
ஓவியங்கள்: செந்தில்

பயம்
திருடிய சிசிடிவி கேமராவை, தன் சொந்த வீட்டில் மாட்டினான் திருடன்.
- வேம்பார் மு.க.இப்ராஹிம்

விளக்கம்
'புரளின்னா என்ன?' என்று கேட்ட பேரனுக்கு, 'வாட்ஸ்அப் மெசேஜ்' என்றார் தாத்தா.
- வேம்பார் மு.க.இப்ராஹிம்

திட்டம்
கடும் பண நெருக்கடிக்கு ஆளான ஆளும் கட்சி ஆதரவு எம்.எல்.ஏ., `அரசுக்கு எதிராக அறிக்கை விடலாமா?' என்று யோசித்துக்கொண்டு இருந்தார்.
- ரா.ராஜேஷ்

ஷவர்
`எவ்வளவு பெரிய ஷவர்' என்றது, மழையில் நனைந்த குழந்தை.
- சங்கரி வெங்கட்

வேலை
`இங்கே, டாஸ்மாக்கை எல்லாம் அடிச்சு மூடுறாங்க, அங்கேயே வேலை தேடிக்கோ' என்று நண்பனுக்குத் தகவல் கொடுத்தான் பீகாரி.
- கி.ரவிக்குமார்

சொந்தம்
ஒரே அலுவலகத்தில் பணியாற்றிய திவ்யாவும் கீதாவும் தூரத்துச் சொந்தம் எனத் தெரிந்ததும், நட்பைத் துண்டித்துக்கொண்டார்கள்.
- கே.சதீஷ்

கடமை
சேஸிங் செய்து துரத்திப் பிடித்தது போலீஸ், கமிஷன் தராத மணல் லாரியை..!
- ராஜி ராம்

மாற்றம்
``இது நீலகண்டன் வீடுதானே?''
``இல்லைங்க. இப்ப இது மணிகண்டன் வீடு'' என்றார் வாடகைக்குக் குடியிருந்தவர்.
- பெ.பாண்டியன்
அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ரூ.500. உங்கள் கதைகளை 10seconds tory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!