்றிருந்தது.
‘‘கதை எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு.’’
ராமனாதன் சொல்ல மாட்டார்; செயலில் காட்டுவார். எடுக்காத படத்துக்கு சம்பளமும் கொடுத்து, காரும் பரிசளித்தது அவருடைய பெருந்தன்மை.
பல்வேறு காரணங்களால் அந்தப் படம் தள்ளிப்போனது. சத்யராஜ் கால்ஷீட் இருக்கும் போது, ஸ்ரீதேவி கால்ஷீட் கிடைக்காது. இவர்கள் கால்ஷீட் இருக்கும்போது பாரதிராஜா வேறு ஒரு படத்தில் பிஸியாக இருப்பார். இப்படியே நாட்கள் ஓடின. படம் தள்ளிப்போனது; ஒரு கட்டத்தில் நின்றும் போனது.
பிறகொரு நாள், மேனா தியேட்டரில் ராமனாதன் நின்றுகொண்டிருந்தார். அவரிடம் கார் இல்லை. வேறு நண்பரின் காரில் செல்வதற்காகக் காத்திருந்தார். எனக்கு மனசு கேட்கவில்லை. அவர் கொடுத்த காரில் நான் பயணித்துக் கொண்டிருப்பது கஷ்டமாக இருந்தது. ‘‘இந்தக் காரை எடுத்துக்கொள்ளுங்கள்’’ என்றேன். ‘‘அதெல்லாம் பேசாதீங்க. அது உங்க கதைக்கு நான் செய்த கௌரவம். அது அப்படியே இருக்கட்டும்’’ எனச் சொல்லிவிட்டார். தந்தால் வாங்கிக்கொள்ள மாட்டார் எனத் தெரிந்தது. அந்தக் காரைப் பயன்படுத்த விருப்பமில்லை. உடனே நானும் அதை விற்றுவிட்டேன்.
அன்றைய ஆட்சியாளர் களால் ஆந்திரத்தில் இருந்து விரட்டப்பட்ட மக்கள், ஆறு, மலை, காடு கடந்து தெற்கு நோக்கி வருகிறார்கள். அந்த மக்கள் கூட்டத்தின் ஒரு குழுவில் இரண்டு அழகான பெண்கள் இருக்கிறார்கள். விரட்டி வந்த காவலர்களுக்கு, அந்தப் பெண்களைத் தூக்கிச் சென்றுவிட திட்டம். மக்கள் எப்படி எப்படியோ காப்பாற்றிக் கூட்டி வருகிறார்கள். ஒரு கட்டத்தில், காவலர்கள் அந்த மக்கள் கூட்டத்தைச் சுற்றி வளைத்துவிடுகிறார்கள். பெண்கள் இருவரையும் ஒரு வைக்கோல் போரில் மறைத்து வைக்கிறார்கள். காவலர்களுக்குச் சந்தேகம் வந்து வைக்கோல் போரைப் பிரித்துப் பார்த்துவிட்டால் என்ன ஆவது? தாங்கள் சீரழிக்கப்படுவதைவிட அந்த வைக்கோல் போரிலேயே தங்களைக் கொளுத்திவிடுமாறு அந்தப் பெண்கள் சொல்கிறார்கள். வேறு வழியே இல்லை.
அந்தக் கூட்டத்தில் இருக்கும் பாட்டி ஒருத்தி, அந்தக் காவலர்களிடம், ‘‘இந்த இருட்டில் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், இந்த வைக்கோல் போரைக் கொளுத்தித் தேடிப் பாருங்கள்’’ என்கிறாள். காவலர்கள் வைக்கோல் போரைக் கொளுத்தி அந்த வெளிச்சத்தில் தேடிப் பார்த்துவிட்டு, ‘இல்லை’ எனப் போய்விடுகிறார்கள். பெண்கள் இருவரின் சாம்பல் மட்டுமே எஞ்சுகிறது. அவர்கள் இறந்த இடத்தில் இருந்து, அந்த மக்கள் ஒரு பிடிமண்ணை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்கள். அவர்கள் வீடு கட்டும் மண்ணோடு அதையும் கலந்து கட்டுகிறார்கள். புதிதாக வீடு கட்டுபவர்கள், ஏற்கெனவே அப்படிக் கட்டப்பட்ட வீட்டின் அடி மண்ணை எடுத்துவந்து தங்கள் வீட்டு மண்ணோடு கலந்தபின்னரே வீடு கட்டுவது வழக்கம் ஆனது. மானம் காக்க உயிரைவிட்ட அந்தப் பெண்களைக் குலதெய்வமாக வழிபடும் ஒரு மக்கள் குழுவின் கதைதான் ‘பங்காரு நாயக்கர்’. இது பங்காரு நாயக்கர் கதையின் முன்கதைச் சுருக்கம் மட்டுமே!
இவ்வளவு நாட்கள் கழித்து, அந்தக் கதையைக் கேள்விப்பட்டு அந்த ஸ்கிரிப்ட்டை இப்போது லிங்குசாமி வாங்கிச் சென்றிருக்கிறார். அந்தக் கதை படமாக வந்தால் பிரமாண்டமான ஒரு காவியமாகத் தமிழ் சினிமாவில் என்றும் இருக்கும். அதில் முன்னரே பேசியபடி சத்யராஜ் நடிக்கலாம். ராஜ்கிரண் நடித்தால் நன்றாக இருக்கும். ரஜினி நடித்தால் ஓஹோ! லிங்குசாமியிடம் சொன்னேன். லிங்குசாமிதான் முடிவு சொல்ல வேண்டும். ‘‘கதைக்குச் சொந்தக்காரரான ராமனாதனை மறந்துவிடாதீர்கள்’’ என்பதையும் மறக்காமல் சொன்னேன். பார்க்கலாம்.
சந்திப்பு: தமிழ்மகன்
(ரீல் அல்ல ரியல்)

ராஜாவின் சாமர்த்தியம்!
என் மாமா சௌந்தரராஜன், இந்தியன் வங்கியில் வேலை பார்த்தார். தினமும் சைக்கிளில் வேலைக்குப் போய்விட்டு வீட்டுக்கு வருவார். அப்போது சைக்கிள் எல்லாம் காணக்கிடைக்காத அரிய பொருளாக இருந்தது. அவர் சைக்கிளைப் பூட்டிவிட்டு வீட்டுக்குள் போனதும், இரவில் மாற்று சாவி போட்டுத் திறந்து எடுத்துக்கொண்டு, வைகை ஆற்றுக்கு வந்துவிடுவேன். அங்குதான் சைக்கிள் கற்கும் பயிற்சி. என் பின்னால் ஆறேழு நண்பர்கள் சைக்கிளைப் பிடித்துக் கொள்ள, இரவெல்லாம் ஓட்டிவிட்டு, சைக்கிளை பழையபடி நிறுத்திவிட்டுப் போய்விடுவோம். ‘ஓரம்போ... ஓரம்போ...’ பாட்டு, அதில் இருந்து பிறந்ததுதான். ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ என் முதல் படம். தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் பாடப்பட்ட பாட்டு. என்றோ விளையாட்டாகப் பாடி மகிழ்ந்ததை, நாடே பாடுகிற பாட்டாக மாற்றிக் காட்டியது ராஜாவின் சாமர்த்தியம்.