மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடல் தொடாத நதி - 9 - கதைக்குக் கலாய் பூசுகிற வேலை!

கடல் தொடாத நதி - 9 - கதைக்குக் கலாய் பூசுகிற வேலை!
பிரீமியம் ஸ்டோரி
News
கடல் தொடாத நதி - 9 - கதைக்குக் கலாய் பூசுகிற வேலை!

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

கடல் தொடாத நதி - 9 - கதைக்குக் கலாய் பூசுகிற வேலை!

பாவலர் குடும்பத்தில் கங்கை அமரன் ஒரு தனி ரகம் என்று சொல்வேன். கலகலப்புதான் அமருடைய இயல்பு. எந்த சோகமான காலகட்டத்தையும் ஜஸ்ட் லைக் தட் ஊதித் தள்ளிவிடுவான். எதையும் விளையாட்டாக எடுத்துக்கொள்ளக் கூடிய பக்குவம் உள்ளவன்.

பாஸ்கர், இளையராஜா, அமரன் மூவரும் சென்னை வந்து ‘பாவலர் இசைக்குழு’ என்று ஆரம்பித்த காலம். அப்போது அவர்கள் இசை நிகழ்ச்சிகள் சில நடத்தி வந்தனர். அப்போதெல்லாம் போஸஸ் - தேவா இசைக்குழு சென்னையில் பிரபலம். இசையமைப்பாளர்கள் சந்திரபோஸும் தேவாவும் சினிமாவில் பிரபலம் அடைவதற்கு முன்பாக இணைந்து நடத்திய இசைக்குழு அது. அந்தக் காலத்தில் எல்லா பிரபலங்களும் போஸஸ் - தேவா இசைக்குழுவின் கச்சேரி வைத்து கல்யாணம் நடத்துவதை ஒரு பெருமையாக நினைப்பார்கள்.
 
புதிதாக வந்த பாவலர் குழுவுக்கு அவ்வளவாக வாய்ப்புகள் இல்லை. ஆர்கெஸ்ட்ராவும் பிரமாண்டமாக இருக்காது. தபேலா, ஆர்மோனியம், கிடார்... அவ்வளவுதான். ரிக்‌ஷா வைத்து எடுத்துச் செல்ல வேண்டுமானால் ரிக்‌ஷாக்காரர் 50 பைசா கேட்பார் என்பதால், சில நேரம் அவர்களே ஆளுக்கொரு இன்ஸ்ட்ரூமென்டைத் தூக்கிச் சென்று கச்சேரி செய்வார்கள். 

ஒரு நாள் அமர் என்னைத் தேடி வந்தான். ‘‘அரிசி வாங்க காசு வேண்டும்’’ என்றான்.

அப்போது நான் ஒன்றும் வசதியானவன் இல்லை. கதைகளுக்குக் கலாய் பூசுகிற வேலைதான் செய்துவந்தேன். கதை தயார் செய்கிறவர்கள், தங்கள் கதையை சினிமாவுக்கு ஏற்றமாதிரி ஒழுங்குபடுத்த என்னைக் கூப்பிடுவார்கள். கதையைக் கொஞ்சம் ரிப்பேர் செய்து தர வேண்டும். அதைத்தான் ‘கலாய் பூசுகிற வேலை’ என்போம். ஒரு கதைக்குக் கலாய் பூசிக் கொடுத்தால் 100 ரூபாயோ, 200 ரூபாயோ தேறும். ரெகுலராகக் கிடைக்கிற வேலை இல்லை. சில மாதம் கிடைக்கும்... சில மாதம் உதைக்கும்.

கடல் தொடாத நதி - 9 - கதைக்குக் கலாய் பூசுகிற வேலை!

அந்த மாதிரி ஒரு உதைக்கிற நேரத்தில்தான் அமர் வந்து உதவி கேட்டான். நான் எழுதிவைத்த கதை ஃபைல்கள் ஒரு ஓரமாக இருந்தன. ‘‘இதையெல்லாம் வேண்டுமானால் எடைக்குப் போட்டு அரிசி வாங்கிக்கொள்’’ என்றேன். ‘‘கதை?’’ என்றான். ‘‘எல்லாம் மனசுல பத்திரமா இருக்கு’’ என்றேன்.

எல்லா ஃபைல்களையும் எடுத்து அடுக்கினான். ஒரு பையில் போட்டுக்கொண்டு கிளம்பும்போது ஒரு வார்த்தை சொன்னான். அதுதான் அமர்... ‘‘கதை ஒண்ணும் வெயிட்டா இல்லையே?’’

அந்த விளையாட்டுத்தனம்தான் அவனை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது என்று நம்புகிறேன். ஆனால், ராஜாவுக்கு இந்த மாதிரி விளையாட் டெல்லாம் பிடிக்காது. எப்போதும் சீரியஸ் ரகம். சின்ஸியர் ரகம் என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

பெரிய டைரக்டர் - சின்ன டைரக்டர்... பிரமாண்டம் - லோ பட்ஜெட் என்றெல்லாம் இசையின் தரத்தை மாற்றிக்கொள்ளாதவன். மகா கலைஞன். என்னுடைய ‘அகல்விளக்கு’ படத்தில் அவன் இசையமைத்த பாடலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ‘ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே... காவேரி ஊற்றாகவே... காற்றோடு காற்றாகவே...’ இந்தப் பாட்டை உச்சரிக்காத ராஜாவின் ரசிகர்கள் இருப்பார்களா?

சமீபத்தில் ஒரு நாள் காலை... ராஜாவுக்கு போன் போட்டு, நான் இப்போது இயக்கியிருக்கும் ‘பச்சைக்குடை’ படத்துக்காக ரீரெக்கார்டிங் செய்து தருமாறு கேட்டேன். ஸ்டூடியோவுக்கு வரச் சொன்னான். ‘‘படத்தை எடுத்து முடித்து விட்டேன்’’ என்று சொல்லி, ‘பச்சைக்குடை’யின் டி.வி.டி-யைக் கொடுத்தேன். சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டான். என்னதான் உயிர் நண்பனாக இருந்தாலும் உள்ளுக்குள் பயம். பெரிய பில் போட்டுவிட்டால் என்ன செய்வது? ‘‘படத்தின் மொத்த பட்ஜெட்டே 16 லட்ச ரூபாய்தான்’’ என்றேன். ‘‘சரி... சரி... பாத்துக்கலாம்’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் ரீரெக்கார்டிங் செய்யும் இந்தக் காலத்தில், வெறும் 16 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் நான் எடுத்த படத்துக்கு அவன் பின்னணி இசைத்தான்.

படத்தின் டி.வி.டி-யைக் கொடுத்துவிட்டு வந்த சில நாட்களில் ராஜாவின் உதவியாளர் சுப்பையா அழைத்தார். ‘‘பின்னணி இசை ரெடி... வந்து வாங்கிக்கொள்ளுங்கள்’’ என்றார். ராஜா இருந்த பிஸியில் ஒரே நாளில் எப்படி சாத்தியம்? போனேன். ‘‘ராஜா சார் அந்தப் படத்தை இரண்டு முறை பார்த்துவிட்டார்’’ என்றார் சுப்பையா.

ராஜா வந்தான். ‘‘ரெக்கார்டிங் ஸ்டூடியோ எல்லாம் வேண்டாம். எடிட்டிங்லயே போஸ்ட் பண்ணிடு. பணம் மிச்சமாகும்’’ என்றான். ஒரு பைசாகூட வாங்கிக் கொள்ளவில்லை. அவனுக்காகப் பணத்தை வைத்துக்கொண்டு ஒரு பெருங்கூட்டம் காத்திருக்கும்போது, என்னிடம் ஒரு பைசாவும் வாங்கிக்கொள்ளாமல் ஓர் இசை ராஜாங்கமே நடத்திவிட்டான்.

கடல் தொடாத நதி - 9 - கதைக்குக் கலாய் பூசுகிற வேலை!

‘வனங்களை, மரங்களைக் காக்க வேண்டும்’ என்பதுதான் படத்தின் தீம். அதை முழுமையாக உணர்ந்து இசையமைத்துக்கொடுத்தான். நைஜீரியாவில் ஒரு பழங்கதை உண்டு. அந்த மக்கள் அவர்களின் குலதெய்வத்துக்கு ஒரு கோயில் கட்ட நினைக்கிறார்கள். கடவுள் ஒரு கேள்வி கேட்கிறார்: ‘‘எனக்குக் கோயில் கட்ட நினைக்கிறீர்களே... உங்களுக்கெல்லாம் வீடு இருக்கிறதா?’’

‘‘இல்லை’’ என்கிறார்கள். ‘‘உங்கள் எல்லோருக்கும் வீடு கிடைக்கும்வரை நான் இந்த மரத்திலேயே தங்கிக்கொள்கிறேன்’’ என்கிறது தெய்வம். நைஜீரிய மக்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கவில்லை. அதனால், அவர்களின் தெய்வம் இன்னமும் மரங்களில்தான் வசிப்பதாக அந்த மக்கள் நம்புகிறார்கள். மரத்தை அழிப்பதை தெய்வ குற்றமாக நினைக்கிறார்கள்.

‘பச்சைக்குடை’ கதையின் அடிநாதம் அதுதான். பழங்குடி மக்கள் தெய்வமாய்ப் போற்றி வணங்கும் காடுகளையும் மரங்களையும், நகரத்து மனிதர்கள் தங்கள் சுய தேவைக்காக அழிக்கப் பார்ப்பதும், அதை ஒரு பழங்குடிப் பெண்ணும் அவர் சகோதரரும் தடுத்துக் காப்பதும்தான் கதை.

ராஜாவின் இசையைக் கேட்டால் அந்தத் தொல்குடியின் பாரம்பர்யத்தை உணர முடியும்.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)

சம்பளத்தை திருப்பித் தந்த கதாநாயகி!

‘பச்சைக்குடை’யின் பிரீமியர் ஷோவுக்கு ஏற்பாடு செய்து, படத்தில் பங்காற்றிய அத்தனை நடிகர்கள், கலைஞர்களை அழைத்திருந்தேன். படம் முடிந்ததும் படத்தின் நாயகி நித்யா தாஸ், ‘‘சார்! ஒரு நிமிஷம்... இதோ வந்துவிடுகிறேன்’’ என்று அவருடைய கணவருடன் வெளியே போனார். சிறிது நேரத்தில் திரும்பி வந்தார். அவருடைய கையில் ரூபாய் கட்டுகள். அது நான் அவருக்கு சம்பளமாகக் கொடுத்த தொகை. ‘‘இவ்வளவு சமூக அக்கறை உள்ள படத்துக்கு நான் சம்பளம் வாங்குவது தப்பு சார். இதை நீங்களே வெச்சுக்கங்க’’ என்றார். உலகத்தில் வாங்கிய சம்பளத்தை அப்படியே திருப்பித் தந்த நடிகை யாராவது இருப்பார்களா? எவ்வளவு சொல்லியும் அவர் பணத்தை வாங்கிக்கொள்ளவே இல்லை. காரில் ஏறிப் பறந்துவிட்டார். ‘பச்சைக்குடை’ தந்த பசுமை நினைவு அது.