மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 29

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

ருநீலத்தில் ஏறியிருக்கும் மெல்லிய வெண்ணிறம் போதுமான அளவுக்கு இல்லை. சற்றே அதிகப்படுத்தச் சொன்னான் அந்துவன். அவன் சொன்னபடி ஓவியர்கள் நிறத்தைக் கூட்டிக்கொண்டிருந்தனர். அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தவன், இளைப்பாறலாம் என த் தேவாங்கின் கூண்டு அருகே உட்கார்ந்து சிறுகுச்சியால் அவற்றை அடிக்கப்போவதைப்போல் ஓங்கினான். அவை இங்குமங்குமாக ஓடி அலைக்கழிந்தன. மீண்டும் மீண்டும் அப்படியே செய்தான்.  

வீரயுக நாயகன் வேள்பாரி - 29

அந்துவனின் மனம் அமைதியற்று இருந்தது. மீண்டும் அண்ணாந்து பார்த்தான். ஓவியர்கள் அவன் சொன்னதைப்போல வெண்ணிறத்தைச் சற்றே கூட்டியிருந்தனர். ஆனாலும், அவனுக்கு நிறைவாயில்லை.
மனம் தத்தளித்துக்கொண்டிருந்தது.

இந்தப் பெருவிழாவின் முதல் நிகழ்வான வெற்றிலை மாற்றி மணமுடிக்க வாக்களிக்கும் நிகழ்வில், அரண்மனைக் கணியனான தான் இல்லாததை அந்துவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மனம் அலைமோதியது. கூண்டுக்குள் இருக்கும் தேவாங்குகளையும் அதேபோல அலைமோதவைத்தது. ‘அரண்மனைக் கணியன் ஏன் வரவில்லை?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டிருக்குமா அதற்கு திசைவேழர் என்ன பதில் சொல்லியிருப்பார் எனச் சிந்தித்தான். மனதின் வலியும் புறக்கணிப்பின் வேதனையும் இன்னும் அதிகமாகின.

“வலியையும் வேதனையையும் வெளிக் காட்டாமல் வாழ்வதுகூட ஒருவிதமான கலைதான்” என்றாள் பொற்சுவை.

தோழி சுகமதிக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. பொற்சுவையை முழுமையும் அறிந்தவள் அவள் மட்டும்தான். எனவே, இந்தக் கூற்றை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை. கண்கள் கலங்கின. வெளிக்காட்டாமல் இறுகிக்கொண்டாள்.

“வணிகர் குலத்தில் பெண்ணாகப் பிறக்கக் கூடாது சுகமதி. அதுவும் அளவற்ற செல்வம்கொண்ட ஒரு குடும்பத்தில் பிறக்கவே கூடாது. இணையற்ற பொன்னொளியில் திரளும் கண்ணீர் எவர் கண்களிலும் படாது. வழிந்தோடுவது நம் கண்ணீர்தான் என்பதை சிலநேரம் நம்மாலேயே உணர முடியாமல் போய்விடும்.”

என்ன சொல்வது எனத் தெரியாமல் விழித்தாள் சுகமதி. பொற்பல்லக்கில் கொண்டுவரப்பட்ட கூண்டு அப்படியே இருந்தது. ‘பாண்டரங்கத்தில் வேலைகள் முடிந்ததும், அதன் எதிரில் கட்டப்பட்டுள்ள திகிரி மேடையில் வைத்துக்கொள்ளலாம். அதுவரை இங்கேயே இருக்கட்டும்’ எனச் சொன்னதால் சக்கரவாகப் பறவையைப் பொற்சுவையின் அறையிலேயே வைத்திருந்தனர். அதைப் பார்த்துக்கொண்டேதான் பொற்சுவை கேட்டாள்.

“என் மண நாளுக்குள் இது பறந்துவிடுமா சுகமதி?”

விடையின்றித் தத்தளித்தாள் சுகமதி.

பொற்சுவையின் குரல் உடைந்துவிடாமல் மிக நிதானமாக இருந்தது.

``கார்காலத்தின் இறுதி மழைத்துளியை ஏந்தியபடி இது பறந்தபின் என் கண்கள் பார்த்திருக்க என்ன இருக்கிறது இந்த அரண்மனையில்?”

பொற்சுவையின் மனதை ஆற்றுப்படுத்த ஒற்றைச் சொல்லின்றித் தவித்தாள் சுகமதி.

கூண்டுக்குள் விரல்களைவிட்டு சக்கரவாகப் பறவையின் உதிர்ந்த இறகு ஒன்றை எடுத்தாள். “என்ன ஓர் உறுதி இந்தப் பறவைக்கு, ‘மழைநீரை மட்டுமே அருந்துவேன்!’ என. நம்மால்தான் எந்த உறுதிப்பாட்டையும் கொண்டிருக்க முடியவில்லை.”

சுகமதி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். உள்ளுக்குள் கிடக்கும் ஓராயிரம் சொற்களை வெளியில் கொட்டுவதுதான் பொற்சுவைக்கு இப்போது தேவை. எனவே, அவள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேசட்டும் எனக் காத்திருந்தாள் சுகமதி.

“நானும் உறுதி ஏற்றிருப்பேன்... கடற்புயல்  மட்டும் என் அண்ணனைக் காவுகொள்ளாமல் இருந்திருந்தால்! அவன் இன்றி நான் யாரை நம்பி உறுதி ஏற்பது?”

சுகமதி எவ்வளவோ முயன்றும் அவளுடைய கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், மறைத்துக்கொள்ள முடிந்தது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 29

“என் தாயின் மரணம்கூட எனக்கு நினைவில்லை. அப்போது நான் சிறுபிள்ளை. ஆனால், விரல்பிடித்து எனக்கு வாழ்வைச் சொல்லிக்கொடுத்தவன் என் அண்ணன் தான். நான் காதல் கொண்டதை அவனிடம் சொன்னபோது அவனுக்குள் ஏற்பட்ட மகிழ்வை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

“சாவகப் பயணம் முடித்து வந்ததும் நானே தந்தையிடம் சொல்லி இதற்கான ஒப்புதலைப் பெறுவேன்” என்றான்.

ஆனால், எல்லாவற்றையும் ஒரு புயல் அடித்துக்கொண்டு போனது.

சுகமதி எதுவும் சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.

`நான் அமைதியைக் குலைக்காமல் இருப்பதுதான் சரி, ஏனென்றால், பொற்சுவை பேசிக்கொண்டிருப்பது என்னோடு அல்ல... அவளின் ஆழ்மனதோடு. இந்த உரையாடல் ஏதோ ஒருவகையில் அவள் மேலெழுந்து வர உதவியாக இருக்கும்’ என எண்ணினாள்.

“நான் மிகவும் உறுதியானவள் எனச் சிறுபிள்ளையில் இருந்து பாராட்டப் பட்டுள்ளேன். என் உறுதியின் மீது எனக்கு நம்பிக்கை வரவைக்க ஏதாவது வழி உண்டா சுகமதி?”

பேசவேண்டிய இடம் இதுதான் என, சுகமதிக்குத் தோன்றியதும் பதில் சொன்னாள்...

“உண்டு இளவரசி.”

“என்ன?”

“உங்களைக் கலங்கடிக்கும் எதையும் உங்களுக்குள் அனுமதிக்காதவர்தான் நீங்கள். அதனால்தான், காதலையும் உங்களுக்குள் எளிதில் அனுமதிக்கவில்லை. ஓர் ஆண் உங்களின் காதலைப் பெற எவ்வளவு காலம் ஆனது என்பதை நான் அறிவேன். இப்போதும், அதேபோல உங்களைக் கலங்கடிக்கும் எதையும் உங்களுக்குள் அனுமதிக்காதீர்கள்.”

அசட்டுச் சிரிப்போடு கேட்டாள்...

“பொதியவெற்பனை அனுமதிக்காதே என்கிறாயா?”

சுகமதி ஒரு கணம் நடுங்கிப்போனாள்.

“நான், எண்ணங்களைச் சொல்கிறேன். அலைக்கழிக்கும் நினைவுகளைச் சொல்கிறேன். எந்த இடத்திலும் உங்களுக்கான வாழ்வை அமைத்துக் கொள்ளும் வல்லமைவாய்ந்தவர் நீங்கள். இசையும் இலக்கியமும் இருக்கும் வரை உங்களுக்கான உலகை யாராலும் தட்டிப் பறித்துவிட முடியாது.”

“காதல் எல்லாவற்றையும் தட்டிப்பறித்துவிடும் சுகமதி. அதுவும் பறிக்கப்பட்ட காதலின் ஆவேசம் எளிதில் அடங்காது. பூவுக்குள் இருந்து விதை முளைவிடுவதைப்போல, இன்னொரு முறை காண முடியாத அதிசயக் கனவு. அது என்னைவிட்டு ஒருபோதும் பிரியாது. அந்த நினைவுக்குப் பிறகு, என் இளமை முகிழ்ந்த கணம் இருக்கிறது. பற்றி எரியும் காமம் இருக்கிறது. சிறுமுலைகொண்டு பெருஞ்சினம் தீர்த்த பொழுதுகள் மறைந்து கிடக்கின்றன. நான் என்ன செய்வேன் சுகமதி?

தட்டுகளை மாற்றி தாம்பூலம் தரித்தபின் என்னிடம் சொல்ல என்ன இருக்கிறது என நினைத்துவிட்டார்கள். அண்ணகர்கள் பல்லக்கைக் கீழிறக்கிய இடத்தில் நான் இறங்கிவிடலாம்; ஆனால், எனது மனம் ஒருபோதும் கீழிறங்காது. அது, இந்த உலகின் அரிய காதலைத் தன்வயம் கொண்டது. நானே நினைத்தாலும் தனது நினைவு களைவிட்டு அது விலகாது.”

நினைவுகளைவிட்டு ஒருபோதும் அகலாத நாளாக இந்த நாள் இருக்கப்போகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால், இந்த மண்ணில் நடக்கும் ஒரு திருமணத்துக்கு யவனர்கள் பெரும் ஏற்பாட்டோடு வந்து, பரிசுகள் வழங்கி, மரியாதை செய்வது இதுவே முதன்முறை.

நூற்றாண்டுக்கும் மேலாக நீடிக்கும் இந்த வணிகத்தில் இன்றைய நாள் மிகவும் முக்கியமானது. யவனப் பெருவணிகன் வெஸ் பானியன் தலைமையில் அவர்கள் அணிதிரண்டு வந்துள்ளனர். அரசப் பிரதிநிதிகள், வணிகர்கள், துறைமுகப் பொறுப்பாளர்கள் எனப் பலரும் ஆறுக்கும் மேற்பட்ட நாவாய்களில் வந்து இறங்கினர். மிக முக்கியமாக ஹிப்பாலஸ் வந்துள்ளான். கடல்பயணத்தின் சாகசத் தளபதி என யவனர்களால் கொண்டாடப்படுபவன். அவன் வருகை துறைமுகங்களில் தனித்த விழாவாகக் கொண்டாடப்படும் என்று  கடலோடிகள் சொல்வார்கள்.

கொ
ற்கையில் வந்து இறங்கிய எல்லோரும் மதுரைக்கு அருகில் உள்ள யவனச் சேரியில் நன்றாக ஓய்வெடுத்து, தங்களின் முறைப்படி இந்தத் திருமணத்தைக் கொண்டாடிக் களிக்க அரச மாளிகைக்குள் நுழைந்தனர்.

வட்டுடை வீரர்கள் புடைசூழ, யவனப் பேரழகிகள் கைகளில் பரிசுத்தட்டை ஏந்திவர வெஸ்பானியன், ஹிப்பாலஸ், கால்பா, பிலிப், எபிரஸ், திரேஷியன் எனப் பலரும் வந்தனர். அரண்மனையின்  நடுமண்டபத்தில் அவர்களின் வருகையை எதிர்பார்த்து, பேரரசரும் சூல்கடல் முதுவனும் வீற்றிருந்தனர்.

மதுரையின் எல்லா திசைகளிலும் இரவு, பகலாகக் கொண்டாட்டங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. யவனர்கள் வந்து இறங்கிய திலிருந்து கொண்டாட்ட பேரொலியைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆனால், இவையெல்லாம் அரண்மனைக்குள் நடக்கும் கொண்டாட்டத்துக்கு ஈடாகுமா? அவர்கள் நுழைந்த கணத்திலிருந்து இன்றைய நாள் கொண்டாட்டம் தொடங்கியது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 29

தங்களுக்கான வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின் வெஸ்பானியன் அறிவித்தான்...

“இந்தத் திருமணத்தை முன்னிட்டு எம் அரசர் பொன் நாணயம் ஒன்றை வெளியிட்டுள்ளார். உங்களின் அதிசிறந்த உயிரினமான யானையை அதில் பொறித்துள்ளார். அந்த நாணயத்துக்கு ‘மீனாள்’ எனப் பெயர்சூட்டி இந்தப் பாண்டிய அரசைப் பெருமைப்படுத்தியுள்ளார்” என அறிவித்து, தங்கத் தட்டிலிலுள்ள நாணயங்களைப் பேரரசரின் முன்னும், சூல்கடல் முதுவனின் முன்னும் நீட்டினார். அவர்கள் வியப்பு குறையாமல் அதை நீண்டநேரம் பார்த்தனர்.

நாற்சதுர வடிவின் நடுவே அச்சுப்பதிக்கப்பட்ட யானை ஒன்று ஒளிவீசி மின்னியது. அதன் மேல் `மீனாள்’ என யவனத்தில் எழுதியிருந்ததை, சூல்கடல் முதுவன் வாசித்துச்சொல்ல அகமகிழ்ந்தார் பேரரசர். அந்த நாணயங்களைத் தன் இருகைகளாலும் அள்ளி அவையை நோக்கி வீசினார். உற்சாகப் பேரொலி எங்கும் எதிரொலித்தது.

நூறுகால் மண்டபத்தின் ஆடலரங்கு இதுவரை இல்லாத பேரலங்காரத்தைக் கொண்டிருந்தது. விருந்தினர்கள் முப்புறமும் இருந்து மேடையைப் பார்த்தபடி அமர்ந்தனர். மேடையின் முன்நெற்றியில் நால்வகை முரசுகள் வைக்கப்படுவதற்கான கட்டில்கள் முதலில் கொண்டுவரப்பட்டன. அதன்பின், வட்ட வடிவ முறிகள் கொண்டு வரப்பட்டன. அவற்றைத் தொடர்ந்து முரசங்களை எடுத்துவந்தனர்.

தன்னந்தனியாக ஒற்றை மனிதன் ஒழுங்கற்ற ஆடையை அலங்காரமாகப் போத்திக்கொண்டு உள்நுழைந்தான். உள்நுழையும் கட்டியங்காரனைப் பற்றி மொழிபெயர்ப்பாளர்கள் யவனர்களுக்கு அறிமுகம் செய்தனர். அரங்கில் நுழைந்தவன், நான்கு முரசுகளும் வைக்கப்பட்டிருந்த கட்டில் கால்கள் எந்தெந்த நாட்டின் காவல் மரங்களை வெட்டியெடுத்துச் செய்யப்பட்டவை எனப் பட்டியலிட்டான். பேரரசின் வீரம் போற்றும் வரலாறு, முரசுக்கட்டிலின் கால்களிலிருந்து தொடங்கியது. கூட்டத்தினரின் உற்சாகப் பேரொலி எங்கும் எதிரொலித்தது. திரி முறுக்கிக் கட்டப்பட்ட வட்டவடிவ முறிகட்டில் கால்களின் நடுவில் வைக்கப்பட அதன் மீது முரசின் அடிப்பகுதி பொறுத்தப்பட்டது.

எத்தனை நாட்டு அரசியர்களின் கூந்தலை அறுத்துத் திருகிய முறி இதுவெனக் கட்டியங்காரன் சொன்னபோது அரங்கு அதிர்ந்து குலுங்கியது. அவன் சொல்லும் பெயர்ப்பட்டியல் நீண்டபடியே இருக்க, அரங்கின் அதிர்வோசை மேலும் மேலும் கூடியது. அந்தப் போர்களின் வெற்றிகளுக்குப் பின்னர், நிகழ்ந்த கொண்டாட்டங்கள், அரங்கினுள் மீண்டும் நிகழத்தொடங்கின.
 
மலை, ஆறு, நாடு, ஊர், யானை, குதிரை, மாலை, முரசு, கொடி, ஆணை எனப் பாண்டியப் பேரரசின் பத்து பெரிய அடையாளங்களுக்கான திருப்பெயர்களை வரிசைப்படுத்தி வணங்கினான் கட்டியங்காரன்.

சூல்கடல் முதுவனுக்கு ஆடல்களைக் காண்பதில் பெரிதாக ஆர்வம் இல்லை. வந்ததிலிருந்து பாண்டிய நாட்டின் மகா கணியன் திசைவேழரைச் சந்தித்து உரையாட வேண்டும் என்பதில் விருப்பத்தோடு இருந்தார். தாம்பூலம் தரித்த நாள் அன்று சந்தித்து வணங்கிக் கொள்ளத்தான் நேரம் கிடைத்தது. பேசிக்கொள்ள முடியவில்லை. இந்த நேரத்தை அதற்குப் பயன்படுத்தலாம் என எண்ணியவர், உதவியாளர் களிடம் அவரின் மாளிகைக்கு அழைத்துச்செல்ல உத்தரவிட்டார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 29

அரண்மனையின் தென்திசை மாளிகையில் தான் அவர் தங்கியிருந்தார். மாளிகையின் மேல்மாடத்தில் ஒளிரும் விண்மீன்களைப் பார்த்தபடி இருந்த திசைவேழரை, மேல்மாடம் சென்று வணங்கினார் சூல்கடல் முதுவன்.

திசைவேழர் அவரை ஆரத்தழுவி வரவேற்றார். “ஆடல் அரங்கில் இருக்கவேண்டிய நேரத்தில் என்னைக் காண வந்திருக்கிறீர்கள்?” என்றார்.

“ஆடல் மகளிரை எங்கும் பார்க்கலாம். திசைவேழரை இங்கு மட்டும்தானே பார்க்க முடியும்.”

புன்முறுவல் பூத்தபடி இருவரும் இருக்கையில் அமர்ந்தனர்.

“இந்த விரிந்த வானத்தை எங்கும் பார்க்கலாம். ஆனால், இத்தனை கலைஞர்கள் பங்கெடுக்கும் ஆடல் நிகழ்வை இந்த அரங்கில்தானே பார்க்க முடியும். நீங்கள் ஏன் அங்கு வராமல் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள்?” என எதிர் வினாவை எழுப்பினார் சூல்கடல் முதுவன்.

திசைவேழரின் உதட்டில் மெல்லிய சிரிப்பு ஓடியது. இருவரும் எதிரெதிர் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

“எங்கிருந்தும் வானத்தைப் பார்க்கலாம். ஆனால், எங்கிருந்து பார்க்கிறோம் என்பதுதானே முக்கியம். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து வானத்தைப் பார்க்கும் கோணமும் நான் இருக்கும் இடத்திலிருந்து வானத்தைப் பார்க்கும் கோணமும் வெவ்வேறானவை. கடல் அதன் அலைகளின் வழியாக அறியப்படுவதைப்போல வானம், அதைக் காணும் கோணத்தின் வழியாகத்தான் காட்சிப்படுகிறது.”

“இதற்குத்தான் நான் உங்களைப் பார்க்க வந்தேன். பாண்டிய நாட்டில் நிலைகொண்டுள்ள வானியல் அறிவைப் பற்றியும், உங்களைப் பற்றியும் பெரும்புலவர் கபிலர் பாடியுள்ள பாடல்களைக் கேட்டுள்ளேன். அதனாலே உங்களோடு உரையாட விரும்பி வந்தேன்.”

 “கபிலர் நம்மொழியின் பெருங்கவி. அவருக்கு ஏனோ வானியல் மட்டும் வசப்படவே இல்லை. கோள்மீன்களையும் நாள்மீன்களையும் பற்றி நானும் எவ்வளவோ சொல்லியுள்ளேன். ஆனாலும், அவரது ஐயங்கள் தீர்ந்தபாடில்லை. ஆனால், அவர் படைத்த கவிதைகளைக் கொண்டுதான் பலரும் என்னை அறிந்து கொள்கின்றனர். அறியாதவரைக் கொண்டு அறியப்படுதல் சற்றே நாணச் செய்கிறது” என்றார் திசைவேழர்.

‘கபிலர் மூலம் உங்களை அறிந்தேன்’ எனச் சொல்வது அவருக்கு மகிழ்வைத் தரும் என்று அல்லவா நினைத்தேன். இப்படி ஆகிவிட்டதே எனச் சற்றே அதிர்ச்சி அடைந்தார் முதுவன். ஆனாலும், வெளிக்காட்டிக்கொள்ளாமல் சொன்னார், “நான் செல்லும் எல்லா நாடுகளிலும் காலக்கணியர்கள் இருக்கிறார்கள். அரசரின் அவையில் பெரும் தகுதியோடு அவர்கள் வீற்றிருப்பதை எங்கும் பார்க்கிறேன். அந்தக் கணியர்கள் யார், அவர்களின் கணிப்பு முறை என்ன, அவர்கள் நிலவை அடிப்படையாகக் கொண்டு காலத்தைக் கணிக்கின்றனரா, அல்லது கதிரவனை அடிப்படையாகக்கொண்டு காலத்தைக் கணிக்கின்றனரா, அவர்களின் கோணம் எப்படிப்பட்டது... என உரையாடத் தோன்றியதே இல்லை. காலம் முழுக்கக் கடலில் கிடக்கும் நமக்கு, அரண்மனைவாசிகள் சொல்ல ஒன்றுமில்லை என்றுதான் தோன்றும். ஆனால், பாண்டியப் பேரரங்கில், எண்ணிலடங்காத கலைஞர்கள் சுழன்றாடும் ஆடல் நிகழ்வை விட்டுவிட்டு உங்களைக் காண என் மனம் உந்தித்தள்ளியதற்குக் காரணம், கபிலர் பாடிய பாடல்கள்தான். அவருக்கு வானியலைக் கணிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால், உங்களைச் சரியாகக் கணித்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்.”

சட்டென திசைவேழரிடமிருந்து மறுமொழி வந்துவிடவில்லை. சிறிது நேரத்துக்குப் பின் சொன்னார்...

“நம் மொழி ஆசான்கள் எல்லோருமே வானியல் ஆசான்களாக இருந்துள்ளனர். கோள்களின் பெயரையே நாள்களின் பெயராகச் சூட்டினர். விண்மீன் கூட்டங்களுக்குச் சூட்டிய பெயரையே மாதங்களுக்கும் சூட்டினர். இது வெறும் பெயர்சூட்டல் அல்ல. அபாரமான வானியல் அச்சை வாழ்வுக்குள் பொருத்தும் செயல். இந்தப் பெரும் காலச்சுழற்சிக்குள்தான் நமது ஒவ்வொரு நாளும் சுழல்கிறது என்ற உண்மையை நாள் தவறாமல் எடுத்துச்சொல்லும் பேரறிவு. இயற்கையின் சுழல்தட்டில் அமர்ந்து புதுவிசைகொண்டு சுழலும் உயிரினம் நாம்.

இந்தப் பேரறிவின் தொடர்ச்சியைப் பாணர்களிடம் நான் காண்கிறேன். ஆனால், எழுத்து கற்ற புலவர்களிடம் இது இல்லை. காலத்தின் அறிவு கணியர்களுக்கானது எனப் புலவர்கள் நினைக்கின்றனரோ எனத் தோன்றுகிறது. அதுதான் எனது கவலை” என்றார்.

திசைவேழரின் மறுமொழி முற்றிலும் வேறு ஒரு பார்வையைக் கொண்டிருந்தது. அது சூழ்கடல் முதுவனை, மேலும் சிந்திக்கத் தூண்டியது.

ர்ப்பரித்து எழும் பெரும் குரல் அடங்கவே இல்லை. நூறுகால் அரங்கு திணறியது. கட்டியங்காரனின் குரல் அனைவரையும் துடிப்பு நிலைக்கு மேல் ஏற்றிக்கொண்டிருந்தது.

ஆடை, அணி, உண்டி, தாம்பூலம், நறுமணம், காமம், இசை, கொண்டாட்டம் என்னும் எண்வகை இன்பத்தில் திளைக்கத் தொடங்கியது அரண்மனை வளாகம். இந்த இரவு பேரின்பத்தின் இரவு. இந்த இரவின் தொடக்கம், இந்த அரங்கின் கொண்டாட்டத்தின் வழியே தொடங்கியது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 29

எழுவகை முழவுகள் மேடையின் இடது புறம் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. ஆடல் கற்பிப்போன், இசையோன், பாடலாசிரியன், குழலோன், யாழ்வல்லுநர்கள்... என எண்ணற்ற கலைஞர்கள் மேடையில் நிறைந்தனர். கட்டியங்காரன் தன் குரலை உயர்த்திச் சொல்லவும் திரைச்சீலைகள் அகலத் தொடங்கின. எல்லோரின் கவனமும் மேடையில் குவிந்தது. ஏற்றப்பட்ட சிறுவிளக்கின் வழியே பொன்நிற ஒளி சிந்திக்கொண்டிருந்தது. நூறு நரம்புகள்கொண்ட மூன்று யாழ்கள் மேடையின் மூன்று புறமும் இருந்தன. யாழை மீட்ட அருகே வந்த பெண்கலைஞர்கள் நரம்பின் மீது தம் விரலை மெள்ள நகர்த்தினர். அதிரும் நரம்பின் வழி இசை கசியத் தொடங்கியது.

கூட்டத்தின் ஆர்ப்பரிக்கும் குரல் மெள்ள ஒடுங்கத் தொடங்கியபோது நடனமங்கைகள் எழுவர் வந்து நடுக்களம் இறங்கினர். ஒரு மெல்லிய வட்டமடித்து அறுவரும் உட்கார, நடுவில் ஒருத்தி நின்றுகொண்டிருந்தாள். யாழிசை நின்றுவிட்டது. பிற இசைக்கருவிகள் எவையும் இசைக்கப்படவில்லை. விளக்கின் நாவுகள் தவிர, மேடையில் அசையும் பொருள் எதுவும் இல்லை. நடுவில் நிற்பது சிலையாகப் புலப்பட்டது. பார்வையாளர்கள் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர். யவனர்களுக்கு விளக்கிச் சொல்ல எதுவும் தேவைப்படவில்லை.

சற்று இடைவெளிக்குப் பின். சிலை மெள்ள அசைந்து, வலது காலைத் தூக்கி மேடையின் முன்புறம் சட்டென எவ்விக் குதித்தது. குதித்த அந்தத் துள்ளலுக்குள் அறுபது இசைக்கருவிகளும் இணைந்தன. யாழின் நரம்பும் முழவின் தோலும் பறையின் முகமும் ஏககாலத்தில் அதிர்ந்தன. குதித்த அவளின் காலடி தரைதொடும்போது நிலம் வெடிப்புறுவதைப்போல பேரோசை எழுந்தது. எழுந்த பேரொலின் மீது கூட்டத்தினரின் ஆர்ப்பரிப்பு விசைகொண்டு மோதியது.

இன்னும் அவளின் விழிகள் சுழலத் தொடங்க வில்லை. அதற்குள் நூறுகால் மண்டபத்தின் தூண்கள் ஆரவார ஓசையால் தள்ளாடத் தொடங்கின.

யதானதால் திசைவேழரின் நடையில் மட்டுமே தள்ளாட்டம் தெரிந்தது. அவரது கருத்தில் இருக்கும் உறுதி காலத்தால் அசைக்க முடியாததாகத் தோன்றியது. அவரிடம் கேட்க எவ்வளவோ இருந்தும்.

மிகமுக்கியமான கேள்வியை மட்டும் கேட்டார் சூல்கடல் முதுவன்.

“யவனர்கள் ஒரு நாளை 24 பகுதியாகப் பகுக்கின்றனர். காலவட்டத்தை 12 ஆண்டுகள் என  வகுக்கின்றனர். நாமோ ஒரு நாளை 60 நாழிகைகளாகப் பகுக்கிறோம். கால சுழற்சியின் வட்டத்தை 60 ஆண்டுகள் என வகுத்துக் கொண்டுள்ளோம். இதில் எது சரியானது?”

சற்று அமைதிக்குப் பின் திசைவேழர் பேசத் தொடங்கினார், “எது சரி, எது தவறு, என்று ஏன்  வரையறுக்க நினைக்கிறீர்கள்? காலத்தை ஒருபோதும் வரையறுக்க முடியாது. தட்டின் மீது உட்கார்ந்துகொண்டு தராசை எப்படி எடைபோடுவீர்கள்? பகுக்கப்பட்டதற்கான காரணத்தை அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். 

சனிக்கோளும் நிலவும் பிற விண்மீன் கூட்டங்களும் ஒரே அமைப்புக்கு மீண்டும் வந்து சேர 60 ஆண்டுகள் ஆகின்றன என்பதை நம் முன்னோர்கள் கணித்துள்ளனர்.  அதனால்தான் காலச்சுழற்சி வட்டத்தை 60 ஆண்டுகள் என வரையறுத்தனர். அதே அளவு வட்டத்தை ஒவ்வொரு நாளும் கொண்டுள்ளது என வரையறுத் தார்கள். எனவே, ஒரு நாளை 60 நாழிகைகளாகப் பகுத்துள்ளனர்.

எனக்கு யவனர்களின் கால அளவீடு தெரியாது. ஆனால், நீங்கள் சொன்ன குறிப்பில் இருந்து எனக்குத் தோன்றுவது. அவர்கள் வியாழன் கோளை அடிப்படையாகக்கொண்டு கால அட்டவணையை உருவாக்கியிருக்கலாம். வியாழன் ஒரு சுழற்சியை முழுமைகொள்ள 12 ஆண்டுகள் ஆகின்றன. அதையே சுழற்சி வட்டமாக வரையறுத்திருக்கலாம். அதன் அடிப்படையிலே பகலை 12 பகுதிகளாகவும் இரவை 12 பகுதிகளாகவும் பிரித்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.”

“இதில் எதைப் பின்பற்றுவது பொருத்தம்?”

“உனக்கு எது தேவைப்படுகிறதோ, அதை எடுத்துக்கொள். உழவனுக்குக் கதிரவனும் வணிகனுக்கு விண்மீனுமே அதிகம் தேவைப் படுகின்றன. இது பொதுவானது. எல்லா வணிகனின் தேவையும் ஒன்று அல்லவே, கடல் வணிகனின் தேவை இன்னும் அதிகத் துல்லியத்தை எதிர்பார்க்கக் கூடியது. எனவே உங்களுக்கானதை நீங்கள் தேர்வு செய்துகொள்ளுங்கள்.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 29

திசைவேழரின் மறுமொழி கேட்டு முதுவன் மெய்சிலிர்த்தான். என்ன ஒரு பரந்த அறிவு. இயற்கைக்கு முன் குறுகிநிற்கும் தன்னடக்கம். உண்மை எங்கிருந்தாலும் ஏற்கும் மனநிலை. அதுதான், இவரைப் பேராசானாகப் போற்றச் சொல்கிறது.

ளவரசன் பொதியவெற்பனைப் போற்றித்தான் அந்தப் பாடல்கள் அமைந்திருந்தன. ஆனால் ஆடல், பாடல், அழகு என மூன்றிலும் இணைசொல்ல முடியா ஒருத்தி அதைக் கலை என நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது அது கிளர்த்தும் உணர்வுக்கு அளவு ஏதும் இல்லை.

வழக்கமான வார்த்தைகள் எதுவும் இல்லாத புதுப்பொலிவுகொண்டிருந்தன; அவள் உச்சரிக்கும் வார்த்தைகள். சற்றே குள்ளமான பொதியவெற்பனின் உருவம் கூடலில் எவ்வளவு வாகானது என அவள் பாடும்போது, அவனால் இருக்கையில் எப்படி உட்கார்ந்திருக்க முடியும்.

அவன் இதுவரை நுகராத வாசனை அவன் மூக்குக்கு அருகில் மணம் வீசிச் சுழன்றாடிக் கொண்டிருந்தது. பொதியவெற்பனின் கண்கள் செருகின. இந்த உண்மைகள் எப்படி இவளுக்குத் தெரியும் எனத் தோன்றியது. மறுகணமே தனக்கு எப்படி இவள் தெரியாமல்போனாள் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு அடுத்த கணம் இவ்வளவு பேருக்குத் தெரிவதைப்போல இவள் ஏன் ஆடிக்கொண்டிருக்கிறாள் எனக் கோபம் வந்தது.

அவள் ஆடினாள்; அவன் அடங்கினான்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்