Published:Updated:

மன இரைச்சல் - கவிதை

மன இரைச்சல் - கவிதை
பிரீமியம் ஸ்டோரி
News
மன இரைச்சல் - கவிதை

கவிதை: ராகவ்.மகேஷ், படம்: எம்.விஜயகுமார்

மூன்றாம் எண் நடைமேடையில்
குழந்தை இடுப்பில் வைத்து கனத்த பையைத்
தூக்காமல் தூக்கிச் செல்லும்
அவளைத் தெரிகிறதா?

மன இரைச்சல் - கவிதை

அலைபேசித் தொடுதிரையைப்
பயத்தோடு பார்த்து பவ்யமாகப் பதிலளித்து
மௌனம் சுமக்கிறாள்

விடுமுறை வெயிலில் வியர்வைப் பிசுக்கோடு
அடம் செய்யும் குழந்தையை அடித்துவிடாமல்
பொறுமை பூக்கிறாள்

அம்மாவின் தயிர்சாதப் பொட்டலம்
வராத பசியை வரவழைத்துக்கொண்டிருக்க
பிஸ்கட் பாக்கெட் பிரித்து
குழந்தைக்கு நீட்டுகிறாள்

சோழன் விரைவு வண்டி
மூன்றாவது பிளாட்பாரத்தினுள் நுழைவதாக வரும்
பெண்குரலை கவனத்தில் கொள்கிறாள்

ஆயுட்கால அவஸ்தையோடு
மாதாந்தர அவஸ்தையும் சேர்ந்துகொள்ள
முன்பதிவற்ற பெட்டியைத் தேடியபடி நகர்கிறாள்

அவளது ஆழ்மனதின் இரைச்சலை
ரயில் பெரும் சத்தமாக மொழிபெயர்த்தபடி
வந்து நிற்கிறது!