பொது அறிவு
Published:Updated:

விசில்

விசில்
பிரீமியம் ஸ்டோரி
News
விசில்

விழியன் - ஓவியம்: ஜி.ராமமூர்த்தி

திருமண மண்டபத்தை பவனின் குடும்பம் அடைந்தபோது விரல்விட்டு எண்ணிவிடும் அளவே கூட்டம் இருந்தது. பவனுக்கு நினைவு தெரிந்து அவன் போகும் முதல் திருமண நிகழ்ச்சி இதுதான். மாப்பிள்ளை பவனின் அப்பாவுக்கு தம்பி முறை. தூரத்து உறவினர் என்றாலும் சின்ன வயது முதலே நண்பர்களாம். அதனால், கண்டிப்பாக வரவேண்டும் எனச் சொல்லிவிட்டார். டேப் (TAB) கையுடனே பவன் உள்ளே நுழைந்தான். மாடியில் ஒரு அறையைக் கொடுத்து இருந்தார்கள். அம்மா, அப்பா, பவன் மூவரும் அறையில் அடைந்தனர். போகும் வழியில் சிலர் விசாரித்தனர்.

விசில்

அறைக் கதவு தட்டப்பட்டது. திறந்தால், ஒரு சிறுவன் நின்றுகொண்டிருந்தான். பவனைப் பார்த்ததும் சிநேகமாகச் சிரித்தான். “மாமா, என் பேரு மணிகண்டன், கார்பென்டர் ரவி பையன். எங்க மாமாவுக்குத்தான் கல்யாணம்” என, தானே அறிமுகம்செய்துகொண்டு பவனை விளையாட அழைத்தான். பவன் கொஞ்சம் தயங்கினான். அவனுடைய அம்மா போ, போய் விளையாடு ஆனா, மண்டபத்தைவிட்டு வெளிய போகக்கூடாது என்று கூறினார். TAB ஐ விட்டு வர மனமே இல்லாமல் கிளம்பினான்.

இருவரும் சமையற்கட்டுக்குள் நுழைந்தனர். ஏலக்காய் வாசம் தூக்கியது. “உனக்கு லட்டு பிடிக்குமா? வரிசை தட்டுக்கு செஞக்சிருக்காங்க. சாப்பிடறியா” என்று கேட்டான். ஆமாம், இல்லை என்று தலை ஆட்டுவதற்குள், மூன்று லட்டுகளை எடுத்து வந்துவிட்டான்.

 தன் கிராமத்தில் விளையாடும் விளையாட்டுக்கள் பற்றிக் கூறினான். உணவுக்கூடம் மாலை டிபனுக்கு தயாராகிக்கொண்டிருந்தது. மாலையில் இருந்து இரவு வரையில் நிறையவே கூட்டம் இருந்தது. கல்யாணமாகும் மாமா ஒரு எழுத்தாளர். அதனால், நிறைய நண்பர்கள் வந்திருந்தார்கள். மாலையில் மாப்பிள்ளை வரவேற்பு. பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோயிலில் இருந்து ஆரம்பித்தது. மாப்பிள்ளைக்கு அருகிலேயே மணியும் பவனும் அமர்ந்தார்கள். பவனை மாப்பிள்ளைக்கு அடையாளம் தெரியவில்லை, மணிதான் அறிமுகம்செய்துவைத்தான். இரவு உணவை மணிக்குப் பக்கத்தில் அமர்ந்துதான் சாப்பிட்டான். “எதையும் இலையில் மீதம் வைக்காதே பவன்” என்று செல்லமாகக் கடிந்து கொண்டான்.

இரவு படுக்கத் தயாராகிக் கொண்டிந்தனர் பவனும் அவன் பெற்றோரும். “மாமா, பவன் என்கூட தூங்கட்டுமே” என உள்ளே நுழைந்தான் மணி. “ஒரு இடம் பார்த்து வெச்சிருக்கேன் பவன், அதுக்கு முன்னாடி, ஒரு வேலை இருக்கு நமக்கு” என்று அழைத்துச்சென்றான்.

வழக்கமாக திருமணத்துக்கு வரும் பெரியவர்களுக்கு மட்டுமே தாம்பூலப்பையைத் தருவார்கள் ஆனால் நிச்சயம் குழந்தைகளுக்கு, ஒரு சின்ன பையில் விசில், ஒரு அறிவியல் மாத இதழ், ஒரு சின்ன போஸ்டர், ஒரு உறுதிமொழி ஸ்டிக்கர், இரண்டு சாக்லேட் ஆகியவை போட்டுத் தரவேண்டும் எனச் சொல்லிவிட்டார். இந்தப் பொருள்களைப் பைகளில் போட வேண்டும். பவன், மணி மற்றும் இன்னும் சில சிறுவர்கள் ஒன்றாக அமர்ந்து அந்தப் பைகளில் பொருள்களைப் போட்டார்கள். பெரியவர்களுக்கான தாம்பூலப்பையில் பாக்கு, தேங்காய், வெற்றிலை போடப்பட்டது.

மணியும் பவனும் மொட்டைமாடிக்குத் தூங்கச் சென்றார்கள். இரவு வானம் பிரகாசமாக இருந்தது. ‘‘தூக்கம் வரலைனா, நான் எங்க ஊர்ல ஒரு பாட்டி கதை சொல்லுவாங்க. அவங்க சொன்ன கதையைச் சொல்றேன்'னு ஒரு கதை சொன்னான் மணி. கதை முடியும் முன்னரே தூங்கிவிட்டான் பவன்.

காலையில், எழுந்து திருமண மேடையை நோக்கி நடந்தார்கள். வழக்கமாக, திருமணம் முடிந்துபோகும்போதுதானே தாம்பூலப்பை தருவார்கள். ஆனால், குழந்தைகளுக்கான தாம்பூலப்பையை சிறுவர்களிடம் முன்னரே கொடுத்துவிட்டார்கள். மாப்பிள்ளை தாலி கட்டும்போது, மேளச் சத்தத்தைவிட மேடையில் சிறுவர்கள் அடித்த விசில் சத்தமே அதிகமாகக் கேட்டது.

ஒவ்வொருவராக மண்டபத்தைவிட்டுக் கிளம்பினார்கள். பிரிய மனம் இல்லாமல் பவன் காரில் ஏறினான். மணி அவன் கிளம்பும்போது இரண்டு கமரக்கட்டை கையில் திணித்தான். ‘‘போகும்போது சாப்பிடு'' என்றான். பவன் TAB-ஐ தொடவே இல்லை. கமரக்கட்டையே பார்த்துக்கொண்டு வந்தான்.