
கவிதை: வெய்யில்
நீ நெற்றியில் இட்டிருக்கும்
வெண்புள்ளி - அது
ஒரு மானினுடையது, சினையாயிருக்கிறது
அதன் வயிற்று சிறு ரத்தத் துண்டம் நான்
புல்லின் நறுஇதழ்கள் நீ

கீழ் இமையில் நீ வளைத்திருக்கும்
கருமை
முரட்டுப் பன்றியின் வண்ணம்
அதன் நெஞ்சில் பாய்ந்திருக்கும் முள் நான்
சுற்றிலும் உன் ஞாபகத்தின் சீழ்
உன் நாசியின் சிறு பள்ளத்தில் குந்தியிருக்கும்
கல்லின் நீலம் - அது
நூற்றாண்டு ஆமையொன்றின் கனவாலானது
தொல்மீனின் எலும்புக்கூட்டுள் பூத்த
கடற்தாமரை நான் - அதைச்
சிதைத்து நடனமிடும் கொடுங்கயலின் வால் நீ
தலைசுற்றிக் கவிழ்ந்த அரளிப்பூவென
உன் இடுப்புப் பாவாடையின் பித்த மஞ்சள்
இன்னும் பிறக்காத
பிரபஞ்சத்தின் வானத்துக்கு உரியது - அதில்
இதய வடிவில் மிதந்து கனலும் எரிகற்கள் நான்
விழுங்கக் காத்திருக்கும் கருந்துளைகள்
என் உன் காமம்
உன் உதட்டுக்கு எழுதிய சிவப்பு
கருணை பெருகும் ஆந்தையின் செங்கண்கள்
கொடுங்கோலரசின் பலிபீட வண்ணம்
நானிப்போது
காட்டில் அழுகும் மிருக வாடை, தண்ணென்ற மழை
பிணந்தின்னிப் புள் உன் ப்ரியம்
தாபமோ சக்கரவாகம்
நீண்ட நம் கலவிப்பொழுதுகளின் கண்ணீரில் நீந்தி
முடிவற்ற உன் அடிவானத்துக்குத் துடுப்பு வலிக்கிறேன்
இது மயக்கத்தில் யாரோ பாடும் ஆலோலம்
ஆழியே.. அடிவானே... ஆலோலமே...