Published:Updated:

ஆலடி பஸ் - சிறுகதை

ஓவியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓவியம்

எந்தச் சத்தத்தையும் பொருட்படுத்தாமல் கண்டக்டர் ‘`டிக்கெட்... டிக்கெட்...’

``கொஞ்சம் நவுந்து குந்து'' என்று வடக்கிருப்புக்காரி சொன்னாள்.

``ஆளு வருது!'' பிரியங்கா சொன்னாள்.

``ஆளு வரப்ப எந்திரிச்சுக்கிறேன். இப்ப நவுந்து குந்து.''

``கடக்கிப் போயிருக்காங்க. இப்ப வந்துடுவாங்க.''

``பஸ் ஒங்க ஊட்டுதா?''

``கவர்மென்ட்டுது.''

``அப்பறம் என்னா... நவுந்து குந்து.''

``ஆளு வருதுன்னு ஒனக்கு எத்தன வாட்டி சொல்றது? வேற எடம் பாத்து குந்து.''

``ஆளு வரப்ப வரட்டும். நீ நவுந்து குந்து. இல்லன்னா வழிய வுடு'' என்று வடக்கிருப்புக்காரி முறைப்பது மாதிரி சொன்னாள்.

ஓவியம்
ஓவியம்

இரண்டு ஆள்கள் உட்காரக்கூடிய சீட்டில் முதலில் பிரியங்கா உட்கார்ந்திருந்தாள். பக்கத்தில் ஜன்னலையொட்டியிருந்த இடத்தில் ஒரு கைப்பையை வைத்திருந்தாள்.

வடக்கிருப்புக்காரி ``வழியைவிடு'' என்று கேட்டதும், வழியை விடக் கூடாது என்பது மாதிரி முன் சீட்டில் இருந்த கம்பியை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டாள். அவள் கையை எடுத்தால்தான் மற்ற ஆள் உள்ளே போக முடியும். பிரியங்காவின் கையைத் தள்ளிவிட்டு உள்ளே போக முயன்றாள் வடக்கிருப்புக்காரி. குறுக்கே வைத்த கைகளை லேசாகக்கூட பிரியங்கா தளர்த்தவில்லை. பிரியங்காவின் கைகளை விலக்கிப்பார்த்தாள். முடியவில்லை.

கோபத்தில் ``என்னா ஊரு போவணும்?'' என்று கேட்டாள் வடக்கிருப்புக்காரி.

வேண்டா வெறுப்பாக பிரியங்கா சொன்னாள், ``ஆலடி.''

``நான் வடக்கிருப்பு போவணும். அம்மாம் தூரம் நின்னுக்கிட்டுப் போவ முடியாது. இந்தக் கூட்டத்துல நீ நாலாவது ஸ்டாப்புத்தான. செத்த நவுந்து குந்தனாத்தான் என்ன?'' என்று வடக்கிருப்புக்காரி கேட்டாள்.
``பஸ்ஸுல வேற எடமே இல்லியா?''

``இருந்தா நான் எதுக்கு ஒங்கிட்ட வந்து தொங்கிக்கிட்டு நிக்குறன்?''

வடக்கிருப்புக்காரி கோபமாகச் சொன்னதை பிரியங்கா காதில் வாங்கவில்லை. அவளைப் பார்க்க விரும்பாத மாதிரி பஸ்ஸுக்கு வெளியே பார்த்தாள். கைப்பையைக் கொடுத்து, `இடம் பிடித்து வை' எனச் சொல்லிவிட்டுப் போன டீச்சர் வருகிறாளா என்று பார்த்தாள். பஸ் ஏறுவதற்காக  இங்கும்  அங்குமாக   ஓடிக்கொண்டிருந்த கூட்டமும், பஸ் ஏறுவதற்காகக் காத்திருந்த கூட்டமும்தான் தெரிந்தது. டீச்சர், கண்களில் படவில்லை.

``ஆள் வருதா... ஆள் வருதா?'' என்று வடக்கிருப்புக்காரியோடு இதுவரை எட்டு ஒன்பது பேருக்குமேல் கேட்டுவிட்டார்கள். இன்னும் எவ்வளவு பேர் வந்து கேட்பார்களோ தெரியாது. `சீக்கிரமாக டீச்சர் வந்துவிட்டால் போதும்' என்று பிரியங்கா நினைத்தாள்.

எப்போதுமே அவளுக்கு எட்டு தேதிகளுக்குப் பிறகுதான் பீரியட் வரும். இந்த மாதம் எட்டு நாள்களுக்கு முன்பே வந்துவிட்டது. காலையிலேயே தெரிந்திருந்தால் வீட்டிலேயே இருந்திருப்பாள். மதியம் 2 மணிக்குதான் விஷயம் தெரிந்தது. உடனே போய் முதலாளியிடம் ``அவசரமாக வீட்டுக்குப் போக வேண்டும்'' என்று சொன்னாள்.

``எதுக்கு?'' என்று நூறுமுறைக்குமேல் கேட்டார்.

``சும்மாதான் சார்'' என்று சொல்லி மழுப்பினாள்.

ரொம்பவும் கெஞ்சிய பிறகு, ``6 மணிக்குப் போ'' என்று சொன்னார்.

தான் வேலை பார்க்கும் ஜெராக்ஸ் கடை முதலாளியின் மீது அவளுக்கு அளவுகடந்த கோபம் உண்டாயிற்று. தினமும் ராத்திரி 9 மணிக்குதான் விடுவான். அவனுடைய குணம் தெரிந்து அதிகமாக லீவ் போட மாட்டாள். முன்கூட்டியே வீட்டுக்குப் போகிறேன் என்றும் சொல்ல மாட்டாள்.

இன்று பிரச்னை என்பதால்தான் `வீட்டுக்குப் போகிறேன்' என்று கேட்டாள். அதற்கே நான்கு மணி நேரம் கழித்துதான் அனுப்பினார். மற்ற மாதங்களைவிட இந்த மாதம் என்ன காரணத்தினாலோ பீரியட் அதிகமாகவே வெளிப் பட்டது. தலைவலியும் அதிகமாக இருந்தது. `நின்றுகொண்டே இருந்தது காரணமாக இருக்குமோ!' என யோசித்தாள்.

வடக்கிருப்புக்காரி, கையில் வைத்திருந்த இரண்டு பைகளையும் உள்ளடக்கினாற்போல் பிரியங்காவின் காலையொட்டி வைத்தாள்.

ஒரு பை சாய்ந்து பிரியங்காவின் காலில் விழுந்தது. வெடுக்கென காலை இழுத்துக்கொண்டு பையை நகர்த்திவிட்டு ``பைய கொண்டாந்து காலு மேலதான் வெப்பியா?'' என்று கேட்டாள். பிறகு, காலை முன்புபோல் வைத்தாள்.

அப்போது பை மறுபக்கம் சாய்ந்து விழுந்தது. வடக்கிருப்புக்காரிக்குக் கோபம் வந்துவிட்டது.

``எதுக்கு காலால பைய ஒதைக்கிற?'' என்று கேட்டு முறைத்ததோடு, பையை முன்புபோல் நிமிர்த்தி வைத்தாள். அப்போது பின் படிக்கட்டு வழியாக பஸ்ஸுக்குள் ஏறி வந்த ஒரு பெண், `உட்கார இடம் இருக்கிறதா?' என அங்கு இங்கும் பார்த்தாள். வரிசையாகக் கம்பியைப் பிடித்தபடி ஆள்கள் நின்றுகொண்டிருந்தனர். ஒவ்வோர் ஆளாகப் பார்த்த அந்தப் பெண்ணின் கண்களில், பிரியங்கா உட்கார்ந்திருந்த இடத்துக்குப் பக்கத்தில் இடம் இருப்பது தெரிந்தது. பல ஆள்களை நெட்டிக்கொண்டும் இடித்துக்கொண்டும், ``நவுறுங்க... வழிவுடுங்க!'' என்று சொல்லிக்கொண்டும் பலரின் கால்களை மிதித்துக்கொண்டும் படாதபாடுபட்டு வந்து, ``ஆளு வருதா?'' என்று அவசரமாகக் கேட்டாள்.

`ஆமாம்' என்பது மாதிரி பிரியங்கா தலையை மட்டும் ஆட்டினாளே தவிர, வாயைத் திறந்து பேசவில்லை. அந்தப் பெண்ணைப் பார்க்கவும் இல்லை.

``ஆளு வரமுட்டும் செத்த குந்தட்டா? நிக்க முடியல. ஒரே நெரிசலா இருக்கு. தல கிறுகிறுப்பா இருக்கு'' என்று அந்தப் பெண் சொன்னாள்.

அவள் சொன்னதற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது மாதிரி பிரியங்கா பஸ்ஸுக்கு வெளியே பார்த்தாள். அவளுடைய கண்கள் கைப்பையை வைத்து விட்டுப் போன டீச்சரைத் தேடின. குறுக்கும் நெடுக்குமாக ஆள்கள் நடந்துகொண்டிருப்பது தெரிந்ததே தவிர, டீச்சர் மட்டும் கண்களில் பட வில்லை. டீச்சர் மீது பிரியங்காவுக்குக் கோபம் வந்தது. `எத்தனை பேருக்குதான் பதில் சொல்லி தொலைப்பது!' என்று எரிச்சலானாள். `நான் இருக்கும் நிலையில் இந்தத் தொந்தரவு வேறா' என்று நினைத்தபோது, அந்தப் பெண் சொன்னாள், ``வயசு வரமுற கெடயாது. என்னா காலமோ இது! கல்யாணமாயிடிச்சா?'' என்று கேட்டாள்.
``எதுக்குக் கேக்குகிற?''

``சும்மாதான்.''

``அத தெரிஞ்சுக்கிட்டு நீ என்ன செய்யப்போற?''

``எப்ப கல்யாணச் சோறு போடுவன்னு கேக்கத்தான்.''

அந்தப் பெண் எந்த அர்த்தத்தில் கேட்டாள் என்பது தெரிந்த மாதிரி பிரியங்கா, முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள். அப்போது வடக்கிருப்புக்காரி சொன்னாள், ``முகத்த பாத்தாலே தெரியுது. ஊரக்கூட்டித்தான் பாப்பா சோறு போடும்னு. நான் சொல்றது பலிக்குதா இல்லியான்னு பாரு.''

பீரியட் தொல்லை, தலைவலி என நொந்துப் போயிருந்த பிரியங்காவுக்கு, சரியான கோபம் வந்துவிட்டது. ``எனக்குக் கல்யாணம் ஆவாட்டிப் போவுது. நீ ஒண்ணும் எனக்கு மாப்ள தேடி அலய வாணாம்'' என்று கடுமையான குரலில் சொன்னாள்.

``நீ எதுக்கு தேங்கா ஒடைக்கிற மாதிரி ஒவ்வொரு வார்த்தையையும் பேசுற?''

பிரியங்காவையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த வடக்கிருப்புக்காரிக்கு, ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. முகத்தைக் கோணிக் காட்டிவிட்டு, ``செத்த முன்னாடி வந்து குந்துனதுக்கே இம்மாம் சிலுப்பு சிலுத்துக்குது. சொந்த பஸ்ஸா இருந்தா இன்னும் எம்மாம் சிலுத்துக்குமோ! அது ஆண்டவனுக்குத்தான் தெரியும்'' என்று சொன்னதுதான்.

``என்னா சிலுத்துக்கிறாங்க... வந்ததிலிருந்து நானும் பாத்துக்கிட்டிருக்கன், என்னமோ பெரிய இதுமாதிரி பேசிக்கிட்டிருக்க. நீ முன்னால வந்து சீட்ட புடிச்சிவெச்சிருந்து, நான் பின்னால வந்து கேட்டா வுடுவியா?'' என்று பிரியங்கா கோபமாகக் கேட்டாள்.

``வுடுவன்'' என்று இறுமாப்புடன் வடக்கிருப்புக்காரி சொன்னாள்.

``ஆளப் பாத்தாலே தெரியுது'' நக்கலாகச் சொன்னாள் பிரியங்கா.

``சீல கட்டியிருக்கும்போதே என்னா தெரியுது ஒனக்கு?'' என்று சீண்டுவது மாதிரி வடக்கிருப்புக்காரி கேட்டாள்.

``எது தெரிஞ்சா எனக்கென்ன? செத்த இடிக்காம தள்ளியே நில்லு. ஆம்பள நாயிவோ வந்து வந்து இடிக்கிற மாதிரியே நீயும் மேல மேல இடிச்சுக்கிட்டு நிக்குற!'' என்று சொன்னாள்.

பிறகு, அலுப்பும் சலிப்புமாக, ``பைய கொடுத்திட்டுப் போன டீச்சரு எங்கதான் போய்த் தொலைஞ்சாங்களோ தெரியலை. நானே பெரிய தலவலியில இருக்கேன். இதுல ஊர் சனியன் கிட்டயெல்லாம் சண்ட வாங்க வேண்டியிருக்கு; பேச்சு கேக்க வேண்டியிருக்கு'' என்று பிரியங்கா சொன்னதுதான், சட்டெனச் சண்டைக்குப் பாய்ந்தாள் வடக்கிருப்புக்காரி.

``வாய அடக்கிப் பேசு. யாரப் பாத்து சனியன்னு சொல்ற?''

``ஒன்ன எதுக்கு நான் சனியன்னு சொல்லப் போறன்? நான் இருக்கிற நெலம தெரியாமப் பேசிக்கிட்டு'' என்று சொல்லிவிட்டு, சீட்டில் ரத்தக்கசிவு இருக்குமோ என்று கவலைப்பட்டாள். தான் வேலைசெய்யும் ஜெராக்ஸ் கடை முதலாளியின் மீது அவளுக்குக் கோபம் உண்டாயிற்று. சாதாரண நாளாக இருந்தால் கிழவிகள், கைப்பிள்ளைக்காரிகள் பஸ்ஸில் கம்பியைப் பிடித்துக்கொண்டு வந்தால் தானாகவே எழுந்து `உட்காரு' என்று இடம் தந்துவிடுவாள். இன்று அவ்வாறு செய்ய முடியாது. எழுந்து நிற்கும்போது ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் `எப்போது பஸ்ஸை எடுப்பார்களோ, எப்போது வீடு போய்ச் சேருவோமா! ' என்று கவலையில் உட்கார்ந்திருந்தாள்.

``நீ சொன்ன ஆளு இன்னம் வல்ல. ஆளு வரமுட்டும் அந்த எடத்துல நான் குந்தினா ஒனக்கு என்னா நட்டமாப்போவுதுன்னு மறிச்சுக்கிட்டுக் குந்தியிருக்கிற? நீ செய்யுறதும் பேசுறதும்... என்னாமோ ஆகாயத்திலிருந்து வந்த மாதிரிதான் இருக்குது.''

``நீ ஆகாயத்திலிருந்து பொறந்து வந்தியா?''

``இல்லை.''

``அப்புறமென்ன? சட்டம் பேசாம வாய மூடிக்கிட்டு இரு'' எனத் தனக்கிருந்த சங்கடத்தில் பிரியங்கா சற்று அதிகமாகவே பேசினாள். மற்ற எல்லாரையும்விட அவளுக்குத்தான் சீக்கிரம் வீட்டுக்குப் போக வேண்டும் என்ற அவசரம்.

``நீ யாரு என்ன வாய மூடச் சொல்றதுக்கு?'' என்று கேட்ட வடக்கிருப்புக்காரி, அப்போதுதான் நினைவுக்கு வந்த மாதிரி ``நீ ஆலடிதான? அப்பிடித்தான் இருப்ப. ஊரு மாதிரிதான ஆளும் இருக்கும்'' என்று சொன்னாள்.
``ஆலடியப் பத்தி ஒனக்கென்னத் தெரியும்'' என்று பிரியங்கா சொல்ல, பதிலுக்கு வடக்கிருப்புக்காரி ஆலடியைப் பற்றி மட்டம்தட்டி சொல்ல, சண்டை படிப்படியாக வலுக்க ஆரம்பித்தது; வார்த்தைகள் தடிக்க ஆரம்பித்தன. பஸ்ஸுக்குள் இருந்த கூட்டத்தைப் பற்றி இருவருமே கவலைப்பட்டதுபோல் தெரியவில்லை. இவர்களின் சண்டையையும் பார்த்துக்கொண்டு முன் சீட்டில் கறுப்புச் சட்டை போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்த ஆள், ``யாருக்கோ எடம் புடிக்கப்போயி நீங்க எதுக்கு சண்ட புடிச்சுக்கிறிங்க?'' என்று கேட்டான்.

வெடுக்கென்று பிரியங்கா கேட்டாள், ``நீ எந்த ஊரு நாட்டாம?''

``சரிதான்'' என்று சொன்ன அந்த ஆள், அடுத்த வார்த்தை பேசவில்லை. அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கருத்த திடுமலான ஆள் கோபமாக, ``ஒங்க சண்டய எதுக்கு ஊர் சண்டயா மாத்துறீங்கன்னு கேக்கக் கூடாதா? ஒன் ஊரு அவ்வளவு நல்ல ஊரு, மத்த ஊரு அம்மாம் மோசமா? ஒன் ஊரப் பத்தி எனக்கும் தெரியும். வம்பு சண்டக்கின்னு அலயுற ஊரு. குடிகாரப் பய ஊரு. கைப்புள்ளக்காரங்க எத்தன பேரு நிக்குறாங்க? நீ செத்த நவுந்து குந்துனாத்தான் என்ன? கவர்மென்ட் பஸ்ஸ பட்டா போட்டு வாங்குன மாதிரி பைய வெச்சுக்கிட்டு குந்தியிருக்கிற? எடம் இல்லாம ஆளுங்க நிக்குறது ஒனக்குத் தெரியலியா?'' என்று கேட்டான்.

கொஞ்சம்கூட யோசிக்காமல் அவன் கேட்ட வேகத்திலேயே பிரியங்கா கேட்டாள் ``நீ எந்த ஊரு பஞ்சாயத்துத் தலைவரு? ஒன்ன யாரு இந்தப் பஞ்சாயத்துக்குக் கூப்புட்டது?''

``ஒரு நாயத்த சொல்லக் கூடாதா?''

``ஒனக்கு மட்டும்தான் நாயம் தெரியுமா? நாட்லயே நீதான் பெரிய பஞ்சாயத்தா?'' என்று முகத்திலடிப்பது மாதிரி அந்த ஆளிடம் கேட்டதும், அவன் பிரியங்காவிடம் வாயடிக்க ஆரம்பித்தான். அவனோடு சேர்ந்துகொண்டு வடக்கிருப்புக்காரியும் பேச ஆரம்பித்தாள். பிரியங்கா ஒரு நூல் சளைக்கவில்லை. ஒரே ஆளாக இரண்டு பேரையும் சமாளித்தாள். சத்தம் பெரிதாகக் கேட்கவே முன்னால் இருந்தவர்கள் எல்லாம் பின்னால் திரும்பிப் பார்த்தார்கள். டிரைவர் சீட்டுக்குப் பின்னால் நின்றுகொண்டு சீட்டு போட்டுக்கொண்டிருந்த கண்டக்டர் மட்டும் திரும்பிப் பார்க்கவில்லை. நிற்க இடம் இல்லாமல் ஆள்கள் நெருக்கிக்கெண்டு நிற்பது, பின்னால் சண்டை நடப்பது, ``எப்ப பஸ்ஸ எடுத்துத் தொலைவானுவளோ. காத்துகூட இல்ல'' என்று திட்டுவதைப் பற்றி அக்கரையில்லாமல் தன்னுடைய வேலையில் கவனமாக இருந்தார்.

பழக்கதோஷத்தில் அவ்வப்போது, ``உள்ளாரப் போங்க. உள்ளாரப் போங்க'' என்று மட்டும் சொன்னார்.

``என்னாத்த உள்ளார போறது? நிக்கவே எடமில்ல. இனிமே போனா ஆளுங்க தலமேலதான் ஏறிப் போவணும்'' என்று சொன்ன ஒரு பெண், ``பாலக்கொல்ல ஒரு டிக்கெட்'' என்று சொல்லி, பணத்தைக் கொடுத்தாள். பணத்தை வாங்கிக்கொண்டு சீட்டைக் கொடுத்தார் கண்டக்டர். அவனிடம் பாலக்கொல்லைக்காரி கேட்டாள், ``பின்னால ஒரே சண்டயும் சச்சரவுமா இருக்கே. அத ஒரு சத்தம் போட்டு அடக்குனா என்னா?''

``ஏழு மணி சிங்கிள்னாலே தெனந்தெனம் இதே ராவுடிதான். நீ ஒரு சண்டயத்தான் பாக்குற? நான் ஒரு நாளக்கி நூறு சண்டயப் பாக்குறன். இந்த நேரத்துக்கு இன்னொரு பஸ் வுட்டா நல்லா இருக்கும். எவன் வுடுறான்? இத வுட்டா இன்னும் ரெண்டு மணி நேரத்துக்குப் பஸ்ஸே இல்லை. நவுந்து நில்லும்மா. எத எதயோ கண்டுபுடிக்கிறதுக்கு தெனம்தெனம் ராக்கெட் வுடுறானுவோ. ஒரு டவுன்பஸ்ஸ சேத்து வுட மாட்டங்கிறானுவோ'' என்று சொன்ன கண்டக்டர், இரண்டு மூன்று பேரை இடித்துக் கொண்டு ஓர் அடி தூரம் முன்னால் வந்து, ``டிக்கெட்... டிக்கெட்'' என்று கத்தினார். அப்போது ஒரு பெண் மூன்று பெரிய பெரிய பைகளுடன் இடித்துப்பிடித்து பஸ்ஸில் ஏறுவது தெரிந்ததும், ``இந்த நேரத்துல எதுக்கும்மா இத்தன பையிவுள தூக்கிக்கிட்டு வர? ஆளு நிக்கவே இடமில்லியே!'' என்று அந்தப் பெண்ணிடம் கேட்டார் கண்டக்டர்.
``ஆளு ஒரு பஸ்ஸிலயும் பை ஒரு பஸ்ஸிலயுமா வரும்?'' என்று அந்தப் பெண் கேட்டாள். அவள் கேட்டதைக் காதில் வாங்காத மாதிரி, ``டிக்கெட்... டிக்கெட்'' என்று சொன்னார் கண்டக்டர்.

``ஆறு மணிக்குமேல பஸ் ஏறினாளே ஒரே சாராய வாடதான்'' என்று முன்பு கண்டக்டரிடம் சட்டம் பேசியவள் சொன்னாள், ``செத்த நவுறுங்க'' என்று சொல்லிவிட்டு முன்னால் போக முயன்றாள். அப்போது அவளுடைய கண்களில் பிரியங்காவுக்குப் பக்கத்தில் இடம் இருப்பது தெரிந்தது. அந்த இடம் தனக்காகத்தான் காத்திருக்கிறது என்பது மாதிரி பத்து இருபது பேரைத் தாண்டிக்கொண்டும், ஏழெட்டு பேரின் கால்களை மிதித்துக்கொண்டும் வந்தாள். சீட்டில் பை இருப்பது தெரிந்ததும் அவளுடைய முகம் மாறியது. வடக்கிருப்புக்காரியை இடித்துக்கொண்டு, ``செத்த நவுந்து குந்து'' என்று பிரியங்காவிடம் சொன்னாள்.

``ஆளு வருது'' முகத்தை ஒருவிதமாக வைத்துக்கொண்டு சொன்னாள் பிரியங்கா.

``மூணு பை வெச்சியிருக்கேன். நிக்க முடியல. வேர்வ நாத்தத்துல மயக்கம் வர மாதிரி இருக்கு'' என்று அந்தப் பெண் சொன்னாள்.

``இப்பதான் ஒரு சண்டய முடிச்சேன். அதுக் குள்ளார நீ வந்திட்டியா? மேல இடிக்காம நில்லு. ஆளு வருது'' வெடுக்கென்று பிரியங்கா சொன்னாள். அப்போது எதிர் சீட்டில் உட்கார்ந் திருந்த ஆள், ``பஸ்ஸுல சீட்டு புடிச்சதுக்கே இம்மாம் கிராக்கிக் காட்டுது. இன்னம் எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரி சீட்டப் புடிச்சிருந்தா எம்மாம் காட்டுமோ!'' என்று சொல்லி, அவன் வாயை மூடவில்லை. பிரியங்காவுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ...

``நீ போயி புடியன் எம்.எல்.ஏ., மந்திரி சீட்ட, நானா வாணாங்கிறேன்'' என்று பிரியங்கா வேகமாகச் சென்னாள். அந்த ஆளுக்கும் கோபம் வந்ததுபோல் தெரிந்தது.

``நானும் வந்ததிலிருந்து பாக்குறன். நீ என்னமோ பெரிய இதுமாதிரி பேசிக்கிட்டிருக்க? கண்டக்டரக் கூப்புட்டு சொன்னாத்தான் நீயெல்லாம் சரிப்படுவ.''

``நீ கண்டக்டரத்தான் கூப்புடு... கலெக்ட்டரத்தான் கூப்புடு. யார் வந்து என்னா பண்றாங்கன்னு நானும் பாக்குறன்''  என எதிர் சவால்விட்டாள் பிரியங்கா.

``நாளக்கி நீ என் ஊரத் தாண்டித்தான பஸ்ஸுல வரணும். அப்ப வெச்சுக்குறேன் ஒன்ன'' என்று அந்த ஆள் சொன்னான்.

``நாயி நக்கிப் போட்ட எல மாதிரி இருக்கு ஒம் மூஞ்சி. நீ என்ன வெச்சுக்கிறியா? எப்ப வரணும், எங்க வரணும்னு சொல்லு. வாரேன். ஒன்னால முடிஞ்சத பாரு'' ஒரு நூல்கூட சளைக்காமல் சவால்விட்டாள்.

``ஆளப் பாத்தாலே தெரியுது'' என்று அந்த ஆள் சொன்னதுதான்.

``என்னய்யா தெரியுது? ஒழுங்கு மரியாதியா வரணும். இல்லன்னா மானம் மரியாத கெட்டுடும். என்னமோ தெரியுதாம்ல'' என்று கேட்டுக் கத்த ஆரம்பித்ததும் நின்றுகொண்டிருந்த ஒன்றிரண்டு பேர், ``பொம்பளக்கிட்ட எதுக்கு வாயக் கொடுத்த?'' என்று அந்த ஆளை சண்டை போட்டனர். அதன் பிறகுதான், அவனுடைய வாய் ஓய்ந்தது.

பிரியங்காவுக்கு எரிச்சலாக இருந்தது. இன்றைக்குப் பார்த்து எல்லாரும் வந்து தன்னிடம் வம்பு வாங்குகிறார்களே என்று. `விஷயத்தை எப்படி வெளியே சொல்வது? உட்கார்ந்திருக்கும் போது இருப்பதைவிட எழுந்து நின்றால் அதிகமாக வெளிப்படலாம். விஷயம் பலருக்கும் தெரிந்துவிட்டால் அசிங்கமாகிவிடுமே' என்று கவலைப் பட்டாள். அதனால் `எது நடந்தாலும் எழுந்திருக்கக் கூடாது. எத்தனை பேர் வந்தாலும் வாயைக் குறைக்கக்  கூடாது' என்று முடிவெடுத்து கொண்டாள். `பஸ்ஸைவிட்டு இறங்கும்போதுகூட ஜாக்கிரதையாக இறங்கணும்' என எண்ணியவாறு ஏதேனும் துர்நாற்றமடிக்கிறதா எனப் பார்த்தாள். `சில பெண்களுக்கு பீரியட் வந்தால் லேசாக துர்நாற்றமடிக்கும். அதை வைத்தே பக்கத்தில் இருக்கும் பெண்கள் கண்டுபிடித்து விடுவார்களே' என்று கவலைப்பட்டாள். அப்போது பின் படிக்கட்டு வழியாக ஏறி பஸ்ஸுக்குள் வியர்க்க  வியர்க்க சித்தாள் வேலைக்குப் போய்விட்டு வந்த நடுத்தர வயதுள்ள பெண்ணுக்கு என்னவாயிற்றோ ``சனியன்புடிச்ச பஸ்ஸில ஏறினாலே இதே தொல்லை தான். பொட்டச்சிவுளயே பாக்காத மாதிரிதான் ஒவ்வொரு நாயும் இடிக்கும்... ஒராசும்'' என்று சத்தமாகச் சொன்னாள். அவள் சொன்னது எவரின் காதுகளிலும் விழுந்த மாதிரி தெரியவில்லை. அந்த அளவுக்கு பஸ்ஸில் இருந்த ஸ்பீக்கர் செட் ஒலித்துக்கொண்டிருந்தது.

ஓவியம்
ஓவியம்

அப்போது ``டிக்கெட்... டிக்கெட்'' என்று கேட்டுக்கொண்டு வந்த கண்டக்டர் பிரியங்காவிடம் வந்தார். ``ஆலடி'' என்று சொல்லிப் பணத்தைக் கொடுத்தாள்.

அப்போது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த ஒரு பையன் ``பஸ்ஸை எப்பத்தான் எடுப்பிங்க? மணி ஆவுறது தெரியலியா?'' என்று கேட்டான்.

அவனைத் தொடர்ந்து படிக்கட்டில் நின்றுகொண்டிருந்தவர்களும் பஸ்ஸுக்குள் இருந்தவர்களும், ``பஸ்ஸை எப்பத்தான் எடுப்பானுங் களோ!'' என்று முணுமுணுத்தனர். பயணிகள் சத்தம்போட்டதைக் காதில் வாங்காத மாதிரி கண்டக்டர் சொன்னார், ``மேல ஏறி வாங்க.''

``நாங்க மேல ஏறி வர்றது இருக்கட்டும். பஸ்ஸை எப்ப எடுப்பிங்க?'' என்று ஓர் ஆள் கேட்டான்.

``டிரைவர் டீ குடிக்கப் போயிருக்காரு. வந்ததும் எடுப்பார். சட்டம் பேசாம உள்ளார ஏறி வா.''

``ஒரு வாரமா டீ குடிக்கிறாரா? இந்தச் சனியன்புடிச்ச பஸ்ஸுல வந்தாலே இதே தொல்லைதான். எப்ப எடுப்பானுங்கன்னே தெரியாது'' என்று சொல்லி அந்த ஆள் அலுத்துக்கொண்டான்.

கண்டக்டர் பதில் சொல்ல வில்லை. ``டிக்கெட்... டிக்கெட்'' என்று கேட்டான். பஸ்ஸை எடுக்கவில்லை என்ற முணுமுணுப்புகள் அவன் காதுகளில் விழுந்த மாதிரியே தெரியவில்லை. பஸ்ஸுக்குள் தள்ளிவிடுதல், நெட்டுதல், இடித்தல், வழியில் இருந்த கைப்பைகள், சிறுசிறு மூட்டைகள் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் டிக்கெட்டைப் போட்டுக்கொண்டிருந்தார். அப்போதுதான் பிரியங்காவிடம் பையைக் கொடுத்துவிட்டுப் போன இரண்டு ஆள் தடிமனில் இருந்த டீச்சர் வந்தாள். படிக்கட்டில் மட்டும் ஏழு, எட்டு பேர் நின்றுகொண்டிருந்தனர். அவர்களை விலக்கிக்கொண்டு ஏறி, வழியில் நின்று கொண்டிருந்தவர்களை இடித்துக்கொண்டு வந்து பிரியங்காவின் பக்கத்தில் உட்காருவதற்குள் டீச்சருக்கு மூச்சு வாங்கிவிட்டது. உட்கார்ந்த வேகத்தில் முகத்தில், கழுத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்தாள்.

``கடையில ஒரே கூட்டம். ரவ காபிப் பொடி வாங்குறதுக்குள்ளார உயிர் போயிடிச்சு. செல்லுக்கு ரீசார்ச் பண்ணலாமின்னு போனா அங்க அதுக்குமேல கூட்டம். அரிசிக்கட, மளிகக் கடயிலகூட அம்மாம் கூட்டம் கெடயாது. என்னா ஊரோ, என்னா நாடோ'' என்று தானாகப் பேசிக்கொண்டாள். பிறகு, பிரியங்கா பக்கம் திரும்பி ``பஸ்ஸுல என்னா இன்னிக்கி இம்மாம் கூட்டம்? உள்ளார வரதுக்குள்ளார ஆள சட்டினி ஆக்கிட்டாங்க'' என்று கேட்டாள்.

``தெனம் இப்பிடித்தான் இருக்கும். காலயில ஊர்லயிருந்து டவுனுக்கு வரும்போது பஸ் மேலியே அம்பதுக்கு மேல ஆளுங்க குந்தியிருப்பாங்க'' பட்டும்படாமல் சொன்னாள் பிரியங்கா.
``படிக்கட்டுல ஏறி, உள்ளார வரதுக்குள்ளார பட்ட கஷ்டத்த பாத்தா நடந்தே ஊருக்குப் போயிருக்கலாம்.''

``தெனம் தெனம் டவுன்பஸ்ஸுல வந்தாதான ஒங்களுக்குத் தெரியும். உயிர் போயி... உயிர் வரும். தெனம் பஸ் ஏறி பாருங்க அப்ப தெரியும்'' என்று சொன்னாள். அப்போது டீச்சர் தன்னுடைய போனையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்ததும், ``ஒங்க போனு வெல கொண்டதா?'' என்று கேட்டாள்.

``ஆமாம்.''

``இப்ப வந்தத, செத்த முன்னாடியே வந்திருந்தா என்ன? பெரிய போர்க்களமே நடந்துபோச்சு'' என்று வடக்கிருப்புக்காரி சொன்னாள். என்ன சொல்கிறாள், எதற்காக தன்னிடம் சொல்கிறாள் என்று புரியாமல் குழம்பிப்போனாள் டீச்சர்.

``அவுங்க  எப்ப வந்தா ஒனக்கென்ன?'' வடக்கிருப்புக் காரியிடம் பிரியங்கா கேட்டாள்

``ஒரு பொட்டச்சிக்கு இவ்வளவு ராங்கி ரப்பு இருக்கக் கூடாது.''

``நீ சோறு போட்டு வளத்தியா?''

``இல்லை''.

``அப்புறமென்ன... வாய மூடிக்கிட்டு வா.''

``அட சிவனே! எங்க காலத்துல எல்லாம் இப்பிடிப் பேசி கேட்டதில்ல'' என்று சொன்ன வடக்கிருப்புக்காரி, பக்கத்தில் இடித்துக் கொண்டிருந்த ஆளை முறைத்துப் பார்த்தாள். அப்போது பள்ளிக்கூடப் பெண் பிள்ளைகள் ஆறேழு பேர், டியூஷன் முடித்துவிட்டு பஸ்ஸில் ஏறினார்கள். மிக்ஸி ஜாடிக்குள் போட்ட வெங்காயம் மாதிரி அவர்களை அடுத்தடுத்த ஆள்கள் உள்ளே தள்ளிவிட்டார்கள்.

வடக்கிருப்புக்காரிக்குப் பக்கத்தில் மூன்று பைகளை வைத்துக் கொண்டிருந்த பெண் ``உள்ளார நிக்குறது மூச்ச முட்டுற மாதிரி இருக்கு. வேர்வ நாத்தம் கொடலப் புடுங்குது. கால வெக்கிறதுக்குகூட எடமில்ல. கம்பிய புடிக்கவும் வழியில்ல. பஸ் போவும்போது குலுக்கிற குலுக்குல கொடலே வெளிய வந்துடும்போல. இதுல என்னான்னுதான் ஊருக்குப் போயி சேறுவனோ. டவுனு பஸ்ஸின்னாலே தகரடப்பா பஸ்ஸுதான் வுடுறானுவ'' என்று புலம்ப ஆரம்பித்தாள். மூட்டைப்பூச்சி பதுங்கு வதற்குக்கூட பஸ்ஸில் இடம் இல்லை. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு பையன் செல்போனில் எதையோ குடைந்துக் கொண்டிருந்தான்.

``வேல பாக்குறியாம்மா?'' என்று டீச்சர் கேட்டாள்.

``ஜெராக்ஸ் கடையில வேல பாக்குறன்'' என்று சொன்னாள்.

அடுத்த வார்த்தை டீச்சர் கேட்கவில்லை. ஆனாலும், தானாகவே பிரியங்கா சொன்னாள், ``திடீர்னு பீரியட் ஆகிடிச்சு. விஷயத்தச் சொல்லி மத்தியானமே பெர்மிஷன் கேட்டேன். இப்பதான் அந்த நாயி விட்டான். நடந்து வரும்போது அதிகமாயிடிச்சு. சீட்டுல பட்டுடுமோன்னு கவலையா இருக்கு. அதனாலத்தான் ஒக்காந்த எடத்தவிட்டு எந்திரிக்கல. ஒரே சண்டயா ஆகிடிச்சு. எப்படா வீட்டுக்குப் போய் சேருவோம்னு இருக்கு.''
``அப்படியா?'' என்று பட்டும்படாமல் டீச்சர் கேட்டாள். அவளுடைய குரலிலும் முகத்திலும் எந்த மாற்றமும் இல்லை.

பஸ்ஸின் முன் படிக்கட்டிலும் பின் படிக்கட்டிலும் நின்றுகொண்டிருந்த பத்துக்கும் அதிகமான ஆண்கள், டிரைவர் பஸ்ஸில் ஏறியது தெரிந்ததும், ``ரைட்... ரைட்... போவலாம் ரைட்..!'' என்று கத்தினார்கள்.
பஸ் புறப்பட்டது.

``இடம் பிடிச்சதுல பிரச்னையா?'' என்று டீச்சர் கேட்டாள்.

``ஒரு பிரச்னையுமில்ல. பேசாம வாங்க டீச்சர்'' என்று பிரியங்கா சொன்னாள்.

``உண்மையைச் சொல்லும்மா.''

``வீட்டவிட்டு வெளிய வந்தாலே பிரச்னைதான். அதுலயும் டவுன்பஸ்ஸில ஏறினா பிரச்னை இல்லாம இருக்குமா? அதுவும் பொட்டச்சிக்கு.''

``எனக்கு சீட்டு புடிச்சதாலதான ஒனக்கு பிரச்னை?''

``எங்க ஊர்ல வேல பாக்க புதுசா வந்திருக்கிற டீச்சர் நீங்க. ஒங்களுக்கு எடம் புடிக்க மாட்டனா?''

``சீக்கிரம் வந்திடலாமின்னுதான் போனேன். செல்போன் கடயிலதான் லேட்டாகிடுச்சு.''

``இதென்ன பிரச்னை... பஸ்ஸுல சீட்டு புடிக்கிற தகராறுல சண்டயாயி போலீஸு, கோர்ட்டுன்னு அலஞ்சவங்கயெல்லாம் எங்க ஊர்ல இருக்காங்க?''

``நிஜமாவா?'' என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள் டீச்சர்.

``இந்த பஸ்ஸுல நடக்கிற காதல் கதயெல்லாம் பாத்தா, நீங்க இன்னம் என்னா சொல்வீங்களோ? பள்ளிக்கூடத்துப் புள்ளைங்க நிக்கிற எடத்துல மூணு நாலு பசங்க எப்பிடி நெரிச்சிக்கிட்டு நிக்குறானுவ பாருங்க'' என்று சொன்னாள் பிரியங்கா.

``நீ சொல்றதெல்லாம் புதுசா இருக்கு'' என்று உலகமே தெரியாத அப்பாவி பெண் மாதிரி டீச்சர் சொன்னாள்.

``புதுசுமில்ல... பழசுமில்ல. தெனம் நடக்கிற கதயத்தான் சொல்றன்'' என்று சொன்னாள் பிரியங்கா.

திடீரென்று நினைவுக்கு வந்த மாதிரி,

``எதுக்கு டீச்சர் இம்மாம் நகய போட்டுக்கிட்டு டவுன்பஸ்ஸுல வர்றீங்க? எவனாவது அடிச்சுக்கிட்டு போயிடப்போறான். இந்தக் காலத்துல வெறும் பொட்டச்சி நின்னாலே சும்மா வுட மாட்டானுவோ'' என்று சொன்னாள்.

அதைக் கேட்டதும் டீச்சரின் முகம் மாறிவிட்டது. காற்றுக்காக ஜன்னல் பக்கமாக முகத்தைத் திருப்பினாள் டீச்சர். அப்போது தனக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஆளிடம், ``ஆளு நிக்குறது தெரியலியா?'' என்று வடக்கிருப்புக்காரி கேட்டாள்.

``செத்த நேரம்தான? பேசாம நின்னுக்கிட்டு வாம்மா. எடமிருந்தா நவுந்து போவ மாட்டாங்களா? ஒம் மேல இடிக்கணும்னு எனக்கென்ன வரமா?'' என்று கேட்டான் அந்த ஆள்.

பஸ் டவுனைத் தாண்டி கொஞ்ச தூரம்தான் வந்திருக்கும். வடக்கிருப்புக்காரி அநியாயத்துக்கு பிரியங்காவின் மேல் சாய்ந்துக்கொண்டிருந்தாள். அதனால், அவளை அடிக்கடி முறைத்துப் பார்த்தபடி இருந்தாள் பிரியங்கா. அப்போது ஏதோ அழுத்துவது மாதிரி இருக்கவே திரும்பிப் பார்த்தாள். வடக்கிருப்புக்காரியையொட்டிய ஓர் ஆள் அதிக போதையில் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. மீண்டும் பிரியங்காவின் தோள்பட்டையில் கை விழுந்தது. விழுந்தது மட்டுமல்ல, லேசாக அழுத்தவும் செய்தது. பிரியங்கா திரும்பிப் பார்த்தாள். சட்டென கை கம்பியைப் பிடித்தது. பிரியங்கா திரும்பியதும், கம்பியைப் பிடித்திருந்த கை மீண்டும் பிரியங்காவின் தோள்பட்டையை அழுத்தியது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். கோபத்தை அடக்கிப் பார்த்தாள். கை வந்து வந்து தோள்பட்டையை அழுத்தியது.

பட்டென எழுந்த பிரியங்கா, ``ஒலகத்திலயே நீதான் ஆம்பளயா? நானும் ரொம்ப நேரமா பாத்துக்கிட்டு வரன். கைய கொண்டாந்து எங்க வைக்கிற? பஸ்ஸுல வந்துதான் நீ ஆம்பளங்கிறத காட்டுவியா? ஒன் வீரத்த காட்டுற எடத்தில போய் காட்டு. எங்கிட்ட காட்னா அறுத்துடுவன் அறுத்து'' என்று சொல்லி சத்தம் போட்டாள்.

``நான் எங்க வந்து ஒன்ன தொட்டன்?'' என்று அந்த ஆள் கேட்டதும், ``வாய மூடு. கைய வுடுறதுக்கு ஒனக்கு ஒலகத்தில வேற எடமே இல்லியா?'' என்று காட்டுக் கத்தலாகக் கத்தினாள் பிரியங்கா.
``என்னம்மா கத்துற?'' என்று அந்த ஆள் கேட்டதுதான்.

``அடிடி அவன. நானும் எம்மாம் நேரந்தான் பொறுத்துப் பொறுத்துப் பாக்குறது?'' என்று வடக்கிருப்புக்காரி சொன்ன மறுநொடியே தன்னுடைய புடைவையில், தான் உட்கார்ந்திருந்த இடத்தில் ரத்தக் கசிவின் ஈரம் இருக்குமோ என்ற கவலையைக்கூட மறந்துவிட்டு அந்த ஆளை ஒரே நெட்டாக நெட்டித் தள்ளினாள் பிரியங்கா. வடக்கிருப்புக்காரியும் ஒரு நெட்டு நெட்டினாள்.

``ரெண்டு பேரும் என்னா ஊரு? ஆம்பளயவே நெட்டித் தள்ளுறீங்களா?'' என்று கேட்டு அந்த ஆள் கத்தினான். அவனிடம் பிரியங்காவும் வடக்கிருப்புக்காரியும் ஒரே நேரத்தில் சண்டைக்குப் பாய்ந்தனர். யாருக்கு வாய் அதிகம் எனச் சொல்ல முடியாது. அங்கு நடக்கும் சண்டையைப் பார்க்காமல் போனுக்குப் போட்ட காசு ஏறிவிட்டதா என்று செல்போனை எடுத்துப் பார்த்தாள் டீச்சர்.

``டிக்கெட்... டிக்கெட்'' என்று கண்டக்டர் கத்திக்கொண்டிருந்தார். பஸ்ஸில் இருந்த ஸ்பீக்கர் செட், சினிமா பாட்டு ஒன்றில் அலறிக் கொண்டிருந்தது. இருட்டில் பஸ் ஓடிக் கொண்டிருந்தது.

``ஐயோ! என் மணிபர்ஸக் காணுமே'' என்று சொல்லி ஒரு பெண் அழ ஆரம்பித்தாள் அப்போது, ``குறவன்குப்பம் நிறுத்து'' என்று பஸ்ஸுக்குள் ஓர் ஆள் கத்திச் சொன்னான்.

எந்தச் சத்தத்தையும் பொருட்படுத்தாமல் கண்டக்டர் ‘`டிக்கெட்... டிக்கெட்...’ என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

- இமையம், ஓவியங்கள்: ஸ்யாம்