மற்ற எபிசோடுகள்
Published:Updated:

”இட்டு நிரப்ப முடியாத இடம்!” - ரவிசுப்பிரமணியன்

”இட்டு நிரப்ப முடியாத இடம்!” - ரவிசுப்பிரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
News
”இட்டு நிரப்ப முடியாத இடம்!” - ரவிசுப்பிரமணியன்

படம் :பண்நிறை, ஓவியம் : ஞானபிரகாசம் ஸ்தபதி

மா. அரங்கநாதனை 90-களின் துவக்கத்தில் நான் சந்தித்தேன். அப்போது அவர் நங்கநல்லூரில் குடியிருந்தார். அதற்கு முன்பு எங்களுக்குள் கடிதத்தொடர்பு இருந்தது. அவரது ‘பொருளின் பொருள் கவிதை’ என்ற கட்டுரை நூலை நான் ஏற்கெனவே வாசித்திருந்தேன். புதுக்கவிதைக்கு இலக்கணம்போல கவிதையியல் சார்ந்த அந்தப் புத்தகம், அவரை நேரில் சந்திக்க என்னைத் தூண்டிக்கொண்டிருந்தது. ஒரு மூத்த படைப்பாளியைச் சந்தித்த அனுபவம்போல் அல்லாமல், பழகிய நண்பன் ஒருவனை நீண்ட நாள் கழித்து சந்தித்துத் திரும்பியதுபோல் இருந்தது அந்த முதல் சந்திப்பு. இத்தனைக்கும் அன்று நாங்கள் இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. ஆனாலும், அவர் அப்படி உணரவைத்தார். அவர் படைப்புகளிலும் அப்படி உணரவைக்கும் தன்மை உண்டு. பொதுவாகவே மா.அரங்கநாதன் சுருக்கமாகத்தான் பேசுவார். அப்போது நான் பழகும் எல்லா இலக்கியவாதிகளிடம் ஒரு கோரிக்கை வைப்பேன். கும்பகோணத்தில் உள்ள எங்கள் விடுதியில் வந்து என் விருந்தினராகச் சில நாள்கள் தங்கிச் செல்லவேண்டும் என்று. அதை ஏற்று மா. அரங்கநாதன் தன் நண்பரோடு வந்திருந்தார். நான்கைந்து நாள்கள் தங்கியிருந்து கும்பகோணத்தில் உள்ள கோயில்களையும் அதைச் சுற்றியுள்ள ஸ்தலங்களையும் சுற்றிப் பார்த்தார். அப்போது இன்னும் நெருக்கமாக அவரைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவர் தங்கியிருந்த நாள்களில் தினமும் இரவு வெகுநேரம் அவரோடு பேசிக்கொண்டிருப்பேன். எவ்வளவு கலைநுட்பமும் மனிதநேயமும் வாஞ்சையும் உள்ள மனிதர் இவர் என்று வியந்தேன். எனது சில கவிதைகள் குறித்தும் அவரது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அதன் பிறகு, அவரது ‘முன்றில்’ இதழில்  ‘பிச்சை எடுக்கும் யானை’ என்ற தலைப்பில் என் கவிதை குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஒரு மூத்த படைப்பாளியான அவர், என் கவிதைகள் குறித்து எழுதிய கட்டுரை எனக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது. அது எனக்கு வாய்த்த பேறு. என் கவிதைகள் குறித்த ஒரு விமர்சனக் கூட்டத்தையும் ‘முன்றில்’ சார்பில் அவர் நடத்தினார். அதையும் என்னால் மறக்க இயலாது.

”இட்டு நிரப்ப முடியாத இடம்!” - ரவிசுப்பிரமணியன்

தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் புதுமைப்பித்தனுக்குப் பிறகு வந்த எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள் என்று பட்டியலிட்டால், முதல் பத்துபேருக்குள் இடம்பிடிப்பவர் மா.அரங்கநாதன். மரபின் செழுமையும் நவீனத்துவத்தின் வீச்சும் தனித்த சிந்தனைப் போக்கும் ஒருங்கே அமையப்பெற்ற படைப்பாளி அவர். தமிழ் தத்துவ மரபின் நீட்சி என்று மா.அரங்கநாதனைச் சொல்லலாம். அவரது சிறுகதைகள் அலாதியானவை. அவரிடம் பழகும்போது தென்படும் அதே மென்மையை அவரது பெரும்பான்மையான படைப்புகளிலும் காண முடியும். எல்லோரும் குறிப்பிடுவதுபோல, அவரது எல்லாக் கதைகளிலும் வரும் ‘முத்துக்கருப்பன்’ பாத்திரம் விசேஷமானது. ஒரே பாத்திரத்தை இப்படி வெவ்வேறு வயதுகளில் பயன்படுத்திய தமிழ் எழுத்தாளர்கள் இல்லை. “என்னால் விளக்கிச் சொல்ல முடியாத சில உணர்வுகளை எழுத்தில் கொண்டுவர உதவி செய்கிறவன்தான் இந்த முத்துக்கருப்பன்” என்று அந்தப் பாத்திரத்தைப் பற்றிச் சொல்வார் மா.

”இட்டு நிரப்ப முடியாத இடம்!” - ரவிசுப்பிரமணியன்

அரங்கநாதன். அவரது கதைகள் பக்க அளவில் குறைவானவையே. ஆனால், விவரங்களும் தகவல்களும் விவரணைகளும் நுட்பமானவை. எந்த ஜோடனையும் இல்லாமல் எளிமையாக அவர் சொல்லிச் செல்கிறார். எளிமைதான் ஆனாலும், ஆழமானவை. அதனாலேயே, வாசிப்பை மறுபடி மறுபடி கோரக்கூடியவை. வன்முறையோ போரோ இல்லாத அமைதியான விடுதலை உணர்வை, கனவுகளை மற்றும் மனிதநேயத்தை அவரின் படைப்புகள் அடிநாதமாகக் கொண்டிருந்தன. அதையே அவர் நேர்பேச்சிலும் வலியுறுத்தி வந்தார். தமிழ் மரபின் அடையாளங்களை, பண்பாட்டுக் கூறுகளை வலியுறுத்தும் அவரின் கதைகளில் சித்தர் மரபின் கூறுகளையும் நாம் காண முடியும். பழந்தமிழ் இலக்கியப் புலமை கொண்டிருந்த மா.அரங்கநாதன், நவீனத்துவத்தின் மேலும் நாட்டம் கொண்டவர். போஸ்ட்மார்டனிஸம் போன்ற இசங்களை மனமுவந்து வரவேற்றவர். பக்தி இலக்கியத்தில் நாட்டமிருந்தாலும் வைதீக எதிர்ப்பைக் கைவிடாதவர். வாழ்க்கை பற்றிய விசாரணை, அகவயமாய் கேள்விகளை எழுப்பும் தன்மை, மாயத்தன்மையோடு கூடிய மெல்லிய தத்துவச் சரடு, இளம் படைப்பாளிகளை வளர்த்தெடுக்கும் ஆக்கப்பூர்வமான விமர்சனப்போக்கு போன்றவை மா.அரங்கநாதனின் தனித்தன்மைகள். அவரது ‘வீடுபேறு’, ‘சித்தி’, ‘ஞானக்கூத்து’ போன்ற கதைகள் உலகத்தரம் வாய்ந்தவை.

மிகச் சிறுவயதிலிருந்து நான் பார்த்த ஆங்கிலப் படங்களும், எனது ஊர் நூலகம் மற்றும் கன்னிமரா நூலகத்தில் நான் தேடிப் படித்த புத்தகங்களும், ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பிரசங்கங்களும் என்னை இலக்கியவாதி ஆக்கிற்று என்று சொல்லும் மா.அரங்கநாதன், தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் நாகர்கோவிலுக்கு அருகே உள்ள ‘திருப்பதி சாரம்’ என்ற சிற்றூரில் 1933-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி பிறந்தவர். அவர் பிறந்த காலத்தில் அந்த ஊர், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. பக்தி இலக்கியப் பரிச்சயமுடைய அவரது தந்தையார் மகாதேவன், ஒரு விவசாயி. தாயார் பார்வதியம்மாள் அந்தக் காலத்திலேயே தமிழ் எழுதப் படிக்கக் கற்றவர். நான்காம் வயதில் ஆரம்பக் கல்வியை திருப்பதி சாரத்தில் உள்ள பஞ்சாயத்துப் பள்ளியில் பயின்ற மா.அரங்கநாதன், தன் ஒன்பதாம் வயதில் மேல்நிலைக் கல்வி பயில, நாகர்கோவில் எஸ்.எம்.ஆர்.வி பள்ளியில் சேர்ந்தார். தமிழின் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவராகத் திகழும் சிவசுப்பிரமணியன் என்ற எம்.எஸ். இவரது அண்ணன். மா.அரங்கநாதனுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசராகப் பணி புரியும் மகாதேவன் என்ற மகனும் பாண்டிச்சேரியில் வாழும் செல்வி என்ற மகளும் உண்டு.

”இட்டு நிரப்ப முடியாத இடம்!” - ரவிசுப்பிரமணியன்

பள்ளிப் படிப்பு முடிந்த கையோடு சென்னைக்கு வந்த மறுநாளே உறவினர் ஒருவரின் உதவியால் சென்னை மாநகராட்சியில் 18-ம் வயதில் வேலைக்குச் சேர்கிறார். அதன் பிறகு, 40 ஆண்டுகள் அங்கு சுகாதாரத் துறையில் எழுத்தராகப் பணிபுரிந்து ஓய்வுபெறுகிறார். பணிபுரிந்த இடம் தொடங்கி அவருக்கு நண்பர்கள் கிடைத்ததெல்லாம் அவரது எழுத்தின் மூலமே. பள்ளிக் காலத்தில் அவருக்குக் கிடைத்த ஒரே இலக்கிய நண்பர் எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பி. இருவரும் ‘போடா வாடா’ என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு நெருங்கிய நண்பர்கள். ஒய்.எம்.சி.ஏ. பக்தவச்சலம், மருத்துவர் பஞ்சாட்சரம் போன்றோர் அவரோடு பணியாற்றிவர்கள்.

அவருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டு. தொழில் முறையாக அல்லாமல் நண்பர்களுக்கு ஆர்வத்துடன் ஜாதகம் பார்த்துச் சொல்வார். என்னைப் போன்ற நண்பர்கள் நீண்ட நாட்கள் கழித்துச் சந்திக்கும்போது கிரக பலன்கள் குறித்த விவரத்தோடு பலன்களைச் சொல்வார். நியூமராலஜியும் அவருக்கு அத்துப்படி. ஜோதிடத்தில் 90 சதவிகிதம் வான சாஸ்திரம்தான் என்று அடிக்கடி சொல்வார். சூரியன் வந்தா சுடுது. நிலவு வந்தா குளிருது இல்லையா. அத நம்புறோம், உணர்றோம் இல்லையா, அதுபோல ஒவ்வொரு கிரகமும் வரும்போது இன்ன இன்ன பலன்கள் வரும் என்பது உண்மை என்று எளிமையாக விளக்குவார்.

”இட்டு நிரப்ப முடியாத இடம்!” - ரவிசுப்பிரமணியன்



பள்ளியில் படிக்கும்போதே ‘கல்கண்டு’ இதழில் ‘கோபுவின் கதை’ என்ற பெயரில் ஒரு கதை எழுதி, தமிழ்வாணனிடமிருந்து மணியார்டர் வழியாக இரண்டு ரூபாய் வெகுமதி பெற்றிருக்கிறார். “அதைச் சொன்னதும் என் தமிழாசிரியர் பிச்சைக்கண்ணு அடவியார் புன்னகை மட்டும் புரிந்தார். கணித ஆசிரியரோ  ‘போதுமே வேறென்ன வேண்டும்?’ என்று சொல்லி நிறுத்திக்கொண்டார் என்று நினைவுகூர்வார்.

ஆனாலும், அவர் தனது முதல் கதையாகக் குறிப்பிடுவது நாரணதுரைக் கண்ணன் நடத்திய ‘பிரசண்ட விகடனில்’ 1951-ல் எழுதிய ‘எரிமலை’ என்ற கதையைத்தான்.  அது பிரசுரமானதிலிருந்து இதுவரை 90 சிறுகதைகள், 46 கட்டுரைகள், இரண்டு நாவல்கள் என எழுதிய மா.அரங்கநாதன், ‘முன்றில்’ என்ற சிறுபத்திரிகையையும் நடத்தினார். முதலில் க.நா.சுவும் பின்னர் அசோகமித்திரனும் இதற்குச் சிறப்பாசிரியர்களாக இருந்துள்ளனர். சிறுபத்திரிகை வரலாற்றில்  ‘முன்றிலு’க்கும் அது முன்னின்று நடத்திய கருத்தரங்குகள், கூட்டங்களுக்கும் வெளியிட்ட புத்தகங்களுக்கும் ஒரு பங்கு உண்டு.

‘உண்மையோடு உறவுகொள்ளாத எதுவும் கவிதை ஆவது இல்லை. கவிதைக்கு நோக்கம் என்ற ஒன்று இருந்துவிட்டால், அது நிறைவேறியவுடன் இல்லாமல் போகும்’ என்று கவிதையியல் குறித்து விரிவாக கட்டுரைகள் எழுதிய மா.அரங்கநாதன் கவிஞர் இல்லை; ஒரு கவிதைகூட அவர் எழுதியது இல்லை. அதுதான் அரங்கநாதன்.

தன்முனைப்பு சிறிதும் இன்றி, ஆரவாரமற்று அமைதியான வழியில் படைப்புகளைத் தந்து மறைந்திருக்கும் மா.அரங்கநாதன், தமிழ் இலக்கிய வெளியில் உண்மையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளார். அந்த வெற்றிடம் இன்னோர் ஆளுமையால் இட்டு நிரப்பக்கூடியது அல்ல.