Published:Updated:

பரமேஸ்வரி அத்தையின் மகள் - சிறுகதை

பரமேஸ்வரி அத்தையின் மகள் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
பரமேஸ்வரி அத்தையின் மகள் - சிறுகதை

11.05.2017 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை...

ரமேஸ்வரி அத்தை சரியாகத்தான் சொல்லியிருக்கிறாள்.  அசோக் நகரில் உள்ள புகழ்பெற்ற பள்ளியை அடுத்த வலது, பிறகு இடது வளைவில்  உள்ள  மெடிக்கல்  ஸ்டோர், பல் மருத்துவமனையைத் தாண்டி நான்காவது பில்டிங். அத்தை சொன்ன மாதிரியே செங்காமட்டை கலரில் பெயின்ட் அடித்திருந்த அப்பார்ட்மென்ட்டை லட்சுமணனால் எளிதாகக் கண்டுபிடிக்க  முடிந்தது. வாசலில், அடையாளத்துக்குச் சொல்லப்பட்டிருந்த மாநகராட்சியின் பச்சை வண்ணக் குப்பைத் தொட்டியும் இருந்தது. ‘`இந்த பில்டிங்தான்'’ என்றபடி ஆட்டோவை நிறுத்தி இறங்கினான். காம்பவுண்டையொட்டி அமைந்திருந்த செக்யூரிட்டி அறையில் உள்ள பதிவேட்டில் கையெழுத்திட வேண்டியிருந்தது.

`‘யார் வீட்டுக்கு வந்திருக்கீங்க?'’

பரமேஸ்வரி அத்தையின் மகள் - சிறுகதை
பரமேஸ்வரி அத்தையின் மகள் - சிறுகதை

`‘C3. வசந்தா பாலசுப்பிரமணியம் வீடு'' என்று பதிலுரைத்தபடி பதிவேட்டில் `உறவினர்' என எழுதிக் கையெழுத்திட்டான்.

அப்போது அவனை அறியாமல் சிரிப்பு வந்தது. திருநெல்வேலியில் இருக்கும்போது நேதாஜி போஸ் மார்க்கெட்டில் உள்ள நூலகத்துக்குச் சென்று அவனும் வசந்தாவும் பதிவேட்டில் கையெழுத்திடுவதை நினைத்துப் பார்த்தான். கையெழுத்து போடுவதற்காகவே அவனும் வசந்தாவும் நூலகத்துக்குச் செல்வார்கள். ‘லைப்ரரிக்குப் போறோம்’ என்றால், இருவர் வீட்டிலும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.

லட்சுமணனைவிட வசந்தா ஆறு வயது பெரியவள். கனகராய முடுக்கு தெருவில் உள்ள ‘எட்டுக்குடி’ வளைவில் எதிரெதிர் வீட்டுக்காரர்கள். ``லட்சுமணன் கைப்பிள்ளையாக இருக்கும்போது அவனை ஒக்கலிலிருந்து இறக்காமல், பாவாடை சட்டை போட்டிருந்த வசந்தாதான் தூக்கிச் சுமந்தாள்'' என்பார்கள். ‘`கைப்பிள்ளன்னாலும் நல்லா தண்டியா இருப்பான். இவளுக்கும் ஏளெட்டு வயசுதாம்ளா இருக்கும். தூக்க முடியாம தூக்கிக்கிட்டுத்தான் ரேஷன் கடைக்கு, கோயிலுக்கு, ஆஸ்பத்திரிக்குன்னு அலைவா பாத்துக்கோ’' என்றும் சொல்வார்கள். லட்சுமணனை அவன் அம்மா குளிப்பாட்டித் துடைத்து முடித்ததும், பவுடர் போட்டுவிடுவது, கண் மை இடுவது, சட்டை போடுவது எல்லாமே வசந்தாதான். லட்சுமணனின் தாய் அருகில் நின்று பார்ப்பதோடு சரி.

அருணகிரியில் சினிமா பார்க்கப் போகும் போது லட்சுமணனின் அம்மா கேட்பாள், `‘நான் வேணா வெச்சுக்கிடுதேன்டி. வீட்லேருந்து நீதானே தூக்கிட்டு வாரே... கை வலிக்கும்லா!'’ என்றால், மூச்சு வாங்கியபடி தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வரும் வசந்தா, சம்மதிக்க மாட்டாள். ‘`அதெல்லாம் எனக்கொண்ணும் வலிக்கல. நீ முன்னால போ அத்த'’ என்பாள். லட்சுமணனும் வசந்தாவின் இடுப்பிலிருந்து இறங்குவேனா என்பான்.

பேச்சு வந்ததும், லட்சுமணன் சொன்ன முதல் மழலை வார்த்தை ‘க்க்கா’. பிறகு `சந்தக்கா'.

அதன் பிறகுதான் அம்மா, அப்பா, தாத்தா, ஆச்சி எல்லாம். வசந்தாக்காதான் அவன் வாயில் `சந்தக்கா' என வந்தது. அன்றிலிருந்து வசந்தாவை எட்டுக்குடி வளவு `சந்தக்கா' என்றே கேலியாக அழைத்தது.

லட்சுமணனை ‘லெச்சா’ என்று வசந்தாதான் முதலில் அழைத்தவள். அந்தப் பெயர் இன்று வரை நிலைத்துவிட்டது.

இப்போது, அவளது அப்பார்ட்மென்ட் வருகைப் பதிவேட்டில்கூட பெயர், முகவரி, வந்த நோக்கம், கைபேசி எண் எல்லாம் எழுதிக் கையெழுத்திடும்போது ‘லெச்சா’ என்றே கையெழுத்திட்டான் லட்சுமணன்.

முதுகுப்பை ஒன்றும், கைப்பை ஒன்றுமாக லிஃப்ட்டுக்குள் நுழையும்போது வசந்தா தன்னை எப்படி எதிர்கொள்ளப்போகிறாள் என்பதை நினைக்கும்போதே லட்சுமணனுக்குச் சிரிப்பு வந்தது.

பரமேஸ்வரி அத்தையிடம் முன்தினம் போனில் பேசும்போது, தான் வசந்தாவின் வீட்டுக்குச் செல்லவிருப்பதைச் சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருந்தான். இப்போது செக்யூரிட்டியிடமும், `‘ஐயா... போன் பண்ணி, இன்னார் வர்றாங்கன்னு சொல்லிராதீங்க. பன்னண்டு வருஷம் கழிச்சுப் பார்க்கப்போறேன்'' என்று வேண்டுகோளாகக் கேட்டுக்கொண்டான்.

‘`நியாயமா, யார் வர்றாங்கன்னு நாங்க இன்ஃபார்ம் பண்ணணும். நீங்க போங்க தம்பி. உங்களைப் பார்க்கும்போதே நீங்க எவ்வளவு சந்தோஷமா இருக்கீங்கன்னு தெரியுது'’ என்றார் செக்யூரிட்டி. அவரை ‘ஐயா’ என லட்சுமணன் அழைத்ததில் அவர் மகிழ்ந்திருந்தார்.

C3 வாசல் மரக்கதவில், சிறிய பிள்ளையாரைச் செதுக்கி சந்தனமும் குங்குமமும் வைக்கப் பட்டிருந்தன. மரக்கதவுக்கு முன், இரும்பு கிரில் கம்பிக் கதவும் இருந்தது. `இத்தனை பாதுகாப்பு தேவைப்படுகிறதுபோல' என நினைத்துக் கொண்டான் லட்சுமணன். கைப்பையைக் கீழே வைத்துவிட்டு, தேய்ந்துபோயிருந்த அழைப்புமணியை அழுத்திவிட்டுத் தயாராக நின்றான். கதவு திறக்க, சற்றுத் தாமதமானது. லென்ஸ் வழியாக வசந்தா பார்க்கிறாள் என்பதை யூகித்தான் லட்சுமணன். கதவைத் திறந்த வசந்தாவின் முகத்தில் நம்ப முடியாத சிரிப்பும் கோபமும் தெரிந்தன. தலையில் கொஞ்சம் நரையும், உடலில் நிறைய சதையுமாக வேறொரு வசந்தாவாக இருந்தாள். துளிர்த்த கண்ணீருடன் `‘லெச்சா'’ என்று கத்தினாள். ஆனால், குரல் எழவில்லை. அருகில் வந்து அவன் கையைப் பிடித்துக் கிள்ளினாள். கீழே இருந்த கைப்பையை தானே எடுத்தாள். உடைந்த குரலில், `‘உள்ளே வா மூதி'’ என்றபடி கைப்பையுடன் உள்ளே போனாள். பையை வைத்துவிட்டு கதவைச் சாத்திக்கொண்டே லட்சுமணனைத் திரும்பிப் பார்த்து, `‘உக்காரு'’ என்றவள், ஃபேன் ஸ்விட்சைப் போட்டுவிட்டு லட்சுமணனின் அருகில் சோபாவில் உட்கார்ந்தாள். `‘அப்பம்... எங்களையெல்லாம் ஒனக்கு ஞாபகம் இருக்கு... அப்படித்தானல?'’ என்றாள்.

சிரித்தபடியே அவளைப் பார்த்த லட்சுமணன், `‘ஞாபகம் இருக்கப் போய்த்தானே தேடி வந்திருக்கோம்!’' என்றான்.

இப்போது எழுந்து அவன் அருகில் வந்தவள், இன்னொரு முறை அவன் தோளில் கிள்ளினாள். `‘யக்கா... யக்கா... வலிக்கி!'’ என்றான் லட்சுமணன்.

``நல்லா வலிக்கட்டும். எங்களுக்குல்லாம் எப்படி வலிச்சிருக்கும்? நீ காதலி, கல்யாணம் பண்ணு, கட்டமண்ணாப் போ. யாரு உன் கையப் புடிச்சு இளுத்தா? அதுக்காக ஒண்ணா மண்ணா வளந்த மனுஷாள் எல்லாரையும்லாலே விட்டுட்டு ஒரேயடியா வடக்கே ஓடிட்டே! ஒன்னல்லாம் வாரியலக் கொண்டு அடிக்காண்டாம்?'’ எனப் பேசிக் கொண்டே போனாள் வசந்தா. லட்சுமணனுக்கு ஏனோ சிரிப்புதான் வந்தது.

`‘இப்பம் என்னத்துக்குல சிரிக்கே?'’ வசந்தாவுக்குக் கோபம் அதிகரித்தது.

`‘இல்லக்கா. நீ இன்னும் நம்மூரு பாஷய மறக்கலியே. அதான் சிரிப்பு வந்தது'’ என்றான் லட்சுமணன்.

`‘பேச்ச மாத்தாதல படுக்காளி பயலே! ஒரு லெட்டர், ஒரு போன் பண்ணுனியால நீ?’'

‘`அதான் நேர்லயே வந்துட்டெம்லா?’'

`‘ஆ. . .மா! நேர்ல வந்து கிளிச்சான்.''

ஒரு லெட்டரோ போனோ பண்ணியிருக்கலாம் தான். லட்சுமணனுக்கு அதற்கெல்லாம் நேரமு மில்லை; சூழலும் சரியில்லை. பயத்தினால்தான் எவருடனும் தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை. பெரிய தெருவில் ஞானதுரை சார்வாளிடம் கெமிஸ்ட்ரி டியூஷன் படிக்கப்போன இடத்தில்தான் ஜெயராணி பழக்கமானாள். வசந்தாவுக்குக் கல்யாணம் ஆகி, சென்னைக்குக் கிளம்பிச் சென்ற சில மாதங்களிலேயே லட்சுமணனும் ஜெயராணியும் ஊரைவிட்டு ஓடுவது என்ற முடிவை எடுத்துவிட்டார்கள். படிப்பைக்கூட முடிக்கவில்லை.

கையில் இருந்த பணமும், ஜெயராணியிடம் கொஞ்சம் நகைகளும் இருக்கும் வரையில் சமாளிக்க முடிந்தது. பிறகு, பாஷை தெரியாத வடநாட்டில் நாய்ப்பாடு, பேய்ப்பாடு. இப்போதுதான் கொஞ்சம் நிமிர்ந்திருக் கிறார்கள். இப்போது ஊருக்குப் போனாலும் லட்சுமணனை வெட்ட இருவீட்டாரும் தயாராகத்தான் இருக்கிறார்கள்.

பரமேஸ்வரி அத்தையின் மகள் - சிறுகதை
பரமேஸ்வரி அத்தையின் மகள் - சிறுகதை

சென்னைக்கு வேலை நிமித்தமாகக் கிளம்பும்போது ஜெயராணிதான் சொன்னாள், ‘`உங்க வசந்தாக்கா மெட்ராஸ்லதானே இருக்காங்க? உங்க அம்மையையோ, எங்க அம்மையை யோதான் பார்க்க முடியாம ஆயிட்டு. அவங்களை யாவது பார்த்துட்டு வாங்க.'’
 
பரமேஸ்வரி அத்தையின் போன் நம்பரை, சென்ற மாதம்தான் வாரணாசியில் தற்செயலாகப் பார்த்த குற்றால அண்ணனிடம் வாங்கியிருந்தான். அப்போதுகூட குற்றால அண்ணன் எவ்வளவோ கேட்டும் தன்னுடைய கைபேசி எண்ணை லட்சுமணன் கொடுக்கவில்லை. ‘`உன் நம்பரைக் குடுண்ணே. நான் பேசுதேன்.'’

`‘உன் சாமர்த்தியம் எனக்கு வர மாட்டங்கேடே! சரி சரி. நல்லா இருக்கேல்லா? அது போதும்'’ என்றார், தூத்துக்குடிக்காரர்களை பக்திச் சுற்றுலாவுக்கு அழைத்து வந்திருந்த குற்றாலம் அண்ணன்.

அதென்னவோ பரமேஸ்வரி அத்தையின் போன் நம்பரை மட்டும்தான் வாங்கத் தோன்றியது. தன் பெற்றோர் குறித்த தகவல்களை அவ்வப்போது நதானியேலுக்குப் போன் பண்ணிக் கேட்டுக்கொள்வான்.

நதானியேலை நம்பலாம். அவன் ஜெயராணிக்கு உறவுக்காரன். அவன் இடத்தில் வேறு யார் இருந்தாலும் லட்சுமணனுக்கு உதவ மாட்டார்கள். ஏனென்றால், லட்சுமணன் ஜெயராணியுடன் இரவோடு இரவாக ஊரைவிட்டு ஓடிய பிறகு, இரண்டு வீட்டார்களும் நதானியேலைத்தான் துவைத்தெடுத்தார்கள். அத்தனை அவமானத் துக்குப் பிறகும், நதானியேல் வாயைத் திறக்கவில்லை. அந்தச் சமயம் உள்ளபடியே அவனுக்கு லட்சுமணன் எங்கு போயிருக்கிறான் எனத் தெரியாது. நாள் சென்ற பிறகு, ஏதோ ஒரு தொலைதூர எண்ணிலிருந்து லட்சுமணன் அழைத்தபோதுகூட நதானியேல் நிதானமாகவே பேசினான்.

லட்சுமணனுக்குத் தான் கூச்சமாகவும் குற்ற உணர்வாகவும் இருந்தது. இப்போது வசந்தா திட்டித் தீர்க்கும்போதும் அதே குற்ற உணர்வுதான். `எத்தனை ப்ரியம் வைத்திருக்கிற உறவுகளை எல்லாம் உதறிவிட்டு, இவ்வளவு காலம் தனித்திருந்துவிட்டோம்' எனத் தோன்றியது.

`‘சரி, அண்ணன் எங்கே?’' என்றான் லட்சுமணன்.

``இன்னிக்கு சீக்கிரமே ஆபீஸ் போயாச்சு.'’

‘`சாப்பிட வருவாங்கள்லா?'’

`‘இல்ல. மதியச்சாப்பாடெல்லாம் கட்டிக் குடுத்துட்டேன். இரி, அவாளுக்கு போன் பண்ணி நீ வந்திருக்கேன்னு சொல்லிருதேன். அப்புறம் ஏன் சொல்லலன்னு சத்தம்போடுவா.'’

எழுந்து அங்கும் இங்குமாக போனைத் தேடினாள் வசந்தா. `‘எளவு போன எங்கெயோ வெச்சுட்டேன்போலுக்கே! எல லெச்சா... கொஞ்சம் என் நம்பருக்கு அடி'’ என்றாள்.

`‘உன் நம்பர் எனக்கெப்படித் தெரியும்?’'

`‘அட்ரஸ் கண்டுப்புடிச்சு வந்தவன், போன் நம்பர் வாங்காமலயா இருந்திருப்ப? அடில..!'’ என்கவும், சிரித்தபடி பாக்கெட்டிலிருந்து போனை எடுத்து வசந்தாவின் எண்ணுக்கு டயல் செய்தான் லட்சுமணன்.

‘நிறம் மாறாத பூக்கள்’ படத்தின் ‘இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன...’ பாடலின் தொடக்கக் குரல்கள் இசையுடன் இணைந்து எங்கோ ஒலித்தன. கடைசியில் லட்சுமணனுக்குப் பக்கத்தில்தான் அந்த இசை ஒலித்ததை அறிந்த வசந்தா, அவனைத் தொட்டு எழுப்பி, `‘எந்தி, போன் மேலதான் நீ உக்காந்திருக்கே'’ என்றாள்.

மறுமுனையில் பாலசுப்பிரமணியம் உற்சாகமாகப் பேசியிருக்க வேண்டும். `‘இந்தா, அண்ணன் உன்கிட்ட பேசணுங்காங்க'’ என, போனை லட்சுமணனிடம் கொடுத்தாள், வசந்தா.

`‘வணக்கம்ணே, சும்மா இருக்கீங்களா?'' என்றான் லட்சுமணன்.

`‘சும்மா இருக்கோமோ, சுமந்துக்கிட்டு இருக்கோமோ... நீரு எங்களையெல்லாம் மறந்துட்டேருல்லாவே! உங்க அக்கா கல்யாணம் ஆன நாள்லேருந்து `எங்க லெச்சா... எங்க லெச்சா'ன்னு ஒரு நாளைக்கு முந்நூறு மட்டம் சொல்லுவா தெரியும்லா! என்னைய விடு, நான் அசல். கூடவே கிடந்த அக்காவை எப்படி மறந்தே?'’ என, லட்சுமணனைப் பேசவே விடவில்லை பாலசுப்பிரமணியம்.

போனை வாங்கிய வசந்தா, `‘சரிதான். அப்பம் வாங்க'’ என்றவள் போனை வைத்துவிட்டு, `‘உங்க அண்ணன் சாப்பிட வீட்டுக்கு வந்திருதேன் னாங்க'’ என்றாள்.

`நானும் போகாத கோயில் இல்ல பாத்துக்கோ. அவளும்தான் எத்தனையோ டாக்டர்கிட்ட போயிட்டு வந்துட்டா. உங்க மாமா பேரன் பேத்தியப் பார்க்காமலேயே கருப்பந்துறைக்குக் கிளம்பிட்டாரு. எனக்கு நம்பிக்கை இருக்கு.

எங்க அம்மைக்கு நாப்பது நெருங்கும்போதுதான் நான் பொறந்தேன். அதே மாதிரிதான் இவளுக்கும் பேறுகாலம் ஆகும்னு ஏற்கெனவே வன்னிக் கோனேந்தல் ஜோசியர் சொன்னாரு' என, பரமேஸ்வரி அத்தை, வசந்தாவுக்கு இன்னும் குழந்தை இல்லாததை இப்படி போனில் சொல்லியிருந்தாள். தனக்கு ஒன்றுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதைச் சொல்லலாமா, வேண்டாமா என மனதுக்குள் குழம்பிக் கொண்டிருந்தான் லட்சுமணன்.

ஒன்றாக அமர்ந்து மதியச் சாப்பாடு சாப்பிடும்போது பாலசுப்பிரமணியம் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். ‘`எங்களுக்குக் கல்யாணம் ஆகிக் கிளம்பும்போது நீ ரயில்வே ஸ்டேஷன்ல நின்னுக்கிட்டு அழுத அழுகை, இன்னும் என்னால மறக்க முடியலப்பா'’ பாலசுப்பிரமணியம் இப்படிச் சொல்லும்போது லட்சுமணனுக்கு வெட்கமாக இருந்தது. அகமதாபாத்தில் இருக்கும்போது எத்தனையோ முறை அந்தச் சம்பவத்தை நினைத்துப் பார்த்திருக்கிறான்; தன் மனைவியிடம் சொல்லிச் சிரித்திருக்கிறான்.

சொல்லப்போனால், வசந்தாவுக்குத் திருமணம் ஆனபோது, அவன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான். வசந்தாவின் கல்யாண வேலைகளில் சந்தோஷமாகச் சிரிப்பும் கேலியுமாகச் சுற்றிக்கொண்டுதான் இருந்தான். ஆனால், நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் அவள் கணவனுடன் சென்னைக்குக் கிளம்பும்போது அவனிடமிருந்த உற்சாகம் அனைத்தும் வடிந்துவிட்டன. ரயில் கிளம்பும் நேரம் நெருங்க நெருங்க அடிவயிற்றைப் பிசைந்துகொண்டுவந்தது. சீட் பார்த்து உட்கார வைத்துவிட்டு இறங்கி, ஜன்னலோரம் நிற்கும்போது கலங்க ஆரம்பித்தவன், ரயில் நகரும்போது வாய்விட்டு ‘சந்தக்கா...’ என அழுதான். ரயிலுக்குள் இருந்து வசந்தாவும் வாயைப் பொத்திக்கொண்டு கதறினாள். அதைத்தான் பாலசுப்பிரமணியம் இப்போது சொல்லிக்காட்டுகிறார்.

கேட்டுவிடக் கூடாதே என லட்சுமணன் அஞ்சிக்கொண்டிருந்த கேள்வியை, அடுத்துக் கேட்டார் பாலசுப்பிரமணியம். `‘உனக்கும் உன் காதல் மனைவிக்கும் எத்தனை பிள்ளைங்க? அதைச் சொல்லுப்பா'’ என்றார்.

சோற்றை முழுங்கியபடி, பரிமாறிக் கொண்டிருந்த வசந்தாவைப் பார்த்தான் லட்சுமணன். அவள் தன் கணவன் கேட்ட கேள்வியைக் கவனித்த மாதிரியும் தெரியவில்லை; லட்சுமணனின் முகத்தைப் பார்க்கவுமில்லை. சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டுகளில் காலியான பதார்த்தங்களை வைப்பதிலேயே மும்முரமாக இருந்தாள்.

`‘ரெண்டு பிள்ளேண்ணே. மூத்தது பொண்ணு. ரெண்டரை வயசாச்சு. பயலுக்கு இப்பதான் மூணு மாசம் ஆகுது'’ என்றான் லட்சுமணன்.
 
`‘சந்தோஷம்பா’' என்று பாலசுப்பிரமணியம் சொன்னபோதும் வசந்தாவிடம் எந்த உணர்வும் இல்லை. `‘பாத்தியா... மோரை வெளியே எடுக்க மறந்துட்டேன்'’ என, எழுந்து ஃபிரிட்ஜை நோக்கி ஓடினாள்.
பாலசுப்பிரமணியம் அன்று மதியத்துக்குமேல் விடுப்பு எடுத்துக்கொண்டது வசந்தாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. மண்டையிடிக் காய்ச்சல் என்றால்கூட மாத்திரையைப் போட்டுக்கொண்டு வேலைக்குப் போகிற ஆள், கொண்டுபோன சாப்பாட்டையும் எடுத்தபடி வீட்டுக்கு வந்து இப்போது லீவும் போட்டதை அவளால் நம்பவே முடியவில்லை.

``வாராதவன் வந்திருக்கான். அதான் லீவு போட்டேன்'’ என்று அதற்கான காரணம் சொன்னது அவளுக்கு நிறைவாக இருந்தது. ``சாயங்காலம் சினிமாவுக்குப் போயிட்டு, அப்படியே வெளியே சாப்பிடலாம்'’ என்றார் பாலசுப்பிரமணியம்.

`‘எதுக்கு வெட்டிச் செலவு? வீட்ல என்னமாது பண்ணுதேன்'’ என்று வசந்தா சொன்னதை, அவர் ஏற்கவில்லை.

`‘சும்மா கெட. லெச்சாகூட ஜாலியா பேசிக்கிட்டு, அப்படியே போயிட்டு வருவோம்’' என்றார்.

லட்சுமணனை தன் கணவனும் `லெச்சா' எனச் சொன்னதில், வசந்தாவுக்கு அத்தனை சந்தோஷம். `‘அண்ணே... வீட்ல இருந்து பேசிக்கிட்டிருப்போமே’' என்று லட்சுமணன் சொன்னதையும் அவர் ஏற்கவில்லை.

`‘நீயும் அவகூட சேந்துக்கிட்டு சொல்லாதப்பா. அதான் மத்தியான சாப்பாட்டுக்கு வீட்ல இருந்தாச்சுல்லா... அப்புறமென்ன?'’ என்றார். இரண்டு நாள் அலுவலகப் பயிற்சி நடக்கவிருக்கும் கிண்டிப் பகுதியில் தனக்கு அறை ஒதுக்கப் பட்டிருப்பதை லட்சுமணன் சொன்னபோது, `‘அதெல்லாம் ஒண்ணும் வேணாம். இங்கேயே தங்கு. நாங்க பொறகு எதுக்கு இருக்கோம்?’' என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.

‘`ஆ . . .மா! இத்தன வருஷத்துல துரைக்கு ஒரு போன் பண்ணத்தோணல. பாசமில்லாத பய எங்கயும் இருந்துட்டுப்போறான். விடுங்க!’' என்று வேடிக்கையாக வசந்தா சொன்னதற்கு லட்சுமணனிடம் சிரிப்புதான் பதிலாக வந்தது.

நெரிசல் நிறைந்த மாலில் உள்ள தியேட்டரில் படம் பார்க்கும்போது பாப்கார்னைக் கொறித்தபடி வசந்தா கேட்டாள்... `‘லெச்சா, நாம கடைசியா என்ன படம் பார்த்தோம்... சொல்லு பாப்போம்!'’ கொஞ்சம்கூட யோசிக்காமல் `` ‘தவமாய் தவமிருந்து’ '' என்றான் லட்சுமணன்.

``கல்யாணம் நிச்சயம் ஆயிட்டு, `சினிமாவுக் கெல்லாம் போகக் கூடாது'ன்னு மாமா சத்தம் போட்டா. அத்தைதானே சமாதானம் பண்ணி நம்ம ரெண்டு பேரையும் கூட்டிட்டுப்போனா!''

‘`படம் பார்த்துட்டு வரும்போது உங்க அத்தையும் நீயும் மூக்கைச் சிந்திக்கிட்டே வந்தேளே... ஞாபகம் இருக்கா?'’ சிரித்தபடி கேட்டாள் வசந்தா.

அவள் சினிமா பார்க்கும்போது அழ மாட்டாள். ஆனால், பரமேஸ்வரி அத்தையும் லட்சுமணனும் எல்லா படங்களுக்கும் அழுவார்கள். அதுவும் `தவமாய் தவமிருந்து’ பார்த்து அழுததில் லட்சுமணனுக்குக் காய்ச்சலே வந்துவிட்டது. ராதாகிருஷ்ணன் டாக்டரிடம் வசந்தாதான் கூட்டிக்கொண்டு போனாள்.

``ஏட்டி, கல்யாணம் நிச்சயமான பிள்ளை. உன்னை எப்படி வெளியே விட்டாங்க?’' என்று கேட்டபடியே, லட்சுமணனைப் பார்த்து `‘வேட்டிய எறக்குல. பெரிய வஸ்தாது மாதிரி கையல்லா மடக்குதான்’' என்று சொல்லி, ஊசி போட்டார் ராதாகிருஷ்ணன். லட்சுமணன் ஊசி வலியையும் பொறுக்க முடியாமல் கண்ணீர்விட்டான்.

பரமேஸ்வரி அத்தையின் மகள் - சிறுகதை
பரமேஸ்வரி அத்தையின் மகள் - சிறுகதை

அதை நினைத்து இருவரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். இதற்குள் இன்னொரு பாப்கார்னும் குளிர்பானங்களும் வாங்கி வந்த பாலசுப்பிரமணியம், ‘`எனக்கும் கொஞ்சம் சொல்லிட்டுச் சிரிச்சீங்கன்னா, நானும் சேர்ந்து சிரிப்பேன்லா’' என்றபடி அருகில் வந்து அமர்ந்தார்.

லட்சுமணனுக்குப் படத்தில் ஒன்ற முடியவில்லை. `எல்லாம் இருக்கின்றன. சந்தோஷ மாகத்தான் இருக்கிறார்கள். வசந்தாக்காவை நன்றாக வைத்திருக்கிறார். இருந்தாலும்...அவர்கள் பார்க்கும் மருத்துவம் குறித்து ஏதேனும் பேசிப்பார்க்கலாமா? அப்படியே பேசுவதாக இருந்தாலும் யாரிடம் பேசுவது? வசந்தா அக்காவிடமா, அண்ணனிடமா?’ இந்தச் சமயத்தில் சைக்கிள் கடை நம்பி மாமா கேலி பண்ணுனுது நினைவுக்கு வந்தது.

‘ஏ... லெச்சுமணா! அம்மைக்காரியை அத்தைங்கே! அவ மகள அக்காங்கெ! அதெப்படிடே? நாளைக்கு அவளுக்கு கல்யாணம் ஆனா, அவ மாப்பிள்ளைய அத்தான்பியோ?'

அதென்னவோ பரமேஸ்வரி அத்தையின் மகள் வசந்தாவை `அக்கா' என்று அழைத்தது மாதிரி, அவளது கணவனை பெண் பார்க்க வரும்போதே லட்சுமணன் ‘அண்ணன்’ என்றுதான் அழைத்தான். அவன் மனதில் அதுதான் பதிந்திருக்கிறது.

மறுநாள், அதிகாலையிலேயே லட்சுமணன் கிளம்பவேண்டியிருந்தது. முதல் நாள் இரவே சொல்லிவிட்டான், ‘`நீங்க சாவகாசமா தூங்கி எந்திரிங்க. நான் காலையில கிளம்பிப் போயிருவேன். மீட்டிங்லாம் முடிஞ்சு வர ராத்திரி லேட் ஆயிரும்.'’

ஹாலில் உள்ள சோபாவிலேயே லட்சுமணன் படுத்துத் தூங்கியிருந்தான். கைபேசியில் உள்ள அலாரம் அடிக்கும்போது வசந்தாவோ பாலசுப்பிரமணியமோ எழுந்துவிடக் கூடாதே என்ற பதற்றத்தில், தூக்கக் கலக்கத்துடன் வேக வேகமாக கைபேசியை அணைத்தான். சத்தமில்லாமல் எழுந்து, குளியலறைக்குச் சென்று, பல் தேய்த்து, குளித்து, உடை மாற்றி வெளியே வரும்போது வசந்தா எழுந்திருந்தாள். டைனிங் டேபிளில் ஒரு பெரிய டம்ளரில் காபி இருந்தது. ‘`அதுக்குள்ள எந்திரிச்சுட்டியா? நான்தான் ராத்திரியே சொன்னெம்லா... காபி போற வழியில குடிச்சுக்கிட மாட்டேனா?’' என்றபடி காபி டம்ளரை எடுத்தான். ‘`யப்பா! என்னா கொதிகொதிக்கி!'’ டேபிளில் வைத்துவிட்டு உட்கார்ந்தான். வட்டகையைக் கொண்டுவந்து, டம்ளரில் உள்ள காபியை ஆற்றி, லட்சுமணனின் கையில் கொடுத்தாள் வசந்தா. ஊதிக் குடித்தபடி, ‘`ராத்திரி நான் சாப்பிட்டு வந்திருவேன்க்கா.

நீ எதுவும் செய்யாதே’' என்றான். ‘`போகும்போது உன் பையையெல்லாம் எடுத்துக்கிட்டுப் போயிரு. உனக்கு அங்கே ரூம் போட்டிருக்காங்கன்னு சொன்னெல்லா'’ என்றாள் வசந்தா.

காபியை முழுங்கியபடி, ‘`ஓகோ! நீங்க சொன்னா அந்தாக்ல நாங்க பொட்டியத் தூக்கிட்டுப் போயிருவோமாக்கும். எங்க அண்ணன் வீடு இது, தெரிஞ்சுக்கோ!'’ என்று லட்சுமணன் சொல்லவும், ‘`உன்னைக் கிளம்பச் சொன்னதே உங்க அண்ணன்தாம்ல, கோட்டிக்காரப்பயலே. அந்த பேதீல போவான் எந்திரிக்கிறதுக்குள்ள கிளம்பு, நல்லாயிருப்ப`’ என, சாத்தியிருந்த தன் கணவனின் படுக்கையறையின் கதவைப் பார்த்தபடி, குரல் தாழ்த்திக் கண் கலங்கியவாறே லட்சுமணனைப் பார்த்து கைகூப்பிச் சொன்னாள் வசந்தா.

- சுகா,

ஓவியங்கள்: செந்தில்

(11.05.2017 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)