மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 30

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

நண்பகலுக்குப் பின்னர்தான் எல்லோரும் படுக்கையைவிட்டு எழுந்தனர்.  முந்தையநாள் கொண்டாட்டம் முடிந்ததென்னவோ அதிகாலையில் தான். உறங்கிய பிறகு, கனவில் தொடர்ந்த ஆட்டங்கள் எப்போது முடிந்திருக்குமோ யார் அறிவார்?. மாலை நேரம் நெருங்கும் வேளையில் சித்திர மாளிகைக்கு ஒவ்வொருவராக வரத் தொடங்கினர்.

பேரரசர் வரும் நேரம் அறிந்து ஏற்பாடுகள் ஆயத்தமாயின. பாண்டிய நாட்டின் பெரும்படைத் தளபதி கருங்கைவாணன் நேற்றுதான் தலைநகர் திரும்பியிருந்தான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 30

கருங்கைவாணனைப் போன்ற ஒரு மாவீரன் எப்பேரரசுக்கும் தளபதியாய் அமைந்ததில்லை என்றே சொல்கின்றனர். அவன் தளபதியாக வழிநடத்திச் சென்ற எல்லா போர்களிலும் இணையற்ற வெற்றிகளே கிடைத்துள்ளன. பேரரசுக்கு வெற்றி கிடைப்பது அரிய செய்தியல்ல. ஆனால், அவனடைந்த வெற்றிகள் அனைத்தும் சோதித்துப் பார்த்து அடைந்த வெற்றிகள்.

எதிரிகள் வீசும் அம்புகளுக்கு இடையில் போர்க்கலையின் பயிற்சியை நிகழ்த்த அளவற்ற திறன் வேண்டும். அவன் எதிரிகளை வைத்துப் போரினை அறியவே முயல்கிறான். போர் தொடங்கிய சில நாழிகைகளிலேயே களத்தின் ஒவ்வோர் இயக்கமும் அவனால்  கணிக்கப்பட்ட வடிவத்துக்குள் வந்துவிடுகிறது. எதிரிகள் அவன் சொற்பேச்சைக் கேட்டு வந்துசேருவதைப் போலத்தான் அவனது திட்டத்துக்குள் தலை நுழைத்து எட்டிப்பார்க்கின்றனர். பார்த்துக் கொண்டிருக்கும்போதே தலைகள் உடலைவிட்டு தள்ளிப்போய் விழுகின்றன.

நாடுகளைப் பிடிப்பதென்ற நிலையைக் கடந்து குறிப்பிட்ட மக்கள்குலங்களைத் தேடித்தேடி வேட்டையாடுகின்றனர். எல்லாவிதத் திறன்களையும் சேகரித்துக்கொள்ள வேண்டியது ஒரு பேரரசின் தேவையாக இருக்கிறது. இப்போதுகூட குறிப்பிட்டதொரு குலத்தை வெற்றிகொண்டுதான் திரும்பியிருக்கிறான். இத்திருமணத்தை முன்னிட்டு சூல்கடல் முதுவனுக்கு மிகச்சிறந்த பரிசைத் தர பேரரசர் விருப்பப்பட்டார்.

அதற்காகவே, பெரும்தாக்குதல் நடத்தப்பட்டது. சிலநூறு பேரைப் பிடிக்க பல்லாயிரம் வீரர்கள் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல். வழக்கமாக தாக்குதல் முடிந்து படைகள் பாசறைக்குத் திரும்பினால், தலைநகர் முழுவதும் அவர்களின் வீரக்கதைகள்தான் பேசப்படும். ஆனால்,  இப்போது அதையெல்லாம் பேச யாருமில்லை.  முந்தையநாள் பெருவிருந்தில் யார் எங்கே குடைசாய்ந்தனர் என்பதுதான் பேச்சாக இருக்கிறது.

ந்திறங்கிய யவன அழகிகளைப் பற்றிப் பேசாதவர்கள் யாருமில்லை. ஒளிகுன்றாப் பேரழகு என்று பார்த்தோர் சொல்கின்றனர். யவனத் தளபதிகளும் பாண்டிய நாட்டைப்பார்த்து வியந்துபோயிருந்தனர். மேற்கூரை மூடப்பட்ட நூற்றுக்கால் அரங்கே அவர்களைப் பெருவியப்பில் ஆழ்த்தியதாக மொழிபெயர்ப்பாளர்கள் கூறினர். அவர்கள் நாட்டில் உள்ளதெல்லாம் மூடப்படாத திறந்தவெளி அரங்குகள்தானாம்.

பேச்சினூடே ஒவ்வொருவராகச் சித்திர மாளிகைக்கு வந்து சேர்ந்தனர். வணிகர்குலத் தலைவர்கள் நால்வர் உள்ளே நுழைந்தபோது இளவரசனும் கருங்கைவாணனும் சாகலைவனும் அங்கே இருந்தனர். முசுகுந்தரும் வெள்ளி கொண்டாரும் உள்நுழைந்தனர். இன்னும் சற்றுநேரத்தில் பேரரசரும் சூல்கடல் முதுவனும் வந்துவிடுவார்கள் எனச் செய்தி சொன்னார்கள். பணியாள்கள் பளிங்குக் குவளைகளில் தேறலை ஊற்ற  ஆயத்தமாயினர்.

“நேற்றைய கொண்டாட்டத்தில், மேற்கூரையிலிருந்து தொங்கும் கயிற்றைப் பிடித்துக்கொண்டு அந்தரத்தில் ஒருத்தி ஆடினாளே, இப்போதும் என்னால் அதை நம்ப முடியவில்லை” என்றான் சாகலைவன்.
“அவள் தந்தரையில் ஆடினால்கூட நமது கண்களால் நம்பமுடியாமல்தான் இருந்திருக்கும்” என்றார் கருங்கைவாணன்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 30

பேசிக்கொண்டிருக்கும்போது வெள்ளி கொண்டார் கேட்டார், “அந்த ஆட்டம் எப்பொழுது நிகழ்ந்தது?”

எல்லோரும் சிரித்தனர்.

“உங்களின் ஆட்டம் தொடங்கிய பின்னால் தான்” என்றான் சாகலைவன்.

“அவளாவது கயிற்றைப் பிடித்து ஆடினாள். நீங்களோ காற்றைப்பிடித்தே ஆடினீர்கள்” என்றார் முசுகுந்தர்.

சிரிப்பு அரங்கை நிறைத்தது.

பேரரசர் வரும் அறிவிப்பு ஓசை கேட்டது. சிரிப்பொலியை அடக்கி, வாயில் நோக்கி வணங்கி நின்றனர்.

தேறல் மட்டுந்தான் அருந்தும்போது தரும் மயக்கத்தை, அதன் மணத்தை நுகரும்போதே தந்துவிடும் சிறப்பைக்கொண்டது. அதனாலேயே குவளையில் ஏந்தியபடி மோந்தும் விலக்கியுமாக ஒரு விளையாட்டை விளையாடுவர். 
 
மூக்கில் ஏறும் மயக்கம் கணநேரத்திலேயே நடு உச்சியைத் தொட்டுத் திரும்புகிறது. கலையாமல் இருக்கும் மேகம்போல அது உச்சந்தலையில் நீண்டு நிலைகொள்ளும். எப்போது குடிக்கத் தொடங்குகிறீர்களோ அதன்பின், அது வயிற்றோடும் எரிகொள்ளும் மயக்கத்தோடும்  தொடர்புடையதாகிவிடுகிறது. எனவே, முதல் மிடறை அருந்தும் வரை மயங்கும் காலத்தை நீட்டித்துச் செல்பவன்தான் தேறலில் தேர்ந்தவனாகிறான்.

இங்கிருப்பவர்கள் எல்லோரும் தேர்ந்தவர்கள் தான். ஏந்திய குவளையை மூக்குகள் நுகர்ந்தபடி பேச்சுக்கள் மட்டுமே சுழன்றுகொண்டிருந்தன. அரங்கின் ஆட்டம் பற்றிப் பேசுதல் மிதக்கும் மனநிலைக்கு மெருகேற்றியது. “திரைச்சீலை விலக மறுத்த கணத்தில் பணியாளன் ஒருவன் ஓடிப்போய் அதனைச் சரிசெய்தான். அது தற்செயலான நிகழ்வு என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால், அரங்கினரின் கவனம் முழுவதையும் திரைச்சீலையில் நிறுத்தி, தனது சீலையை மாற்றி சுழன்று உள்நுழைந்தாளே அவள். அந்தக் கணம்தான் நேற்றைய ஆட்டத்தின் உச்சம்” என்றார் முசுகுந்தர்.

தேறலை அருந்தியபடி பொதியவெற்பனின் வாய் முணுமுணுத்தது, “உச்சத்தை அறிந்தவன் நான் மட்டுமே!”

எல்லோரும் ஆடல் அரங்கையே பேசிக் கொண்டிருக்க, சூல்கடல் முதுவன் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்துப் பேரரசர் கேட்டார்... ”நீங்கள் பேரரங்கில் கலந்துகொள்ளவில்லையா?”

“இல்லை அரசே. நான் திசைவேழரைக்  காணப் போயிருந்தேன். மிகப்பயனுள்ள பொழுதாக அது அமைந்தது.”

“நீங்கள் அடைந்த பயனை எங்களோடு பகிர்ந்துகொள்ளலாமா?”

“யவனர்களுக்கும் நமக்குமான வானியல் வேறுபாட்டைப் பற்றி, பொருத்தமானவரிடம் உரையாட வேண்டும் என நீண்டநாள் நினைத் திருந்தேன். அது நேற்றுதான் நிறைவேறியது.”

“திசைவேழர் வானியலின் பேராசான். நீங்களோ கடல் வணிகத்தின் பெருமுதுவன். இருவரும் உரையாடினால் எவ்வளவு அறிவார்ந்த உரையாடலாக அது இருந்திருக்கும். எனக்குக் கேட்க வாய்ப்பின்றிப் போய்விட்டதே.”

பேரரசரின் இச்சொல் சூல்கடல் முதுவனை நாணச்செய்தது.

“யவனர்கள் பெரும்பேரரசை ஆண்டு கொண்டிருப்பவர்கள். நம்மை அவர்களோடு ஒப்பிட முடியாது. ஆனாலும், இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. அப்படித்தானே முதுவரே?” என்று கேட்டார் முசுகுந்தர்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 30

"ஆம்” என்றார் முதுவன். “கொள்வதற்கு விலையில்லாச் செல்வம் அவர்களிடம் உண்டு, கொடுக்கவோ ஒப்பிடமுடியா வளம் நம்மிடம் உண்டு. இப்பெரும் வணிகம் நடக்கும் கடலை நாம் ‘நேமி’ என்கிறோம்; அவர்களும் இதைப்போன்றே சொல்கின்றனர். நாம் வட்டத்தை ‘திகிரி’ என்கிறோம்; அவர்களோ ‘டிகிரி’ என்கின்றனர். காலத்தின் அளவீடுகளை நாம் ‘ஓரை’ என்கிறோம்; அவர்களோ ‘ஹோவர்’ என்கின்றனர். வெம்மையைக் குளுமையாக்கும் அதிசய மரமாக நமக்கு ‘வேம்பு’ இருக்கிறது; அவர்களுக்கோ ‘ஆலிவ்’. இரண்டின் இலையிலும் இருப்பது ஒரே கசப்பு. இரண்டின் நிழலிலும் இருப்பது ஒரே குளுமை. நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வணிகத்தால் எவ்வளவோ கொடுக்கல் வாங்கல் நடந்திருக்கிறது”. 
 
”இவ்வணிகம் அவர்களின் தேவையில் இருந்துதான் தொடங்கி வளர்ந்தது. அதற்கான மாற்று ஈடாகத்தான் நாம் பலவற்றைப் பெற்றுக்கொள்கிறோம். அந்தத் தொடக்க கட்டத்திலிருந்து நாம் வெகுதூரம் முன்னோக்கி வந்துவிட்டோம். இப்போதைய நிலையில் கடல் வணிகத்தில் நமது கை ஓங்க வழியென்ன?” எனக் கேட்டார் முசுகுந்தர்.

கற்பனைக்கான மயக்கத்துக்கு இப்போது தேறலோ, நேற்றைய ஆட்டத்தின் நினைவோ தேவைப்படவில்லை; வணிகத்தின் பெருங்கனவே போதுமானதாக இருந்தது.

 “கனவென்பது உண்மையின் மீது அகலாத திரையைப்போலப் படிந்தே கிடக்க வேண்டும். காதலுக்குத்தான் அத்தகைய கனவை உருவாக்கும் வல்லமை உண்டு. அதனாலேயே கைகூடாத காதலுக்கு பெருந்தண்டனையைக் கனவுகளே அளிக்கின்றன” என்றாள் பொற்சுவை.

வைகையின் கரையோரம் பூவிலி மன்றத்தில் இருந்து ஓடும் நதியைப் பார்த்துக்கொண்டே பொற்சுவை கூறியது சுகமதிக்கு அதிர்ச்சியைத் தந்தது.

சக்கரவாகப்பறவை கடலின் குறியீடாக மட்டுமல்ல, காதலின் குறியீடாகவும் இருக்கிறது. எனவே, அவ்விடம்விட்டு வெளியில் வருதல் நலம் எனத் தோன்றியதால், வைகைக்கரைக்கு அழைத்துவந்தாள் சுகமதி.

``நதி கனவோடும் காதலோடும் கலந்த ஒன்றல்லவா? அதுவும் வைகை, காதலர் திருவிழாவைக் காலங்காலமாகத் தனது உள்ளங்கையில் வைத்துக்கொண்டாடும் நதியல்லவா? இங்கு வந்தால் வேறு எதன் நினைவு வரும் என்று நீ நினைத்தாய்?” எனக் கேட்டாள் பொற்சுவை.

”வைகையைத் தமிழ்நதி என்றுதானே புலவர்கள் அழைக்கின்றனர். அதனால் உங்களின் நினைவு இலக்கியத்தின்பால் செல்லும் என நினைத்தேன்” என்றாள் சுகமதி.

 “இலக்கியமும் காதலும் வெவ்வேறா சுகமதி?” எனக் கேட்டவள் கூறினாள், “நீ கப்பலுக்குள் இருக்கும் நீரணி மன்றத்தில் நாட்டியம் பார்த்திருக்கிறாயா?”

 “ஒரே ஒரு முறை, மணிவாய்த்தீவுக்குப் போகும்போது உங்களோடு சேர்ந்து பார்த்திருக்கிறேன்”.

“அப்போது என்ன நடந்தது என்று  நினைவுபடுத்திப் பார். நடனமாடுபவளின் கால்களை நாம் வியந்து பார்த்துக் கொண்டி ருப்போம். ஆனால், அதைவிட அதிகமாக நாம் ஆடிக்கொண்டிருப்போம். எது நடனம் என்ற குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். இலக்கியமும் காதலும் அப்படித்தான். எது இலக்கியம், எது காதல், என்பதைப் பிரித்தறிய முடியாது. ஒன்றின் நிழலாக இன்னொன்று இருக்கும். ஆனால், எது நிழல் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 30

சுகமதி வாயடைத்துப்போனாள்.

வைகையின் சிற்றலைகள் அடுத்தடுத்து வந்து பொற்சுவையின் கால்களை நனைத்து போயின. ஆடையின் கீழ்விளிம்பு முழுவதும் ஈரமானது.

“நேற்று ஆடலரங்குக்கு நீங்கள் ஏன் வரவில்லை என்றும், ‘நீயாவது சொல்லி அழைத்துவர வேண்டாமா?’என்றும் பலர் என்னைக் கேட்டனர்”.

“நீ என்ன சொன்னாய்?”

“பொற்சுவை மிகச்சிறந்த நடனமங்கை. யாருடைய ஆட்டத்தைப் பார்க்க வேண்டும் என்று அவருக்குத் தெரியாதா?” எனப் பதிலுக்குக் கேட்டேன்.

மறுமொழியால் மகிழ்ந்த பொற்சுவை கேட்டாள், “நான் சிறந்த நடன மங்கையா சுகமதி?”

“இதில் என்ன ஐயம்? நீங்கள் ஆடிய ஆட்டத்தைக் கண்டு மயங்கியவன்தானே அந்த மாவீரன்.”

கேலிச் சிரிப்பொன்றை உதிர்த்தபடி பொற்சுவை கேட்டாள், ``நீ எதற்காக என்னை வைகைக்கரைக்கு அழைத்து வந்தாய்? இப்போது எதை நினைவூட்டுகிறாய் எனக்  கவனித்தாயா?”

அப்போதுதான் சுகமதிக்கு தான் செய்த தவறு புரிந்தது. நாக்கை மடக்கிக் கடித்தாள்.

“தப்பிக்க முடியாது சுகமதி. நானும் நீயும் காதலைவிட்டு ஒருபோதும் தப்பிக்க முடியாது. ஆடையின் கீழ்விளிம்பை நதிநீரும், கழுத்தின் மேல்விளிம்பைக் கண்ணீரும் கடந்து கொண்டிருக்கின்றன. நாம் என்ன செய்ய முடியும்?”

“இப்படியொரு மயக்கம் உள்ளுக்குள் சுழல ஆரம்பித்தால் யார்தான் என்ன செய்ய முடியும்?” தேறலின் சுவையை இதழ்கள் பருகத் தொடங்கிய நேரத்தில் சூல்கடல் முதுவன் பேசத் தொடங்கினான்.

“யவனத்தேறல் இதனினும் கடுஞ்சுவைகொண்டது. ஆனால், மணமற்றது. பாண்டிய நாட்டுத் தேறலின் தனிச்சுவையே மணத்தாலேயே மயக்குதல்தான்.”

“யவனத்தேறல் மணமற்றுப் போகலாம். ஆனால், யவன அழகிகள் பார்த்தாலே மயங்கவைக்கும்

வீரயுக நாயகன் வேள்பாரி - 30

மாயங்களன்றோ,  அவர்களை என்ன சொல்வது?”

ஏளனமாய் ஒரு சிரிப்புச் சிரித்தார் முதுவன்.

“இதில் சிரிக்க என்ன இருக்கிறது?” எனக் கேட்டார் முசுகுந்தர்.

“நீங்கள் பேரழகிகள் என்று வர்ணித்து மயங்குகிறீர்களே, அவர்களில் பெரும் பான்மையோர் யவன அழகிகள் அல்லர்.”

அவையிலிருந்த எல்லோருக்கும் உச்சியில் ஏறிய மயக்கம் சட்டெனக் கீழிறங்கியது. பேரரசர் திகைத்துப் போனார்.

முதுவன் அதனைக் கண்டுகொள்ளாமல் தேறலைப் பருகினான்.

“என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? அவர்கள் யவன அழகிகள் இல்லாமல் வேறு யார்?”

“அவர்கள் எல்லோரும் பாப்ரிகோன் அழகிகள். ஒரு சாயலில் யவன அழகிகள்போல் இருப்பார்கள். அவர்களைத்தான் கப்பலில் வந்து இறக்குகின்றனர். எங்களுக்கு உண்மை தெரியும் என்பதால், இம்முறை மூன்று பேரை மட்டும் யவனத்திலிருந்தும் மீதம் இருபதுக்கும் மேற்பட்டோரை பாப்ரிகோனிலிருந்தும் அழைத்துவந்து பரிசளித்தனர்”.

எல்லோரும் அதிர்ந்துபோனார்கள். சற்றே பதற்றமும் உருவானது.

“பரிசளிக்கப்பட்டவர்களில் மூவர் மட்டுந்தான் யவன அழகிகள் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?” எனக் கேட்டார் வெள்ளி கொண்டார்.

குவளையை மாற்றி, நிரப்பிய தேறலைக் கையிலேந்தியபடி முதுவன் சொன்னான், “நாங்கள் வணிகத்தில் பெரும்பொருள் ஈட்டு பவர்கள் மட்டுமல்ல; பெரும்பொருள் இழப்பவர்களும்தான்”

பேரரசருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி வெளிப்படையாகவே தெரிந்தது.

“இந்த ஏமாற்றம் ஒரு தரப்புக்கு மட்டும் என்று நினைத்துவிடாதீர்கள். இருதரப்புக்கும்தான் நிகழ்கிறது” என்றார் முதுவன்.

அந்தத் தரப்புக்கு என்ன நிகழ்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வத்தோடு இருந்தனர்.

“இங்கே வாங்கும் முத்துகளை பலநூறுமடங்கு விலைக்கு அவர்களின் சொந்தநாட்டினரிடம் விற்பனை செய்கின்றனர். உங்களுக்குத்  தருவனவற்றில் நிறமும் மூக்கும்தான் வேறுபடுகின்றன. அவர்களுக்குத் தருவனவற்றில் நூற்றுக்கு நூறு வேறுபடுகின்றன.”

எல்லோரும் வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

முதுவன் சொன்னான், “இதுதான் வணிகத்தின் நியதி. விற்கப்படும் இடத்தில் முடிவாகும் விலை, பொருளுக்கு மட்டுமல்ல; அதைப் பற்றிய அறியாமைக்கும் சேர்த்துத்தான்”.

“பலநூறு மடங்கு அதிகப்படுத்தி விற்கிறார்கள் என்றால், அதை ஏன் அவர்கள் மட்டும் பெற வேண்டும்?”

“இவ்வணிகப்பாதையின் கட்டமைப்பைக் கையில் வைத்திருப்பது அவர்கள்தானே.”

“அவர்கள் வைத்துள்ள கட்டமைப்பு என்ன என்பதனைச் சற்று விளக்கமாகச் சொல்லுங்கள். அதன்பின், நாம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி சிந்திக்கலாம்” என்றார் முசுகுந்தர்.

“இ
னிமேல் சிந்திக்க என்னடி இருக்கிறது. எல்லாம் முடிந்துவிட்டது.”

“என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. எதனால் தங்கள் தந்தை இந்த முடிவை எடுத்தார்?”

“பாண்டிய நாட்டு முத்துகள் நூறுமடங்கு அதிக விலைக்கு யவனத்தில் விற்பனையாவதை அறிந்துதான்.”

“அதற்காகவா எடுத்திருப்பார்?”

வீரயுக நாயகன் வேள்பாரி - 30

“வேறு எதற்காக எடுத்தார்? மிளகின் விலை இதைவிட அதிகமாக இருந்திருக்குமேயானால் இத்தனை கப்பல்களும் முசிறியில்தானே நங்கூரம் பாய்ச்சியிருக்கும். இந்நேரம் நாம் இருவரும் பேரியாற்றின் கரையில் பேசிக் கொண்டிருந்திருப்போம்.”

சுகமதி திகைத்தபடி நிற்க, பொற்சுவை தொடர்ந்தாள்... “யவனர்கள் எண்ணற்ற அழகிகளைக் கொண்டுவந்துள்ளதாகக் கூறினாயே, அதற்கு என்ன காரணமோ, அதே காரணம்தான் என் தந்தை என்னைக் கொண்டு வந்துள்ளதற்கும்.”

சுகமதி உறைந்து நின்றாள்.

வைகையைப் பார்த்தபடியே பேசிக் கொண்டிருந்தாள் பொற்சுவை. “ஓடும் நீருக்குள் உறங்கும் நதி” என்று மனதுக்குள் ஒரு வரி தோன்றியது. அதுதான் பெண் எனவும் தோன்றியது”.

சுகமதி அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

பொற்சுவை சுகமதியைப் பார்த்துக் கேட்டாள், “என்ன சுகமதி பேச்சற்றுப் போனாய்?”

“இல்லை… ஒன்றுமில்லை…” எனச் சொல்லி தனது உணர்வை மறைக்கப் பார்த்தாள்.

“நீயும் நானும் மட்டுமல்ல, இப்பூவிலி மன்றத்தில் வந்து நின்ற எல்லா பெண்களின் கண்களும் இப்படிக் கலங்கித்தான் இருந்திருக் கின்றன. அதை வைகை அறியும். நேற்று மணமுடி கொடுத்து வெற்றிலை மாற்றும் அரங்கில் என்னவெல்லாம் இருந்தன என்பதை நீ கவனித்தாயா?”

எல்லாவற்றையும் சுகமதி பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். ஆனால், பொற்சுவை எதைக் கேட்கிறாள் எனத் தெரியவில்லை.

“அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தட்டுகள் முழுவதிலும் பூக்களும் கனிகளும் மட்டுமே வைக்கப்பட்டிருந்தன. வேர்களும் தண்டுகளும் வைக்கப்படுவதில்லை. ஏன் தெரியுமா?”

கேள்விக்குப் பிறகுதான், சுகமதி சிந்திக்கத் தொடங்கினாள் அதற்கான காரணம் தெரியவில்லை.

“வேர்களும் தண்டுகளும் தம்மைப் பெருக்கிக் கொள்வன. பூக்களும் கனிகளும்தான் தம் இனத்தைப் பெருக்குவன. அலங்கரித்த தட்டில் வைத்து கனி மாற்றப்பட்டதன் காரணம்தான் நான் மாற்றப்படுவதும்.”

ஓரளவு கல்வியறிவுகொண்டவள்தான் சுகமதி. வணிக குலத்திலிருந்து வந்தவள்தான் அவளும்; அதனால்தான் பொற்சுவை பேசும் பொருளின் ஆழம் அவளுக்குப் புரிந்தது. ஆனால், அதைஎதிர்கொள்ளும் மனவலிமை அவளிடம் இல்லை. மனமாற்றத்துக்குத்தான் வைகைக் கரைக்குப் போவோம் என்று சொல்லி அழைத்துவந்தாள். ஆனால், இங்கு நடப்பது தழைகீழாக இருந்தது. வைகைக் கரையைவிட்டு விரைவில் அகலமாட்டோமா என்று தோன்றியது சுகமதிக்கு.

“அதுவும் தட்டில் என்னென்ன கனிகள் வைக்கப்பட்டிருந்தன என்று பார்த்தாயா?”

நினைத்துப்பார்த்து சுகமதி சொன்னாள், “பலாவும் மாதுளையும் இருந்தன.”

“இவை இரண்டும்தான் கனிகளா? எல்லோருக்கும் பிடித்த மாங்கனி ஏன் வைக்கப்படவில்லை? இவ்வளவு பெரிய பாண்டிய நாட்டில் ஒரு மாங்கனி கூடவா கிடைக்கவில்லை? ”

சுகமதிக்குக் காரணம் புலப்படவில்லை.

பொற்சுவை சொன்னாள், ``பலாவும் மாதுளையும் பல வித்துக்களைக்கொண்ட கனிகள். ``மா” ஒற்றை விதையைக்கொண்ட கனி.”

சொல்லவருவதன் பொருள் புரிந்தபோது திகைத்துப்போனாள் சுகமதி. சடங்குகளுக்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் நடுங்கச் செய்வனவாக இருந்தன.

வீரயுக நாயகன் வேள்பாரி - 30

பொற்சுவை மேலும் சொன்னாள், “என் உடல் எக்கனியாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், என் மனமோ ஒற்றை விதையுடைய மாங்கனி. அதில் இன்னொரு விதைக்கு இடமில்லை.”

“இன்னும் வயிற்றில் இடமிருக்கிறதா?” எனக் கேட்டபோது, சூல்கடல் முதுவன் சொன்னார், “நாங்கள் கடற்குடிகாரர்கள். நீரில் மிதப்பதும் நீரால் மிதப்பதும்தான் எங்களின் வாழ்வு.”

முதுவனின் பேச்சைக் கேட்டு மகிழ்ந்தனர் எல்லோரும். அவர் வணிகப்பாதையின் கட்டமைப்பைப் பற்றி சொல்ல  ஆயத்தமானார். அதைக் கவனித்த பேரரசர் கூறினார், “இவ்வுரையாடலின்போது திசைவேழரும் இருந்தால் பொருத்தமாக இருக்கும். அவரை அழைத்து வாருங்கள்” என்று உத்தரவிட்டதும், பணியாளர்கள் ஓடினர்.

“அவர் வந்ததும் இதைப்பற்றிப் பேசுவோம்” என்றார் பேரரசர்.

‘திசைவேழர் தென்திசை மாளிகையில் இருக்கிறார். இங்கிருந்து போய் அவரை அழைத்து வந்துசேர நேரமாகும். முதுவன் சொல்லத் தொடங்கும்போது தந்தை ஏன் இப்படிச் செய்துவிட்டார்?’ என மனதுக்குள் புலம்பினான் இளவரசன்.

‘பெருங்குவளை மூன்றைக் கடந்துவிட்டால் நினைவை நமது கட்டுப்பாட்டின் வழியே ஒழுங்குபடுத்த முடியாது. இவ்வளவு  முதன்மையான செய்தியை உளறலாகப் பேசிவிடக்கூடாது. அது மட்டுமல்ல, உடன் மூன்று வணிகர்களை வைத்துக்கொண்டு பேசுவது அறிவுடைமையல்ல. எனவே, நாளை நிதானமாகப் பேசலாம்’ என்று முடிவெடுத்த பேரரசர் சற்று நேரங்கடத்துவதற்குத்தான் இதைச் செய்தார். முசுகுந்தருக்கு மட்டும் இது புரிந்தது.

“சொல்ல மறந்துவிட்டேன். திசைவேழர் வந்ததும், அவரிடம் யாரும் கபிலரைப் பற்றி சொல்லிவிடாதீர்கள், கோபப்பட்டுவிடுவார்” என்று சொல்லிச் சிரித்தார் முதுவன்.

முதற் குவளையைக் கடக்காமல் இருந்த முசுகுந்தர் கேட்டார், “பெருங்கவி இன்னும் ஏன் மணவிழாவுக்கு வந்து சேரவில்லை?”

“மணமுடி நிகழ்வுக்கு முன்னதாக வந்துவிடுவார் என நினைத்தேன். தாம்பூலம் தரிக்கையில் அவர் இல்லாதது மனதைக் கவலைகொள்ளச் செய்தது” என்றார் பேரரசர்.

“இத்திருமணம் பற்றிய செய்தி தெரியாத இடமேயில்லை. தெரிந்தால் அவர் வராமல் இருந்திருக்க மாட்டார்.”

“ஒருவேளை நெடுந்தொலைவுள்ள தீவு எதற்கேனும் போயிருந்தால் செய்தி எட்டாமல் போயிருக்கலாம் அல்லவா?”

முதுவன் சொன்னான். “இல்லை. எல்லா தீவில் இருந்தும் வணிகர்கள் வந்துவிட்டனர். இத்திருமணச் செய்தி தெரியாத பகுதி நிலப்பரப்பில் எங்கேனும் இருக்கலாம். தீவுக்குள் எங்கும் இல்லை.”

“கடலும் கடல்சார் வாழ்வும்தானே உங்களுக்கு அமைந்தது. நீங்கள் எப்படி செடி, கொடி, காய், கனிகளைப்பற்றியெல்லாம் இவ்வளவு அறிந்தீர்கள்?” வைகையில் இருந்து மாளிகை திரும்பு வழியில் சுகமதி கேட்டாள்.

மறுமொழியின்றி அமைதியாக வந்தாள் பொற்சுவை. தேர்ச்சக்கரம் உருளும் ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

“நான் எதுவும் தவறாகக் கேட்டுவிட்டேனா?”

“இல்லை. மனம் ஆசானிடம் போய்விட்டது. அவர் எனக்குக் கற்றுக்கொடுத்தது ஏராளம். அவரைப் பார்க்கக் கண்கள் ஏங்குகின்றன.”

“அவர் ஏன் இன்னும் மணவிழாவுக்கு வராமல் இருக்கிறார்?”

“அதைப்பற்றி நான் சிந்திக்கவில்லை.

அவரைப் பார்த்தால் அந்தக்கணமே உடைந்து அழுதுவிடுவேன். அவரை நினைத்தாலே மனதில் பதற்றம் பற்றிக்கொள்கிறது. அதனாலே நினைக்காமல் இருக்கிறேன். இப்போது நீ அவரை நோக்கிய நினைவைக் கிளறி விட்டுவிட்டாய்.”

“இன்னும் சிலநாள்கள்தானே இருக்கின்றன. அதற்குள் வந்துவிடுவார் என நினைக்கிறேன்.”

“வருவதாக இருந்திருந்தால் எப்போதோ வந்திருக்க வேண்டும். அதற்கான நாள்கள் கடந்துவிட்டன. இனி அவர் வரமாட்டார்.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 30

“பாண்டியப் பேரரசின் போற்றுதலுக்குரிய பெருங்கவி உங்கள் பேராசான். பின் எப்படி வராமல் இருப்பார்?”

“இம்மணவிழா பற்றிய செய்தி தெரிந்தால்தானே வரமுடியும்?”

“வேந்தர்கள் அனைவருக்கும், சிற்றரசர்கள் எல்லோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. தீவுக்கூட்டங்கள் எங்குமிருந்து வணிகர்கள் வந்துள்ளனர். பின், அவருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லையே?”
உதட்டோரம் சின்னதாய் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டுப் பொற்சுவை சொன்னாள், “அவர் பறம்பு நாட்டுக்குப் போயிருந்தால் எப்படித் தெரிந்திருக்கும்?”

சுகமதியின் கண்கள் இமைக்காமல் நிலை கொண்டன.

பொற்சுவை தொடர்ந்தாள், “இதுபோன்ற செய்திகள் சென்றடையாமல் இருக்கும் ஒரே நிலப்பகுதி அதுவாகத்தான் இருக்க முடியும். ஆசானும் அங்கே போக வேண்டும் என்று பல ஆண்டுகள் விருப்பத்தோடு இருந்தார். அது இப்போது நிகழ்ந்திருக்க வேண்டும்.”

சற்று இடைவெளிவிட்டுச் சொன்னாள், “என் கண்ணீர் அவரை வெகுதொலைவிலே நிறுத்திவிட்டது சுகமதி”.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...