மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடல் தொடாத நதி - 8 - பாதி சாப்பாட்டில் எழுந்த விஜயகாந்த்!

கடல் தொடாத நதி - 8 - பாதி சாப்பாட்டில் எழுந்த விஜயகாந்த்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடல் தொடாத நதி - 8 - பாதி சாப்பாட்டில் எழுந்த விஜயகாந்த்!

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

துரையில்,  எங்கள் வீட்டின் அருகேதான் ராஜாஜி பொது மருத்துவமனை. அந்த மருத்துவமனையின் சுற்றுச் சுவரில் ஒரு பெரிய ஓட்டை இருக்கும். சொந்தக்காரர்கள் யாராவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அந்த ஓட்டை வழியாகத்தான் குரல் கொடுப்பார்கள். ‘‘கொஞ்சம் காப்பித் தண்ணி கொடுத்தனுப்புமா’’, கொஞ்சம் சுடுதண்ணி கொடுத்தனுப்புமா’’ என அம்மாவிடம் சொல்வார்கள். நான் அந்த ஓட்டை வழியாகவே உள்ளே தாவிக்குதித்து கொண்டுபோய் கொடுத்துவிட்டு வருவேன்.

அந்த அனுபவங்கள்தான் நான் இயக்கிய ‘அகல்விளக்கு’ படத்தில் பயன்பட்டன. அதில் வரும் மருத்துவமனைக் காட்சிகளில், ஷோபா ரகசியமாக நோயாளிகளுக்கு இட்லி விற்பார். மருத்துவமனையில் உணவு விற்பனை செய்வது குற்றம். ஷோபா ஒரு சின்னப் பையில் இட்லி பொட்டலங்களை வைத்துக்கொண்டு ‘‘ரெண்டு இட்லி அஞ்சு ரூபா... நாலு இட்லி பத்து ரூபா’’ என முணுமுணுத்தபடியே போய்க்கொண்டிருப்பார். தேவைப்படும் நோயாளிகள் இட்லி வாங்கிக்கொள்வார்கள். மதுரை மருத்துவமனை அனுபவத்தில் உருவாக்கிய காட்சிதான் அது.

கடல் தொடாத நதி - 8 - பாதி சாப்பாட்டில் எழுந்த விஜயகாந்த்!

விஜயகாந்தின் முதல் படம் ‘தூரத்து இடி முழக்கம்’ என்றாலும், நான் எடுத்த ‘அகல்விளக்கு’ என்ற படம்தான் அவர் நடித்து முதலில் வெளியானது. விஜயகாந்தின் இயற்பெயர் விஜய்ராஜ். அவருடைய அண்ணன் செல்வராஜ். அவர் என்னுடன் படித்தவர். சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த விஜியை ஏதாவது படத்தில் பயன்படுத்திக்கொள்ளுமாறு சொல்லியிருந்தார். ‘அகல்விளக்கு’ படத்தில் விஜிதான் ஹீரோ என முடிவுசெய்துவிட்டேன். படத்தின் தயாரிப்பாளருக்கோ, அப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த  ‘ரயில் பயணங்களில்’ படத்தில் நடித்த ரவீந்திரனை கதாநாயகனாகப் போட வேண்டும் என்று விருப்பம்.

மதுரையில் முதல்நாள் படப்பிடிப்பு. நல்ல நேரம் என்று மத்தியானம் 12.30 மணியைக் குறித்துக்கொடுத்திருந்தார்கள். காலையிலேயே வந்துவிடுவதாகச் சொன்ன ஷோபா, 12 மணி ஆகியும் வரவே இல்லை. தயாரிப்பாளர் உற்சாகமாகிவிட்டார். அப்படியே ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு, இன்னொரு நாள் ரவீந்திரனை வைத்துப் படப்பிடிப்பை ஆரம்பித்து விடுவதாகத் திட்டம் போட்டிருந்தார் அவர்.

நான், ‘‘ஷோபா வரட்டும். அதற்குள் எல்லோரும் மதிய சாப்பாட்டை முடித்துவிடுங்கள்’’ என அனுப்பிவைத்தேன். எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஷோபா வந்துவிட்டார். சென்னையில் இருந்து காரில் பயணம். ‘‘சாரி சார். திருச்சியில பெரிய ட்ராஃபிக் ஜாம்’’ என்றார்.

தயாரிப்பாளர், ‘‘நல்ல நேரம் முடிவதற்குள் ஷோபாவை வைத்து ஒரே ஒரு ஷாட் எடுத்து விடுங்கள்’’ என்றார். அப்போதும் அவருக்கு ஷோபா காட்சியை மட்டும் எடுத்துவிட்டு, விஜியை கழற்றிவிடுவதுதான் திட்டம். நான் விடுவதாக இல்லை. சாப்பிட்டுக்கொண்டிருந்த விஜியை உடனே அழைத்துவரச் சொன்னேன். அவரும் பாதி சாப்பாட்டில் எழுந்து, அப்படியே கையைக் கழுவிக்கொண்டு ஓடிவந்தார். அதில் விஜயகாந்த்துக்கு ஒரு நல்ல அரசியல் தலைவரின் வேடம். அந்தப் படம் ஓடவில்லை என்றாலும், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க ‘அகல்விளக்கு’ படம்தான் காரணம்.

அந்த நேரத்தில் விஜயகாந்தின் நண்பர், இப்ராகிம் ராவுத்தர் ஒரு பத்திரிகையில் இப்படிச் சொல்லியிருந்தார். ‘‘விஜயகாந்த் நடிக்க வந்த புதிதில் மிகவும் சிரமப்பட்டார். பாதி சாப்பாட்டில் எல்லாம் எழுப்பி நடிக்கக் கூப்பிடுவார்கள்.’’ எனக்கு அதிர்ச்சி. விஜிக்கு போன் போட்டு, ‘‘என்ன இப்படி சொல்லியிருக்கிறார்’’ என்றேன். ‘‘அண்ணே, அவனை உடனே உங்ககிட்ட பேசச் சொல்றேன்’’ என்றார். சில மணி நேரத்திலேயே இப்ராகிம் ராவுத்தர் லைனில் வந்தார். ‘‘அன்று என்ன நடந்தது என்று உனக்குத் தெரியுமா?’’ என விளக்கினேன். ‘‘இவ்வளவு நடந்திருக்கு... எனக்குத் தெரியாமப் போச்சுண்ணே... சாரிண்ணே... தெரியாம சொல்லிட்டேன்’’ என்றார்.

பிரபலங்களுக்கு ஆதரவாக யாராவது எதையாவது சொல்லப் போய், அது எங்கே போய் முடியும் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்.

விஜயகாந்துடன் அடுத்து நான் பணியாற்றிய படம், ‘சின்னக் கவுண்டர்’. ஆனந்தி ஃபிலிம்ஸ் நடராஜன் எடுத்த படம். அந்தப் படத்தின் கதை விவாதத்துக்காக, அதன் படப்பிடிப்பு முடிகிற வரை உட்லண்ட்ஸில் எனக்கு ஒரு அறை போட்டு வைத்திருந்தார் நடராஜன். கதையின் மீது அதீத கவனம் செலுத்தும் அற்புதமான தயாரிப்பாளர்களில் ஒருவர் அவர்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போதும் அதே போல ஒரு சிக்கல். யாரோ, விஜயகாந்தின் மனதைக் கலைத்துவிட்டார்கள். படத்தின் காட்சிகள் எல்லாம் ஹீரோயினைச் சுற்றியே போய்க்கொண்டிருப்பதாகவும், விஜயகாந்துக்கு முக்கியத்துவம் குறைவாக இருப்பதாகவும் சொல்லிவிட்டார்கள். பொள்ளாச்சி ஷூட்டிங்கில் இருந்து நடராஜன் போன் செய்தார். ‘‘அண்ணே, கொஞ்சம் வந்துட்டுப்போங்க. இங்க இப்படி ஒரு ப்ராப்ளம் ஓடிக்கிட்டு இருக்கு’’ என்றார்.

கடல் தொடாத நதி - 8 - பாதி சாப்பாட்டில் எழுந்த விஜயகாந்த்!

நான் மைசூரில், ஒரு கன்னடப் பட ஷூட்டிங்கில் இருந்தேன். கன்னடத் தயாரிப்பாளரிடம் விஷயத்தைச் சொல்லி, கார் எடுத்துக்கொண்டு பெங்களூர் வந்து, காரை அங்கேயே நிறுத்திவைக்குமாறு சொல்லிவிட்டு, அங்கிருந்து கோயமுத்தூருக்கு ஃப்ளைட் பிடித்தேன். கோயமுத்தூர் ஏர்போர்ட்டில் நடராஜன் காத்திருந்தார். அவருடைய காரில் பொள்ளாச்சியில் ஷூட்டிங் ஸ்பாட்டில் போய் இறங்கினேன்.

விஜயகாந்துக்கு என் மீது எப்போதும் நல்ல மரியாதை. ‘‘என்னண்ணே திடீர்னு?’’ என்றார்.

லஞ்ச் டயம். மெல்ல பேச்சுக்கொடுத்து, ‘‘ ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ யார் நடித்த படம்?’’ என்றேன்.

‘‘எம்.ஜி.ஆர் படம்... என்னண்ணே தெரியாத மாதிரி கேக்கறீங்க?”

‘‘இல்ல... அது, பானுமதி படம்.’’

‘‘பானுமதி படம்னு எப்படிண்ணே சொல்ல முடியும்? எம்.ஜி.ஆர் படம்தாண்ணே!’’

‘‘இல்லப்பா... அந்தப் படத்தில் பானுமதி 23 சீன்ல வர்றாங்க. எம்.ஜி.ஆர் 18 சீன்லதான் வர்றாரு.’’

விஜிக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் எனப் புரிந்துவிட்டது. அதன்பிறகு ‘சின்னக் கவுண்டரி’ல் விஜிக்கு இருக்கும் முக்கியத்துவத்தை விளக்கினேன். விஜி ஹேப்பி.

மறுபடி கார் எடுத்துக்கொண்டு கோயமுத்தூர் வந்து, பெங்களூர் ஃப்ளைட் பிடித்து, அங்கு நிறுத்தியிருந்த காரை எடுத்துக்கொண்டு மைசூர் வந்து சேர்ந்தேன். கூட இருப்பவர்கள் என ஒரு கோஷ்டி சினிமாவில் உண்டு. எல்லா இடங்களிலும் உண்டு என்பது வேறு விஷயம். யாரையோ குஷிப்படுத்த எதையோ சொல்லப் போய், அது விபரீதமாக முடியும். அவர்கள் படுத்துகிறபாடு எப்படி எல்லாம் இருக்கும் என்பதற்காகச் சொன்னேன்.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)

டீச்சர் கதைகள்!

நான் படித்த காலத்தில் பள்ளியில் இந்தி வகுப்பு ஏற்படுத்தப்பட்டது. எங்களுக்கோ இந்தி வகுப்பு என்றால் எட்டிக் கசப்பு. அந்த வயதுக்கே உரிய குறும்புகளும் இருந்தன. இந்தி டீச்சர் பாடம் நடத்தும்போது, அவருடைய சேலை விலகி, இடுப்பு தெரிந்தது. போர்டில் ஏதோ எழுதிவிட்டு, ‘‘செல்வராஜ், தெரியுதா?’’ என்றார். ‘‘நல்லா தெரியுது’’ என்றேன். பையன்கள் எல்லோரும் சிரித்துவிட்டார்கள். டீச்சருக்குப் புரிந்துவிட்டது. ஆனாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல், ‘‘சரி, உட்கார்’’ என நாசூக்காக முந்தானையைச் சரி செய்தபடி மேற்கொண்டு பாடம் நடத்த ஆரம்பித்தார். அந்த டீச்சர் என்னை ஒன்றுமே சொல்லவில்லை. அடுத்த கணமே எனக்குக் குற்ற உணர்ச்சியாகிவிட்டது. என்னுடைய பெரும்பான்மையான கதைகளில் எப்போதும் ஒரு டீச்சர் கேரக்டர் வரும். அவர்களைப் பெருமைப்படுத்துவதாகவும் அது இருக்கும். ‘அன்னக்கிளி’, ‘புதிய வார்ப்புகள்’, ‘கடலோரக் கவிதைகள்’ எனப் பல படங்களை உதாரணம் சொல்லலாம்.